Thursday, November 27, 2008

ஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூடங்களும்



“பையன் இனிமே எதுவும் குறும்பு பண்ணினா, ஒழுக்கக்கேடா எதாவது நடந்துகிட்டான்னா நடக்கவே முடியாதபடிக்கு அவன் முட்டிலயே அடிச்சு ரத்தக்காயத்தோட வீட்டுக்கு அனுப்புங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்.... “ -நான் ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும்போது என்னுடன் படித்த ஷாஜகான் என்ற மாணவனின் தந்தை எங்கள் வகுப்பாசிரியரிடம் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் இவை.

10 வகுப்பு வரை அவன் செய்த குறும்புகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஏரோ விடுவது, வகுப்புக்கு கட் அடிப்பது, தன்னை அடிக்கும் ஆசிரியர்களைப் பற்றி அவதூறாக பாத்ரூமில் எழுதுவது, சில வாத்தியார்களை அவர்களிடமே பயமின்றி எதிர்த்துப் பேசுவது என்று (இதெல்லாம் இப்போது வெகு சாதாரண குற்றங்கள் ஆகிவிட்டன. அப்போது தேசதுரோகம்!) ஒழுக்கக்கேடான செயல்களையே செய்து வந்தான்.

“படிப்புல பாஸோ, ஃபெயிலோ விடுங்க சார்.. இவன் பண்ற சேட்டைகளை நினைச்சா தறுதலையாப் போயிடுவானோன்னு கவலையா இருக்குங்க” என்று அவன் தந்தை சொன்னது மறக்கமுடியாது.

பலவருடங்களுக்கு முன் என் நண்பன் செந்திலைப் பார்க்க உடுமலை சென்றிருந்தபோது அவன் வீட்டிற்கு அருகில் ஒரு வீடு கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது. நான் செந்தில் வீட்டைக் கடக்கும்போது, அந்த வீடு கட்டும் இடத்திலிருந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து ‘கிருஷ்ணா... ‘ என்று அழைத்தபோது அடையாளம் தெரியவேயில்லை.

“ஷாஜகானோட அப்பாதானே நீங்க..” என்று கேட்டுவிட்டேன். எந்தப் புரட்டுமின்றி நிஜமாகச் சொல்கிறேன். அவர் சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப்போய்விட்டேன்....

“நான்தாண்டா ஷாஜகான்” என்றான் அவன்!

“ப்ச்.. எங்கப்பா சொன்னமாதிரி படிக்கலைன்னாலும் பரவாயில்லை. ஒழுக்கமாவாவது இருந்திருக்கலாம். எல்லா கெட்ட பழக்கமும் பழகி, இப்படி முப்பது வயசுலேயே கெழவனாய்ட்டேன். இப்போ இப்படி சித்தாள், மேஸ்திரி வேலைன்னு அலையறேன். ஸ்கூல்ல என்னை அடிச்ச வாத்தியார்கிட்ட எதுத்துப் பேசி, எதுத்துப் பேசி என்னை எந்த வாத்தியாருமே கண்டிக்கல. அதுக்கு இப்போ அனுபவிக்கறேன்” என்ற அவன் வார்த்தைகள் அவன் அனுபவம்!


இப்போதெல்லாம் ஆசிரியர் அடித்ததாக புகார் கூறும் பெற்றோர்களைப் பற்றியும், ஆசிரியராக இல்லாமல் சில்லறைத்தனமாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் பற்றியும் தினசரிகளில் படிக்கும்போது நிஜமாகவே மனசு கனக்கிறது. வேறு எந்தத் தொழிலில் இருப்பவர்கள் தவறு செய்தாலும் ‘பார்த்தா படிச்சவனா இருக்க’ என்றோ ‘இவனெல்லாம் ஸ்கூலுக்கு ஒழுங்கா போயிருக்க மாட்டான்’ என்றோ சொல்கிறோம். அப்படி இருக்க அந்தக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே ஒழுக்கம் தவறி நடந்து கொண்டால்..?

