Friday, November 7, 2008

புக்ஸாய நமஹ!

இதுவும் ஒரு தொடர்பதிவுதான். தாமிரா எழுதிய இந்தப் பதிவின் விளைவு..

புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு எப்போது ஆரம்பித்தது என்று நினைவிலில்லை. நடந்தது எப்படி, பேசியது எப்போதிலிருந்து என்று ஞாபகத்திலிருக்கிறதா என்ன?

கூட்டுக்குடும்பம். என் கஸின் கிருஷ்ணமூர்த்தி அண்ணாவுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது. அவருக்கு காங்கிரஸில் அதிக ஈடுபாடு என்பதால் ‘இதயம் பேசுகிறது’ மணியனை விரும்பிப் படிப்பார். நான் இதயத்தில் வரும் பயணக் கட்டுரைகளை மிகவும் விரும்பிப் படிப்பேன். அப்போது வாசகர்களின் கையெழுத்தை (Signature) அனுப்பச் சொல்லி, அதில் படம் வரைந்து ஒரு பகுதி வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் படத்தில் வாசகரின் கையெழுத்து ஒளிந்துகொண்டிருக்கும். அதையும் விரும்பிப் படித்து வந்தேன். பிறகு ஆறாவது படிக்கும்போது, அப்பாவின், மாமாவின் சட்டைப் பையிலிருந்து காசெடுத்து காமிக்ஸ் வாங்கிப் படித்து மாட்டிக்கொண்டு, மாமா போலீஸில் மாட்டிவிடுவதாய் மிரட்டி, (இதுக்கெல்லாம் போலீஸ்!) இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று கடிதம் எழுதிக் கொடுத்ததெல்லாம் நடந்ததுண்டு. (இன்றைக்கும் அந்தக் கடிதம் எனனிடம் உண்டு!)





என் புத்தக அலமாரி
(இப்போதுதான் வீடு மாற்றல் நடந்திருக்கிறது என்பதால் இவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஒரே மாதத்தில் 'ஒழுங்காகி'விடும்!)



அப்பாவுக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. அவர் விகடன் வாசகர். ரொம்ப வெறித்தனமாக இந்தப் பழக்கம் ஆரம்பித்தது என்றால் ஒரு பள்ளி விடுமுறையின்போது, சிவகங்கையில் இருக்கும் என் மாமா ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோதுதான். சிவன்கோவில் தெருவில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவரது சகோதரர் ஒருவர் இருந்தார். திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரி வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். அடிக்கடி எங்காவது புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்றபடி இருப்பார். அவரது அறையில் புத்தகங்கள்.. புததகங்கள்.. புத்தகங்கள். விகடன், குமுதம், கல்கண்டு என்று எல்லா புத்தகங்களையும் வருட, மாத, தேதி வாரியாக அடுக்கிவைத்திருந்தார். டாஸ்மாக்கில் புகுந்த குடிகாரனைவிட மோசமானேன். அப்படி ஒரு புத்தகப்போதை பிடித்துக் கொண்டது. பழைய புத்தகங்களை சுவாரஸ்யமாக எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

என் வாசிப்புப் பிரியத்தைக் கண்ட அவர் சில கவிதைப் புத்தகங்களையும் எனக்குப் பரிசாக அளித்தார். (அதுதான் என் புத்தக அலமாரியில் சீனியர் மோஸ்ட்.) அவரிடம் அனுமதி பெற்று அருகிலேயே இருந்த அகரம் பதிப்பகம் சென்றேன். பழைய சில சிற்றிதழ்கள், கவிதை நூல்கள் வாங்கினேன். கவிஞர் மீராவைப் பார்க்க விரும்பினேன். அப்போது அவர் அங்கில்லை. அங்கிருந்து மாமா மதுரை கூட்டிச் செல்லும்போது, பஸ்ஸில் அமர்ந்திருக்கும்போது, நாலைந்து சீட் முன்னால் ஒருவரைக் காட்டி, ‘அவர்தான் நீ கேட்ட கவிஞர் மீரா’ என்றபோது நம்பவே முடியவில்லை. எழுத்தாளர்கள், கவிஞர்களெல்லாம் பேருந்தில் வருவார்களா என்று வியப்பாக இருந்தது அப்போதெனக்கு. அவர்களுக்கென்று தனியாக புஷ்பக விமானம் இருக்கும் என்று நினைத்திருக்கிறேன் போல. இப்போதும் வீட்டு அட்வான்ஸுக்கு கையேந்தும் எழுத்தாளர்களின் நிலைமையைப் பார்த்தால் ஒன்றும் மாறிவிடவில்லை என்றுதான் தோன்றுகிறது.





