Monday, September 13, 2010

புதிய பதிவர்களுக்கு சில யோசனைகள்


பு
திதாய் பதிவெழுத வருபவர்களுக்கும், எழுத்தின் மூலம் பிரபல்யத்தை அடைவது எப்படி என்று வடக்கு பார்த்து யோசித்துக் கொண்டிருப்பவர்களும் என் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன்.

எந்த இடையூறுகளும் இல்லாமல் அமைதியாக - ஒரு வேள்வி போல - இந்தப் பதிவைப் படித்து இடையிடையே நான் கொடுத்திருக்கும் டிப்ஸ்களைக் கவனித்துக் குறிப்பெடுத்துக் கொண்டால் 30 நாட்களில் பிரபலமாவது உறுதி.


முதல் விதி:

ஆரம்பம் மேலே உள்ள முன்னுரை போல இப்படித்தான் - நமக்குத்தான் தெரியும் என்பது போல - ஆரம்பம் இருக்க வேண்டும். நிச்சயமாக நமக்கு எதுவும் தெரியாது என்பதை கட்டுரையின் முடிவில் அவர்கள் கண்டுகொள்வார்கள் எனினும் நாமாக நமக்கு ஒரு ஒளிவட்டத்தை செட்டப் செய்து கொள்வதில் தவறொன்றுமில்லை. காசா பணமா?

இரண்டாம் விதி:

முதல் விதியின் முதல் வரிபோல ஏதாவது வார்த்தைப் பிரயோகப் பிழைகள் இருக்க வேண்டும். அந்த வரியில் ஆரம்பம் என்ற வார்த்தை இரண்டு முறை வந்திருப்பதை கவனியுங்கள். இது கிட்டத்தட்ட ஒரு பின்னூட்டத்தை வரவைக்கும் தூண்டில். அப்படிப் பின்னூட்டம் வந்த பிறகு அதைத் திருத்தி, அந்தப் பின்னூட்டம் போட்டவருக்கு நன்றி சொல்வதன் மூலம் இரண்டாவது பின்னூட்டத்திற்கும் வழிசெய்துகொள்ளலாம். தவிரவும் அந்தப் பிழையை சுட்டிக் காட்டியவருக்கு நாம் மரியாதை செய்த மாதிரியும் ஆச்சு. போலவே எழுத்துப் பிழைகள், இலக்கணப்பிழைகள் இன்னபிற... (டிப்ஸ் 1: இந்த மாதிரி நமக்கே தெரியாமல் நேர்ந்துவிட்ட பிழைகளையும் கட்டுரைக்கான உத்தி என்று மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் மிகமுக்கியம்)

மூன்றாவது... கண்டெண்ட்:

தமிழில் சொல்ல வேண்டுமானால்.. இருங்கள் இந்த டிக்‌ஷ்னரி எங்கே வைத்துத் தொலைத்தார்களோ தெரியவில்லை.. ஆங்... உள்ளீடு. எதை எழுதுவது என்பது. இது கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டிய விஷயம். (டிப்ஸ் 2: எப்படி இந்தக் கட்டுரையை இழுக்கிறேன் பார்த்தீர்களா..? இது ஒரு உத்தி)

பதிவில் எது வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம் என்பதால் எதையும் நீங்கள் எழுதலாம். (என்ன ஒரு கண்டுபிடிப்பு என்ற பின்னூட்டத்துக்கு இந்த வரி உத்தரவாதம் தருகிறது) ஆனாலும் இவற்றை மட்டுமே எழுதலாம் என்று சிலபலவற்றை தீர்மானித்தால் கொஞ்ச நாளைக்கு ஒப்பேத்தலாம். அவற்றில் முக்கியமானது நிகழ்வானுபவங்கள். (டிப்ஸ் 3: வார்த்தை புதிதாக இருக்கிறதா? ஒருவனுக்கு நடக்கும் நிகழ்வுதானே, அனுபவம்? அதையெதற்கு இப்படிச் சொல்லித் தொலைக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அதனாலென்ன? இப்படித்தான் போட்டுத் தாக்க வேண்டும். கேட்க ஆளே இல்லாதபோது தமிழ் விளையாட வேண்டும்)

