Tuesday, January 20, 2009

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்.... - Part 1


‘எனக்கு ரொம்ப நாளா ரங்கநாதனைப் பார்க்கணும்னு ஆசைங்க’ என்று உமா சொன்னபோது கொஞ்சம் பயந்துதான் போனேன். அவரது ஒன்றேமுக்கால்விட்ட தம்பி ரங்கநாதன் என்று ஒருத்தர் புனேவில் இருக்கிறார். அடடா.... இந்தப் பொங்கலுக்கு செலவுதான் போல என்று நினைக்கும்போது ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர்’ என்று விளக்கமாய்ச் சொன்னபோதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.


‘அவரு யாருப்பா’ என்று குழந்தைகள் கேட்கவே தசாதவதாரத்தை விளக்கி (புராணக்கதை இல்லீங்க.. கமலோட தசாவதாரம்) அதுல ஒரு சிலையைக் கடல்ல போடுவாங்கள்ல அதுதான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்’ என்று சொல்ல அவர்களுக்கும் ஆவல் தொற்றிக்கொண்டது.

திருப்பூரில் பஸ் ஏறியபோதே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம். பஸ்ஸில் ‘குருவி’ டிவிடி ஓடிக்கொண்டிருந்தது. கண்டக்டரிடம் பேசி வேறு படம் போடச் சொல்லி தாஜா செய்துகொண்டிருந்தபோது பின்னாலிருந்த இரண்டு இளைஞர்கள் ‘இத மாத்தாதீங்க’ என்று சொல்லவே ‘சரி... உங்க தலையெழுத்து’ என்றவாறு அமர்ந்தேன். (லிஃப்டுடன் பூமிக்கடியில் சென்று ஆற்றுக்குள்ளிருந்து விஜய் வெளிவரும் காட்சியில் வேண்டுமென்றே எழுந்து அவர்களை திரும்பிப் பார்க்க... “ஸாரிங்ணா.. இந்தளவுக்கு எதிர்பார்க்கல” என்றார்கள்.)

************************

எனக்கு ஸ்ரீரங்கம் மிகப் பிடிக்கும். ரங்கநாதரைத்தவிர இரண்டு ரங்கராஜன்களின் ஊர் என்பதால். எப்போதோ சின்ன வயதில் பெற்றோர்களோடு வந்த நினைவு லேசாக இருக்கிறது.

இரவு திருச்சியில் தங்கி, காலை ஸ்ரீரங்கம் பயணித்தோம். வழியில் அகண்ட காவிரியைப் பிரமிப்பாய்ப் பார்த்தவாறே.

அந்த 236அடி ராஜகோபுரத்தை அடையும்போது லேசான மழைத்தூறல் எங்களை வரவேற்றது. 400 ஆண்டுகளுக்கு முன்னால் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப் பெறாதிருந்த இந்தத் தெற்கு ராஜகோபுரம் அகோபிலமடம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் ஸ்வாமிகளின் முயற்சியால் கட்டிமுடிக்கப்பட்டதாம். ஆசியாவேலேயே மிக உயரமான கோபுரமான இதன் ஆறாவது நிலைக்கு நன்கொடை அளித்திருப்பவர் இசைஞானி இளையராஜா என்பது உட்பட பல விபரங்களை கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு சந்திதியாக தரிசனம் முடித்து, ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க அவரது மூலஸ்தானம் நோக்கி செல்லும்போது பிரகாரக் கதவுகள் அடைக்கப் பட்டிருந்தன.

“அவரு குதிரை வாங்கப் போயிருக்காரு. ஆயிரங்கால் மண்டபம் போனீங்கன்னா அவரைப் பார்க்கலாம்” என்று உற்சவமூர்த்தி ரவுண்ட்ஸில் இருப்பதாகச் சொன்னார்கள். சரி என்று ஆயிரங்கால் மண்டபத்தை தேடிப் போவதற்குள் ‘அடடா.. இப்போதான் இங்கேர்ந்து கிளம்பறார்ங்க. முன்னாடி இன்ஃபர்மேஷன் செண்டர் இருக்குல்ல? அங்க போய் நின்னீங்கன்னா அந்த வழியாத்தான் வருவார்’ என்றார்கள்.

