Showing posts with label Srirangam. Show all posts
Showing posts with label Srirangam. Show all posts

Wednesday, January 21, 2009

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்... – Part 2

அரங்கநாதர் சிலை முதல்ல பிரம்மாகிட்டதான் இருந்ததாம். யார் வீட்லயாவது ஏதாவது அரிய பொருளை, வித்தியாசமானதைப் பார்த்தா ‘ச்சே.. இது நமக்குக் கிடைச்சா தேவலாமே’னு நெனைப்போமில்லயா? (எனக்கு சில புக்ஸைப் பார்த்தா அப்படித் தோணும்க!) அப்படி பிரம்மர்கிட்ட இருந்த அரங்கநாதரை நினைச்சு, சூரியகுலத்தைச் சேர்ந்த இஷ்குவாகு மன்னன் பிரம்மனை நோக்கி தவம் புரிந்து அவர் வந்து ‘இன்னாபா வோணும் ஒனக்கு?’ ன்னு கேட்டப்போ, ‘ஒன்னாண்ட கீற ரங்கநாதரைக் குடுப்பா’ன்னு கேட்டாராம்.

என்னடா இது நாம ரொம்ப பிரியமா பூச பண்ற ரங்கநாதரைக் கேட்டுட்டாரே’ன்னு பிரம்மர் தடுமாறினப்போ ரங்ஸ் வந்து ‘என் அர்ச்சை பூமிக்குச் செல்லவேண்டியது அவசியம்’னாராம்.

அர்ச்சை?

பகவானுக்கு ஐந்து நிலைகள் இருக்காம். பரம், விபவம், வியூகம், அந்தர்யாமி, அர்ச்சை.

பரம் – வைகுண்டத்துல காட்சி தர்ற வடிவம்

விபவம் – ராமர், கிருஷ்ணர் மாதிரியான அவதாரங்கள்

வியூகம் – ஸங்கர்ஷன், பிரத்யும்னன், அநிருத்தன் மாதிரியான திருமேனிகளுடன் பகவான் காட்சி தர்றது

நம்ம மனசுல நினைச்சு வணங்கறது – அந்தர்யாமி

நெக்ஸ்ட் – இப்போ சிலாரூபமா வணங்கறோமே.. அதான் அர்ச்சை.

சரி.. 'பகவானே சொல்லீட்டாரே’ன்னு பிரம்மா அந்த ரங்கநாதரை இஷ்குவாகு கிட்ட குடுத்துடறாரு.

இஷ்குவாகுவோட பரம்பரைல அடுத்தடுத்து வர்ற எல்லாருமே அதை வணங்கீட்டு வர்றாங்க.. யார் யாரு...?

பகீரதன், ரகு, திலீபன், அஜன், தசரதன்.. நெக்ஸ்ட் நம்ம ராமன்.

இந்த ராமன் என்ன பண்றாரு.. தன்னோட பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு அந்த ரங்கநாதரை கிஃப்டா குடுத்துடறாரு.

விபீஷணன் அதை எடுத்துக்கிட்டு இலங்கைக்கு ரிட்டர்ன் போறப்போ காவிரிக்கரைல அதை வெச்சுட்டு ரெஸ்ட் எடுத்தாராம். மறுபடி எடுக்க ட்ரை பண்ணினப்போ அது நகரவே இல்லையாம்! விபீஷணன் மகா டென்ஷனாய்ட்டாராம்! ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் லங்காவாய்ட்டாராம்.

அப்ப, அந்த வழியா வந்த சோழமன்னன் தர்மவர்மா “சார்.. இப்ப இன்னாத்துக்கு இந்த பீலிங்கு? இங்கனயே இருந்துட்டுப் போகட்டுமே? ரங்ஸுக்கு வேணுங்கற பூஜையை நான் செய்றேன்’ங்றாரு. விபீஷணன் வெக்ஸா இருக்கறப்போ ரங்கநாதர் வந்து ‘விபீஷணா.. டோண்ட் வொர்ரி. நான் இங்கதான் இருக்கணும்கறது நியதி. அது ஏன்னு அடுத்த பாரால பரிசல்காரன் எழுதியிருக்கான் படிச்சுக்கோ. உன் வருத்தத்தைப் போக்க நீ இருக்கற இலங்கை உள்ள தெற்கு நோக்கிப் பார்த்தபடி நான் இருப்பேன்’ ன்னாராம்.

