Friday, July 4, 2008

BUTTERFLY EFFECT (தமிழ் சிறுகதை!)


வாட்சைப் பார்த்தேன். மணி எட்டேமுக்கால் என்றது. அலுவலகத்திலிருந்து கிளம்பி, பஸ் ஸ்டாப் போனேன். உமா வேலை முடிந்து பஸ்ஸில் வந்திறங்கி, எனக்காக காத்துக்கொண்டிருந்தாள். அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி பைக்கை செலுத்தினேன்.

வீட்டினுள் சென்றதும் வீடு இருந்த கோலத்தைக் கண்டு முகம் மாறினாள்.


"மீரா”

“என்னம்மா?”

“ஆறாங்க்ளாஸ் போற நீ... இன்னும் சின்னக் குழந்தை மாதிரி வீட்ல ஒரு வேலையும் செய்யாம வீட்டை எப்படி வெச்சிருக்க பாரு.”

“இல்லம்மா.. ஹோம் வொர்க் செய்ய லேட் ஆயிடுச்சு.. அதுமில்லாம ஏழு மணிக்கு போன கரண்ட் இப்போதாம்மா வந்தது..”



"இங்க பாரு.. டீப்பாய் எந்த இடத்துல இருக்குன்னு.. ஏன் இப்படி நடுக்கூடத்துக்கு வந்துது?"



"இல்லம்மா, கரண்ட் போனப்ப எமர்ஜன்சி லைட்-கிட்ட வெச்சு எழுதறதுக்காக நான்தான் தள்ளி வெச்சேன்"



"ஐயோ... என்னடி இது டிரெஸ்ஸை கழ்ட்டி வாஷிங் மிஷின்ல போடாம இப்படி பெட் மேல போட்டு வெச்சிருக்க?"



"இதோ.. எடுத்துப் போட்டுடறேன்மா"



உமா ஒவ்வொன்றாகத் திட்ட மீரா பயத்துடனும், நடுக்கத்துடனும் அவள் சொன்ன வேலைகளை செய்து கொண்டே இருந்தாள்.



எனக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. சின்னவள் மேகா எங்கே அடுத்து தனக்கு ஏதாவது திட்டு விழுமோ என்று பரிதாபமாக அக்கா செய்யும் வேலைகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.


உடை மாற்றி விட்டு சமையலறைக்குள் போன உமா மீண்டும் "மீரா" என கத்தினாள்.



இந்தமுறை மீரா வந்து நின்றபோது அவள் கால்கள் நடுங்கியதை நான் கவனித்தேன்.



"எ..எ..என்னம்மா" மீராவின் குரல் உடைந்திருந்தது.



"லஞ்ச் பாக்சைகூட க்ளியர் பண்லியா நீ?"



"அம்.. அம்மா.. ப்ளீஸ்மா.. ஒரு பத்து நிமிஷம் சோபால உக்காரும்மா. நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிடறேன்"



"போ.. மீரா" வெறுப்புடன் சொல்லிவிட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு சோபாவில் போய் அமர்ந்த அம்மாவைப் பார்த்து கண்ணில் நீர்வர நின்றுகொண்டிருந்தாள் மீரா.



"ஏம்ப்பா.. குழ்ந்தையை திட்டற?" நான் வாய் திறந்தேன்.



"காலைல நாலு மணிக்கு எழுந்து உங்களுக்கெல்லாம் ரெடி பண்ணிட்டு ஏழு மணிக்கு கிளம்பி வேலைக்குப் போய், நைட் ஒம்பது மணிக்கு வந்து வீடு இந்தக் கோலத்துல இருந்தா நான் பேசாம இருக்கணும். அப்படித்தானே?"



நான் ஒன்றும் பேசாமல் அமைதியாகி விட்டேன்.



