Showing posts with label புக்ஸ். Show all posts
Showing posts with label புக்ஸ். Show all posts

Friday, November 7, 2008

புக்ஸாய நமஹ!

இதுவும் ஒரு தொடர்பதிவுதான். தாமிரா எழுதிய இந்தப் பதிவின் விளைவு..

புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு எப்போது ஆரம்பித்தது என்று நினைவிலில்லை. நடந்தது எப்படி, பேசியது எப்போதிலிருந்து என்று ஞாபகத்திலிருக்கிறதா என்ன?

கூட்டுக்குடும்பம். என் கஸின் கிருஷ்ணமூர்த்தி அண்ணாவுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது. அவருக்கு காங்கிரஸில் அதிக ஈடுபாடு என்பதால் ‘இதயம் பேசுகிறது’ மணியனை விரும்பிப் படிப்பார். நான் இதயத்தில் வரும் பயணக் கட்டுரைகளை மிகவும் விரும்பிப் படிப்பேன். அப்போது வாசகர்களின் கையெழுத்தை (Signature) அனுப்பச் சொல்லி, அதில் படம் வரைந்து ஒரு பகுதி வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் படத்தில் வாசகரின் கையெழுத்து ஒளிந்துகொண்டிருக்கும். அதையும் விரும்பிப் படித்து வந்தேன். பிறகு ஆறாவது படிக்கும்போது, அப்பாவின், மாமாவின் சட்டைப் பையிலிருந்து காசெடுத்து காமிக்ஸ் வாங்கிப் படித்து மாட்டிக்கொண்டு, மாமா போலீஸில் மாட்டிவிடுவதாய் மிரட்டி, (இதுக்கெல்லாம் போலீஸ்!) இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று கடிதம் எழுதிக் கொடுத்ததெல்லாம் நடந்ததுண்டு. (இன்றைக்கும் அந்தக் கடிதம் எனனிடம் உண்டு!)





என் புத்தக அலமாரி
(இப்போதுதான் வீடு மாற்றல் நடந்திருக்கிறது என்பதால் இவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஒரே மாதத்தில் 'ஒழுங்காகி'விடும்!)



அப்பாவுக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. அவர் விகடன் வாசகர். ரொம்ப வெறித்தனமாக இந்தப் பழக்கம் ஆரம்பித்தது என்றால் ஒரு பள்ளி விடுமுறையின்போது, சிவகங்கையில் இருக்கும் என் மாமா ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோதுதான். சிவன்கோவில் தெருவில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவரது சகோதரர் ஒருவர் இருந்தார். திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரி வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். அடிக்கடி எங்காவது புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்றபடி இருப்பார். அவரது அறையில் புத்தகங்கள்.. புததகங்கள்.. புத்தகங்கள். விகடன், குமுதம், கல்கண்டு என்று எல்லா புத்தகங்களையும் வருட, மாத, தேதி வாரியாக அடுக்கிவைத்திருந்தார். டாஸ்மாக்கில் புகுந்த குடிகாரனைவிட மோசமானேன். அப்படி ஒரு புத்தகப்போதை பிடித்துக் கொண்டது. பழைய புத்தகங்களை சுவாரஸ்யமாக எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

என் வாசிப்புப் பிரியத்தைக் கண்ட அவர் சில கவிதைப் புத்தகங்களையும் எனக்குப் பரிசாக அளித்தார். (அதுதான் என் புத்தக அலமாரியில் சீனியர் மோஸ்ட்.) அவரிடம் அனுமதி பெற்று அருகிலேயே இருந்த அகரம் பதிப்பகம் சென்றேன். பழைய சில சிற்றிதழ்கள், கவிதை நூல்கள் வாங்கினேன். கவிஞர் மீராவைப் பார்க்க விரும்பினேன். அப்போது அவர் அங்கில்லை. அங்கிருந்து மாமா மதுரை கூட்டிச் செல்லும்போது, பஸ்ஸில் அமர்ந்திருக்கும்போது, நாலைந்து சீட் முன்னால் ஒருவரைக் காட்டி, ‘அவர்தான் நீ கேட்ட கவிஞர் மீரா’ என்றபோது நம்பவே முடியவில்லை. எழுத்தாளர்கள், கவிஞர்களெல்லாம் பேருந்தில் வருவார்களா என்று வியப்பாக இருந்தது அப்போதெனக்கு. அவர்களுக்கென்று தனியாக புஷ்பக விமானம் இருக்கும் என்று நினைத்திருக்கிறேன் போல. இப்போதும் வீட்டு அட்வான்ஸுக்கு கையேந்தும் எழுத்தாளர்களின் நிலைமையைப் பார்த்தால் ஒன்றும் மாறிவிடவில்லை என்றுதான் தோன்றுகிறது.





இடம் இல்லாததால் வெளியே காத்திருக்கும் சில புத்தகங்கள்..


ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், சுபா ஆகியோரது எழுத்துக்களால் கவரப்பட்டு இவர்கள் எழுதிய நாவல்கள் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் வெர்ஸடைல் எழுத்துக்களும், பி.கே.பி-யின் சுவாரஸ்ய நடையும் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தன.

உடுமலையின் அத்தனை லைப்ரரிகளிலும் எனக்கு உறுப்பினர் கார்டு உண்டு. இன்றைக்கும் என் தம்பிகளால் அது உபயோகப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. லைப்ரரியில் விரும்பிய புத்தககத்தை எடுத்து வேறு பகுதியில் ஒளித்து வைத்து, அடுத்தமுறை எடுத்துக் கொள்ளும் திருட்டுத் தனமெல்லாம் செய்திருக்கிறேன்!

அதற்குப்பிறகு புத்தகங்கள் வாங்கும் பழக்கம். அது தொட்டில் பழக்கம்போல. இன்றும், என்றும் என்னை விட்டுப் போகாததாகவே இருக்கிறது. நண்பர்களுடன் ஏதாவது பார்ட்டி என்று போனால் நிதானம் தவற மாட்டான் என்ற நம்பிக்கை உமாவுக்கு உண்டு. ஆனால் ஏதாவது புத்தகக் கடை பக்கமாகவோ, புத்தகத் திருவிழாவோ என்றால் அதன் அருகிலேயே அனுப்ப பயப்படுவார். காசையெல்லாம் தீர்த்துவிட்டு வருவேன் என்ற பயம்தான்!

ப்ளஸ் டூ முடித்தபின், என்னிடம் சேர்ந்த புத்தகங்களை வைத்துக் கொண்டு ஒரு சர்க்குலேஷன் லைப்ரரிகூட நடத்தினேன்.. கொஞ்ச நாள்!

புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு வந்ததற்காக எப்போதும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சாப்பாடும்போதும், டாய்லெட்டிலும், பயணங்களின்போதும், சும்மா இருக்கும்போதெல்லாம் புத்தகம் படிக்காமல் இருப்பதில்லை நான்.

இந்த டாய்லெட்டில் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு எப்படி ஆரம்பித்ததென்றே தெரியவில்லை. சின்னவயதில் பயந்து பயந்து இதைச் செய்துவந்தேன். ஒருமுறை சென்னைக்கு என் சொந்தக்காரர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது நான் மிகவும் மதிக்கும் ஒரு உறவினர் தினமும் ஹிண்டு பேப்பரோடு டாய்லெட்டுக்குள் நுழைதைக் கண்டேன். ‘அட’ என்று சந்தோஷமாகிப் போக அதற்குப்பிறகு வீட்டில் அம்மாவிடம் இதைச் சொல்லியே வாதம் செய்வதுண்டு.

உமாவிடம் வீடு கட்டினால் டாய்லெட்ல ஒரு க்ளோஸ்ட் புக் ஷெல்ஃப் வைக்கணும் என்று திட்டு வாங்கிக் கொண்டே சொல்வதுண்டு. சமீபத்தில் ஒரு எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது வீட்டு டாய்லெட்டில் புக்‌ஷெல்ஃப் இருப்பதை அறிந்து வியந்தேன்!

'சாப்பிடும்போது புத்தகம் படித்தால் அன்னலக்ஷ்மி கோவிச்சுக்குவாடா' - இது என் சின்னவயதில் சொல்லப்பட்டது. அப்போது நான் சொல்வேன்..

“அம்மா.. சாப்பிடறது அன்ன லஷ்மின்னா படிக்கறது சரஸ்வதிதானே. அவங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்தானேம்மா..”

பிறகு இவனை மாற்ற முடியாது என்று விட்டுவிட்டார்கள்.

அப்புறம் சின்னச் சின்னப் பொட்டலங்களில் இருப்பதைப் படிப்பது அவ்வளவு விருப்பம எனக்கு. பாக்யாவில் என் சிறுகதை வந்திருந்ததை கடலை மடித்த பேப்பரில் ஒரு முறை கண்டு ஆச்சர்யப்படு ஒரு வருடத்துக்கு முன் வந்த அந்தப் புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்கி வந்தேன். இது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம்.

புத்தகம் படிக்க ஆரம்பித்ததும், புத்தகம் படிப்பதும் ஒரு முடிவிலி என்பதால் இந்தக் கட்டுரையை முடிக்க முடியாமல் திணறுகிறேன்.

தொடருக்கு அழைப்பதால் உள்ள சங்ககடங்கள் சிலதை அறிவேனெனினும், இது மிகவும் சுவாரஸ்யமான சப்ஜெக்ட் என்பதாலும், இவர்கள் இருவரது வாசிப்புப் பழக்கத்தை அறியும் உள் ஆவல் உந்துவதாலும், இந்த இரு பெரும் தலைகளை இதைத் தொடர அழைக்கிறேன்.

1) நர்சிம்
2) லக்கிலுக்