Showing posts with label மினி தொடர். Show all posts
Showing posts with label மினி தொடர். Show all posts

Friday, September 10, 2010

யாமினி PART – 5 (இறுதிப் பகுதி)

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4


** ** ** ** **


பகுதி - 5


“உங்க வாக்குமூலத்துக்கு ரொம்ப நன்றி குணா” – தெளிவாகக் கேட்டது சப் இன்ஸ்பெக்டர் அஷோக்ராஜாவின் குரல்.

குணா பதட்டமாய் நிமிர்ந்தார். ஆனால் திமிரான குரலில் தொடர்ந்தார்: “எனக்குத் தெரியும் அஷோக்.. நீ என்னை மோப்பம் பிடிச்சுடுவன்னு.. உன்னை
ஏமாத்தறதுக்காகத்தான் என் ஃப்ரெண்டை விட்டு நான் உன்கூட இருக்கறப்பவே உனக்கு மிரட்டல் விடுத்தேன். ஆனா நீ எப்படியோ என்னைத் தொடர்ந்து வந்துட்ட.. சரி.. அப்படியே நில்லு. உனக்கும் எமலோகம் போற நேரம் வந்தாச்சு” என்று கையிலிருந்த பிஸ்டலை அஷோக்கை நோக்கி நீட்டினார்.

கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான் அஷோக். “என்ன குணா.. உண்மையான பிஸ்டலை உன்கிட்ட கொடுக்க நானென்ன முட்டாளா...? அது டம்மி துப்பாக்கி.. அதிலேர்ந்து வந்தது டம்மி புல்லட்”

அஷோக் சொல்ல “என்னது?” என்று பெரிய எழுத்தில் அதிர்ச்சிகாட்டிய குணா விழுந்து கிடந்த என்னைப் பார்த்தான்.

நான் எழுந்தேன். மார்புப் பகுதியில் மறைத்து வைத்திருந்து சிந்தப்பட்ட செயற்கை ரத்தத்தால் உடல் முழுவதும் பிசுபிசுப்பாக இருந்தது. பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு மினி ரெகார்டரை எடுத்து அஷோக்ராஜா கையில் ஒப்படைத்தேன்.

எல்லாவற்றையும் அதிர்ச்சி விலகாத கண்களில் கவனித்துக் கொண்டிருந்தான் குணா. அஷோக்ராஜாவின் கையில் முளைத்திருந்த துப்பாக்கி அவனை அசையவிடாமல் செய்தது.

“என்ன குணா.. அப்படிப் பார்க்கறீங்க? உங்க மேல சந்தேகப்புள்ளி எங்க விழுந்தது தெரியுமா? காலேஜ் பையன் இறந்தப்ப நாம அந்த பீடா கடைல நின்னு விசாரிச்சுகிட்டிருந்தோம். அப்ப அந்த கடைக்காரன் யூனிஃபார்ம்ல இருந்த என்னை விட்டுட்டு உனக்கு விஷ் பண்ணினான். நான் அதை சாதாரணமாத்தான் எடுத்துகிட்டேன். நீங்க இறந்தவனோட பாடிகிட்ட போனப்ப ‘அவரை உனக்கு முன்னாடியே தெரியுமா’ன்னு கேட்டதுக்கு ஒரு மணிநேரம் முன்னாடி நீங்க அங்க பீடா வாங்கிச் சாப்டதா சொன்னான். எனக்கு எங்கயோ நெருடலா இருந்தது.

அப்ப உங்க பின்னணியை விசாரிச்சப்ப நீங்க டெல்லிலேர்ந்து விருப்பமா ட்ரான்ஸ்ஃபர் கேட்டு இங்க வந்திருக்கறது தெரிஞ்சது. அந்தப் பையனுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீணா நான் குழப்பிக்கறேன்னு விட்டுட்டேன்..

கடைசியா பார்க்ல அந்த டாட்டூ குத்திருந்தவன் கொலையைப் பத்தி விசாரிச்சப்ப அவன் தங்கியிருந்த ரூம்ல அவன் இதுக்கு முன்னாடி டெல்லிலயோ, பாம்பேலயோ இருந்தவன்னு சொன்னாங்க. ஆனா யாருக்கும் தெளிவா தெரியல. நீங்க வேற டெல்லில இருந்தீங்களா.. உங்களைப் பத்தி இன்னும் டீடெய்ல்டா விசாரிச்சப்ப உங்க தம்பி ஆக்ஸிடெண்ட்ல இறந்த விஷயமும் வெளில தெரிஞ்சது.. உடனே நான் பரிசல்கிட்ட ஒரு வேலை செய்யச் சொன்னேன்..”

நான் தொடர்ந்தேன்..

“அவர் என்கிட்ட கண்டிப்பா இந்தக் கொலைகளுக்கும் குணாவுக்கும் ஏதோ லிங்க் இருக்கு. ஆனா என்னான்னு தெரியல. நீங்க யாமினி விஷயத்தையும், இதையும் லிங்க் பண்ணி தொடர் மாதிரி எழுதுங்க.. அதை எப்படியாவது குணா பார்வைல பட வெச்சுடறேன். அதுக்கப்பறம் அவர் ரியாக்‌ஷன் என்னான்னு பார்க்கலாம்னு சொன்னார்”

“முட்டாள்தனமா இருக்கு நீ சொல்றது.. நான் உன்கிட்ட நடந்த்தையெல்லாம் சொன்னது நேத்துதான். நீ அதுக்கு முன்னாடியே யாமினியை ஒருத்தன் வந்து கொலை பண்ணினதா சொன்னியே அதெப்படி?”

“அது என் யூகம் குணா” அஷோக்ராஜா இடைமறித்துச் சொன்னான். “இந்த மூணு கொலைகள்லயும் அகோனைட் என்கிற விஷம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அரசு டாக்டர் என்னிடம் சொன்னார். அகோனைட் விஷத்தால் ஒருவர் இறந்தால் எந்தப் பரிசோதனையிலும் கண்டுபிடிக்க முடியாதாமே? ஆக, அதே விஷத்தால் யாமினி இறந்தாள் என்று எழுதினால் உன்னிடமிருந்து என்ன ரியாக்‌ஷன் வருமென்று பார்க்க அப்படி எழுதச் சொன்னேன்”

குணா குரல் உடைந்தபடி சொன்னான்: “யாமினி இறந்தது உண்மை. ஜெய் இறந்த மறுநாள் வசந்த் ஆதிமூலம் கெஸ்ட் ஹவுஸில் நானே அவர்கள் பேசுவதைக் கேட்டேன். ஆனால் எப்படிக் கொன்றார்கள் என்று தெரியவில்லை..”

“ஓகே குணா... அமைதியான முறையில் சரணடைவதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை” என்ற அஷோக் குணாவை முன் நடத்தி நின்று கொண்டிருந்த போலீஸ் படையிடம் ஒப்படைத்தான்.

பிறகு என்னிடம் திரும்பி “என்ன பரிசல்.. எப்படி ஃபீல் பண்றீங்க?” என்றான்.

“எப்படி உணர்கிறீர்கள் பரிசல்?”னு கேளுங்க. அப்பறம் யாராச்சும் வந்து என்ன நெனைச்சா சுத்தத்தமிழ், நெனைச்சா வழக்குத் தமிழான்னு கேள்வி கேட்டு வைப்பாங்க” என்றேன் நான்.

அஷோக் சிரித்துக் கொண்டிருக்கும்போதே ஃபோன் அடிக்க எடுத்தான்.

“ஹலோ.. நான் சுசி பேசறேன்”

“எந்த சுசி?”

“எந்த சுசி? நார்வே சுசியா?”

“அட.. உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“பரிசல் சொல்லிருக்காருங்க.. அதுவும் ப்ரொஃபைல்ல Industry: Bankingன்னு போட்டு Occupationல நீங்க போட்டிருக்கற விஷயத்துக்கு நான்தான் உங்களைத் தேடி வரணும்..”