மீரா டிபன் பாக்சை சிங்க்-ல் போட்டுவிட்டு, வீடு முழுவதும் பெருக்கினாள். அம்மாவின் பக்கமே செல்லாமல் அக்கா பின்னாலேயே நடந்து, அவள் கூட்டும் போது, அங்கங்கே இருக்கும் பொருட்களை எடுத்து வைத்து உதவிக் கொண்டிருந்தாள் மேகா.



அவள் எல்லா வேலைகளையும் செய்து விட்டு சோபாவில் கண்மூடிப் படுத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் போய்.. "அம்மா.. எழுந்திரும்மா.." என்று எழுப்பினாள். உமா எழுந்து சமையலறை சென்றுவிட, தனியாக நின்று கொண்டிருந்த மீராவை என்னருகில் அழைத்து அமரச் சொன்னேன்.



"ஏன் குட்டிம்மா.. எப்பவுமே அம்மாகிட்ட எவ்ளோ நல்ல பேர் வாங்குவ.. இன்னைக்கு ஏன் இப்படி திட்டு வாங்கற?"



நான் கேட்டதை கவனிக்காமல் அவள் கண்கள் எங்கோ அலை பாய்ந்து கொண்டிருந்தது.. அவள் கண்கள் பார்த்த திசையை நோக்கினேன்..



ஒரு பட்டாம்பூச்சி வீடு முழுவதும் சுற்றுவதும், ட்யூப்லைட்-ல் அமர்வதுமாய் விளையாடிக் கொண்டிருந்தது.



"மீரா" நான் அவள் கவனத்தை என் பக்கம் திருப்ப முயற்சித்தேன்..



"என்னப்பா"


"ஏன்ப்பா இப்படி அம்மாகிட்ட திட்டு வாங்கிக்கற-ன்னு கேட்டேன்"

"இல்லப்பா. நான் ஸ்கூல் முடிஞ்சு, ட்யூஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் இதெல்லாம் பண்ணீடுவேன். இன்னைக்கு என்னாச்சுன்னா.." சொல்லிக் கொண்டே வந்தவள் திடீரென கண்கள் விரிய..


"மேகா.. மேகா. அங்க பாரு அந்த பட்டர்ப்ளை உன்னோட ஸ்கூல்பேக்-ல உக்காந்துடுச்சு"


"ஐ!" - மேகா உற்சாகமானாள்.


"இன்னைக்கு என்னாச்சு? என்னமோ சொல்ல வந்த?"


"இதோ.. இந்த பட்டர்ப்ளை இருக்குல்லப்பா.. அது வீட்டு முழுக்க பறந்துட்டு இருந்ததுப்பா.. அதப் பார்த்துட்டு இருந்ததுல பண்ணாம விட்டுட்டேன்ப்பா.. அதுக்கப்புறம் கரண்ட் வேற போச்சா.. பண்ண முடியல" என்றவள்...


"ஐ! மேகா.. இப்போ அது உள்ள போகுது.. என்னோட பேக்-ல உக்காருதா-ன்னு பாக்கலாம் வா" என்று எழுந்து ஓடினாள்.


எனக்கு பேச்சே வரவில்லை.





34 comments:

பரிசல்காரன் said...

என்ன இருந்தாலும் மீராவை அவங்க அம்மா உமா அப்படி திட்டீருக்கக்கூடாது-ன்னு எதுவும் பின்னூட்டம் போட்டுடாதீங்க! உமா, அவங்க பொண்ணுக்கு நல்ல பழக்கமெல்லாம் வளரணும்-ன்னுதான் இப்படிஎல்லாம் திட்டறாங்க!

VIKNESHWARAN ADAKKALAM said...

குழந்தையாக இருந்த போது எல்லாமே மகிழ்ச்சிதான்... :)

VIKNESHWARAN ADAKKALAM said...

டூ எல்லாம் இல்லை நண்பரே...

உடல் நலம் இல்லாமல் போய் விட்டது... அதால் உற்சாகமாக பின்னூட்டம் போட முடியவில்லை...

VIKNESHWARAN ADAKKALAM said...

