Monday, June 7, 2010

நிராகரித்தலின் வலி

(தலைப்பைப் பார்த்து ஏதோ பெரிய இலக்கியம் எழுதப் போவதாக நினைத்து ஏமாந்துவிட வேண்டாம். இதுவும் வழக்கமான கொசுவத்திப் பதிவுதான்.... )

நட்பும் நண்பர்களுமே என் வாழ்க்கை என்று கங்கணம் கட்டிக் கொண்டெல்லாம் நான் பிறக்கவில்லை. ஆனால் தொடர்ச்சியான பல கட்டங்களில் அவர்கள்தான் ஆறுதலாயிருந்திருக்கிறார்கள். அவர்களால்தான் நான் புன்னகைக்கிறேன். அவர்கள்தான் எனக்கு அன்பை வழங்கியிருக்கிறார்கள்.. வழி நடத்தியிருக்கிறார்கள்.

இந்த நட்பின் தேடல் எப்போது ஆரம்பித்தது என்று சரிவர நினைவில்லை. ஏழாவது படிக்கும்போது ஜெயக்குமார் என்ற மாணவன் எங்கள் வகுப்பில் வந்து சேர்கிறான். கண்ணாடி அணிந்திருக்கிறான். எனக்குப் பின் பெஞ்சில் அமர்கிறான். தேர்வில் அதுவரை முதல் ரேங்க் எடுக்கும் நான், இரண்டாவது ரேங்க் எடுக்கிறேன். அவன் முதல் ரேங்க். எனக்கு அவனை மிகப் பிடித்துப் போகிறது. நட்பாகிறேன். அவனும்.

எட்டாவதில் இருவரும் ஒரே பெஞ்ச். தினமும் அவன் வீட்டிற்குப் போனபிறகுதான் என் வீட்டிற்குப் போகிறேன். ஒவ்வொரு நாள் அவன் என் வீட்டுக்கு வந்து விட்டுச் செல்வான். அவன் என் வீட்டுக்கு வரும்போதோ, நான் அவன் வீட்டுக்குச் செல்லும்போதோ ஒன்று நடக்கும். வீடுவரை வந்து பையை வீட்டில் விட்டெறிந்துவிட்டு, வீட்டின் முன் நின்று இருவரும் பேச ஆரம்பிப்போம். ஏழு மணி - இருட்டு கட்டியபிறகு அம்மா வந்து திட்டிய பிறகுதான் அவரவர்கள் வீட்டிற்கு ஓடுவோம். ஒன்றுமில்லாமல் அப்படி என்ன பேசினேன் என்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாய் இருக்கிறது.

பள்ளிக்கு வரும்போதும், போகும்போதும், இடைவேளைகளில் என்று எப்போதுமே ஒன்றாகத் திரிந்தோம். எல்லா ஆசிரியர்களுக்கும் எங்கள் நட்பு பிரசித்தமாக இருந்தது. எட்டாவது முடிகிறவரைதான் இது.

ஒன்பதாவது வகுப்பில் சென்று அமரும்போது நான் வழக்கம்போல முதல் பெஞ்சில் அமர, அவன் எனக்குப் பின் ஒரு பெஞ்ச் தள்ளி மூன்றாவதில் வேறு ஒரு நண்பனோடு அமர்ந்தான். கேட்டதற்கு ‘இல்லடா இங்கயே இருக்கேன்’ என்றான். அவனோடு உட்கார்ந்திருந்தவனும் எங்கள் நண்பன்தான். பெயர்கூட நினைவில் இல்லை. அவன் ஒரு மாதிரி என்னைப் பார்த்து புன்னகைத்தான். உன் நட்பை நான் வாங்கிவிட்டேன் என்பதாய் இருந்தது அந்தப் புன்னகை. என்ன எதற்கு என்றே புரியாமல் நிராகரிக்கப்பட்டதன் வலியை அன்றைக்கு உணர்ந்தேன். இரண்டொரு சப்ஜெக்ட் முடிந்தபிறகு கணக்கு பாடம் எடுக்க EPK Sir எனப்படும் கிருஷ்ணன் சார் வந்தார். என்னைப் பார்த்த கண்களால் அவனைத் தேடினார்.

