Thursday, January 29, 2009

அவியல் - ஜனவரி 29 2009

தனிப்பாடல் திரட்டு என்றொரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அம்பிகாபதி, அருணாச்சலக் கவிராயர், கம்பர், அவ்வையார், காளமேகம் உட்பட 31 புலவர்களில் சில பாடல்கள் அடங்கிய புத்தகம். பல பாடல்கள் வியப்பாய் இருக்கின்றன. அழகிய சொக்கநாதக் கவிராயர் என்ற கவிஞர் ஒரு பெண்ணைக் காதல் கொண்ட தலைவன், அந்தப் பெண் பேசாமடந்தையாய் இருக்கும்போது பாடுவதாக எழுதிய ஒரு பாடலில் வரிகளில்…

வெள்ளரிக் காயா? விரும்பும்அவ ரைக்காயா?
உள்ளமிள காயா? ஒருபேச் சுரைக்காயா?

என்று காய்களையும் சேர்த்து கவி படைத்திருக்கிறார்!

வெள்ளரிக்காயா: வெள்ளரி = வெண்மை நிறமுடைய அரி (திருமால்) நரசிங்கமாய்த் தோன்றியபோது அவரது தாய் அவர் தோன்றிய தூண்தானே? அந்தக் காதலி தூணைப் போல நின்றுகொண்டிருந்தாளாம்!

விரும்புமவரைக் காயா: விரும்புவோரை இயல்பாகக் கோபம் கொள்ளுபவளா நீ? (காயா – கோபமா?)

இப்படி அர்த்தத்தோடு சேர்த்திப் படிக்கும்போது நன்றாகத் தான் இருக்கிறது.

இதே தொகுப்பில் ‘தாயோடு அறுசுவைபோம்’ என்ற பாடலில் பொற்றாலியோடு எவையும்போம் = பொன்தாலி அணிந்த மனைவி போனால் எல்லா நலனும் நீங்கிவிடும் என்றெழுதிய அவ்வையாரே... யார் யாரை எங்கெங்கே புகழ வேண்டும் என்றெழுதிய ‘நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்’ என்ற பாடலில் ‘மனையாளைப் பஞ்சணையில்’ என்றெழுதியது ஏனென்று புரியவில்லை. மனைவியைப் பஞ்சணை மெத்தையில் புகழவேண்டும் என்பதில் எனக்குடன்பாடில்லை.

மனைவிகளுக்கு அவர்கள் அழகைப் புகழ்வதில் மகிழ்ச்சியுண்டு எனினும், அது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும். மனைவிமார்களுக்கு அவர்கள் சமையலைப் புகழ்கையில் அதே அளவு மகிழ்விருப்பதைக் கண்டிருக்கிறேன்/கேட்டிருக்கிறேன்.

************************

இதேபோல பாடல்களில் புரியாத வரி என்றால் எனக்கு நினைவுக்கு வருவது... ‘சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனே’ பாடலில் வரும் ‘இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது’ எனும் வரி. இதற்கு நல்லதொரு அர்த்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். பல ஆண்டுகளாக இதன் அர்த்தம் அறிய ஆவல். மழைத்துளி கன்னிமையை எப்படிக் கண்டறியும்? ஏதோ ஒரு குறும்பான அர்த்தத்தில்தான் கவிஞர் இதை எழுதியிருப்பார். அதை அறிய ஆசையாய் இருக்கிறது! வைரமுத்துவை நேரில் கண்டால் கேட்க விரும்பும் கேள்விகளில் இது ஒன்று. தெரிந்தால் பதில் சொல்லுங்களேன்!

***************************

ஊட்டி சுற்றுலா போகுமுன் கோவை ஹோட்டல் ஒன்றில் காலை டிஃபனுக்காகப் போனோம். மசால்தோசை ஆர்டர் செய்த அண்ணாச்சி (வடகரை வேலன்) சர்வரிடம் சொன்னார்:

“வேகமா கொண்டுவாங்க. கால் மாத்திடாதீங்க”

எனக்குக் குழப்பமாக இருந்தது. கால் மாத்திடாதீங்கன்னா? அண்ணாச்சியிடமே கேட்டேன்...

