Monday, January 12, 2009

சுண்ணாம்பு கேட்ட இசக்கி

ஒரு கிராமத்துக்கு ரெண்டு திருடனுக வந்தானுக. நைட் மூணு மணி வரைக்கும் அலைஞ்சும் ஒண்ணும் அகப்படல. மண்டைகாஞ்சுபோய் ஊர் எல்லைல இருக்கற அம்மன் கோவில் திண்ணைல ஒக்காந்தாங்க. அப்ப ஒருத்தன் சொன்னான், “அங்க பாரு. ஆட்டுக்கிடை. அதுல கொழுத்த ஆடு ஒண்ணை ஆட்டையப் போட்டுட்டுப் போலாம். ரெண்டு நாள் சாப்பாட்டுக்கு ஆகும்”ன்னு. சரின்னு எந்திரிக்கறப்ப தூணுக்கு அந்தப் பக்கமா யாரோ மொனகுற சத்தம் கேட்டுச்சு. யார்னு பாத்தா ஒரு சங்கூத்துப் பண்டாரம். அவன் கைல சங்கும், சேகண்டியும். சங்கூத்துப் பண்டாரம்ன்னா, அதிகாலைல சங்கை ஊதி, சேகண்டிய அடிச்சுப் பிச்சை கேட்கற ஆண்டிப் பண்டாரம். அவன் சோர்ந்து போய் இருக்கறதப் பார்த்த திருடனுக “என்ன ஓய் பண்டாரம்.. இன்னிக்கு எதுவும் படியலியா”ன்னு கேட்டாங்க. அவன் வெறுத்த குரல்ல “ம்க்கும்.. உங்ககூட வந்தா ஆட்டுக்கறியாச்சும் கிடைக்கும்”ன்னிருக்கான். ‘ஓஹொ.. இவன் நாம பேசினதக் கேட்டிருக்கான்’னு புரிஞ்சுகிட்டு அவனையும் துணைக்குக் கூப்ட்டுட்டாங்களாம். மூணுபேருமா ஆட்டுக்கிடைக்குப் போய் ஆட்டைப் பிடிக்கறப்ப ஆடு கத்தி, திமிறப் பார்த்ததாம். தலைப்பக்கமா இருந்த பண்டாரத்துகிட்ட ஒரு திருடன் “டேய் ஆண்டி.. சங்கைப் பிடிடா”ன்னானாம். அவன் சங்குன்னுது ஆட்டோட சங்கை.. அதாவது கழுத்தை. இவன் பழக்கதோஷத்துல சங்கை எடுத்து ஊத, ஆட்டிடையர்கள் முழிச்சு இவங்க மூணுபேரையும் மொத்து மொத்துன்னு மொத்தினாங்களாம்.

இதான் சும்மாக் கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி கதை.

*****************************

முனைவர் அ.கா.பெருமாள். நாட்டார் வழக்காற்றியலின் ஆய்வாளர்களில் முன்னோடியான இவர் பதிப்பித்தது 14 புத்தகங்கள். எழுதியிருப்பது 33 புத்தகங்கள். நாட்டார் தெய்வங்கள் குறித்த கதைகள், தோல்பாவைக் கூத்து, கணியான் ஆட்டம் என்று பலவித தேடல்களை தனது கள ஆய்வின் மூலம் கண்டு, ஆய்ந்து முனைவர் பட்டம் வாங்கியுள்ளார். அவர் எழுதிய ஒரு புத்தகம்தான் சுண்ணாம்பு கேட்ட இசக்கி. (UNITED WRITERS வெளியீடு, 63, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14)

மேலே உள்ளது போல யாராவது பேச்சு வாக்கில் சொல்லும் சொலவடைக்குப் பின் இருக்கும் கதைகளை சுவாரஸ்யமாய்க் கேட்டு பதிந்திருக்கிறார். இசக்கியம்மன் என்ற கிராம தெய்வம் குறித்த கதைகளும் ஆச்சர்யமூட்டுபவையாய் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமங்களிலும் அந்த கிராமத்தில் கொலையுண்ட, அகால மரணத்தால் மறைந்த பெண்களே இசக்கியம்மனாய் வழிபடு தெய்வமாய் மாறிவிடுகின்றனர். அப்பெண்களைக் கொலைசெய்த குடும்பத்தினருக்கும் அவள் குலதெய்வமாகிவிடுவாள். இதனால் அவளது கோபத்தைத் தணித்து தெய்வகுற்றத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது தென்மாவட்ட மக்களின் நம்பிக்கை.