“ஐயையோ.. அது சும்மா போட்டதுங்க..”

“சரி..பரிசல்கிட்ட பேசணுமா?””

“இல்லை. அவர் ஃபோன்ல கூப்டப்ப உங்ககூட இருந்தாலும் இருப்பாருன்னாங்க. ஆக்சுவலா நான் பேச நினைக்கறது உங்ககூடதான்”

“சொல்லுங்க..”

“ஏன் குணா, அந்தக் கொலைகாரன், இதோ இந்தப் பார்ட்ல நீங்க எல்லாரும் இப்படி விளக்கம் கொடுத்து கழுத்தறுக்கறீங்க?”

“வேற என்ன பண்றது சுசி? அவரென்ன முழுநீளத் தொடர்கதையா எழுதறாரு? அவரே எப்படியாவது முடிச்சா சரின்னு இருக்காரோ என்னமோ”

“சரி.. இன்னொரு கேள்வி..”

“இருங்க பரிசல்கிட்டயே தர்றேன்” என்று ஃபோனை நீட்ட ‘நான் பாட்டுக்கு அவியல் பொரியல்னு எதையாவது எழுதிட்டு போய்ட்டே இருந்திருப்பேன்யா.. இப்படி மாட்டிவிட்டுட்டயே..’’ என்று மனதுக்குள் சலித்தவாறே.. என்ன கேட்கப் போகிறார்களோ என்று சற்றே பயந்தவாறே... “ஹலோ...” என்றேன்.


(முற்றும்)

. . . .




.

Thursday, September 9, 2010

யாமினி - PART 4

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

** ** ** ** ** ** ** ** **

பகுதி - 4

“ஸா
ரி யாமினி.. உன்னைக் கொல்லச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.. அதை இன்றே இப்பொழுதே நிறைவேற்றியாக வேண்டும் நான்” என்றான் பீரோ மறைவிலிருந்து வெளிப்பட்டவன்.

“நீ.. நீ.. நீ யார்?” வறண்ட குரலில் கேட்டாள் யாமினி.

“ம்ஹ்ம்.. அதைத் தெரிந்து வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்..? சரி இருந்தாலும் சொல்கிறேன்.. வசந்த் ஆதிமூலத்தின் பாலின மாற்று அறுவை சிகிட்சையை நம்புகிறாயா நீ?”

“நம்பாமல் என்ன? அவர் எத்தனை பெரிய விஞ்ஞானி என்பது உனக்குத் தெரியுமா?”

“ஹஹ்ஹஹ்ஹா... அதுமட்டுமா.. அவர் எவ்வளவு பெரிய தேசத்துரோகி என்பதும் எனக்கு தெரியும்”

“தே.... தேசத்துரோகியா?”

“தேசத்துரோகிதான். நடக்கவே நடக்காத சாத்தியமே இல்லாத ஒன்றைச் சொல்லி அரசாங்கத்தை ஏமாற்றி, வெளிநாட்டு விஞ்ஞானிகளை இந்தியாவுக்கு வரச்சொன்னது எதற்கு என்று நினைக்கிறாய்?”

“எதற்கு?”

“நம் நாட்டு விஞ்ஞான ரகசியங்களை பரிமாறிக்கொள்ள.. விஞ்ஞானிகள் என்ற பெயரில் வந்திருக்கும் அயல்நாட்டு தேசவிரோத சக்திகள் மூலம் அவருக்கு கிடைத்திருக்கும் பணம் பலகோடி..”

“அதற்கும் என்னைக் கொல்வதற்கும் என்ன சம்பந்தம்?”

“முட்டாள் பெண்ணே.. நாளை நீ ஆணாக மாறவேண்டாமா? உன்னைக் கொன்று உன் நிறத்தில் உன் உயரத்தில் இருக்கும் எங்களில் ஒருவனை நீ என அறிமுகப்படுத்துவோம். அதை வைத்து அரசாங்கத்தை கொஞ்ச நாள் எங்கள் விஞ்ஞானிகள் குழு ஏமாற்றும். அதற்குள் எங்கள் ரகசிய பரிமாற்றங்களும் முடிந்துவிடும். அதன்பிறகு அவனையும் கொன்றுவிட்டு நாங்கள் ஆளுக்கொரு தேசத்துக்குப் பறந்து சென்றுவிடுவோம்”

“அ... அதற்கெதற்கு என்னைக் கொல்ல வேண்டும்? யார் கொல்லச் சொன்னது”

“கொல்லாமல்? அப்புறம் நீ இந்த ஆராய்ச்சி பொய் என்று உளறிவிட்டால்? உன்னைக் கொல்லச் சொல்லது உங்கள் பாஸ் வசந்த் ஆதிமூலமேதான்.. இந்த எஸ் எம் எஸ்ஸைப் பார்..” என்று வசந்த் ஆதிமூலம் அனுப்பிய
குறுஞ்செய்தியைக் காண்பித்தான்.

“ஏதோ RED RUM ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார்...” குரலில் தெரிந்த நடுக்கம் இப்போது அவள் உடலிலும் தெரிந்தது.

“அதைத் திருப்பிப் படி.. “

யாமினி அந்த வார்த்தைகளைத் திருப்பி உச்சரித்துக் கொண்டிருக்கும்போதே அவன் கைகளில் பீடா போன்ற ஏதோ ஒரு வஸ்து முளைத்தது.

திமிறத் திமிற, அவளது வாயினுள் பீடாவை நுழைத்தான் அவன். மூக்கினை அழுத்தப் பிடித்துக் கொண்டதில் வேறு வழியில்லாமல் அதை முழுங்கினாள்.
சொற்ப நிமிடங்களில் மேலோகம் சென்றவளின் உடலை கொண்டு வந்திருந்த பெரிய சூட்கேஸினுள் அடக்கி, ஃப்ளாட்டைப் பூட்டிவிட்டு லிஃப்டிலிறங்கி தன் காரை நோக்கி நடந்தான்.

போகும் வழியிலேயே தன் செல்லில் வசந்த் ஆதிமூலத்தை அழைத்தான்.

“சார்... முடிஞ்சது..”

“குட். சத்தமில்லாம பாடியை டிஸ்போஸ் பண்ணீடு..”

“அந்த ஜெய்...”

“அவனை கூலிப்படைகிட்ட சொல்லி ஆக்ஸிடெண்ட்ல போட்டுத் தள்ளச் சொல்லியாச்சு... இந்நேரம் அவன் பைக் ஏதாவது லாரிக்கடில சிக்கி அவன் சட்னியாகிருப்பான். இவளுக்கு அவனைத் தவிர வேற யாரும் இல்லைங்கறது நமக்கு வசதியாப் போச்சு“

சொன்ன வசந்த் ஆதிமூலம் தொடர்ந்தான்: “சரி.. நீ, நான், அந்த 15 பேர் தவிர நம்ம டீம்ல இருக்கற யாருக்கும் நம்ம விஷயம் எதுவும் தெரியாது. நாளைக்கு நம்ம பதினேழு பேர் மட்டும் கிளம்பி நம்ம கெஸ்ட் ஹவுஸ் போய் சில திட்டங்கள் தீட்டணும். அதுனால நைட்டுக்குள்ள அவ பாடியை டிஸ்போஸ் பண்ணிட்டு காலைல ஒம்பது மணிக்கு என்னை வந்து பாரு”

“சரி சார்” சொன்னவன் அந்த சூட்கேஸை சிரமப்பட்டுத் தூக்கி டிக்கிக்குள் சொருகினான். சொருகும்போது சூட்கேஸ் சரியாக மூடப்படாத்தைக் கவனித்தான். திறந்து, இறந்து போன யாமினியின் கைகளை மடக்கும் போதுதான் உற்று கவனித்தான். போட்டிருந்த்து ஸ்லீவ்லெஸ் ஆகையால் அவள் புஜத்தில் இருந்த டாட்டூவில் எழுத்துகள் தெரிய... ஒவ்வொன்றாய் படித்தான்..