என்னை ஜீடாக்கில் ஆட் செய்துவிடுங்கள்..

ambi said...

//அம்மாவின் பக்கமே செல்லாமல் அக்கா பின்னாலேயே நடந்து, அவள் கூட்டும் போது,//


:)))மேகா ரொம்ப தெளிவு.


//உமா, அவங்க பொண்ணுக்கு நல்ல பழக்கமெல்லாம் வளரணும்-ன்னுதான் இப்படிஎல்லாம் திட்டறாங்க!
//

நீங்க ரெம்ப நல்லவருங்கோ! :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ ambi said...
//அம்மாவின் பக்கமே செல்லாமல் அக்கா பின்னாலேயே நடந்து, அவள் கூட்டும் போது,//


:)))மேகா ரொம்ப தெளிவு.


//உமா, அவங்க பொண்ணுக்கு நல்ல பழக்கமெல்லாம் வளரணும்-ன்னுதான் இப்படிஎல்லாம் திட்டறாங்க!
//

நீங்க ரெம்ப நல்லவருங்கோ! :)))//

வழிமொழிகிறேன்.

rapp said...

உங்க மனைவி பண்றதுதான் நூறு பர்சன்ட் சரி. ஒரு வயசுக்கு(உடனே ஒரு வயசுக் குழந்தயானு கேக்காதீங்கப்பா) மேல குழந்தைங்களுக்கு பொறுப்பு இருக்கணுங்கறது மட்டுமில்லை அவங்க யாரையும் முழுசா சார்ந்தும் இருக்கக்கூடாது. எங்கம்மா அப்படி வளர்த்தது இன்னைக்கு எனக்கு எவ்வளவு உதவிகரமா இருக்குத் தெரியுமா? நீங்க அந்த முதல் பின்னூட்டத்தை எடுத்திடலாம். யாருமே அப்படி ஒரு சதவிகிதம் கூட நினைக்கவே மாட்டாங்க. கவலையே படாதீங்க. அனாவசியமான பிரச்சினைகள் பெரியவர்கள் இடையே நடந்தா இல்ல தன்னோட பிரச்சினைகள வீட்ல பகிர்ந்துக்க முடியலன்னா மட்டும்தான் குழந்தைகள் தங்களோட குழந்தைதனத்த இழப்பாங்க. நீங்க கொடுத்து வைத்தவர் இப்படி ஒரு நல்ல குடும்பம் கிடைச்சதுக்கு:):):)

rapp said...

அந்த படத்தில் இருப்பது உங்க குழந்தைகளா?

anujanya said...

கே.கே.

கேயாஸ் தியரி படி வண்ணத்துப்பூச்சி பறந்தால் எங்கோ எதுவோ களேபரமாகும் அல்லவா. அது சிறிய அளவில் நடைபெற்றதாகக் கொள்ளுங்கள். மனைவி இன்னும் கோபமாயிருந்தால், 'தசாவதாரம் இன்னொருமுறை போவோம்' என்று பயமுறுத்துங்கள்.


அனுஜன்யா

Anonymous said...

கிருஷ்ணா,

ராப் சொல்றது 100% சரி.

குழந்தைகளைத் திட்றதனால நம்ம விட்டு விலகமாட்டாங்க. ஆனா திட்டிடேஏஏஏஏஏஏ இருந்தா விலகிடுவாங்க.

அதே போல நீங்க தவறு செய்து தங்கமணி குழந்தைகள் முன்னடியே உங்களைத் திட்டினா, உடனே தவறை ஒத்துக்கிட்டு சரி செய்யுங்க. அது நல்ல முன்னுதாரணமாக அமையும்.

அம்மா திட்டுறது செஞ்ச தப்புக்குத்தான், என்னைப் பிடிக்காமத் திட்டல அப்படிங்கறது அவங்க மனசுக்குப் புரியனும். அவ்வளவுதான்.

ராப் சொன்னது மாதிரி ஸ்பூன் ஃபீட் பன்னாம ஸெல்ஃப் ரெலையண்டா வளர்த்தனும்.