‘ஜெய் எங்கடா..’ என்றவர் அவனைப் பார்த்து ‘ஏன் அங்கபோய் உட்கார்ந்திருக்க?’ என்றார். அவனோடு இருந்த அவனின் புதிய நண்பன் ‘இல்ல சார்.. அவன் இங்கயே உட்கார்ந்துக்கறனாம்’ என்றான். ஈபிகே சார் அவனை முறைத்து அமரவைத்து ‘ஜெய் என்னாச்சுடா’ என்றான். அவன் ‘ஒண்ணுமில்ல சார்.. இங்கயே உட்கார்றேன்’ என்றான். அவர் என்னை எழுப்பி ‘என்னாச்சு கிருஷ்ணா’ என்றார். ‘தெரியல சார்..’ என்ற நான் சடக்கென்று அழுதுவிட்டேன். ‘ரெண்டு பேருக்குள்ளயும் ஏதாவது சண்டையா’ என்றார். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்’ என்றான் ஜெய். நானும். ‘சரி...’ என்று அந்தப் பிரச்சினையை விட்ட அவர் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

அவர் பிரியட் முடிந்ததும் என்னை அழைத்தார். ‘விடுப்பா.. அவன் பேசலைன்னா என்கிட்ட சொல்லு’ என்றார். அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு பயமாகப் போய்விட்டது. ஒருவேளை பேசாமல் போய்விடுவானோ. பெஞ்ச்தானே மாறி உட்கார்ந்திருக்கிறான்.. என்று நினைத்தேன். ஆனால் பயந்தமாதிரியே உணவு இடைவேளையில் என்னோடு வரவே இல்லை. நான் எதுவோ கேட்க வேண்டா வெறுப்பாய் பதில் சொல்லிவிட்டுப் போனான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

அன்றைக்கு மாலை பள்ளிவிட்டதும் அவன் அவசர அவசரமாக வெளியேற, ‘என்னாச்சுடா..’ என்று கேட்டபடியே போனேன். ‘போடா எங்கிட்ட பேசாத’ என்று மட்டும் சொல்லிவிட்டு போய்விட்டான்.

அடுத்த நாள், அடுத்த நாள் என்று இரண்டொரு நாட்கள் அவன் என்னிடம் பேசவே இல்லை. எதற்கென்றே தெரியவில்லை. ஒருவாரம் கழித்து சயின்ஸ் வாத்தியார் என்னையும் அவனையும் வகுப்பில் அழைத்தார். ‘ஒரு வாரமா பார்க்கறேன்... உங்க ரெண்டு பேருக்குள்ளயும் என்னடா பிரச்சினை?.. நல்லா ஃப்ரெண்ட்ஸாத் தானே இருந்தீங்க?’ என்றார். எங்கள் இருவருக்குமே கால் நடுங்க ஆரம்பித்தது. காரணம் அவர் ஒரு அதிரடி வாத்தியார்.

நான் ‘எனக்கொண்ணுமில்லை சார்.. அவன் என்னான்னே தெரியல என்கிட்ட சரியா பேசறதில்ல’ என்றேன். அவன் கொஞ்ச நேரத்துக்கு எதுவம் பதில் சொல்லவே இல்லை. பிறகு அவர் ஒரு அதட்டல்போடவே ‘ஃபர்ஸ்ட் நாள் சும்மாதான் பெஞ்ச் மாறி உட்கார்ந்தேன். ஈபிகே சார்கிட்ட என்னமோ சொல்லிட்டான் இவன்.. அவர் வந்து சத்தம் போட்டாரு.. அதுனால இவனை எனக்குப் பிடிக்கல’ என்றான்.

சயின்ஸ் மாஸ்டர் உடனே ஒரு மாணவனை அழைத்து பக்கத்து வகுப்பில் இருந்த ஈபிகே சாரை வரச் சொன்னார். அவர் வந்ததும் விஷயத்தைக் கேட்டு ஜெய்க்குமாரை முறைத்து ‘அவன் ஒண்ணும் என்கிட்ட சொல்லலடா.. நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாருக்கும் தெரியும். மாறி மாறி ஃபர்ஸ்ட், செகண்ட்னு வாங்குவீங்க.. ஒண்ணாவே சுத்துவீங்கன்னு நாந்தான் கேட்டேன்’ என்றவர் ‘அன்னைக்கு எங்கடா சத்தம் போட்டேன்? இவன் அழுதானேன்னு வெளில கூட்டீட்டுப் போய் சரியாப் போய்டும்டா... பேசுவான்’ன்னேன். அவ்ளோதான்” என்றார்.