Y - A - M - I - N - I

************ ******* ******* ********** ********** ************
“என்னாச்சு குணா?” என்றான் அஷோக்ராஜா.

“தெரியல சார்.. ஏதோ குழந்தைதான் ஃபோனை எடுக்குது. ஒண்ணும் பேச மாட்டீங்குது. சிரிப்பு சத்தம்தான் கேட்குது..”

“சரி.. இனி நேரமில்லை நமக்கு.. நீங்க ஒண்ணு பண்ணுங்க.. க்ரீன் பார்க் ரெஸ்டாரண்ட் போய் கிருஷ்ணாவைப் பாருங்க. நான் லேப்டாப்பை ஆன் பண்ணி அவரோட ப்ளாக்ல ஃபோன் நம்பர் கிடைக்குதான்னு பார்க்கறேன்.. பார்த்துட்டு பின்னாடியே வர்றேன்.. இப்ப நமக்கு நேரமில்ல. நீங்க சீக்கிரம் கிளம்புங்க.”

“ஓகே அஷோக்.. “ என்று கிளம்பிய குணாவை இடைமறித்தான் அஷோக் ராஜா.

“எதுக்கும் சேஃப்டிக்கு இதை வெச்சுக்கோங்க”என்று அவன் கொடுத்தது... சைலன்சர் பொருத்தப்பட்ட 0.32 ரக பிஸ்டல்.

*********** ************* *************** .

றந்து வைத்துவிட்ட ஃபோனை எடுக்கும் நேரம் நேராக க்ரீன்பார்க்குக்கே சென்று விடலாம் என்று முடிவெடுத்து, பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

க்ரீன்பார்க்கை அடைந்தபோது மணி ஆறைத் தொட்டிருந்தது. அங்கங்கே சிறு சிறு குடில்களாக பிரிந்திருக்க, ஒரு குடிலில் சென்று அமர்ந்த பத்து நிமிடங்களில் அவர் வந்தார்.

“கிருஷ்ணகுமார்?”

“மை நேம் ஈஸ் குணா... ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்”

“வணக்கம் சார்.. எஸ். ஐ. அஷோக்ராஜா கூப்டிருந்தார்..”

“அவர் பின்னாடி வர்றார்... அதுக்கு முன்னாடி சில கேள்விகள்.. டெல்லில நடந்த யாமினி கொலை பத்தி உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“ஐயோ.. அது சும்மா கற்பனைல எழுதினது. ஒரு விஞ்ஞானக் குழுவைச் சேர்ந்தவங்களும், வெளிநாட்டுக்காரர்களுமா மொத்தம் பதினேழு பேரும் சாலை விபத்துல இறந்தாங்கள்லியா? அப்ப நியூஸ் சேனல்ஸ்ல அவங்ககிட்ட வேலை பார்த்த யாமினிங்கறவளையும் காணோம்னு நியூஸ் போட்டாங்கள்ல? அதையும், சமீபத்துல இங்க இறந்தவனோட கைல யாமினின்னு டாட்டு குத்தியிருந்த்தையும் வெச்சு சும்மா எழுதினேன்..”

“பதினேழு பேரும் இறக்கல பரிசல்.. ஒருத்தன் தப்பிச்சுட்டான் அப்ப..”

“எ.. என்ன சொல்றீங்க?”

“ஆமாம்.. அவங்களால கொல்லப்பட்ட ஜெய்யோட ஒரே அண்ணன் நான்.. ஆக்ஸிடெண்ட்ல ஜெய் இறக்கறதுக்கு முன்னாடி யாமினியைப் பத்தியும் அவ வேலை செய்யற இடத்துல ஏதோ ரகசியமா நடக்கறதா அவன் சந்தேகப்படறதாவும் சொன்னான். அதுனால அடுத்தநாள் அங்க நான் யாருக்கும் தெரியாம போனப்ப அவங்கதான் யாமினியைக் கொன்னதுன்னு தெரிஞ்சுது. உடனேயே அவங்க வெளில போறதுக்குள்ள அவங்க போற வேன்ல சில சில்மிஷங்களைச் செஞ்சு அவங்களை பரலோகத்துக்கு அனுப்ப நினைச்சேன்.. அதுல ஒருத்தன் மட்டும் தப்பிச்சுட்டான்”

“யார் அது?”

“அடுத்தநாள் யாமினியா நடிக்கறதுக்காக அவள மாதிரியே டாட்டூவெல்லாம் குத்திட்டிருந்த ஒருத்தன்”

“அப்படீன்னா...”

“ஆமா.. அவன்தான் அங்க இங்க சுத்தி திருப்பூர்ல வந்து இருந்தான். போட்டுத் தள்ளீட்டேன். நான் குடுத்தது அகோனைட் விஷம். எந்த போஸ்ட் மார்ட்ட்த்துலயும் எந்த ரிப்போர்ட்லயும் கண்டுபிடிக்க முடியாத விஷம். சந்தேகம் வர்றதுக்காக நானே அவங்க உடம்பிலேர்ந்து கொஞ்சம் ப்ளட் எடுத்து அங்கங்க தெளிச்சுடுவேன்..”

“அப்ப அந்த டாக்டர்.. காலேஜ் பையன்..”

“ரெண்டுமே என் கைங்கர்யம்தான். அந்த டாக்டர் டெல்லில இருந்தவர். ஜெய்யோட கேஸ் அட்டெண்ட் பண்ணினப்ப யாரோ அவருக்கு லம்ப்பா பணம் கொடுக்க, கொஞ்சம் முயற்சி பண்ணி பிழைக்க வைக்கறதுக்கு பதிலா அவனை சாகடிச்சவர்”

“காலேஜ் பையன்..?”

“அவன் பாவம். பீடா வாங்கி அதுல கொஞ்சம் அகோனைட் கலந்து இந்த டாட்டூ ஆசாமியைக் கொல்ல ப்ளான் பண்ணிருந்தேன். அன்னைக்கு பீடா வாங்கி, கைல இருந்த அகோனைட்டை யாரும் பார்க்காதப்ப கலந்துட்டு என் பர்ஸை எடுக்கும்போது பணம் கீழ விழுந்து பறந்துடுச்சு. அதை எடுக்கற ரெண்டு செகண்ட்ல கடைக்காரன் அகோனைட் கலந்த பீடாவை அந்தப் பையனுக்குக் குடுத்துட்டான்..”

“நீங்க காப்பாத்திருக்கலாமே?”

“சான்ஸே இல்லை.. அகோனைட் சாப்ட்டா அதிக பட்சம் ரெண்டு நிமிஷத்துக்குள்ள உயிர் பரலோகத்துக்கு பார்சலாய்டும்...” சொன்ன குணா

“அதுசரி.. உங்களுக்கு இந்த ரெண்டு கேஸுக்கும் முடிச்சிருக்குன்னு சொன்னது யாரு?”

“யாருமில்லை சார்.. நான் சும்மா கற்பனை பண்ணி எழுதினதுதான்..” இப்போது என் குரலில் பயம் அப்பட்டமாக எனக்கே தெரிந்தது.

“என்னை நம்பச் சொல்றியா? இதை எழுதின உன்னையும் நோண்டி நோண்டி விசாரிச்சிட்டிருக்கற அஷோக்ராஜாவையும் தீர்த்துட்டு சத்தமில்லாம் வேற எங்கயாவது ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போய்டுவேன்” குணாவின் குரலில் அதுவரை வராத வில்லத்தனம் வந்திருந்தது.

“சா.. சார்... என்னதிது..” என்றேன் அவர் கையில் முளைத்த பிஸ்டலைப் பார்த்து வியர்த்தபடி “என்னை எதுக்குசார் கொல்றீங்க?”

