Monday, June 7, 2010

நிராகரித்தலின் வலி

(தலைப்பைப் பார்த்து ஏதோ பெரிய இலக்கியம் எழுதப் போவதாக நினைத்து ஏமாந்துவிட வேண்டாம். இதுவும் வழக்கமான கொசுவத்திப் பதிவுதான்.... )

நட்பும் நண்பர்களுமே என் வாழ்க்கை என்று கங்கணம் கட்டிக் கொண்டெல்லாம் நான் பிறக்கவில்லை. ஆனால் தொடர்ச்சியான பல கட்டங்களில் அவர்கள்தான் ஆறுதலாயிருந்திருக்கிறார்கள். அவர்களால்தான் நான் புன்னகைக்கிறேன். அவர்கள்தான் எனக்கு அன்பை வழங்கியிருக்கிறார்கள்.. வழி நடத்தியிருக்கிறார்கள்.

இந்த நட்பின் தேடல் எப்போது ஆரம்பித்தது என்று சரிவர நினைவில்லை. ஏழாவது படிக்கும்போது ஜெயக்குமார் என்ற மாணவன் எங்கள் வகுப்பில் வந்து சேர்கிறான். கண்ணாடி அணிந்திருக்கிறான். எனக்குப் பின் பெஞ்சில் அமர்கிறான். தேர்வில் அதுவரை முதல் ரேங்க் எடுக்கும் நான், இரண்டாவது ரேங்க் எடுக்கிறேன். அவன் முதல் ரேங்க். எனக்கு அவனை மிகப் பிடித்துப் போகிறது. நட்பாகிறேன். அவனும்.

எட்டாவதில் இருவரும் ஒரே பெஞ்ச். தினமும் அவன் வீட்டிற்குப் போனபிறகுதான் என் வீட்டிற்குப் போகிறேன். ஒவ்வொரு நாள் அவன் என் வீட்டுக்கு வந்து விட்டுச் செல்வான். அவன் என் வீட்டுக்கு வரும்போதோ, நான் அவன் வீட்டுக்குச் செல்லும்போதோ ஒன்று நடக்கும். வீடுவரை வந்து பையை வீட்டில் விட்டெறிந்துவிட்டு, வீட்டின் முன் நின்று இருவரும் பேச ஆரம்பிப்போம். ஏழு மணி - இருட்டு கட்டியபிறகு அம்மா வந்து திட்டிய பிறகுதான் அவரவர்கள் வீட்டிற்கு ஓடுவோம். ஒன்றுமில்லாமல் அப்படி என்ன பேசினேன் என்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாய் இருக்கிறது.

பள்ளிக்கு வரும்போதும், போகும்போதும், இடைவேளைகளில் என்று எப்போதுமே ஒன்றாகத் திரிந்தோம். எல்லா ஆசிரியர்களுக்கும் எங்கள் நட்பு பிரசித்தமாக இருந்தது. எட்டாவது முடிகிறவரைதான் இது.

ஒன்பதாவது வகுப்பில் சென்று அமரும்போது நான் வழக்கம்போல முதல் பெஞ்சில் அமர, அவன் எனக்குப் பின் ஒரு பெஞ்ச் தள்ளி மூன்றாவதில் வேறு ஒரு நண்பனோடு அமர்ந்தான். கேட்டதற்கு ‘இல்லடா இங்கயே இருக்கேன்’ என்றான். அவனோடு உட்கார்ந்திருந்தவனும் எங்கள் நண்பன்தான். பெயர்கூட நினைவில் இல்லை. அவன் ஒரு மாதிரி என்னைப் பார்த்து புன்னகைத்தான். உன் நட்பை நான் வாங்கிவிட்டேன் என்பதாய் இருந்தது அந்தப் புன்னகை. என்ன எதற்கு என்றே புரியாமல் நிராகரிக்கப்பட்டதன் வலியை அன்றைக்கு உணர்ந்தேன். இரண்டொரு சப்ஜெக்ட் முடிந்தபிறகு கணக்கு பாடம் எடுக்க EPK Sir எனப்படும் கிருஷ்ணன் சார் வந்தார். என்னைப் பார்த்த கண்களால் அவனைத் தேடினார்.

