Showing posts with label நட்சத்திரப் பதிவு. Show all posts
Showing posts with label நட்சத்திரப் பதிவு. Show all posts

Thursday, July 9, 2009

அவியல் (09.07.09)

முத்திரை படத்தின் ஐஸ் ஜோக்கைப் போலவே கடந்த வாரம் ஒன்று நடந்தது. என் மகள்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் போகும்போது அன்றைய நாளிதழ் வாங்க மறந்தது நினைவுக்கு வந்தது. என்னைப் பார்த்தாலே நான் வாங்கும் நாளிதழ்களை கடைகாரர் கொடுத்தனுப்புவார் என்பதால், வழக்கமான கடையில் நிறுத்தி, பைக்கில் அமர்ந்தவாறே மேகாவை மட்டும் இறங்கச் சொல்லி 'போய் பேப்பர் வாங்கீட்டு வா’ என்றேன். மேகா இறங்கியவாறே கேட்டாள்:

“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா?”

***********************

ரண்டு தினங்களுக்கு முன் ஸஸி என்றொரு நட்பைப் பற்றிய பதிவு எழுதியிருந்தேனல்லவா? அதைப் படித்த என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் முருகேசன் என்பவர் ஒரு ஆச்சர்யமான விஷயம் சொன்னார். அவரும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் ஒரே பெயர் – முருகேசன். மூவரின் மனைவிகளின் பெயரும் செல்வி. “ஆனால் இது பேசிக் கொண்டெல்லாம் செய்யவில்லை. அதுவாக நிகழ்ந்தது. இன்றைக்கும் வருடத்துக்கு மூன்று நான்கு முறை சந்தித்துக் கொள்வதுண்டு” என்றார்.

சபாஷ்!

******************************

திமூலகிருஷ்ணனின் கதை ஒன்று விகடனில் வெளிவந்திருந்தது. அழைத்துச் சொன்னார். “பரிசல்.. உங்களையும் நர்சிம்மையும் முந்திட்டேனே” என்றார். புரியவில்லை. கேட்டதற்கு சொன்னார். ‘உங்களுது 26ம் பக்கம் வந்தது. நர்சிம்முது 91ம் பக்கம் வந்தது. என்னோடது 19ம் பக்கம்ல?’ என்று கெக்கலித்தார்.

அடக் கடவுளே என்று இதை நர்சிம்மிடம் சொன்னபோது அவர் சொன்னார்

“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? முக்கால்வாசிபேர் விகடனை பின்னாலிருந்துதான் படிப்பாங்க”

அதுசரி! நல்லாதான்யா சோடி போட்டுக்கறாங்க!

********************

ந்து ரொம்ப நாளானாலும் ‘குளிர்’ படத்தில் சிம்பு பாடிய ‘மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்’ பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. தற்போது ‘வாமனன்’ பாடல்கள்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ‘ஏதோ செய்கிறாய் எனை ஏதோ செய்கிறாய்’ பாடல்களின் இடையே யுவனின் இசை விளையாட்டு அபாரம். விஜய் ஏசுதாஸின் குரலில் ‘யாரைக் கேட்பது’ நல்ல மெலடி இருந்தாலும் ‘ஒரு தேவதை பார்க்கின்ற நேரமிது’தான் அதிக முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ரூப்குமார் ரத்தோடின் குரல் வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்றாலும் இதையே ஹரிஹரன் பாடியிருந்தால் இன்னொரு ‘வெண்மேகம் பெண்ணாக’ கிடைத்திருக்கும்.

******************************

ல்யாணங்களுக்குப் போனால் மொய் கவரில் வித்தியாசமாக வாழ்த்துகள் எழுதிக் கொடுப்பது என் வழக்கம். எனக்கு மட்டும் எழுதிக் கொள்ளாமல் கூட வரும் நண்பர்களின் மொய் கவரையும் வாங்கி (காசு போடுவீங்களா-ன்னு கேட்கக் கூடாது!) வித்தியாசமான வாசகம் எழுதிக் கொடுப்பேன். சமீபத்தில் ஒரு கல்யாணத்துக்கு அதே மாதிரி எழுதிக் கொடுக்கும்போதுதான் கவனித்தேன்.

மொய் எழுதும் மகராசன்கள் பெயரை மட்டும் பார்த்து, கவரைக் கசக்கிப் போட்டு பணத்தை எண்ணி நோட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

பணத்தோடு எங்கள் வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் எசமானர்களே என்று சொல்லிவிட்டு வந்தேன்.