ஓரிரு வாரங்களுக்கு முன் ஒரு செய்தி.. சங்ககிரி அருகே ஒரு ஆசிரிய காட்டுமிராண்டி, சக ஆசிரியையோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை பள்ளி நிர்வாகம் கண்டிக்கிறது. அவனது மனைவியை பள்ளிக்கு வரச் சொல்லி, அவர் முன் அவனைக் கண்டித்து, அவனை பணி நீக்கமும் செய்கிறது. இந்தக் காட்டுமிராண்டி, அந்தப் பள்ளியின் பெயரைக் கெடுக்க திட்டம் தீட்டி அங்கே மூன்றாம் வகுப்பு படிக்கும் ‘மோனிஷா’ என்ற பிஞ்சுக் குழந்தையை ‘சாக்லேட் தரேன்’ என்று அழைத்துப் போய் அவள் மூச்சை நிறுத்திக் கொலை செய்துவிட்டு, உடம்பெங்கும் ஆசிட்டையும் வீசிவிட்டு வந்துவிட்டான். இவனெல்லாம் ஆசிரியப்பணி செய்துவந்திருக்கிறான். புடுங்கி..

இன்னொரு சம்பவம் ஆக்ராவில் உள்ள ‘ஹோல்மென்’ பள்ளியில். ஏதோ ‘பால்மேளா’ என்ற விழா நடத்தி பல போட்டிகள் வைத்து... வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்ன பரிசு தெரியுமா..? நம்புங்கள்... பொய்யில்லை.. பீர் பாட்டிலும், சீட்டுக்கட்டும் பரிசாம்! கேட்டபோது பள்ளி நிர்வாகிகள் ‘எங்களுக்குத் தெரியாமல் இது நடந்தது’ என்கிறார்கள். மாணவர்கள் ‘என்ன போட்டி, என்ன பரிசு எல்லாவற்றையும் தீர்மானித்தது பள்ளி நிர்வாகம்தான்’ என்கிறார்கள். நாடு உருப்படுமா..

ஆசிரியர் அடித்துவிட்டார், தண்டித்துவிட்டார் என்று 9 வயதுக் குழந்தை மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்துகொள்கிறது. ஆசிரியர் தண்டிக்காவிட்டால் படிக்கும் மாணவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை என்பதே என் எண்ணம். ஆனால் மேலே குறிப்பிட்டது போன்ற காட்டுமிராண்டி ஆ‘சிறியர்’களும், கண்மூடித்தனமான பள்ளிநிர்வாகமும் பெருகிவிட்ட சூழலில் எதைத் தான் நம்புவது?

ஆசிரியர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது இந்தக்காலத்தில்? ‘ஆசிரியர் தெருவில் ஒரு மூலையில் வருகிறாரென்றால் இங்கிருந்தே சைக்கிளை விட்டிறங்கி நடந்து போவேன்’ என்று சொன்னால் சிரிக்கிறார்கள் என் மகள்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஸ்கூல் டைரியில் ‘Today your daughter studied well’ என்றோ ‘Today she didn’t perform in the class’ என்றோ எப்போதுமே எழுதிக் கொடுத்ததாய் நினைவிலில்லை. ‘Pls pay fees on time, otherwise she won’t allow for exams’ ‘Van fees still balance. Pls clear soon’ என்றோதான் எழுதிக் கொடுக்கிறார்கள். அந்த ஆசிரியர்கள் மீதும், பள்ளிமீதும் குழந்தைகளுக்கு எங்கே மரியாதை வரும்?

