Wednesday, April 13, 2011

உங்கள் பொன்னான வாக்கை...


னக்கு அரசியல் மேல் அப்படி ஒன்றும் பெரிய தொடர்போ, ஆர்வமோ இல்லவே இல்லை. சீசனுக்காக இன்றைக்கு அரசியல் அலசல்.

இன்றைக்கு வாக்குப்பதிவு நாள். இந்த தேர்தல் பற்றிக் கொஞ்சம் அலசுவோம்.

தி.மு.க. அரசின் மீது அதிகமான எதிர்ப்பலைதான் இருந்தது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில். ஆனால் சரியான காய் நகர்த்தல்கள், ட்ராமாக்கள், செண்டிமெண்ட் ஷோக்கள், விளம்பரங்கள் என்று கொஞ்சம் எதிர்ப்பை ஆளுங்கட்சியினர் சரிகட்டிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

வடிவேலுதான் இந்த முறை தி.மு.கவின் ஸ்டார் பேச்சாளர். எப்பேர்ப்பட்ட தலைவர்களை எல்லாம் முன்னிறுத்தி பேசி ஓட்டுக் கேட்ட கட்சி, இன்றைக்கு வடிவேலுவை முன்னிறுத்தித்தான் ஓட்டுக் கேட்டாக வேண்டிய சூழலுக்கு வந்தது கொடுமைதான்.

வடிவேலு மீது எனக்கெந்த வருத்தமும் இல்லை. நான் சொல்லி நீங்கள் கேட்கவேண்டிய அவசியமெப்படி இல்லையோ அதேதான் வடிவேலுவுக்கும். விஜயகாந்தையும், பிரேமலதாவையும் குறிப்பிட்டு ‘உனக்கு அரசியலைப்பற்றி என்ன தெரியும்’ என்று ஒருமையில் கேட்குமளவு வடிவேலு ஒன்றும் அரசியல் ஆசானில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். வடிவேலுவும் வாங்கிய காசுக்கு மேலேயே கூவினார். கடைசி நாளில் கண்ணீர் ட்ராமாவெல்லாம் வேறு!


அதை சரியாக மார்க்கெட்டிங் செய்ததில் தாங்கள் கெட்டிக்காரர்கள்தான் என்று நிரூபித்தது திமுக-சன் டிவி கூட்டணி. தினகரன் எரிப்பு வழக்கின்போது, அதுவரை முதல்வர் கலைஞரெல்லாம் சொல்லி வந்த சன் டிவியினர் பிறகு கருணாநிதி என்றே குறிப்பிட்ட ஆரம்பித்தது பேசப்பட்டது. ஆக சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபவர்கள் இதிலும் அவ்வாறே நடந்து கொண்டார்கள். இன்றைய சூழலில் அழகிரி, ஸ்டாலின், கலைஞர் பேச்சுகளின் க்ளிப்பிங் நேரத்தை விட வடிவேலுவின் க்ளிப்பிங் நேரம் அதிகரிப்பதே ஜெயிக்க வழி என்று செயல்பட்டார்கள்.

அதேபோல விஜய்காந்த் பேசியதையும் பேசாததையும் மிக்ஸிங் எல்லாம் செய்து ஃபிலிம் காட்டினார்கள். தினகரனில் திமுக பற்றிய பாஸிடிவ் செய்திகள் மட்டுமே வந்தன. கலைஞர் டிவி மானாட மயிலாட உட்பட எல்லாவற்றையுமே தங்கள் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டது திமுக.


