Saturday, September 17, 2011

எங்கேயும் எப்போதும்


து நேற்று திருப்பூரில் நடந்தது.

காதல் தம்பதிகள். ஆறு வயதுப் பெண்குழந்தை. திருப்பூரில் தொழில் நிலைமை சரியில்லாததால் ஆறுமாதம் அங்கும் இங்கும் கடன் வாங்கியிருக்கிறார் கணவர். கடன் தொல்லை. அதனால் குடும்பச் சண்டை. சமாதானம் பேச சென்னையிலிருந்து வந்த உறவினர்கள் அவர்களை சென்னைக்கே வந்து குடியிருக்கச் சொல்கிறார்கள். பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு எதிரில்தான் பெண்ணின் தாய்வீடு. ஓடிச் சென்று ஓர் அறையில் புகுந்து தாளிட்டுக் கொள்கிறார். சிறிது நேரம் கழித்து இவர்கள் சென்று பார்க்க, சேலையை மாட்டி தற்கொலைக்கு முயன்றது தெரிகிறது.

ஆபத்தான கட்டத்தில் இருக்கும் அவரை உடனே ஓர் ஆட்டோவில் ஏற்றி கொண்டு செல்கிறார்கள். கணவர் பின்னாலேயே இன்னொரு ஆட்டோவில் வருகிறார். வழியில் ஆம்புலன்ஸ் வர, ஆட்டோவை நிறுத்தி, உயிருக்குப் போராடும் அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றுகிறார்கள். பின்னால் மற்றொரு ஆட்டோவில் வந்த அவரின் கணவர், தான் வந்த ஆட்டோவை நிறுத்தி, ஆம்புலன்ஸை நோக்கி ஓடுகிறார். பதட்டம். கவனமின்மை. எதிரில் வரும் ஒரு லாரி அந்தக் கணவர் மீது மோதுகிறது.

இருவரையும் ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்கின்றனர். இருவரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழக்கிறார்கள்.




அந்த ஆறு வயதுக் குழந்தையின் கதி????

விபத்து என்பது எங்கே-எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. எங்கேயும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம்.

--- --

வி
பத்து நடக்கும்போது, அதைக் கேட்கும்போதோ நமக்கு ஏற்படும் பதட்டமும், விளைவுகளும் எழுத முடியாது. எழுதினாலும் உணரமுடியாது. எங்கேயும் எப்போதும் நம்மை உணர வைக்கிறது. விபத்து நடக்கும் பேருந்தினுள்ளே நாமும் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. துவக்க காட்சியிலேயே அந்த விபத்தைக் காட்டி விடுகிறார்கள். எனினும், இடைவேளைக்குப் பின் அதைக் காட்டும்போது, தியேட்டரில் பலரும் பார்க்க இயலாமல் தலைகுனிந்து கொள்வதைக் கவனிக்க முடிந்தது. அவ்வளவு நேர்த்தியாக, அவ்வளவு ஆழமாக படமாக்கிய வேல்ராஜுக்கு சபாஷ்! அதே போல அதற்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் உழைத்தவர்களுக்கும் சல்யூட்! இன்னும் நடுங்குகிறது!

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்துக்கும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்கும் விபத்து நடக்கும் காட்சியில் படம் தொடங்குகிறது. ஒரு பேருந்தில் அனன்யாவும், மற்றொரு பேருந்தில் ஜெய், அஞ்சலி, சர்வா-வும் பயணிக்கிறார்கள். அங்கிருந்து 4 மணி நேரம் முன்பு, அதிலிருந்து ஆறுமாதம் முன்பு என்று சர்வா-அனன்யா சம்பந்தப்பட்ட காட்சிகளையும், ஜெய்-அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் காட்டுகிறார் இயக்குனர். அந்த திரைக்கதை உத்தி ரசிக்க வைக்கிறது. விபத்தில் யாருக்கு என்ன நடக்கிறது என்பதே க்ளைமாக்ஸ்.