இடம் இல்லாததால் வெளியே காத்திருக்கும் சில புத்தகங்கள்..


ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், சுபா ஆகியோரது எழுத்துக்களால் கவரப்பட்டு இவர்கள் எழுதிய நாவல்கள் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் வெர்ஸடைல் எழுத்துக்களும், பி.கே.பி-யின் சுவாரஸ்ய நடையும் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தன.

உடுமலையின் அத்தனை லைப்ரரிகளிலும் எனக்கு உறுப்பினர் கார்டு உண்டு. இன்றைக்கும் என் தம்பிகளால் அது உபயோகப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. லைப்ரரியில் விரும்பிய புத்தககத்தை எடுத்து வேறு பகுதியில் ஒளித்து வைத்து, அடுத்தமுறை எடுத்துக் கொள்ளும் திருட்டுத் தனமெல்லாம் செய்திருக்கிறேன்!

அதற்குப்பிறகு புத்தகங்கள் வாங்கும் பழக்கம். அது தொட்டில் பழக்கம்போல. இன்றும், என்றும் என்னை விட்டுப் போகாததாகவே இருக்கிறது. நண்பர்களுடன் ஏதாவது பார்ட்டி என்று போனால் நிதானம் தவற மாட்டான் என்ற நம்பிக்கை உமாவுக்கு உண்டு. ஆனால் ஏதாவது புத்தகக் கடை பக்கமாகவோ, புத்தகத் திருவிழாவோ என்றால் அதன் அருகிலேயே அனுப்ப பயப்படுவார். காசையெல்லாம் தீர்த்துவிட்டு வருவேன் என்ற பயம்தான்!

ப்ளஸ் டூ முடித்தபின், என்னிடம் சேர்ந்த புத்தகங்களை வைத்துக் கொண்டு ஒரு சர்க்குலேஷன் லைப்ரரிகூட நடத்தினேன்.. கொஞ்ச நாள்!

புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு வந்ததற்காக எப்போதும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சாப்பாடும்போதும், டாய்லெட்டிலும், பயணங்களின்போதும், சும்மா இருக்கும்போதெல்லாம் புத்தகம் படிக்காமல் இருப்பதில்லை நான்.

இந்த டாய்லெட்டில் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு எப்படி ஆரம்பித்ததென்றே தெரியவில்லை. சின்னவயதில் பயந்து பயந்து இதைச் செய்துவந்தேன். ஒருமுறை சென்னைக்கு என் சொந்தக்காரர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது நான் மிகவும் மதிக்கும் ஒரு உறவினர் தினமும் ஹிண்டு பேப்பரோடு டாய்லெட்டுக்குள் நுழைதைக் கண்டேன். ‘அட’ என்று சந்தோஷமாகிப் போக அதற்குப்பிறகு வீட்டில் அம்மாவிடம் இதைச் சொல்லியே வாதம் செய்வதுண்டு.

உமாவிடம் வீடு கட்டினால் டாய்லெட்ல ஒரு க்ளோஸ்ட் புக் ஷெல்ஃப் வைக்கணும் என்று திட்டு வாங்கிக் கொண்டே சொல்வதுண்டு. சமீபத்தில் ஒரு எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது வீட்டு டாய்லெட்டில் புக்‌ஷெல்ஃப் இருப்பதை அறிந்து வியந்தேன்!

'சாப்பிடும்போது புத்தகம் படித்தால் அன்னலக்ஷ்மி கோவிச்சுக்குவாடா' - இது என் சின்னவயதில் சொல்லப்பட்டது. அப்போது நான் சொல்வேன்..

“அம்மா.. சாப்பிடறது அன்ன லஷ்மின்னா படிக்கறது சரஸ்வதிதானே. அவங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்தானேம்மா..”

