Friday, September 5, 2008

சுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் - திருட்டுக் குறும்படம்!!!

இப்படி ஒரு பதிவை எழுதுவதற்கு கஷ்டமாகத்தான் உள்ளது!

நேற்று சக பதிவர் கேபிள் சங்கரின் பதிவில் ‘தனம்' பட விமர்சனம் இருந்ததைக் கண்டு அவரது பதிவைப் படிக்கப் போனேன்.

சங்கீதா அவ்வளவொன்றும் திறமையைக் 'காட்டி' நடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்... வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.

கவனிக்கும்போது, அவரது ப்ளாக்கின் இடப்பக்கத்தில் ACCIDENT என்றொரு குறும்படத்தைப் போட்டிருந்தார். எனக்கு அதைப் பார்ர்கும் ஆவல் அதிகரிக்கவே, க்ளிக்கிப் பார்த்தேன். என்னுடையது ஒரு வேலைக்காகாத ஸ்லோ கனெக்‌ஷன் ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஓப்பன் ஆனது. விளம்பரமெல்லாம் வந்து, குறும்படம் துவங்கியது. கொஞ்சம் ஓடி, பஃபர் ஆகி, பின் கொஞ்சம் ஓடி.. என்று என் இணையத் தொல்லையூடே தடுமாறி, தடுமாறி ஓடியது.

மொத்தம் 17 சொச்சம் நிமிடங்கள் என்றிருந்த அந்தக் குறும்படம், ஆறேழு நிமிடங்கள் ஓடியதும் எனக்கு படபடப்பு அதிகமானது..

எழுத்தாளர் சுஜாதா எழுதி, 1966ல் குமுதத்தில் வெளிவந்‘சசி காத்திருக்கிறாள்' கதையைப் போலவே இருந்தது அந்தப் படம். என்னால் உட்கார முடியவில்லை. உடனே கிளம்பி, ஸ்பீட் அதிகமான ஒரு ப்ரௌஸிங் செண்டருக்குப் போய் தொடர்ந்து பார்த்தேன்.


அதிர்ச்சியாக இருந்தது!

சுஜாதாவின் கதையை அச்சு அசலாகக் காப்பியடித்திருந்தார்கள்! இந்த லட்சணத்தில் எழுத்தும், இயக்கமும் சங்கர் நாராயணன் என்று வேறு போட்டிருந்தார்கள். நான் திரும்பத் திரும்ப எங்கேயாவது நன்றி: சுஜாதா என்றிருக்கும் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. இல்லை!

நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை. சுஜாதாவின் மீது அளவில்லாத மதிப்பு எனக்கு உண்டு. அது எல்லையற்றது. அவர் எழுதியதில் பத்தோடு பதினொன்று அல்ல இந்தக் கதை. இது அவரது மாஸ்டர் பீஸ். அவர் இந்தக் கதையை எழுதி அனுப்பி, குமுதத்தில் வந்த பிறகு எஸ்.ஏ.பி (குமுதம் நிறுவனர்) அடிக்கடி எழுதுங்கள் என்று தன் கைப்பட எழுதி சுஜாதாவைப் பாராட்டியிருக்கிறார். இதை பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கதையையே இப்ப்டித் திருடியிருக்கிறார்களே என்று மனவேதனையடைந்தேன்!






சரி.. நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேபிள் சங்கருக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டேன். தனம் விமர்சனத்தைப் பற்றி ஒரு வரி எழுதிவிட்டு.. ‘ஒரு சீரியஸான வேண்டுகோள்: நீங்கள் இடப்பக்கம் குடுத்திருக்கும் குறும்படம் சுஜாதாவின் சசி காத்திருக்கிறாள் கதையின் காப்பி. குறைந்தபட்சம் சுஜாதாவுக்கு நன்றியாவது சொல்லச் சொல்லுங்கள்' என்று போட்டுவிட்டு அதை விட்டுவிட்டேன்.

இரவு வந்து பார்த்தால்....