“பின்ன? உன்னைக் கொன்னா இதுக்கு மேல எழுதவோ, நாளைக்கே கோர்ட்டுக்கு கேஸ் வந்தா உனக்கு இது எப்படித் தெரிஞ்சுதுன்னு சொல்லவோ இருக்க மாட்டியில்ல? அதுமில்லாம ப்ளாக் எல்லாம் எத்தனை பேர் படிக்கறாங்க? அதிகபட்சம் உன்னோடத ஐநூறு பேர் படிப்பாங்களா? ஹும்....”

“சத்தியமா இது கற்பனையா எழுதினதுதான் சார்... ப்ளீஸ் நம்புங்க..”

“அப்படீன்னா உன்னைக் கொல்றதைத் தவிர எனக்கு வேற வழியில்ல..” சொன்ன குணா, பிஸ்டலை என்னை நோக்கி நீட்டி ட்ரிக்கரைச் சுண்ட சீறிப்பாய்ந்த குண்டு இதயப் பகுதியில் இறங்க ரத்தம் தெறிக்க விழுந்தேன் நான்.


(இறுதிப் பகுதி நாளை... )

** ** ** **



.

Wednesday, September 8, 2010

யாமினி - PART 3

பாகம் 1

பாகம் 2

************************
பாகம்: 3

-ஃபோன்ல யாரு அஷோக்? என்றார் குணா.

-தெரியல சார். எவனோ விளையாடறானா நெஜமான்னு தெரியல. மூணு கொலை முடிஞ்சிருக்கு. இன்னும் ரெண்டு பேர் பாக்கிங்கறான்.

-எ.. என்ன சொல்றீங்க அஷோக்.. இன்னும் ரெண்டு கொலையா?

-ஆமா.. சரி.. நீங்க என்ன விஷயமா வந்தீங்க?

-சொல்றேன்... உங்களுக்கு கிருஷ்ணகுமார்ன்னு யாரையாவது தெரியுமா?

-தெரியாதே.. யார் அது?

-ப்ளாக் எல்லாம் எழுதுவாரு.. இன்னைக்கு காலைல அவருக்கு உங்ககிட்டேர்ந்து ஒரு லெட்டர் போயிருக்கு.

-என்கிட்டேர்ந்தா? என்ன சொல்றீங்க?

-ஆமா.. அவரை க்ரீன் பார்க் ரெஸ்டாரண்டெக்கு வரச் சொல்லி நீங்க அவருக்கு ஏதாவது லெட்டர் எழுதினீங்களா?

-நான் ஏன் லெட்டர் எழுதறேன் குணா?

குணா பதட்டமானார். ‘நெனைச்சேன்’ என்று முணுமுணுத்தார்.

’என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க குணா’ என்றான்.

-கிருஷ்ணகுமார்ன்னு ஒருத்தர். பரிசல்காரன்ங்கற பேர்ல ப்ளாக் எழுதுவாரு. ஃப்ரான்ஸிஸ்ன்னு நம்ம டிபார்ட்மெண்ட் ஆள் ஒருத்தருக்கு அவர் ஃப்ரெண்டு. நம்ம மண்டைய உடைச்சுகிட்டிருக்கற இந்த கேஸைப் பத்தி அவர்கிட்ட சொல்லிருக்காரு.. அவரும் ஏதோ ஆர்வத்துல அதை கதை மாதிரி தன்னோட ப்ளாக்ல எழுதிட்டாரு...

-இந்த பத்திரிகைக்காரங்கதான் நடக்கறதையெல்லாம் அப்படியே எழுதறாங்களே... இதுல இவங்க வேறயா?

-இவர் பத்திரிகைச் செய்திகளையும், அவர் ஃப்ரெண்டுகிட்ட கேட்டதையும் வெச்சு எழுதிருக்கார். முக்கியமான விஷயம் இந்தக் கொலைல அவன் கைல யாமினின்னு டாட்டு குத்திருந்தது இல்லையா?

-ஆமாம்.

-அந்தப் பெயரைப் பார்த்ததும் சுவாரஸ்யத்துக்காக ரெண்டு வருஷம் முன்னாடி டெல்லில நடந்த ஒரு சில சம்பவங்களைத் தொகுத்து தன்னோட வலைல எழுதிருக்காரு.

-என்ன எழுதிருக்காரு?

-சொல்றேன்.. அதுக்கு முன்னாடி அந்த கிருஷ்ணகுமார் இப்ப எங்க இருக்காருன்னு பார்க்கணும்..

-சரி.. என் லெட்டர் பேட்ல இருந்து என்ன லெட்டர் அவருக்கு போயிருக்கு?

-அவரை க்ரீன்பார்க் ரெஸ்டாரெண்டுக்கு வரச் சொல்லி நீங்க எழுதினதா அதுல எழுதிருக்கு. அவர் தன்னோட ஃப்ரெண்டுகிட்ட கேட்டிருக்காரு. அந்த ஃப்ரெண்டு உங்ககிட்ட நேரடியா கேட்க பயப்பட்டு நான் கூட இருப்பேன்னு எனக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன்னான். நீங்க அஞ்சு மணிக்கே கிளம்பினதா ஸ்டேஷன்ல சொன்னாங்க. அதான் நான் இங்க வந்தேன்..

-சரி.. இம்மீடியட்டா அந்த கிருஷ்ணகுமாரைக் கூப்ட்டுங்க.. அவர் எங்க இருக்காரோ அங்க போகலாம்.. கிளம்பிக்கொண்டே சொன்னான் அஷோக்ராஜா.

-ஒரு நிமிஷம்..

குணா தன் அலைபேசியிலிருந்து தன் நண்பருக்கு அழைத்தார்.

-ஃப்ரான்ஸிஸ்.. நாம நினைச்ச மாதிரியே இதுல ஏதோ விவகாரம் இருக்கு. நான் இப்ப எஸ்.ஐ. வீட்லதான் இருக்கேன். சார் யாருக்கும் லெட்டர் தரலை. இம்மீடியட்டா கிருஷ்ணகுமாரோட நம்பர் கொஞ்சம் குடுங்க. அவரை க்ரீன்பார்க் போகவிடாம தடுக்கணும்...’

எதிர்முனையில் இருந்து வெறும் சிரிப்புச் சத்தம்தான் கேட்டது..

*************************************

யாமினி சிவப்பாய் இல்லை. யாமினி கருப்பாய் இல்லை. மாநிறத்தில் இருந்தாள். வேண்டிய இடத்தில் வளைவுகளும், நெளிவுகளுமாய் பார்ப்பவர்களின் அரை நிமிடத்தை அபரித்துக் கொள்ளும் அழகாய் இருந்தாள்.
கண்ணாடியில் தன்னை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள். கொண்டிருக்கும்போதே அலைபேசி அழைத்தது.

‘வந்துட்டேன்.. வந்துட்டேண்டா தடியா..’ செல்லமாகச் சொல்லிக் கொண்டே ஃபோனை ஆன் செய்யாமல் ஓடினாள். அவசர அவசரமாக தன்னுடைய ஃப்ளாட்டைப் பூட்டிவிட்டு அறைவிட்டு லிஃப்டிறங்கி ஓடினாள்.

அபார்ட்மெண்ட் வாசலில் பைக்கில் அமர்ந்திருந்தான் அவன்.
“எவ்ளோ நேரம் மேக்கப் போட? வர்றவன் போறவன்லாம் என்னைப் பார்த்துட்டுப் போறான்” – சலிப்பாய் சொன்னான் அவன்.

அவன்?

ஜெய் .யாமினியின் காதலன். கம்ப்யூட்டர் வல்லுநன். இரண்டு வருடங்களாக யாமினியைக் காதலித்துக் கொண்டிருக்கிறான். அவள் விஞ்ஞானி வசந்த் ஆதிமூலத்திடம் சேர்ந்து டெல்லிக்கு மாற்றலாகி வந்ததும், இவனும் எப்படியோ மாற்றல் வாங்கிக் கொண்டு டெல்லி வந்துவிட்டான்.

அவள் பில்லியனில் ஏறியதும் “போலாமா?’ என்று கேட்டு பைக்கை ஸ்டார்ட்டினான்.

