Monday, September 20, 2010

சிகரெட் (சிறுகதை)

ரயில் நாப்பத்தைந்து நிமிடம் தாமதம் என்று அறிவிப்பு சொன்னது. கணேஷ் நீண்ட பெருமூச்சொன்றை விட்டவாறு அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.

“ஒரு தம்மிருந்தா குடு மாப்ள. முக்கா மணிநேரம் ஆவுமாமே” அருகிலிருந்தவன் நண்பனிடம் கை நீட்டிக் கொண்டிருந்தான்.

கணேஷூக்கு - ஆறு ஆண்டுகளுக்குப் பின் - அன்றைக்கு சிகரெட் பிடிக்கும் ஆவல் எழுந்தது.

மெதுவாக எழுந்து அருகில் ஏதாவது கடையில் சிகரெட் கிடைக்கிறதா என தேடத் தொடங்கினான். ‘ஆறு வருஷமாச்சா நான் சிகரெட்டை விட்டு’ என்று எண்ணிக் கொண்டான்.

ம்ஹூம்.. இந்த சிகரெட்டை விட்டாத்தான் கிஸ்’ நர்மதா சொன்னது இன்னமும் அவன் காதில் ஒலிப்பது போலத் தோன்றியது.

“ஏய்.. ப்ளீஸ்ப்பா... நான் உன்னைப் பார்க்க வர்றப்ப அடிக்கறதில்லைல்ல? அப்பறம் ஏன் இப்படி கொடுமை பண்ற? ப்ளீஸ் அதைக் குடேன்..” கணேஷ் கெஞ்சிக் கொண்டிருந்தது அவள் முத்தத்துக்கு அல்ல.. அவள் கையில் இருந்த கிங்க்ஸ் பாக்கெட்டுக்கு. பீச்சில் தோளில் சாய்கையில் அவன் பாக்கெட்டில் இருந்ததைப் பார்த்துவிட்டாள். எடுத்து பைக்கில் வைக்காமல் வந்ததற்காக நொந்துகொண்டான். கையில் சல்லிக்காசு இல்லை. ஒரு தம் அடிக்காமல் வீடுவரை போகவும் முடியாது.

“சரி.. இன்னைக்குத் தான் லாஸ்ட். அதுல ரெண்டே ரெண்டு சிகரெட்தான் இருக்கு. அதை மட்டும் போறப்ப அடிச்சுக்கறேன் நர்மி. குடேன்” - எத்தனையாவது முறை இப்படி கெஞ்சுகிறான் என்பது அவனுக்கே நினைவில்லை. வேறு வழியுமில்லை.

“போடா பொறுக்கி. நூறு தடவை இப்படிச் சொல்லிருப்ப. ஒரே வாரத்துல மறுபடி ஆரம்பிப்ப. உன்னை நம்ப முடியாது. லாஸ்டாம் லாஸ்ட்..” - கொஞ்சம் குரலுயர்த்தியே திட்ட ஆரம்பித்தாள், கடந்து சென்ற ஒரு ஜோடி திரும்பிப் பார்த்தபடி சென்றதையும் பொருட்படுத்தாமல்.

“கத்தாதடி. ஆஃபீஸ்ல ஆயிரம் டென்ஷன். ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட் குடிச்சிட்டிருந்தேன். இப்ப ஒரு பாக்கெட்டுக்கு மாறிருக்கேன். கொஞ்ச நாள்ல நிறுத்திடுவேன்ப்பா. எத்தனை வருஷத்துப் பழக்கம். டக்னு விடமுடியுமா?”