திமுக கூட்டணியின் மற்றொரு பலம் அதன் விளம்பரங்கள். கலக்கலாக அமைந்தது. ஜவுளிக்கடை விளம்பரங்களைப் போலவே பாட்டெல்லாம் போட்டு அருமையாக இயக்கியிருந்தார்கள். அதுவும் ‘நாட்டுக்கொரு நல்லசேதி நாத்தனாரே’ ஆரம்பித்தாலே வீட்டில் உள்ள எல்லாரும் உடன்பாட ஆரம்பித்தார்கள். (கவனிக்க: உடன் பாட. உடன்பட அல்ல!) இது ஜெயலலிதா அணியில் மிஸ்ஸிங். பாரதியார், கட்டபொம்மன், பெரியார், அண்ணாவெல்லாம் வந்து அதிமுகவுக்கு ஓட்டுக் கேட்பது போல ஒரு விளம்பரம் வந்தது. அதற்கப்புறம் ஜெயா சேனலே வைக்க பயமாக இருந்தது எனக்கு. அவ்வளவு திராபை. ஒரு விளம்பரத்தையே ஒழுங்காக மக்களைக் கவரும் வண்ணம் செய்யத்தெரியாதவர்களாக இருக்கிறார்களே என்று கோபம் கோபமாக வந்தது.

அதிமுகவின் பலம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. இந்தத் தேர்தலில் இரண்டே அலைதான். திமுக ஆதரவு அலை. திமுக எதிர்ப்பு அலை.

அதிமுக ஆதரவு அலை என்ற ஒன்று இல்லவே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் ஒரு மண்ணாங்கட்டியையும் செய்யாததே அதற்குக் காரணம். அதே போல ஒரு வடிவேலுவுக்கு கவுண்டர் கொடுக்குமளவுக்குக்கூட பேச்சாளர் யாருமில்லாதது அதைவிடக் கொடுமை.

ஜெ-வின் சர்வாதிகாரப் போக்கு அல்லது அப்படித் தோற்றமளிப்பதுபோல அவர் நடந்துகொண்டதும் சரியில்லை. திமுகவினர் வடிவேலுவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட, ஜெ அணி, நடிகர் சங்கத் தலைவர், ஒரு கட்சியின் தலைவரான சரத்குமாருக்குக் கொடுக்காதது துரதிருஷ்டமே. அரசியலில் அவர் சுண்டைக்காயாக இருந்தாலும் ரெண்டு சீட் கொடுத்த பாவத்துக்கு அவரையும் கொஞ்சம் கண்டுகொண்டிருக்கலாம்.

மதிமுகவை கழட்டிவிட்டது ஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு. வைகோஆதரவு அலை என்ற ஒன்று இருக்கிறது. ஈழப்பிரச்னை உட்பட சில ப்ரச்சினைகளில் இறங்கிப் போராடியது அவர்கள்தான். அதிமுகவை விட. தவிரவும் வைகோ, நாஞ்சில் சம்பத் என்ற பிரச்சார பீரங்கிகளை இழந்தது இந்தக் கூட்டணி. போதாக்குறைக்கு எதிரணியின் பேச்சை மெய்ப்பிக்கும் வகையில் விஜயகாந்த் கோவைப் பிரச்சாரத்துக்குப் போகாதது கொஞ்சம் எரிச்சலையே உண்டு பண்ணியது.


மற்றொரு விஷயம் தினமலர், விகடன் போன்ற பத்திரிகைகள் (திமுக பாணியில் சொல்வதானால் – பார்ப்பண ஏடுகள்) வெளிப்படையாகவே திமுகவுக்கு எதிரான நிலை எடுத்தன. திமுக குடும்ப ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறையினர் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலையில்தான் இருக்கிறார்கள்.

போலவே காங்கிரஸ் அரசும் திமுகவினரும் இலங்கைப் பிரச்னையில் நடந்துகொண்ட விதம் எவருக்கும் பிடிக்கவில்லை. ஐநூத்திச் சொச்சம் மீனவர்களுக்காக காங்கிரஸ் அரசை மிரட்டாதவர்கள், அறுபது சொச்சம் சீட் பிரச்னைக்காக ராஜினாமா செய்யட்டுமா என்று மிரட்டியது படுமோசம். போதாக்குறைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வேறு!

