Tuesday, May 12, 2009

என்ன எழுதுவது...?

நேற்றென்னை அழைத்த நண்பர் கேட்டார்: “என்ன கிருஷ்ணா.. கொஞ்ச நாளா பதிவுல தீவிரமா ஒண்ணும் எழுதல? ரைட்டர்ஸ் ப்ளாக் வந்துடுச்சா உங்களுக்கு?”

‘அது ரைட்டர்ஸுக்குத்தானே வரணும்... எனக்கேன்’ என்று நினைத்துக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.

வேலைப்பளுவும், என்ன எழுத என்ற யோசனையும்தான் காரணமின்றி வேறொன்றுமில்லை.

ரண்டு வாரம் முன்பு ஓட்டுக் கேட்க வந்தார் ஒருவர். நானும் என் நண்பனும் வீட்டிலமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வந்தவரிடம் நட்பு முறையில் பேசிக் கொண்டிருக்கும்போதே எங்கள் வீட்டுக்கு எதிரில் காலிமனைகளில் குவிந்திருந்த குப்பைகளைக் காட்டி “எலக்‌ஷனுக்குள்ள இந்த குப்பைகளை எந்த கட்சிக்காரங்க க்ளீன் பண்றாங்களோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு!” என்றபோது அந்த வேட்பாளர் முகமலர்ந்து “அடடே.. தம்பி சொல்றது நல்ல யோசனையா இருக்கே” என்றபடி கூட இருந்த தொண்டரடிப்பொடிகள் சிலரிடம் ‘நம்ம பசங்ககிட்ட சொல்லி ரெண்டொரு நாள்ல இதக் க்ளீன் பண்ணீடுங்கப்பா’ என்றார்.

நான் புல்லரித்துப் புளகாங்கிதமெல்லாம் அடைந்து “இல்லைங்க.. ஜெயிச்சப்பறம் அதப் பண்றேன்.. இதப் பண்றேன்னு சொல்றது வேற. இப்பவே இதப் பண்ணினீங்கன்னா அட்லீஸ்ட் ஓட்டுப் போடற அந்த நிமிஷம் எனக்கு ஒரு திருப்தியா இருக்கும் இல்லையா?” என்றெல்லாம் விளக்கம் கொடுத்து..

இதோ இத்தனை நாட்களுக்குப் பிறகும் ஒரு மாற்றமுமில்லை. வெட்கக்கேடான விஷயம், அந்த வேட்பாளருக்கு சப்போர்டாக உடன்வந்த, எங்கள் அபார்ட்மெண்டிலேயே குடியிருக்கும் ஒருவர் இதற்குப் பிறகு தன் வீட்டுக் குப்பைகளையும் அங்கேயே கொட்டுவதைப் பார்க்கிறேன்.

என்னால் இந்தப் பதிவு எழுதுவதைத் தவிர வேறொன்றையும் **** முடியவில்லை.

கோவை சென்றிருந்தபோது என் உறவினர் வீட்டில் கிடந்த நோட்டீஸில் ஒரு கட்சிக்காரர் ‘பாரதத் தாயின்மீது ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்’ என்று பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார். வெற்றிபெற்றால் இதையெல்லாம் செய்வேன் என்று. அதில் ஒரு வாக்குறுதி கோவை தொகுதியிலுள்ள டாஸ்மாக் வருமானத்தை வைத்தே தொகுதி வளர்ச்சிப் பணியை மேற்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். அடுத்த உறுதிமொழி மதுவிலக்கை அமல்படுத்தக் குரல் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். முரண்!

‘என்னாங்கடா இது?’ என்று வீறுகொண்டு எழுந்து பைக்கை அந்த வேட்பாளர் வீட்டுச் சுவற்றில் மோதி உடைத்துக் கொண்டு அவர் முன் நிறுத்தி அந்த நோட்டீஸை அவர் முகத்தில் விட்டெறிந்து ‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...’ என்று ஆரம்பித்து நீள்வசனம் பேச என்னால் முடியாதென்பதால்...

அதில் குறிப்பிட்டிருந்த அவரது அலைபேசிக்கு அழைத்து ‘என்னங்க.. இதெப்படி சாத்தியம்?’ என்று கேட்க அவர் சொல்கிறார்.

“நான் ரெண்டு சாய்ஸ் குடுத்திருக்கேன் சார். இது இல்லைன்னா அது..” என்கிறார்.