அதேபோல தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த சில கிராமங்களில் கர்ப்பிணிப் பெண் இறந்துவிட்டால் அவரது பிணத்தை எரிக்கும்போது வயிற்றைக் கீறி உள்ளிருக்கும் குழந்தையை எடுத்து தாய்க்கு அருகில் வைத்து பின் எரிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை உறுதி செய்ய வேண்டி ஆய்வுக்கு சென்ற இவரே, பிணத்தை இறுகப்பற்றிக் கொள்ள இறந்தவளின் வயிற்றைக் கீறிய நிகழ்ச்சி நடந்திருக்கிறது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோல்பாவைக்கூத்துக் கலைஞர்களுக்கு உரிய உரிமைகள் சில கிடைக்காமல் போகவே அவர்கள் தங்களுக்கென்று ஒரு சாதி சங்கம் அமைக்கிறார்கள். பரமசிவராவ் என்ற தோல்பாவைக் கூத்தில் புகழ்பெற்றவரைத் தலைவராகக் கொண்டு.

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்று மாறி கலைஞரான அவர் தலைவராக மாறி விடுகிறார். பெருமாளை சந்திக்கும் அவர் சொல்கிறார்...

‘என் நெலம கடற்கரை நாயும் கரைக்கோட்டை நாயும் கத மாதிரி ஆயிடிச்சு’ என்று.

அது என்ன கதை?

கன்னியாகுமரி கடற்கரையில் ஒரு நாய் வசித்து வந்தது. அதன் நண்பனான ஒரு நாய் கரைக்கோட்டை என்ற ஊரில் இருந்தது. இந்த கன்னியாகுமரிக் கடற்கரை நாய், கரைக்கோட்டை நாயை விருந்துக்கு அழைச்சுதாம். கடற்கரைல எங்க போனாலும் மீன்தலை, குடல்வால், நண்டு ன்னு கெடச்சுதாம். அஞ்சாறுநாள் தங்கி, வயிறார சாப்ட்டு கடற்கோட்டை நாய் கெளம்பிச்சாம். கெளம்பும்போது ‘நீயும் எங்க கிராமத்துக்கு வா’ன்னு கடற்கரை நாய்க்கு அழைப்பு விடுத்துச்சாம்.

கொஞ்ச நாளைக்கப்பறம் கடற்கரை நாய் அங்க போச்சாம். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்துட்டு கடற்கரை நாய்க்கு பசியெடுக்க “சாப்பிடப்போலாமா”ன்னு கேட்டுச்சாம். கரைக்கோட்டை நாய் “ஓ! பேஷா”ன்னு நண்பனை ஒரு தெருவழியாக் கூட்டீட்டுப் போய் ஒரு வீட்டுப் பின்புறத்துல இருக்கற எச்சில் இலைகளைக் காட்டி “சாப்பிட்டுக்க” ன்னுச்சாம். அதுக்கு வயிறு நிறையவே இல்லை. சரின்னு ரெண்டு மூணு நாள் இருந்துட்டு... இது நமக்கு ஆகாதுன்னு கெளம்பும்போது ‘ஏன் இப்படி கஷ்டப்படற.. எங்கூட அங்க வந்துடலாம்ல”ன்னு கேட்டுச்சு. அதுக்கு இந்த நாய் "எங்கூட வா”ன்னு ஒரு வீட்டு முன்னாடி கூட்டீட்டுப் போகுது. அந்த வீட்ல வீட்டம்மா வூட்டுக்காரர்கூட சண்டை போட்டுட்டு இருந்தாங்க. நடு நடுவே ‘எச்சக்கலை நாயே’ன்னு திட்டற சத்தம் கேட்குது. இன்னொரு வீட்டுக்குக் கூட்டீட்டுப் போகுது. அங்க மாமியார் மருமகளைப் பாத்து ‘தெருப்பொறுக்கி நாயே’ன்னு திட்டிகிட்டு இருந்தாங்க. இப்படியே ரெண்டு மூணு வீட்டுக்கு கூட்டீட்டுப் போய் காமிச்சு கரைக்கோட்டை நாய் சொல்லீச்சாம்.. “பாத்தியா மனுஷங்க திட்டறதுக்கு நம்ம சாதியத்தான் சொல்றாங்க. இந்தப் பேர், பதவிக்காகத்தான் நான் இங்க இருக்கேன். பேரு வேணும்னா எதையும் சகிச்சுக்கணும்”ன்னுச்சாம். கடற்கரை நாய் ஓட்டமா ஓடிச்சாம்!