சர்வா-அனன்யா காட்சிகளில் அனன்யாவின் சந்தேகப்பேர்வழியான பாத்திரப்படைப்பை இயக்குனர் காட்சிப்படுத்திய விதம் அபாரம். ஒரு காட்சியில், பேருந்துக்காக நிற்கும் அனன்யா, ஓரடி பின் சென்று அங்கிருக்கும் பலகையில் அவர்களுக்கான பேருந்து எண் இருக்கிறதா என்று சரிபார்க்கிறார். மூன்று நான்கு செகண்ட் வரும் அந்தக் காட்சியில் அவரது சந்தேக புத்தியைப் பதிவு செய்த விதம் நன்று. அதே அனன்யா, விபத்தில் மருத்துமனையில் இருக்க, அங்கு வரும் அனன்யாவின் சித்தி சர்வா-வைப் பார்த்து ‘இவர் இருக்காரு.. அமுதாவுக்கு ஒண்ணும் ஆகிருக்காது’ என்று சொல்கிற வசனம் மூலம் எல்லாவற்றையும் புரிய வைத்து விடுகிறார்கள்.







ஜெய்-அஞ்சலி. ஒரு காதலியை இப்படி யாரும் சித்தரித்து நான் பார்த்ததில்லை. அஞ்சலியின் பாத்திரப் படைப்பும், நடிப்பும் இந்தப் படத்தின் மகாப் பெரிய ப்ளஸ். தன்னை உருகிக் காதலிக்கும் ஜெய்-யிடம் அவர் ஐ லவ் யூ சொல்லும் தொனி… இதுவரைக்கும் யாரும் இப்படிச் சொல்லிருக்க மாட்டார்கள். ஜெய்யின் நடிப்பும் கச்சிதம். படம் முழுவதும் அஞ்சலியை வாங்க போங்க என்றே அழைக்கிறார். ‘கட்டிக்கோ’ என்று அஞ்சலி சொல்ல, ‘கல்யாணத்துக்கு அப்பறம்க’ என்று ஜெய் சொன்னதும், அஞ்சலி ‘நீ கல்யாணத்துக்கு அப்பறம் கட்டிக்கோ.. நான் இப்ப கட்டிக்கறேன்’ என்று அணைத்துக் கொள்ளுமிடம் கவிதை. அந்தக் காட்சி மற்றும் பாடல் காட்சியில் மாண்டேஜ்கள் தவிர வேறெந்த இடத்திலும் அஞ்சலி, ஜெய்-யை காதல் பார்வையே பார்ப்பதில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து தன் அன்பை இறுதிக் காட்சி நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அவ்வளவு ஸ்ட்ரிக்டாக தான் இருப்பதற்கு அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளகூடியதாய் இருக்கிறது. அத்தனை யதார்த்தமான வசனங்கள்தான் காரணம்.

பாடல்கள் ஏற்கனவே ஹிட். நா.முத்துக்குமாரின் வரிகள் ஈர்க்கின்றன. மாசமா பாடலைத் தவிர பிற எல்லாமே மாண்டேஜ். கோவிந்தா, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய் பாடல்களின் காட்சிகள் ரசனையோ ரசனை. அதுவும் சொட்டச் சொட்ட பாடலில் அஞ்சலி தன் தோழிகளுடன் ஜெய் அறைக்குச் செல்லும் காட்சி கொள்ளை ரசனை.

படத்தில் பேருந்து சாலைகளில் செல்லும் வேகத்தைப் படமாக்கிய விதமும், அதற்கான பின்னணி இசைக் கோர்ப்பும் அபாரம். ஒரு காட்சியில் இரண்டு பெரிய வாகனங்களை ஆம்னி பஸ் இடது புறமாக சாலையில் இறங்கி முந்திச் செல்லும் காட்சியில் தியேட்டரில் பலர் ஐயோ அம்மா என்று கத்துகிறார்கள். இந்தப் படத்தை விஐபி-க்களுக்கெல்லாம் இல்லாமல் தனியார், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஒரு ஸ்பெஷல் காட்சி போட்டுக் காட்டலாம். இது என் வேண்டுகோள்.