பிறகு இவனை மாற்ற முடியாது என்று விட்டுவிட்டார்கள்.

அப்புறம் சின்னச் சின்னப் பொட்டலங்களில் இருப்பதைப் படிப்பது அவ்வளவு விருப்பம எனக்கு. பாக்யாவில் என் சிறுகதை வந்திருந்ததை கடலை மடித்த பேப்பரில் ஒரு முறை கண்டு ஆச்சர்யப்படு ஒரு வருடத்துக்கு முன் வந்த அந்தப் புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்கி வந்தேன். இது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம்.

புத்தகம் படிக்க ஆரம்பித்ததும், புத்தகம் படிப்பதும் ஒரு முடிவிலி என்பதால் இந்தக் கட்டுரையை முடிக்க முடியாமல் திணறுகிறேன்.

தொடருக்கு அழைப்பதால் உள்ள சங்ககடங்கள் சிலதை அறிவேனெனினும், இது மிகவும் சுவாரஸ்யமான சப்ஜெக்ட் என்பதாலும், இவர்கள் இருவரது வாசிப்புப் பழக்கத்தை அறியும் உள் ஆவல் உந்துவதாலும், இந்த இரு பெரும் தலைகளை இதைத் தொடர அழைக்கிறேன்.

1) நர்சிம்
2) லக்கிலுக்

42 comments:

Mahesh said...

அட்டகாசம்....

"மீர்தாதின் புத்தகம்" படத்துல பாத்துட்டேனே !!!

சிங்கையில் நான் முன்பு இருந்த வீட்டில் டாய்லெட்டில் ஒரு சிறிய புத்தக அலமாரி வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அது சோப்பு சீப்பு ஷாம்பு வைக்கும் இடமாக மாறியது. இப்போது உள்ள வீட்டிலும் வைக்க எண்ண‌ம். "வாடக வீட்டுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவரு"ன்னு பின்னூட்டம் வந்ததால் இப்போதைக்கு கிடையாது. ஆனால் சீக்கிரமே....

Mahesh said...

மீ தி பஷ்டு !!!!

கோவி.கண்ணன் said...

புத்தக புலி பரிசல் வாழ்க !

:)

தொடர் எழுதுகிறவர்கள் யாரும் எனக்கு அழைப்பு 'ஆனை' அனுப்பாதிங்க, 2006ல் இப்படி ஒரு தொடர் பதிவு ஏற்கனவே எழுதியாச்சு !

பரிசல்காரன் said...

நன்றி மகேஷ்ஜி!

கண்ணன் ஜி, நீங்க ஒரு நாளைக்கு மூணு பதிவெழுதற சீனியரல்லவா.. நீங்க எழுதாத மேட்டர் என்னதான் இருக்கமுடியும்!

☼ வெயிலான் said...

வரிக்கு வரி அப்படியே என்னை பிரதிபலித்திருக்கிறீர்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்னால் தொடர்பதிவுகளை பகடி பண்ணி ஒரு பதிவு நீங்கள் எழுதியதாய் நினைவு ;)

Ramesh said...

Nice!

narsim said...

//அம்மா.. சாப்பிடறது அன்ன லஷ்மின்னா படிக்கறது சரஸ்வதிதானே. அவங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்தானேம்மா..//

அப்பவே இப்டித்தானா தலை?

மிக அருமையான பகடி ஊடாடிய பதிவு..

narsim said...

//சமீபத்தில் ஒரு எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது வீட்டு டாய்லெட்டில் புக்‌ஷெல்ஃப் இருப்பதை அறிந்து வியந்தேன்!
//
சமீபத்தில்? அப்போ சுஜாதாவா இருக்க முடியாது..பாலகுமாரனா?

நர்சிம்

வெண்பூ said...

ஆனாலும் ரொம்ப படிக்கிறீங்க.. இதை பாராட்டா எடுத்துக்கோங்க.. :)))

narsim said...

யோவ்.. பாரா பாரா வா படிச்சு பின்னூட்டம் போட்டுகிட்டே வந்தா..

கடைசி பாரால தொடர சொல்லி ஆப்பா.. ஆகா..

லக்கி நீங்க போட்ட அப்புறம் தான் நான் போடுவேன்..

