Monday, March 30, 2009

நிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்!

செல்வேந்திரன் இரண்டொரு நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.....


"வீட்டுக்கொரு நூலகம் இருக்க வேண்டியதன் அவசியத்தை நண்பர் ஒருவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய வஞ்சகப் பேச்சில் உத்வேகம் பெற்றவர் "உடனடியாக நூலகம் வைக்கப் போகிறேன். எந்தப் பேங்கில் லோன் வாங்கலாம்?!" என்றார். அவரை ஆற்றுப்படுத்தி அமர வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. குறைந்த பட்சம் நூறு புத்தகங்களாவது வாங்கப் போகிறேன் என்றார். அதில் குறைந்தது ஆறையாவது நீர் படித்தால் செத்ததுக்குப் பிறகு சொர்க்கத்திற்குப் போய்விடலாம் என்று சொல்லி இருக்கிறேன்.

அதெல்லாம் இருக்கட்டும். ஒருவன் வீட்டில் இருந்தே ஆக வேண்டிய பத்து புத்தகங்களின் பட்டியலை உடனடியாகத் தயார் செய்யுங்கள். " என்று சொல்லியிருந்தார்.

செல்வா... பிடியுங்கள் பாராட்டை!

அந்த நண்பருக்கு ஊக்கமளித்தமைக்காக மட்டுமல்ல... எங்களையும் இரண்டொரு நாள் பழைய நினைவுகளைப் புரட்டிப் போட வைத்தமைக்கு!

மிக மிக யோசனைகள் செய்து இந்தப் பட்டியலை உருவாக்கினேன். நிச்சயமாக ஒரு வாசிப்பாளனாக இது அவரை மாற்றும் என்று சொல்வதற்கில்லை. என்னளவில் இவை என் வாழ்வில் மிக முக்கியப் புத்தகங்களாக நான் கருதுகிறேன்.

இதில் மாக்ஸிம் கார்க்கியின் புத்தகத்தைக் குறிப்பிட நினைத்தேன். பலபேர் படிக்கச் சொல்வதால். ஆனால் நான் இன்னும் படிக்காததால் குறிப்பிடவில்லை.

வாழ்க்கை, ஆன்மீகம், கவிதை, கட்டுரைகள், சினிமா என்று வாசிப்புத்தளம் விரிவடைய எல்லாத் துறைகளையும் தேர்ந்தெடுத்து குறிப்பிட்டிருக்கிறேன்.

இனி.. பட்டியல்....

1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்

ஆன்மிகம் என்பது ஒரு நெடிய பயணம். முடிவிலி. அந்தப் பயணத்தில் உங்களுக்கு இருக்கும் பல கேள்விகளுக்கு இதில் பல கோணங்களில் விடையிருக்கும்... நிச்சயமாக. அதுவும் இடைவெளி விட்டு ஒவ்வொரு முறை படிக்கும்போதும் வெவ்வேறாக உங்களுக்குள் கதவு திறக்கும்!

2. எல்லார்க்கும் அன்புடன் – கல்யாண்ஜி

வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி அவர்கள் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் அற்புதத் தொகுப்பு. சோர்வுறும் போதெல்லாம் எனக்கு டானிக்கைப் போல இதன் வரிகள் இருக்கும். இந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்வதன் மூலம் இதைப் படித்ததும் கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்புகளை நீங்கள் தேடிச் செல்வது நூறுசதம் நடக்கும்!

3. வனவாசம்,மனவாசம் – கவியரசு.கண்ணதாசனின் சுயசரிதை

கண்ணதாசனின் சுயசரிதை, வாலியின் சுயசரிதை (நானும் இந்த நூற்றாண்டும்) இரண்டுக்கும் நடந்த ரேஸில் சந்தேகத்துக்கிடமின்றி கவியரசர் வென்றுவிட்டார். காரணம் தமிழக அரசியல் குறித்தும், திரைப்படத் துறை குறித்தும் நீங்கள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள இது உதவும். இரண்டு பாகங்களையும் ஒன்றென குறிப்பிட்டு விட்டேன்!

4. கோணல் பக்கங்கள் 1,2,3 – சாருநிவேதிதா.