மறுபடி அங்கேயிருந்து அவர் குறிப்பிட்ட இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து போனபோது “இந்த இடத்தை அவர் க்ராஸ் பண்ணி 10 நிமிஷம் ஆச்சு. பிரகாரத்துக்குள்ள போயிருப்பாரு. 11.30க்கு மூலஸ்தான வாசல் திறப்பாங்க. உள்ள போயிடுங்க. 1 மணிக்குள்ள தரிசனம் முடிஞ்சு சொர்க்க வாசல் வழியா வந்துடலாம்” என்றார்கள்.

‘இதென்னடா.. அப்பல்லோ ஹாஸ்பிடல் சீஃப் டாக்டர் மாதிரி அப்பாய்ன்மெண்டே தரமாட்டீங்கறாரே’ என்று நினைத்தவாறே மூலஸ்தானத்திற்குள் போக நின்றிருந்த நீ............ண்டதொரு க்யூவில் நிற்கும்போது மணி 11. என்னப்பா இன்னைக்கு இவ்ளோ கூட்டம் என்றால் சொர்க்கவாசல் அடுத்த நாள் மூடிவிடுவார்கள். பிறகு அடுத்த வைகுண்ட ஏகாதசிக்குத்தான் திறந்துவிடுவார்களாம். அதனால்தான் கூட்டமாம்.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குறைந்தது ஒன்றிரண்டு கிலோமீட்டர் தூரமாவது இருக்கிறதே.. இந்தக் கோயிலின் பரப்பளவு எத்தனை என்று விசாரித்தபோது பிரமிப்பாய் இருந்தது. மொத்தம் 156 ஏக்கரில் அமைந்துள்ளது இந்தக் கோயிலின் பரப்பு. ஏழு பிரகாரங்கள், ஒன்பது தீர்த்தங்கள், 21 கோபுரங்கள், 13 கலசங்கள் என்று பிரம்மாண்டமான கோயில்தான்.

மணி 11.30...
12....
12.30....
1.....

கதவுகள் திறந்தபாடில்லை. கூட்டம் முட்டித்தள்ள ஆரம்பித்தது. கொஞ்சம் முன்னால் இடையில் தடுப்பை மீறி சிலர் செல்ல ஆரம்பிக்க நான் கூட்டத்திலிருந்து விலகிப் போய் அவர்களை ஒழுங்குபடுத்தி சத்தம் போட்டு எல்லோரையும் பின்னுக்கு வரச் செய்து, ‘முன்னாடி எவனாவது புகுந்தா பக்கத்துல இருக்கறவங்க தட்டிக் கேட்டாத்தானே ஆகும். அங்கேர்ந்து நான் வரணுமா.. என்ன சார் இது’ என்று நியாயம் கேட்டுவிட்டு மீண்டும் நான் நின்றிருந்த இடத்துக்கு வந்தபோது ‘யோவ்.. ஒழுங்கா லைன்ல வா’ என்று நாலைந்து குரல் கேட்டது. ‘வாங்கய்யா... தர்மவான்களா.. இவ்ளோ உடனே அட்வைஸை ஃபாலோ பண்றாங்கய்யா’ என்று நினைத்தவாறே அவர்களுக்கு விளக்கமளித்து மீண்டும் லைனில் நின்றேன்.

1.30.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமையிழந்தது. சிலர் திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர். திடீரென்று ‘பக்தா... உன் பக்தியை மெச்சினோம். பொறுமையாகக் காத்திருந்தது மட்டுமில்லாமல் கூட்டத்தையும் நெறிப்படுத்திய உமது பண்புக்குப் பரிசாய் உனக்கு எமது விஸ்வரூபத்தைக் காட்ட சித்தமானோம்’ என்று ரங்கநாதர் வந்து உள்ளே கூப்பிட்டால் என்னென்ன வரம் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே....

