ஒரு கிராமத்துக்கு ரெண்டு திருடனுக வந்தானுக. நைட் மூணு மணி வரைக்கும் அலைஞ்சும் ஒண்ணும் அகப்படல. மண்டைகாஞ்சுபோய் ஊர் எல்லைல இருக்கற அம்மன் கோவில் திண்ணைல ஒக்காந்தாங்க. அப்ப ஒருத்தன் சொன்னான், “அங்க பாரு. ஆட்டுக்கிடை. அதுல கொழுத்த ஆடு ஒண்ணை ஆட்டையப் போட்டுட்டுப் போலாம். ரெண்டு நாள் சாப்பாட்டுக்கு ஆகும்”ன்னு. சரின்னு எந்திரிக்கறப்ப தூணுக்கு அந்தப் பக்கமா யாரோ மொனகுற சத்தம் கேட்டுச்சு. யார்னு பாத்தா ஒரு சங்கூத்துப் பண்டாரம். அவன் கைல சங்கும், சேகண்டியும். சங்கூத்துப் பண்டாரம்ன்னா, அதிகாலைல சங்கை ஊதி, சேகண்டிய அடிச்சுப் பிச்சை கேட்கற ஆண்டிப் பண்டாரம். அவன் சோர்ந்து போய் இருக்கறதப் பார்த்த திருடனுக “என்ன ஓய் பண்டாரம்.. இன்னிக்கு எதுவும் படியலியா”ன்னு கேட்டாங்க. அவன் வெறுத்த குரல்ல “ம்க்கும்.. உங்ககூட வந்தா ஆட்டுக்கறியாச்சும் கிடைக்கும்”ன்னிருக்கான். ‘ஓஹொ.. இவன் நாம பேசினதக் கேட்டிருக்கான்’னு புரிஞ்சுகிட்டு அவனையும் துணைக்குக் கூப்ட்டுட்டாங்களாம். மூணுபேருமா ஆட்டுக்கிடைக்குப் போய் ஆட்டைப் பிடிக்கறப்ப ஆடு கத்தி, திமிறப் பார்த்ததாம். தலைப்பக்கமா இருந்த பண்டாரத்துகிட்ட ஒரு திருடன் “டேய் ஆண்டி.. சங்கைப் பிடிடா”ன்னானாம். அவன் சங்குன்னுது ஆட்டோட சங்கை.. அதாவது கழுத்தை. இவன் பழக்கதோஷத்துல சங்கை எடுத்து ஊத, ஆட்டிடையர்கள் முழிச்சு இவங்க மூணுபேரையும் மொத்து மொத்துன்னு மொத்தினாங்களாம்.
இதான் சும்மாக் கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி கதை.
*****************************
முனைவர் அ.கா.பெருமாள். நாட்டார் வழக்காற்றியலின் ஆய்வாளர்களில் முன்னோடியான இவர் பதிப்பித்தது 14 புத்தகங்கள். எழுதியிருப்பது 33 புத்தகங்கள். நாட்டார் தெய்வங்கள் குறித்த கதைகள், தோல்பாவைக் கூத்து, கணியான் ஆட்டம் என்று பலவித தேடல்களை தனது கள ஆய்வின் மூலம் கண்டு, ஆய்ந்து முனைவர் பட்டம் வாங்கியுள்ளார். அவர் எழுதிய ஒரு புத்தகம்தான் சுண்ணாம்பு கேட்ட இசக்கி. (UNITED WRITERS வெளியீடு, 63, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14)
மேலே உள்ளது போல யாராவது பேச்சு வாக்கில் சொல்லும் சொலவடைக்குப் பின் இருக்கும் கதைகளை சுவாரஸ்யமாய்க் கேட்டு பதிந்திருக்கிறார். இசக்கியம்மன் என்ற கிராம தெய்வம் குறித்த கதைகளும் ஆச்சர்யமூட்டுபவையாய் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமங்களிலும் அந்த கிராமத்தில் கொலையுண்ட, அகால மரணத்தால் மறைந்த பெண்களே இசக்கியம்மனாய் வழிபடு தெய்வமாய் மாறிவிடுகின்றனர். அப்பெண்களைக் கொலைசெய்த குடும்பத்தினருக்கும் அவள் குலதெய்வமாகிவிடுவாள். இதனால் அவளது கோபத்தைத் தணித்து தெய்வகுற்றத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது தென்மாவட்ட மக்களின் நம்பிக்கை.
அதேபோல தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த சில கிராமங்களில் கர்ப்பிணிப் பெண் இறந்துவிட்டால் அவரது பிணத்தை எரிக்கும்போது வயிற்றைக் கீறி உள்ளிருக்கும் குழந்தையை எடுத்து தாய்க்கு அருகில் வைத்து பின் எரிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை உறுதி செய்ய வேண்டி ஆய்வுக்கு சென்ற இவரே, பிணத்தை இறுகப்பற்றிக் கொள்ள இறந்தவளின் வயிற்றைக் கீறிய நிகழ்ச்சி நடந்திருக்கிறது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோல்பாவைக்கூத்துக் கலைஞர்களுக்கு உரிய உரிமைகள் சில கிடைக்காமல் போகவே அவர்கள் தங்களுக்கென்று ஒரு சாதி சங்கம் அமைக்கிறார்கள். பரமசிவராவ் என்ற தோல்பாவைக் கூத்தில் புகழ்பெற்றவரைத் தலைவராகக் கொண்டு.