சாருவைப் பிடிக்காது என்று சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால் நிச்சயமாக படித்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு தவிர்க்க முடியாத எழுத்து சாருவுடையது. அவரது கட்டுரைகளின் தொகுப்பு இந்தக் கோணல்பக்கங்கள். இதிலிருப்பது இப்போதைய சாரு அல்ல. அப்போது அவரது எழுத்தில் இருந்த குறும்பும், கோபமும் இப்போது வேறு வடிவம் கொண்டதன் விளைவே பல சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்! (நேரம்.. நானெல்லாம் சாருவை விமர்சிக்கிறேன். ஸாரி சாரு!!)

5. சத்தியசோதனை – மகாத்மா காந்தி

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்பதை எழுதுவதை விட நீங்களாகப் படித்துத் தெரிந்து கொள்வது நலம். காரணம் நிச்சயம் நீங்கள் நூலகம் எல்லாம் வைத்து ஒரு வாசிப்பாளனாகக் காட்டிக் கொள்ளும்போது பல விவாதங்களில் காந்தி அடிபடுவார். (என்ன முரண்! அகிம்சைக்காரர் அடிபடுகிறார்!) படித்து விட்டு விமர்சித்தால் உங்களுக்கு சௌகரியம்... காந்திக்கும்!

6. கதாவிலாசம் – எஸ்.ராமகிருஷ்ணன்

முக்கியமாக எஸ்.ரா-வின் இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடக் காரணம், இது ஒன்றைப் படித்தால் இன்னும் 50 புத்தகங்கள் வாங்க அவரைத் தூண்டும். தமிழில் தவிர்க்கவே முடியாத ஆளுமை கொண்ட 50 எழுத்தாளர்களைக் குறித்து அதில் அவர் எழுதியிருக்கிறார். 50 இல்லையெனினும் 20 எழுத்தாளர்களைத் தேடி ஓடுவது உறுதி.

7. பொன்னியின் செல்வன் – கல்கி

வரலாற்று எழுத்து அதிலும் ஒரு க்ரைம் நாவலுக்குரிய ஸ்பீடு, சஸ்பென்ஸ், பாத்திரப் படைப்புகள்...! பொன்னியின் செல்வனைப் படித்து விட்டு, சிவகாமியின் சபதத்தை தேடிப் போகாமலா இருப்பீர்கள்?!?

8. வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சாங்கிருத்தியன்

ரொம்ப போரடிக்கிற எழுத்து. ஆனால் நாகரிகங்களைப் பற்றி அறிந்து கொள்ள நிச்சயமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம். கி.மு.6000த்திலிருந்து 20ம் நூற்றாண்டு வரை நாகரிகங்களில் என்னென்ன மாற்றம் நிகழ்ந்துள்ளன என அறிய இதிலுள்ள 20 கதைகள் உதவும்.

9. நீங்களும் முதல்வராகலாம் – ரா.கி.ரங்கராஜன்

அற்புதமான ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம். அலுவலகத்தில், வீட்டில், சமூகத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டால் முன்னுக்கு வரலாம் என்பது ரொம்பப் பிராக்டிகலாக எழுதப்பட்டிருக்கும். படித்தால் நிச்சயம் ‘ஓ.. அவன் முன்னேறினது இதே மாதிரிதான்ல’ என்று யாரையாவது ஒப்பிட்டுக் கொள்வீர்கள்.

10. உலகசினிமா 1,2 – செழியன்

வாசிப்பு என்று தளம் விரிவடையும்போது சினிமா குறித்த அறிவு தவிர்க்க முடியாதது. அதற்கு உலகசினிமாக்களைப் பார்க்க வேண்டியது அவசியம். இந்தப் புத்தகத்தைப் படித்து இவற்றிலுள்ளவற்றில் 30% படங்களைப் பார்த்தாலே ஓரளவு சினிமாவை ரசிக்க... அதாவது எப்படி ரசிக்க என்பதை அறிந்து கொள்வீர்கள்.