‘ஜெய் எங்கடா..’ என்றவர் அவனைப் பார்த்து ‘ஏன் அங்கபோய் உட்கார்ந்திருக்க?’ என்றார். அவனோடு இருந்த அவனின் புதிய நண்பன் ‘இல்ல சார்.. அவன் இங்கயே உட்கார்ந்துக்கறனாம்’ என்றான். ஈபிகே சார் அவனை முறைத்து அமரவைத்து ‘ஜெய் என்னாச்சுடா’ என்றான். அவன் ‘ஒண்ணுமில்ல சார்.. இங்கயே உட்கார்றேன்’ என்றான். அவர் என்னை எழுப்பி ‘என்னாச்சு கிருஷ்ணா’ என்றார். ‘தெரியல சார்..’ என்ற நான் சடக்கென்று அழுதுவிட்டேன். ‘ரெண்டு பேருக்குள்ளயும் ஏதாவது சண்டையா’ என்றார். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்’ என்றான் ஜெய். நானும். ‘சரி...’ என்று அந்தப் பிரச்சினையை விட்ட அவர் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

அவர் பிரியட் முடிந்ததும் என்னை அழைத்தார். ‘விடுப்பா.. அவன் பேசலைன்னா என்கிட்ட சொல்லு’ என்றார். அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு பயமாகப் போய்விட்டது. ஒருவேளை பேசாமல் போய்விடுவானோ. பெஞ்ச்தானே மாறி உட்கார்ந்திருக்கிறான்.. என்று நினைத்தேன். ஆனால் பயந்தமாதிரியே உணவு இடைவேளையில் என்னோடு வரவே இல்லை. நான் எதுவோ கேட்க வேண்டா வெறுப்பாய் பதில் சொல்லிவிட்டுப் போனான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

அன்றைக்கு மாலை பள்ளிவிட்டதும் அவன் அவசர அவசரமாக வெளியேற, ‘என்னாச்சுடா..’ என்று கேட்டபடியே போனேன். ‘போடா எங்கிட்ட பேசாத’ என்று மட்டும் சொல்லிவிட்டு போய்விட்டான்.

அடுத்த நாள், அடுத்த நாள் என்று இரண்டொரு நாட்கள் அவன் என்னிடம் பேசவே இல்லை. எதற்கென்றே தெரியவில்லை. ஒருவாரம் கழித்து சயின்ஸ் வாத்தியார் என்னையும் அவனையும் வகுப்பில் அழைத்தார். ‘ஒரு வாரமா பார்க்கறேன்... உங்க ரெண்டு பேருக்குள்ளயும் என்னடா பிரச்சினை?.. நல்லா ஃப்ரெண்ட்ஸாத் தானே இருந்தீங்க?’ என்றார். எங்கள் இருவருக்குமே கால் நடுங்க ஆரம்பித்தது. காரணம் அவர் ஒரு அதிரடி வாத்தியார்.

நான் ‘எனக்கொண்ணுமில்லை சார்.. அவன் என்னான்னே தெரியல என்கிட்ட சரியா பேசறதில்ல’ என்றேன். அவன் கொஞ்ச நேரத்துக்கு எதுவம் பதில் சொல்லவே இல்லை. பிறகு அவர் ஒரு அதட்டல்போடவே ‘ஃபர்ஸ்ட் நாள் சும்மாதான் பெஞ்ச் மாறி உட்கார்ந்தேன். ஈபிகே சார்கிட்ட என்னமோ சொல்லிட்டான் இவன்.. அவர் வந்து சத்தம் போட்டாரு.. அதுனால இவனை எனக்குப் பிடிக்கல’ என்றான்.

சயின்ஸ் மாஸ்டர் உடனே ஒரு மாணவனை அழைத்து பக்கத்து வகுப்பில் இருந்த ஈபிகே சாரை வரச் சொன்னார். அவர் வந்ததும் விஷயத்தைக் கேட்டு ஜெய்க்குமாரை முறைத்து ‘அவன் ஒண்ணும் என்கிட்ட சொல்லலடா.. நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாருக்கும் தெரியும். மாறி மாறி ஃபர்ஸ்ட், செகண்ட்னு வாங்குவீங்க.. ஒண்ணாவே சுத்துவீங்கன்னு நாந்தான் கேட்டேன்’ என்றவர் ‘அன்னைக்கு எங்கடா சத்தம் போட்டேன்? இவன் அழுதானேன்னு வெளில கூட்டீட்டுப் போய் சரியாப் போய்டும்டா... பேசுவான்’ன்னேன். அவ்ளோதான்” என்றார்.