நிகழ்வுகள் என்பது வேறொன்றுமில்லை. என்னுடைய அவியல் மாதிரிதான். (டிப்ஸ் 4: வெளம்பரம்!) நீங்கள் ஒரு இளநிக்கடையில் இளநி குடித்துக் கொண்டிருக்கும்போது தூரத்தில் யாராவது சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பார்கள். உடனே உங்களுக்குள் பொங்கி எழுகிற சிறுநீரை.. ச்சே.. மன்னிக்கவும்.. சமூக அக்கறையை ஒரு பத்தியாக சுருக்கி எழுத வேண்டும். போலவே, டூ வீலர் ஒட்டும்போது நீங்கள் அடுத்தவனுக்குச் செய்யும் இம்சையை அடுத்தவன் உங்களுக்குச் செய்ததாகப் பொங்கி எழ வேண்டும். சென்னை போன்ற பெருநகரப் பதிவர்களுக்கு இருக்கும் சிரமம் உங்களோடு வருபவனும் பதிவனாய் இருப்பான். ‘டேய்.. இது நீ பண்ணின அக்கிரமம் ஆச்சே.. அடுத்தவன் பண்ணின மாதிரி எழுதிருக்கியே?’ என்று பொங்கி எழுந்து ‘மிஸ்டர் எக்ஸ் பதிவில் எழுதியது சுத்தப் பேத்தல். அவனொரு கபடநாடகவேஷதாரி என்பதை இன்று கண்டு கொண்டேன்’ என்று ஆரம்பித்து ஒரு பதிவெழுதி அவர்கள் பதிவுக்கு மேட்டர் தேற்றிவிடுவார்கள். வெளியூர்ப்பதிவர்களுக்கு இந்தத் தொல்லை, ஒப்பீட்டளவில் குறைவே.

அப்புறம் இருக்கவே இருக்கிறது டி வி நிகழ்ச்சிகள்.. அதில் ஏதாவது ஒரு கருமாந்திரத்தைப் பற்றி ஒரு பத்தி. பிறகு உங்களைச் சுற்றி அலுவலகத்தில் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் ஒன்றிரண்டு சேர்த்து கடுகு, கருவேப்பிலை கலந்து தாளித்து இறக்கினால் நிகழ்வானுபவ மிக்ஸிங் பதிவு ரெடி.

இம்மாதிரியான பதிவு எழுத அவ்வப்போது குறிப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பாவம் உங்கள் வாசகர்கள்.. அவர்களைத் திருப்திப்படுத்தவியலாமற்போய்விடும். (டிப்ஸ். 5: அவ்வப்போது இப்படி ஒன்றிரண்டு வார்த்தைகளை இடைவெளியின்றி எழுதி வாசிப்பவர்களை வறுத்தெடுப்பது இலக்கிய அல்லது பதிவுலகில் உங்களை ஒரு ட்ரெண்ட் செட்டர் அல்லது தாதாவெனக் காட்டிக் கொள்ள உதவும்)