☼ வெயிலான் said...

படத்தை அப்படியே இம்மாதப் புகைப்படப் போட்டிக்கு அனுப்புங்கள்.
http://photography-in-tamil.blogspot.com/2008/06/pit-2008_30.html

சின்னப் பையன் said...

அருமையா இருந்தது கதை... அது எதுக்கு 'தமிழ்' சிறுகதை?... அப்போ ஆங்கிலத்திலும் எழுதுவீங்களோ?... (பார்த்திபன் - வடிவேலு ஜோக் இப்பத்தான் பார்த்தேன்!!!)

இராம்/Raam said...

நல்லாயிருக்குங்க......


போட்டோ சூப்பரு..... PIT'க்கு அனுப்பி வைங்க...

http://i56.photobucket.com/albums/g171/raamcm/krishna_1.jpg

கொஞ்சமா PP பண்ணியிருக்கேன்...

பரிசல்காரன் said...

தேங்க்ஸ் விக்கி!

என்னமோ ஆச்சே.. ஆளக் காணலியே-ன்னுதான் கேட்டேன்! இப்போ பரவால்லியா?

அப்புறம் இந்த ஜிடாக்கு-ன்னா என்ன நண்பா? சத்தியமா தெரியல!
இதக் கேக்கறதுக்காக நான் வெக்கப்படல.. ஆணி புடுங்கறது.. பொட்டி தட்டறது-ங்கறதெல்லாம் கம்ப்யூட்டர் சம்பந்தமா-ன்னு தெரியும். ஏன் அந்த மாதிரி சொல்ராகன்னு கொஞ்சம் சொல்றீங்களா விக்கி?

பரிசல்காரன் said...

நன்றி அம்பி & கயலக்கா..

@வெட்டியாபீசர்

// அனாவசியமான பிரச்சினைகள் பெரியவர்கள் இடையே நடந்தா இல்ல தன்னோட பிரச்சினைகள வீட்ல பகிர்ந்துக்க முடியலன்னா மட்டும்தான் குழந்தைகள் தங்களோட குழந்தைதனத்த இழப்பாங்க.//

பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய கருத்து!

/நீங்க கொடுத்து வைத்தவர் இப்படி ஒரு நல்ல குடும்பம் கிடைச்சதுக்கு//

எப்படீங்க அனுபவம்-ன்னு போடாம சிறுகதை-ன்னு போட்டாலும் கண்டுபிடிச்சுடறீங்க? எல்லாரும் ரொம்பத் தெளிவாய்த்தான்யா இருக்காங்க!

பரிசல்காரன் said...

@வெட்டியாபீசர் Again..

ஆமாம்.. வலதுபக்கம் மழைநாளில் எடுக்கப்பட்ட படத்திலிருப்பவர்களும் அவர்களே! மீரா & மேகா!

@ அனுஜன்யா
//மனைவி இன்னும் கோபமாயிருந்தால், 'தசாவதாரம் இன்னொருமுறை போவோம்' என்று பயமுறுத்துங்கள்.//

இன்னும் ரெண்டு தடவையாவது பாக்கணும்-ன்னு ப்ளான் போட்டிருக்கோம்!
நானாவது கமலை ரசிக்கற/மதிக்கற ரஜினி Fan. அவங்க ஸ்ட்ரெய்ட்டா கமல் A.C!!
இப்படியெல்லாம் எங்கள பயமுறுத்த முடியாது!

பரிசல்காரன் said...

@ வடகரை வேலன்
//அவங்க மனசுக்குப் புரியனும். //

கண்டிப்பா அண்ணா! அதத்தான் நான் சொல்லணும்-ன்னு மீராவை உட்கார வெச்சேன்!

@ வெயிலான்

ஓக்கேங்க.. பண்ணிடலாம்!

பரிசல்காரன் said...

