Friday, May 23, 2008

கடந்து போன கடித நாட்கள்!

கீழே இருப்பது என் கவிதை அல்ல!

அனைத்துக் கடிதங்களுக்கும்
பதில் எழுதி முடித்த
மேஜை என்னிடமில்லை.
நான் எழுதியதற்குப் பதில்
வரும்வரை
காத்திருக்கவும் அவசியமில்லை.
வந்து பிரித்துப் படிக்காத
ஒரே ஒரு கடிதமும்
எழுதிப் பெட்டியில் இடாத
எத்தனையோ கடிதங்களும்
என் வசம் உண்டு.
தொலையாத நட்சத்திரங்களும்
உதிராத நட்சத்திரங்களுமாகத்தான்
உயரத்தில் இருக்கிறது
வானம்.
-கல்யாண்ஜி (‘முன்பின்’-தொகுப்பிலிருந்து)

கடிதம் எழுதும் பழக்கம் எங்கே போனது? இப்போது யாரும் அவ்வளவாக கடிதங்கள் எழுதுவதில்லை.
நான் பல வருடங்களுக்கு முன் பத்திரிகைகளில் படைப்புகள் எழுதி அனுப்பிக்கொண்டிருந்த நேரத்தில்
எனக்கு நிறைய கடிதங்கள் வந்து கொண்டிருந்தது. பதினோரு மணிக்கு கிருஷ்ணாபுரம் (உடுமலைப்பேட்டை) தபால் நிலையத்தில் தபால் பை வரும்.அவர்கள் அதை sorting செய்து எடுத்து வர பன்னிரெண்டு, ஒரு மணி ஆகி விடும் என்பதால் நானே போய் அவர்களோடு பேச்சுக் கொடுத்து நின்றபடியே எனக்கான கடிதங்களை முன்கூட்டியே வாங்கி வருவேன். எனக்கு வந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு சைக்கிளில் வரும்போது, என்னை போஸ்ட்மேன் என்று நினைத்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.. அவ்வளவு கடிதங்கள் வந்து கொண்டிருந்தது. (அதில் பாதிக்கு மேல் திரும்பி வரும் படைப்புகளாகத்தான் இருக்கும்!)

நான் அதிகமாக கடிதம் எழுதியது (past tense!!!) என் ப்ரியமான எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்குத்தான்! சுபா, ராஜேஷ்குமாருக்கும் எழுதியதுண்டு. சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரின் அதிகப் படைப்புகள் என் அலமாரியில் உள்ளதெனினும், அவர்களுக்கு எழுதியதேயில்லை. ஏதோ ஒரு கட்டுரையில் "உண்மையான வாசகர்கள் கடிதமெழுதுகிற ரகமில்லை" என்று சுஜாதா எழுதியிருந்ததும் ஒரு காரணம்.

பட்டுக்கோட்டை பிரபாகர் & சுபா என் கடிதங்களுக்கு தவறாமல் பதிலெழுதுவார்கள். அதிலும் PKP எல்லா கடிதத்திற்கும் பதிலெழுதி விடுவார்! இன்றளவும், என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஒவ்வொரு புத்தாண்டிற்கும் வாழ்த்து அனுப்பிக்கொண்டிருக்கிறார்! மகளது திருமணத்திற்கு அழைப்பனுப்பினார். அவரது ஒரு கடிதம்தான் என்னை கதை, கவிதைகள் எழுத வைத்தது! என் எழுத்துக்கு என்ன பாராட்டு கிடைத்தாலும் அது PKP ஒருவருக்குத்தான் சமர்ப்பணம்.

1992-ல் பி.கே.பி & சுபா-வின் உங்கள் ஜூனியர் மாத இதழின் ஆசிரியர் குழுவின் பனிரெண்டு பேரில் ஒருவனாக இடம்பெற்று இதழ் தயாரித்தோம். அப்போது என்னோடு ஒருவனாக இருந்த ‘சேலம் கண்ணனு’க்குத்தான் - நண்பர்களில்- அதிகமாக கடிதம் எழுதியிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒருகாவியம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.. ஆனால் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும் அந்த கடிதங்களை ஒரு முறை பார்த்து விட எனக்கு ஆசை இருக்கிறது! அவனும் எனக்கு நிறைய கடிதங்களெழுதியிருக்கிறான். ஆனால் இப்போது..? தொடர்பேயில்லை!! எங்கேயிருக்கிறாய் கண்ணா?

