Friday, June 13, 2008

முன்குறிப்புகள் - ஜூன் 13 & கோவை பதிவர் சந்திப்பு

நண்பர் கோவி. கண்ணன் ஒரு அருமையான பணியைத் துவக்கியுள்ளார். (பார்க்க அவரது பதிவு) இது தொடர வாழ்த்துக்கள்! என் சார்பாக கண்ணனுக்கு சில கேள்விகள்.. அவரது முறை வரும்போதோ, அல்லது உடனேவோ பதில் சொல்லலாம்.. பதில் சொல்லும் பொது தெரிவித்தால் மகிழ்வேன்..

## கிருஷ்ணகுமாரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

## உங்கள் பதிவுகளைப் படிக்கிறவர்கள், உங்களிடம் பொதுவாக சொல்லும் விஷயம் (உங்கள் பதிவு பற்றி) என்ன?

## பெட்ரோல் விலை உயர்வால் நாங்கள் படும் பாட்டை விட்ட.. சிங்கப்பூர்ல எப்படி சமாளிக்கறாங்க தெரியுமா என்று நிறைய பேர் நிறைய கதை சொல்கிறார்கள்... என்ன செய்யுறீங்க அங்க?

## உங்களை வலையுலகத்துக்கு அழைத்து வந்த புண்ணியவான் யார்?

-------------------------------

என்னுடய நேற்றைய முன்குறிப்புகளில் சரியா தப்பா என்று ஒரு கம்யூனிக்கேஷனில் கொஞ்சம் மந்தமாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு வேலை கொடுத்ததை சொல்லியிருந்தேன். இப்போது என்னடாவென்றால், கொஞ்சம் பேசத்தெரிந்த அக்காளுக்கு புரொடக்ஷன் பிரிவிலும், பேசக் கூச்சப்படும் தங்கைக்கு யாரிடமும் அதிகம் பேச வேண்டிவராத ஒரு பிரிவிலும் வேலை கொடுத்திருக்கிறார்கள் HRD யில். விசாரித்ததில் `நான் வேண்டாம்னா ஆள இவன் சொல்லி எடுத்திருக்காங்க' என்கிற ஈகோவில் ஒரு சீனியரின் வேலை இது என்று தெரிந்தது. (திருப்பூரில் நடக்கும் இந்த சீனியர்களின் அட்டகாசத்திற்கு ஒரு தனி பதிவு போடவேண்டும்! - பத்து வருடங்களாக ஒரே நிறுவனத்தில் பணி புரியும் நான் இதை எழுதலாம் தானே? ) உண்மையாகப் பார்த்தால் கம்யூனிக்கேஷனில் கொஞ்சம் மந்தமாக இருக்கும் தங்கைக்கு நிறைய பேர் இருக்கும், புரொடக்ஷன் பிரிவில் வேலை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பொறுமையாக இருக்கிறேன்.

--------------------------------------------------

வரும் ஞாயிறு கோவையில் பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது. ஒருமாதிரி எதோ புதுசா காலேஜ் போகப்போற பீலிங் இருக்கு. என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல. லதானாந்து அங்கிளை நம்பி போறோம்.. நிறைய படம் காட்டுவாரு-ன்னு நம்பறோம். (படம்ன்னா, அவரு சினேகா, ரஞ்சிதான்னு நிறைய பேர் கூட படம் எடுத்துருக்காரில்ல.. அந்தப் படம்..!) முதல்லையே நிறைய பதிவர் சந்திப்புகள்ல கலந்துகிட்டவங்க பதிவர் சந்திப்பு விதிமுறைகள்-ன்னு எதாவது பதிவு போடலாமே? (லக்கிலுக் ஜி, ஆரம்பிக்கலாமே?) காட்டுக்குள்ள கெஸ்ட் ஹவுஸ்ல நடக்கற முதல் பதிவர் சந்திப்பு இதுவாத்தான் இருக்கும்ன்னு நினைக்கறேன்! முடிச்சுட்டு நாங்க எழுதப்போற சந்திப்பு பத்தின பதிவுகளைப் படிச்சுட்டு, எத்தனை பேர் வயித்தெரிச்சல் படப் போறாங்களோ!

-------------------------------------

தசாவதாரம் ரிலீசாகிவிட்டது! ஞாயிறு பதிவர் சந்திப்பு வேறு இருப்பதால் பார்க்க முடியாது. மிரட்டியிருப்பதாக கேள்வி! ப்ளாக்கர்ஸ் விமர்சனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


6 comments:

கோவி.கண்ணன் said...