****

மிகுந்த வலியோடு சுஜாதாவின் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் இதில் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். காரணம் வாசிக்க ஆரம்பித்தால் நிச்சயம் சுஜாதாவைத் தொடாமல் இருக்க முடியாது.. அதை நானாகச் சொல்லி பத்தில் ஒரு எண்ணிகையைக் குறைத்துக் கொள்வானேன் என்பதால்.

மிக முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும்...

நிச்சயமாக ‘அட.. இத விட்டுட்டோமே’ என்று நினைக்கத்தான் போகிறேன்.. ஏதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்து. அதேபோல இதிலுள்ள எல்லாமே உங்கள் எல்லாருக்குமே பிடித்ததாய் இருக்காது. ஆனால் எல்லாருக்குமே பத்தில் ஏதோ ஒன்று தவிர்க்க முடியாததாக இருக்குமென்று நம்புகிறேன். நீங்கள் நினைக்கும் புத்தகம் வேறெதுவும் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இதைப் பதிவாக எழுதக் காரணம் எனக்கும் ஒன்றிரண்டு நண்பர்கள் ‘புதிதாகப் படிப்பதென்றால் என்ன புத்தகங்கள் வாங்க?’ என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். ‘நானெல்லாம் அதைச் சொல்வதா’ என்ற காரணத்தால் பதிலளிக்காமலே இருந்திருக்கிறேன். என்னமோ நானெழுதுவதையும் எழுத்தென்று படிக்கும் சிலர் மீண்டும் மீண்டும் கேட்கும்போது சுட்டி கொடுக்க இந்தப் பதிவு எனக்கு உதவும். அதுவுமில்லாமல் செல்வேந்திரன் சார்பாக எங்கள் ஊர்க்காரர் ஈரவெங்காயம் சிங்கப்பூர் விமான டிக்கெட் பரிசு தருகிறேனென்றிருக்கிறார். போய்த்தான் பார்ப்போமே....!

55 comments:

Cable சங்கர் said...

அருமையான கம்பைளிங்.. பரிசல்.. அதிலும் பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் படித்தால் மீண்டும், மீண்டும் படிக்க போவது நிச்சயம்

அதே போல் உலக சினிமா புத்தகமும். நல்ல அறிமுகம்.

எஸ்.ரா வை கண்டிப்பாக யாரும் தவிர்க்க வே முடியாது ஒரு நூலகம் வைக்க வேண்டும் என்ற நினைப்பிருந்தால்.

அதே போல் சாருவை சமகால எழுத்துக்களால் அளவிட முடியாது..
கோணல் பக்கங்களும், ராஸலீலாவும் நிஜமாகவே மாஸ்டர்பீஸ்.

தலைவன் சுஜாதாவை லிஸ்ட்டில் விட்டதுக்காக வண்மையாக கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன்.

மாதவராஜ் said...

புத்தகப் பட்டியல் சகல ஏரியாக்களிலும் கால் வைத்து இருக்கிறதே....!
ஒரு ஆள்தான் நீங்கள்.....!

narsim said...

பரிசல் வாரத்தின் முதல் நாளில் மிக நல்ல பயனுள்ள பதிவு.

இன்னும் நிறைய, நிறைய புத்தகங்கள் இருக்கின்றன என்றாலும் நீங்கள் சொல்லியது போல் இந்தப்பட்டியல் அவசியமான ஒன்றாகவே உள்ளது

கணினி தேசம் said...

காலை வணக்கம்.

கணினி தேசம் said...

அருமையான பதிவு, பரிசல்!

என்னைப்போன்ற எந்தப்புத்தகம் வாங்குவது என்று முழிப்போருக்கு உதவும்.
உங்கள் பட்டியலில் நான் படித்தது "பொன்னியின் செல்வன்" மட்டுமே. மற்றபடி அவ்வளவாக புத்தகங்கள் வாங்கியதில்லை. பதிவுலகத்திருக்கு வந்தபின் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் லேசாக வந்துள்ளது. அடுத்தமுறை திருப்பூர் வரும்போது எப்படியும் சில புத்தகங்கள் வாங்குவது என்றிருக்கிறேன். உங்கள் பட்டியல் அதற்கு உதவியாயிருக்கும்.

நன்றி.

kuma36 said...

