Tuesday, November 3, 2009

பி-10, பி.கா.-10.,

திமூலகிருஷ்ணன் கூப்பிட்டிருந்தார் ‘ஒரு தொடர்விளையாட்டு இருக்கு.. உங்களைக் கூப்பிட்டிருக்கேன்’ ன்னு. போய்ப்பார்த்தா அது தொடர் விளையாட்டு அல்ல. தொடர் பதிவு. ஆதி இதைத் தொடர்பதிவுன்னே குறிப்பிட்டிருக்காரு! இதை ஏன் எல்லாரும் விளையாட்டுங்கறாங்க-ன்னு யோசிச்சப்போ ‘ஒருவேளை பிடிக்காதவங்க்கிட்டேர்ந்து ஆட்டோ வந்தா ‘ஹி..ஹி.. ச்சும்மா விளையாட்டுக்குச் சொன்னேங்க’ன்னு சொல்லித் தப்பிச்சுக்கறதுக்காகன்னு நெனைக்கறேன். நம்மதானே இந்தமாதிரியெல்லாம் பயப்படுவோம், மாதவராஜ் சாரெல்லாம் இந்த மாதிரி எத்தனை ஆட்டோ பார்த்திருப்பாரு.. அவரும் இதை விளையாட்டுன்னு ஏன் குறிப்பிட்டாருன்னா ஒருவேளை அவரே குறிப்பிட்ட மாதிரி குழந்தைத்தனமா யோசிக்கறதாலகூட இருக்கலாம். குழந்தைத்தனமானது எல்லாமே விளையாட்டுதானே!

ம்ம்..எப்படியோ ஒரு பாரா கடத்தியாச்சு.. இந்த மாதிரி ஏதாவது கிறுக்கீட்டே வந்து, டக்னு PASSன்னு இந்தப் பதிவைத் தள்ளிவிட முடியாதான்னு யோசிக்கறேன். என்னாத்துக்கு பிடிக்காதவங்க இவங்கன்னு சொல்லி ஒரு சிலர்கிட்ட வாங்கிக்கட்டிக்கணும்னு தோணுது. ஆனா ஆதி தெளிவா நாளைக்குப் பதிவு போடலைன்னா அப்பறம் பேச்சு வார்த்தையே கிடையாதுன்னுட்டாரு. அதுனால என்ன சல்ஜாப்பு சொன்னாலும் எழுதித்தான் தீரணும்...

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

என் பங்குக்கு எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை: இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். இல்லீன்னா பாரதிக்கப்புறம் கவிஞரே இல்லை, காமராஜருக்கப்புறம் தலைவரே இல்லைங்கற உண்மைகள் தொடர்ந்துட்டே இருக்கும். இருக்கறவங்கள்ல பெஸ்ட், வொர்ஸ்டைச் சொல்லுவோமே! (எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தீங்களா!)


1.அரசியல் தலைவர் (யாருங்க எடுத்த ஒடனே இந்தக் கேள்வியைக் கொண்டு வந்தது..? பாருங்க.. கைகாலெல்லாம் ஒதறுது.. ச்சே...)

பிடித்தவர் : நல்லகண்ணு. பிடிக்காதவர்: விஜய.டி.ராஜேந்தர்

2.எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ்.ராமகிருஷ்ணன் பிடிக்காதவர் : அனுராதா ரமணன்

3.கவிஞர்
பிடித்தவர் : வாலி பிடிக்காதவர் : ரமேஷ்வைத்யா

4.இயக்குனர்
பிடித்தவர் : கே.எஸ்.ரவிகுமார் பிடிக்காதவர் : பேரரசு (இதுல விக்ரமனுக்கும் இவருக்கும் பெரும் போட்டியே நடந்தது. .000001 மார்க்குல இவரு லிஸ்ட்ல வந்துட்டாரு!)

5.நடிகர்
பிடித்தவர் : ரஜினிகாந்த் பிடிக்காதவர் : ஸ்ரீகாந்த்

6.நடிகை
பிடித்தவர் : நயன்தாரா பிடிக்காதவர் : ஓய்.விஜயா

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா பிடிக்காதவர் : எஸ்.ஏ.ராஜ்குமார் (ல...ல..ல.லா...)