@ ச்சின்னப்பையன்

//அது எதுக்கு 'தமிழ்' சிறுகதை?.. அப்போ ஆங்கிலத்திலும் எழுதுவீங்களோ?... //

அதில்லீங்க.. இங்க்லீஷ்-ல BUTTERFLY EFFECT-ன்னு தலைப்பு குடுத்து எல்லாரும் தசாவதாரக் கும்மில இன்னொன்னுடா-ன்னு பயந்துடுவாங்களோ-ன்னுதான் அப்படிக் குடுத்தேன்!

பரிசல்காரன் said...

@இராம்

//போட்டோ சூப்பரு..... PIT'க்கு அனுப்பி வைங்க...//

நன்றிங்க.. அனுப்பறேன்!

வெண்பூ said...

திட்டியதில் தவறில்லை. ஆனால் அதே நேரம் குழந்தைகள் குழந்தைகளாக இருக்க விட வேண்டும் என்கிற சாதி நான்.

***

புகைப்படங்கள் மிக அருமை. அதைவிட அருமை அதிலிருக்கும் உங்கள் குழந்தைகள். வீட்டில் சொல்லி திருஷ்டி சுத்திப் போட சொல்லுங்கள்.

Sathiya said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க! ஆமா இந்த கதைக்கும் Butterfly Effectகும் என்ன சம்பந்தம்?
//உமா, அவங்க பொண்ணுக்கு நல்ல பழக்கமெல்லாம் வளரணும்-ன்னுதான் இப்படிஎல்லாம் திட்டறாங்க!//
அது சரி. இந்த கதை மூலமா நீங்க என்ன சொல்ல வரீங்க?

ரவி said...

எக்ஸலண்ட் !!!

Anonymous said...

அழகான அனுபவங்கள்...இப்போகூட எங்கம்மா எனக்கு வேலை கொடுத்துட்டுத்தான் போயிருக்காங்க.. அவங்க வருவதுக்குள் முடிக்கனும்...ஆனா வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்.. வலைப்பதிவில்...

நந்து f/o நிலா said...

குழந்தைங்க குழந்தைங்கதான் க்ருஷ்ணா. நாமதான் வாழ்க்கையின் நிர்பந்தத்துக்கு நம்ம அடையாளங்களை மறந்து ஓடிகிட்டே இருக்கோம்.

என்னதான் பொறுப்பு, நல்ல பழக்கத்துக்காகன்னு நாம குழந்தைங்க முகத்துல பெரிய ஆள் வேஷம் வரைஞ்சு விட்டாலும் அதுங்க குழந்தைக்கான அடையாளத்தை இழக்காம இருக்காங்களே அதுவே சந்தோஷம்தான்.

படிச்சுட்டு கொஞ்ச நேரம் மனசு கஷ்டமா இருந்துச்சு

பரிசல்காரன் said...

வெண்பூ.. நானும் அந்த சாதிதான்.. அதுனாலதான் வீட்ல அடிக்கடி விவாதம் வருது!
சத்யா.. புரியலன்னா விட்டுடுங்க! ரொம்ப ஆராய்ச்சி பண்ணி குழம்பிக்க வேண்டாம்!
முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி செந்தழல் ரவி! (நல்ல பேரு)

@ இனியவள் புனிதா

முடிச்சுடுங்க.. திட்டு வாங்கிக்காதீங்க!

நந்து.. பொருளாதார நிமித்தம் சுயம் மறந்து அலையும் பெற்றோர்களால், குழந்தைகளும் குழந்தைத்தனம் இன்றி மாறவேண்டிய காலச்சூழலைத்தான் என் வீட்டில் நடந்த இந்த சம்பவம் மூலம் கதையாகச் சொல்லியிருந்தேன்.. நீங்கள் சரியாகக் கண்டுகொண்டீர்கள்..

வெண்பூ said...