பிரயோசமான் விடயத்தை சொனிங்க. நன்றியண்ணா!

சென்ஷி said...

நீங்க எழுதியிருக்கறதுல கதா விலாசம் என்னோட ஆல்டைம் ஃபேவரைட் :))

Thamiz Priyan said...

அப்ப பிளைட் டிக்கெட் உறுதின்னு சொல்லுங்க... வாழ்த்துக்கள்!
நல்ல கலெக்‌ஷன்!

Raju said...

Super Krishna Anne...

T.V.ராதாகிருஷ்ணன் said...

புதுமைப்பித்தன் கதைகள் (புதுமைப்பித்தன் பதிப்பகம்) அவரின் 103 கதைகளின் தொகுப்பு

அறிவிலி said...

//மிகுந்த வலியோடு சுஜாதாவின் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் இதில் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். காரணம் வாசிக்க ஆரம்பித்தால் நிச்சயம் சுஜாதாவைத் தொடாமல் இருக்க முடியாது.. அதை நானாகச் சொல்லி பத்தில் ஒரு எண்ணிகையைக் குறைத்துக் கொள்வானேன் என்பதால்.//

ச்சே.. என்ன சுஜாதா பேரை காணோமேன்னு நெனச்சேன்..
சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.

முரளிகண்ணன் said...

நல்ல தொகுப்பு

ramachandranusha(உஷா) said...

நல்லவேலையாய் நூலகத்திலேயே குடித்தனம் நடத்துபவர்களை கூப்பிடவில்லை :-)

பரிசல், தேர்வு வெரைட்டியாய் இருக்கிறது.
ஒரு காலத்தில் விழுந்து விழுந்து படித்த சுஜாதாவின் நாவல்கள் இன்று ரசிக்க முடியவில்லை. கணையாழி கடைசி பக்கங்களும், சிறுகதைகள் மட்டுமே என் தேர்வு

Athisha said...

பரிசல் நான்கு புத்தகங்களை (கோணல் பக்கங்களையும் சேர்த்து!) சுயசரிதங்களாகவே குறிப்பிட்டிருக்கிறீர்கள். கவனித்தீரா?

நீங்களும் முதல்வராகலாம் இந்த தொகுப்பில் வந்திருக்க கூடாத புத்தகமாக கருதுகிறேன்.தமிழ்மொழிபெயர்ப்பில் தவறான முன்னுதாரணங்கள் இடம் பெற்றிருக்கும். அதற்கு ஆங்கில ஓரிஜினலையே(48 laws of power) பரிந்துரைத்திருக்கலாம்.

இந்த பத்துடன்(எல்லாமும் அல்ல இந்த தொகுப்புடன் ) எனக்கு ஏனோ உவகையில்லை. உங்களுடைய பரந்து விரிந்த வாசிப்பனுபவத்திற்கு இந்த தொகுப்பு மிகச்சாதாரணமாய் தெரிகிறது. இதைவிட இன்னும் நல்ல புத்தகங்களின் தொகுப்பை இன்னொரு முறையும் எதிர்பார்க்கிறேன்.

( போட்டிக்குத்தான் நீயி பதிவு போடுவியாயா? சும்மாவும் இன்னொரு வாட்டி போடலாம் , போட்டிக்காக இல்லாமல் இதை தொடர்பதிவாகவும் பல முறை பல பதிவர்களும் தொகுத்தால் என்னைப்போன்ற புதிய தற்குறி வாசிப்பாளர்களுக்கு உபயோகமாய் இருக்குமே)

சும்மா தமாசுக்கு, பதில் தேவையில்லாத ஒரு கேள்வி - இந்த பத்து புத்தகத்தையும் வீட்டில வச்சுகிட்டாலோ அல்லது படிச்சிட்டாலோ என்னாகும்?

மற்றபடி மிக அருமையான முயற்சி தோழர்.

பரிசல்காரன் said...

@ அதிஷா..

நீங்க எனக்கு பின்னூட்டம் போட்டதை லக்கியா கருதறேன்!

//உங்களுடைய பரந்து விரிந்த வாசிப்பனுபவத்திற்கு இந்த தொகுப்பு மிகச்சாதாரணமாய் தெரிகிறது.//

தோழர்... இது புதுசா வாசிக்க ஆரம்பிக்கறவங்களுக்குச் சொல்லச் சொன்னது.

