Monday, June 8, 2009

அரசியல்!

ந்த நபரை நண்பருக்கு ஏற்கனவே தெரியும். தனது பனியன் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஓரிரு முறை துணி ரோல்கள் காணாமல் போவதை துப்பறிந்தபோது இவரிடம் பணிபுரிந்து கொண்டிருந்த இந்த நபர்தான் திருடிச் சென்று விற்றிருக்கிறான் என அறிந்ததும் மிரட்டி, கண்டித்து அவனை வேலையைவிட்டு அனுப்பிவிட்டார் நண்பர். அவன் இப்போது - பத்து வருடங்களுக்குப் பிறகு - கட்சிக்கரையிடப்பட்ட வேட்டியோடு வந்து அமர்த்தலாக நண்பர் முன்னே அமர்ந்து ‘எலக்‌ஷனுக்கு எவ்ளோ டொனோஷன் தர்றீங்க?” என்று மிரட்டலாகவே கேட்கிறான்.

“அதெல்லாம் ****கிட்ட குடுத்தாச்சுப்பா.. நீ.. நீங்க தனியா வேற வாங்க வந்துருக்கீங்களா?”


“அவங்ககிட்ட குடுக்கறது நேரா தலைமைக்குப் போகும். நீங்க இருக்கற ஏரியாவுல இருக்கப்போறது நாங்கதான். இங்க செலவு பண்ண நீங்கதானே குடுக்கணும்? இந்த பத்து வருஷத்துல கம்பெனி எப்படி மாறிப்போச்சு! ரோட்ல நின்னு பார்த்தா ஆஃபீஸ் கண்ணாடி பளபளக்குதே...”

மறைமுகமாக ஆரம்பித்து நேரடியாகவே மிரட்ட ஆரம்பிக்கிறான்.

வேண்டா வெறுப்போடு ஒரு தொகை கொடுத்து அனுப்புகிறார் நண்பர்.


து தேர்தலன்று நண்பரின் நிறுவனத்தில் நடந்த சம்பவம். ஒவ்வொரு நிறுவனமும் கட்சிக்காரர்களிடமிருந்து பல்வேறு வகையிலான மிரட்டல்களோடு வசூலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. வேறொரு நண்பரின் நிறுவனம் இருப்பது கோவை பாராளுமன்றத் தொகுதியில். ஆனால் இருப்பது திருப்பூர்தான். எல்லை அருகே. அவரிடமிருந்து திருப்பூர் தொகுதியைச் சேர்ந்தவர்களும், கோவை தொகுதியைச் சேர்ந்தவர்களும் மாற்றி மாற்றி அழைத்து வசூலில் இறங்கியதில் நொந்துபோயிருக்கிறார் அவர்.

ங்களிடம் இரண்டு மூன்று முறை அலைந்து வசூல் கேட்டவர்களிடம் மாறி மாறி வெவ்வேறு காரணங்கள் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தேன். ‘குடுக்கறதும் குடுக்காததும் உங்க இஷ்டம். ஆனா உங்க மொதலாளிகிட்ட சொல்லுங்க. எங்க ஏரியாவுலேர்ந்து முப்பது நாப்பது பேர் உங்ககிட்ட வேலைக்கு வர்றாங்க. அத ஞாபகம் வெச்சுக்கோங்க’ என்கிறார் அவர். முப்பது பேரில் நாலைந்து பேரை மூளைச் சலவை செய்து நிறுவனத்தில் பாலிடிக்ஸ் ஏற்படுத்துவது சுலபம். ஆகவே வேறு வழியில்லாமல் அவரையும் கவனித்து அனுப்பினோம்.

தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு நான் கண்ட காட்சி... திருப்பூரின் முக்கியப் பகுதியில் அமைந்த ஒரு கட்சி அலுவலகம். மனைவி காய்கறி வாங்கிக் கொண்டிருக்க பதிவுக்கு ஏதாவது தேறுமா என்று பாராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். அந்தக் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கரைவேட்டியுடன் ஒருவர் (ன்?) “சொன்னதக் குடுக்கறியா இல்ல வேட்டியக் கழட்டட்டுமா?” என்று உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தான். ‘கழட்டீட்டுப் போ’ என்று அவனுக்கெதிரிலிருந்த மீசை வைத்த ஆசாமி சொல்லிக் கொண்டிருந்தான். இவன் கொஞ்ச நேரக் கத்தலுக்குப் பிறகு நட்ட நடுரோட்டில் அந்த வேட்டியைக் கழட்ட எவனோ ஒருவன் “இந்தாண்ணே” என்று பேண்ட் ஒன்றை நீட்ட அதை ரோட்டிலேயே அணிந்தான். “இனிமே உன்கட்சி வேட்டியக் கட்ட மாட்டேன்... நாளைக்கு எப்படி ஆளைக் கூட்டுவன்னு பார்க்கறேன்” என்று கத்தியபடியே பேண்ட் கொடுத்த ஆசாமியுடன் மொபட்டில் பறந்தான்.

மீசைக்காரரை ஒன்றிரண்டு பேர் “குடுத்துத்தொலைக்க வேண்டியதுதாண்ணே..” என்று கடிந்துகொள்ள “கேட்டதவிட எச்சா குடுத்தாச்சுய்யா.. சும்மா சும்மா கேட்டா.. ஒரு அர்த்தம் வேண்டாம்? இன்னும் ஒரு வாரத்துக்கு வெச்சு செலவு பண்ணணுமில்ல?” என்று நியாயம் பேசினார்.

இதையெல்லாம் சொல்லி புலம்பினால்.. ஒரே பதில்தான்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....

அப்படியா?

சரி.... இதெல்லாம் சாதாரணம்தான்.. ஜெயித்தபிறகு இவர்கள் செய்வதென்ன? பிறரிடம் இப்படி வாங்கி வசூலித்ததை ஏதோ உழைத்து சம்பாதித்து செலவு செய்தது போல “சும்மாவா? எவ்ளோ செலவு பண்ணினோம் தெரியுமா? அதையெல்லாம் வட்டியும் முதலுமா வசூலிக்க வேண்டாமா?” என்றபடி மீண்டும் வசூல்வேட்டையில் இறங்குவது.. அதைவிடக் கொடுமை!

யாரைச் சொல்லியும் குற்றமில்லை!

19 comments:

M.G.ரவிக்குமார்™..., said...

மீ தி பர்ஸ்ட்டு.................

தீப்பெட்டி said...

//யாரைச் சொல்லியும் குற்றமில்லை!//

அத இன்னைக்கே சொல்லிட்டா எப்படி?..

நம்ம வருங்கால சந்ததி சொல்லனும்..

எனக்கென்னவோ இப்படித்தான் சொல்லுவாங்கனு தோணுது

"அன்னைக்கே இவனுகள அடக்கி வச்சுருக்கனும்.. விட்டுட்டானுக.. இன்னைக்கு நாம நாய் படாத பாடு படுறோம்.. பாக்கெட்டுல பத்து பைசா வைக்க முடில.. பொம்பளைக நிம்மதியா பகல் 12 மணிக்கு கூட கடதெருவுக்கு போக முடில.. பேசாம ஆவுறது ஆகட்டும்னு தீவிரவாத இயக்கத்துல சேந்துரலாம்னு இருக்கேன்"


நாம் நம்ம வாரிசுகளுக்கு நிம்மதியற்ற உலகை(இந்தியா) உருவாக்கி கொண்டிருக்கிறோம்..

வணங்காமுடி...! said...

இதை எல்லாம் எங்கோ ஒரு தூர தேசத்தில் உட்கார்ந்து கொண்டு படிக்கும் போது, சோகமும், சந்தோஷமும் ஒன்றாய் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.... நம்முடைய நாட்டில் இப்படி எல்லாம் நடக்கிறதே என்று சோகம்... இந்தக் கண்றாவி எல்லாம் காணாத தூரத்தில் இருக்கிறோமே என்று சந்தோஷம்.

