Saturday, May 31, 2008

சமூகக் கடமை

"அண்ணா.. வாங்கண்ணா.. என்ன சொல்லாமக் கொள்ளாம திடீர்னு?"

"என் பொண்ணு காலேஜ் அட்மிஷன் விஷயமா, ட்ரஷரில வேலை பாக்கற ராஜனைப் பார்க்க வந்தேன். உன் ஆஃபீஸ் பக்கம்தானேன்னு, அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்"

"ஸ்ரீராம் எப்படி இருக்கான்?"

"நல்லா இருக்கான் கிருஷ்ணா. அவன்தான் நீ முந்தி மாதிரி நிறைய எழுத ஆரம்பிச்சுட்ட, ஆனா இப்போ வலையுலகத்துல-ன்னு ரெண்டு நாள் முன்னாடி வீட்ல ப்ரொளஸிங் பண்ணிகிட்டு இருக்கறப்ப கூப்ட்டு காமிச்சான்"

"நீங்க பாத்தீங்களாண்ணா.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மொதல்லயெல்லாம் பத்திரிகைகள்ல என் கதை, கவிதை-ன்னு வர்றப்ப உங்ககிட்டேர்ந்து என்ன விமர்சனம் வரும்னு எதிர்பார்த்துட்டிருப்பேன். என்னென்ன விஷயங்களையெல்லாம் நாம விவாதம் பண்ணியிருப்போம்!. என் blog எப்படி இருந்துச்சுண்ணா?"

"............"

"ஏண்ணா ஒண்ணுமே சொல்ல மாட்டீங்கறீங்க?"

"சங்கடப்படமாட்டியே?"

"சொல்லுங்கண்ணா.."

"நான் உன்கிட்ட எதிர்பார்க்கறது இது இல்லப்பா. நம்மெல்லாம் வேற மாதிரி இருக்கணும்"

"புரியலண்ணா"

"இல்ல கிருஷ்ணா.. சும்மா காமெடியா நாலு மேட்டர் எழுதிப் போடறதுல என்ன சமூக அக்கறை இருக்க முடியும்? நமக்குன்னு சில கடமைகள் இருக்குன்னு நம்பறேன் நான். அதுலயிருந்து தவறக்கூடாதுன்னும் நினைக்கறேன். நம்மளை சுத்தி எவ்வளவு தப்பு விஷயங்கள் நடக்குது? அதையெல்லாம் யாரு தட்டிக் கேக்கறது? அவனுக்கு தானே நடக்குது-ன்னு வேடிக்கை பார்க்கறது என்ன நியாயம்? எல்லாரும் அடுத்தவனை ஏமாத்தறது, பழிவாங்கறது ன்னு உலகம் எவ்ளோ சுயநலமா மாறீட்டு வருது தெரியுமா? இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறைக்கு நாம விட்டுட்டுப் போற செய்தி என்னன்னு நம்ம மனசு உறுத்தாதா? இது சரியா? இதை மாத்தப்போறது யாரு? நமக்கு அந்தப் பொறுப்பு இல்லையா?"

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலண்ணா.. மாத்திக்க முயற்சி பண்றேன். என்னை சுத்தி ஏதாவது தப்பு நடந்தா எழுதறேன்"

"அது உன் இஷ்டம். என் மனசுல பட்டதை சொன்னேன்.. கஷ்டமா நெனைச்சன்னா..."

"ச்சே.. அப்படியெல்லாம் இல்லண்ணா.."

"சரி விடு.. ஐயையோ.. மணி பதினொண்ணு ஆச்சா?"

"என்னது திடீர்னு கிளம்பறீங்க? சாப்பிட ஏதாவது வாங்கீட்டு வரச் சொல்றேண்ணா"

"இல்ல கிருஷ்ணா.. என் பொண்ணு லலிதா காலேஜ் அட்மிஷன் விஷயமா சுத்திகிட்டிருக்கேன். மார்க் கொஞ்சம் கம்மியா வாங்கித் தொலைச்சுட்டா. ஒரே சீட் தான் இருக்குங்கறாங்க. இன்னொரு பையன் இவளைவிட அதிக மார்க்கோட இருக்கான். அவனுக்குத் தான் கிடைக்கும்ங்கறாங்க. கடைசியில யாரு அந்தப் பையன்னு பாத்தா, என் ஆபீஸ் பியூன் கோவிந்தன் பையன்! லலிதாக்கு கிடைக்கலன்னாலும், அந்தப்பையனுக்கு கிடைச்சுட்டா அப்புறம் நான் ஆபீஸ்ல தலை காட்ட முடியாது! ட்ரஷரில வேலை பாக்கற ராஜனுக்கு அந்த காலேஜ் செகரட்டரி மச்சினனாம். மூணு நாளா அலைஞ்சு ராஜனை ‘கரெக்ட்’ பண்ணி வெச்சிருக்கேன். இப்போ ரெண்டு பேருமா செகரட்டரி வீட்டுக்குப் போகணும். நேரமாச்சு. வரட்டா.."

6 comments:

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

உலகமே இப்படித்தான். எல்லாரும் தனிமனித ஒழுக்கத்தோடு இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

chandru / RVC said...

நல்லா இருக்குங்க

Thambi GIRISH said...

படிக்கிறது ராமாயணம் இடிகறது பெருமாள் கோயில்.

ஏன் ஒன்லி ஒன்லி கதை தானா?

Anonymous said...

வா.மு.கோமுவின் கள்ளி நாவல் படித்திருக்கிரீர்களா?

கீழே உள்ளது புத்தகத்தின் அட்டைக் குறிப்பு.

வா.மு.கோமுவின் எழுத்துக்கள் குதூகலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வும் மதீப்பீடுகளும் கனவுகளும் வெகு இயல்பாக தோற்றம் கொள்கின்றன.மத்தியதர கலாச்சார மதீப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, வா.மு.கோமு தமிழ் வாழ்வின் அறியப்படாத யதார்த்தம் ஒன்றினை இந்நாவலில் சித்தரிக்கிறார்.இந்த ய‌தார்த்தம் சிலநேரம் அதிர்ச்சி அளிப்பது.சில நேரம் நம் அந்தரங்க முகத்தை திறந்து காட்டுவது;

ஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது.

முழுவதும் உண்மை.

படித்துவிட்டு உங்கள் வலைப்பூ வழியே ஒரு மதிப்புரை எழுதுங்களேன்.

சென்ஷி said...

செய்வன திருந்த செய் என்பதற்கு சரியான உவமான கதை :))

ராமலக்ஷ்மி said...

Thambi GIRISH said...
//படிக்கிறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோயில்.//

சரிதான். தனக்குத் தனக்குன்னு வரும்போது...எல்லாம் தலைகீழாயிடுது.

கதையில்...// ஒரே சீட் தான் இருக்குங்கறாங்க. இன்னொரு பையன் இவளைவிட அதிக மார்க்கோட இருக்கான். அவனுக்குத் தான் கிடைக்கும்ங்கறாங்க. கடைசியில யாரு அந்தப் பையன்னு பாத்தா, என் ஆபீஸ் பியூன் கோவிந்தன் பையன்! //

பாவம் கோவிந்தனின் பையன். இப்படி எண்ணற்றக் கோவிந்தன்களின் மகன்களாய், லலிதாக்களிடம் வாய்ப்பை இழப்பவர்களின் (கேள்விக்குறியான) வருங்காலங்களைப் பற்றித்தான் எனது 'கல்விச்சந்தை'யில் வருந்தியிருக்கிறேன். காலம் அனுமதிக்கையில் காண்க!

http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_29.html