சயின்ஸ் வாத்தியார் ஜெய்யிடம் ‘அவன்கிட்ட பேசமாட்டியா?’ என்று கேட்க அவன் மிக உறுதியாக ‘மாட்டேன்’ என்று தலையசைத்தான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘கிருஷ்ணாவுக்கு சப்போர்ட் பண்றீங்கள்ல.. என்ன ஆனாலும் அவன்ட்ட நான் பேசப்போறதில்ல’ என்ற முடிவில் அவன் இருந்திருக்க வேண்டும்.

பிறகு இருவருமாக ஏதோ முடிவு செய்தவர்களாய் ‘ரெண்டு பேரும் கையைக் கோர்த்துட்டு க்ளாஸுக்கு வெளில மண்டி போட்டு நில்லுங்க. ரெண்டு பேரும் பேசிக்குவோம்னு சொன்னப்பறம்தான் உள்ள வரணும்’ என்றார்கள். அப்படியே நின்றோம். கிட்டத்தட்ட மூன்று நான்கு மணிநேரம். மதிய உணவு இடைவேளை முடிந்து வந்தும் நின்றோம். அவன் அசையவே இல்லை.

திடீரென அந்த வழியே வந்த ஹெட்மாஸ்டர் என்ன ஏது என்று கேட்டு ‘என்னமோ பண்ணீட்டு போறாங்க.. நமக்கென்ன சார்’ என்று சயின்ஸ் மாஸ்டரிம் பேசி எங்களை உள்ளே அனுப்பினார்.

அதன்பிறகு அவன் என்னிடம் பேசவே இல்லை. அவன் அம்மாவை சந்தித்தபோது அவன் அப்படித்தாம்ப்பா.. நீ எப்பவும் போல வீட்டுக்கு வா’ என்றார். முழு ஆண்டுத் தேர்வுக்கு ஒரு மாதம் முன்பாக பேசத் தொடங்கினான். ஆனாலும் முந்தைய பிடிப்பு எனக்கோ, அவனுக்கோ இருக்கவில்லை. பத்தாவதில் இருவரும் வேறு வேறு செக்‌ஷன். பதினொன்றாவதில் அவன் ஆங்கில மீடியம் மாற, அந்த நட்பு புதுப்பிக்கப்பட வாய்ப்பே இருக்கவில்லை.

பதினொன்றாவது அரையாண்டு முடிந்து அவன் பள்ளிக்கு வரவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் சொந்த ஊரில் அவன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. அவன் வகுப்பு மாணவர்கள் எல்லாரும் போய்ப் பார்ப்பதற்காக புறப்பட்டனர்.

ஈபிகே சார் என்னை அழைத்தார். ‘போடா.. நீயும் போய்ட்டு வா’ என்றார். மிக உறுதியாக மறுத்தேன் நான்.

கடைசிவரை அவன் ஏன் என்னிடமிருந்து விலகி இருந்தான் என்பதற்கான விடை கிடைக்காமலே இருந்தது. இன்று வரை நட்புலகில் வெவ்வேறு விதமான நிராகரிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரே வித்தியாசம் - இப்போதெல்லாம் விடை தெரிகிறது.

.

Saturday, June 5, 2010

ஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்

ப்போதோ எழுதி, உடனே பதிவிட்ட கவிதைகள். ஒரு காரணத்திற்காக பதிவிட்ட நான்கைந்து நாட்களில் எடுத்து விட்டேன். மறுபடி ட்ராஃப்டிலேயே வைத்திருந்தேன்.

மறுபடியும் பதிவில் இருக்கட்டும் என்பதால் வெளியிடுகிறேன். ஆகவே இது ஒரு மீள்பதிவு என்று கொள்ளலாம்.

ஏற்கனவே படித்துவிட்டவர்கள் ஒரு திட்டு திட்டிவிட்டு கடந்துவிடவும்.