இவர் கள ஆய்வின்போது சந்தித்த இன்னல்களையும் அங்கங்கே சொல்லியிருக்கிறார். ஆய்வு மாணவர்களுக்கு மிக உபயோகமாக இந்தப் புத்தகம் இருக்கும்.

ஒரேயொரு சம்பவத்தைச் சொல்லி முடிக்கிறேன்...

ஒரு கிராமத்தில் இவர் செல்லும்போது இரு வீட்டினரிடையே சண்டை. என்னவென்று விசாரிக்கிறார். ஒருத்தன் 500ரூபாய் பணத்திற்காக தன் மனைவியை ஒரு வார ஒத்திக்கு (LEASE) வைத்திருக்கிறான். பணத்தைக் கொடுத்து மனைவியைக் கேட்டால் ‘இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தர்றேன்’ என்றிருக்கிறானாம். அதற்குத்தான் சண்டையாம்.

கொடுமைடா சாமி!

.

24 comments:

முரளிகண்ணன் said...

சுவராசியமான அறிமுகம். ஆண்டி,நாய் சூப்பர். ஆனால் கர்ப்பிணி பெண் மனதை வாட்டி விட்டது

1,00,000 ஹிட்ஸ்க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

50,000 ல் இருந்து 1,00,000 மிக விரைவாக வந்து விட்டதென நினைக்கிறேன். மேற்கிந்திய வீரர் ஹெய்ன்ஸ் என் நினைவுக்கு வருகிறார். அவரின் 50கள் குறைந்தது 30 முதல் 35 ஓவர்கள் எடுத்துக் கொள்ளும். பின் சதம் விரைவாக. மீண்டும் வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் பரிசல் உங்களுடய லட்சம் ஹிட்ஸுகாகவும், பொங்கலுக்காகவும்.. அந்த லீஸ் மேட்டர் நல்லாயிருக்கு. ஹீ..ஹி..

அத்திரி said...

நல்ல அறிமுகம்.. எங்க ஊர் கதைதான் போல

வாழ்த்துக்கள் லட்சம் + பொங்கலுக்கு

anujanya said...

சேகண்டி, சங்கூத்துப் பண்டாரம் - பரிசல் அசத்துகிறார் என்று பார்த்தேன். எ.கா.பெ. புத்தகத்திலிருந்து என்றதும் சிறிது ஆசுவாசம் - நீங்க இன்னும் சிறுபத்திரிகை பெரு எலக்கியவாதி ஆகிட்டீங்கலோன்னு ஒரு பயம் இப்ப இல்ல. Jokes apart, சுவாரஸ்யம்.

//வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்று மாறி கலைஞரான அவர் தலைவராக மாறி விடுகிறார்.//

நான் தலைவரானே பின்பு தான் 'கலைஞர்' ஆனார் என்று நினைத்தேன்.

இலட்சத்திற்கு முன்கூட்டிய வாழ்த்துகள். எப்படியோ, நானும் 'இலட்சத்துள் ஒருவன்' என்று பெருமைப்படலாம் :)

அனுஜன்யா

வெண்பூ said...

நல்ல விமர்சனம் பரிசல்.. இப்போல்லாம் அடிக்கடி புத்தக விமர்சனம் போடுறீங்க.. சொன்ன மாதிரியே நெறய படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா?

Thamira said...