பரிசல்காரன் said...

என்ன பாரதியாரைக் காணோம்.. என்ன திருக்குறளைக் காணோம் என்று நூற்றுக்கணக்கான மெயில்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. (நெனைப்புதான்!)

அதெல்லாம் அ,ஆ.இ.ஈ மாதிரி. அதச் சொல்லவே வேண்டாம். நிச்சயமா அவற்றைக் கடந்து வந்தவர்கள்தான் புக்ஸ் வாங்கிப் படிக்கணும்கற எண்ணத்துல இருப்பாங்க.

சுஜாதாவும் அதுல அடக்கம்.

அதே மாதிரி... இது ஆரம்பநிலை வாசகனுக்குத்தான். அடுத்த கட்டம்னா.. சாருவோட கோணல் பக்கங்களுக்கு பதிலா ஜீரோ டிகிரியோ, ராஸலீலாவோ வரும். ஆரம்பநிலை வாசகன் அதப் படிச்சா முடியப் பிச்சுகிட்டு ஓடமாட்டான்????

கார்க்கிபவா said...

//(நேரம்.. நானெல்லாம் சாருவை விமர்சிக்கிறேன். ஸாரி சாரு!!)
//

ஒரு வாசகனாய் ஒரு எழுத்த்தாளன் குறித்த கருத்தைக் கூறுவது விமர்சனம் என்றால் அதிலென்ன தவறு? நீங்க சாரி சொல்ல வேண்டுமென்றால் சாரு எத்தனை முறை சொல்ல வேண்டியிருக்கும்? ஏன் இப்படி சகா?

அதிஷாவை ஏற்கிறேன். உங்க வாசிப்புக்கு நான் வேறு மாதிரி கணித்திருந்தேன். பல்வேறு தளங்களை தொட வேண்டும் என்பதற்காக இப்படி சொல்லியிருக்கிறீர்கள். எழுத்தின் மதிப்பு அது தொடும் தளத்தின் குறித்தும் இருக்கலாம். ஆனாலும் அதற்கான சதவீதம் குறைவே.

உலகசினிமா ஒரு வழிகாட்டி மட்டுமே. நூலகத்தில் அதில் இருக்கும் சில படங்கள் இருப்பது நன்றி. அந்த புத்தகம?ட எஸ்.ராவின் அயல் சினிமா படித்திருக்கிறீர்களா? எனக்கு இதியெல்லாம் விட அய்யணாரின் அறிமுகங்கள் பிடித்திருக்கிறது. அதியே ஒரு நூலாக போடலாம்.

வாழ்த்துகள் உங்களுக்கும் செல்வேந்திர்னுக்கும்

Thamira said...

ஒலகத்துலேயே நெம்ப டஃப்பான போட்டிங்கிறதாலயும், மண்டை சூடாயிரும் என்பதாலயும் இந்த போட்டியில் நான் கலந்துகொள்ளவில்லை.. நீங்களே ஜெயிச்சுக்கோங்க.. ஆல் தி பெஸ்ட்.!

அப்புறம் உங்க லிஸ்ட்டில் ஒரு முக்கிய புத்தகம் விட்டுப்போயிற்று. அது ஆதிமூலகிருஷ்ணன் எழுதிய 'புலம்பல்கள்'.! (பிரின்ட் எடுத்து அழகாக பைன்ட் செய்யப்பட்டது)

Athisha said...

\\
தோழர்... இது புதுசா வாசிக்க ஆரம்பிக்கறவங்களுக்குச் சொல்லச் சொன்னது.
\\

\\
அதெல்லாம் அ,ஆ.இ.ஈ மாதிரி. அதச் சொல்லவே வேண்டாம். நிச்சயமா அவற்றைக் கடந்து வந்தவர்கள்தான் புக்ஸ் வாங்கிப் படிக்கணும்கற எண்ணத்துல இருப்பாங்க.

சுஜாதாவும் அதுல அடக்கம்.