8. தொழிலதிபர்
பிடித்தவர் : சக்தி ப்ராடக்ஸ் சாந்தி துரைசாமி பிடிக்காதவர் : சரவணா ஸ்டோர்ஸ் ராஜரத்தினம் (வாடிக்கையாளர்களை மதிக்காமைக்கு)

9. அரசு அதிகாரி
பிடித்தவர் : கலெக்டர். ராதாகிருஷ்ணன் பிடிக்காதவர் : வால்டர்.தேவாரம்

10. சின்னத்திரை நட்சத்திரம்
பிடித்தவர் : அனுஹாசன் பிடிக்காதவர் : பூஜா (எப்பவுமே பபுள்கம்மை மென்னுகிட்டே திரிவாங்களே அதுனாலயே பிடிக்காது)

இதைத் தொடர நான் அழைப்பது:

1. இனியவன் உலகநாதன்
2. துக்ளக் மகேஷ்
3. நர்சிம்
4. கார்க்கி
5. முரளிகுமார் பத்மநாபன்


.

Monday, November 2, 2009

ஆள விடுங்க சாமிகளா....

ரவணனுக்கு வழித்தடங்களை ஞாபகம் வெச்சுக்கறதுன்னா அவ்ளோ கஷ்டம். கார்ல எப்பவுமே தமிழ்நாடு, இந்தியா மேப் வெச்சுகிட்டுதான் சுத்துவான். பலதடவை, அவன் ஆஃபீஸுக்கே அட்ரஸ் கேட்டுத்தான் போவான். ஆனாலும் அவனையே யார்கிட்டயும் வழி கேட்க்கூடாதுன்னு முடிவெடுக்க வெச்சது அவனோட ஊட்டி ட்ரிப்.

குடும்பத்தோட ஊட்டி போனான் சரவணன். ஊட்டியில் கொடுமையான விஷயம் வழித்தடம் கேட்கறது. கேட்டா ஊட்டிய பத்தி ஒனக்கென்ன தெரியும்ங்கற மாதிரியேதான் பதில் சொல்வாங்க. ஒரு வளைவுல ரோடு ரெண்டா பிரியுதே-ன்னு நிறுத்தி ஒரு நேவிப்ளூ கலர் ஸ்வெட்டர் போட்டவர்கிட்ட (ஊட்டில ஸ்வெட்டர் போட்டிருந்தா மாக்ஸிமம் அவர் உள்ளூர்க்காரரா இருப்பார். அதுவும் நேவிப்ளூ கலர் ஸ்வெட்டர்!) ‘ஊட்டி நேராவா?”ன்னு கேட்டான் சரவணன்.

”இல்ல ரைட் டர்ன் எடுத்துப் போங்க”ன்னாரு. சரி.. ஒரு பொது அறிவுக்காக இருக்கட்டுமேன்னு “நேராப் போனா எங்க போகும்?”ன்னு கேட்டான் இவன்.

அவ்ளோதான்.. அதென்னவோ ராணுவத் தடவாளம் இருக்கற ரகசிய ரூட்டோ என்னமோ.. உடனே மூஞ்சி அவருக்கு கடுமையா ஆகிடுச்சு... “ஹலோ நீங்க எங்க போகணும்?”ன்னு கேட்டார். சரவணனுக்கு டரியலாய்டுச்சு. ஏதாவது தப்பா கேட்டுட்டோமோன்னு நடுங்கீட்டே.. “ஊ..ஊட்டிதாங்க போகணும்”னான்.

“அதான் நேராப் போனா போகாதுன்னு சொல்லீட்டேன்ல? ரைட்ல போங்க”

இவன் விடல.. “இல்லீங்க... இந்த ரூட் எங்க போகும்ன்னு...”