****************

மீபத்தின் அரசியல் ஸ்டண்டுகளில் மிகக் கவர்ந்தது கலைராஜன் – எஸ். வி. சேகர் சண்டைதான். ‘எஸ்.வி.சேகர் பன்றிகாய்ச்சல் வந்து இறந்தாலும் என்னைக் குற்றம் சொல்லுவார்’ என்று கலைராஜன் சொன்னதுக்கு ஒரு நிருபர் ‘அத்தனை நோயிருக்க பன்றிக்காய்ச்சலை ஏன் சொன்னீர்கள்?’ என்று கேட்டார். (நல்ல கேள்வி!) கலைராஜனோ ‘அதுதானே ஒரு இடத்தில் நிற்காமல் அங்கே இங்கே என்று அலைகிறது. அதனால்தான்’ என்றிருக்கிறார்.

அடுத்ததாக நிருபர் போனது எஸ்.வி.சேகரிடம். ‘கலைராஜன் உங்களை பன்றிக்காய்ச்சல் வந்து சாவார் என்று சொல்லியிருக்கிறாரே’ என்று கேட்டிருக்கிறார். எஸ்.வி.சேகர் சொன்னாராம். ‘அதெல்லாம் வராது. ஒருவேளை கலைராஜன் என்னைக் கடித்தால் வரலாம்’

நல்லாதான் பேசிக்கறாங்கய்யா மக்கள் பிரச்சினையை!

*************************

திவரும் நண்பருமான ராமன் வெய்ட் லாஸுக்கு ஒரு வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு நண்பர் சாமிநாதன் சென்று அவரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு விஷயம் சொன்னார்.

‘ஹாங்காங்கில் எடையைக் குறைக்க எக்ஸ்ட்ரா கொழுப்பு இருக்கும் இடத்தில் ஒரு ஆய்ண்ட்மெண்டை தடவி தீயால் கொளுத்திவிடுவார்களாம். அந்த இடத்தில் கொழுப்பு முழுவதும் கரைந்து விடுமாம். அப்புறம் எடை குறைந்துவிடுமாம்.

“இப்படிப் பண்ணினா நம்ம வெய்ட்டே தெரியாதுங்க. ரொம்ப லேசா தெரியுமாம்” என்றார் சாமிநாதன் வெகு சீரியஸாக.

நான் கேட்டேன்… “கரெக்ட்தான். தீ நல்லா எரிஞ்சா நம்ம வெய்ட்டு நமக்கு தெரியாதுங்க. தூக்கறவனுக்குத்தானே தெரியும்?”

**************************

நேற்றைக்கு என் மகளின் பிறந்தநாளை ஏன் சொல்லவில்லை, பதிவெழுதவில்லை என்று பல மிரட்டல்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி. நட்சத்திரம் ஆனாலும், பிறந்தநாள் ஆனாலும் எல்லாருக்கும் நான் சொல்லிக் கொள்வது முதல் பதிவு/அன்றைய பதிவு ‘நான் இந்த வார நட்சத்திரம்’ அல்லது பிறந்தநாள் என்று மட்டும் போடுங்கள். இரண்டு மூன்று மணிநேரம் கழித்து பதிவு போட்டுக் கொள்ளலாம். என்ன எழுதினாலும் ‘வாழ்த்துகள்’ என்ற பின்னூட்டம்தான் அதிகம் வரும்.

இதைக் குறித்து ஒரு பிரபல பதிவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “நான் 200வது பதிவுக்கு ஒரு ஐடியா வெச்சிருக்கேன். நான் ஒரு பொண்ணை சந்திக்கறா மாதிரியும்.. அவ என் பதிவுகள் பத்தி பேசிகிட்டே வர்றா மாதிரியும்….” என்று ஆரம்பித்து சொன்னார். அபாரமாக இருந்தது. “சூப்பர் பாஸு! செம ஃபார்ம இருக்கீங்க.. எழுதுங்க.. கலக்குங்க” என்றேன். ‘ங்கொய்யால.. இது என் 200வது பதிவுதான். நான் எழுதி வந்துடுச்சு. அங்க வந்து படிக்காம வெறும் வாழ்த்துகள் சொல்லீட்டு பேச்சைப் பாரு’ என்றார்.

வழித்த அசடை துடைத்துக் கொள்ள வெகுநேரமானது.

***************************

அவியலில் அக்டைசியில் ஏதாவது கவிதையைக் குறிப்பிடுவது வழக்கம். இன்றைக்கு கவிதைக்கு பதில் கவிதைகளைப் பற்றி..