அது ஏன் தர்மவர்மா அரசாண்ட காவிரிக்கரையில் நிலை கொண்டது. அதுக்கும் ஒரு ஸ்டோரி இருக்கு. (எனக்கு புராணக் கதைல பிடிச்சதே இதுதான். எல்லாத்துக்கும் ஒரு லிங்க் இருக்குது!) தசரதர் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்துல எல்லா நாட்டு மன்னர்களும் கலந்துகிட்டபோ தர்மவர்மாவும் கலந்துகிட்டாரு. அப்போ தசரதர் வெச்சிருந்த இந்த ரங்கநாதரை பார்த்த தர்மவர்மா ‘ஷோக்காகீதே.. இது என்னாண்ட இருந்தா டெய்லி பூஜை பண்ணி கும்பிடலாமே’ன்னு மனசுல நினைச்சு சந்திரபுஷ்கரணி-ங்கற தடாகத்தின் கரையில் தவமிருந்தானாம். அப்போ சில ரிஷிகள் வந்து ‘யெஸ்.... இட் வில் ஹேப்பன்!’ என்று சொல்லீட்டுப் போனாங்களாம். அத நம்பி தவத்தை முடிச்சுகிட்டாராம். அதான் இப்போ விபீஷணன் மூலமா நிறைவேறுது.

அப்படி தன்னிடத்துக்கு வந்த ரங்கநாதனுக்கு தர்மவர்மா கோயில் கட்டினாலும், ஒரு முறை காவிரில வெள்ளம் வந்து கோயிலை முழுமையா மூடிடுச்சாம். பின்னால வந்த கிள்ளிவளவன்ங்கற மன்னன் ஒருதபா காட்டுக்குப் போனப்போ ஒரு கிளி திரும்பத் திரும்ப சில செய்யுள்களைச் சொல்லிகிட்டிருந்ததாம். அது சொன்னதிலிருந்து அங்க எங்கியோ ரங்கநாதர் இருக்கார்ன்னு கண்டுகிட்ட அவர் பூமியை தோண்டி ,மணலையெல்லாம் அகற்றி ரங்கநாதரைக் கண்டுபிடிச்சு, கோயிலை சீரமைத்தாராம்.

கிளிசொன்னதால கன்டுபிடிக்க்கப்பட்டதால் இந்தக் கோயில்ல கிளிமண்டபம்னு ஒண்ணு ஸ்பெஷலா இருக்கு!

இந்தக் கதைகளை நான் சொல்லி முடிக்கும்போது, க்யூவில் முன்னால் இருக்கறவங்க வெளியேற ஆரம்பிச்சாங்க. என்னடான்னு விசாரிச்சா ‘4 மணிக்குத்தான் கதவு திறக்குமாம். மணி ரெண்டுதான் ஆகுது’ ன்னு சொன்னாங்க. நாமளும் போலாமான்னு நெனைக்கறப்போ உமா ‘வேண்டாங்க. இன்னைக்கு தரிசனம் பண்ணாமப் போறதில்ல’ன்னு சொல்ல, போறவங்களுக்கு வழிவிட்டு நாங்க க்யூவுல முன்னாடி முன்னாடி போய்ட்டே இருந்தோம்.

கதவுலேர்ந்து 25,30வது ஆளா நாங்க முன்னேறினப்போ டக்னு கதவு திறந்து விட்டாங்க. அப்பத்தான் எவனோ புரளியைக் கிளப்பியிருக்கான்னு தெரிஞ்சது.

உள்ளபோய் ஸ்பெஷல் டிக்கெட் வாங்கீட்டு, நல்ல திவ்ய தரிசனம்! முடிச்சுட்டு பரமபத வாசல் வழியா வெளில வந்தோம்!

*******************

சரி... இனி சில கொசுறுத் தகவல்கள்...