பைக் நேராக அந்த பார்க்கினுள் நுழைந்தது. ஆங்காங்கே அமர்ந்திருந்த ஜோடிகளைத் தாண்டி, தனியிடத்தில் அமர்ந்து கொண்டார்கள் அவர்கள்.

“யாமினி... எங்க போகப்போற? ஒரு வாரத்துக்குப் பார்க்க முடியாத அளவுக்கு?”

“எங்கயும் இல்ல.. ஃபாரின்லேர்ந்து சில சயிண்டிஸ்ட்ஸ் வந்திருக்காங்க.. அவங்களுக்கு எங்க ஆராய்ச்சிகள் பத்தி ப்ராக்டிகலா சிலதை விளக்க வேண்டியதா இருக்கு. ரொம்ப கான்ஃபிடென்ஷியல்.. அதுனால ஒரு வாரம் அந்தக் காம்பவுண்டை விட்டு யாருமே வெளில வரமாட்டோம். எங்க மொத்த டீமும் உள்ளதான் இருக்கும்”

“ப்ச்.. எனக்கு இது பிடிக்கவே இல்லை யாமினி..”

“என்ன பண்றது ஜெய்.... எனக்குப் பிடிச்சிருக்கே... இந்த ப்ராஜக்ட் சக்ஸஸ் ஆச்சுன்னா அப்பறம் நான் வேலைக்கே போகல.. போதுமா?”

ஜெய் சிரித்தான். “அதெல்லாம் வேண்டாம் யாமினி.. உன் இஷ்டம் என்னமோ அதைச் செய்.. வீணா எனக்காக உன் லட்சியத்தை கைவிட வேண்டாம்...”

பிறகு கொஞ்ச நேரம் இருவருமாக பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிச் சென்றார்கள்.

காஃபி ஷாப் போய்விட்டு நேராக யாமினி குடியிருக்கும் அபார்ட்மெண்ட் வாசலில் அவளை இறக்கிவிட்டான் ஜெய். அவன் விடைபெற்றுச் சென்றதும் நேராக தன் அறைக்குச் சென்று திறந்தாள் யாமினி.

உள்ளே நுழைந்து திரும்பியவள் அதிர்ந்தாள்.

காவி நிறப்பற்களில் குரூரமான சிரிப்போடு பீரோவிற்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டான் உயரமான ஒருத்தன்.

*******************************

மூன்றாம் பாகத்தை எழுதி முடித்துவிட்டு SIGN OUT செய்ய எத்தனித்தபோது சாட்டில் வந்தார் அவர்.

‘நான் பாலா.. நேற்றைக்கு உங்களிடம் பின்னூட்டம் போட்டு கேட்டேனே.. நீங்கள் எழுதுவீர்களா என்று தெரியவில்லை. அதுதான் நானே உள்ளே வந்துவிட்டேன்..’

‘பரவாயில்லை பாலா.. உங்கள் ப்ரொஃபைலைத் திறக்கிற எல்லாருக்குமே ஒரு குழப்பம் வரும்..’

‘என்னது அது பரிசல்?’

‘உங்கள் வலையைக் க்ளிக்கினால் எப்படி ஆதியின் வலைப்பூவுக்கு செல்கிறது என்று. பிறகுதான் பார்த்தேன். அது நீங்கள் பின் தொடரும் ப்ளாக். ஒரே ப்ளாக்கைத் தான் தொடர்கிறீர்கள் போல..’

‘ஆம் பரிசல்.. சரி அதைவிடுங்கள்.. யாமினி கதை நடப்பது டெல்லியில்.. கொலைகள் நடப்பது திருப்பூரில். இரண்டுக்கும் என்ன தொடர்பு?’

‘நாளை பாருங்கள்.. தெரியும்..’

‘ஏன் இன்றைக்குச் சொல்லுங்களேன்..’

‘இல்லை.. அவசரமாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும்.. எஸ். ஐ. அஷோக்ராஜாவிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. வருகிறேன்’

சொல்லிவிட்டு, கணினியை அணைத்துவிட்டு எழுந்தேன்.

குளித்து உடைமாற்றி கிளம்பினேன்.

இரண்டு கிலோமீட்டர்கள் தாண்டியதும் ஃப்ரான்ஸிஸுக்கு ஃபோன் செய்யலாம் என்று பைக்கை ஓரங்கட்டி, பாக்கெட்டில் கைவிட்டபோதுதான் கவனித்தேன்..

ஃபோனை மறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன்..


(தொடரும்)

**************

Monday, September 6, 2010

மிஸ்.யாமினி-Part 2

பகுதி - 1 இங்கே....

** ** ** ** ** ** ** ** ** ** **

பகுதி – 2

ஷோக்ராஜா வெறுப்பின் உச்சத்தில் இருந்தான். அணிந்திருந்த காக்கி உடை என்றைக்கும் இல்லாத அளவு கசங்கியிருந்தது. அவிழ்த்து எறிந்தான்.

குளியலறைக்குப் போய்க் குளித்து விட்டு உடை மாற்றி வந்து ஹாலில் அமர்ந்தான்.

ஃபாரன்ஸிக் குணா கொடுத்த ரிப்போர்ட் படி, இந்தக் கொலையிலும் ஒரு தடயமும் சிக்கவில்லை. இது நகரத்தில் நடக்கும் மூணாவது கொலை. முதல் இரண்டு கொலைகளை அசைபோட ஆரம்பித்தான் அஷோக்ராஜா.

முதல் கொலை: ஒரு டாக்டர். அவரது பிரம்மாண்ட வீட்டின் மொட்டை மாடியில் இறந்து கிடந்தார். சுற்றிலும் ரத்தத் திட்டுகள். தகவல் அறிந்து அஷோக்ராஜா போய்ப் பார்க்கும்போது டாக்டரின் மனைவி மயக்கமாய் இருந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் எதனால் இறப்பு என்று தெரியவில்லை என்று வந்தது. ஒரே தகவல்: அவரது வலது புஜத்தில் ஊசி போடப்பட்டிருந்தது என்பது. ஆனால் எந்த விஷமும் ஏற்றப்பட்டதாக மருத்துவ ரிப்போர்ட் காண்பிக்கவில்லை. டாக்டருக்கு நகரத்தில் அவ்வளவாக நல்லபேர் இருக்கவில்லை. எதிரிகள் யாராவது இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர் வைத்தியம் பார்த்ததில் யாருக்காவது ஏதாவது நேர்ந்து அதன் காரணமான கொலையாக இருக்கலாம் என்ற ரீதியில் டிபார்ட்மெண்டில் பேசிக்கொண்டார்கள். அஷோக்கிற்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. காரணம் அந்த மாதிரி உணர்ச்சி வேகத்தில் கொலை செய்கிறவர்கள் இவ்வளவு ப்ரொஃபஷனலாகச் செய்ய மாட்டார்கள்.

இரண்டாவது கொலை: ஒரு கல்லூரி மாணவன். மதியம் நண்பர்களோடு சாப்பிட்டு விட்டு மறுபடி கல்லூரி போக பைக்கை ஸ்டார்ட் செய்தவன் அங்கேயே மூர்ச்சையாகி விழுந்திருக்கிறான். அவன் சாப்பிட்ட உணவிலோ, சாப்பிட்ட பின் போட்ட பீடாவிலோ எதிலும் விஷமிருப்பதாக டாக்டர் ரிப்போர்ட் காண்பிக்கவில்லை. அவனோடு உணவருந்திய மற்ற நண்பர்கள் பூரண ஆரோக்யத்தோடுதான் இருந்தார்கள். அப்புறம் எப்படி என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அஷோக்ராஜா யோசித்துக் கொண்டிருக்கும்போது அவன் செல்ஃபோன் சிணுங்கியது.

எடுத்தான்.

-ஹலோ.. அஷோக் ஹியர்

-வணக்கம். என்ன அஷோக்.. ரொம்ப மண்டை காஞ்சு போயிருக்க போலிருக்கு. இன்னைக்கு மீட்டிங்ல உனக்கு செம டோஸாமே?