“சாய்ஸ் குடுக்க இதென்ன கொஸ்டின் பேப்பரா? உறுதிமொழிங்க.. அதுவும் யார் மேல குடுத்திருக்கீங்க? ‘பாரதத்தாய் மீது ஆணையிட்டு’ன்னிருக்கீங்க. எல்லாமே விளையாட்டாப் போச்சா உங்களுக்கு?” என்று கேட்டுவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டேன்.

அடுத்தநாள் நாளிதழெல்லாம் வாங்கிப் பார்க்கிறேன். பகிரங்க மன்னிப்புக் கோரி அவர் ஏதாவது பேட்டி கீட்டி குடுத்திருந்தால் என் சித்தப்பா வீட்டின் இரண்டு ஓட்டுகளை அவருக்குப் போடச் சொல்லி சிபாரிசு செய்யலாம் என்று.. ம்ஹூம்.


‘டேய் ஒரு சி டி இருக்கு. பார்க்கறியா?’ நண்பர் கேட்டான்.

பார்த்தேன். நான்கு நாட்களாக ஒரு வேலையிலும் மனசு ஒட்டவில்லை. ‘இதை ஏண்டா இப்படி பயந்து பயந்து பார்க்கணும்? இதுல என்ன இருக்கு? எங்கயோ நடக்குற கொடுமையை பார்த்து வருத்தப்படக்கூட பயமா?’ என்று கேட்டால்.. அது தடை செய்யப்பட்ட சி டி யாம். தடை செய்ய அதில் என்ன இருக்கிறது என்றே புரியவில்லை. நிர்வாணங்களும், அசிங்கங்களும் பார்க்க எந்த வெட்கமோ, வேதனையோ தேவையில்லை. அதைப் பார்க்கவும், பார்த்ததை ரசித்து எழுதவும் தயார். ஆனால் இந்தக் கண்ணீரையும், ரத்ததையும் பார்த்து அழ நமக்கு உரிமையில்லை. பயம். பயம்.

அதிகபட்சமாக ‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே’ என்று காலர்ட்யூனை மாற்ற மட்டுமே முடிகிறது நம்மால். ச்சே!

நான் சொன்ன மூன்று நிகழ்வுகளிலும் என்ன செய்ய முடிந்திருக்கிறது என்னால் என்று யோசித்தால் வெட்கம் மட்டுமே மிஞ்சுகிறது.

இந்த லட்சணத்தில்... என்ன எழுத?

Friday, May 8, 2009

அவியல் 08.05.2009

கஸின் ப்ரதர் திருமணத்திற்காக கேரளா சென்றிருந்தேன். திருமணத்தின்போது மண்டபத்தில் இருக்கும் குழந்தைகளைக் குஷிப்படுத்தலாமென்று நானும் தம்பியும் பலூன்கள் வாங்க ஓரிரு கடைகள் ஏறி இறங்கியபோது ‘எங்களிடம் இல்லை’ என்ற பதில் வந்ததே தவிர, எங்கே கிடைக்கும் என்றதற்கு எவருமே சரியாக பதில் சொல்லவில்லை. வந்து பலரிடமும் இதுபற்றிப் பேசியபோது கேரளா கடைகளின் கஸ்டமர் கேர் மிக மோசமானது என்று பலரும் பல உதாரணங்கள் சொன்னார்கள்.

ஒருத்தர் சர்பத் கடை ஒன்றிக்கு சென்றிருக்கிறார். சர்பத் கேட்டதற்கு கடைக்காரர் சொன்னாராம்: “டம்ளர்களைக் கழுவிவிட்டேன். இனி சர்பத் போடமாட்டேன். நாளைக்குத்தான்”

இன்னொருத்தர் சொன்னார்: அவர் ஒரு கடைக்குச் சென்றாராம். மணி 9. கடை பூட்டியிருந்தது. கடைக்கு முன் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்தற்கு “கடை 9.30க்குத்தான் திறக்கும்” என்றிருக்கிறார். இவர் போய் 9.30க்கு மேல் வந்தபோது இவருக்கு பதில் சொன்ன நபர்தான் கடைக்காரர் என்றறிந்தாராம்!
**********************************

ரொம்ப நாளாச்சு கிரேசி கிரி பற்றி எழுதி. திருமணத்துக்கு முதல் நாள் வழக்கம் போல சீட்டு விளையாட அவனிடம் கேட்டேன். “கார்ட்ஸ் இருக்கா?” “இருக்கு. ஆனா ஒரு சில கார்ட்ஸ் இல்ல அந்தக் கட்டுல” என்றான்.