அந்தப் பின்னூட்டம் நீக்கப்பட்டிருக்கிறது!





வலைப்பூவின் இடது பக்கம் அவர் கொடுத்திருந்த அந்தக் குறும்படமும் நீக்கப்பட்டிருந்தது!

என்ன நடக்குது இங்கே?

நான் எவரையும் பழிக்காமல், விமர்சிக்காமல் தோழமையோடேதான் எழுதி, பேசி வருகிறேன். (இல்லையோ?) ஆனால் இதை என்னால் லேசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை!

அந்தக் குறும்படத்தின் பக்கம் இதோ.




கேபிள் சங்கர் ஏன் என் பின்னூட்டத்தையும், அந்தக் குறும்படத்தையும் உடனே நீக்க வேண்டும்?

‘என்ன பண்ண பரிசல்? வர வர இயக்குனர்களுக்கு கதைப் பஞ்சம் போல' என்று ஏதாவது பதில் சொல்லியிருந்தாலோ, அல்லது ஒன்றுமே சொல்லாமலிருந்தாலுமோ நான் பாட்டுக்கு செந்தழல் ரவி சொல்வது போல எதுவுமே பண்ண வேண்டாம் பாஸ் என்று $$$ ###கிட்டுப் போயிருப்பேன்.

ஆனால், இப்போது சந்தேகம் வருகிறதே..

கேபிள் சங்கர்தான் அந்த குறும்படத்தை இயக்கிய சங்கர் நாராயணனா?


அனுமதி வாங்கியிருக்கிறீர்களென்றால், பதில் சொல்லியிருக்கலாமே. என் பின்னூட்டத்தை நீக்கியது ஏன்?


இந்தக் கொடுமையைக் கேட்க யாருமே இல்லையா?

ஒரு படைப்பை அச்சு அசலாகத் திருடுவதும் ,அதற்கு தனது பெயரைப் போட்டுக் கொள்வதும் நியாயமா?

இன்ஸ்பியரேஷன் என்பது வேறு, கதை, நடக்கும் இடம், பாத்திரங்கள் என்பதெல்லாம் ஒரே மாதிரி இருப்பதென்பதும் வேறு.

சுஜாதா இது போன்றவர்களை மன்னிக்கலாம், என்னால் முடியவில்லை!

யாராவது உண்மையக் கண்டறிந்து நடவடிக்கை எடுங்களேன்..

அவியலும், பொரியலும் பின்னே சிக்கன் சிக்ஸ்டி ஃபைவும்

தலைப்பு லக்கிலுக்குக்கு சமர்ப்பணம்!

*************************

நீங்களும் கூட இதே மாதிரி அனுபவம் பெற்றிருக்கக் கூடும். அதாவது நான் எந்தக் கடைக்கு/ஷோரூமுக்கு போனாலும் அந்த கடைக்காரராய் என்னை நினைத்து யாராவது ஒரு வாடிக்கையாளர் என்னை கேள்வி கேட்பார்! 95% இடங்களில் எனக்கு இந்தமாதிரி நடக்கிறது! நேற்று ஒரு செகண்ட்ஸ் டிரஸ் மார்க்கெட் போனபோது ஒரு வாடிக்கையாளர் என்னிடம் சட்டையை எடுத்துத் தரச் சொன்னார். ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட ஒவ்வொரு முறை அவர் சட்டையை தேர்வு செய்யும் போதும், அதை ஹேங்கரிலிருந்து எடுத்துக்காட்ட என்னை அழைத்தார். வெறுத்துப் போய் திட்டலாமா என்று நினைத்தேன். நாலைந்து முறைக்குப் பின் சொன்னார்...