நர்சிம்

பரிசல்காரன் said...

////சமீபத்தில் ஒரு எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது வீட்டு டாய்லெட்டில் புக்‌ஷெல்ஃப் இருப்பதை அறிந்து வியந்தேன்!
//
சமீபத்தில்? அப்போ சுஜாதாவா இருக்க முடியாது..பாலகுமாரனா?

நர்சிம்//

அட! விடையை சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.

நர்சிம்தான்!

VIKNESHWARAN ADAKKALAM said...

பரிசல் எனது கேள்விக்கு பதில் போடுவிங்களானு தெரியல.... உங்கள் படத்தை கிளிக்கி பெரிதாக்கிப் பார்த்தேன்... மிர்தாத்தின் புத்தகம் என பெயரிட்டிருந்தது... அந்த புத்தகம் வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்வீரா?

பரிசல்காரன் said...

//லக்கி நீங்க போட்ட அப்புறம் தான் நான் போடுவேன்.. //

தப்புய்யா.. தப்பு!!

பரிசல்காரன் said...

//VIKNESHWARAN said...

பரிசல் எனது கேள்விக்கு பதில் போடுவிங்களானு தெரியல.... உங்கள் படத்தை கிளிக்கி பெரிதாக்கிப் பார்த்தேன்... மிர்தாத்தின் புத்தகம் என பெயரிட்டிருந்தது... அந்த புத்தகம் வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்வீரா?//

அந்த புத்தகம் சிங்கை மகேஷ் வந்திருந்தபோது பரிசாய் அளித்தது.

இன்னும் படிக்கவில்லை!

// பரிசல் எனது கேள்விக்கு பதில் போடுவிங்களானு தெரியல....//

ஏன் இப்படி?

VIKNESHWARAN ADAKKALAM said...

ஐயோ தப்பா எடுத்துக்காதிங்க... சில சமயங்களில் பதில் போடாமல் இருப்பதாக அறிந்தேன் அதனால் தான் சொன்னேன்...

கண்டிப்பாக அப்புத்தகத்தை படிங்க... நான் ஒரு முறை தான் படித்தேன்... பல முறை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னமும் இருக்கிறது... கோவி அண்ணனுக்கு நானும் அப்புத்தகத்தை தான் பரிசளித்தேன்... நிச்சயம் ஒரு தேடல் கிடைக்கும்...

பரிசல்காரன் said...

//நிச்சயம் ஒரு தேடல் கிடைக்கும்...//

விக்கி..

ஏற்கனவே நிறைய தேடல்கள் பாக்கி இருக்கு!

இந்தப் புத்தகத்தை அமைதியான சூழலில் ஆரம்பிக்க எணியிருக்கிறேன். இந்த புத்தகம் என் கையில் இருப்பதைப் பார்த்த பலரும் என்னை பெரிய இவனாகப் பார்க்க ஆரம்பித்ததிலிருந்தே, இதன் மகிமையை உணார்ந்தேன். சீக்கிரம் படித்துப் பதிவிடுகிறேன்!

லக்கிலுக் said...

எதை வேண்டுமானாலும் எளிதாக எழுத்தாக்கிவிட முடிகிறது. புத்தகம் பற்றிய ஆட்டோகிராப் வரைமுறை இல்லாமல் மூளையில் சிதறிக் கிடக்கிறது. ஒழுங்குப்படுத்தி எழுத ஒரு ரெண்டு நாள் டைம் கிடைக்குமா தோழர்?

லக்கிலுக் said...

//லக்கி நீங்க போட்ட அப்புறம் தான் நான் போடுவேன்.. //

மேட்டர் புக் பற்றியெல்லாம் கூட எங்களை மாதிரி தெகிரியமா போடணும். ஓக்கேவா?

வால்பையன் said...

//என் புத்தக அலமாரி//

உங்கள் புத்தகத்தை மட்டும் வைத்தால் இவ்வளவு இருக்குமா?

வால்பையன் said...

// டாஸ்மாக்கில் புகுந்த குடிகாரனைவிட மோசமானேன். //

எல்லாம் ஒருவகை அனுபவம் தான்.
அதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்க்கு அன்போடு கண்டிக்கிறேன்

வால்பையன் said...