நேற்றைக்கு நான் எழுதிய கவிதைகளைப் படித்து ஒரு பதிவர் அலைபேசினார். ‘நீங்க மொதல்லயே கவிதையெல்லாம் எழுதியிருக்கீங்களா.. எனக்கு அவ்வளவா வராது’ என்றெல்லாம் சொன்னவர் அடுத்து சொன்னார். “நீங்க எழுதினதுல சிலது சூப்பர். ஒண்ணு சுமார்தான்” என்றார். “ஏன் சுமார்?” என்று கேட்டதற்கு “அந்தக் கவிதை எனக்கு படிச்ச உடனேயே புரிஞ்சுடுச்சுங்க” என்றார். நம்புங்கள்.. இதை அவர் வெகு சீரியஸாகச் சொன்னார்!

ஜ்யோவ்ராம், அனுஜன்யா போன்றவர்கள் ‘நேற்றைய கவிதையின் விளக்கம்’ என்று எழுதும் கவிதைக்கு அடுத்த நாள் விளக்கம் போட்டு இவருக்கு பதிலடி கொடுக்க வேண்டுகிறேன்!


.

Tuesday, July 7, 2009

ஸஸி

னக்கு ஸஸியைப் பழக்கமானது இன்னொரு நண்பனான வேலுச்சாமி மூலம்தான். என்னவோ ஆரம்பத்திலேயே அவன் ரசனையும் என் ரசனையும் ஒத்துப் போனது என்றெல்லாம் சொல்லமாட்டேன். அவனுக்கு கமலஹாசனைத் தான் பிடிக்கும். எனக்கு ரஜினி என்று வேறுபாடுகள் இருந்தனதான். ஆனாலும் அவன் என்னவோ எனக்கு நெருக்கமானவனான ஆனான்.

உடுமலைப்பேட்டையில் இருந்தபோது ஸஸி அவனது அண்ணனின் ஜனனி ஆர்ட்ஸில் அவரோடு சேர்ந்து வரைந்து/எழுதிக் கொண்டிருந்தான். அந்த ஐடியா இந்த ஐடியா என்று பேசிப் பழகி இருவருக்குள்ளும் நெருக்கம் வளர ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் அவனோடு வேறு யாராவது பேசினால் கோவம் வந்தது. அவனுக்கு கவிதைகள் எழுதினேன். அவனே ‘என்னடா பண்ணினேன் நான் என் மேல இவ்ளோ பாசமா இருக்க’ என்றெல்லாம் கேட்க ஆரம்பத்தான்.

அந்த சமயத்தில் ஒரு வதந்தி உலா வந்தது. ஒரு குறிப்பிட்ட நாள் நள்ளிரவோடு உலகம் முடிந்துவிடப்போகிறது என்று. நானும் அவனும் ’ ‘அப்படி ஆச்சுன்னா நான் உன்கூடதான் இருப்பேன்’ என்றெல்லாம் பேசிக் கொண்டோம். அந்தக் குறிப்பிட்ட நாளில் அவன் இந்தியா சில்க் ஹவுஸ் விளம்பர பேனர் வேலைகளுக்காக திருப்பூர் சென்று தங்கியிருந்தான். நான் அங்கே இங்கே காசு கடன் வாங்கி உடுமலையிலிருந்து கிளம்பி திருப்பூர் சென்று அன்றிரவு அவனோடு தங்கினேன். காலையில் கண்விழித்தபோது சுற்றிலும் குஷ்பூவும், சுகன்யாவும் சிரித்துக் கொண்டிருக்க ‘நாம் இருக்கறது சொர்க்கமா நரகமா’ என்று ஆராய்ந்தபோது பெய்ண்டை முகத்தில் கொட்டி ‘எழுந்திருடா நாயி’ என்று திட்டியபோதுதான் உலகமெல்லாம் அழியவில்லை. இன்னும் நிறைய சந்திக்க வேண்டியிருக்கிறது என்று புரிந்தது.