இந்த பதிவு எழுதுவதற்காக என் பழைய கடிதங்கள் அடங்கிய பை ஒன்றை தேடி எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. (உங்கப்பாவுக்கு வேற வேலையே இல்ல.. என்ற உமாவின் வசவுகளோடு!) என் தூக்கத்தை கெடுத்த ஒரு கடன்காரனின் கடிதம் உட்பட எத்தனை வித விதமான கடிதங்கள்! பலவருடங்களுக்கு முன், ஒரு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி உடுமலைப்பேட்டை போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.. நான் ஒழுங்காக வீட்டில் பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பேன்.. இல்லை என்றால் என்னை எப்போது வேண்டுமானாலும் அரெஸ்ட் செய்து கொள்ளலாம் என்று! (எப்படி எல்லாம் ஏமாத்தி இருக்காங்கப்பா!) என்னை சிறை பிடித்து செல்ல, நான் ஆகஸ்ட் பதினைந்து அன்று கடிதம் எழுதி இருக்கிறேன்! அதே போல ஒரு பத்திரிகை ஒன்றுக்கு நான் எழுதிய விமர்சனம் சிறந்ததாக தேர்வாகி, முடிந்தால் அன்னை தெரசா அல்லது பாக்கியராஜை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அந்த பத்திரிகை அலுவலகத்திலிருந்து வந்த கடிதம்.. (என் ராசி.. அந்த சந்திப்பு நடப்பதற்குள், பத்திரிகை ஆசிரியருக்கும், பதிப்பாளருக்கும் கருத்து வேற்றுமை வந்து இழுத்து மூடி விட்டார்கள்!) இப்படி பலப்பல ..

கடிதங்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்களில் என்னை மிக மிக கவர்ந்தது.. கல்யாண்ஜி-யின் "எல்லோர்க்கும் அன்புடன்" கடிதத் தொகுப்பு தான். எப்போது நான் சோர்வடைந்தாலும் எடுத்துப் படிக்கும் புத்தகங்களில் அதுவும் ஒன்று. அதன் பின்..கு.அழகிரிசாமி கி.ராவுக்கு எழுதிய கடிதங்கள், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள் (இதம் தந்த வரிகள்), புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் (கமலாவுக்கு)

கடிதப் பழக்கம் குறைந்ததை குறித்து விவாதித்து நாங்கள் எங்கள் பரிசல் குழுவின் சார்பாக எங்களுக்குள்ளேயே கடிதம் எழுதிக்கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்தோம்..நான் குழுவின் மற்ற நண்பர்களுக்கு (செந்தில், கனலி,வேடசந்தூர் ரவி, சௌந்தர், மகேஷ், கிரீஷ்) ஒவ்வொரு கடிதம் எழுத, அவர்கள் எனக்கு ஒரே ஒரு கடிதம் எழுத அதுவும் நின்று போனது!

இந்தப் பதிவை இப்போது எழுதக் காரணம், அந்தக் கடிதங்கள் கொடுத்த அண்மையை இந்த வலைப் பதிவின் கமெண்டுகள் எனக்குத் தருகின்றன என்னும் உண்மையை ஒத்துக்கொள்ளத்தான்! rapp, ambi, illatharasi, delphine, களப்பிரர்,
கயல்விழி முத்துலட்சுமி என்று என்னை அன்பால் நனைத்த முகம் தெரியா நல் உள்ளங்களுக்கு என்ன சொல்லி அன்பை வெளிப்படுத்த?? (முதன் முதலில் எனக்கு பின்னூட்டமிட்ட நண்பன் ஜெயசக்திவேல் நன்றி சொன்னால் உதைப்பான் என்பதால்-சாரி!)
கவிஞர் சோமா வனதேவதா சொல்லியிருப்பது போல்..
"இவை எதுவும் இல்லாமலும்
ஒரு மனசு அறியாதா
தன்னைப் போல் இன்னொன்றை!"

6 comments:

Jaisakthivel said...

தாங்கள் கடிதம் பற்றி எழுதியுள்ள கட்டுரை அருமை. கடைசியில் எனது பெயரையும் இணைத்ததோடு நில்லாமல் அதற்கு தொடுப்பும் கொடுத்ததன் பயனாக எனது பக்கதை ஒரு சிலர் கிலிக்கிச் சென்றனர். தொடரட்டும் உங்களின் பணி. அன்புடன் தங்க ஜெய்சக்திவேல், சென்னை.

பரிசல்காரன் said...

நன்றி JSV..!

Venkatramanan said...

//என் தூக்கத்தை கெடுத்த ஒரு கடன்காரனின் கடிதம் உட்பட // இவர்தானே அந்த பேக்கரி கடைக்காரரு?! (நீங்க கவித்துவமா எழுதின வரிகளை உங்களுக்கே உதாரணம் காட்டின ஆள்?!)

பரிசல்காரன் said...

ஆமா வெங்கட்ஜி!

கரெக்டா சொல்லீட்டீங்களே!

சபாஷ்!

ராமலக்ஷ்மி said...

காணாமல் போன...என்றதுமே எனக்கும் நினைவுக்கு வந்தது இந்தக் கடிதக் கலைதான். எனது தமிழை வளர்த்ததில் பெரும் பங்கு கடிதங்களுக்கு உண்டு. இது பற்றி சின்னக் குறிப்பாக எனது திண்ணைப் பதிவின் பின்னூட்டமொன்றில் குறிப்பிட்டிருந்தாலும் முழுப் பதிவொன்று எழுதும் எண்ணம் உண்டு. அது போல டைரிக் கவிதைகள் பல இன்னும் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அவற்றைப் படிப்பது அந்த நாட்களுக்கே இட்டுச் செல்லும். உங்கள் டைரிகள் எரிந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

SK said...

கொஞ்ச நாளைக்கு முன் தான் கடுதாசிங்கர தலைப்புல ஒரு பதிவு எழுதினேன்.

நீங்க உங்க பாணில விலாவாரியா கலக்கி இருக்கீங்க. வாழ்க.