//பாக்யாவில் என் சிறுகதை வந்திருந்ததை கடலை மடித்த பேப்பரில் ஒரு முறை கண்டு ஆச்சர்யப்படு ஒரு வருடத்துக்கு முன் வந்த அந்தப் புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்கி வந்தேன்.//


அந்த கதையை பதிவாக போடமுடியுமா?

பரிசல்காரன் said...

//லக்கிலுக் said...

எதை வேண்டுமானாலும் எளிதாக எழுத்தாக்கிவிட முடிகிறது. புத்தகம் பற்றிய ஆட்டோகிராப் வரைமுறை இல்லாமல் மூளையில் சிதறிக் கிடக்கிறது. //

எனக்கும் இதே பிரச்சினைதான். நான்படித்த திரைச்சித்ரா, மருதம் பற்றி எழுத நினைத்திருந்து விட்டுப் போய்விட்டது. (நெஜமாவே எழுதும்போது மறந்துடுச்சு தோழர். வேணும்னு விடல!) ரெண்டு நாளென்ன.. ஒரு வாரமே எடுத்துக்கங்க. ஆனா வாயிலே ஜிலேபி குடுத்துடாதீங்க! ஏன்னா ரொம்ப எதிர்பார்க்கறேன்!

பரிசல்காரன் said...

@ வால்பையன்

வர வர லக்கியும் நீங்களும் ஒரே ஆள்தானோன்னு நெனைக்கற அளவுக்கு அடுத்தடுத்து பின்னூட்டறீங்க..!

//உங்கள் புத்தகத்தை மட்டும் வைத்தால் இவ்வளவு இருக்குமா?//

யோவ்... என்கிட்ட இருக்கறதுல 1 சதவிகிதத்துக்கும் கம்மிதான் நான் கிஃப்ட்டா வாங்கினது. நக்கலப்பாரு..

//அதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்க்கு அன்போடு கண்டிக்கிறேன்//

இதுக்கே கோவமா.சத்தியமா ட்ராஃப்ட்ல ‘டாஅஸ்மாக்கில் புகுந்த வால்பையன்’னுதான் எழுதியிருந்தேன். வந்து நோண்டி விட்டதால சொல்லவேண்டியதாப் போச்சு!

//அந்த கதையை பதிவாக போடமுடியுமா?//

கேவலமா இருக்கும்! பார்க்கலாம்!

rapp said...

சூப்பர். எனக்கும் பழைய வாரப்பத்திரிக்கைகள் படிக்கிறதில் பயங்கர ஆர்வம் உண்டு. எங்கப்பா நீங்க இதில் குறிப்பிட்டுள்ள நண்பர் மாதிரித்தான். அதுல கிடைக்கிற பொக்கிஷங்கள் வேறெதிலும் கிடைக்காது என்பது என்னோட எண்ணம்:):):)

rapp said...

me the 25TH:):):)

rapp said...

ஹி ஹி, பதிவுக்கு சம்பந்தமில்லாதக் கேள்வி, உங்களுக்கு கார்க்கி மேல இவ்ளோ காண்டா? :):):)(டிஸ்கி, இது ஜாலி கேள்விங்க பரிசல் சார், சீரியஸா எடுத்துக்காதீங்க:):):))

rapp said...

(இது என்னோட சொந்தக் கருத்து மட்டும்தான், யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க) நம்மோட ஆதர்ச எழுத்தாளர்களை நேரில் சந்தித்து பேசவோ பழகவோ முயற்சி பண்ணக் கூடாதுங்கறது. சந்தர்ப்பம் தானா அமைந்தாலும் தவிர்த்திடலாம்னு நினைக்கிறேன். ஏன்னா அந்த அழகான பீலிங் அப்டியே நம்மள விட்டு போயிடும். எனக்கு சுஜாதா எழுத்துக்கள் சுத்தமா போரடிக்க இதுவும் ஒரு காரணம்

பரிசல்காரன் said...