----------------

முழுதாகப் படித்து விட்டீர்களா? நான் யாரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்று ஏதாவது புரிந்ததா? இல்லைதானே? எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. குழப்பமாகவே இருக்கிறேன். ஆனால் ஆளுங்கட்சிக்குப் போடக்கூடாது என்ற மனநிலை இப்போது வரை இருக்கிறது. இலவசங்கள் கொடுத்து மக்களைக் குட்டிச் சுவராக்கி, ஓட்டுக்குப் பணம் என்ற புதிய சிஸ்டத்தைக் கொண்டு வந்து நாசமாக்கி, அவர்கள் கைகாட்டும் படம்தான் வெளியாகும், அவர்கள் சொன்னதே சட்டம் என்று வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக செய்யும் சர்வாதிகாரம் என்று பலதும் என் போன்ற பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறதென்பது பலரிடம் பேசும்போது தெரிந்தது.

சும்மா வாய்வழி சர்வே நடத்தியதில் எனக்குக் கிடைத்த ரிசல்ட் அதிமுகவுக்கு சாதகமாகவே இருக்கிறது!

------------------

எது எப்படியாயினும் உங்கள் பொன்னான வாக்குகளை யாருக்காகவேனும் அளிக்க மறக்காதீர்கள். அது உங்கள் உரிமை.. கடமை.. எக்ஸெட்ரா எக்ஸெட்ரா..

கடைசியா உங்களுக்காக ஒரு வீடியோ... தவறாமப் பாருங்க..





அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.

ஆல் த பெஸ்ட்!

.


18 comments:

sriram said...

பரிசல்..
நம்புவதும் நம்பாததும் உங்க இஷ்டம்.
நான் ஜாக்கி சேகரின் இன்றைய பதிவில் இட்ட பின்னூட்டமும் அதுக்கப்புறம் நான் அவரிடம் போனில் பேசியதையும் அப்படியே டைப் பண்ணா மாதிரி இருக்கு இவ்விடுகை..

நாமிருவரும் கொஞ்சம் கூட மாற்றமில்லால் யோசித்திருக்கிறோம் இவ்விஷயத்தில். எல்லாரும் இப்படியே யோசிச்சாங்கன்னா காட்டாட்சி ஒழியும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பரிசல்காரன் said...

@ஸ்ரீராம்

நம்பாமலிருக்க இதிலென்ன இருக்கிறது! நாமிருவரும் யோசித்ததுதான் இன்றைக்கு சாமானியனின் மனதிலிலும் இருக்கிறது என்று எண்ணுகிறேன். என் பர்த்டே அன்னைக்கு தெரிஞ்சுடும்!

:-))

சுசி said...

//முழுதாகப் படித்து விட்டீர்களா? //

ம்ம்.. படிச்சாச்..

ஆனா எனக்கு அரசியல் எப்டி புரிய வச்சாலும் புரியாது. இங்க தொழிலாளருக்கு எந்த கட்சி சாதகமா இருக்கோ அதுக்கு வாக்கு போடுவேன் :)

நல்ல அலசல் கிருஷ்ணா.

//அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.
ஆல் த பெஸ்ட்!//

:))))

தெய்வசுகந்தி said...

நல்லாத்தான் அலசியிருக்கீங்க!!

ரஹீம் கஸ்ஸாலி said...

அதுவரை முதல்வர் கலைஞரெல்லாம் சொல்லி வந்த சன் டிவியினர் பிறகு கருணாநிதி என்றே குறிப்பிட்ட ஆரம்பித்தது பேசப்பட்டது. ////
இது தவறு தலைவரே..., சன் டி.வி ஆரம்பத்திலிருந்தே கருணாநிதி என்றுதான் சொல்லி வருகிறது. ஆட்சியிலிருந்தால் முதல் அமைச்சர் கருணாநிதி....ஆட்சியில் இல்லாவிட்டால் தி.மு.க.தலைவர் கருணாநிதி என்று அழைப்பார்கள்.கலைஞர் என்று சொன்னதே இல்லை. தினகரனும் அப்படித்தான். கே.பி.கந்தசாமி காலத்திலிருந்தே கருணாநிதி தான்.

selventhiran said...

super ya...