நேற்று வெளியான இன்னொரு படம் வந்தான் வென்றான். அது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இது வந்தது. வென்றது.


.

27 comments:

Giri Ramasubramanian said...

தேங்க்ஸ்!
கண்டிப்பா படம் பாக்கணும்!

KSGOA said...

பதிவு படிக்கும் போதே படம் பார்க்க
வேண்டும் என்று தோன்றுகிறது.
திருப்பூரில் நடந்த சம்பவம்
மனதை கலக்குகிறது.

KSGOA said...

கடைசி பஞ்ச் நல்லா இருக்கு.

செல்வா said...

விபத்துகள் இப்பலாம் ரொம்ப அதிகமாவே நடக்கிற மாதிரி தோனுதுணா .

உண்மையில் படம் பார்க்கத் தூண்டுகிற விமர்சனம் :)

HVL said...

பார்த்துவிட்டு சொல்கிறேன்!

Lusty Leo said...

பரிசல், விமர்சனம் நச்.
வந்தான் வென்றான் - சென்றேன் நொந்தேன் / கொஞ்சம் சிரித்தேன், நிறைய வெறுத்தேன்.

Prasanna - Bahrain

ஈரோட்டான் said...

சூப்பர் விமர்சனம்..பரிசல்# படம் பார்க்கவில்லை ஆனால் படிக்கும்போதே பலதடவை மெய்சிலிர்த்தது..உங்கள் வரிகளும் அதற்கோர் காரணம்..

சேலம் தேவா said...

//இந்தப் படத்தை விஐபி-க்களுக்கெல்லாம் இல்லாமல் தனியார், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஒரு ஸ்பெஷல் காட்சி போட்டுக் காட்டலாம். இது என் வேண்டுகோள்.//

நல்ல யோசனை..!!நல்ல பதிவு..!!

இளம் பரிதி said...

naanum padam parthutu ella driverkum padathi pottu katta vendum ena ninaithen...super review...nna naan dharapuramna...

Vijayashankar said...

சர்வம் படம் பெரிய ஸ்டார்களை வைத்து செய்தலால் பட்டம் மாஞ்சா நூல் கழுத்தறுப்பு விபத்து எடுபடவில்லை.

பரிசல்காரன் said...

நன்றி கிரி..

நன்றி KSGOA!

@செல்வா

ம்ம்ம்.. ஆமாம்!

@ HVL

சொல்லுங்க... :)

@ LustyLeo

//வந்தான் வென்றான் - சென்றேன் நொந்தேன் //

ரசித்தேன்!!

@ ஈரோட்டான்

தேங்க்ஸ் பிரபு!!

@ சேலம் தேவா

நன்றி!

@ இளம்பருதி

தாராபுரமா? எங்க? என் நம்பருக்கு கூப்பிடுங்க.. :)

@ விஜய்சங்கர்

கரெக்ட்!

M.G.ரவிக்குமார்™..., said...

தமிழ் சினிமாவின் இன்னொரு சாவித்திரி என்று அஞ்சலியை தாராளமாய் சொல்லலாம்

அன்பேசிவம் said...

ஒரு வருடத்திற்கு ஒன்றரை லட்சம் உயிரிழப்புகள் நடைபெறும் சாலை விபத்துகள் குறித்த சமூக விழிப்புணர்வுகள் மிகவும் குறைவு. இது குறித்து பதிவுகள், திரைப்படங்கள், விளம்பரங்கள், விதிமுறைகள் என இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவை. அதை எடுத்துக்கொண்ட எங்கேயும் எப்போதும் திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்

இரசிகை said...

nalla vimarsanam...parisal!

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

இப்போதான் பார்த்துட்டு வரேன்,,,நல்ல படம் நல்ல விமர்சனம்....

kumar said...