//நம்மோட ஆதர்ச எழுத்தாளர்களை நேரில் சந்தித்து பேசவோ பழகவோ முயற்சி பண்ணக் கூடாதுங்கறது. சந்தர்ப்பம் தானா அமைந்தாலும் தவிர்த்திடலாம்னு நினைக்கிறேன். ஏன்னா அந்த அழகான பீலிங் அப்டியே நம்மள விட்டு போயிடும்.//

ஒத்துக்கொள்ளத் தோன்றுகிறது. நாம் ஒரு பிம்பம் வைத்திருப்போம், நேரில் பார்த்தால் அது மாறிவிடுகிறது. :-(

உங்களுக்கு சுஜாதாவைச் சந்தித்து அப்படி என்ன நடந்தது என்பதைப் பதிவாகப் போட்டு ஒரு 500 பின்னூட்டம் வாங்கிக்கங்களேன். (நீங்க பதிவைப் போட்டா அன்னிக்கு நிறைய பேரோட பின்னூட்டப் பொழப்புல மண்னுதான்!)

வெண்பூ said...

//
rapp said...
(இது என்னோட சொந்தக் கருத்து மட்டும்தான், யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க) நம்மோட ஆதர்ச எழுத்தாளர்களை நேரில் சந்தித்து பேசவோ பழகவோ முயற்சி பண்ணக் கூடாதுங்கறது. சந்தர்ப்பம் தானா அமைந்தாலும் தவிர்த்திடலாம்னு நினைக்கிறேன். ஏன்னா அந்த அழகான பீலிங் அப்டியே நம்மள விட்டு போயிடும். எனக்கு சுஜாதா எழுத்துக்கள் சுத்தமா போரடிக்க இதுவும் ஒரு காரணம்
//

100% சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.. நான் பல வருடங்களாக அட்மயர் செய்த "ஹாய் மதன்" டிவியில் வந்த பிறகு அவரது எழுத்துக்களை அவ்வளவு ரசிக்க முடியவில்லை.

அதனால்தான் நீங்கள் உள்ளிட்ட பதிவர்களை சந்திக்கவும் பயமாக இருக்கிறது.. :(

rapp said...

//உங்களுக்கு சுஜாதாவைச் சந்தித்து அப்படி என்ன நடந்தது என்பதைப் பதிவாகப் போட்டு ஒரு 500 பின்னூட்டம் வாங்கிக்கங்களேன்//

எங்கங்க, போன பதிவுக்கு 166 பின்னூட்டங்கள்தான், நெறயப் பேர் கும்மிக்கு வரலை:(:(:( சுஜாதா சார் பத்தி பதிவா, ஐயய்யோ, என்னயப் போட்டு குமுறிடுவாங்க:):):)

rapp said...

//நீங்கள் உள்ளிட்ட பதிவர்களை சந்திக்கவும் பயமாக இருக்கிறது.//

தோடா, அன்னைக்கு விருந்துக்குக் கூப்டுட்டு, இன்னைக்கு இப்டி சாக்கு சொல்லிட்டாரு சம்மந்தி வெண்பூ:):):) உண்மையச் சொல்லுங்க சம்மந்தி, நான் வந்து அண்ணிக்கு கரண்டியை குறிப்பார்த்து எய்துவது எப்டிங்கறதுல சில டிப்ஸ் கொடுத்திடுவேனோங்கற பயத்துலதானே சொல்றீங்க. ஆனாலும் ரொம்ப நன்றிங்க சம்மந்தி, என்னை எழுத்தாளர்கள் லிஸ்ட்ல சேர்த்ததுக்கு:):):) (இப்டில்லாம் நாங்களே அர்த்தம் கண்டுபிடிச்சி சந்தோஷப்பட்டுப்போம்:):):))

வெண்பூ said...

//
rapp said...
எங்கங்க, போன பதிவுக்கு 166 பின்னூட்டங்கள்தான், நெறயப் பேர் கும்மிக்கு வரலை
//

ஆஹா.. உங்க அப்துல்லா அண்ணன் பதிவுல இன்னிக்கு 200 தொட்டாச்சி தெரியாதா???

Kumky said...

என்னது...புத்தகங்களா.....ஹூம்.

Thamira said...

நன்றி தோழர்.! நீங்கள் விரைந்து தொடர்ந்தது மட்டுமல்லாமல் பெரிய தலைகளையும் அழைத்து எனது முதல் தொடரை வெற்றிபெறச்செய்துவிட்டீர்கள்..