சயின்ஸ் வாத்தியார் ஜெய்யிடம் ‘அவன்கிட்ட பேசமாட்டியா?’ என்று கேட்க அவன் மிக உறுதியாக ‘மாட்டேன்’ என்று தலையசைத்தான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘கிருஷ்ணாவுக்கு சப்போர்ட் பண்றீங்கள்ல.. என்ன ஆனாலும் அவன்ட்ட நான் பேசப்போறதில்ல’ என்ற முடிவில் அவன் இருந்திருக்க வேண்டும்.

பிறகு இருவருமாக ஏதோ முடிவு செய்தவர்களாய் ‘ரெண்டு பேரும் கையைக் கோர்த்துட்டு க்ளாஸுக்கு வெளில மண்டி போட்டு நில்லுங்க. ரெண்டு பேரும் பேசிக்குவோம்னு சொன்னப்பறம்தான் உள்ள வரணும்’ என்றார்கள். அப்படியே நின்றோம். கிட்டத்தட்ட மூன்று நான்கு மணிநேரம். மதிய உணவு இடைவேளை முடிந்து வந்தும் நின்றோம். அவன் அசையவே இல்லை.

திடீரென அந்த வழியே வந்த ஹெட்மாஸ்டர் என்ன ஏது என்று கேட்டு ‘என்னமோ பண்ணீட்டு போறாங்க.. நமக்கென்ன சார்’ என்று சயின்ஸ் மாஸ்டரிம் பேசி எங்களை உள்ளே அனுப்பினார்.

அதன்பிறகு அவன் என்னிடம் பேசவே இல்லை. அவன் அம்மாவை சந்தித்தபோது அவன் அப்படித்தாம்ப்பா.. நீ எப்பவும் போல வீட்டுக்கு வா’ என்றார். முழு ஆண்டுத் தேர்வுக்கு ஒரு மாதம் முன்பாக பேசத் தொடங்கினான். ஆனாலும் முந்தைய பிடிப்பு எனக்கோ, அவனுக்கோ இருக்கவில்லை. பத்தாவதில் இருவரும் வேறு வேறு செக்‌ஷன். பதினொன்றாவதில் அவன் ஆங்கில மீடியம் மாற, அந்த நட்பு புதுப்பிக்கப்பட வாய்ப்பே இருக்கவில்லை.

பதினொன்றாவது அரையாண்டு முடிந்து அவன் பள்ளிக்கு வரவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் சொந்த ஊரில் அவன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. அவன் வகுப்பு மாணவர்கள் எல்லாரும் போய்ப் பார்ப்பதற்காக புறப்பட்டனர்.

ஈபிகே சார் என்னை அழைத்தார். ‘போடா.. நீயும் போய்ட்டு வா’ என்றார். மிக உறுதியாக மறுத்தேன் நான்.

கடைசிவரை அவன் ஏன் என்னிடமிருந்து விலகி இருந்தான் என்பதற்கான விடை கிடைக்காமலே இருந்தது. இன்று வரை நட்புலகில் வெவ்வேறு விதமான நிராகரிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரே வித்தியாசம் - இப்போதெல்லாம் விடை தெரிகிறது.

.

43 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

நிராகரித்ததன் காரணம் என்னவாக இருந்தாலும், நிராகரிக்கப் பட்டதன் வலியை நன்றாகவே உணர முடிகிறது!

ஒரு எல்லை வரை கூடப் பயணம் வருகிறவர்கள், ஏதோ ஒரு தருணத்தில் வேறு வேறு பாதைகளில் பிரிந்து பயணத்தைத் தொடர்வது இயல்புதான்!

பாதையெல்லாம் மாறி வரும்! பயணம் முடிந்துவிடும்!
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்!

இது கண்ணதாசன் அனுபவித்துச் சொன்னது!

Sri said...

இதுவும் கடந்து போகும்....வேறு என்ன சொல்ல?


-Srini

அமுதா கிருஷ்ணா said...

என்ன காரணம் என்று தெரியாமல் நிராகரிக்கப்படுவது மிகுந்த வலியினை ஏற்படுத்துகிறது.ஜெய் இறந்தது நிஜமாவே வலிக்கிறது பரிசல்.

தராசு said...

இது நிராகரித்தலின் வலியா, இல்லை இல்லை நிராகரிப்பின் வலியா?????

rathinamuthu said...

மிகவும் நன்றாக இருந்தது.

பரிசல்காரன் said...

@ தராசு

எழுதி, பப்ளிஷ் பண்ணப்பறம் இந்த டவுட்டு வந்துச்சு ஜி. விட்டுட்டேன்!