ரொம்ப நாளாய் படிக்கிறேன் பரிசலின் பதிவுகளை..இப்போதுதான் பின்னூட்டம். விபத்துகள் கேயாஸ் தியரி.(என்று அட்லீஸ்ட் நம்புகிறேன்) என் சின்ன வயதில் என் மாமாவுடன் அவருடைய பியாகியோ ஸ்கூட்டரில் வியாபாரத்தலமான மாயுரம் செல்வது வழக்கம்.(பச்சை நிற அந்த ஸ்கூட்டர் என் மாமாவுக்கு ரொம்ப இஷ்டம்.(கிட்டத்தட்ட உங்கள் தந்தையின் சைக்கிள் போல ) ஒருநாள் பக்கத்துவீட்டு உறவினர் தன் மகனை ஸ்கூலில் விட்டு செல்லுமாறு கேட்க,மாமாவும் சரியென்று சொல்லி அவனை ஏற்றி கொண்டார்.ஏறியவன் பெடல் பிரேக்கிற்கு கீழே தன் காலனியை வைக்க,ஒரு சாலை சந்திப்பில் என் மாமா பிரேக்ஐ மிதித்தும் வேலை செய்யாமல் ரோட்டை தாண்டி ஒரு கேட்டை உடைத்துக்கொண்டு யாருமில்லா ஒரு தோப்பில் நுழைந்தது ஸ்கூட்டர்.பத்தே வினாடிகளில் நாங்கள் கடந்த ரோட்டை கடந்தது ஒரு பேருந்து. ஒரு பத்து செகண்ட் கழித்து நாங்கள் பயணப்பட்டிருந்தால்?

KUTTI said...

very good re-view sir...

i welcome you to read my review for this film at

http://feelthesmile.blogspot.com/2011/09/blog-post_17.html

நிலாமதி said...

அழகான விமர்சனம். பாராட்டுக்கள்.

selventhiran said...

நீரு பெரிய கட்டாரிவேய்...!

Unknown said...

விமர்சனம் எழுதியவிதம் படம் பார்க்கும் அவளை தூண்டுகிறது....

திருப்பூரில் நடந்த அந்த விபத்து உண்மையிலேயே நினைத்து பார்க்க முடியாதது...

சுசி said...

நல்ல விமர்சனம்.

நாகராஜ் said...

திருப்பூர் சம்பவம் ஒரு கொடுமை,படம் பற்றிய விமர்சனம் அருமை .

jalli said...

indraya ilainarkal vakanam ottuvathail---athikam eathirey varum appavikalthaan paliyaakiraarkal. veykam padu veykam...innum thiruppuril tharkolaikalai thadukka mudiyavillaya..

சுரேகா said...

விமர்சனமாக இல்லாமல், விளக்கமும், துலக்கமுமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா!!

Ramjee said...

அரு அசத்தலான படத்துக்கு ஒரு அருமையான விமரிசனம்! வாகனம் ஓட்டும் அனைவரும் படம் பார்க்க வேண்டும். எப்பொழும் 80 - 100 என்று பறக்கும் இன் நண்பர் இந்த படம் பார்த்தபின் (சென்னை மாயாஜாலில் இருந்து வீடு திரும்ப எடுத்துக் கொண்ட கால அளவு ஒரு மணி நேரம்!) படத்தின் தாக்கம் ஒருநாளேனும் இருக்கின்றதே !

செல்ல கணேஷ் said...

தங்களின் சினிமா சார்ந்த விமர்சனம் எனக்கு பிடிக்கும்.
இத விட எப்படி சொல்ல முடியும்
எங்கேயும் எப்போதும் விபத்து நடந்து விடுமோ ? என்பதை.
கடைசியில் நீங்கள் சொன்ன விடயம் அருமை. கட்டாயம்
அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இலவசமாக திரையிடல் வேண்டும்

செல்ல கணேஷ் said...

தங்களின் சினிமா சார்ந்த விமர்சனம் எனக்கு பிடிக்கும்.
இத விட எப்படி சொல்ல முடியும்
எங்கேயும் எப்போதும் விபத்து நடந்து விடுமோ ? என்பதை.
கடைசியில் நீங்கள் சொன்ன விடயம் அருமை. கட்டாயம்
அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இலவசமாக திரையிடல் வேண்டும்