அடுத்தது: சினிமா விமர்சனங்கள். வியாழக்கிழமைக்கு அடுத்து வெள்ளிக்கிழமை வருகிறதோ இல்லையோ ஒரு படம் ரிலீஸாவது உறுதி. அதற்காகவே காத்திருந்து (என்ன ‘காத்திருந்து?’ எப்படியும் ஏழு நாட்களுக்கொரு முறை வரத்தான் செய்கிறது) படம் பார்த்து ஒரு விமர்சனத்தை எழுதிப் போட்டால், உங்கள் ரசிகக்கண்மணிகள் படித்துப் பயனடைவார்கள். கேபிள் சங்கர் மாதிரியான (டிப்ஸ். 6: பதிவின் ஆங்காங்கே இதுபோன்ற சீனியர் பதிவர் பெயர்களை அள்ளித் தெளிப்பது அவர்களை ஆராதிப்பவர்களையும் நம் பக்கம் இழுக்க உதவும். போலவே அவர்களது நட்பும் நமக்கு கிடைக்கும்) திரைத்துறையிலேயே ஊறியவர்கள் காமிரா கோணம், எடிட்டிங்கில் இருக்கும் தவறுகள் என்று பீராய்வது சுலபம். நாமெப்படி அலசுவது? ஒன்றும் பிரச்சினையில்லை. சீன், திரைக்கதை, எடிட்டிங், லாங் ஷாட், க்ளோஸப், பின்னணி இசை போன்ற ஆதார வார்த்தைகளை அங்கங்கே தூவி விட்டால்போதும். ரொம்ப டீப்பான ஆசாமியாக நம்மைக் காட்டிக் கொள்ள மாண்ட்டேஜ், ஃபுட்டேஜ், கட் ஷாட், ஜிம்மீப் ஷாட், ட்ரக் இன், வைப்பிங், ஷார்ட் கட், வார்ம் டோன், செஃபியா டோன், பானிங் இன்னபிறவற்றை சேர்த்துக் கலக்கி தாளித்து இறக்கவும்.

பதிவிற்காக இந்த வார்த்தைகளைச் சொல்லித் தந்த கேபிள் சங்கருக்கு நன்றி. (டிப்ஸ். 7: டிப்ஸ் 6ன் மரூஉ. கேபிள்சங்கரும் நானும் ஃப்ரெண்டாக்கும் என்று எப்படி மறைமுகமாக பீற்றிக் கொண்டேன் பார்த்தீர்களா?)

சரி பதிவெழுதியாயிற்று, சொச்ச ஃபாலோயர்கள், சராசரியாக ஒரு பதிவிற்கு இத்தனை என்று பின்னூட்டங்கள் கன்ஃபர்ம் ஆகிவிட்டது. மென்மேலும் பிரபலமடைய என்ன செய்ய வேண்டும்?

வேறு வழியே இல்லை. ரியல் பதிவுலக தாதாவாக உருமாற வேண்டும். ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கொரு தரம் பதிவுலகில் சண்டை, சச்சரவு, காற்றிலேயே வாள் சுழற்றுதல், களறிப்பயிற்று, நீயா நானா என்று பலதும் நடக்கும். இரண்டு தரப்பையும் படித்தால் இருக்கும் முடியும் கொட்டிப் போய் சட்டையைப் பிய்த்துக் கொள்ளும் சூழல் வரலாம். நமக்கு அந்தச் சூழல் நடக்கும் முன், நம்மைப் படிப்பவர்களுக்கு அதை அள்ளித்தரும் விதமாக சடாரென்று - தீர்க்கமாக யோசித்து - தீர ஆராய்ந்து என்றெல்லாம் இல்லாமல் பூவா தலையா போட்டு ஏதாவது ஒரு தரப்பிற்கு ஆதரவாக நீங்கள் களமிறங்க வேண்டும். உங்கள் ஆதரவை எந்த மாங்கா மடையன்கூட கேட்க மாட்டானெனினும் பிரபலமடைய வேறு வழியே இல்லை. களமிறங்கி எதிர் அணியில் எழுதியவர் பதிவில் லே அவுட் மிஸ்டேக் என்ன, அவர் பெயரில் நியூமராலஜிப்படி என்ன குறை, அவர் பெயர் எக்ஸில் ஆரம்பிக்கிறதென்றால், எக்ஸில் பெயர் ஆரம்பிக்கும் உங்கள் நண்பன் உங்களுக்கு என்ன தீங்கு செய்தான் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் போட்டுத் தாக்கி எல்லாரையும் சாகடிக்க வேண்டும். வரும் பின்னூட்டங்கள் உங்களை நோகடிக்கலாம். இருக்கவே இருக்கிறது கமெண்ட் மாடரேஷன். அப்படி நோகடிக்கும் வகையிலான பின்னூட்டங்கள் வருவதே நீங்கள் பிரபல்யமடைந்ததற்கான முதல் அறிகுறி.