அவனும் நானும் இன்னொரு நண்பரான நாகராஜும் (பாக்யா ஆர்ட்ஸ்.. இப்போது பாரதி ஆர்ட்ஸ்) சேர்ந்து பாண்டிச்சேரி சென்றோம். முதல்முதலாக நான் வெளியூருக்கு நண்பர்களோடு சென்றது அதுதான். அங்கே பாலாஜி தியேட்டரில் பலான படம் போடுவார்கள் என்று கேள்விப்பட்டு அங்கே சென்றோம். அதுக்கேண்டா அங்க போனீங்க என்று கேட்பீர்களானால்…

ஸஸி உடுமலையில் எல்லா தியேட்டர்களிலும் ஆர்ட்ஸ் வேலை செய்யவதால் எல்லாரையும் பழக்கப் படுத்திக் கொண்டு இந்த மாதிரி அஜால் குஜால் படங்களுக்குப் போய்ப் பார்த்துவிடுவான். எனக்கு உடுமலையில் அந்த மாதிரிப் படங்களை போஸ்டரில் ஓரக்கண்ணால் பார்ப்பதற்கே பயமாக இருக்கும். ஒரு படமாவது பார்க்க வேண்டுமென்பது என் லட்சியமாக இருந்தது.

ஒரு வழியாக ரிக்‌ஷாக்காரர் அந்த தியேட்டரை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது நேரமாகி அதற்குப் பதில் வேறு ப்ரோக்ராமை ஏற்படுத்திக் கொண்டு அதை கேன்சல் செய்தோம். பாண்டிச்சேரியைப் பற்றி இங்கே குறிப்பிடக் காரணம் அங்கேதான் நாங்கள் மூவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டோம்.

“நாம மூணு பேரும் இப்படியே இருக்கணும். கல்யாணமானாலும் மூணு பேரும் ஒரே காம்பவுண்ட்ல வீடு பார்த்து போகணும். (வீடு கட்டணும் என்று கூட சொல்லத் தெரியவில்லை அப்போது!) நாம எப்படி ஃப்ரெண்ட்ஸா இருக்கமோ, அதே மாதிரி ஃப்ரெண்ட்ஸா இருக்கற மூணு பேரை செலக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்” - இப்படிப் போனது அந்த ஒப்பந்தம்.

அங்கிருந்து வந்து உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவில் மூவருமாக க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். ‘ஸ்டூடியோவுக்குள்ள வேண்டாம்ணா. வெளில வந்து எடுங்க. வித்தியாசமா இருக்கணும்’ என்று சொல்லி வெள்ளை சுவர் பிண்னணியில் எடுத்த அந்த புகைப்படத்தில் மூவரும் ஒரே மாதிரி கைகட்டிக் கொண்டதால் போலீஸ் ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட மாதிரி ஆனது வேறு கதை!

தற்குப் பிறகு நடந்ததெல்லாம் வேறு..

எனக்கு திருமணம் நடந்தபோது ஸஸியோ நாகராஜோ என்னுடன் இல்லை. அதே மாதிரிதான் மற்ற இருவருக்குமே. ஸஸியும் என்னைப் போலவே கந்தர்வ கல்யாணம் செய்து கொண்டான். ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை என வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டான்.

சென்ற மாதத்தில் “ஜூலை 2 குழந்தைகளுக்கு காதுகுத்து வெச்சிருக்கேன்” என்று அழைப்பிதழோடு வந்தான். ஸ்டிக்கர் பொட்டை கம்மல் மாதிரி ஒட்டி வித்தியாசமாக அழைப்பிதழை வடிவமைத்திருந்தான். மேடைக்குப் பின்னால் பேனர் வைக்க “ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணு”ன்னு எழுதவா என்று கேட்டு என்னிடம் திட்டு வாங்கிக் கொண்டான்.

அப்பேர்ப்பட்ட ஸஸியின் குழந்தைகள் காதுகுத்துக்கு நான் போகவில்லை. தேதியை மறந்துவிட்டேன் என்ற உண்மை இந்த இடத்தில் இந்தப் பதிவை புனைவாக மாற்றும் அம்சமாக ஆக்கிவிடுகிறது. ஆனால் அதற்குப் பிறகு அவன் அழைத்துப் பேசியது புனைவை விட சுவாரஸ்யம்.

அதே ஜூலை 2 மாலை அவன் அழைப்பு வந்தபோதுதான் “ஐயையோ எனப் பதறினேன். என்ன சொல்வது என்று தெரியாமல் ‘கொஞ்சநேரம் கழிச்சு கூப்பிடறேண்டா’ என்று கட் செய்துவிட்டு ‘மறந்துவிட்டேன் என்ற உண்மையைச் சொல்லிவிடலாம்’ என்று அடுத்த நாள் தயக்கத்தோடே அலைபேசினேன்.