-நீ யாரு?

-அது இப்போதைக்கு வேண்டாம். உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்றதுக்காக ஃபோன் பண்ணினேன்.. அஷோக் பேசிக் கொண்டிருக்கும்போதே, அறைக்கதவு தட்டப்பட பேசிக் கொண்டே சென்று

-என்ன விஷயம் சொல்லு

கதவைத் திறந்தான். வெளியே ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் குணா நின்று கொண்டிருந்தார். சைகையாலேயே உள்ளே அழைத்தான்.

செல்ஃபோனை அவருக்குக் காட்டி ‘எதுவும் பேசவேண்டாம்’ என்றான்.

-அஷோக்.. மூணு கொலைலயும் சம்பந்தம் இருக்குங்கறதத் தவிர வேறெதுவும் உன்னால கண்டுபிடிக்க முடியல. உனக்கொரு குட் நியூஸ் இருக்கு.

-என்ன -இன்னும் ரெண்டு கொலை பாக்கி இருக்கு. முடிஞ்சா அதைத் தடுக்கப் பாரு..

தொடர்ந்து இவன் ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்க, எதிர்முனை துண்டானது.

-ச்சே என்றபடி ஃபோனைத் தூக்கி எறிந்தான் அஷோக்.

*****************************

சந்த் ஆதிமூலம் சொன்னதும் நடுவில் அமர்ந்திருந்த யாமினி எழுந்தாள்.

எல்லாரும் ஒட்டுமொத்தமாய் கைதட்டிக் கொண்டிருக்க அதை ஏற்றுக் கொள்வது போல தலையசைத்தபடி தன் சீஃப் வசந்த் ஆதிமூலத்தை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

“யாமினி ஈஸ் எ யங் அண்ட் ப்ரேவ் கேர்ள். எங்கள் டீமில் அவள் சேர்ந்து ஆறு மாதமாகிறது. இவளது அறிவியல் அறிவும் அயராத உழைப்பும் இந்தக் குறுகிய காலத்தில் இவளை எங்கள் டீமில் முக்கிய இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது”

“மிஸ்டர் வசந்த் ஆதிமூலம்.. எனக்கொரு சந்தேகம்..”

“சொல்லுங்கள் மிஸ்டர் ஆல்பர்ட்”

“இப்போது யாமினி உங்கள் மருந்தை உட்கொண்டு ஆண் போல மாறும்போது அவளது நினைவுகளில் பெண்ணாய் இருந்தபோது நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் இருக்குமா?”

“நினைவுகளில் எந்த மாறுபாடும் இருக்காது மிஸ்டர் ஆல்பர்ட்” சொன்ன வசந்த் ஆதிமூலம் அனைவரையும் நோக்கி தன் பார்வையை வீசினார்.

“வெல் ஃப்ரெண்ட்ஸ். இதோடு இந்த மீட்டிங் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் மாலை இந்த சோதனை முயற்சி தொடங்கும். அதற்கடுத்த நாள் யாமினி ஒரு ஆண்போல உங்கள் முன் இருப்பாள். இரண்டு தினங்கள் சோதனை முயற்சிக்குப் பின் மீண்டும் பெண்ணாக மாறுவாள். ஒரு முக்கியமான விஷயம். இந்த சோதனை முயற்சி மிக மிக ரகசியமானது. அரசாங்கத்தின் சில முக்கிய அதிகாரிகளுக்கும் நமக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. நீங்களெல்லோரும் ஒரு ப்ராஜக்ட் விஷயமாக வந்திருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பதையே இன்னும் ஒரு வாரத்துக்குத் தொடருங்கள்”

மீட்டிங் நிறைவு பெற்றதும் ஒவ்வொருவராய் வந்து யாமினியின் கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

‘யு ஆர் எ ப்ரேவ் கேர்ள்’

‘வாழ்த்துகள் யாமினி... ஒரு முக்கியத்துவமான வரலாற்று நிகழ்வில் நீங்கள் பெயர் பெற்றிருக்கிறீர்கள்..’

ஒவ்வொருவருக்கும் புன்னகையால் நன்றி சொல்லிக் கொண்டிருந்த யாமினியை அழைத்தார் வசந்த் ஆதிமூலம்.

“எஸ் சார்..”

“யாமினி... நாளை முழுதும் உனக்கானது. நாளை மறுநாள் காலை ஒன்பது மணிமுதல் நீ என்னோடு இருக்க வேண்டும். சில மருத்துவசோதனைகள் முடிந்தபின், மாலை ஆறு மணிக்கு பரிசோதனை ஆரம்பமாகிவிடும். இரவு வழக்கம்போல அல்லாமல் எட்டு மணிக்கெல்லாம் நீ உறக்கத்துக்கு செல்ல வேண்டும். காலை எழும்போது நீ ஆணாக மாறியிருப்பாய்”

“எஸ் சார்.. நாளை என் உணவு முறையில் ஏதாவது மாற்றம் தேவையா?”

“இல்லை...” என்றவர் “இப்போது நீங்கள் கலையலாம்” என்று தன் குழுவினருக்குக் கட்டளையிட்டார்.

எல்லோரும் கலைந்து சென்றதும் வசந்த் ஆதிமூலம் தன் ப்ளாக்பெர்ரியை உசுப்பினார். மெய்ல் பாக்ஸைத் திறந்தார். ஒரு வரியில் டைப்பினார்.

அனுப்பினார்:

“ALL WELL PLANNED. ARRANGE FOR RED RUM TONIGHT.. CHEERS!”

*******************************

ந்த டிபார்ட்மெண்ட் வாசலை என் பைக் கடந்தபோது அலறத் தொடங்கியது செல்ஃபோன். ஓரமாக நிறுத்தி விட்டு ஃபோனை காதுக்குக் கொடுத்தேன்.

“ஹலோ... பரிசல்காரன்தானே..”

“ஆமாங்க... நீங்க?”

“வணக்கம்.. என் பேர் வினோத் ப்ரகதீஷ். வினுங்கற பேர்ல ப்ளாக் எழுதிட்டிருக்கேன்”

“தெரியும் வினு.. பார்த்திருக்கேன். சமீபத்துல கூட மகாபலிபுரத்தை ஃபோட்டோ எடுத்துப் போட்டீங்களே..”

“வாவ்.. ஞாபகம் வெச்சிருக்கீங்க போல.. நன்றி... ஆமா இரண்டாம் பாகம் எப்ப போடப்போறீங்க?”

“போட்டாச்சு.. படிச்சுக்கோங்க..”

“சரி.. எனக்கொரு சந்தேகம்.. வசந்த் ஆதிமூலம்தான் வில்லன்கறேன் நான். கரெக்டா?”

“தெரியல வினு.. அதை கதை எப்படிப் போகுதுங்கறதப் பொறுத்தது...”

“சரி.. முதல் பாகத்துல கொலை செய்யப்பட்டது யாமினியா இல்லையா.. அதையாவது சொல்லுங்க”

“அதுவும் தெரியல.. நாளைக்கு டாக்டர் ரிப்போர்ட் வந்தா தெரியும்..”

பேசிக் கொண்டிருக்கும்போதே “சார்... பைக்கை இன்னும் ஓரமா நிறுத்திட்டுப் பேசுங்க சார்.. இப்படி பாதி ரோட்லதான் நிறுத்துவீங்களா?” என்று போலிஸ்காரர் திட்டும் குரல் கேட்கவே இன்னும் ஓரம் கொண்டு போனேன் பைக்கை..

எதிர்முனையில் வினு “சாரி பரிசல்.. ட்ராஃபிக்ல இருக்கீங்கன்னு நினைக்கறேன்.. நான் அப்பறம் கூப்டறேன்’ என்று வைத்தார்..

என்னை விரட்டிய போலீஸ்காரர் என் பின்னால் மறுபடி வந்து நின்றார்.