கர்ப்பகிரகத்துக்குள்ள இருக்கற ரங்கநாதரை தரிசிக்கறப்போ காலிலிருந்து தலையைப் பார்க்கணுமாம். அதாவது நாம நிக்கற நிலையிலேர்ந்து வலதுபுறமா இருக்கற அவரோட காலை முதல்ல பார்க்கணுமாம். அப்படிப் பார்க்கறப்போ பக்கத்துல நிக்கற கோயில் ஆசாமிகள் நம்மளை இழுத்து இந்தப் பக்கம் வாங்கன்னு சொல்றப்போ அப்படியே தலைநோக்கிப் பார்த்தவாறே வெளியேறலாமாம்.


ஸ்ரீரங்கம் பக்கத்துல இருக்கற குணசீலம் சிறப்பு வாய்ந்ததாம். அதாவது திருப்பதிக்கு வர்றேன்னு நீங்க வேண்டிகிட்டா, அங்க போக முடியலீன்னாலும், குணசீலம் போனா உங்க வேண்டுதல் நிறைவேறினமாதிரிதானாம். ஆனா அதே சமயம் குணசீலம் வர்றேன்னு வேண்டிகிட்டு, திருப்பதி போனா அக்சப்டட் கிடையாதாம்.

கோயில்களைச் சுத்தியும் கடைகள் இருக்கறது ஓக்கே. நேத்து யாரோ சொன்னமாதிரி அவங்களுக்கு வியாபாரம் ஆகணுமே. ஆனா, ராஜகோபுரத்துகிட்டயே ‘அவ்ளோதான் இனி உள்ள செருப்போட போக முடியாது. இங்கயே விடுங்க. பூஜை சாமான் வாங்கீட்டுப் போங்க’ன்னு நச்சரிக்கற கும்பலைத்தான் தாங்கவே முடியல.

விசேஷ நாட்கள், கூட்டமிருக்கற நாட்கள்ல பூஜைக்கு தேங்காய், பழம், பூ வாங்கீட்டுப் போறது வேஸ்ட். அப்படியே பையை வாங்கி தட்டத்துல வெச்சு டக்னு மறுபடி எடுத்து கைல குடுத்துடறாங்க. அவங்களைச் சொல்லி குத்தமில்ல. அந்தக் காசை கோயிலைச் சுத்தி இருக்கற கையேந்தி நிக்கற முதியவர்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் குடுக்கலாம்.

கோயிலுக்குள்ளும் மனுஷனால விடமுடியாத விஷயம் செல்ஃபோன். எங்க பார்த்தாலும் செல்ஃபோன் ரிங்டோனைக் கேட்க முடிஞ்சுது. கொடுமையான சினிமாப் பாட்டெல்லாம் கோயிலுக்குள்ள கேட்டுது! (நான் சைலன்ஸ்ல வெச்சிருந்தேன். மெய்ன் சந்நிதானத்துக்குள்ள ஆஃப் பண்ணீட்டேன்!) அதுவும் ரங்கநாதர் சந்நிதிக்குள்ள ஒரு ஃபோன் அடிக்கவும், எங்கடா ரங்கநாதர் சாய்ச்சுப் பிடிச்சிருக்கற கையை எடுத்து ‘யெஸ்... டெல் மீ ஆண்டாள்..’ ம்பாரோன்னு நெனைச்சேன். நல்லவேளை அப்படி நடக்கல. (அப்படி நடந்தாதான் நல்லவேளை இல்ல!?!)


வெளில உட்கார்ந்துகிட்டிருக்கறப்போ ஒருத்தர் பேசிகிட்டிருந்தார். கையை தலைக்கு சாய்மானம் குடுத்தபடி இருக்கற ரங்கநாதரோட சிலைல, கை கொஞ்சம் கொஞ்சமா இறங்கீட்டே வருதாம். முதல்ல எல்லாம் வலது கண்ணை ஒட்டி கை, காதை மூடியபடி இருக்குமாம், இப்போ கை அப்படியே பிடரிப்பக்கம் போய்டுச்சாம்.

நான் ஒண்ணும் சொல்லல.