:-)

*****************************************






1)


தேடிக் கொண்டேயிருக்கிறேன்
தொலைத்தது எதுவென்று தெரியாமல்.

******************

2)

நியாய அநியாயம்

விழுந்த வெட்டில்
கால் துண்டாகிக் கிடந்தது.
தண்ணீருக்காக
தொண்டை தவித்தது தெரிகிறது.
கண்கள் யாரையோ தேடி
அலைபாய்கிறது.
காற்றில் துழாவும் கைகளைப்
பற்றிக் கொள்ள
எவரும் வரவில்லை.
தண்ணீர் கொடுக்க நெருங்கியவர்
என்ன காரணமோ தடுமாறுகிறார்.

கூடி நிற்கும் கூட்டம்
வேடிக்கை பார்க்கிறது.
கூட இருக்கும் அதிகாரிகளும்
அலட்சியமாய் நிற்கின்றனர்.

போயேவிட்டது உயிர்.

‘மனுசனுகளாடா நீங்க?’

அங்கே இருந்திருந்திருந்தால்
அவர்களில் ஒருவனாயிருந்திருக்கக்கூடிய
நான்
இங்கே இருப்பதால்
ஏ ஸி அறையில்
நிறுவன செலவில்
யூ ட்யூபில் பார்த்துத்
திட்டிக் கொண்டிருக்கிறேன்.

*****************************


3)


போட்ட கால்சட்டைக்கு
பொருத்தமான சட்டை தேடுவதைவிடவும்
சிரமமாக இருக்கிறது
எழுதி முடித்த கவிதைக்கு
தலைப்பு வைக்கும் வேலை.

**********************************

4)

ஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்

பச்சை ஆகாயம்
சிகப்பு நிலா
வைலட் பறவைகள்
மஞ்சள் மேகம்

‘புல்லு என்ன கலர்ப்பா’
கேட்கும் மகளுக்கு
நீலம் என்கிறேன்.

ஆகாயம் பச்சையாய் இருக்கும்போது
புற்கள் நீலத்தில் இருந்தாலென்ன?

அவர்கள் உலகில்
எல்லாமே அழகுதான்.

**************************

5)


முன்னும் பின்னும்


சாலையின் நெரிசலில்
நடக்கையில்
சற்று தூரத்தில்
அவனைப் பார்த்தேன்.
எங்கோ பார்த்த முகம்.
அவன் முகத்திலும்
அதே கேள்வி.
நெருங்கிக் கொண்டே இருந்தான்.
என்னுள் கேள்விச் சிக்கல்
அவிழாமல் முடிச்சாய்த்
தொடர்ந்தது.
கைக்கெட்டும் தூரத்தில் வந்து
கடந்து போனான்.
போனவனைத்
திரும்பிப் பார்த்து
கேட்டிருக்கலாமோவென
எண்ணினேன்.
ஆனாலும்
யாரென்று தெரியாமல்
அவனைப் பார்க்கும்போது
எனக்கிருந்த அன்பு
அறிந்து கொண்ட பின்
இருந்திருக்கும் அன்பைவிட
அதிகமாகத்தான் இருந்ததென்பதால்
விட்டுவிட்டேன்.

***************************


.

Wednesday, June 2, 2010

அவியல் 02.06.2010

திருமணம் = 11
கல்வி, வேலைவாய்ப்பு = 16
வேறு கவலைகள் = 18
குழந்தையின்மை = 21
கணவன் மனைவி ஒற்றுமைக்கு = 28


இதெல்லாம் என்ன? கடைசியில் பார்ப்போம்.


************************************************************

சின்னவளுக்கு ஒரு ட்ரெஸ் எடுத்தோம். போட்டுப் பார்த்து ‘பிடிச்சிருக்கா.. பிடிச்சிருக்கா’ என்று மனைவி பலமுறை கேட்டார். அவளும் ஆமாமென்றாள். அடுத்தநாள் போட்டுக் கொள்ளச் சொன்னபோது முகம் சுழித்தாள். உனக்குப் பிடிச்சதாலதானே வாங்கினோம் என்றதற்குச் சொன்னாள்: “கைகிட்ட ரொம்ப பிடிச்சிருக்கும்மா”

******************************************************

வசரத்திற்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க வேண்டி வந்தது. உமாவிடம் ஏ.டி.எம். கார்டு கேட்டேன். பின் நம்பர் சொல்லி் - கொடுத்தார். பணம் எடுத்து வந்தேன்.