“அப்பா.. இந்தக் கோயிலோட கதையைச் சொல்லுங்கப்பா” என்று மீரா சொல்ல..

மொத்தக் கூட்டமும்... (சரி.. சரி... பக்கத்துல இருந்த நாலைஞ்சு பேர்னு வெச்சுக்கங்க!) கவனிக்க நான் ஆரம்பித்தேன்....

35 comments:

Cable சங்கர் said...

//“அப்பா.. இந்தக் கோயிலோட கதையைச் சொல்லுங்கப்பா” என்று மீரா சொல்ல..//

தசாவதார படக் கதையை திரும்ப சொல்லலியே..

Mahesh said...

//பின்னாலிருந்த இரண்டு இளைஞர்கள் ‘இத மாத்தாதீங்க’ என்று சொல்லவே ‘சரி... உங்க தலையெழுத்து’ என்றவாறு அமர்ந்தேன்//

மத்தவங்க துன்பத்துலயும் பங்கெடுத்துக்கற உங்க நல்ல மனசுக்கு ரங்கநாதன் அடுத்த முறை காரமடைக்கே வந்து அருள் பாலிப்பாரு.

"எங்க சுத்தியும் ரங்கனைச் சேவி"பாங்க. சேவிச்சுட்டு வந்த உங்களை சேவிச்சாலே போதும்.

கார்க்கிபவா said...

தலைவர் படம் இரண்டாவது தடவை பார்த்துட்டிங்கள இல்ல‌? அப்புறம் எதுக்கு தரிசனம்? எல்லா புண்ணியமும் ஏற்கனவே வந்துட்டிருக்கும் சகா..

Thamizhan said...

இதுக்கே இவ்வளவு பில்ட் அப்பா,
திருப்பதிக்குப் பிள்ளைங்களைக் கூட்டிப்
போங்க!
அய்யோ!அப்பா!கோவிலும் வேண்டாம்,சாமியும் வேண்டாம்,ஆளை விடுங்கோம்பாங்க!

Unknown said...

அண்ணா சொல்லவே இல்ல :))

வெட்டிப்பயல் said...

//Thamizhan said...
இதுக்கே இவ்வளவு பில்ட் அப்பா,
திருப்பதிக்குப் பிள்ளைங்களைக் கூட்டிப்
போங்க!
அய்யோ!அப்பா!கோவிலும் வேண்டாம்,சாமியும் வேண்டாம்,ஆளை விடுங்கோம்பாங்க!//

அந்த பாலாஜியை பார்க்கற வரைக்கும் :)

தசாவதாரத்துல தூக்கி போடறது தில்லை கோவிந்தராஜ பெருமாள் :)

அத்திரி said...

//கொஞ்சம் முன்னால் இடையில் தடுப்பை மீறி சிலர் செல்ல ஆரம்பிக்க நான் கூட்டத்திலிருந்து விலகிப் போய் அவர்களை ஒழுங்குபடுத்தி சத்தம் போட்டு எல்லோரையும் பின்னுக்கு வரச் செய்து, ‘முன்னாடி எவனாவது புகுந்தா பக்கத்துல இருக்கறவங்க தட்டிக் கேட்டாத்தானே ஆகும். அங்கேர்ந்து நான் வரணுமா//

இந்த மாதிரி கூட்டத்துல போய் மாட்டிக்கிட்டு டென்சன் ஆகி சாமிய கும்பிடுவதற்கு பதிலா ஒரு சாதாரண நாளில் சாமியை நல்லா பாத்து ஹாய் சொல்லலாமே.

எனக்கு அதுதான் பிடிக்கும்

அத்திரி said...