“என் தம்பி யு.கே-ல படிக்கறான் சார். கொஞ்சம் உங்களை மாதிரியே இருப்பான். அதான் அடிக்கடி கூப்பிடணும்ன்னு தோணுது. தப்பா நெனைச்சுக்காதீங்க”

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

************************


இந்த மாதிரி அனுபவங்களில் பெஸ்ட், ஒருமுறை பல்டாக்டரைப் பார்க்கப் போனபோதுதான். பைக்கை நிறுத்திவிட்டு மாடியில் இருக்கும் அவரது க்ளினிக்குக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது அவசர அவசரமாய் பின்னால் வந்த ஒருவர் “டாக்டர்.. நேத்து என் பையனோட வயதுச் சான்றிதழுக்கு வந்தேன். இன்னைக்கு வரச் சொன்னீங்க. இப்ப கூட்டீட்டு வரட்டுங்களா?” என்று கேட்டார். கொஞ்சநேரம் அதை சந்தோஷமாய் கேட்டுவிட்டு அப்புறம்தான் நான் டாக்டரில்லை என்றேன்!

**********************

யெஸ். பாலபாரதிக்கு மணவாழ்த்துச் செய்தி சொல்லச் சொல்லி ஓட்டுப்பெட்டி வெச்சிருந்தேன். நல்லாயிரு தலைவான்னு 48 பேரும் (57%), மாட்டிக்கினியான்னு 29 (34%) பேரும், இனி நிறைய எழுதுவீங்களான்னு 15 (17%) பேரும், எப்ப பார்ட்டின்னு 33 (39%) பேரும் ஓட்டுப் போட்டிருக்காங்க. இதுல மூணாவது அண்ணி கைலதான் இருக்கு. நாலாவதுக்கு அவரே கூப்பிடுவாரு. தலைவா.. நல்லாயிருங்க!

*********************

இன்னொரு ஓட்டுப் பெட்டி வெச்சு, மேல படத்துல இருக்கறது யாருன்னு கேட்டேன். சுபாஷ் சந்திர போஸ்ன்னு 3 (4%) பேரும், சுக்தேவ்ன்னு 34 (48%) பேரும், பகத்சிங்ன்னு 19 (27%) பேரும், மதன்லால் திங்காரான்னு 14 (20%) பேரும் சொல்லியிருக்காங்க. இன்னும் ஒரு நாள் முழுசா இருந்தாலும் வாக்கு நிறுத்தப்படுகிறது. காரணம் வேற ஒண்ணுமில்லை. நானே மூணு நாலு ஓட்டுப் போட்டும் பகத்சிங்கை ஜெயிக்க வைக்க முடியல.  டர்பனெல்லாம் இருக்கேன்னாவது சிங்-ன்னு ஓட்டுப் போட்டிருக்கலாம்!


ஆமாம்.. அது பகத்சிங்! அந்த 19 பேருக்கு நன்றி!

***********************

நண்பர் ஒருவர் வெகுவருடங்களுக்கு முன் கோவை சென்றிருந்தபோது சந்தித்த ஒரு ஆட்டோ டிரைவரைப் பற்றி சொன்னார். ஆட்டோவில் ஏறும்போது பேசும் பணத்தை, இறங்கும்போது கொடுத்தால் ஐந்து ரூபாய் கம்மியாகத்தான் வாங்குவாராம். அதற்குப் பதிலாக “என் செல் நம்பர் தர்றேன் சார். எப்ப வந்தாலும் கூப்பிடுங்க” என்பாராம். நண்பர் யார் கோவைக்கு போனாலும் அந்த ஆட்டோக்காரரின் எண்ணைக் கொடுத்து ‘இவரு வண்டியிலயே போங்க’ என்பார். இப்போது அவர் இந்த அணுகுமுறையால் முன்னேறி மூன்று, நான்கு ஆட்டோக்களுக்கு சொந்தக்காரராய் இருக்கிறாராம்!