“ஊட்டிதானே போகணும் நீங்க? ஊட்டிதானே? போங்க.. ரைட் எடுத்து போன்னா போய்யா”ன்னு சொல்லிகிட்டே பக்கத்துல இருந்தவர்கிட்ட “இப்படிப் போனா அங்கியும் இங்கியும் சுத்தும்.. இதெதுக்கு கேக்கறான் அவன்? ரைட்ல போன்னா போக வேண்டியதுதானே?”ன்னு முனகினார். இவன் பொண்டாட்டி இவனைப் பார்த்து.. “சரி.. சரி.. காரைத் திருப்புங்க”ன்னு சொல்லவே. ‘ங்க’ – ‘ய்யா’வாய்டுச்சு ‘டா’வாகறதுக்குள்ள போயிடலாம்னு திரும்பீட்டான்.

அதே மாதிரி ஒருத்தரைக் கேட்டா அவர்கூட இருக்கற ரெண்டு மூணு பேர் கூட்டா சேர்ந்து கும்மியடிச்சு பதில் சொல்லி குழப்பறது-அடுத்த நாள்- ஊட்டிக்குள்ள இன்னொரு இடத்துல நடந்தது.

பைகாரா ஃபால்ஸுக்குப் போகணும் முடிவு பண்ணினாங்க. ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் பார்த்ததும் காரை ஓரங்கட்டி நிறுத்தி இறங்கிப் போய்க் கேட்டான்.

“சார் பைகாரா ஃபால்ஸ் எப்படிப் போகணும்?”

“பை காரா?”

“ஆமாங்க பைகாராதான்”

“இல்ல... பை காரா?”

-இதென்னடா வம்பாப்போச்சு.. “பைகாராதாங்க”

“ஐயோ.. கார்ல போறீங்களான்னு கேட்டேன்..”

‘அடக் கொடுமையே By Carஆ-ங்கறதயா அப்படிக் கேட்டான்’ னு நெனைச்சுட்டு ‘ஆமாம்’னான்.

“இதே ரூட்ல நேராப் போனீங்கன்னா...” ன்னு ஆரம்பிச்சான். ‘ஊட்டில எல்லா ரூட்டுமே வளைஞ்சு வளைஞ்சுல்ல போகும்.. அதெப்படி நேராப்போறது’ன்னு குதர்க்கமா நெனைச்சவன் “சொல்லுங்க”ன்னான்.

“சிக்னல் ஒண்ணு வரும்.. அந்த சிக்னல்லேர்ந்து ரைட்ல போகக்கூடாது... லெஃப்ட்ல போனீங்கன்னா”

-ரைட்ல போகக்கூடாதுன்னா அத ஏன் சொல்லணும்? நேரடியா லெஃப்ட்ல போன்னு சொல்ல வேண்டியதுதானே??

“ரோடு ரெண்டா பிரியும்.. அதுலயும் லெஃப்ட் பிடிச்சு போங்க.. 24 கிலோமீட்டர்.. பைகாரா வரும்”

ஓரளவு இதை மனதில் வைத்துக் கொண்டு திரும்பிட்டான்... “சார்..” என குரல் கேட்டது... பார்த்தா அவனுக்கு வழி சொன்னவரோடு இன்னொருவர் நின்று கொண்டிருந்தார். “எங்க போகணும்?”

“பைகாரா”

“நேராப் போய் லெஃப்ட்ல போங்க”

அதற்குள் முதலாமவர் “நீ சொல்றது சிக்னலுக்கு முன்னாடி வர்ற லெஃப்ட்.. சிக்னல்ல லெஃப்ட் போனாத்தான் கரெக்டா வரும்”

“இல்லடா... இந்த ரூட்ல சிக்னலுக்கு முன்னாடி எங்கடா லெஃப்ட் வருது?”

“ஆமா வருதுல்ல” – இது புதிய குரல். அவர்களோடு இன்னொருவரும் சேர்ந்திருந்தார். மூணாவதா இன்னொருத்தரா? கடவுளே..

“யோவ்.. இந்த ரோட்ல எங்கடா லெஃப்ட் வருது?”

“நம்ம கிறிஸ்டி வீடு இருக்குல்ல? அதுக்கு அடுத்ததா....”

“கிறிஸ்டியா?.. ஆமா.. அவ ஊர்லேர்ந்து லீவுக்கு வந்திருக்காளாமே?”