அதே மாதிரி... இது ஆரம்பநிலை வாசகனுக்குத்தான். அடுத்த கட்டம்னா.. சாருவோட கோணல் பக்கங்களுக்கு பதிலா ஜீரோ டிகிரியோ, ராஸலீலாவோ வரும். ஆரம்பநிலை வாசகன் அதப் படிச்சா முடியப் பிச்சுகிட்டு ஓடமாட்டான்????
\\

தோழர் கூ.கெ.கு வுக்கு!

இந்த லிஸ்ட் யாருக்குனு முதலில் ஒரு முடிவுக்கு வரவும்.

ஆரம்ப நிலை வாசகனுக்கா? அல்லது என்னைப்போல அரைவேக்காட்டு வாசகனுக்கா?

நாங்களும் எங்களுக்கு தெரிந்த வாரமலர் குமுதம் ஆ.வி மருதம் முல்லை (அதெல்லாம் புக்கா?) தொகுத்து ஒரு பதிவு போடணும் தோழர்

Unknown said...

அப்போவே கமெண்டியிருக்கலாம் இப்போ பாருங்க 19வது ஆளா போயிட்டேன் :((

Unknown said...

Please post where i can buy Ra.Ki. Rangarajan's "neengalum muthalvaragalam" book online?

பரிசல்காரன் said...

@ கார்க்கி

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பரிசல்காரன் என்ற பிம்பத்தை அழித்துவிட்டு, ஒரு வாசிப்பைத் தொடங்க இருக்கும் நண்பருக்கு இன்னொருவன் சொன்னதாய் இதைப் பாருங்கள் ஸ்வாமி!

உலக சினிமாவைப் பொறுத்த வரை திலகவதியின், எஸ்,ரா-வின் புத்தகம் அடுத்த நிலை வாசகனுக்கு பரிந்துரைக்க.

இது ஆரம்பநிலை.

அதே போல.. இதிலுள்ள எல்லாப் புத்தகமுமே வேறு சில புத்தகங்களை தேட வைக்கும் நோக்கிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டது.

Unknown said...

Please post where can i get Ra.ki.Rangarajan's "neengalum muthalvaragalam" book online?

பரிசல்காரன் said...

@ மணி

நக்கீரன் பதிப்பக வெளியீடு தலைவா.

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான தேர்வு பரிசல்.. இதில் என்னிடம் ஐந்து புத்தகங்கள் உள்ளன.. இப்படி வலையில் உள்ள மக்கள் எல்லாரும் ஆளுக்கொரு பட்டியல் போட்டாலே நல்ல புத்தகங்களைத் தேடி வாங்கி விடலாம்.. ஆரம்பித்து வைத்த செல்வேந்திரனுக்கு நன்றி..

Unknown said...

Parisal,

Website address irunthaa kudunga. "neengalum muthalvaragalam" book order pannanum. i am not in tamil nadu. so can't get book through book shop. only way is to get it online.

என்.இனியவன் said...

பயனுள்ள பதிவு.

என்னடா நம்ம சுஜாதாவை காணவில்லை என்று யோசித்தேன்.
அதற்காக நீங்கள் சொன்ன காரணம் சரி தான்.
சுஜாதாவை புறக்கணித்து ஒரு வாசிப்பா?

அதே போல் தான் எஸ்.ரா வும்.

அ.முத்துலிங்கம் புத்தகங்கள் வாசித்து இருக்கிறீர்களா?
முடிந்தால் வாசித்து பார்க்கவும்.
அவரது புத்தகங்களும் supper.

Vinitha said...

Nice list.

Sujatha has the best place in everyone's heart ;-) ( no No I am not imitating Karunanithi )

anujanya said...

இந்தத் தொகுப்பில் 'இது ஏன் இல்ல, அது ஏன் இல்ல' என்று கேட்க எனக்கு அந்த அளவு வாசிப்பு இல்லை. பட்டியலில் நான் படித்து இருப்பது 'சத்திய சோதனை' மற்றும் 'பொன்னியின் செல்வன்'. மீதியில் கல்யாண்ஜியும், கதாவிலாசமும் படிக்க ஆவல். மற்றவை - TEHO.