“விடறதுன்னா டக்னு விடலாம். கொஞ்சம் கொஞ்சமா விடறதெல்லாம் கதை. ஒண்ணு வேணாம்னு நினைச்சா டக்னு அதை விட்டுடணும்”

அப்படித்தான் செய்தாள் கணேஷின் காதலை விடும்போது. சின்னச் சின்ன சண்டைகள்தான். இந்த சிகரெட் விடாததில் ஒன்று. அலுவலக தோழியை அவள் வீட்டில் விடும்போது, எதிர் சிக்னலில் ஸ்கூட்டியில் வந்த நர்மதா கணேஷைப் பார்த்தபோது இன்னொன்று என்று இரண்டொரு சண்டைகள். ஆனால் அதெல்லாம் காரணமில்லை என்றே சொல்ல வேண்டும்.

எல்லாவற்றையும் சமாதானம் செய்தும், சமாளித்தும் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனால் நர்மதா இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது எனுமளவுக்கு அவள் மீதான காதல் இருந்தது.

ஆனால் நர்மதா ப்ராக்டிகல். வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததையும், மாப்பிள்ளை இவனை விட இரண்டு மடங்கு சம்பாதிப்பதையும் சொன்னபோது அவளுக்கும் அதில் சம்மதம் என்பதறிந்து உடைந்துபோனான். அழுதான். ஓடிச் சென்று பைக்கில் இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து வந்து அவள் முன்னால் கீழே போட்டு மிதித்து ‘இனி சிகரெட்டே பிடிக்க மாட்டேன் நர்மி. ப்ராமிஸ் நர்மி. உனக்கென்னென்ன பிடிக்காதோ எதுவும் பண்ணமாட்டேன்ப்பா.. ப்ளீஸ்..’ என்று கிட்டத்தட்ட மனநிலை தவறியவனாய்ப் பிதற்றினான். ஆனால் அவள் சொன்னபடி டக்கென்று இவனை, இவன் காதலை அறுத்தெறிந்து போனாள்.

அன்றைக்கு சிகரெட்டை விட்டவன் தொடவே இல்லை. அவளும் இரண்டொரு மெய்ல்கள் அனுப்பி, அவள் செய்தது நியாயம் என்பது போல சொல்லியிருந்தாள். இவனால் எதையும் தாங்க முடியவில்லை. மூன்று மாதங்கள் பித்துப் பிடித்தவன் போலிருந்துவிட்டு, தானாக கோவைக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்டு, மாற்றலாகிப் போய்விட்டான்.

‘ஹலோ சார்... பார்த்து போங்க.. குழந்தை வர்றதுகூட தெரியாம’ -யாரோ திட்டியபோது நினைவு கலைந்தான் கணேஷ்.

“இங்க எங்கயும் சிகரெட் கிடைக்காதுங்க.. வெளிலதான் போகணும்” - முதல் மூன்று ஸ்டால்களில் கிடைத்த பதில்தான் நான்காவது ஸ்டாலிலும் கிடைத்தது. ஆனால் இந்த முறை அருகில் இருந்த ஒருவர் “என்ன பாஸ்... தம் வேணுமா” என்று கேட்டு அவரிடம் இருந்த சிசர்ஸ் பாக்கெட்டை நீட்டினார்.

கொஞ்சம் தயக்கமாய் அவரைப் பார்த்தான். “ப்ச்.. எடுத்துக்குங்க பாஸ்... சென்னை ட்ரெய்ன் முக்கா மணிநேரம் லேட்டுன்னு நானும் உங்களை மாதிரி சிகரெட் தேடி வெளில போய் வாங்கிட்டு வந்தேன்”

ஒரு சிகரெட்டை மட்டும் உருவிக் கொண்டான்.

“மை நேம் ஈஸ் ஈஸ்வர். நீங்க?”

“கணேஷ்” என்று நீட்டிய அவரது கையைப் பற்றிக் குலுக்கினான். “இருங்க.. லைட்டர் வைஃப்கிட்ட இருக்கு” என்று இரண்டடி இடது புறம் நடந்து அங்கு அமர்ந்திருந்த அவரது மனைவியை அழைக்க அங்கே அமர்ந்திருந்த நர்மதா திரும்பினாள்.