பொங்கல் பரிசாக பட்டாம்பூச்சி விருதைப்பெற்றுக்கொள்ள நமது கடைக்கு வரவும்.

Thamira said...

தரமான பதிவு. 'சுண்ணாம்பு கேட்ட இசக்கி' தலைப்பே திரில்லாக இருக்கிறது. அந்தக்கதையை சொல்லாம விட்டுட்டீங்களே.!

லட்சம் வாழ்த்துகள்.!

Athisha said...

லட்சத்திற்கு வாழ்த்துக்கள்..

முரளிக்கண்ணனின் இரண்டாவது பின்னூட்டத்தினை அப்படியே வழிமொழிஹிறேன்

பரிசல்காரன் said...

//தாமிரா said...

தரமான பதிவு. 'சுண்ணாம்பு கேட்ட இசக்கி' தலைப்பே திரில்லாக இருக்கிறது. அந்தக்கதையை சொல்லாம விட்டுட்டீங்களே.!//

அப்பறம் புக் வாங்கிப் படிக்க மாட்டீங்களே...

உயிரோடை said...

நல்ல விமர்சனம். ஆனா சங்கை ஊதி கெடுத்த கதை ஏன் சொன்னீங்க. விளங்கல சின்ன அறிவுங்க எனக்கு

சிம்பா said...

இரவு 12 மணிக்கு தான் வரணும் என்று இல்லை.. நேரம் கிடைக்கிறப்போ நம்ம வலைபூ பக்கம வாங்க.. அன்பு பரிசு காத்திருக்கு...

பரிசல்காரன் said...

// மின்னல் said...

நல்ல விமர்சனம். ஆனா சங்கை ஊதி கெடுத்த கதை ஏன் சொன்னீங்க. விளங்கல சின்ன அறிவுங்க எனக்கு//

பதிவுக்கு நடுவுல

//மேலே உள்ளது போல யாராவது பேச்சு வாக்கில் சொல்லும் சொலவடைக்குப் பின் இருக்கும் கதைகளை சுவாரஸ்யமாய்க் கேட்டு பதிந்திருக்கிறார்.//

இந்த வரியைக் கவனிக்கலியாப்பா?

தமிழன்-கறுப்பி... said...

இப்பத்தான் எனக்கிந்த சும்மாகிடந்த சங்கு கதை தெரியும் பரிசல் இதுதானா அந்த கதை! :)

ஒரு வேளை சின்ன வயசுல கேட்டிருக்கலாம் ஆனா மறந்துடிச்சு!

தமிழன்-கறுப்பி... said...

கடைசி விசயம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்..

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி...

வால்பையன் said...

வாய்வழி புனைவு கதைகள் கிராம்க்களில் நிறைய உண்டு!
படிக்கும் போது வெகு சுவாரிசயமாக இருக்கும்.

வாழ்த்துக்கள் எல்லாவற்றிர்க்கும்

கார்க்கிபவா said...

ஒரு லட்சம் சகா... கலக்குங்க..

எனக்கு இன்னும் 10000 தேவைப்படுது..

கிரி said...

உங்களுடைய 100000 ஹிட்டிற்க்கு வாழ்த்துக்கள் கே கே

Natty said...

லட்சம் வாழ்த்துகள்.! :))

Natty said...

100435 ஆவது வருகையாளருக்கு நம்ம பரிசல் கௌரவ பரிசாக 10 சவரன் செயினும், 2 சவரன் மோதிரமும் பரிசாக வழங்குவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கிறது...

பரிசல்காரன் said...

Blogger Natty said...

100435 ஆவது வருகையாளருக்கு நம்ம பரிசல் கௌரவ பரிசாக 10 சவரன் செயினும், 2 சவரன் மோதிரமும் பரிசாக வழங்குவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கிறது...//

வேணாம்.. அழுதுடுவேன்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் அருமையான எழுத்தாளர் அறிமுகம், சரியான சமயத்தில் அறிமுகப்படுத்தியதால், புத்தகக்கண்காட்சியில் வாங்க இயலும்.
நன்றாக எழுதியுள்ளீர்கள்.

தமிழ் அஞ்சல் said...

நல்லாருக்குதுங்க..!