Monday, June 9, 2008

நட்பில் ஏனிந்த பொய்கள்?

‘என் இனிய நண்பன் விஜய்க்கு

நலமே.. நலமா? என்று சம்பிரதாயமாக இந்தக் கடிதத்தை ஆரம்பிக்க முடியவில்லை..

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக மெயிலிலும், தொலைபேசியிலும் வளர்ந்துவரும் நம் நட்பில் இப்படி ஒரு கடிதம் என்னால் உனக்கு எழுதப்படுமென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

என்னதான் தகவல் புரட்சி வளர்ந்துவிட்டாலும், மாதமொருமுறை கடிதப் பரிமாற்றம் வேண்டுமென்ற நமது திட்டத்தின்படி, இந்தமாதம் என்னிடமிருந்து வரும் முதல் கடிதமே உனக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாய் இருக்கலாம்..


மே மாத இறுதியில் ஒருநாள்.. நான் பணிபுரியும் ஏற்றுமதி நிறுவன முதலாளி என்னை அழைத்தார்..

"பிரபாகர்.. பிரான்ஸ் பையர் இந்த தடவை சென்னை வர்ல. அவங்க நேரா கோயமுத்தூர் போய் அங்கிருந்து ரெண்டு நாள் கேம்ப்பா ஊட்டி போறாங்க.. நீங்க அர்ஜெண்ட்டா நாளைக்கு நைட் கிளம்பி கோவை போய், ஏர்போர்ட்ல அவங்களை மீட் பண்ணி, ஆர்டர் சாம்பிளை வாங்கிகோங்க.. ரெண்டு நாள்தான் டைம்ங்கறதால திரும்பி சென்னை வராதீங்க.. திருப்பூர்ல நம்ம விஸ்வா எக்ஸ்போர்ட்ல பேசிட்டேன். அங்க போய் நாலஞ்சு சாம்பிள் ஒரே நாள்ல ரெடி பண்ணி ஊட்டிலயே போய் அப்ரூவ் வாங்கிக்கோங்க. எதாவது கரெக்ஷன் சொன்னாங்கன்னா அடுத்த நாள்ல பண்ணி ஏர்போர்ட்ல கூட போய் காமிச்சு அப்ரூவ் வாங்க டைம் இருக்கும். ரொம்ப முக்கியமான ஆர்டர்ங்கறதால உஙகளையே அனுப்பறேன்" என்று அவர் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். காரணம் - திருப்பூரிலிருக்கும் நீ!

இதற்கு முன் இரண்டு முறை திருப்பூர் வந்திருந்தாலும் அப்போதெல்லாம் உன்னைப் பார்க்க முடியவில்லை. உன் கம்பெனிக்கு ஆர்டர் எடுக்கும் விஷயமாய் ஒருமுறை மும்பைக்கும், ஒருமுறை அமெரிக்காவுக்கும் நீ பறந்துவிட்டதாய் சொன்னாய்! இந்தமுறை உன்னிடம் சொல்லாமலே வந்து உனக்கு இன்ப அதிர்ச்சியளிக்க எண்ணினேன். சென்னையில் நானும் ஒரு கார்மெண்ட் எக்ஸ்போர்ட்ஸில் பணி புரிவதால், ‘விஜய் எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரில் நடந்துவரும் உன் கம்பெனியையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எனக்கு இருந்தது. அதைவிட போன மெயிலில் குறிப்பிட்டிருந்த உன் பங்களாவில் நீ புதிதாய் கட்டிய ஹோம் தியேட்டரைப் பார்க்கும் ஆவலும் இருந்தது!

திருப்பூரில் வந்திறங்கி, பிருந்தாவனில் ரூம் போட்டு, என் வேலைகளை விஸ்வா எக்ஸ்போர்ட்டில் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்தே ஒரு பைக் இரவல் வாங்கிக் கொண்டு உன் கம்பெனி-கம்-பங்களா இருக்கும் 15, திருநீலகண்டபுரம் ரோடு, எம்.எஸ்.புரம் நோக்கிப் பயணித்தேன்.

எம்.எஸ்.புரத்தை நெருங்கும்போதே எனக்குள் ஒரு மாதிரி கூச்சமாய் உணர்ந்தேன். நீயோ ஒரு நிறுவனத்தின் முதலாளி. நான் சாதாரண மாத சம்பளத்துக்காரன். என்னதான் போட்டோ கூட பரிமாறிக்கொள்ளாமல் பழகி, வாடா போடா ரேஞ்சுக்கு வந்திருந்தாலும் நேரில் எப்படி எதிர்கொள்வாய் என்று தயக்கமாய் இருந்தது. ஆனால் திருநீலகண்டபுரம் ரோட்டை அடைந்தபோது தயக்கம் அதிர்ச்சியாக மாறியது.

காரணம், கண்ணுக்கெட்டிய தூரம்வரை அந்த ரோட்டில் பங்களாக்களோ, பெரிய கம்பெனி கட்டிடங்களோ காணப்படவில்லை! அந்த அதிர்ச்சியினுடனே பதினைந்தாம் நம்பரைத் தேடிக் கண்டுபிடித்தபோது மேலும் அதிர்ச்சி! அந்த முகவரியில் இருந்த ஒரு கூரை வீட்டின் முன் கிழிந்த சேலையுடன் ஒரு அம்மாள்.

"யாரு வேணும் தம்பி?"

"இங்க விஜய்ன்னு.."