“அது சரியிருக்காது. ஒனக்குத் தெரியுமா? ஒரு நல்ல சீட்டு விளையாட்டுக்காரன் ரெண்டு மூணு ஆட்டத்துல கட்டுல கார்ட்ஸ் மிஸ் ஆகியிருந்தா சொல்லீடுவான்” என்றேன். அதோடு நிறுத்தியிருக்கலாம். “சில பேர் கட்டை கைல எடுத்து டிகிரி போடும்போதே (கார்ட்ஸை கலக்குவது) சொல்லீடுவாங்க” என்றேன்.

உடனே கேட்டான்” “அத விட ப்ரொஃபஷனல்ஸ் இப்போ என் சூட்கேஸ்ல இருக்கறதுல இத்தனை கார்ட்ஸ் இருக்காதுன்னு சொல்லுவாங்க.. இல்லையா?” என்றான்.

இதுக்கு மேலயும் நான் பேசுவேன்?

இதே கிரேசி கிரி கணுக்கால் வரை பேண்ட் அணிந்திருந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் கேட்டான்: “ஏண்டா.. பேண்ட் அளவுகுடுத்து தைக்கறதுக்குள்ள வளர்ந்துட்டியா?”

****************************

கிரேசி கிரியின் அண்ணன் மகேஷ் அவனுக்கு ஒரு படி மேல்! (அண்ணனில்லையா.. அதுதான்!)

“ஆரத்தி காட்டும்போது தட்டில் ஏன் நோட்டைப் போடாமல் சில்லறை போடுகிறார்கள்?” என்று கேட்டார். “நனையுமில்லையா.. அதுதான்” என்றேன்.

“இல்லையில்லை... CHANGE (மாற்றம்) ஒன்றுதான் CHANGE ஆகாதது.. அதனால்தான்” என்று கடித்தார். இது விஷயமில்லை.

திருமணம் முடிந்து மாலையில் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஆரத்தி காட்டும்போது ஒருவர் பத்து ரூபாய் நோட்டை ஆரத்தி தட்டில் போட மாப்பிள்ளையிடம் கொடுத்தார். உடனே இவரைத் தேடிப் பிடித்து “என்னமோ சொன்னீங்க? பாருங்க நோட்டு நனைஞ்சாலும் பரவால்லன்னு நோட்டைப் போடறாங்க..” என்றேன்.

உடனே சொன்னார்: “இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல. இனிமே இவங்களுக்குள்ள எந்த CHANGEம் இருக்கக் கூடாதுன்னுதான் CHANGE போடல” என்றார்!


மேற்கண்ட ஆரத்திச் சில்லறை சந்தேமல்லாமல் மகேஷண்ணாவின் சந்தேகங்கள் என்று ஒரு புத்தகமே போடலாம் என்னுமளவிற்கு அவர் பல கேள்விகள் கேட்டார். ஞாபகம் வரவில்லை.

ஒன்றே ஒன்று மட்டும்:

க்யூ என்பது நீளமாக நிற்பது. அதற்கு I தான் சரியான குறியீடு. அல்லது L ஐக்கூட வைத்துக் கொள்ளலாம். ஏன் Q?

நான் சொன்னேன். “எங்கே நின்றிருப்பவர் ஆனாலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில்தான் எல்லாருமே வரவேண்டியிருக்கிறது. அதனால் O மாதிரி போடுகிறார்கள். அப்படியும் எல்லா க்யூவிலும் யாராவது நடுவில் புகுகிறார்கள் அதனால் அந்தக் கோடு... Q!”

*********************


கேரளாவில் இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் சொன்னார்கள். ஒருத்தருக்கு ஏதோ ஒரு எண்ணிலிருந்து தொடர்ந்து அழைத்து கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே இருந்திருக்கிறான் ஒருவன். இவர் கூப்பிட்டால் எடுப்பதில்லை. வேறு பல எண்களிலிருந்து முயன்றும் அவன் எடுக்கவே இல்லை. ஆனால் இவருக்கு பல எண்களிலிருந்தும் அவன் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இவர், தனது எண்ணை மாவட்ட எஸ்.பி.க்கு கால் டைவர்ட் செய்துவிட்டார். அவனும் அழைத்து பல முறை பலவாறு பேசியிருக்கிறான். (நீ போலீஸ்காரன்னு சொன்னா பயந்துடுவோமா?)