சரவணனுக்கு கடுப்பாச்சு.. இருந்தாலும் கிறிஸ்டிங்கற பேர் பிடிச்சிருந்தது. அதுனால பொறுமையா நின்னுட்டிருந்தான். கிறிஸ்டி ஏர் ஹோஸ்ட்ரஸா இருக்காங்க. இப்ப ஏதோ லீவு போலிருக்கு. வந்திருக்காங்க.. இவங்க மூணுபேரும் அடுத்தநாள் கிறிஸ்டி வீட்டுக்கு மரியாதை நிமித்தமான சந்திப்புக்கு போகப் போறாங்க. ஒருவழியா எல்லாம் முடிவானப்பறம்தான் ஒருத்தன் அட்ரஸுக்காக நிக்கறாங்கறதே அவங்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

“நீங்க என்ன பண்றீங்க....”

“நான் கோவைல மொபைல் ஷாப் வெச்சிருக்கேன்.. க்ளாட் டு மீட் யூ.”ன்னான் சரவணன்.

“அதில்லீங்க.. இப்ப என்ன பண்றீங்க..”

“இப்ப வீக் எண்ட்க்காக ஊட்டி வந்திருக்கேன்..”

“ஐயோ கடவுளே.... பேச விடுங்க.. இப்ப என்ன பண்றீங்கன்னா.. நேராப் போயி..”

“ஒண்ணும் பண்ணல.. கெளம்பறேன்” னான் இவன்.

அதுக்குள்ள பின்னாடிலேர்ந்து இன்னொரு குரல் “நீங்க எங்க போகணும்க”ன்னு கேட்டது. ரஜினி படமா இருக்கேன்னு (எங்கேயோ கேட்ட குரல்) திரும்பினான் சரவணன்.

நேத்து எண்டராகும்போது ஊட்டிக்கு ரைட்ல போகச் சொன்ன நேவிப்ளூ ஸ்வெட்டர் பார்ட்டி!

‘ஐயோ ஆள விடுங்கப்பா’ன்னு ஓடி வந்தவன்தான். அதுக்கப்பறம் யார்கிட்டயும் வழியே கேட்கல. அங்கங்க இருக்கற போர்டைப் பார்த்து போய்ட்டே இருந்தான்!


.

Saturday, October 31, 2009

கண்டேன் காதலை – விமர்சனம்



மிகப்பெரிய தொழிலதிபர் மகன் சக்தி (பரத்), காதல் தோல்வி காரணமாக மனது வெறுத்து கால்போன போக்கில் போகையில், இரயில் பயணத்தில் துறுதுறு அஞ்சலியை( தமன்னா)ச் சந்திக்கிறான். அவளது வீடு வரை சென்று தங்குகிறான்.

அவளது பேச்சும், எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் குணமும் அவனைக் கவர்கிறது. அவளுக்கு, முறைமாமனை திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. ஆகவே சக்தியின் உதவியுடன் தன் காதலன் கௌதமை சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

வீட்டை விட்டு வந்ததுமே, அஞ்சலி தன் காதலன் கௌதமைத் தேடி ஊட்டி சென்றுவிட, சக்தி புத்துணர்ச்சியோடு திரும்ப சென்னை வந்து, சரிந்து கிடக்கும் தன் பிஸினஸை வெற்றிப் பாதை நோக்கித் திருப்புகிறான். அஞ்சலி எப்படி எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு முடிவெடுக்கிறாளோ அப்படி தன் தொழிலின் ஒவ்வொரு அடியையும் மிக ஸ்போர்டிவாக அதே சமயம் – சரியான முடிவுகளை எடுத்து முன்னேறுகிறான்.

அங்கே அஞ்சலி வீட்டில் எல்லாரும், அவள் சக்தியைக் காதலித்து அவனுடன் ஓடிவிட்டதாகக் கருதுகிறார்கள். ஒன்பது மாதங்களுக்குப் பின் தொலைக்காட்சி ஒன்றில் சக்தியின் பேட்டியை கண்டு, அவனைத் தேடி வந்து அஞ்சலியைப் பற்றிக் கேட்கிறார்கள். அப்போதுதான் அஞ்சலி, தன் காதலனுடன் வீட்டுக்குத் திரும்பவில்லை என்பதையே அறிகிறான் சக்தி.