“வேகமா-ல கால் மாத்திப் போட்டுப் பாருங்க”

வேகாம.

ஹோட்டல் என்பதால் அவர் காலில் விழ முடியவில்லை!

***************************
நண்பர் எம்.எம்.அப்துல்லா எல்லாரையும் ‘அண்ணே’ என்றழைப்பது நாடறிந்த விஷயம். நான் ரமேஷ் வைத்யா அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அப்துல்லாவுக்கு கான்ஃபரன்ஸ் கால் போடச் சொன்னார். போட்டபோது, இவர் கேட்டார்:

“அப்துல்லா.. உங்களுக்குக் கூப்பிட்டபோது உங்க அண்ணன்னு யாரோ பேசினாங்க நேத்து. ஆனா அது உங்க குரல் மாதிரிதான் இருந்தது. யார் அது?”

நான் இடைமறித்துச் சொன்னேன்...

“இவராத்தான் இருக்கும். பழக்கதோஷத்துல தன்னையே அண்ணன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு!”

எல்லாரும் கைதட்டீங்களா? வெரிகுட்!!

********************

திருப்பூரில் ஒரு வீட்டிற்கு திருடன் வந்திருந்து, திருட முயன்றிருக்கிறான். பலமணிநேரத் தேடலில் ஒன்றும் சிக்கவில்லை. கடுப்பாகிப் போன அவன் வீடு முழுவதும் மலஜலம் கழித்து, பான்பராக் கறைகளாலும் அசிங்கப் படுத்திவிட்டுப் போய்விட்டானாம்.

இதைத் தினசரியில் போட்டிருந்தார்கள். சரி. முடிக்கும்போது ஒரு வரி...

“வீட்டுக்காரரின் சமயோசிதத்தால் 40000 ரூபாய் தப்பியது. அவர் குப்பைக் கூடைக்குள்ளும், அரிசிப் பானையிலும் பணத்தை ஒளித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது”

தேவையா இது?

***************************

காதலில் விழுந்தேன் படம் பற்றி ஆஃபீஸில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“படமாங்க அது. ச்சே. செத்துப்போன காதலியோட பாடியை வெச்சுட்டு சுத்தறானாம் ஹீரோ” என்றொருவர் சொல்ல நான் கேட்டேன்.

“ச்சீ! பாடியை வெச்சுட்டா? அசிங்கம். அசிங்கம்” ன்னேன்.

ஒரு நிமிஷம் யாருக்கும் ஒண்ணும் புரியல. புரியறதுக்குள்ள நான் அங்கிருந்து சிரிச்சுட்டே வெளிய வந்துட்டேன்!

*********************

போன வார ஜீ.வி-யில் பார்த்திபனின் டைமிங்கூ நல்லா இருந்தது.

‘எது நடந்ததோ
அது ஏழாயிரமாகவே நடந்தது
எது நடக்கிறதோ
அது ‘சத்திய’மாகவே நடக்கிறது
எது நடக்குமோ
அது ஜாமீனாகவே நடக்கும்!'


'இடையிடையே
தேர்தல் போதும்
தமிழக கிராமங்கள்
தன்னிறைவடைய...'

இப்படி நாலைந்து.

எனக்குப் பிடித்த காசி ஆனந்தனின் ஒரு நறுக்கு

ஏடுகளில் முன்பக்கம்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கம்
அடுக்களையில்

தலைப்பு: பெண்கள்.


.

30 comments:

Cable சங்கர் said...

என்ன ஒரு கோயின்ஸிடென்ஸ் நானும் இன்னைக்கு தான் ரொம்ப நாளைக்கு அப்புறம் கொத்து பரோட்டா போட்டேன். வர வர ரொம்பத்தான் படிக்கிறீங்க..போங்க..

அது சரி ஊட்டி டூர் எப்படி இருந்துச்சி.. அத பத்தி சொல்லவேயில்லையே..?

முரளிகண்ணன் said...

ருசியான அவியல்

கார்க்கிபவா said...