ஆனால், இவ்வளவு படிக்கும் உங்களுக்கு ஒரு சல்யூட். வெற்றியின் பின் நிச்சயம் உழைப்பு இருக்கும் என்பதற்கு நீங்களும் ஒரு சாட்சி.

அனுஜன்யா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தலைவரே இதெல்லாம் இலவச மின் புத்தகங்களாக கிடைத்தால் இணைப்புக் கொடுங்களேன். மிகவும் உதவியாக இருக்கும்.

Anonymous said...

நல்ல தொகுப்பு,

அப்பிடியே என் பதிவில் வந்து லிஸ்ட் பாத்துட்டு வேற நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்துங்க.

நன்றி

அ.மு.செய்யது said...

நல்ல தகவல்..

சத்திய சோதனையைத் தவிர மற்ற புத்தகங்களை ( இந்த 10ல்) நான் படித்ததில்லை.

நன்றி பரிசல் !!

கே.என்.சிவராமன் said...

பரிசல்,

தவறாக நினைக்காதீர்கள்.

வாசிப்பில் புதிய வாசிப்பு, பழைய வாசிப்பு என்று ஏதாவது இருக்கிறதா?

எந்த நூலை, எப்போது வாசித்தாலும் அது புதுவாசிப்புதானே?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

KARTHIK said...

// எனக்கு இதியெல்லாம் விட அய்யணாரின் அறிமுகங்கள் பிடித்திருக்கிறது. அதியே ஒரு நூலாக போடலாம்.//

இதை நான் வழிமொழிகிறேன்.

// ஒரு வாசிப்பைத் தொடங்க இருக்கும் நண்பருக்கு இன்னொருவன் சொன்னதாய் இதைப் பாருங்கள்.//

தல அது ஏன் வாசிப்பை தொடங்க இருப்பவங்களுக்கு சுயசரிதை புத்தகங்களா பாத்து பரிந்துரை பண்ணுறீங்க.சுயசரிதை ஒரு வித சளிப்பையே ஏற்படுத்தும்.அதுக்கான காரணத்தை ஒருமுறை சுஜாதா கற்றதும பெற்றதுமில் கூட விளக்கி இருப்பார்.

Venkatesh subramanian said...

நீங்க எழுதியிருக்கறதுல கதா விலாசம் என்னோட ஆல்டைம் ஃபேவரைட்
ரிப்டெய்ய்ய்ய்ய்ய்ய்
மற்றும்
காமத்திலிருந்து கடவுளுக்கு-ஒஷோ
இதுவும் படிக்க வேண்டிய முக்கியமான‌ புத்தகமாக கருதுகிறேன்-நன்றி

Senthil said...

Dear krishnakumar,

Any idea where I can get e books?

Thanks
Senthil Tirupur ( Bahrain)

ராஜ நடராஜன் said...

40 மார்க் எனக்கு நானே போட்டுக்கிறேன்.

Venkatesh Kumaravel said...

விசயத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் தலைவரே!

http://paathasaari.blogspot.com/2009/03/10.html

கார்க்கிபவா said...

//Thanks
Senthil Tirupur ( Bahrain)//

திருப்பூர் பஹரைனிலா இருக்கிறது? பரிசல் அப்ப நீங்க எப்படி சென்னை வந்தீங்க? ஃப்ளைட்டிலா?

லக்கிலுக் said...

//@ அதிஷா..

நீங்க எனக்கு பின்னூட்டம் போட்டதை லக்கியா கருதறேன்!//

இப்போ தான் கவனிச்சேன்.

என்ன விளையாட்டு இது? :-(

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அன்புள்ள பைத்தியக்காரன், புதிய வாசிப்பென்றால், புதிதாக (அதாவது முதல் முறையாக) வாசிப்பதென்று அர்த்தம்.

இரண்டாவது முறையாக வாசிப்பதை மறு வாசிப்பென்று சொல்லலாம்.

ஸ்ஸ்ஸ்யப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே :)

Senthil said...

//Thanks
Senthil Tirupur ( Bahrain)//

//திருப்பூர் பஹரைனிலா இருக்கிறது? பரிசல் அப்ப நீங்க எப்படி சென்னை வந்தீங்க? ஃப்ளைட்டிலா?//

I am from Tirupur. Now in bahrain

மணிகண்டன் said...