ஏ டி எம் கார்டை திருப்பிக் கொடுக்கும்போது கேட்டார். “பின் நம்பர் உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சே..”

“அதுனாலதான் பின் நம்பரை மாத்தீட்டேன். ஓகேவா?” என்றேன்.

“அப்படின்னா சரி” என்றவர் பத்து நிமிடங்கள் கழித்து “அதெப்படி சரியாகும்?” என்று யோசித்து முதுகில் குத்தினார்.

**************************************************

கொஞ்சம் சோகமான படங்களென்றால் தவிர்த்துவிடும் மிடில்க்ளாஸ் சராசரி நான். அந்தக் காரணத்திற்காகவே அங்காடித் தெருவை தவிர்த்து வந்தேன். ஆனால் ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பாடலும், ‘உன் பேரைச் சொல்லும்போதே’ பாடலும் மனதை விட்டு அகலாமல் படத்தைப் பார்க்கப் போறியா இல்லையா என்று மிரட்டிக் கொண்டே இருக்கிறது.

படத்தைப் பார்க்காமல் தவிர்க்க இன்னொரு காரணம், சில வாரங்களுக்கு முன் விகடனில் அந்தப் பட ஹீரோ மகேஷின் பெற்றோருடனான ஒரு பேட்டிக் கட்டுரை வந்திருந்தது. என்னவோ... படிக்கப் படிக்க தொண்டையெல்லாம் அடைத்து, கண்ணில் நீர் தளும்பி விட்டது.

அவர்களுக்காகவாவது நிச்சயமாக பார்க்க வேண்டும்.

***************************************

பள்ளிக் கூடம் திறந்தாகி விட்டது. ஃபீஸ் கட்டப் போனால் உட்கார்ந்திருப்பவர்கள் கைகளில் துப்பாக்கியோடும், முகமூடியோடும் இருப்பதாகவே கற்பிதம் செய்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது. நேற்றைய தினகரன் நாளிதழை கையில் வைத்துக் கொண்டே ‘ஃபீஸ் எவ்வளவு’ என்று கேட்டேன். (நாளிதழின் தலைப்புச் செய்தி: ‘அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் அங்கீகாரம் ரத்தாகும்’) அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் காது குடைந்தவாறே வழக்கமான ஃபீஸையே சொன்னார். தயங்கித் தயங்கி பேப்பரை அவர்கள் கண்ணில் படுமாறு டேபிளில் வைத்து ‘இன்னும் முடிவாகலைன்னு சொல்றாங்களே?’ என்றேன்.

’கம்மியாச்சுன்னா அடுத்தடுத்த டேர்ம் ஃபீஸ்ல கழிச்சுக்கறோம்’ என்றார் அலட்சியமாய். அப்படி ஒரு நெனைப்பு வேற இருக்கா ஒனக்கு என்ற தொனி அதில் இருந்தது.

சரி என்று கட்ட முன்வந்தபோது காது குடையும் பேப்பரை விரித்து கீழே போட்டார். அப்போதுதான் கவனித்தேன். அதே தினகரனின் தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி!

***********************************

முதல் பத்தியில் பார்த்தது கும்பகோணத்தில் ஒரு கோயிலில் கண்ட அறிவிப்பு. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஏற்றவாறு குறிப்பிட்ட அளவு விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று இருந்தது. இரண்டு விஷயங்கள் புலனாயிற்று. ஒன்று - லஞ்சம் எங்கே ஆரம்பித்திருக்கிறது என்பது. இன்னொன்று - இருப்பதிலேயே அதிக விளக்கு எதற்கு என்று பாருங்கள். கடவுளுக்கே ஹை ரிஸ்கான விஷயம் அது என்பது தெரிந்திருக்கிறது!

*********************************

குறிப்பு: அந்தப் பள்ளிக்கூட காது குடைந்து பேப்பரை கீழே போடும் சீன் மட்டும் கற்பனை!


***