Tuesday, January 20, 2009

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்.... - Part 1


‘எனக்கு ரொம்ப நாளா ரங்கநாதனைப் பார்க்கணும்னு ஆசைங்க’ என்று உமா சொன்னபோது கொஞ்சம் பயந்துதான் போனேன். அவரது ஒன்றேமுக்கால்விட்ட தம்பி ரங்கநாதன் என்று ஒருத்தர் புனேவில் இருக்கிறார். அடடா.... இந்தப் பொங்கலுக்கு செலவுதான் போல என்று நினைக்கும்போது ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர்’ என்று விளக்கமாய்ச் சொன்னபோதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.


‘அவரு யாருப்பா’ என்று குழந்தைகள் கேட்கவே தசாதவதாரத்தை விளக்கி (புராணக்கதை இல்லீங்க.. கமலோட தசாவதாரம்) அதுல ஒரு சிலையைக் கடல்ல போடுவாங்கள்ல அதுதான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்’ என்று சொல்ல அவர்களுக்கும் ஆவல் தொற்றிக்கொண்டது.

திருப்பூரில் பஸ் ஏறியபோதே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம். பஸ்ஸில் ‘குருவி’ டிவிடி ஓடிக்கொண்டிருந்தது. கண்டக்டரிடம் பேசி வேறு படம் போடச் சொல்லி தாஜா செய்துகொண்டிருந்தபோது பின்னாலிருந்த இரண்டு இளைஞர்கள் ‘இத மாத்தாதீங்க’ என்று சொல்லவே ‘சரி... உங்க தலையெழுத்து’ என்றவாறு அமர்ந்தேன். (லிஃப்டுடன் பூமிக்கடியில் சென்று ஆற்றுக்குள்ளிருந்து விஜய் வெளிவரும் காட்சியில் வேண்டுமென்றே எழுந்து அவர்களை திரும்பிப் பார்க்க... “ஸாரிங்ணா.. இந்தளவுக்கு எதிர்பார்க்கல” என்றார்கள்.)

************************

எனக்கு ஸ்ரீரங்கம் மிகப் பிடிக்கும். ரங்கநாதரைத்தவிர இரண்டு ரங்கராஜன்களின் ஊர் என்பதால். எப்போதோ சின்ன வயதில் பெற்றோர்களோடு வந்த நினைவு லேசாக இருக்கிறது.

இரவு திருச்சியில் தங்கி, காலை ஸ்ரீரங்கம் பயணித்தோம். வழியில் அகண்ட காவிரியைப் பிரமிப்பாய்ப் பார்த்தவாறே.

அந்த 236அடி ராஜகோபுரத்தை அடையும்போது லேசான மழைத்தூறல் எங்களை வரவேற்றது. 400 ஆண்டுகளுக்கு முன்னால் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப் பெறாதிருந்த இந்தத் தெற்கு ராஜகோபுரம் அகோபிலமடம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் ஸ்வாமிகளின் முயற்சியால் கட்டிமுடிக்கப்பட்டதாம். ஆசியாவேலேயே மிக உயரமான கோபுரமான இதன் ஆறாவது நிலைக்கு நன்கொடை அளித்திருப்பவர் இசைஞானி இளையராஜா என்பது உட்பட பல விபரங்களை கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு சந்திதியாக தரிசனம் முடித்து, ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க அவரது மூலஸ்தானம் நோக்கி செல்லும்போது பிரகாரக் கதவுகள் அடைக்கப் பட்டிருந்தன.

“அவரு குதிரை வாங்கப் போயிருக்காரு. ஆயிரங்கால் மண்டபம் போனீங்கன்னா அவரைப் பார்க்கலாம்” என்று உற்சவமூர்த்தி ரவுண்ட்ஸில் இருப்பதாகச் சொன்னார்கள். சரி என்று ஆயிரங்கால் மண்டபத்தை தேடிப் போவதற்குள் ‘அடடா.. இப்போதான் இங்கேர்ந்து கிளம்பறார்ங்க. முன்னாடி இன்ஃபர்மேஷன் செண்டர் இருக்குல்ல? அங்க போய் நின்னீங்கன்னா அந்த வழியாத்தான் வருவார்’ என்றார்கள்.