ஒன்றிரண்டு முறை அவன் அழைப்பை அட்டெண்ட் செய்து வாங்கிக் கட்டிக் கொண்ட எஸ்.பி. அதன்பிறகு எவனோ கிறுக்கன் என்று அந்த எண்ணிடமிருந்து வந்த காலை துண்டிக்க ஆரம்பித்துவிட்டார். ஒருநாள் எஸ்.பி. முக்கியமான ஏதோ மீட்டிங் முடிந்து பார்க்கையில் DOT லைனிலிருந்து பல மிஸ்டு கால்கள் பதிவாகியிருக்கிறது. என்னமோ ஏதோ என்று அழைக்க.. இவன்!

இப்போது அந்த நபர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறானாம். கால்டைவர்ட் செய்தவர் ‘தாங்கமுடியாமத்தான் அப்படிப் பண்ணினேன்’ என்று மன்னிப்புக் கோர ‘உன் வேதனை புரியுது’ என்ற எஸ்.பி. வழக்கில் அவரை சாட்சியாக போட்டுவிட்டாராம்!

********************************

‘நான் எழுத்தாளனாக்கும்’ என்று திரியும் என்னை ஒருபக்கம் கோபிகிருஷ்ணன் சம்மட்டியால் அடித்துக் கொண்டிருக்க... இரண்டொருநாள் முன்பு பிரம்மராஜன் தொகுத்த ஆத்மாநாம் படைப்புகளை வாங்கி, ஆத்மாநாமிடமும் அடிவாங்கிக் கொண்டிருக்கிறேன்.


குற்றுகர முற்றுகர சந்திகளை
சீர்சீர் ஆய்ப் பிரித்து
தளை தளையாய் அடித்து
ஒரு ஒற்றை வைத்து
சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் மை நிரப்பி
எழுத்துக்களை உருவாக்கி
பொருளைச் சேர்த்து
வார்த்தைகள் ஆய்ச் செய்து
ஒவ்வொரு வாக்கியத்திற்கும்
கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து
ஏதாவது சொல்லியாக வேண்டும்
நமக்கேன் வம்பு.

பதில் என்ற கவிதை இப்படி இருக்க....



எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை

உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை

என்று துவங்கும் எழுதுங்கள் என்ற கவிதை எனக்கு டானிக் போல இப்படி முடிகிறது..

எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்.


வெறும் 33 வருடமே வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஆத்மாநாம் என்பது துரதிருஷ்டமான ஒன்று!


*ஆத்மாநாம் படைப்புகள்
*தொகுப்பாசிரியர்: பிரம்மராஜன்
*காலச்சுவடு பதிப்பகம்
*ரூ.200

Saturday, May 2, 2009

கிருஷ்ணகதா-2 (சாதிகள் இல்லையடி பாப்பா)

ஜாதி, மதம்ன்னு அலையற ஒரு கும்பல் இப்பவும் இருக்கு. ஒவ்வொரு தேர்தல் சமயத்துலயும் ஜாதி ஓட்டு, ஜாதிக்குன்னு தனியா கட்சி, இந்த ஜாதிக்காரரைத்தான் இந்தத் தொகுதில நிறுத்தணும்னு ரொம்ப சீரியஸா ஜாதிக்கா செய்திகளைப் படிக்கறப்போ கவலையா இருக்கு.

அதே மாதிரி ‘இன்னும் இரட்டைக் குவளை முறைகள் இருக்கற கிராமங்கள் இருக்குடா’ன்னு என் ஃப்ரெண்ட் சொல்லி, ‘வர்றியா காமிக்கறேன்’ங்கறான். இருக்காதுன்னு சொல்ல பயமா இருக்கு. ஏன்னா ஒரு சில மாசத்துக்கு முன்னாடிதான் எங்க உடுமலைப்பேட்டைக்கு பக்கத்துல ஒரு கிராமத்துல இந்தப் ப்ரச்னை வெட்டுகுத்து வரைக்கும் போனதா பேப்பர்ல படிச்சேன். கேவலமா இருந்தது.

பாண்டவர்-கௌரவர் ஃபைட்டெல்லாம் முடிஞ்சு துவாரகைக்கு போய்ட்டிருந்தார் கிருஷ்ணர். அப்போ உதங்கர் அப்படீங்கற துறவியை சந்தித்தார். அவருக்கு உலக நடப்பு எதுவும் தெரியல.

“என்ன கிருஷ்ணா.. கௌரவர்-பாண்டவர்களின் சகோதர அன்பு எப்படிப் போய்ட்டிருக்கு?”ன்னு கேட்டார். கிருஷ்ணர் ஒரு நிமிஷம் திகைச்சுப் போய், “ஐயா.. நான் எவ்வளவோ சமாதானம் செஞ்சும் முடியாம ரெண்டு பேருக்கும் போரே நடந்துச்சு. உங்களுக்குத் தெரியாதா?”ன்னு கேட்டார்.