மீரா, மேகாவை காலையில் நான்தான் பள்ளிக்கு சென்று விட்டு வருகிறேன். திரும்பி வரும்போது மட்டும் பஸ். ஆகவே ஒரு ட்ரிப் என்று பாதி கட்டினால், ‘இல்லைங்க. சிங்கிள் ட்ரிப் என்றால் வேன் ஃபீஸில் 70% கட்ட வேண்டும்’ என்கிறார்கள். ஏனென்று கேட்டேன். ‘டீஸல் வெலையெல்லாம் கூடிப்போச்சுங்க’ என்று பதில் வந்தது. ‘யோவ் டுபுக்கு. எவ்ளோ கூடினா என்ன, வராத ட்ரிப்புக்கு டீசல் செலவாகுமா’ என்று கேட்டேன். ‘அந்த வழியாத்தான் வருது. உங்க பொண்ணுக வராதது எங்களுக்கு நஷ்டம்தானே’ என்று கேனத்தனமாக சொன்னார்கள். ‘அப்போ, என் வீட்டிலிருந்து 2 பேர் வர்றாங்க. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா டீசல் அடிச்சு வர்றீங்களா?’ என்று கத்தி ‘100ல பாதி 50ன்னு சொல்லிக்குடுக்கறதுக்கு பதிலா 100ல பாதி 70ன்னு சொல்லிக் குடுப்பீங்க போல’ என்று ரகளை செய்து கரஸ்பாண்டெண்ட் வரை பஞ்சாயத்து போய் ‘இந்தமாதிரியெல்லாம் பண்ணினா குழந்தைகளுக்கு கல்வியை விட காசு முக்கியம்ன்னு தோணாதா? இந்த எழவையெல்லாம் டைரில எழுதாம எங்கிட்ட ஃபோன்ல சொல்லலாமே’ என்று சண்டைகட்டி வரவேண்டியதாயிற்று. (இந்த வேன் ஃபீஸின் இன்னொரு கொடுமை 12 மாதங்களுக்குக் கட்ட வேண்டும்! எப்படிப் பார்த்தாலும் 10 மாதங்களுக்கு மேல் பள்ளி இல்லை. கேட்டால் ஒரே பதில் ‘அது அப்படித்தாங்க. எல்லா ஸ்கூல்லயும் அப்படித்தான்’)

இப்படி பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்கள் சம்பளம் 1800, 2000, 2500. அவ்வளவே. அவர்களுக்கு எப்படி அர்ப்பணிப்பு உணர்வு, இது புனிதப்பணி என்கிற எண்ணமெல்லாம் வரும்?

‘ப்ரைவேட் ஸ்கூலே வேண்டாம். அரசுப் பள்ளியே சரி’ என்றால் அவர்கள் நிலைமை இன்னும் மோசம். டாய்லெட் இல்லை, கம்ப்யூட்டர் இருக்கு, ஆனா கரெண்ட் கனெக்‌ஷன் இல்லை. டி.வி.டி இருக்கு. ஆனா எஜூகேஷனல் சி.டி. இன்னும் வர்ல. என்று அவர்கள் படும்பாடு படு கேவலம். பாதி மாணவர்கள் மரத்தடியில்தான் பயில்கிறார்கள். அங்கே நம் குழந்தைகளை விட நமக்கெப்படி மனம் வரும்? பணம், பணம் என்று நாம் ஓடும்போது நம் பிள்ளைகளை இப்படி அடிப்படை வசதி கூட இல்லாத பள்ளிகளில் சேர்த்து கஷ்டப்படுத்துவதை எப்படி ஒப்புக் கொள்ளத்தோன்றும்?

ஸ்ரீலங்காவில் எல்லாமே அரசுப் பள்ளிகள்தானாம். தனியார் பள்ளிக்கே அங்கே இடமில்லையாம். பண்டாரநாயகேவோ, யாரோ பிரதமராக இருந்தபோது அவ்ர் மகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் (ஒன்றிரண்டு மதிப்பெண் குறைவு என்று கல்லூரி இடமளிக்க மறுத்ததாம்) வேறெந்த நாட்டிற்கோ அனுப்பி மருத்துவம் பயில வைத்தாராம்.