**********************

சில மளிகைக்கடை அண்ணாச்சிகளின் சின்னச் சின்ன தொழில் நுணுக்கங்கள் ஆச்சர்யப்படுத்தக் கூடியவை! வாடிக்கையாளர்கள் அரை கிலோ சர்க்கரை கேட்டால் கொஞ்சமாக தராசில் எடுத்துப் போட்டுவிட்டு, பிறகு டப்பாவிலிருந்து தராசிலிருக்கும் பொட்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நிறுத்துவார்கள். அப்படியின்றி, அதிகமாகப் போட்டுவிட்டு, தராசிலிருந்து எடுத்து தங்கள் மூட்டையில் சேர்ப்பது போல போடமாட்டார்கள். நின்று பார்த்துக்கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு மனதளவில் இது திருப்தி தரும். அதேபோல 25 பைசா, ஐம்பது பைசா பாக்கி இருந்தால் ஒரு ரூபாயாகக் கொடுத்துவிட்டு ‘அப்புறமா வரும்போது குடுங்க’ என்பார்கள்! கண்டிப்பாக அடுத்தமுறை அவர்கள் கடைக்கு போக வைக்கும் அந்த உத்தி!


*********************

இரண்டு நாட்கள் கொஞ்சம் பிஸி! பின்னூட்டத்துக்கு பதில் சொல்லக்கூட முடியறதில்லை. பிஸியா இருக்கற நாட்கள்ல பதிவெழுத நல்ல நல்ல மேட்டர் கிடைக்குதுங்கறது சந்தோஷம்!

*********************

ரொம்ப நாளாச்சு.. எனக்குப் பிடித்த கவிதை எழுதி...

இந்த வாரம் கல்யாண்ஜி

இந்தக் கவிதை எழுதுகிறவன்
பீங்கான் கழிப்பறைகளில்
பிளாஸ்டிக் குவளைகளில்
கொட்டிய தண்ணீரில்
கோடியில் ஒரு பங்காவது
ஊற்றியிருப்பானா
ஒரே ஒரு செடி
வேரடி மண்ணில்.

Thursday, September 4, 2008

மின்சார காண்டம் - பார்ட் 2 (கண்டிப்பா படிங்க பாஸ்!)


கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நான் போட்ட பதிவைப் படிச்சாச்சா? படிக்கலைன்னா படிச்சுட்டு இங்க வாங்க.

------------------

அந்தப் பதிவுல சொல்லப்பட்ட காட்சிகளை விடுங்கள். நிஜவுலகத்துக்கு வருவோம். இந்த மின்சார வெட்டுக்கு அரசு மட்டும்தான் காரணமா? நாமும் மறைமுகமாகக் காரணமில்லையா?

ஒரு கோடியே 98 லட்சம் பயனீட்டாளர்களைக் கொண்ட கொண்ட தமிழக மின்சார வாரியம் மாதம் குறைந்தது அறுபதாயிரம் புதிய மின் இணைப்புகள் தந்து கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 900 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. எந்த அரசும் இதைச் சமாளிக்க முறையான உற்பத்தித் திட்டங்களைத் தீட்டவில்லை. சமீபத்தில் அரசால் வெளியிடப்பட்டுள்ள 1800 மெகாவாட் உற்பத்தி செய்யும் புதிய திட்டத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்க குறைந்தது மூன்று, மூன்றரை வருடங்களாகும்!

இதில் நமது பங்கு என்ன?

முன்பெல்லாம் இப்போதுபோல எல்லோர் வீட்டிலும் மின்சார உபயோக சாதனங்கள் இருந்தனவா? மாதம் குறைந்தபட்சம் 4000 ரூபாய் வருமானமுள்ள குடும்பத்தில்கூட டி.வி, மிக்ஸி, ம்யூசிக் ப்ளேயர் (டி.வி.டி), செல்ஃபோன் ஆகியவை இன்று அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டன. அதற்கடுத்தபடி கிரைண்டர், ஃப்ரிட்ஜ். பிறகு கம்ப்யூட்டர், ஹீட்டர், மைக்ரோவேவ் அவன், ஏ.ஸி.