//தலைவர் படம் இரண்டாவது தடவை பார்த்துட்டிங்கள இல்ல‌? அப்புறம் எதுக்கு தரிசனம்? எல்லா புண்ணியமும் ஏற்கனவே வந்துட்டிருக்கும் சகா..//


ஏய் சகா நீ அடங்கவே மாட்டியா??? ஏன் இந்தக் கொலைவெறி... இன்னொரு வாட்டி வில்லு படத்தை பாக்க் வச்சிருவேன், ஜாக்கிரதை

அத்திரி said...

//Thamizhan said...
இதுக்கே இவ்வளவு பில்ட் அப்பா,
திருப்பதிக்குப் பிள்ளைங்களைக் கூட்டிப்
போங்க!
அய்யோ!அப்பா!கோவிலும் வேண்டாம்,சாமியும் வேண்டாம்,ஆளை விடுங்கோம்பாங்க!//

சரியாச்சொன்னீங்க.......

வெண்பூ said...

ஆஹா.. ஆன்மீகத் தொடரா.. பரிசல், உங்க வலைப்பூ ஒரு பல்சுவை வார இதழ் மாதிரி ஆகிடுச்சி.. ஆன்மீகப் பக்கம் ஒண்ணுதான் இல்லாம இருந்தது, அதையும் ஆரம்பிச்சாச்சா? கலக்குங்க..

CA Venkatesh Krishnan said...

ஸ்ரீரங்கம் என்றாலே ஒரு 'நோஸ்டால்ஜியா'தான்.

அருமையாகத் தொடங்கியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

Raju said...

ஆஹா..

Tiruchi stay enge?

narsim said...

சல்ல்லுன்னு போகுது பதிவு.. பார்ட் 2வ அடிச்சு விடுங்க‌

புதுகை.அப்துல்லா said...

மலைகோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலில் இருந்து ஆடி மாசம் ஆடிஆடி வர்ற காவேரியையும், அதோட சேர்ந்து தெரியிர ராஜகோபுரத்தையும் பாக்குற அழகு இருக்கே....அடா..அடா...அடா. நாங்க அங்க காலேஜ்ல படிச்ச காலத்துல பாதி சாயங்காலம் மலக்கோட்ட மேலதான் குந்திகினு இருப்போம்.( அங்கேந்து சைடுல எஸ்.ஆர்.சி லேடீஸ் காலேஜீம்
தெரியும்ங்கிறதும் ஒரு காரணம்னு நான் சொல்ல மாட்டேனே)

கார்க்கிபவா said...

சகா பார்த்துக்கொங்க.. 100வது follower ஆனதற்கு ஒரு ராஜமீன் பென்டிங்.. இப்போ 150வதும் நான் தான். ..கணக்குல வச்சிக்கொங்க..

☼ வெயிலான் said...

:)

Vijay said...

உங்கள் பதிவைப் படித்ததும், அரங்கநாதரை தரிசித்தது போலவே இருக்கு :-)

உச்சி பிள்ளையார் கோயிலுக்குப் போகலியா?

தல வரலாறு கேட்க ஆவலாக இருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க :-)

பரிசல்காரன் said...

//இந்த மாதிரி கூட்டத்துல போய் மாட்டிக்கிட்டு டென்சன் ஆகி சாமிய கும்பிடுவதற்கு பதிலா ஒரு சாதாரண நாளில் சாமியை நல்லா பாத்து ஹாய் சொல்லலாமே.//


உங்களுக்குத் தெரியுது... லீவு விடற கம்பெனி மொதலாளிக்குத் தெரியலியே!!!

ஷைலஜா said...

ஸ்ரீரங்கப்பதிவுன்னதும் எட்டிப்பார்த்தேன்....ம்ம்ம்...அங்கயே பிறந்துவளர்ந்தவங்க நான்! ராஜகோபுரம் வந்தபிறகுதான் ஊர்ல இவ்வளோ நெரிசல் கோயில்ல இத்தனை கூட்டம் ..இல்லேன்னா ஒருகுறையும் சொல்லமுடியாது. சரி நீங்க மேல எழுதுங்க படிச்சிட்டு சொல்றேன் என்கருத்தையும்!