Vijayashankar said...

நிராகரிப்புகள் எந்த வயதிலும் வரும், போகும்.... வலி நிரந்தரம் தான்!

துளசி கோபால் said...

நிராகரிப்பின் வலியை உணர்ந்திருக்கேன்:-(((((

சுரேகா.. said...

நீங்கள் சொல்வது சரிதான்...! :(

சிநேகிதன் அக்பர் said...

புரிதல் ஆளாளுக்கு வித்தியாசப்படும். வலியை உணரச்செய்துவிட்டீர்கள் பாஸ்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தேர்வில் அதுவரை முதல் ரேங்க் எடுக்கும் நான், இரண்டாவது ரேங்க் எடுக்கிறேன். அவன் முதல் ரேங்க். எனக்கு அவனை மிகப் பிடித்துப் போகிறது. நட்பாகிறேன். அவனும்.//
இதுவே நீங்கள் நல்ல மனம் படைத்தவர் என்பதை சொல்லி விடுகிறது. இந்த இடத்தில் பொறாமை தான் பேயாட்டம் போடும். நல்ல நட்புகள் பல இடத்தில் பலரது கண்களை உறுத்தும். வெளிப்படையாய் பேசிக் கொண்டால் இது சரி ஆகும். இருவரில் ஒருவர் மூடி மறைத்தால் இப்படித்தான்.
நல்ல இருக்கீங்களா பரிசல். ரொம்ப நாள் ஆச்சே?

நட்புடன் ஜமால் said...

அவர் இறந்தது ஏனோ மனசை பிசைந்துவிட்டது

நிராகரிப்பின் வலி - ரொம்பவே இருக்கும்

பிரதீபா said...

நட்புல சண்டை வர்றது சகஜம் தானே, கடசீல சரியாப்போயிருக்கும்ன்னு பாத்தா...... அந்த நண்பன் இறந்து போனது எதிர்பாக்கலைங்க.

நீங்க first rank எடுக்கக்கறவரா? அவ்வ்வ்வவ்....

M.G.ரவிக்குமார்™..., said...

ஏற்கனவே வாய்க்காத் தகராறு நடந்துக்கிட்ருக்கு!......இப்ப இந்த பதிவு போட ஏதும் காரணம் இருக்கா?.....

விக்னேஷ்வரி said...

மே மாசம் வெகேஷன் முடிஞ்சு பதிவுப் பக்கம் வந்தாச்சா...

மின்னுது மின்னல் said...

உண்மைதான் !!

சரியாகும் !!

ஜெய் said...

வலியை அப்படியே புரிய வச்சுருக்கீங்க...

// நேசன்..., said...
ஏற்கனவே வாய்க்காத் தகராறு நடந்துக்கிட்ருக்கு!......இப்ப இந்த பதிவு போட ஏதும் காரணம் இருக்கா?.... //
என்ன காரணம் இருக்கா??

Thamira said...

ஒரு சின்ன வடை தரலைங்கிறதுக்காக இம்மாம் பெரிய நினைவோடை எழுதியிருக்கவேண்டாம். அயுவக்கூடாது.. கண்ணத்தொடச்சுக்கோங்க.. ஆங் அப்பிடித்தான்.! :-))

Thamira said...

ஃபாலோ அப்பு கமெண்டு.!

rathinamuthu said...

வழக்கம் போல் இந்தப் பதிவிலும் பள்ளிப் பருவத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவமே தங்களுக்கும். மிகவும் வியப்பாக இருக்கிறது. ஒருவேளை எல்லோருக்கும் இம்மாதிரி தான் தங்கள் இளம் வயதில் இருந்திருக்குமோ? தாங்கள் அதனை சுவையாக எழுதுகிறீர்கள்.

Vijay G S said...

Romba nalla post. ellaraarudaya vaazhvilum nadakkum ondru.

ராமலக்ஷ்மி said...

இதுபோலவே எனக்கும் அனுபவம் உண்டு. 3ஆம் வகுப்பிலிருந்து 7 வரை ரொம்ப நட்பாய் இருந்து எட்டாவதில் வேறு செக்‌ஷன் போட்ட போது கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சு நின்று, எதிர்ப் படுகையில் புன்னகைப்பதும் முடிந்து,ஒன்பது பத்தாவதில் மறுபடி ஒரே செக்‌ஷன் ஆன போது பேசவுமில்லை. பகையுமில்லை. +2வில் வேறு க்ருப் ஆச்சு. பின்னர் எவ்வளவோ (இப்போ வரை) யோசித்தும் அதற்கு பதிலும் கிடைக்கவில்லை.