இளங்கோ said...

//அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. //

:)

பாண்டி-பரணி said...

அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. ///

சச்சி புட்டயே தல !!!!!!!!!!

Rathnavel Natarajan said...

நல்ல அலசல் திரு கிருஷ்ணா.
ஓட்டு போட்டு விட்டோம்.
வாழ்த்துக்கள்.

குரங்குபெடல் said...

மிக யதார்த்தமான பதிவு
நன்றி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அதெல்லாம் சரி ஓட்டு போட்டீங்களா? இல்லையா?

அமுதா கிருஷ்ணா said...

இப்ப தான் ஓட்டு போட்டுட்டு வந்தேன்.மதியம் பூத்தில் கூட்டமே இல்லை.

kailash said...

வருத்தமான விஷயம் - தமிழ்நாட்டுத் தேர்தலையும் , வாக்காளர்களையும் மிகக் கேவலமாக எல்லோரும் பார்க்கிறார்கள். திருமங்கலம் ஃஃபார்முலாவை தேர்தல் கமிஷன் முளையிலேயே கிள்ளி எறிந்து இருந்தால் இந்த அளவுக்கு வியாதி பரவி இருக்காது.

சந்தோஷமான விஷயம் - விஜயகாந்தின் மூகமூடி ( நான் தான் தமிழகத்தின் விடிவெள்ளி) கிழிக்கப்பட்டது . முகவும் , ஜெவும் gap10 க்கு எதிராக 6 வருடமாக சாதிக்க முடியாததை வடிவேலு 25 நாட்களில் சாதித்தார்.

EINSTEEN RAVI said...

கண்டிப்பாக இதைப் பார்க்கவும்..
http://www.youtube.com/watch?v=3kKxkNKyjtA
http://www.youtube.com/watch?v=touFLwVtZbY
http://www.youtube.com/watch?v=AieUibFftxc
http://www.youtube.com/watch?v=j0nKL6UUFac
http://www.youtube.com/watch?v=rHyQxNR0-zg

பின்னோக்கி said...

ஓட்டுப்போட்டாச்சு. நான் சப்போர்ட் பண்ணும் கிரிக்கெட் டீம் ஜெயிக்கவேண்டும் என்ற ஒரு ஆசை/ஆர்வம் போலவே, நான் ஓட்டு போட்ட கட்சியும் ஜெயிக்கவேண்டும் என்பது போன்ற மன உணர்வு. ஆனால் சரியான கட்சிக்கு ஓட்டுப் போட்டேனா என்று கேட்டால் காரணம் சொல்ல முடியாத குழப்பமான மனநிலை தான். கடைசி இரண்டு வாக்கியம் நச்.

Mahi_Granny said...

அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.''
இது தான் நிதர்சனம் . ஆகவே இது பிடிச்சிருக்கு.

பா.ராஜாராம் said...

good!

Ganpat said...

அருமையான சிந்தனை /தர்க்கம்
வாழ்த்துக்கள்.

குறிப்பாக.......

//(கவனிக்க: உடன் பாட. உடன்பட அல்ல!)//
//இந்தத் தேர்தலில் இரண்டே அலைதான். திமுக ஆதரவு அலை. திமுக எதிர்ப்பு அலை. //

BRILLIANT

உங்கள் அனுமதியுடன் ஒரு சிறிய மாற்றம்:
"அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் ஆளுங்கட்சிக்கு உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை."

இன்னும் சரியாக ஒரு மாதம் பொறுத்திருங்கள்!
வரப்போகும் (2012)ஏப்ரல 13 சித்திரை திருநாளா அல்லது நந்தன ஆண்டு பிறப்பா என்பது தெரிந்து விடும்!