பரிசல்காரன் said...

@ வெண்பூ

//ஆன்மீகப் பக்கம் ஒண்ணுதான் இல்லாம இருந்தது, //

ஏற்கனவே விதுரநீதி எழுதி ஸ்வாமி ஓம்காரின் ஆசி பெற்றேனே ஐயன்மீரே!!!

பரிசல்காரன் said...

@ விஜய்

//உச்சி பிள்ளையார் கோயிலுக்குப் போகலியா?//

மனைவி காலில் மாவுக்கட்டு. அதோடு மலைப்படி ஏற சிரமமாயிருக்குமென்பதால் நாந்தான் வேண்டாமென்றேன்!

பரிசல்காரன் said...

@ ராஜு

//Tiruchi stay enge?//

நானும் கிளம்பறதுக்கு முன்னாடி ப்ளாக் ஃப்ரெண்ட்ஸ் யாராவது திருச்சில இருக்காங்களான்னு விசாரிச்சேன். சிக்கல. அப்பறம் நெட்ல பார்த்து சத்திரம் ஸ்டாண்ட் சித்ரா லாட்ஜ்ல தங்கினேன் சார்!

பரிசல்காரன் said...

@ ஷைலஜா

//ராஜகோபுரம் வந்தபிறகுதான் ஊர்ல இவ்வளோ நெரிசல் கோயில்ல இத்தனை கூட்டம் .//

ஒருவகைல அது அலர்ஜியா இருக்குங்க. கோயிலுக்குள்ள போறோமா, எக்ஸிபிஷனுக்குள்ள போறோமான்னு டவுட்டா இருக்கு!!!

பரிசல்காரன் said...

//கார்க்கி said...

சகா பார்த்துக்கொங்க.. 100வது follower ஆனதற்கு ஒரு ராஜமீன் பென்டிங்.. இப்போ 150வதும் நான் தான். ..கணக்குல வச்சிக்கொங்க..//

ஜனவரி 25.

மணிகண்டன் said...

***** ஒருவகைல அது அலர்ஜியா இருக்குங்க. கோயிலுக்குள்ள போறோமா, எக்ஸிபிஷனுக்குள்ள போறோமான்னு டவுட்டா இருக்கு!!! *****

சகா, நீங்க போனது வைகுண்ட ஏகாதசி போது ! அத தவிர ஐயப்பன் மலை சீசன் முடியறபோது. கூட்டமும் இருக்க தான் செய்யும், கடையும் இருக்க தான் செய்யும். பொழப்பு நடத்த வேண்டாமா மக்கள் !

கூட்டம் இல்லாம ஒரு பெரிய கோவில் போகனும்னா, திருவானைக்கோவில் போயிட்டு வந்து இருக்கலாம் நீங்க ! (சமயபுரம் இன்னுமே அலர்ஜியா இருந்து இருக்கும் )

pudugaithendral said...

Blogger கார்க்கி said...

தலைவர் படம் இரண்டாவது தடவை பார்த்துட்டிங்கள இல்ல‌? அப்புறம் எதுக்கு தரிசனம்? எல்லா புண்ணியமும் ஏற்கனவே வந்துட்டிருக்கும் சகா.//

ரொம்ப ஓவரால்ல இருக்கு!!!!!!

:)))))))))

pudugaithendral said...

இதுக்கே இவ்வளவு பில்ட் அப்பா,
திருப்பதிக்குப் பிள்ளைங்களைக் கூட்டிப்
போங்க!
அய்யோ!அப்பா!கோவிலும் வேண்டாம்,சாமியும் வேண்டாம்,ஆளை விடுங்கோம்பாங்க!//

ரிப்பீட்டூ.....

எங்களுக்குத் தெரிந்தவர் ஒருவர் நீங்க திருப்பதி போனா சொல்லுங்க நானும் கூட வர்றேனு சொல்லிகிட்டு இருக்காரு.