உங்கள் நண்பர் மறைவு வருத்தம் தருகிறது.

iniyavan said...

பரிசல்,

மீண்டும் எழுத வந்தமைக்கு நன்றி.

எனக்கும் மனதில் வலியை உண்டாக்கிய பதிவு.

அப்புறம் இன்னொரு விசயம், ஒன்பதாவது வரை பர்ஸ்ட் ரேங்கா?

Joseph said...

நிராகரித்தலின் வலி- காதலை விட நட்பில் அதிகம்.

Cable சங்கர் said...

//அப்புறம் இன்னொரு விசயம், ஒன்பதாவது வரை பர்ஸ்ட் ரேங்கா?
//

அவருதான் ஏதோ ஒரு ப்ளோல எழுத்திட்டாருன்னா அதையெல்லாம் நம்புறதா..:)

a said...

பரிசல்,

வலியை வலிய பதிவு செய்து இருக்கிறீர்கள்..

sriram said...

இப்போ இதை சொல்ல வேண்டிய காரணம் என்ன கிருஷ்ணா??

புது எண் கிடைத்தது, இன்றோ நாளையோ தொலை பேசுகிறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

மேவி... said...

நிராகரிப்புகளோடு தான் நான் வளர்ந்தேன், அதனால் இப்பொழுதெல்லாம் எதுவும் வலி தருவதில்லை ........

பதிவு நல்ல இருக்கு

Kumky said...

இன்று வரை நட்புலகில் வெவ்வேறு விதமான நிராகரிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்...

யாரு...நீங்க...சரி.

Kumky said...

ஹைய்யா.,

பின்னூட்ட பொட்டி தொறந்திருக்கு டோய்....

கத்தார் சீனு said...

மாணவ பருவத்தில் இந்த மாதிரி பல விஷயங்கள் எதற்கென்றே புரியாமல் இருந்து விடுகின்றது !!!
அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்.
நல்ல பதிவு...வாழ்த்துக்கள்.....

Mahi_Granny said...

தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சி . படித்து முடித்த பின் நிறையவே .

Mahi_Granny said...

தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சி . படித்து முடித்த பின் நிறையவே .

அண்ணாமலை..!! said...

காலஞ்சென்ற நண்பனுக்கு
ஒரு நல்ல பதிவு பரிசல்!

கொல்லான் said...

//இதுவும் வழக்கமான கொசுவத்திப் பதிவுதான்....//

அல்ல தல.
இது மனசோட மெழுகுவத்திப் பதிவு.

மதன் said...

It reminds my childhood friendship..
very nice post..
i really felt your pain of ignorance..
Keep writing.

வால்பையன் said...

மிகுந்த தாழ்வு மனபான்மை உள்ளவராக இருந்திருக்கிறார்!
ஆசிரியர்களின் அணுகுமுறையில் தவறு இருக்கிறது, இனி இப்படியொரு சம்பவம் நடக்காமல் இருக்கும் நன நம்புகிறேன்!.

நான் படிக்கும் போது யாரிடமும் சண்டையிட்டதில்லை, நட்பு வேறு கருத்து வேறு என்பதில் அப்பவே உறுதியாக இருந்தேன்!

செல்வா said...

Romba nalla irukkuthu anna., nirakarithalin valiyai aalamaaka pathivu seithullerkal..

செல்வா said...

romba nalla irukkuthu na., nirakarithalin valiyai aalamaka pathivu seithulleerkal..

ILA (a) இளா said...

சிபஎபா உங்கள் பதிவை நான் இணைத்திருக்கிறேன்

pudugaithendral said...

எனக்கும் இப்படி நிராகரிக்கப்பட்டதன் வலிகளும் வடுக்களும் நிறைய்ய. ஏன் என்று புரியாததே வலி. உங்க பதிவைப் படிச்சப்ப என் வலிகளும் திரும்ப உணர்ந்தேன்.

கிறிச்சான் said...

விடை தெரியாவிட்டால் வலி அதிகரிக்கும்-உண்மை சார்!!

மதுரைக்காரன் said...

நிராகரிப்பின் வலியை நானும் உணர்ந்திருக்கிறேன் என்பதால் மனதில் வலியை உண்டாக்கிய பதிவு.