எடுத்த உடனே “மன்னிச்சுக்கடா... என்னாச்சுன்னா” என்று ஆரம்பித்தவனை இடைமறித்தான்.

“ஏன் வர்லன்னு கேட்க கூப்பிடலடா.. ஏதாவது வேலை இருந்திருக்கும் விடு. நான் கூப்டது… ஆடித்தளுபடிக்கு குறிஞ்சி சில்க்ஸுக்கு நோட்டீஸ் அடிக்கணும். கலக்கலா ஒரு மேட்டர் யோசி. சாயந்திரமா கூப்பிடறேன்” என்று வைத்துவிட்டான்.

எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.

உங்களுக்கும் இதேபோன்ற நண்பர்கள் இருக்கக் கூடும். எந்த பிரதிபலனும் இல்லாமல், எதிர்பார்க்காமல் புரிந்துணர்வோடு உங்களோடு அவர்கள் இருக்கக்கூடும். பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை என்பதையெல்லாம் மீறிய அந்த நட்பு, எப்போதாவது பார்த்தாலும் பேசினாலும் ஈரம் காயாமலே இருக்கும். உறவுகளிலேயே அந்த சக்தி நட்புக்கு மட்டும்தான் உண்டு!

ஐ லவ் யூ ஸஸி!

Monday, July 6, 2009

அ-

திகாலை ஆறுமணிக்கு பனி அதிகமாகத் தெரிந்தது. பால்கனியிலிருந்து பார்க்க அங்கங்கே மரங்களிடையே ஒளிந்துகொண்டிருக்கும் கட்டிடங்கள் அழகாகத் தெரிந்தது. இன்னும் கொஞ்ச காலப்போக்கில் மரங்கள் குறைந்து கட்டங்கள் அதிகரிக்கும். நாம் தண்ணீரை பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பிக் குடித்துக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருப்போம். தண்ணீருக்கு பதில் கோக் அல்லது வேறேதாவது...

லுவலகத்தில் எல்லாருமாக ‘நாடோடிகள்’ பார்க்கலாம் என்று முடிவானது. போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். தினசரிகளில் ‘இளம்ஜோடி தஞ்சம்’ என்ற பத்திக்குப் பின் இருக்கும் பல இளைஞர்களின் பங்களிப்பின் வலியைச் சொல்லியிருக்கும் படம். சபாஷ்! ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அலுவலக மதிய உணவு அறை சூடாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம் குறித்த விமர்சன விவாதங்களால். 'அம்மா அப்பாவைவிட உயர்ந்தது நட்புங்கறீங்க. ஆனா அப்பா அம்மா 'உனக்காக நான் கஷ்டப்பட்ட்து வீணாப்போச்சே'ன்னு வந்து சண்டை போடறாங்களா என்ன? அதுவுமில்லாம ஒருத்தங்களுக்கு கல்யாணம் பண்ணிவெச்சதோட உங்க கடமை முடிஞ்சுது. நான் பண்ணி வெச்ச கல்யாணம் அதனால நீ அவளோ/அவனோ என்ன பண்ணினாலும் சகிச்சுகிட்டு வாழணும்ன்னு கண்டிஷன் போடறது எந்த விதத்துல நியாயம்ன்னு புரியல.. – இப்படியாகத் தொடர்ந்தது அந்த விவாதம். 'ஒரு படத்தை வெறும் மூளையோட பார்க்கத் தெரிஞ்சவன் பாக்கியவான்' என்று நான் என் நண்பர்களிடத்தில் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதுதான் எனக்கு தோன்றியது. இவர்களாக ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டு விவாதிப்பதைக் கேட்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.

ந்தப் படம் முழுக்க முழுக்க நட்பைச் சொல்லும் படம். நட்புக்காக எதையும் தாங்குவேன், நண்பனின் நண்பனுக்காக நானும் தோள் கொடுப்பேன் என்று சொல்லும் படம். அதை காதல் படமாக பாவித்து ஒன்றிரண்டு பேர் விவாதித்தது இன்னும் வேறு கோணம்.

