நேற்று சக பதிவர் கேபிள் சங்கரின் பதிவில் ‘தனம்' பட விமர்சனம் இருந்ததைக் கண்டு அவரது பதிவைப் படிக்கப் போனேன்.
சங்கீதா அவ்வளவொன்றும் திறமையைக் 'காட்டி' நடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்... வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.
கவனிக்கும்போது, அவரது ப்ளாக்கின் இடப்பக்கத்தில் ACCIDENT என்றொரு குறும்படத்தைப் போட்டிருந்தார். எனக்கு அதைப் பார்ர்கும் ஆவல் அதிகரிக்கவே, க்ளிக்கிப் பார்த்தேன். என்னுடையது ஒரு வேலைக்காகாத ஸ்லோ கனெக்ஷன் ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஓப்பன் ஆனது. விளம்பரமெல்லாம் வந்து, குறும்படம் துவங்கியது. கொஞ்சம் ஓடி, பஃபர் ஆகி, பின் கொஞ்சம் ஓடி.. என்று என் இணையத் தொல்லையூடே தடுமாறி, தடுமாறி ஓடியது.
மொத்தம் 17 சொச்சம் நிமிடங்கள் என்றிருந்த அந்தக் குறும்படம், ஆறேழு நிமிடங்கள் ஓடியதும் எனக்கு படபடப்பு அதிகமானது..
எழுத்தாளர் சுஜாதா எழுதி, 1966ல் குமுதத்தில் வெளிவந்த ‘சசி காத்திருக்கிறாள்' கதையைப் போலவே இருந்தது அந்தப் படம். என்னால் உட்கார முடியவில்லை. உடனே கிளம்பி, ஸ்பீட் அதிகமான ஒரு ப்ரௌஸிங் செண்டருக்குப் போய் தொடர்ந்து பார்த்தேன்.
அதிர்ச்சியாக இருந்தது!
சுஜாதாவின் கதையை அச்சு அசலாகக் காப்பியடித்திருந்தார்கள்! இந்த லட்சணத்தில் எழுத்தும், இயக்கமும் சங்கர் நாராயணன் என்று வேறு போட்டிருந்தார்கள். நான் திரும்பத் திரும்ப எங்கேயாவது நன்றி: சுஜாதா என்றிருக்கும் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. இல்லை!
நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை. சுஜாதாவின் மீது அளவில்லாத மதிப்பு எனக்கு உண்டு. அது எல்லையற்றது. அவர் எழுதியதில் பத்தோடு பதினொன்று அல்ல இந்தக் கதை. இது அவரது மாஸ்டர் பீஸ். அவர் இந்தக் கதையை எழுதி அனுப்பி, குமுதத்தில் வந்த பிறகு எஸ்.ஏ.பி (குமுதம் நிறுவனர்) அடிக்கடி எழுதுங்கள் என்று தன் கைப்பட எழுதி சுஜாதாவைப் பாராட்டியிருக்கிறார். இதை பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கதையையே இப்ப்டித் திருடியிருக்கிறார்களே என்று மனவேதனையடைந்தேன்!


சரி.. நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேபிள் சங்கருக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டேன். தனம் விமர்சனத்தைப் பற்றி ஒரு வரி எழுதிவிட்டு.. ‘ஒரு சீரியஸான வேண்டுகோள்: நீங்கள் இடப்பக்கம் குடுத்திருக்கும் குறும்படம் சுஜாதாவின் சசி காத்திருக்கிறாள் கதையின் காப்பி. குறைந்தபட்சம் சுஜாதாவுக்கு நன்றியாவது சொல்லச் சொல்லுங்கள்' என்று போட்டுவிட்டு அதை விட்டுவிட்டேன்.
இரவு வந்து பார்த்தால்....
அந்தப் பின்னூட்டம் நீக்கப்பட்டிருக்கிறது!

வலைப்பூவின் இடது பக்கம் அவர் கொடுத்திருந்த அந்தக் குறும்படமும் நீக்கப்பட்டிருந்தது!
என்ன நடக்குது இங்கே?
நான் எவரையும் பழிக்காமல், விமர்சிக்காமல் தோழமையோடேதான் எழுதி, பேசி வருகிறேன். (இல்லையோ?) ஆனால் இதை என்னால் லேசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை!
அந்தக் குறும்படத்தின் பக்கம் இதோ.

கேபிள் சங்கர் ஏன் என் பின்னூட்டத்தையும், அந்தக் குறும்படத்தையும் உடனே நீக்க வேண்டும்?
‘என்ன பண்ண பரிசல்? வர வர இயக்குனர்களுக்கு கதைப் பஞ்சம் போல' என்று ஏதாவது பதில் சொல்லியிருந்தாலோ, அல்லது ஒன்றுமே சொல்லாமலிருந்தாலுமோ நான் பாட்டுக்கு செந்தழல் ரவி சொல்வது போல எதுவுமே பண்ண வேண்டாம் பாஸ் என்று $$$ ###கிட்டுப் போயிருப்பேன்.
ஆனால், இப்போது சந்தேகம் வருகிறதே..
கேபிள் சங்கர்தான் அந்த குறும்படத்தை இயக்கிய சங்கர் நாராயணனா?
அனுமதி வாங்கியிருக்கிறீர்களென்றால், பதில் சொல்லியிருக்கலாமே. என் பின்னூட்டத்தை நீக்கியது ஏன்?
இந்தக் கொடுமையைக் கேட்க யாருமே இல்லையா?
ஒரு படைப்பை அச்சு அசலாகத் திருடுவதும் ,அதற்கு தனது பெயரைப் போட்டுக் கொள்வதும் நியாயமா?
இன்ஸ்பியரேஷன் என்பது வேறு, கதை, நடக்கும் இடம், பாத்திரங்கள் என்பதெல்லாம் ஒரே மாதிரி இருப்பதென்பதும் வேறு.
சுஜாதா இது போன்றவர்களை மன்னிக்கலாம், என்னால் முடியவில்லை!
யாராவது உண்மையக் கண்டறிந்து நடவடிக்கை எடுங்களேன்..