சரி.. நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாது என்கிறீர்களா? கவலையே படாதீர்கள். ‘இவன் அவனுக்கு சப்போர்ட் அதுனாலதான் ஒண்ணும் சொல்லாம வேடிக்கை பாக்கறான்’ என்று இரு தரப்புமே உங்களைத் திட்டித் தீர்ப்பார்கள். இரண்டு தரப்பும் இல்லாமல் பொதுத்தரப்பு ‘ஒரு கருத்தும் சொல்லாமல் நடுநிலைவாதிமாதிரி நாடகம் போடறான் பாரு’ என்று திட்டுவார்கள். அது போதாதா பிரபலமாக?அப்புறம் இந்தக் கவிதை, கதை என்று மற்ற கந்தாயங்கள்.

இதில் கவிதை பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இந்தியன் பீனல் கோடில் இன்னமும் கொலைக்கான காரணியாக இன்னமும் கவிதைகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதால் நீங்கள் எந்த பயமுமில்லாமல் அடித்து ஆடலாம். ரொம்பவும் புரிகிற மாதிரி எழுதினால் விளக்கம் கேட்டுத் தொலைப்பார்கள். ஆகையால் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் தொடர்பற்று எழுதினால் நலம். ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்குமே தொடர்பற்று எழுதுவதும், ஓர் எழுத்துக்கும் அடுத்த எழுத்துக்கும் தொடர்பற்று எழுதுவதும் அடுத்தடுத்த படிநிலைகள். அவை இப்போதைக்கு வேண்டாம். நாடு தாங்காது.

அதிக பின் தொடர்பவர்களைப் பெறுவது எப்படி?

ஓசியில் கிடைக்கும் ட்விட்டர், ஃபேஸ் புக், பஸ்ஸ் (இப்படித்தான் அதுல ரெண்டு Z போட்டிருந்ததுங்க, அதுனால இங்க ரெண்டு ஸ்!) போன்ற சமூக வலைப்பின்னல்களில் கால்பதித்து பீடுநடை போடுவதெப்படி? போன்றவைகளும், இன்னபிறவும் இதேபோல பதிவெழுத மேட்டரில்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கும் மற்றொரு நாளின் பின்மாலையில் உட்கார்ந்து யோசித்து எழுதிப் பதிவேற்றப்படும்.

நன்றி..

48 comments:

LeoRajesh said...

thanks for the tips sir.

Unknown said...

ஆஹா......

வினோ said...

நல்லா தான் இருக்குங்க பரிசல்..

எஸ்.கே said...

நகைச்சுவையா சொன்னாலும் உண்மைதானே!:-)

மார்கண்டேயன் said...

யாரவது ஜோக்குக்கு எழுதுனத கூட, எம் மனசு எவ்ளோ புன்பட்டுர்க்கு தெரியுமான்னு ? ஒரு பதிவ போட்டா . . .

நாலு பேரு சரிம்பாங்க, நாலு பேரு தப்பும்பாக, எட்டு பின்னூட்டம்,

ஒருத்தர் உங்களுக்கு ஒரு ராயல் சலூட் அப்பிடிம்பாறு,

அதுக்கப்பறம், அவங்களுக்கெல்லாம் தாங்க்சுன்னு பின்னூட்டம்,

எப்டியும் பதினஞ்சு இருவது பின்னூட்டம் தேறிடும் . . .

இந்தப் பாயிண்டையும் சேர்த்துக்கோங்க மக்கா . . .

அப்பிடியே, பாலரெங்கபுரம் பக்கம் (அதாங்க நம்ம கட) வந்துட்டு போங்களேன் . . .
(இந்தையும் சேர்த்துக்கோங்க)

ம்ம் . . . நானும் உங்களுக்கு கமென்ட் போட்டுப் போட்டுப் பாக்குறேன் . . . உங்க சைடுல இருந்து . . .