பரிசல், பொன்னியின் செல்வன் மற்றும் சத்திய சோதனை படிச்சி இருக்கேன். மிச்சம் எதுவும் படிச்சது இல்ல. புதுசா வாசிக்கரவங்களுக்கு சுயசரிதைகள் சரியான சாய்ஸ் தான்.

திருக்குறள், பாரதியார் கவிதை அளவுக்கு ஒரு தமிழ் வாசகனுக்கு சுஜாதா அறிமுகம் ஆகி இருக்கனும்ன்னு சொல்றது ஆச்சரியமா தான் !

***
ஆரம்ப நிலை வாசகனுக்கா? அல்லது என்னைப்போல அரைவேக்காட்டு வாசகனுக்கா?
***

நம்மை போல் அரைவேக்காட்டு ஆரம்ப நிலை வாசகனுக்குன்னு வச்சிக்கோங்க அதிஷா. மொத்தமா பத்தே பத்து புத்தகம் தான் எழுதி இருக்காரு. அதுல இது ஏன் இல்லை, இது ஏன் இருக்குன்னு கேள்வி கேக்கலாமா ?

குசும்பன் said...

//1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்//

இதுமட்டும் என்னிடம் இருக்கு:)

ALIF AHAMED said...

//1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்//

இதுமட்டும் என்னிடம் இருக்கு:)
//க்கும் இருந்துட்டாலும்...!!!

Kumky said...

ரசனைகள் மாறுபடலாம்...அதற்கேற்பவே புத்தகங்களும்.
விடுபட்டவை அனேகம்.

ஆயில்யன் said...

//குசும்பன்
30 March, 2009 6:24 PM //1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்//

இதுமட்டும் என்னிடம் இருக்கு:)
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

லீவு முடிஞ்சு வர்றப்ப கொண்டுவந்தாச்சுல்ல கூடவே... :)

butterfly Surya said...

5 எனது வீட்டு லைப்ரரியில் உள்ளது. இன்னும் 5 விரைவில்.

பகிர்விற்கு நன்றி.

Prabhu said...

பொன்னியின் செல்வன் மட்டும் படிச்சிருக்கேன்> ஆரம்பிச்சவன் ஆறு தொகுதியும் 4 தடவைக்கு மேலயே மடிச்சுட்டேன்!

மேவி... said...

innum niraiya irukku boss....
periya stall matrum second hand book stall time spend panni parunga....
niraiya kandu pidipinga...

nalla padivu.....
:-))

மேவி... said...

ponniyin selvan mattum naan niraiya vatti padithu iruppen....

chennailibrary.com

intha website tamil padaippu silathu irukku

Unknown said...

நான் வாங்க நினைக்கும் சில புத்தகங்கள் உங்கள் வரிசையில் இருக்கிறது நண்பரே... அடிக்கடி இந்தமாதிரி பட்டியளைப் போடுங்கள்.

நன்றி,
கிருஷ்ணப் பிரபு

ஊர்சுற்றி said...

5,6,7 & 10 வாசிச்சிட்டேனுங்கோ...

மெனக்கெட்டு said...

நானும் நிறைய லிஸ்ட் போட்டு வைத்தேன்.. கொஞ்சம் தான் இதுவரை படிக்க முடிந்தது.


படித்த (மற்றும் படிக்க நினைத்த) புத்தகங்கள்!

http://tamilpadhivu.blogspot.com/2009/02/blog-post_10.html

http://tamilpadhivu.blogspot.com/2009/03/2.html

http://tamilpadhivu.blogspot.com/2009/03/3.html

ஒரு வேளை உங்கள் லிஸ்ட் மற்றும் பதிப்பகத்தை சரி பார்த்துக் கொள்ள, அடுத்த புத்தகக் கண்காட்சியில் தேர்ந்தெடுக்க! உதவலாம்.

நன்றி.

Killivalavan said...

வைகறை பதிப்பக முகவரி கிடைக்குமா?
அல்லது
எல்லோர்க்கும் அன்புடன் புத்தகம் எங்கு கிடைக்கும்?