வாங்கும் காசுக்கு ஒழுங்காகக் கற்றுத் தராமல் எல்லாவற்றையும் ஹோம் ஒர்க்கில் பார்த்துக் கொள்ளச் சொல்லும் பள்ளிகளும், புனிதமாவது மண்ணாங்கட்டியாவது என்று கடனுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களும், ஒத்துக் கொள்ள மனமுமில்லாமல், வேறு வழியுமில்லாமல் சமரசம் செய்து கொள்ளும் பெற்றோர்களும் (நான் உட்பட) இருக்கும்வரை இந்த கண் துடைப்புக் கல்விமுறை தொடரும். அதன் விளைவுகளின் பயங்கரம் இனிவரும் காலங்களில் எதிரொலிக்கும்.

40 comments:

பாபு said...

இங்கே ஒரு பள்ளியில் L.K.G க்கு ஒரு வருட பீஸ் எவ்வளவு தெரியுமா?
நாற்பது ஆயிரம் ,ஒரு காலத்தில் ஜோக் இல் மட்டுமே சொல்லபட்டிருந்த தொகை.
ஒரு கும்பிடு போட்டு ஓடி வந்துவிட்டேன்.ஆனால் அந்த தொகை கொடுக்க பெரிய கூட்டமே அலை மோதுகிறது

பாபு said...

பஸ் தொகை தனி, ரூபாய் பத்தாயிரம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்பப்பார்த்தாலு ம் ஒரே கோபம்.. ஆசிரியர்கள் யார் அவங்களும் மனுசங்க தானே.. அவங்களூம் நம்மள்ள இருந்து அந்த பணியை தேர்ந்தெடுத்து உழைக்கிறவங்க தானே.. இன்னைக்கு இருக்கிற நிலைமையில் காசு கொடுத்து படிக்கிறாங்க காசு கொடுத்து வேலை வாங்கிறாங்க.. எல்லாமே காசு தான்.. இந்த வேலைன்னு இல்லை எல்லா வேலையில் நல்லவர்களும் இருக்கிறாங்க கெட்டவங்களூம் இருக்காங்க..இந்த பணிக்கு போயிட்டதாலயே அவங்க தெய்வமா ஆகிடறதில்லை..
உங்க நண்பரை பொறுத்தவரையில் அவரை திருத்தவேண்டிய கடமை சரி சமமா பெற்றோருக்கும் இருந்ததே..

Ramesh said...

Bad school owners and teachers should be packed off and sent to Mumbai.

cheena (சீனா) said...

ஆசிரியப் பணி அறப்பணி
அதற்கே உனை அர்ப்பணி

என்ற கொள்கை கொண்ட ஆசிரியப் பெருமக்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். ஆசிரியர்களை மதிக்கத்தவறிய சமூகமும் இதற்குக் காரணம்.

ஆசிரியப் பணி உட்பட அனைத்துப் பணிகளிலும் காசு புகுந்து விளையாடுகிறது. பணி மாற்றங்களுக்கு இலட்சங்கள் கை மாறுகின்றன. பள்ளி நிர்வாகம் லாபக்கணக்கிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அரசியல் தலையீடு அதிகம்.

நாம் உடபட அனைவரும் இதற்குக் காரணம்

நிலைமை மாற நல்வாழ்த்துகள்

கோவி.கண்ணன் said...

//ஆசிரியர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது இந்தக்காலத்தில்? ‘ஆசிரியர் தெருவில் ஒரு மூலையில் வருகிறாரென்றால் இங்கிருந்தே சைக்கிளை விட்டிறங்கி நடந்து போவேன்’ //

அட நாங்களும் இப்படித்தான் செய்த்திருக்கோம், நீங்கள் சொன்னதும் தான் நினைவு வருகிறது

*****

சிலவற்றை புனிதம் என்று சொல்வதாலேயே, அதில் பணிபுரிபவர்கள் இயல்பில் பலரைப் போல் தப்பு செய்பவராக இருந்தால் அவை பூதகரமாக தெரியும்.

எல்லாம் வயிற்றுப்பாட்டிற்கான பிழைப்பு தானே. எவரையும் மதிக்கலாம், போற்றலாம் மாறாக புனித பூச்சு பூசிவிட்டால் அவருக்கும் சிக்கல் தான்.