// நந்து.. பொருளாதார நிமித்தம் சுயம் மறந்து அலையும் பெற்றோர்களால், குழந்தைகளும் குழந்தைத்தனம் இன்றி மாறவேண்டிய காலச்சூழலைத்தான் என் வீட்டில் நடந்த இந்த சம்பவம் மூலம் கதையாகச் சொல்லியிருந்தேன்.. நீங்கள் சரியாகக் கண்டுகொண்டீர்கள்..//

100% சரி நந்து & பரிசல். நாம் சிறுவர்களாக இருந்தபோது கிடைத்த சுதந்திரம் & அனுபவம் இப்போது நம் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை, நம் பெற்றோரை விட நாம் அதிகமாக சம்பாதித்த போதும். இன்னும் நினைவிருக்கிறது 10 வயது வரை நானும் என் அண்ணனும் என் அம்மா மீது கால் போட்டுக் கொண்டு தூங்கியது. இப்போது நானே என் 2 வயது மகனை தனியறையில் தூங்க வைத்து பழக்க வேண்டும் என்கிறேன். இது சரியா தவறா என்றே புரியாத குழப்பத்தில் இருக்கிறேன். நாம் நம் குழந்தைகளை விட்டு வெகு தூரம் விலகுகிறோமோ என்று தோன்றுகிறது சமீபத்தில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன் சொன்ன ஒரு கவிதை.

அன்று நீ தொட்டிலில்
இருந்த போது
தொட்டிலை ஆட்ட எனக்கும்

இன்று முதியோர் இல்ல‌த்தில்
நான் இருக்கும்போது
என்னைப் வ‌ந்து பார்க்க‌
உன‌க்கும்

நேர‌மில்லாம‌ல் போய்விட்ட‌து

Unknown said...

நாமும் அந்தக் குழந்தைகளைப் போல் நல்லதை நினைப்போம். கெட்டதை மறப்போம். THANK U MEERA n MEGHA.

Sathiya said...

//சத்யா.. புரியலன்னா விட்டுடுங்க!//
அது எப்படீங்க விடுறது? நந்து மாதிரி விளக்கி சொல்வது உங்க கடமை அல்லவா?

நீங்கள் சொல்வது மிக சரி. இப்போவெல்லாம், கணவன் மனைவி ஒண்ணா இருந்தாலே கூட்டு(Joint) குடும்பம்னு சொல்ற காலம். குழைந்தைகள் நிலைமை ரொம்ப மோசம். டியூஷன், கம்ப்யூட்டர் கிளாஸ், ஸ்கூல், டான்ஸ் கிளாஸ் இப்படி எதையாவது சேர்த்து விட்டு அவர்களுக்கு என்று கொஞ்சம் கூட நேரமே கொடுப்பதில்லை நிறைய பெற்றோர்.

நீங்க கீழே சொல்லியிருக்கிற இரண்டும் சற்று முரண்பாடாக இருந்தது எனக்கு. அதை தான் நான் உங்களிடம் கேட்டேன்.
//உமா, அவங்க பொண்ணுக்கு நல்ல பழக்கமெல்லாம் வளரணும்-ன்னுதான் இப்படிஎல்லாம் திட்டறாங்க!//
//நந்து.. பொருளாதார நிமித்தம் சுயம் மறந்து அலையும் பெற்றோர்களால், குழந்தைகளும் குழந்தைத்தனம் இன்றி மாறவேண்டிய காலச்சூழலைத்தான் என் வீட்டில் நடந்த இந்த சம்பவம் மூலம் கதையாகச் சொல்லியிருந்தேன்.. நீங்கள் சரியாகக் கண்டுகொண்டீர்கள்..//

பரிசல்காரன் said...

நல்ல கவிதை வெண்பூ!

வருகைக்கு நன்றி தம்பி! (ராமகிருஷ்ணன்)

அய்யய்யோ.. சத்யா.. என்ன இவ்ளோ சீரியஸ் ஆகிட்டீங்க?