நாம் பேசும் செல்ஃபோன் ஒரு நாளைக்கு சார்ஜ் நிற்பதில்லை! அந்த அளவுக்கு பேசுகிறோம். பேசுகிறோம். ஒட்டு மொத்தமாகக் கணக்கிட்டால் செல்ஃபோனை சார்ஜ் செய்வதிலேயே எத்தனையோ வாட் மின்சாரம் செலவாகும் போல! இதில் புதிதாக இன்கமிங்குக்கு வேறு காசு தருகிறார்கள். இன்னும் அதிக செல்ஃபோன் விற்பனையும், மின்சாரச் செலவும் நிச்சயம்!

இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஒரு நிமிடம் நிமிர்ந்து பாருங்கள். பகல் நேரத்திலும் தேவையற்ற விளக்கு, ஆளில்லாத இடத்தில் ஓடும் மின்விசிறி, இருவர் அருகருகே இருந்தாலும் த்லைக்கு மேல் இரண்டு மின்விசிறி, அறை முழுதும் குளிர்ந்திருந்தாலும் தொடர்ந்து ஓடும் ஏ.ஸி, செல்ஃபோன் இல்லாத வெறும் சார்ஜர் மட்டும் மாட்டப்பட்டு சுவிட்ச் ஆஃப் செய்யப்படாத ப்ளக் பாய்ண்ட் இவற்றில் ஏதோ ஒன்று உங்களைச் சுற்றி உள்ளதா? நம்மை சுற்றியே எத்தனை மின்சாரம் வீணடிக்கப் படுகிறது?

என்ன செய்யலாம்? எப்படி அரசுக்கு உதவலாம்?


சில யோசனைகள்...


  • செல்ஃபோனை அளவாகப் பயன்படுத்துவோம். அதன் சார்ஜிலேயே நிறைய மின்சாரம் மிச்சப்படுத்தப்படட்டும்.

  • பல அலுவலகங்களில் பகல் நேரத்தில் விளக்குகள் எரியவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை நிறுத்துவோம்.

  • தேவையற்ற நேரங்களில் கணிணிப் பயன்பாட்டை நிறுத்துவோம்.

  • ஆளில்லாத அறையில் சுற்றும் மின்விசிறியை நிறுத்திவிட்டுச் செல்வோம்.

  • ஆளில்லாத அறையில் விளக்கு, மின்விசிறி, ஏ.ஸி.யைத் தவிர்ப்போம்.

  • முடியுமென்றால் ஹீட்டர் மூலம் நீர் சுட வைத்துக் குளிக்காமல் பச்சைத் தண்ணீரில் குளிப்போம்.


  • வேலை செய்துகொண்டிருக்கும் போதும், சும்மாவே ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியை அணைப்போம்.

  • அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தால் மனைவி, குழந்தைகளோடு பேசி மகிழ்வோம். இதனால் டி.வி, டி.வி.டி, ம்யூசிக், செல்ஃபோன் அரட்டை போன்ற பல விஷயங்கள் தவிர்க்கப்பட்டு மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்.

  • வீட்டுக்குள்ளே நாம் ஹாலில் இருந்தாலும், எல்லா அறையிலும் விளக்கெரியும். அதை நிறுத்துவோம்.

  • மிக்ஸியோ, கிரைண்டரோ உபயோகிக்கும் முன் அதற்கான முன் ஆயத்தங்களை தயார் நிலையில் வைத்து உபயோகித்தால் நேரம், மின்சாரம் மிச்சமாகும்.

  • வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லும்போது எல்லா மின்சாதனங்களையும் நிறுத்திவிட்டு, அணைத்துவிட்டு செல்வோம்.

  • குண்டு பல்பெல்லையெல்லாம் கடாசிவிட்டு CFL உபயோகிப்போம்.


இப்போது அரசுக்கு சில யோசனைகள்...

கொஞ்சம் சாத்தியமற்றதாய் தோன்றினாலும்.. முயன்றால் சாத்தியமே.