“உங்க பைக்லேர்ந்து விழுந்தது பாருங்க.. இந்தாங்க” என்று ஒரு கவரை நீட்டினார்.

நான் அந்தக் கவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் அருகில் வந்து நின்ற ஜீப்பில் ஏறி மறைந்தார்.

நான் கவரைத் திருப்பி எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.

“From: Ashok Raja, Sub-Inspector of Police, Tirupur South" என்றிருந்தது.

** ** ** **

(தொடரும்..)

இந்த வாரத்துக்குள்ளாக முடியப்போகிற மினி தொடரின் இரண்டாம் பாகம் இது..


.

Friday, September 3, 2010

மிஸ்.யாமினி - Part 1

‘இன்ஸ்பெக்டர் காலிங்’ –ன அலைபேசித் திரை ஒளிர ஜீப்பை ஓரமாய் நிறுத்திவிட்டு பச்சை நிற பட்டனுக்கு உயிர்கொடுத்தான் அஷோக்ராஜா. சிட்டியின் துடிப்பான சப் இன்ஸ்பெக்டர்.

“எஸ் ஸார்”

“அஷோக்.. ஆர் யூ இன் ரவுண்ட்ஸ் நவ்?”

“எஸ் ஸார். இப்போ குமரன் ரோட்ல இருக்கேன்”

”எ பேட் ந்யூஸ் ஃபார் யூ. பார்க்ல ஒரு டெட்பாடி. உடனே போய்ப் பாருங்க”

”எஸ் ஸார்” - சொல்லிவிட்டு சடாரென தனது ஜீப்பை வலதுபுறம் திருப்பி பார்க்கை நோக்கிச் செலுத்தினான் அஷோக்ராஜா.

இங்கே அஷோக்ராஜாவைப் பற்றி சில குறிப்புகள்:

முப்பதைத் தொடாத வயது. இளம் வயதிலேயே தனது திறமை, உழைப்பின் மூலம் சப் இன்ஸ்பெக்டரானவன். பல கேஸ்களில் மூத்த அதிகாரிகள் மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும்போது கூப்பிடு அஷோக்கை’ என்று சலிப்போடு அழைக்கப்படுவான்.

சலிப்போடு?

இவன் மூக்கை நுழைத்தால் வேறு யார்பேச்சையும் கேட்க மாட்டான். சீனியர் அதிகாரி, அரசியல்வாதி என்று எத்தனை தலையீடுகள் வந்தாலும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் குற்றவாளியை நெருங்கும் வரை பாய்ச்சல்தான்.
அறிமுகம் போதும். இப்போது அஷோக்ராஜா பார்க்கை நெருங்கியிருந்தான்.

பார்க்கில் கூடியிருந்த சொற்ப கூட்டத்தை விலக்கி அந்த பிணத்தின் அருகே சென்றான்..





ஆண். வெற்றுடம்பு. பொட்டுத்துணி இருக்கவில்லை. குப்புற விழுந்த நிலையில் ஒரு கால் முற்றிலுமாக மடங்கியிருந்தது. முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருந்தது. உடம்பைச் சுற்றி அங்கங்கே ரத்தக் கோலம். ஈக்கள் தங்கள் சொந்தபந்தக்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி, அவனுடம்பில் பெரிய மாநாடே நடத்திக் கொண்டிருந்தன.

சுற்று முற்றும் நோட்டமிட்டான் அஷோக்ராஜா. இவன் திரும்பியதும் கூட்டம் ஓரிரு அடிகள் பின்வாங்கியது.

உடலில் ஒவ்வொரு இன்ச்சிலும் கண்களை ஓட்டினான். ஒன்றுமே பிடிபடவில்லை. ஒரு காயமும் இருப்பதாகத் தெரியவில்லை. காதிலிருந்தும், மூக்கிலிருந்தும் ரத்தம் வந்ததாகத் தெரியவில்லை. ரத்தம் எங்கிருந்து வழிந்திருக்கிறது?

அஷோக்ராஜா பார்த்துக் கொண்டே இருந்த போதே ஜீப்பிலிருந்து ஃபாரன்ஸிக் குழுவும், மோப்பநாயும் வந்து கொண்டிருந்தது.

“என்ன மிஸ்டர் அஷோக்ராஜா? அதே சீரியல் டைப்பா?” ஃபாரன்ஸிக் எக்ஸ்பெர்ட் குணா கேட்டதற்கு மௌனமாய் தலையசைத்தபடி சொன்னான். “போங்க குணா.. போய்ப் பாருங்க. இதோட மூணாவது கொலை. சிட்டில ஒரே வாரத்துல தொடர்ந்து மூணு டெட்பாடி கிடைச்சிருக்கு, என்னத்த ****றீங்கன்னு கேள்வி வரும். நீங்க பாருங்க. ரத்தம் எங்கிருந்து வழிஞ்சிருக்குன்னே தெரியலன்னு டாக்டர் ரிப்போர்ட் தரப்போறார். நீங்க ஒரு தடயமும் சிக்கலன்னு சொல்லப்போறீங்க. முந்தின ரெண்டு கொலைலயும் அதானே சொன்னீங்க?”

கொஞ்ச நேரத்தில் உடம்பைப் புரட்டிப் போட்டுவிட்டு பிதுக்கிய உதடுகளுடன் குணா வர, தயாராய் இருந்த ஆம்புலன்ஸில் இறந்தவன் ஏற்றப்பட்டான்.

“மற்ற இரண்டு பேருக்கும், இவனுக்கும் ஒரே வித்தியாசம்தான் அஷோக். இவன் வித்தியாசமான டிசைன்ல வலது கை புஜத்துல டாட்டூ குத்திருக்கான்”

உடனே சுவாரஸ்யமான அஷோக், இறந்தவனின் உடல் கிடத்தப்பட்ட ஆம்புலன்ஸில் ஏறினான்.

கன்னாபின்னாவென ஏதோ டிசைன் டாட்டூவாக உருமாறியிருந்தது.

சற்று நேரம் அதைப் பார்வையிட்டவன், சலித்தபடி கீழிறங்கப் போன விநாடி, திடீரென ஒளிர்ந்தான்.

“குணா.. இங்க வாங்க..”

“என்ன அஷோக்?”

“அந்த டாட்டூவை இந்த கோணத்திலிருந்து பாருங்க.. ஏதாவது எழுத்துகள் தெரியுதா?”

சில விநாடிகளில் “வாவ்.. எஸ் அஷோக்”

“ஒவ்வொரு எழுத்தா சொல்லுங்க..”

குணா சொன்னார்:

Y - A - M - I - N - I


*******************************************

“மிஸ்டர் வசந்த் ஆதிமூலம்.. நீங்கள் சொல்வது நம்பவே முடியாதது. இது எத்தனை சதவிகிதம் சாத்தியமானது?”

பதினைந்து விஞ்ஞானிகள் அமர்ந்திருந்த அந்த குளிரூட்டப்பட்ட அறையில் நடுநாயகமாய் அமர்ந்திருந்த விஞ்ஞானி வசந்த் ஆதிமூலத்தை நோக்கி சற்றே உயர்த்த குரலில் கேட்டார் ப்ரான்ஸிலிருந்து வந்திருந்த விஞ்ஞானி இம்மானுவேல்.

வசந்த் ஆதிமூலம் தொண்டையை செருமிக் கொண்டார். தெளிவான ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார்.

