Wednesday, May 21, 2008

பி.சி.ஸ்ரீராமுடன் ஒரு உரையாடல்

ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது இது..
வழக்கம் போல மெயில்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மெயில்களுக்கு நடுவே (சரி.. சரி.. சும்மாதான் சொன்னேன்..உடனே கோவிச்சுட்டு அடுத்த blog-குக்கு போயிடறதா..?) ஒரு மெயில் வித்தியாசமாகத் தென்படவே திறந்தேன். அடுத்த நிமிடம் சந்தோஷத்தில் நிஜமாகவே குதித்தேன் என்றுதான் சொல்லவேண்டும். பி.சி.ஸ்ரீராம் அலுவகத்திலிருந்து வந்திருந்தது அந்த மெயில்! சார்(பி.சி.ஸ்ரீராம் சார்!) என்னிடம் பேச விரும்புவதாகச் சொல்லி, ஒரு தொலைபேசி எண்ணையும் குடுத்திருந்தார்கள். உடனேயே தொடர்பு கொண்டேன். ஃபோனை எடுத்தவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு மெயில் விஷயத்தை சொன்ன போது சார் ஆஃபீசில் இல்லை என்றும் சரியாக நான்கு மணிக்கு தொடர்பு கொள்ளவும் சொன்னார்கள். நான்கு மணிவரை நிலைகொள்ளாமல் இருந்து விட்டு, தொடர்புகொண்டபோது ஒரிருவருக்குப் பிறகு சார் லைனில் வந்தார்..

"சார்.. வணக்கம். நான் கிருஷ்ணகுமார் பேசறேன் சார்" - கிட்டத்தட்ட எழுந்து நின்று பேசிக்கொண்டிருந்தேன்.

"வணக்கம். பசங்க உங்க blog பத்தி சொன்னாங்க.. பார்த்தேன்.. அதுல போட்டிருக்கற ஃபோட்டோஸ் எல்லாம் யாரு எடுத்தது?" -ஆஹா.. பி.சி. ஸ்ரீராம் சார் இந்தச் சிறியேனது blog-ஐப் பார்த்தாரா!

"சார்.. எல்லாம் நான் எடுத்ததுதான் சார்.. ஏன் சார்.."-ஒருவித பயத்துடனே கேட்டேன்.

"நோ..நோ.. நத்திங். நல்லாயிருந்தது! ஆமா.. நீங்க எந்த ஊரு?"

"உடுமலைப்பேட்டை சார். இப்போ திருப்பூர்ல இருக்கேன். நீங்க ஏற்கனவே என்னோட புகைப்படத்தை சிறந்ததா தேர்வு செஞ்சிருக்கீங்க சார்.."

"அப்படியா? எப்போ?"

"ஜூனியர் விகடன்-ல விஷூவல் டேஸ்ட் வந்தப்போ நான் எடுத்த ஒரு புகைப்படத்தை அந்த மாதத்தோட சிறந்த புகைப்படமா தேர்வு செஞ்சீங்க. ஒரு குழந்தை மேல பார்த்துட்டு இருக்கற மாதிரி.. இருட்டுல எடுத்த ஒரு புகைப்படம்.."
"ஓ.. ஞாபகம் இருக்கு. வெரி குட்! கீப் இட் அப். சென்னை வந்தா பாருங்க" - கடகடவெனச் சொல்லிவிட்டு ஃபோனைத் துண்டித்து விட்டார். எனக்கு தலைகால் புரியவில்லை!

"உங்களுக்கு தலைகால் தெரியாது.. தூக்கத்துல உளறல் வேற.. நேராப் படுங்க"-என்று என் மனைவி திட்டிய போதுதான் உண்மை உறைத்தது! அத்தனையும் கனவா?

"ஆமா.. மணி என்ன?"

"அஞ்சாகப் போகுது. இன்னும் ஒரு அரைமணி நேரம் தூங்குவேன்.. அதையும் கெடுத்துட்டீங்க"

அதிகாலை அஞ்சு மணியா! அதிகாலைல கனவு கண்டா பலிக்கும்-னு சொல்லுவாங்க. அதனால தினமும் தவறாம மெயில் பார்த்துட்டு இருக்கேன். பி.சி.ஸ்ரீராம் இல்லாட்டியும், அவர் சிஷ்யர் கே.வி.ஆனந்த்கிட்டேர்ந்தாவது ஒரு மெயில் வராதா என்ன?

(பின்குறிப்பு: Blog-ல இருக்கற புகைப்படங்களைப் பத்தி பல (Ok..Ok....) சில நண்பர்கள் கேட்டார்கள். அவர்களுக்கு பதில் சொன்ன மாதிரியும் ஆச்சு., உங்களை கொஞ்சம் அறுத்த மாதிரியும் ஆச்சு!)

9 comments:

Jaisakthivel said...

இது கொஞ்ச ஓவரோனு தோனுது, எதுக்கும் அடுத்த தடவ கொஞ்ச யோசிச்சிட்டு எழுதரது நல்லது. (ச்ச்சும்மாங்க.. உண்மையிலேயே அருமையான கற்பனை)- சக்தி, சென்னை

பரிசல்காரன் said...

நன்றி சக்தி! இதைவிட ஓவரா எழுதிருந்தேன்.. எடுக்கு வம்பு, குஷ்பு மாதிரி கோர்ட், கோர்ட்-டா நம்மள அலைய முடியாது-ன்னு கொஞ்சம் எடிட் பண்ணி போட்டேன்! இதுக்கே இப்படியா..!

பரிசல்காரன் said...

நன்றி டெல்பின்!

சின்னப் பையன் said...

:-)))))))))))))))))

ராஜ நடராஜன் said...

இங்கே பி.சி.ராம் கனவு பலிக்கணுமுன்னு வாழ்த்திக்கிறேன்.இல்லையின்னா இருக்கவே இருக்காரு சி.வி.ஆர் கிட்ட வந்தீங்கன்னா வலைத்தளத்திலாயாவது பலிக்க வச்சுருவாரு.மூணு மாசத்துக்கு முன்னால வந்த கனவுக்கு இப்ப வாழ்த்த வேண்டியதாப்போச்சு:)

சென்ஷி said...

உண்மையிலேயே இந்த புகைப்படத்தை இவ்வளவு தாமதமா பார்க்கறதுக்கு வருந்துறேன். நெட் சரியாயில்லைங்கற ஒரு காரணத்த சொல்லலாம்னாலும் உங்க பழைய பதிவுகளில் இதுவும் அழகான பதிவு... :))

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு...

கயல்விழி said...

படிக்கும்போதே ஒரு நிமிடம் உங்களை என்னவெல்லாம் எழுதி கங்க்ராஜுலேட் பண்ணலாம் என்று ஒத்திகை பார்த்தால் கடைசியில் இப்படி ஐஸ் வாட்டர் ஊற்றி விட்டீர்களே :) :)

தோழி said...

Ada enge oorlaya irukkeenga... Kalakkunga.. Romba santhosamunga..