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்று மாறி கலைஞரான அவர் தலைவராக மாறி விடுகிறார். பெருமாளை சந்திக்கும் அவர் சொல்கிறார்...
‘என் நெலம கடற்கரை நாயும் கரைக்கோட்டை நாயும் கத மாதிரி ஆயிடிச்சு’ என்று.
அது என்ன கதை?
கன்னியாகுமரி கடற்கரையில் ஒரு நாய் வசித்து வந்தது. அதன் நண்பனான ஒரு நாய் கரைக்கோட்டை என்ற ஊரில் இருந்தது. இந்த கன்னியாகுமரிக் கடற்கரை நாய், கரைக்கோட்டை நாயை விருந்துக்கு அழைச்சுதாம். கடற்கரைல எங்க போனாலும் மீன்தலை, குடல்வால், நண்டு ன்னு கெடச்சுதாம். அஞ்சாறுநாள் தங்கி, வயிறார சாப்ட்டு கடற்கோட்டை நாய் கெளம்பிச்சாம். கெளம்பும்போது ‘நீயும் எங்க கிராமத்துக்கு வா’ன்னு கடற்கரை நாய்க்கு அழைப்பு விடுத்துச்சாம்.
கொஞ்ச நாளைக்கப்பறம் கடற்கரை நாய் அங்க போச்சாம். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்துட்டு கடற்கரை நாய்க்கு பசியெடுக்க “சாப்பிடப்போலாமா”ன்னு கேட்டுச்சாம். கரைக்கோட்டை நாய் “ஓ! பேஷா”ன்னு நண்பனை ஒரு தெருவழியாக் கூட்டீட்டுப் போய் ஒரு வீட்டுப் பின்புறத்துல இருக்கற எச்சில் இலைகளைக் காட்டி “சாப்பிட்டுக்க” ன்னுச்சாம். அதுக்கு வயிறு நிறையவே இல்லை. சரின்னு ரெண்டு மூணு நாள் இருந்துட்டு... இது நமக்கு ஆகாதுன்னு கெளம்பும்போது ‘ஏன் இப்படி கஷ்டப்படற.. எங்கூட அங்க வந்துடலாம்ல”ன்னு கேட்டுச்சு. அதுக்கு இந்த நாய் "எங்கூட வா”ன்னு ஒரு வீட்டு முன்னாடி கூட்டீட்டுப் போகுது. அந்த வீட்ல வீட்டம்மா வூட்டுக்காரர்கூட சண்டை போட்டுட்டு இருந்தாங்க. நடு நடுவே ‘எச்சக்கலை நாயே’ன்னு திட்டற சத்தம் கேட்குது. இன்னொரு வீட்டுக்குக் கூட்டீட்டுப் போகுது. அங்க மாமியார் மருமகளைப் பாத்து ‘தெருப்பொறுக்கி நாயே’ன்னு திட்டிகிட்டு இருந்தாங்க. இப்படியே ரெண்டு மூணு வீட்டுக்கு கூட்டீட்டுப் போய் காமிச்சு கரைக்கோட்டை நாய் சொல்லீச்சாம்.. “பாத்தியா மனுஷங்க திட்டறதுக்கு நம்ம சாதியத்தான் சொல்றாங்க. இந்தப் பேர், பதவிக்காகத்தான் நான் இங்க இருக்கேன். பேரு வேணும்னா எதையும் சகிச்சுக்கணும்”ன்னுச்சாம். கடற்கரை நாய் ஓட்டமா ஓடிச்சாம்!
இவர் கள ஆய்வின்போது சந்தித்த இன்னல்களையும் அங்கங்கே சொல்லியிருக்கிறார். ஆய்வு மாணவர்களுக்கு மிக உபயோகமாக இந்தப் புத்தகம் இருக்கும்.
ஒரேயொரு சம்பவத்தைச் சொல்லி முடிக்கிறேன்...
ஒரு கிராமத்தில் இவர் செல்லும்போது இரு வீட்டினரிடையே சண்டை. என்னவென்று விசாரிக்கிறார். ஒருத்தன் 500ரூபாய் பணத்திற்காக தன் மனைவியை ஒரு வார ஒத்திக்கு (LEASE) வைத்திருக்கிறான். பணத்தைக் கொடுத்து மனைவியைக் கேட்டால் ‘இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தர்றேன்’ என்றிருக்கிறானாம். அதற்குத்தான் சண்டையாம்.
கொடுமைடா சாமி!
.