பிறகு அஞ்சலியைத் தேடிப் போன சக்தி என்னவாகிறான், அஞ்சலி கௌதமுடன் சேர்ந்தாளா என்பதையெல்லாம் வெ.தி.கா.

பரத் இடைவேளை வரை அமைதியாய் இருக்கிறார். இடைவேளைக்குப் பின் சில காட்சிகளில் நடிக்கிறார். ஓகே.

இடைவேளை வரை பேசிக் கொண்டேஏஏஏஏஏ இருக்கிறார் தமன்னா. ஒருகட்டத்தில் இது போதும்டா சாமி எனுமளவு ஓவர்டோஸாகப் போய் விடுகிறது.

படத்தில் ஹீரோ, ஹீரோயினைவிட அதிக கைதட்டல்கள் வாங்குவது லொள்ளுசபா சந்தானம். ஏற்கனவே இவரை கவுண்டமணியின் அடுத்த வாரிசாக – சவுண்டுமணி- என்று ஒரு விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் படத்தில் அதை அப்படியே நிரூபித்திருக்கிறார்.

பாடல்கள் அருமை. படத்தில் குறிப்பிட வேண்டிய இன்னொரு அம்சம் ஆர்ட் டைரக்‌ஷன். பாடல் காட்சிகளிலும், மற்ற சீன்களிலும் கண்ணுக்கு உறுத்தாத அழகான கலைநயத்தைக் காட்டியிருக்கிறார். சபாஷ்!

வசனம் – ஒரிஜினலின் அப்படியேயான தழுவலாவெனத் தெரியவில்லை. பல இடங்களில் நன்றாகவே வந்திருக்கிறது. சன் டி.வி-யின் உபயத்தால் வசனங்கள் வருமுன்னரே ரசிகர்கள் கைதட்டுவதைக் காண (கேட்க?) முடிகிறது.

படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஜவ்வாய் இழுப்பது. பல இடங்களில் ‘போதும் முடிங்கப்பா’ என்ற குரலைக் கேட்க முடிகிறது. கொஞ்சம் செதுக்கி இருந்தால் இன்னும் காணச் சுகமாயிருந்திருக்கும்!

கண்டேன் காதலை – தமன்னா + சந்தானத்துக்காக ஓடும். சன்.டி.வி- அதைச் செய்யும்.

பி.கு – 1: JAB WE MET ஒரிஜினல் டிவிடி வாங்கி வைத்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. இந்தப் படம் வரப்போகிறது என்பதால் அதைப் பார்க்காமல் வைத்திருக்கிறேன். தியேட்டர் கமெண்டுகளில், ‘இந்தில நல்லா பண்ணியிருந்தாங்கப்பா’வைக் கேட்க முடிந்தது.

முக்கியமான பி.கு: 2:- உ.போ.ஒ – மாற்றுப்பார்வை விமர்சனங்களால் தாக்குண்டு, இதில் மாற்றுப்பார்வை பார்த்து ஏதேனும் நுண்ணரசியல் படத்தில் இருக்கிறதாவென ஆராய்ந்தேன். ஒன்று கிடைத்தது.

பரத்தும் தமன்னாவும் இரயிலைத் தவற விட்டு ஓர் ஊரில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த ஊரில் நடுரோட்டில் மாருதி வேன் வைத்து, விபச்சாரிகள் கஸ்டமர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரௌடிகள் தமன்னாவைத் துரத்துகிறார்கள். லாட்ஜூகள் விபச்சார கஸ்டமர்களுக்காக வாடகைக்கு விடப்படுகிறது. இத்தனைத் தவறுகள் நடக்கும் ஊராக எதைக்காட்டியிருக்கிறார்கள் என்றால்... விருத்தாச்சலம்! ஏன் என்பதை நீங்களே யோசியுங்கள். நான் கெளம்பறேன்...!

.