என்னத்தச் சொல்ல . . . சட்டியில இருந்தாத் தானே . . . (சரி, சரி, விடுங்க)

சுசி said...

//30 நாட்களில் பிரபலமாவது உறுதி.//

ரைட்டு!!

//இதில் கவிதை பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். //

இதுக்கப்புறம் நீங்க சொல்லி இருக்கிறது.. ஆவ்வ்வ்..

கலக்கல் பரிசல்.

ப.கந்தசாமி said...

//இதில் கவிதை பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இந்தியன் பீனல் கோடில் இன்னமும் கொலைக்கான காரணியாக இன்னமும் கவிதைகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதால் நீங்கள் எந்த பயமுமில்லாமல் அடித்து ஆடலாம்.//

சூப்பரோ சூப்பர். கொலை செய்யறதுக்கு இன்னொரு வழியும் இருக்கே. பரிசல்ல ஏத்திட்டுப்போயி நடு ஆத்துல கவுத்து உட்டுடறது!(இப்ப நீங்க செய்யற மாதிரி)

மோனி said...

சரி.. ரைட்டு...

HVL said...

//
முதல் விதியின் முதல் வரிபோல ஏதாவது வார்த்தைப் பிரயோகப் பிழைகள் இருக்க வேண்டும். இது கிட்டத்தட்ட ஒரு பின்னூட்டத்தை வரவைக்கும் தூண்டில்.
//

இப்பத்தான் புரியுது!!! இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன்.நன்றி பாஸ்!

அபி அப்பா said...

கன்பர்ம்டு நீங்க நர்சிம் குரூப்தான்:-)) பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு:-)

Vishnu said...

தெய்வமே எங்கயோ போய்ட்டிங்க!

Unknown said...

எழுத்தின் மூலம் பிரபல்யத்தை அடைவது எப்படி என்று வடக்கு பார்த்து யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மேலே பார்த்துக்கொண்டு யோசிப்பவரின் யோசனைகள். நல்லா இருக்குங்க.....

Mahesh said...

lollu romba jaasthiyaayidichu :))

"kabatanaadakaveshadaari" - moulikku oru thanks solliyirunthurukkanum.

a said...

ஹா ஹா ஹா...........

முத்து முத்தான யோசனைகள்..........

R. Gopi said...

சூப்பர் பரிசல்.

அன்பரசன் said...

Useful tips...

தராசு said...

அப்புறம், இந்த கதை எழுதுவது எப்படின்னு சொல்லவே இல்லை.....

பின்னோக்கி said...

ஸ்ஸ்..அப்பா... இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்கலைடா :)....

ஆனா ரொம்ப நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கீங்க. அதுவும் சென்னை, வண்டி, இன்னொருவரும் பதிவர் விஷயம் நிதர்சனமான, சத்தியமான உண்மை

சிவராம்குமார் said...

யாரங்கே! பரிசலுக்கு ஒரு பொற்கிழி வழங்குங்கள்!!!

அண்ணாமலை..!! said...

இது டிப்ஸ் இல்ல!!
இதுதான் இப்ப நாட்டுநடப்பு!!
:)

செல்வா said...

//பதிவிற்காக இந்த வார்த்தைகளைச் சொல்லித் தந்த கேபிள் சங்கருக்கு நன்றி.///

நீங்களும் அந்த டிப்ச பயன்படுத்திருக்கீங்க ..!!

R.Gopi said...

அட.....

இப்படி அட்வைஸ் சொல்றதயே ஒரு பதிவா எழுதலாம் போல இருக்கே...

பதிவுக்கு பதிவும் ஆச்சு.... நிறைய பேர் என்ன தான்யா இந்தாளு எழுதியிருக்கான்னு பார்க்க வர்றது ஆச்சு....

நாலு பேர் வந்து படிப்பாங்கன்னா, என்ன வேணுமானாலும் எழுதலாமா பரிசல்?

செல்வா said...

அப்ப நானும் கூட பிரபல பதிவர் தான் ..!!

