Thursday, May 29, 2008

காதலிக்கும் ஆசையில்லை

"ஏண்டா கேசவ், திவ்யாவைப் பிடிக்கலைங்கற?" - ராகவன் கேட்டான். தூரத்தில் அலைகளை துரத்தி விளையாடும் குழந்தைகளும், கால் நனைத்து விளையாடும் இளைஞிகளுமாய் பிஸியாக இருந்தது மெரினா.

"பிடிக்கலன்னு சொல்லலைடா. லவ் பண்ற எண்ணத்தோட பழகலைடா நான்" மறுத்தான் கேசவ். "நானே எங்கப்பா சொல்லி வேலை தேடறதுக்காக அவரு ஃபிரண்ட் ராஜன் அங்கிள் வீட்டுல இவ்ளோ நாள் தங்கியிருக்கேன். இப்போ எனக்கு வேலை கிடைச்சு ட்ரெய்னியா ஆறு மாசம் பெங்களூர் போகப்போறேன்.. நாளைக்கு காலைல கிளம்பிடுவேன். அந்த நேரத்துல, இப்படி, வந்த இடத்துல பொண்ணை மயக்கீட்டான்-ன்னு கெட்ட பேரோட போகணுமா.. அதுவுமில்லாம நான் திவ்யா கூட நல்ல ஃபிரண்டாதான் பழகீட்டிருந்தேன். நான் இங்க இருந்த ஆறு மாசம் அவங்கப்பா எத்தனை தடவை திவ்யாவை என்கூட தனியா அனுப்பியிக்காருன்னு தெரியுமா? எப்படி அவளுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்ததுன்னே தெரியல"

"அதெப்படி அவ்ளோ கரெக்டா அவ உன்னை லவ் பண்றான்னு கண்டுபிடிச்ச?"

"இன்னைக்கு காலைல ட்ரெய்ன் டிக்கெட் ரிசர்வ் பண்றதுக்காக வெளில கிளம்பினேன்ல.. அப்போ போர்ட்டிகோவுல நின்னு திவ்யா அவ ஃபிரண்ட் தீபாகிட்ட பேசிகிட்டிருந்தத கேட்டுட்டேன். என் பேர் வந்ததால நின்னு கேட்டேன். தீபாவை எனக்கும் தெரியும்.. திவ்யாகூட காலேஜ்ல படிக்கறா. அவளோட நல்ல ஃபிரண்ட்"

"என்ன சொல்லீட்டிருந்தா?"

"கேசவ் நாளைக்குப் போவாரு போல.. அதுக்குள்ள நான் அவர லவ் பண்றத சொல்லிடுவேன்-ன்னு சொல்லீட்டிருந்தா"

"இப்போ சாயந்தரம் ஆச்சுல்ல. சொல்றவளாயிருந்தா இந்நேரம் உனக்கு ஃபோன் பண்ணியிருப்பாள்ல?"

"இல்லடா.. அதையும் சொல்லீட்டிருந்தா. நேர்ல சொல்றதுக்கு தயக்கமா இருக்கு. இன்னைக்கு நைட்டுக்குள்ள எப்படியாவது அவருக்கு தெரியப்படுத்தீடுவேன்னா"

"சரிடா.. அதுக்காக இப்படி காலைலேர்ந்து வெளியிலயே சுத்திகிட்டிருந்தா என்ன அர்த்தம்? போ.. எல்லாத்தையும் பேக் பண்ணி வெச்சாத்தானே காலைல கிளம்ப முடியும்?"

"ப்ச்.. என்ன பண்றதுன்னே தெரியலடா. நல்ல பொண்ணுடா அவ. இப்படி ஒரு பிரண்டை மிஸ் பண்ண முடியாது என்னால.. சரி.. எதுவாயிருந்தாலும் நான்தானே போய் ஃபேஸ் பண்ணணும். ஓ.கே. வரேண்டா" ராகவனிடம் விடைபெற்று புறப்பட்டான் கேசவ்.
********************************
ராஜன் அங்கிள் வீட்டை கேசவ் அடைந்தபோது மணி எட்டைத் தொட்டிருந்தது.