சில அலுவலகங்களில் அவர்களுக்குள்ளேயே சிலர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பார்கள். ஆனால் பள்ளியில் அதையே சில ஆசிரியர் செய்தால் ஒழுக்கக் கேடு என்று சொல்லிவிடுவோம், ஆசிரியர்கள் எவரும் ஆகயத்தில் இருந்து வருவதில்லை, தவறு செய்யும் சிலரில் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் அவ்வளவே.

நல்ல பதிவு பரிசல்

பரிசல்காரன் said...

@ முத்துலெட்சுமி

உண்மைதான். என் தம்பியும் ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர்தான். ஆசிரியர்களை அவர்களின் இயல்புக்கு மாறாக பணிசெய்யத் தூண்டுவது பாழாய்ப்போன பள்ளி நிர்வாகங்கள்தான் என்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து உண்டா? (எல்லாத்துலயும் ‘சில' போட்டுக்கோங்க. நான் நல்லவங்களைக் குறிப்பிடல!)

அதேமாதிரி, ஆசிரியர்ங்கற வேலைக்கு வர்றதுல 80% எனக்குத் தெரிஞ்சு விரும்பி, கல்வி சொல்லிக்கொடுப்பதை ஒரு தவமா நெனைச்சுத்தான் வர்றாங்க. இந்தக் கூட்டத்துல அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கொன்னவன் மாதிரி ஆளுகளும் வர, இந்த தனியார்கள் தானே காரணம்?

அப்புறம் தங்கச்சி.. இந்தக் கோபம் அறச்சீற்றம்!

பரிசல்காரன் said...

//சிலவற்றை புனிதம் என்று சொல்வதாலேயே, அதில் பணிபுரிபவர்கள் இயல்பில் பலரைப் போல் தப்பு செய்பவராக இருந்தால் அவை பூதகரமாக தெரியும்.//

சரிதான் கோவிஜி!

பரிசல்காரன் said...

@ பாபு

அதைவிட அதிகமெல்லாம் இருக்கு சார்...!

@ ரமேஷ்

:-)

@ சீனா


//ஆசிரியர்களை மதிக்கத்தவறிய சமூகமும் இதற்குக் காரணம்.
//

உண்மைதான்!

Anonymous said...

அப்பா, ஆசிரியர்கள் மேல இருக்கும் மரியாதையே போயிடும்போல இருக்கு. இப்ப என்னோட ஆசிரியர்களப்பாத்தாக்கூட போய் எப்படி இருக்கீங்கன்னு விசாரிக்கற மாதிரிதான் நிறைய பேர் இருக்கங்க.பணியோட புனிதத்தை புரிஞ்சுக்காதவங்களும் இருக்காங்க தான்.

கார்க்கிபவா said...

நியாயமான‌ கோபம். கடிவாளம் இல்லா குதிரைகள் ஆகிவிட்டனர் பள்ளி நிர்வாகிகள். பெற்றோர்கள் கேட்கும் நியாயமான் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குழந்தைகளை அது பாதிக்கும் போது கேட்கும் ஒரு சிலரும் நிறுத்தி விடுகிறார்கள். நான் படிக்கும் போது ஊருக்கு ஒரு நல்ல பள்ளி இருக்கும். இப்போது நான் படித்த பள்ளியும் சீரழிந்து தின்டிவனம் மக்கள் வெளியூர்களுக்கு பிள்ளையை பேக் செய்கிறார்கள். அங்கேயும் கொடுமை தான்..

Mahesh said...

நியாயமான கோவந்தான்.. ஆனா முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி பெற்றோருக்கும் நிறைய பொறுப்பு இருக்கு. வேன் ஃபீஸ் எல்லாம் விடுங்க.. 40 நிமிஷ பீரியட்ல ஒழுங்கா சொல்லித்தராங்களா?

நான் படிக்கிறபோது டீச்சர்க எங்களையே ஹோட்டலுக்குப் போய் காபி, வடை எல்லாம் வாங்கிட்டு வரச் சொல்லுவாங்க. க்ளாச்லயே பசங்க முன்னாடி இன்னொரு டீச்சரோட பேசிக்கிட்டே சாப்டுவாங்க. இந்த மாதிரி aberrations எல்லாக் காலத்துலயும் இருக்கும். அந்தந்த காலத்தோட தேவைகளுக்கும் சமுதாய நெருக்கடிக்கும் ஏற்ப கூட குறைய இருக்கலாம்.