R.Gopi said...

//பதிவிற்காக இந்த வார்த்தைகளைச் சொல்லித் தந்த கேபிள் சங்கருக்கு நன்றி.///

இத எழுதினா, கேபிளார் தன் அடுத்த பதிவில் யார் யாரோ என் பேர யூஸ் பண்றாங்க, அவங்க எல்லாம் எனக்கு யார்னே தெரியாதுன்னு சொல்லிட்டா, நமக்கு ஃப்ரீ பப்ளிகுட்டி கிடைக்கும்....

R.Gopi said...

//பதிவிற்காக இந்த வார்த்தைகளைச் சொல்லித் தந்த கேபிள் சங்கருக்கு நன்றி.///

இத எழுதினா, கேபிளார் தன் அடுத்த பதிவில் யார் யாரோ என் பேர யூஸ் பண்றாங்க, அவங்க எல்லாம் எனக்கு யார்னே தெரியாதுன்னு சொல்லிட்டா, நமக்கு ஃப்ரீ பப்ளிகுட்டி கிடைக்கும்....

ஆனந்தி.. said...

ஹலோ..மிஸ்டர்.கொழுப்ஸ்! இப்படியே ஒரு பதிவை ஒப்பேத்தியாச்சு..என்னவோ கலக்குங்க போங்க..

DR.K.S.BALASUBRAMANIAN said...

ஆஹா........இது தெரியாம இவ்வளவு நாள் இருந்துட்டமே..! முன்னூட்டத்தையும் காணும் பின்னூட்டத்தையும் காணும் வோட்டையும் காணும்னுட்டு......!

நித்யன் said...

நண்பரே,

நீங்கள் சொல்கின்ற பல குறிப்புகள் பதிவர் ஜாக்கியை அப்பட்டமாக குறிக்கின்றன. அவருடைய மொக்கையான நிரப்புதல்கள் நிறைந்த ”சாண்ட்வெஜ் நான்வெஜ்” மற்றும் கொலைவெறித் தமிழ்த் தவறுகளும் அவர் பதிவைப் படிக்கும் ஐந்தாறு பேருக்கும் கட்டாயம் தெரிந்தவையே.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர் பிரபலமாகிவிட்டதைப் போல் தெரிகிறதே. ங்கொய்யால அந்தாளு இதுக்கு ஒரு பதிவு போட்டுருவாரே... தாங்க முடியாதே...

டிப்ஸ் தந்த கேபிளிடமே ஜாக்கியின் நம்பர் கிடைக்கும். போன் போட்டு திட்டியிருக்கலாமே பாஸ்.

வாய் விட்டுச் சிரிக்க நிறைய விஷயங்களைத் தாங்கி நிற்கிறது இந்த நகைச்சுவையான பதிவு.

அன்பு நித்யன்.

Try said...

ப்ளாக் ஆரமிச்சு 10 நாள் ஆச்சு... என்ன எழுதறதுனு தெரியாம இருந்தேன் சார்..நல்ல டிப்ஸ் :)

Unknown said...

இப்படியெல்லாம் மேட்டர் இருக்குதா?....அப்புறம் இந்த தொடர் பதிவு, ரெண்டு மூணு லைன் கொடுத்து கதை எழுத சொல்லறது... கவிதை போட்டி.....
இதெல்லாம் இதுல வருதா இல்லையா தல.

Thamira said...

சுமார்.

(விஐபி பதிவர்கள் போடும் பின்னூட்டத்துக்கு சாம்பிள் நீங்க கொடுக்கலை. அதான்.)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆஹா.. இந்த மாதிரி விசயங்கள் தெரியாம போச்சே...

suneel krishnan said...

என்னனென்னமோ சொல்லுறீங்க ,எல்லாம் நேசம் தான் போல :)

வால்பையன் said...

//அப்புறம் இருக்கவே இருக்கிறது டி வி நிகழ்ச்சிகள்.. அதில் ஏதாவது ஒரு கருமாந்திரத்தைப் பற்றி ஒரு பத்தி.//


நன்றி தல!