"என்னடா இது.. நாளையோட போற.. கொஞ்சம் முன்னாடி வந்து எங்ககூட இருக்காம இவ்ளோ லேட்டா வர்ற?"-வாசலிலேயே நிறுத்தி கேள்வி கேட்ட திவ்யாவின் அம்மாவிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அம்மாவின் குரலால் கேசவ் வந்து விட்டதை உணர்ந்து உள்ளேயிருந்து திவ்யா வந்து எட்டிப்பார்த்த போது இவனால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.

"இன்னைக்கு சாப்பிட வெளில போயிடாத. அவரு இப்போ வந்துடுவாரு. உன்னை வெயிட் பண்ணச்சொன்னாரு. எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்"

கேசவ் தர்மசங்கடமாய் உணர்ந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் "சரிம்மா.. போய் முகம் கழுவீட்டு வந்துடறேன்" சொல்லிவிட்டு மாடியிலிருக்கும் தனது அறை நோக்கிப் போனான். படிகள் ஏறி, அறைக் கதவைத் திறக்கும் வரை திவ்யா தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறாளென்பதை முதுகில் உணர்ந்தான்.

அறையைத்திறந்தபோது கீழே கிடந்த கவரைப் பார்த்தவனுக்கு அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததன் அர்த்தம் தெரிந்தது. ஒருவித தயக்கத்துடனே கவரைப் பிரித்தான்.

‘வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள ஆசை..
ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று இரண்டே வரிகள் கம்பியூட்டர் எழுத்துகளில் இருக்க கீழே ‘காதலுடன் உங்கள் D’ என்றிருந்தது. D மட்டும் அழகாக word art -ல் டைப் செய்யப்பட்டிருந்தது. கேசவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்படியே படுக்கையில் அமர்ந்தான்.

அரை மணி நேரத்திற்குப்பின் அறைக்கு வெளியே திவ்யாவின் குரல் கேட்டு சட்டென எழுந்தான்.

"கேசவ்.. அப்பா வந்துட்டாரு. சாப்பிடக் கூப்பிடறாரு"-எப்போதும் இயல்பாகப் பேசும் அவள் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டுப் போனாள்.

சாப்பிடும்போது திவ்யா வழக்கத்திற்கு மாறாக இருந்ததை ராஜன் அங்கிள் கவனித்துக் கேட்டார்.

"என்னன்னே தெரியலீங்க.. சாயந்திரம் தீபாகூட வந்து- ரொம்ப நேரம் ரெண்டு பேரும் டிஸ்கஷன் வேற.."

"ஒண்ணுமில்ல.. கேசவ் நாளைக்குப் போறான்ல.. அந்த சங்கடமா இருக்கும்" விகல்பமில்லாமல் சொல்லிவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜன் அங்கிளைப் பார்க்கவே முடியவில்லை அவனுக்கு.

திடீரென்று ஏதோ யோசனை வந்தவனாய் "திவ்யா.. காலைல ஏழேகால் பிருந்தாவன்ல போறேன். என்னை உன் ஸ்கூட்டில ரயில்வே ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணுவல்ல?" என்று கேட்டான். அவள் முகத்தில் சந்தோஷம் படர்வதையும் உணர்ந்தான்.

"ஏழு மணிக்கு எந்திரிக்கறதுக்கு பதிலா.. ஆறு மணிக்கு முன்னாடியே எழுந்துருக்கணும். ஒரு நாள்தானே... அதெல்லாம் பண்ணுவா.." என்று கிண்டலடித்தார் அங்கிள்.
************************************************
எப்போதும் ஐம்பதுக்கு மேலே ஓடும் ஸ்கூட்டியின் ஸ்பீடாமீட்டர் முப்பதையே தொடவில்லை. ரயில்வே ஸ்டேஷனை அடையும் வரை இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

"திவ்யா உனக்கு பிளாட்பாரம் டிக்கெட் வாங்கிக்க. நான் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வரேன்" சொல்லிவிட்டு கேஷுவலாக முன் சென்றான். வாட்டர் பாட்டில் வாங்கிவிட்டு திரும்பியபோது அவள் தயாராக நின்றிருந்தாள்.