இனிமேல் நீங்க பரிசல் காரன் இல்ல.. சமையல்காரன்.. நல்லாதான் சமைக்கறீங்க அவியல்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க ஆச்சி அந்த காலத்துல பருப்பு பாத்திரத்துல பொட்டலமா நகையைப் போட்டுவச்சிட்டுப் போயிட்டு.. திரும்ப வந்துஅரிசிப்பானையில் தேடி ஒரே ஆர்ப்பாட்டமாகிடுச்சாம்.. :)

நிஜம்மாவே இப்படி விசயம் போடரதால் தான் திருடன் எல்லாத்தையும் புரட்டி எடுத்துத்தேடறாங்க..

ஆமா ஹோட்டலா இருந்தா என்ன வேலன் கைய காலா நினைச்சு விழுந்துருக்கலாமே..

☼ வெயிலான் said...

தினமும் அவியல் எழுதுங்க பரிசல்!

அபி அப்பா said...

அவியல் அற்புதம்!

anujanya said...

ஊட்டி போனீர்களா? எப்போ? யார் யார்? இன்பச் சுற்றுலா போனால் அது பற்றி கட்டுரை வரைய வேண்டும் என்று தெரியாதா?

அவியல் வழக்கம் போலவே - சுவாரஸ்யம். நிறைய படிக்கிறீர்கள். வேலன் அட்டகாசம்.

செல்வா படம் லாராவை ஞாபகப் படுத்தியது. அவருடைய மற்றொரு புகைப்படம் இன்னும் அழகாக இருப்பதாக என் எண்ணம்.

அனுஜன்யா

கதாநாயகனுக்கு உம் பேர வெச்சு ஒரு கத எழுதினாலும் படிக்க உனக்கு நேரம் இல்ல. ஹம்.

அமுதா said...

இந்த அவியல் ரொம்ப சூப்பர்..

சந்தனமுல்லை said...

//“வேகமா-ல கால் மாத்திப் போட்டுப் பாருங்க”//

செம!!

//தேவையா இது?//

அதானே!! :-))

சுவையாக, ருசியாக, சுவாரசியமாக இருந்தது அவியல்...

narsim said...

அவியல் நல்ல பதம்.. அந்த அண்ணே மேட்டர் கலக்கல்

தியாகராஜன் said...

//“வேகமா-ல கால் மாத்திப் போட்டுப் பாருங்க”//

nice

நாடோடி இலக்கியன் said...

அசத்தல் அவியல்.

வேகமா - வேகாம இது சூப்பர்.
வேலன் சார் காலை நானும் தேடினேன் பாஸ்போட் சைஸ் ஃபோட்டோதான் இருக்கு அவர் வலைபக்கத்தில். :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//‘இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது’ எனும் வரி//

கன்னி என்றால் தீர்த்தம் (அபிதான சிந்தாமனணி)..என்று பொருள்...ஆதலால் மழைத்துளி கன்னியையும்.தான் போல் கருதி அடையாளம் காட்டுவதாக எழுதி இருப்பாரோ கவியரசர்.

Mahesh said...

சுவையோ சுவை....

‘மனையாளைப் பஞ்சணையில்’ - பஞ்சு போல மென்மையான அணைப்பில் னு சொல்லியிருப்பாரோ?

butterfly Surya said...

வெறும் அவியல் அல்ல.. நல்ல விருந்து..

நன்றி..

வாழ்த்துக்கள்.

உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.

நிறை / குறை சொல்லவும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//தனிப்பாடல் திரட்டு என்றொரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். //

கா.சு.பிள்ளை அவர்களின் புத்தகமா? இரண்டு தொகுப்புகள் இருக்குமே? காளமேக புலவரின் பாடல்கள் வியக்க வைக்கும் படி இருக்கும்...

பாச மலர் / Paasa Malar said...

வைரமுத்து சமாச்சரம் சுவாரசியம்..

அவியல் நல்ல சுவை.

Thamira said...

Mahesh said...
சுவையோ சுவை....

‘மனையாளைப் பஞ்சணையில்’ - பஞ்சு போல மென்மையான அணைப்பில் னு சொல்லியிருப்பாரோ?//

வேறென்ன‌ ரிப்பீட்டுதான்..

PPattian said...

//இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது //

"சொல்லாத இடம் கூட குளிர்கின்றது" போலத்தான் இது.

மழை அந்த அளவுக்கு உடலை ஊடுருவி இருக்கிறது.. :)

arun said...

//இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது//

Due to rain her dress is drenched, fully revealing her virginity(Saayaadha Kombirandu!)

selventhiran said...

செல்வா படம் லாராவை ஞாபகப் படுத்தியது. அவருடைய மற்றொரு புகைப்படம் இன்னும் அழகாக இருப்பதாக என் எண்ணம் // இந்த விஷயம் கடைசி வரைக்கும் லாராவிற்குத் தெரியக்கூடாது என பதிவர்கள் அனைவரும் எனக்கு சத்தியம் செய்து தரவேண்டும். :)

selventhiran said...

மனைவியைப் புகழ்வது இருக்கட்டும். மசினகுடியில் ஒரு முடியலத்துவம் சிக்கியது. அது இல்லற சாகர நீச்சல்காரர்களுக்கு உதவுமா பாருங்கள்....

வளைவுகளில்
முந்தாதீர்.
முத்தமிடுங்கள்!

ஆதவா said...

வணக்கம், சார்,

உங்களின் அவியலின் ருசி, ஆளையே கொல்லுகிறது போங்கள்... நல்ல எழுத்து திறம்.. டைமிங்க் காமெடி.. அனுபவத்தை ஜாலியாக பகிரும் எழுத்து....

////இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது’ ////

மழை அல்லது நீரால் மட்டுமே ஒரு பெண்ணின் ரகசியங்களைத் தழுவிச் செல்ல இயலும். அது பெண்ணை சுத்தப்படுத்தும்,

எனது நண்பரின் கருத்து இது :

ஒரு பெண் கர்ப்பமானால், நான் முழுகாமல் இருக்கிறேன் என்று சொல்வதும் நீரினினால் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள அவசியமற்ற நிலைமையை உணர்த்தி தான் கர்ப்பமானதை சொல்லாமல் சொல்கிறாள்.

இப்ப ஓகேயா?

Natty said...

பரிசல் பாஸ்... நல்லா இருந்தது....
அவியல் சூப்பர்... ச்சும்மா... ஒரு கருத்து பகிர்வு... கவிதைகளில் ஆண்கள் எல்லாரும் காதலராகவும், காமுகராகவும், பெண்கள் எல்லாரும் துன்பமடைபவராகவும், வாழ்வை தியாகம் செய்பவராகவும் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை... கற்பும், காதலும், கடமையும் மாந்தர் அனைவருக்கும் பொதுதானே! இப்படி சொன்னா ஆணாதிக்கம் னு அடிக்க வராங்க ;(

இராம்/Raam said...

அவியல் அருமை... :))

//“வேகமா-ல கால் மாத்திப் போட்டுப் பாருங்க”

வேகாம.//

சூப்பரு...



காசி ஆனந்தனின் நறுக்குகளில் எனக்கு பிடித்த ஒன்று...


செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே செல்கிறது அழுக்கு..

தலைப்பு கோவில்'னு நினைக்கிறேன்...

sa said...

அருமையான் பதிவு.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

மதன் said...

மழைத்துளி, கன்னியின் மேல் பட்டவுடன் அவள் சுவையறிந்திருக்கும். அவள் வியர்வையின் உவர்ப்புச் சுவையென்று கவிதைப்படுத்திக் கொண்டாலும் தப்பிலை. அந்த அளவுக்குத் தித்திப்பான சுவை பெண்பாலுக்குரியதாகத்தானிருக்க வேண்டும் என்று கண்டிருக்குமோ..?

Test said...

ஆன்மிகம்
****************
கவிதை
****************
நகைச்சுவை
****************
மரியாதை
****************
செய்தி
****************
வயது வந்தோர்க்கான நகைச்சுவை
****************
ஹைக்யு

என்று எல்லாம் கலந்த அருமையான அவியல்

கணினி தேசம் said...

அவியல் அற்புதம்!

Sundar சுந்தர் said...

ரொம்ப நல்லா இருக்கு!