“என் அன்பு நண்பர்களே... மனித உடலில் மூளை என்பது மிகச் சிக்கலான ஆச்சர்யம். நமது எல்லா செயல்பாடுகளையும் தீர்மானிப்பதும், வழிநடத்துவதும் மூளைதான். ஒரு குழந்தை குழந்தையாய் இருக்கும் வரை உடலுறுப்புகள் தவிர வேறு ஆண் பெண் வேறுபாடுகள் தெரிவதில்லை. வயதுக்கு வந்த பின் ஹைப்போதாலமஸின் செயல்பாட்டால் ஆண் ஒரு மாதிரியும், பெண்கள் ஒரு மாதிரியும் நடத்தையில் வேறுபடுகிறார்கள். அவர்கள் மூளையின் வலது, இடது பாகங்களைப் பயன்படுத்துவதிலும் வித்தியாசம் உள்ளது. ஆண் ஹார்மோன் அதிகம் கொண்டு வளர்ந்த பெண்கள் ஆண்களுக்குரிய அம்சங்களோடும், பெண் ஹார்மோன் அதிகம் கொண்டு வளர்ந்த ஆண்கள் பெண்களுக்குரிய அம்சங்களோடுமிருப்பார்கள். உதாரணத்துக்கு பெண்களில் மூளையில் உள்ள ஆண்ட்ரோஜன், எக்ஸ்ரோஜன் சமாச்சாரங்கள் பெண்களிடமுள்ள மானோமைன் ஆக்ஸிடேலின் அளவைக் குறைப்பதால் அவர்கள் ஆண்களை விட அதிக பயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இப்படி பெண்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் மூளையின் மடிப்புகளில் சுரக்கும் திரவ மாறுபாடுகளே காரணம், அதே போலத்தான் ஆண்களுக்கும்..”

இடைமறித்தார் இமானுவேல்..

“ஓகே வசந்த் ஆதிமூலம். நீங்கள் சொல்வது சரி. ஆனால் ஆணோ பெண்ணோ நினைத்த மாத்திரத்தில் தங்களை மாற்றிக் கொள்வதால் என்ன பயன் இருக்கப் போகிறது?”

“முதலில் என் கண்டுபிடிப்பைக் கூறிவிடுகிறேன். நானும் இதோ என்னுடன் அமர்ந்துள்ள இளம் விஞ்ஞானிகள் குழுவும் பல வருடம் ஆராய்ந்து இந்த மருந்தை உருவாக்கியுள்ளோம். இதில் இரண்டு வெவ்வேறு மருந்துகள் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் உட்கொண்ட ஆறு மணிநேரத்தில் ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாற்றமடையலாம். இரண்டுக்கும் வெவ்வேறு மருந்து வகைகள் உள்ளது. இந்தப் பேக்கில் உள்ளதில் ஒன்று உடல்ரீதியாக உங்களை ஆண் தன்மைக்கோ, பெண் தன்மைக்கோ மாற்றும். மற்றொன்று இன்ஜெக்‌ஷன். ஒரு பெண் அதைப் போட்டுக் கொண்டால் மூளை ஆண்களுக்கான ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்து, அவளை ஆணாகவே மாற்றிவிடும்”

“அதிலிருந்து அவள் மீண்டுவர நினைத்தால்?”

“மாற்று மருந்தான பெண்களுக்கான மருந்தை உட்கொண்டால் போதும்”

“உடல் தன்மையில்...”

“உடல் தன்மையில் மார்பகத்தை பெரிதாக்கவோ, இல்லாமல் சுருங்கச் செய்யவோ எனது மருந்து உதவும். ஆனால் ஜன்னேந்திரியத்தை மாற்றும் சக்தி என்னிடமில்லை. இப்படி பெண், ஆணாக மாறி அல்லது ஆண் பெண்ணாக மாறி நாட்டின் பாதுகாப்புக்காக உளவு பார்ப்பது உட்பட பல வேலைகளுக்கு பயன்படுத்த எண்ணி இதை சமர்ப்பித்தேன். எங்கள் அரசு இதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க உலகத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான உங்களிடம் இதை நிரூபிக்கச் சொல்லிவிட்டது”

“எப்படி நிரூபிக்கப் போகிறீர்கள்?”

“எங்கள் குழுவிலிருந்தே யாராவது ஆணையோ, பெண்ணையோ தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இதைக் கொடுத்து ஒரு மாதத்திற்கு நம்மோடு இருக்கச் செய்வேன். என்னென்ன பயன் என்பதை அப்போது உங்களுக்கு உணர்த்துகிறேன்.”

“யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?”

“எங்கள் குழுவின் ஏழு பேருமே இதற்கு சம்மதித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒருவர்தான் என்பதால் உங்கள் முன்னிலையிலேயே யாராவது ஒருவரை தேர்வு செய்யப் போகிறேன்...”

சற்று இடைவெளி விட்ட வசந்த் ஆதிமூலம் தனது குழுவின் ஏழு பேரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, தீர்க்கமான குரலில் சொன்னார்:

“முடிவு செய்து விட்டேன் மிஸ்டர். இமானுவேல்”

“யார் அவர்?”

“மிஸ். யாமினி”

****************************************

வீட்டின் கதவு தட்டப்பட, கணினியில் அமர்ந்து டைப்படித்துக் கொண்டிருந்த நான் எழுந்தேன்.

“பரிசல்காரன்....” வந்தவர் ஒருவித சந்தேகத்தோடு என்னைப் பார்த்துக் கேட்டார்.

“நான்தான்.. உள்ள வாங்க” கதவை முழுவதுமாய்த் திறந்தேன்.

“வணக்கம். ஸாரி பரிசல். ப்ளாக்ல உங்க ஃபோட்டோஸ் பார்த்திருக்கேன். டக்னு அடையாளம் தெரியல. என் பேரு கோபிநாத். பெங்களூர்ல இருக்கேன். உங்க பதிவுகளை ரெகுலரா படிக்கறதுண்டு. ஒரு வேலை விஷயமா கோவை வந்தேன். போற வழில உங்களைப் பார்த்துட்டுப் போலாமேன்னு வந்தேன்..” சொல்லியபடியே தன் பாக்கெட்டிலிருந்து ஒரு பேனாவைப் பரிசாய் அளித்தார்.

“இது நாலாயிரம் ரூபா பேனா பரிசல். உங்களுக்குத்தான் பேனாக்கள்னா ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்..”

பிரமித்தபடி அதைப் பார்த்த நான் “நன்றிங்க கோபி” என்றேன்.

“பரவால்லைங்க...”

“ஸாரி.. வீட்ல வேற யாரும் இல்ல. நான் சுமாரா காஃபி போடுவேன். இருங்க” என்றபடி எழப்போனவனை கையமர்த்தினார்.

“அதெல்லாம் வேணாம்” என்றவரின் பார்வை உயிர்த்திருந்த கணினித்திரைக்குப் போனது.. “ஏதோ எழுதிகிட்டிருக்கீங்க போல”

“ஆமா கோபி. ஒரு மினி தொடர் எழுதின நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் என்னை அடுத்த தொடர் எழுதச் சொல்லிருந்தார். அவருக்காக ஆரம்பிச்ச தொடர் இது..”

“ஓ.. அவர் மினி.. நீங்க யாமினியா?”

மையமாய் சிரித்தேன்.. “ஆனா இந்த யாமினி தலைப்பு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்டது..” நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்கள் கணினியை முழுவதும் ஆக்ரமிக்கத் தொடங்கியது.

நான் காபி போட்டு வரலாம் என்று உள்ளே சென்ற சில நிமிடங்களில் என் பின்னால் வந்து ‘பரிசல்.. செமயான ஆரம்பம். ப்ளீஸ்... எனக்காக அடுத்த அத்தியாத்தைச் சொல்லுங்களேன்..” என்றார்.

“மன்னிக்கணும் கோபிநாத். அது எனக்கே தெரியாது... அடுத்த அத்தியாயம் வரும்போது படிச்சுக்கோங்க”

“எப்ப வரும்?” காஃபியை ருசித்துக் கொண்டே கேட்டார்.

“நாளைக்கு அல்லது திங்கள் வரலாம்”

ஒருவித ஏமாற்றத்தோடு அவர் கிளம்பிப்போக, அடுத்த அத்தியாயத்தை யோசிக்க ஆரம்பித்தேன் நான்.


.

நான்கு அல்லது ஐந்து பகுதிகள் கொண்ட மினி தொடரின் முதல் பகுதி இது.


.