ஒரு சேர ஈஸ்வரையும், தன் முன்னாள் காதலன் கணேஷையும் பார்த்தாள். சலனமற்ற பார்வை. கண்கள் ஓரிரு நொடிகள்தான் கணேஷிடம் நிலைத்தது. பிறகு ஈஸ்வரின் கையில் இருந்த சிகரெட் பாக்கெட்டிற்குப் போனது.

“ப்ச்.. சிகரெட் வாங்கத்தான் போனீங்களா? இதென்ன புதுசா சிசர்ஸ் வாங்கிருக்கீங்க? உங்க ப்ராண்ட் கிடைக்கலியா?” என்றவள் அவர் கையிலிருந்த சிசர்ஸ் பாக்கெட்டை வாங்கி மூடி தன் பேகைத் திறந்து அதற்குள் போட்டபடி “என்கிட்ட கேட்டுட்டுப் போயிருக்கலாம்ல. இல்லாம இருக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சு மணி கடைல கேட்டு வாங்கி வெச்சிருந்தேன்” என்று சொன்னபடி தன் பையிலிருந்து பிரிக்காத வில்ஸ் பாக்கெட்டையும், லைட்டரையும் எடுத்துக் கொடுத்தாள்.

வாங்கி, சற்றுத் தள்ளி வந்து கணேஷிடம் லைட்டரை நீட்டினார்.

“இல்லைங்க வேணாம்” என்று தன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு நகர்ந்த கணேஷை விநோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வர்.
.

23 comments:

Truth said...

படிச்சிட்டு வர்றேன்.

Truth said...

நடை சூப்பர்.
கார்ர்கி + ஆதி குறும்படம் எடுக்கலாம் :-)

பாதியில் முழுக்கதை தெரிந்துவிட்டது.

வினோ said...

நல்லா இருக்குங்க....

Nat Sriram said...

நன்று..நர்மதா சற்று அதிகப்படியாக கணவரின் புகைப்பழக்கத்தை என்கரேஜ் செய்வது மட்டும் செயற்கை..அது அந்த தம்பதியின் அன்னியோன்யமா இல்லை "ஏண்டி, அப்போ என்ன ஆக்ட் குடுத்த" என்று படிப்பவரின் "இந்த பொம்பளைங்களே இப்படி தான்" மென்டாலிட்டியை ஆதரிப்பதற்கா?

அலைகள் பாலா said...

சூப்பர் கதை பாஸ். ஆனா கெஸ் பண்ண முடியுதே.

மேவி... said...

நல்லாயிருக்கு ..ஆனா நிறைய இடத்துல வாசிச்ச மாதிரி இருக்கு. வேற எதாச்சு பஞ்ச் வைச்சு இருந்திருக்கலாம்

பரிசல்காரன் said...

@ All

இதில் சஸ்பென்ஸெல்லாம் இல்லை. ஈஸ்வர் சிகரெட் நீட்டும்போதே, இவன் நர்மதாவின் கணவனாய் இருக்கக் கூடும் என்பது தெரிந்துவிடுகிறதென்பது உண்மை. அதனால்தான் நர்மதா திரும்புவதை போகிற போக்கில் ஆச்சர்யமின்றி எழுதியிருக்கிறேன்.

நடராஜ் அவர்கள் சொல்வதுபோல இது வேறொரு கோணம். ஆனால் அவர் சொன்னதுமல்ல. (மாட்டிவிடறதுலயே குறியா இருக்காங்கப்பா.. :-)))


கடைசி வரி இப்படியும் ஒன்று எழுதினேன்.
-----------------------
ஈஸ்வரிடமிருந்து லைட்டரை வாங்கிய கணேஷ், சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தான். நுரையீரலில் பரவி இதம் தந்த புகையை சாவதானமாக வெளியே விட்டான். சீராக வெளிவந்த சிகரெட் புகையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நர்மதா

_-------------------------

தராசு said...

நர்மதாவின் மாற்றம் நம்ப முடியவில்லை.

அலைகள் பாலா said...