1. கிருஷ்ணகுமாரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எந்த கிருஷ்ணகுமார் ? வலைப்பு சுனாமி லக்கி லுக் அல்லது பரிசல் காரன் ? ஹிஹி
நல்லா எழுதுகீறீர்கள், குறிப்பாக நட்பில் ஏனிந்த பொய்கள் படித்தவுடன் என்னை அது போல் ஒரு சிறுகதை (மரங்கள்) எழுத வைத்தது. நகைச்சுவையும் உங்களுக்கு நன்றாக வருகிறது. இது எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டுவரும் ஆற்றல் உங்களிடம் இயல்பாகவே இருக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த தனித்துவம் வாய்ந்த பதிவர் ஆவீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்

2. உங்கள் பதிவுகளைப் படிக்கிறவர்கள், உங்களிடம் பொதுவாக சொல்லும் விஷயம் (உங்கள் பதிவு பற்றி) என்ன?

என் பதிவுகளைப் படிப்பவர்கள் பதிவில் தென்படும் எழுத்துப்பிழைகளை சுட்டிக் காட்டுவார்கள். எனது பதிவுகளில் ஒரிரு எழுத்துப்பிழையாவது வைக்காமல் என்னால் எழுதவே முடியாது. :)
எனது பதிவின் பொருள் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் மாற்றுக் கருத்து சொல்பவர்கள் என்னிடம் சொல்வதற்கு தயங்கியதில்லை. அந்த வகையின் எனக்கு ஒத்தக் கருத்துடைய நண்பர்களைவிட மாற்றுக் கருத்துள்ளவர்களில் அதிகம் நண்பர்கள் உள்ளனர். பொதுவாக நான் நிறைய எழுதுவதாகவும் எனக்கும் நேரம் அதிகம் கிடைப்பதாகவும் சொல்வார்கள்.

3. பெட்ரோல் விலை உயர்வால் நாங்கள் படும் பாட்டை விட்ட.. சிங்கப்பூர்ல எப்படி சமாளிக்கறாங்க தெரியுமா என்று நிறைய பேர் நிறைய கதை சொல்கிறார்கள்... என்ன செய்யுறீங்க அங்க ?

சிங்கப்பூரில் எப்படி சமாளிப்பீர்கள் என்பதைவிட சமாளித்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. வாகன நெருக்கடியை சமாளிக்க பொதுப்போக்குவரத்தில் செல்வதை அரசு ஊக்கப்படுத்துகிறது. நேற்றுவரை காரில் சென்றோம்...இன்று பொதுப்போக்குவரத்தில் செல்வதா ? என்றெல்லாம் முடிவெடுத்தாவர்கள் முகம் சுழிப்பது இல்லை. வீட்டுக்கடன், காப்பீடு, சிறுசேமிப்பு என்றெல்லாம் மாத மாதம் ஊதியம் பிரிந்துவிடுவதால்...திடீர் செலவுகளை சமாளிக்கமுடியாமல் திணறுபவர்கள் இங்கும் உண்டு. அரிசி விலை எங்கே 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது.


4. உங்களை வலையுலகத்துக்கு அழைத்து வந்த புண்ணியவான் யார்?-------------------------------

யாரும் அழைத்துவரவில்லை. நானாகவே சிக்கிக் கொண்டேன். சிலசமயம்.... பொழுது போக்காவும்...சென்ற வலைப்பயணம் ... பல சமயம் அதில் தான் பொழுதே வீனாகப் போகிறது என்பதால் மீள்வதைப் பற்றியும் யோசிக்க வைக்கிறது.

*******

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.
:)

//ஒருமாதிரி எதோ புதுசா காலேஜ் போகப்போற பீலிங் இருக்கு//
யாராவது ராகிங் செய்வாங்க ! எச்சரிக்கையாக இருங்க... :)))

முரளிகண்ணன் said...

சந்திப்பு சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்

வால்பையன் said...

//வரும் ஞாயிறு கோவையில் பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது.//

அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லையே ஏன்?
யார்யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள்

வால்பையன்

பரிசல்காரன் said...

படு பயங்கர வேகத்தில் பதிலளித்து விட்டீர்கள்! நன்றி! இதை வைத்து இன்றைக்கு ஒரு பதிவு போட்டுற வேண்டியதுதான்! (என்னை வாழ்த்தியமைக்கு நன்றி!)

நன்றி முரளி!

வால்பையன்.. வருகைக்கு நன்றி.. அதிகாரபூர்வம் என்றால் என்ன? (யோவ்.. வரமுடியுமா முடியாத என்று அதிகாரமா கூப்ப்பிடறதா?)

கயல்விழி said...

இந்தியாவில் அலுவலக பாலிடில்க்ஸ் ரொம்ப அதிகம். :(

லக்கிலுக் said...

பரிசல்காரன் நீங்கள் ஒரு ஜனரஞ்சகமான பதிவர்!!! :-)