திருப்பதியா?????ன்னு அயித்தான் ஜகா வாங்கிகிட்டு இருக்காரு. :)))

எக்ஸ்பீரியன்ஸ் அப்பிடி.

Kumky said...

கோவில்களில் நெரிசல் தவிர்க்க முடியாததுதான்...கூட்டத்தோட பார்த்தாதான் நமக்கும் ஒரு திருப்தி.
ஒரு சில கோவில்களில் செயற்கையாக காக்க வைக்கப்பட்டு கூட்டம் உண்டாக்கப்படுவதும் உண்டு.
பெருந்தெய்வ வழிபாடுகளில் அனேக மறைமுக அரசியல்கள் கலந்திருக்கின்றன.அதன் பிரம்மாண்டமும், சிலை அழகும் , நேர்தியும், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும்
மனித உடல்களுடனான ஒரு தேவ பாஷையும் உடனிருந்து முழுமையாக உணர வேண்டுமெனில் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் கூட பற்றாது.
அவசர யுகத்தில் அரை குறையாகத்தான் கோவில்தரிசனங்கள் முற்றுப்பெருகிறன..
கோவில்களின் உள்ளேயிருக்கும் அற்புதங்களுக்கு ஈடாக கோபுரங்களில் உள்ள சிலைகளும் அதன் கதைகளும் பல ஆயிரம் விஷயங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கின்றது....இதைத்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்கின்றார்களோ என்று தோன்றுகிறது.

Kumky said...

எது எப்படியோ...குருவி பார்த்துட்டு போனதாலதான் ரங்கனை தரிசிக்க காலதாமதம்னு தோனுது.வால்க குருவிகளும் அவர்தம் புகழ்பாடும் புலவர் கார்க்கியும்.....

வால்பையன் said...

கதையை சொல்லுங்க நாங்களும் கேட்டுகிறோம்!

Thivagaren said...

//இதுக்கே இவ்வளவு பில்ட் அப்பா,
திருப்பதிக்குப் பிள்ளைங்களைக் கூட்டிப்
போங்க!
அய்யோ!அப்பா!கோவிலும் வேண்டாம்,சாமியும் வேண்டாம்,ஆளை விடுங்கோம்பாங்க!///


எனக்கும் அதே அனுபவம் கிடைத்தது. 1999 இல். இன்றுவரை என் வீட்டம்மா திருப்பதி என்றால் வேறு ஆளை பாத்துக்கப்பா என்கிறா.

Natty said...

// தலைவர் படம் இரண்டாவது தடவை பார்த்துட்டிங்கள இல்ல‌? அப்புறம் எதுக்கு தரிசனம்? எல்லா புண்ணியமும் ஏற்கனவே வந்துட்டிருக்கும் சகா..//

எப்படி கார்க்கி... முடில ;)))

Natty said...

சீஃப் டாக்டர் நேரேஷனும், வரிசையை ஒழுங்கு செய்த நேரேஷனும் சூப்பர்... :)

துளசி கோபால் said...

விசேஷ நாளில் போய் மாட்டிக்கிட்டீங்களா?

நம்ம கோயில்களில் கூட்டம் வரவரக்கூடிக்கிட்டே போகுது. நின்னுநிதானமாச் சாமியைக் கும்பிட முடியறதில்லை.

மக்களுக்குப் பொறுமை என்ற குணத்தைக் கத்துக்குடுக்கறாரோ சாமின்னு தோணுது.

கார்க்கிபவா said...

// கும்க்கி said...
எது எப்படியோ...குருவி பார்த்துட்டு போனதாலதான் ரங்கனை தரிசிக்க காலதாமதம்னு தோனுது.வால்க குருவிகளும் அவர்தம் புகழ்பாடும் புலவர் கார்க்கியும்//

அங்க வந்த எல்லாருக்குமே காலதாமதம்னு சொன்னாரு.. அப்படின்னா எல்லோருமே குருவி பார்த்தாங்களா? சந்தோஷமா இருக்குப்பா... குருவி குருவி குருவி அடிச்சா...