//ஈஸ்வரிடமிருந்து லைட்டரை வாங்கிய கணேஷ், சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தான். நுரையீரலில் பரவி இதம் தந்த புகையை சாவதானமாக வெளியே விட்டான். சீராக வெளிவந்த சிகரெட் புகையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நர்மதா
///

இது நல்ல இருக்கு.

S Maharajan said...

Arumaiyana kathai

kavitha said...

நல்லா இருக்கு :-)

கார்க்கிபவா said...

நல்ல வேளை தலைப்புல சிறுகதைன்னு சொன்னிங்க

M.G.ரவிக்குமார்™..., said...

இது போன்ற கதைகள் எழுதி சிகரெட் பழக்கத்தை ஊக்குவிக்கும் பரிசலை வன்மையாகக் கண்டிக்கிறோம்!....

சி. முருகேஷ் பாபு said...

அன்பு பரிசல்,
டிபிகல் ஃபார்மேட் கதை... உங்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இப்படி முடித்தால் பெண்மையைப் போற்றுவதாக இருக்கும்... இப்படி முடித்தால் பழைய கதைக்கு பழிவாங்குவதாக இருக்கும் என்றெல்லாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டுமா என்ன?!

Saravana kumar said...

குத்துங்க எஜமான்,குத்துங்க இந்த பொண்ணுகளே இப்படிதான்

Ŝ₤Ω..™ said...

கிருஷ் அண்ணா.. நீங்க பின்னூட்டத்தில் சொன்ன இரண்டாவது முடிவே நல்லா இருக்கு.. ஆண்களுக்கு என்ன சாபமா??
சட்டென தூக்கியெறிய காதல் என்ன சிகரெட்டா??

Unknown said...

//ஈஸ்வரிடமிருந்து லைட்டரை வாங்கிய கணேஷ், சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தான். நுரையீரலில் பரவி இதம் தந்த புகையை சாவதானமாக வெளியே விட்டான். சீராக வெளிவந்த சிகரெட் புகையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நர்மதா//
இயல்பாய் மாறிய நர்மதவுக்கு இந்த முடிவே சரியாய் இயல்பாய் இருக்கிறது.

Thamira said...

என்ன சொல்வது தெரியவில்லை. கதையின் எந்தப்பகுதியுமே அழுத்தமில்லையோ என சந்தேகம்.

மற்றபடி சிகரெட் பொதுவெளியில் ஒரு வெறுக்கத்தக்க பொருள் என்பதால் அதை பேஸ் லைனாகக் கொண்டு வேறெதையும் நீங்கள் சொல்ல முனைந்திருந்தாலும் கூட அது புரிதலில் பிரச்சினையையே கொன்டு வரும். அப்படியே இங்கும் ஆகியிருக்கிறது.

சுசி said...

இந்த பொண்ணுங்களே இப்டித்தான் பாஸ்..

எளிமையான நடை நல்லாருக்கு.. இந்த முடிவு இன்னும் நல்லாருக்கு.

செல்வா said...

ஆஹா ,, கதை கலக்கலா இருக்கு அண்ணா .. நான் இந்த மாதிரி திருப்பத்தை எதிர் பார்கவில்லை .. ?!

விக்னேஷ்வரி said...

பழைய பரிசல் எழுத்துகள் இனி கிடைக்கவே கிடைக்காதா...

பிரதீபா said...

//கடைசி வரி இப்படியும் ஒன்று எழுதினேன்--//இது தாங்க எனக்குப் பிடிச்சுது

தேவா said...

பொண்ணுங்களுக்கு எப்பவுமே நாம சிகரெட் மாதிரித்தான் பாஸ்.
எவ்ளோ முடியுமோ யூஸ் பண்ணிக்கிட்டு அப்புறம் கால்ல போட்டு மிதிச்சிட்டு போய்டுவாங்க.
உலகத்துக்கே தெரிஞ்ச விஷயத்த நீங்க மறுபடியும் சொல்லி இருக்கீங்க.....