"ஆமா.. விஜய் வீடுதான் இது"

"இ..இல்ல.. விஜய் எக்ஸ்போர்ட்ஸ்ன்னு..."

"என் பையன்தான் விஜய்.. அவன் கட்டிங் இன்சார்ஜா போற கம்பெனி பேருதான் விஜய் எக்ஸ்போர்ட்ஸ்.. அதோ வந்துட்டானே" என்று சற்று தூரத்தில் மொபட்டில் வந்து கொண்டிருந்த உன்னைக் காட்டினார்.

கம்பெனி ஓனரென்றும், சான்ட்ரோ கார் வாங்கிவிட்டாயென்றும், ஹோம்தியேட்டர் கட்டிவிட்டாய் என்றும் புளுகிய உன்னைப் பார்க்கும் ஆசை வடிந்து போய் மனது வெறுத்தவனாய்.. "இவரில்லீங்க" என்று உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வேகமாக பைக்கை விரட்டினேன்.

நான்கு நாட்களாக மனதைவிட்டு அகலாமல் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டிருக்கிறது உன் மீதான வெறுப்பு. ஏன் இந்தப் பொய்கள்? உன்னை என் இன்னொரு மனசாட்சியாய் நினைத்து என் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொண்டேனே? என்னிடம் ஏனிந்தப் பொய்? இதுதான் நீ நட்புக்கு தரும் மரியாதையா?

எல்லாவற்றிற்கும் நன்றி!

இந்தக் கடிதத்தை படித்துவிட்டு பதிலெழுதாதே. அதைக்கூட படிக்க எனக்கு மனதில்லை.

வெறுப்புடன்
பிரபாகர்’

-கடிதத்தை முடித்ததும் மறுபடி படித்துப் பார்க்கக் கூட மனமில்லாமல் ஒட்டினான் பிரபாகர். சாப்பிடப் போகும் போது கூரியரில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவாறே டைரிக்குள் வைத்து ஆபீஸ்ரூமை விட்டு வெளியே வந்தான்.

"பாஸ் கேட்டா சாப்பிடப் போயிருக்காருன்னு சொல்லு" என்று ரிசப்ஷனிஸ்டிடம் சொல்லிவிட்டு நகர முற்பட்டவனை நிறுத்தினாள் அவள்.

"சார்.. உங்களுக்கொரு கூரியர் வந்துருக்கு"

அவள் கொடுத்த கவரைப் பார்த்தான். திருப்பூரிலிருந்து விஜய்தான் எழுதியிருந்தான்.

வேண்டா வெறுப்பாய் பிரித்தான்..

வழக்கமான பினாத்தல்களுடன் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் கடைசி வரிகளில் கண்களை ஓட்டினான்..

‘எனது சான்ட்ரோ கார் மிகவும் சிறியதாக இருப்பதால்.. ஸ்கார்ப்பியோவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டேன். இன்னும் இரண்டு வாரங்களில் வந்துவிடும்’ என்று முடித்திருந்தான்.

கடிதத்தை கையிலேயே வைத்தபடி அங்கிருந்த நாற்காலியில் அயர்ந்துபோய் சிறிதுநேரம் அமர்ந்தவன் திடீரென்று எழுந்து தனது அறைக்குப் போனான். ஏற்கனவே எழுதப்பட்ட கடிதத்தை சுக்கு நூறாய்க் கிழித்தான்.
பேப்பரை எடுத்தான்..

‘ப்ரிய தோழா..
ஸ்கார்ப்பியோ கார் வாங்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி.. கறுப்புக்கலரில் வாங்கும் போது அதன் இன்டீரியர் பழுப்புக் கலரில் இருந்தால் நன்றாக இருக்கும்.." என்று ஆரம்பித்து எழுதத் தொடங்கினான்.

7 comments:

கோவி.கண்ணன் said...

முடிவு அருமை

என் மனசு said...

உண்மையான அனுபவமாக இருக்கு ... நிஜமா உண்மைதானே ?...

சென்ஷி said...

உண்மையிலேயே அசத்தலான முடிவு...
என்ன செய்ய... உண்மை நட்பில் எதையும் குறை காண முடிவதில்லை.

varun said...

//உன்னை என் இன்னொரு மனசாட்சியாய் நினைத்து என் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொண்டேனே? என்னிடம் ஏனிந்தப் பொய்? இதுதான் நீ நட்புக்கு தரும் மரியாதையா?//
குமார் அருமையான வரியப்பா

anujanya said...

கே.கே,

சிறுகதை இலக்கணத்துக்கே உரிய நல்ல திருப்பம். முடிவு வெறும் முடிவாக இல்லாமல் வாசகனுக்கும் நிறைய யோசிக்க இடம் கொடுக்கும் இலாவகம் அருமை. பாருங்கள் சென்ஷி நண்பனை மன்னித்து விடத் தயாராகிறார். வருண் இன்னமும் வலியிலிருந்து வெளிவரவில்லை. இன்னொரு கோணம் - முடிவு சொல்லுவது அந்த பொய் நண்பனை பொய்களுடன் விளையாடும் குரூரமும் அதில் கிடைக்கும் பழி வாங்கிய திருப்தியும். வாழ்த்துக்கள் கே.கே.

கயல்விழி said...

எதிர்பாராத முடிவு. நல்ல சிறுகதை.

ஜி said...

:))) Ending is un-expected.. gud one...