மறுபடி அங்கேயிருந்து அவர் குறிப்பிட்ட இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து போனபோது “இந்த இடத்தை அவர் க்ராஸ் பண்ணி 10 நிமிஷம் ஆச்சு. பிரகாரத்துக்குள்ள போயிருப்பாரு. 11.30க்கு மூலஸ்தான வாசல் திறப்பாங்க. உள்ள போயிடுங்க. 1 மணிக்குள்ள தரிசனம் முடிஞ்சு சொர்க்க வாசல் வழியா வந்துடலாம்” என்றார்கள்.

‘இதென்னடா.. அப்பல்லோ ஹாஸ்பிடல் சீஃப் டாக்டர் மாதிரி அப்பாய்ன்மெண்டே தரமாட்டீங்கறாரே’ என்று நினைத்தவாறே மூலஸ்தானத்திற்குள் போக நின்றிருந்த நீ............ண்டதொரு க்யூவில் நிற்கும்போது மணி 11. என்னப்பா இன்னைக்கு இவ்ளோ கூட்டம் என்றால் சொர்க்கவாசல் அடுத்த நாள் மூடிவிடுவார்கள். பிறகு அடுத்த வைகுண்ட ஏகாதசிக்குத்தான் திறந்துவிடுவார்களாம். அதனால்தான் கூட்டமாம்.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குறைந்தது ஒன்றிரண்டு கிலோமீட்டர் தூரமாவது இருக்கிறதே.. இந்தக் கோயிலின் பரப்பளவு எத்தனை என்று விசாரித்தபோது பிரமிப்பாய் இருந்தது. மொத்தம் 156 ஏக்கரில் அமைந்துள்ளது இந்தக் கோயிலின் பரப்பு. ஏழு பிரகாரங்கள், ஒன்பது தீர்த்தங்கள், 21 கோபுரங்கள், 13 கலசங்கள் என்று பிரம்மாண்டமான கோயில்தான்.

மணி 11.30...
12....
12.30....
1.....

கதவுகள் திறந்தபாடில்லை. கூட்டம் முட்டித்தள்ள ஆரம்பித்தது. கொஞ்சம் முன்னால் இடையில் தடுப்பை மீறி சிலர் செல்ல ஆரம்பிக்க நான் கூட்டத்திலிருந்து விலகிப் போய் அவர்களை ஒழுங்குபடுத்தி சத்தம் போட்டு எல்லோரையும் பின்னுக்கு வரச் செய்து, ‘முன்னாடி எவனாவது புகுந்தா பக்கத்துல இருக்கறவங்க தட்டிக் கேட்டாத்தானே ஆகும். அங்கேர்ந்து நான் வரணுமா.. என்ன சார் இது’ என்று நியாயம் கேட்டுவிட்டு மீண்டும் நான் நின்றிருந்த இடத்துக்கு வந்தபோது ‘யோவ்.. ஒழுங்கா லைன்ல வா’ என்று நாலைந்து குரல் கேட்டது. ‘வாங்கய்யா... தர்மவான்களா.. இவ்ளோ உடனே அட்வைஸை ஃபாலோ பண்றாங்கய்யா’ என்று நினைத்தவாறே அவர்களுக்கு விளக்கமளித்து மீண்டும் லைனில் நின்றேன்.

1.30.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமையிழந்தது. சிலர் திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர். திடீரென்று ‘பக்தா... உன் பக்தியை மெச்சினோம். பொறுமையாகக் காத்திருந்தது மட்டுமில்லாமல் கூட்டத்தையும் நெறிப்படுத்திய உமது பண்புக்குப் பரிசாய் உனக்கு எமது விஸ்வரூபத்தைக் காட்ட சித்தமானோம்’ என்று ரங்கநாதர் வந்து உள்ளே கூப்பிட்டால் என்னென்ன வரம் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே....

“அப்பா.. இந்தக் கோயிலோட கதையைச் சொல்லுங்கப்பா” என்று மீரா சொல்ல..

மொத்தக் கூட்டமும்... (சரி.. சரி... பக்கத்துல இருந்த நாலைஞ்சு பேர்னு வெச்சுக்கங்க!) கவனிக்க நான் ஆரம்பித்தேன்....