Thamira said...

அந்தப் படத்தில் வாசகரின் கையெழுத்து ஒளிந்துகொண்டிருக்கும். // இது குங்குமம் மாதிரி ஞாபகம்.! நானும் ரசித்துப்பார்த்த பகுதி. நானும் கூட ட்ரை பண்ணிப்பார்ப்பதுண்டு. டாய்லெட் சமாசாரம் தவிர மற்றவற்றை என்னுடன் ஒப்பிட்டு பார்க்கமுடிகிறது.

Thamira said...

நான் ரெண்டு நாட்களாக பதிவு போடாமல் கடை காத்தாடி விட்டது. இன்று போட்டேன். தமிழ்மணம் காலை வாறிவிட்டது. பதிவையும் ஏற்றமுடியவில்லை, பின்னூட்டமும் திரட்டப்படவில்லை. கடுப்பில் என்ன பண்றதுன்னு தெரியாம் முழித்துக்கொண்டிருக்கிறேன். எல்லோரும் கடைப்பக்கம் வாங்கன்னு விளம்பரம் பண்ணிக்குறேன்..

வெண்பூ said...

//
தாமிரா said...

தமிழ்மணம் காலை வாறிவிட்டது. பதிவையும் ஏற்றமுடியவில்லை, பின்னூட்டமும் திரட்டப்படவில்லை.
//

அது வேற ஒண்ணுமில்ல.. உங்க பதிவை படிச்சிட்டு தமிழ்மணமும் காண்டாகி இருக்கும். அதனாலதான்.. :))) (ச்சும்மா.. லுல்லல்ல்ல்ல்லாய்க்கு)

கார்க்கிபவா said...

// rapp said...
ஹி ஹி, பதிவுக்கு சம்பந்தமில்லாதக் கேள்வி, உங்களுக்கு கார்க்கி மேல இவ்ளோ காண்டா? :)://

ஏன் ராப்?எனக்கு புரியல..

கார்க்கிபவா said...

புரிஞ்சிடுச்சு ராப்... எனக்கு ஒரு கண் டப்ஸு ஆனப்ப எடுத்தது.. பரிசல் கேட்டப்ப அவசரத்துல மடிகணிணி கேமிராவால் எடுக்கப்பட்டது.. நல்ல ஃபோட்டோவ கொடுத்தால் ரசிகைகள் தொல்லை அதிகமாகும் என்பதால் இதைக் கொடுத்தேன்

நன்றி பரிசல்

Anonymous said...

//லைப்ரரியில் விரும்பிய புத்தககத்தை எடுத்து வேறு பகுதியில் ஒளித்து வைத்து, அடுத்தமுறை எடுத்துக் கொள்ளும் திருட்டுத் தனமெல்லாம் செய்திருக்கிறேன்//

அனேகமாக வாசிக்கும் ஆர்வம் உள்ள எல்லோரு, இதைச் செய்திருப்போம்; நான் உட்பட.

விலெகா said...

அப்புறம் சின்னச் சின்னப் பொட்டலங்களில் இருப்பதைப் படிப்பது அவ்வளவு விருப்பம எனக்கு. பாக்யாவில் என் சிறுகதை வந்திருந்ததை கடலை மடித்த பேப்பரில் ஒரு முறை கண்டு ஆச்சர்யப்படு ஒரு வருடத்துக்கு முன் வந்த அந்தப் புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்கி வந்தேன். இது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம்.

அருமை !
எனக்கும் இதுபோல பழக்கம் உண்டு.ஒரு நாள் அம்மா என்னிடம் பருப்பு வாங்கிவரச்சொல்ல , பருப்பு மடிக்கப்பட்ட காகிததில் உள்ள கதையை படிக்கபோய் பருப்பை கொட்டி அம்மாவிடம் அடிவாங்கியுள்ளேன்

Tech Shankar said...

//இந்த டாய்லெட்டில் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு எப்படி ஆரம்பித்ததென்றே தெரியவில்லை.

கொடுத்து வைச்ச ஆளு சார் நீங்க.

நாங்கள் எல்லாம் இன்னும் அதே திறந்த வெளிப் பல்கலைக் கழகம் தான்.

சூப்பரு