  • சினிமா தியேட்டர்களுக்கு இப்போதைக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை கொடுங்கள். (எந்தப் படமும் நல்லா வேற இல்லை!) அதற்கப்புறம் வாரத்துக்கு ஒரு நாள் கட்டாய விடுமுறை கொடுங்கள். அது திங்கட்கிழமையாயிருத்தல் உசிதம்.

  • வாரத்துக்கு ஒருநாள் கட்டாய விடுமுறை என்ற சட்டம் பல இடங்களில் பயன்படுத்தப் படுவதில்லை. அப்படி விடுமுறை விடப்பட்டாலே நிறைய மின்சாரம் மிச்சமாகும். அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு (இந்த இயந்திரத்துக்கு மின்சாரம் தேவையில்லையே?) விடுமுறையை தீவிரமாக்குங்கள்.

  • கோடம்பாக்கத்துக்கு ஒரு பதினைந்து நாள் கட்டாய விடுமுறை கொடுங்கள். எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். இதனால் கண்டிப்பாக சில நல்ல படைப்புகள் பின்னாளில் வரக்கூடும். அதன்பின், மாதத்துக்கு ஒரு நாள் விடுமுறையை வாரத்துக்கு ஒரு நாளாக மாற்றுங்கள். இந்த ஒருவார விடுமுறையின்போது இந்தத் தொழிலை நம்பி இருக்கும் சிறு ஊதியக்காரர்களை பெருந்தலைகள் கவனிப்பது அவசியம்! (சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்பு நின்றால் எத்தனையோ மின்சாரம் மிச்சமாகும்!)

  • எல்லா தொலைக்காட்சி சேனல் நிறுவனங்களுக்கும், கேபிள்காரர்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை விடுங்கள். தினமும் இருமுறை செய்திகளைத் தவிர எந்த ***ம் ஒரு வாரத்துக்கு ஒளிபரப்பு செய்யப்படாமல் இருக்கட்டும். (கண்டிப்பாக அதன் பிறகும் இது தொடரவேண்டும் என்று போராட்டங்கள் நடக்கலாம்!)

  • மின்வாரியத்திலேயே ஒரு தனிக் குழுவை அமையுங்கள். அவர்கள் விஜிலென்ஸ் போல, கடை, ஷோரூம்களுக்கு சென்று தேவையில்லாமல் வீணாகும் மின்சாரத்தைக் கண்காணிக்கட்டும். ஓரிரு முறைகளுக்கு மேல் தொடர்ந்து மின்சாரம் வீணாக்கும் நிறுவனம்/கடைகளுக்கு அந்த மாத யூனிட்டிற்கு 25% அதிகமாக கட்டணம் வசூலியுங்கள். (முக்கியமாக டி.வி.ஷோரூம்கள். வாடிக்கையாளர்கள் யாருமே இல்லாவிட்டாலும் பத்து டி.விக்கள் ஓடிக் கொண்டிருக்கும்!)

  • இனி எந்த அரசு விழாவும் ஆடம்பரமாய் இருக்காது என்று அறிவியுங்கள். அதே போல எந்த பொது, தனிநபர் விழாக்களுக்கும் அலங்கார விளக்குகள், மைக் வகையறாக்களை தவிர்க்கச் சொல்லுங்கள். (வந்தமா, வாழ்த்திட்டு போனோமா என்றில்லாமல் வள வளவென்று என்ன பேச்சு?)

பதிவு ரொம்ப சீரியஸா போறதால இத்தோட முடிச்சுக்கறேன். உங்க யோசனைகளை பின்னூட்டத்துல சொல்லுங்க.

பின்குறிப்பு இல்லாம ஒரு பதிவா?:- இது இந்திய வாழ் மக்களுக்காக, குறிப்பா தமிழ்நாட்டுக்காக எழுதப்பட்ட பதிவு. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தங்கள் யோசனையை வழங்குங்க. உங்க நாட்டுல எப்படியெல்லாம் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுது –ன்னு சொல்லுங்க.

ஏதாச்சும் செய்வோம் பாஸ்!