நான் ஒரு பதிவு தேத்திட்டேன், இப்படி அடிக்கடி ஐடியா கொடுங்க!

Unknown said...

எப்படிங்க இப்படிலாம் யோசிக்கிறீங்க??
சூப்பரா இருக்கு...

நாமக்கல் சிபி said...

RIGHTU

அன்பென்று கொட்டு முரசே said...

எப்படீங்ககககக இப்படீஈஈஈஈஈ? என்ன கொடுமை சார் இது?

vinu said...

"புதிய பதிவர்களுக்கு சில யோசனைகள்"

so this is not for meeeeeeeeeeeeeee

Unknown said...

என்ன கொடுமை சரவணன் இது. இப்படியெல்லாமா செய்யிராங்க

அ.முத்து பிரகாஷ் said...

பரிசல் தோழர்! நானும் புதிய பதிவர் தான். உங்களோட குறிப்புகள் ரொம்ப உதவிகரமா எனக்கு இருக்குது என்னோட வரும் பதிவுகளுக்கு...ஆமா ... இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட்ட எல்லா புதிய பதிவரையும் போய் பாத்து பின்னூட்டம் போடுவீங்களாமே அப்படியா! நம்ப கேபிள் அண்ணன் கிட்ட கொஞ்சம் முன்னாடி அலை பேசினப்போ சொன்னார் ... சரி வரேன் தோழர் !

தெய்வசுகந்தி said...

:-)))))))))!!!!!!!!

Jackiesekar said...

பரிசல் தோழர்! நானும் புதிய பதிவர் தான். உங்களோட குறிப்புகள் ரொம்ப உதவிகரமா எனக்கு இருக்குது என்னோட வரும் பதிவுகளுக்கு...ஆமா ... இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட்ட எல்லா புதிய பதிவரையும் போய் பாத்து பின்னூட்டம் போடுவீங்களாமே அப்படியா>>>////

ஓ இப்படித்தான்புதியவங்களுக்கு ஹெல்ப் செய்வது போல் படிக்கறவங்களை அதிகபடுத்தறதா?

Jackiesekar said...

சோ பிரபலமாவதற்க்கான வழி உங்களுக்கு தெரிந்து விட்டது.. புதியவர்களுக்கு ரொம்ப டிடெயிலாக டிப்ஸ்ம் கொடுத்து ஆகி விட்டது..

ம் ஏன் இன்னும் தயக்கம்...தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா??? 5லட்சம் சொச்சத்தை பத்துலட்சமாக மாற்ற உங்ளுக்கு வழி தெரிந்து விட்டது....வாழ்த்துக்கள்..

அப்புறம் ஒன்னு மறந்து போயிட்டிங்...18+ன்னு போட்டு உலகபடங்கள் எழுதினா இன்னும் வருவாங்க... அதை மறந்துட்டிங்களே....என்ன அதையும் சுவாரஸ்யமா எழுதனும் அவ்வளவுதான்...

எல்லா டிப்சும் அற்புதம்...
நானும் இதை பாலோ செய்றேன்.. நாலு பேருக்கு சொல்லியும் தரேன்..அன்புடன்
ஜாக்கி

selventhiran said...

நகையுணர்வின் நர்த்தனம்!

Giri Ramasubramanian said...

நீங்க என் தொடர் தீவிர வாசகரா?
நான் பண்ணிட்டு இருக்கறதை எல்லாம் அப்படியே லட்டு லட்டு... ஓ சாரி...புட்டு புட்டு வெக்கறீங்க?

Jaleela Kamal said...

நல்ல யோசனைகள்

shortfilmindia.com said...

:)) Smily podalainna.. pathivar illainnu solliduvaro..:))

கொக்கரக்கோ..!!! said...

சரி இதெல்லாம் ஃபாலோ பண்ணி பிரபல பதிவர் ஆயிட்டா.. என்ன கிடைக்கும்னு சொல்லவே இல்லையே?!