உதங்கருக்கு பயங்கர டென்ஷனாய்டுச்சு. “நீ இருந்தும் சமாதானம் பண்ணி வைக்கலியா? நீதான் ஏதாவது கபடவேஷம் போட்டு தூண்டி விட்டிருப்ப. இரு நான் உனக்கு சாபம் தர்றேன்”ன்னு கமண்டலத்தைத் தூக்கப் போனார்.

“கூல்.. கூல்..”ன்னு சொன்ன கிருஷ்ணர் தன்னோட விஸ்வரூபத்தைக் காட்டி உதங்கருக்கு கிருஷ்ணாவதாரத்தைப் பத்திச் சொல்ல உதங்கர் கூலானார்.

“சரி உதங்கரே.. உங்களுக்கு ஒரு வரம் தர நினைக்கிறேன். கேளும்”ன்னார். ‘உன் விசுவரூபத்தைப் பார்த்த்தே போதும்’னு முதல்ல மறுத்த உதங்கர் கிருஷ்ணர் வற்புறுத்தவே ஒரு வரம் கேட்டார்.

“நான் எப்போ எங்க தாகத்துல வேண்டினா தண்ணீர் கிடைக்க வரம் குடுங்க” ன்னு கேட்டார். (திருப்பூர்க்காரரா இருப்பாரு போல!)

”இவ்ளோதானா.. டேக் இட்”ன்னு வரம் குடுத்தார் கிருஷ்ணர்.

கொஞ்ச நாள் கழிச்சு, உதங்கர் காட்டுல அங்க இங்க அலைஞ்சு, தாகத்தோட சுத்திகிட்டிருக்கறப்போ கிருஷ்ணரை நினைச்சார். உடனே அங்க ஒரு மாட்டிடையன் அங்க வந்தார். அழுக்குத் துணியும், கூட அஞ்சாறு வேட்டை நாய்களும், தோள்ல ஒரு பைல குடிதண்ணீரும் வெச்சிருந்தார்.

வந்தவர் நேரா உதங்கரைப் பார்த்து ”தாகத்துல தவிக்கறீங்க போல.. இந்தாங்க தண்ணீர்”ன்னு குடுத்தாராம்.

உதங்கர் மாட்டிடையரை அருவருப்பாப் பார்த்து “வேண்டாம்.. வேண்டாம்”ன்னு மறுத்துட்டார்.

அடுத்த நொடி மாட்டிடையன் எஸ்-ஸாய்ட்டாராம்.

“உடனே மறைஞ்சுட்டானே.. இது யாரு?”ன்னு உதங்கர் கன்ஃப்யூஸ் ஆகிட்டார்.

கொஞ்ச நேரம் கழிச்சு கிருஷ்ணர் அவர் முன்னால் வந்து “வாட்டீஸ் திஸ்?”ன்னு கேட்டப்போ..

“இடையன்கிட்ட குடுத்தனுப்பறியே கிருஷ்ணா.. நான் எப்படி வாங்கிக் குடிக்க?”ன்னு கேட்டாராம்.

“அட உதங்கரே... உங்களுக்காக தேவ அமிர்தத்தைக் குடுக்க இந்திரன்கிட்ட பேசி, அவன் ‘மனுஷங்களுக்கு சாகாமருந்தெல்லாம் குடுக்கறதா’ன்னு என்கிட்ட ஆர்க்யூமெண்ட் பண்ணி, கடைசில ‘குடுக்கறேன்.. ஆனா அதை வேற வேஷம் போட்டு ஜலமா கொண்டு போய்த்தான் குடுப்பேன்’ன்னான். நானும் நீங்க ஞானியாச்சே.. ஜாதியெல்லாம் பார்த்து வெறுக்கற கீழ்த்தரம் உங்ககிட்ட இருக்காதுன்னு நெனைச்சு ஒத்துகிட்டேன். இப்ப நான் இந்திரன்கிட்ட தோத்துட்டேனே”ன்னு புலம்பினாராம் கிருஷ்ணர்.

தன் ஜாதிப்பித்தால் அமிர்தத்தை இழந்த உதங்கரும் வெட்கித் தலைகுனிந்தாராம்.

கடவுள், முனிவர்கள்ன்னு யாருமே இந்த ஜாதியைப் பிடிச்சுட்டுத் தொங்கச் சொல்லல. அப்பறமும் ஏன்.......