// “சும்மாவா? எவ்ளோ செலவு பண்ணினோம் தெரியுமா? அதையெல்லாம் வட்டியும் முதலுமா வசூலிக்க வேண்டாமா?” என்றபடி மீண்டும் வசூல்வேட்டையில் இறங்குவது.. அதைவிடக் கொடுமை! //

பிறந்த நாள் என்று உண்டியல் குலுக்குவது, அடாவடி வசூலில் இறங்குவது - இதில் சேராத தனி ஆவர்த்தனம்.......

ம்ஹூம்... பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய வழி இல்லை...

--சுந்தர்
ருவாண்டா

Thamira said...

ஒவ்வொரு நிறுவனமும் கட்சிக்காரர்களிடமிருந்து பல்வேறு வகையிலான மிரட்டல்களோடு வசூலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது//

இந்த வரியில் அர்த்தம் மாற்றித் தொனிக்கிறது.

Mahesh said...

அ(ரசி)வியல் !!!

ஆதி சொன்ன மாதிரி அர்த்தமே மாறிப் போச்சே :(

நிகழ்காலத்தில்... said...

தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என தெரியாத நிலையிலேயே, வசூல் ஆரம்பித்து விட்டது.

கலையரசன் said...

பதிவேத்தி அரசியலாக்கிட்டியே பா!
தடுக்க முடியாத நிலையில் நாம்..
தடுத்து பாருடா தோரணையில் அவனுங்க!

KARTHIK said...

இத சமாளிக்க ஒரே வழி நாமளும் ஒரு கச்சில சேந்த்ர வேண்டியதுதாங்க.இல்லன சொல்லுங்க ஒரு கச்சி தொடங்கிருவோம்.

சின்னப் பையன் said...

யாரைச் சொல்லியும் குற்றமில்லை!

Cable சங்கர் said...

வந்தாச்சா...
நீஙக் சொன்ன மேட்ட்ரெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா.. அரசியல் இதவிட சாஸ்தியாவெல்லாம் நடக்குதப்பா..

தாரணி பிரியா said...

//நீ.. நீங்க //

இப்படி மரியாதை குடுத்தா ஏத்தி விட்டா அப்புறம் நம்மளை மிரட்டாம என்ன செய்வாங்க‌

பீர் | Peer said...

மிரட்டி வாங்கப்பட்ட அந்த பணம் எல்லாம் பிறகு நமக்குத் தானே பகிர்ந்தளிக்கப்பட்டது :)

anujanya said...

எல்லோரும் குற்றவாளிகள் தாம். நமக்கு சண்டை போட தைரியமும், நேரமும் இல்லை. அரசியலில் இருப்பவர்கள் குற்றவாளிகளோ அல்லது குற்றம் புரிய எந்நேரமும் தயாராக இருப்பவர்களோ என்ற ரீதியில் தான் இருக்கிறார்கள்.

நாம் பதிவு எழுதியோ, பின்னூட்டம் போட்டோ ஆதங்கத்தை வெளிப்படுத்தலாம் - அதற்கும் நக்கல் செய்ய ஆட்கள் உண்டு என்றாலும்.

அனுஜன்யா

தராசு said...

எதாவது செய்யணும் பாஸ்

Kumky said...

தீப்பெட்டி சொன்னதையே வழிமொழிகின்றேன்..

நர்சிம் said...

நான் சொல்லவேண்டியதை தராசு சொல்லிவிட்டதாலும் தராசு சொல்ல வேண்டியதை ஆதிசொல்லிவிட்டதாலும் ஆதி சொன்னதையே மகேஷும் சொல்லிவிட்டதாலும்

அரசியல்..அரசிசை, அரசுநாடகம்...தானே.. என்று சொல்லிக்கொண்டு...

வசந்த் ஆதிமூலம் said...

பரிசல் பரிசல் ன்னு ஒரு நல்லவன் இருந்தான். எங்கப்பா அவன ?

நாஞ்சில் நாதம் said...

நாய் பொழப்பு
நம்ம மாதிரி ஆட்களுக்கு.

பிச்சகார பசங்க

Saminathan said...

// மிரட்டி வாங்கப்பட்ட அந்த பணம் எல்லாம் பிறகு நமக்குத் தானே பகிர்ந்தளிக்கப்பட்டது :) //

கடைத் தேங்காய் + வழிப் பிள்ளையார்...