"போலாமா?" கேட்டபடியே உடன் நடந்தான். பிளாட்பாரத்தை அடைந்து லக்கேஜை வைத்துவிட்டு
"உட்கார் திவ்யா.. இன்னும் அரை மணி நேரம் இருக்கு" என்றான்.

திவ்யா உட்கார்ந்தாள். பதட்டமாய் இருந்தாள்.

"ஏன் திவ்யா என்னமோ மாதிரி இருக்க?" என்று கேட்டான். அவளுக்கு குழப்பமாக இருந்தது. நான் அறையில் போட்ட கவர் கேசவுக்கு கிடைக்கவில்லையோ?

'இ..இல்ல.."

'சரி.. நான் ஒண்ணு சொல்றேன். டென்ஷன் ஆகிடாத.."

"எ..என்ன கேசவ்"

"உன் பிரண்ட் தீபா பண்ணின வேலை தெரியுமா? இங்க பாரு" என்றபடி அந்தக் கவரை எடுத்துக் கொடுத்தான். தீபாவா.. இது நான் எழுதினது கேசவ் என்று கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

"கேசவ் நீ தப்பா புரிஞ்சிட்டிருக்க" என்று எதுவோ சொல்ல வந்தவளை இடைமறித்தான். "இல்லல்ல திவ்யா.. உன்னை நான் தப்பாவே நினைக்கல. நீ ஒரு நல்ல பிரண்ட்-டா, இன்னும் சொல்லப்போனா கூடப் பொறக்காத பிரதரா என்னை நினைக்கறது அவளுக்கும் தெரியும்தானே.. அதுனால உனக்குத் தெரியாமத்தான் அவ இதப் பண்ணியிருக்கணும். சோ, உன்னை நான் தப்பு சொல்லல"

வாயடைத்துப்போனது திவ்யாவுக்கு. அவனை நேருக்கு நேர் பார்த்து "சாரிடா கேசவ்" என்றாள்.

"நீ என்ன பண்ணுவ திவ்யா? அவகிட்டையும் இதப் பத்தி நான் பேச மாட்டேன். நீயா சொல்லிடு. என்ன? அவளையும் நான் நல்ல பிரண்டாத்தான் நினைக்கறேன். சரியா?" என்றான்.

தூரத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்ஸின் சத்தம் கேட்க, லக்கேஜை எடுத்தவனைத் தடுத்தாள். "நீ போய் உட்காருடா. ஒண்ணை நான் எடுத்துட்டு வரேன்"

அவள் முகம் தெளிவாக இருந்ததை கண்டு சந்தோஷமாக இருந்தது அவனுக்கு!

3 comments:

FunScribbler said...

நான் தான் first!

கதை நல்லா இருந்துச்சு! ஆனா, இவங்க பிரச்சனையில அந்த தீபா புள்ளைய ஊறுகாயா ஆக்கிபுட்டீங்களே மக்கா!!

//எப்போதும் ஐம்பதுக்கு மேலே ஓடும் ஸ்கூட்டியின் ஸ்பீடாமீட்டர் முப்பதையே தொடவில்லை//

ஆமா, அப்ப luggage எங்க வச்சுருப்பாங்க??

ராமலக்ஷ்மி said...

யார் மனசையும் நோகடிக்க விரும்பாத நல்ல hero. பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமாதலால் தீபா பேரை பயன் படுத்திக்கிட்டாரு. நல்ல கதை. ஆனாலும், 'ஸ்கூட்டி,ஸ்பீடா மீட்டருன்னு' ரொம்பத்தான் லாஜிக் பாக்குறீங்க தமிழ்மாங்கனி!

பரிசல்காரன் said...

எனக்காக வாதாடிய ராமலக்ஷ்மி மேடத்துக்கு தேங்க்ஸ்-ங்க!

முதல்ல வந்ததுக்கு வணக்கமுங்க.. ஸ்கூட்டில முன்னடி ஒரு பேக் வெச்சுட்டு, பின்னாடி கேசவ் கைல ஒரு பேக் வெச்சுட்டு போலாம்ல? நம்ம திருப்பூர் பக்கம் வந்து பாருங்க. ஒரு டி.வி.எஸ்-ல மொத்த வீட்டையும் காலி பண்ணி எடுத்துட்டு போவாங்க!