என்னோட முதல் பின்னூடத்தோட அர்த்தம் உங்களுக்கு புரியலியா? நான் பாட்டுக்கு வீட்ல நடந்த மேட்டரை கதையா எழுதி, நீங்க பாட்டுக்கு உமாவைத் திட்டி பின்னூட்டம் போட்டு, வீட்ல கலவரமாகிடப் போகுது-ன்னு ச்சும்மா தமாஷா ஒரு முதல் கமென்ட் போட்டேன். மத்தபடி, குழந்தைகள் குழந்தைகளா இருக்க முடியறதில்லையே-ங்கறதை அம்மாகிட்ட திட்டு வாங்கறது மூலமாவும், ஆனாலும் குழந்தைகள் குழந்தைகள்தான் என்பதை அவ பட்டாம்பூச்சியை ரசிக்கறது மூலமாவும் சொன்னேன்.

இன்னொன்னு, என்னதான் அம்மா திட்டினாலும், மீரா சங்கடப் பட்டாலும் அம்மா சொன்ன வேலைகளை செஞ்சு முடிச்சு, திட்டுகளை மனசுல வெச்சுக்காம, சடக்'க்குன்னு மறுபடி குழந்தை மனநிலைக்கு மார்ற மனநிலை நமக்கு ஏன் வர்றதில்லை..? நம்ம மேலதிகாரிகள்கிட்ட எதுக்காவது டோஸ் வாங்கும் போது, அந்த விஷயத்தை எத்தனை நேரம்/நாள்/மாதம் மனதில் வைத்திருக்கிறோம்?

Sathiya said...

//அய்யய்யோ.. சத்யா.. என்ன இவ்ளோ சீரியஸ் ஆகிட்டீங்க//
ஆஹா! நான் எழுதி இருக்கறது சீரியஸாவா தெரியுது? ஓ! ஸ்மைலீ போட மறந்துட்டேன்;) என் ப்ரோபைல் படாத பார்த்துமா என்ன இப்படி சீரியஸா எடுத்துக்கறது?
//மத்தபடி, குழந்தைகள் குழந்தைகளா இருக்க முடியறதில்லையே-ங்கறதை அம்மாகிட்ட திட்டு வாங்கறது மூலமாவும், ஆனாலும் குழந்தைகள் குழந்தைகள்தான் என்பதை அவ பட்டாம்பூச்சியை ரசிக்கறது மூலமாவும் சொன்னேன்.//
நீங்க இதை சொல்லியிருக்குற விதம் உண்மையிலேயே சூப்பர்ங்க! மால்குடி டேஸ் பார்த்த மாதிரி இருந்தது!

கயல்விழி said...

//பொருளாதார நிமித்தம் சுயம் மறந்து அலையும் பெற்றோர்களால், குழந்தைகளும் குழந்தைத்தனம் இன்றி மாறவேண்டிய காலச்சூழலைத்தான் என் வீட்டில் நடந்த இந்த சம்பவம் மூலம் கதையாகச் சொல்லியிருந்தேன்.. நீங்கள் சரியாகக் கண்டுகொண்டீர்கள்//

என்னுடைய பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு சென்றவர்கள் தான். இங்கே சிலர் கருத்து தெரிவித்திருப்பது மாதிரி, இதனால் உங்கள் குழந்தைகள் பொறுப்பானவர்களாக வளருவார்களே தவிர வேறு பாதிப்பில்லை.

சிறுமிகளின் புகைப்படம் ரொம்ப அழகாக இருக்கிறது.

Thamira said...

அருமையான சிறுகதை பரிசல்.!

Anonymous said...

அன்பின் பரிசல்காரன்..

அழகான கருத்துக்களை
அற்புதமான எழுத்துக்களோடு
அவசியமான வரிகளிலிட்டு
அரோக்கியமான வளர்ச்சியினை
அர்த்தமுடன் சொல்லியிருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள்..வாய்ப்பு கிட்டினால்
வாருங்கள்.. என் வலையினுள்..
http://elangovan68.blogspot.com

அன்புடன் மண்சட்டி

Unknown said...

very nice touching story