வர்கள் கேட்டது…

'அந்தப் படத்துல காதலைப் பத்தி என்ன சொல்றாரு இயக்குனர்? ஓடிப்போன அந்தக் காதலர்களுக்கு காதல்னா என்னான்னே தெரியல. ஹீரோவுக்கு தன்னோட காதலை காப்பாத்திக்க தெரியல. நண்பனோட காதலுக்கு உதவத் தெரிஞ்சவனுக்கு தன் காதலி தன் மீது வைத்திருக்கும் காதலைப் புரிஞ்சுக்கத் தெரியல. அப்படிப் புரிஞ்சுகிட்டிருந்தார்ன்னா சண்டை போட்டாவது தன் காதலியோட ஆசையை/ தன்னோட ஆசையை நிறைவேத்திகிட்டிருப்பாரு இல்லையா? கவர்மெண்ட் வேலை மண்ணாங்கட்டின்னு தன்னோட காதலையும் கனவாக்கிட்டாரு. அவரோட தங்கச்சியோட காதலையும் அவர் அங்கீகரிக்கக் காரணம் அவ காதலிக்கறது தன் நண்பன்கறதால மட்டும்தானே தவிர காதலுக்கு குடுத்த மரியாதை இல்லையே?' இப்படிப் போகிறது அவர்கள் வாதம். அடுத்த படத்தை காதலுக்காக எடுத்து இவர்களுக்கு பதில் தருமாறு சமுத்திரக்கனிக்குப் பரிந்துரைக்கிறேன்.

திஷா எனக்கு நேற்று முன்தினம் போட்ட பின்னூட்டம் பலவித சர்ச்சைகளைக் கிளப்பியிருப்பதாக அறிகிறேன். அது ச்சும்மா. யாரும் வருத்தப்படுமளவுக்கு சீரியஸான விஷயமில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவனின் பின்னூட்டம் பார்த்து அதிஷாவுக்கு அழைத்துச் சொன்ன பிறகு இணையம் பக்கம் வரவே இல்லை நான். நண்பர்களின் அழைப்புதான் அதுகுறித்து எனக்குத் தெரிவித்தது. அதிஷாவையோ, மீனவனையோ, மணிகண்டனையோ வேறு யாரையுமேவோ வரைமுறை மீறித் திட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. உரிமையிருப்பின் அழைத்துச் சொல்லலாம். அவ்வளவே. இருந்தாலும் கொஞ்சம் வரம்புமீறிப் போன மணிகண்டனின் பின்னூட்டத்திற்காக அதிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன். இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ!

ண்ணாச்சி வடகரைவேலனைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இது முதுகு சொறிதலாக நினைத்துக் கொண்டாலும் சரி. பரஸ்பர அன்பால் பலரையும் அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் தவறாமல் அவரது பதிவுகளைப் படித்தவர்களுக்கு அவரின் எழுத்தின் முன்னேற்றம் புலப்பட்டிருக்கும். கேட்டால் சாதாரணமாக ‘இது சாம்பிள்தான்’ என்கிறார். நான் சொல்லவந்தது அவர் எழுத்தைப் பற்றியல்ல. நண்பர்கள் வட்டாரத்தில் யாரால் யாருக்காவது ஏதாவது என்றால் இவரது அழைப்புதான் முதலில் போகும். ‘என்னடா பண்றீங்க.. அடங்க மாட்டீங்களா?’ என்று திட்டு வேறு விழும். யார் மீது தவறு என்ற விசாரணைக்கெல்லாம் போகாமல் அப்போதைக்கு விவகாரத்தை பெரிதாக்காமல் பிரச்சினையை முடிப்பதில் அவர் வல்லவர். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் இருவருமோ, அல்லது ஒருவரோ அடங்கிப் போய்விடுவதால் வீணான சச்சரவுகள் தவிர்க்கப்படும். அந்த வகையில் அண்ணாச்சி ஒரு குடும்பத்து பெரியவரைப் போல நடந்து கொள்வதால் எங்கள் மனசுக்குள் சிம்மாசனமிட்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் அவரைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன்!

டுத்ததாக நான் கைலுக்கல்களை தெரிவிப்பது பைத்தியக்காரனுக்கு! மனுஷன் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தாலும் அறிவித்தார். ஜூன் முப்பது வரை பதிவர்களின் உரையாடலில் ‘சிறுகதைப் போட்டிக்கு எழுதியாச்சா’ தவறாமல் இடம்பெற்ற வாக்கியமாக இருந்தது. நல்லாயிருந்தது நல்லாயில்லை என்ற எல்லைகளை மீறி கலந்து கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

வியல் போலத் தோன்றினாலும் இது அவியல் அல்ல. வெறும் அ தான் என்பதை மீண்டுமொருமுறை (இப்பத்தானடா சொல்ற?) தெளிவு படுத்திக் கொள்கிறேன். அவியல் இரண்டொரு அல்லது இன்னொரு நாளில் வரும்.

.