புனிதம்னு பாத்தா டாக்டர் தொழில் ரொம்பப் புனிதம். அது இன்னிக்கு எப்பிடி இருக்கு?

Thamira said...

LKG க்கு 40000மா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் +2 வரை அரசுப்பள்ளியிலேதான் படித்தேன். 12 வருஷத்துக்கும் சேத்து பள்ளிக்காக 120 ரூபாய் செலவாயிருக்குமா (பஸ், பாக்கெட் மணி தவிர்த்து** பாக்கெட் மணி என்றால் ஒரு நாளைக்கு ஒண்ணாம் கிளாஸப்போ 5 பைசாவில் ஆரம்பித்து 12ம் கிளாஸப்போ 50 பைசா வரை வளர்ந்தது**) என்று தெரியவில்லை...

என் பிள்ளையை என்ன பண்ணலாம்..? ம்ம்? ஒரே யோசனையாவும் குழப்பமாவும் இருக்குதே..

Anonymous said...

கடைசி நாளுக்கு ஒரு வாரம் முன்பே, கட்டின பீஸை சரியா வரவு வைக்காம என் இரு மகள்களையும் வெளியே நிற்க வைத்து விடார்கள். போய் சலானக் காட்டியதும், “சாரி சார்” நு சொன்னாங்க. +2 படிக்கும் பெண் அத்தனை பேர் முன் அவமானப் படுவது சாதாரன விஷயமில்லை.

சரி அப்படியாவது தரமான கல்வி போதிக்கிறார்களான்னா அதுவும் இல்லை.

அவர்கள் பேசும் ஆங்கிலம் கேட்டால் கடுப்பாக வரும்.

ஒரு முறை மகளை அழைத்துவர பள்ளிக்குச் சென்ற என்னைப் பார்த்து அவர்கள் வகுப்பு ஆசிரியை சொன்னது, “She went.”

எவ்வளவு கொடுமைன்னாலும் அது மாதிரிப் பள்ளிகளில்தான் நாமும் சேர்க்கிறோம். அரசுப் பள்ளிகள் பக்கம் நம் கவனம் திரும்ப வேண்டும்.

பரிசல்காரன் said...

நன்றி சின்ன அம்மணி

@ கார்க்கி

//குழந்தைகளை அது பாதிக்கும் போது கேட்கும் ஒரு சிலரும் நிறுத்தி விடுகிறார்கள்//

இதை மறுப்பின்றி ஒத்துக்கொள்கிறேன் சகா.

@ மகேஷ்

பெற்றோருக்கு கடமை இருப்பதை ஒத்துக்கொள்கிறேன்.

ஒரு கேள்வி, இது குதர்க்கமாகக் கூட இருக்கலாம்..

டாக்டரிடம் நமது மகனை ஏதாவது நோய்க்கு கொண்டுசெல்லும்போது, நீங்க சரியான ஆகாரம் குடுக்கல.. நீங்க சரியா அவனை மெய்ண்டெய்ன் பண்ணல,அதுனாலதான் இந்த நோய் வந்தது.. உங்க பங்கு எங்க-ன்னு திட்டினா வாங்கிக்கலாம். ஆனா அதுக்காக சரியாப் பாக்காம ஏதாவது ஆய்ட்டா நமக்கு டாக்டர்மேல கோவம் வருமா வராதா?

பரிசல்காரன் said...

@ தாமிரா

இதெல்லாம் கம்மி. உங்க வாரிசைச் சேர்க்கும்போது இன்னும் எகிறும்!

@ வேலன்

சரிதான் அண்ணாச்சி!

www.narsim.in said...

வேறு வழியுமில்லாமல் சமரசம் செய்து கொள்ளும் பெற்றோர்களும் (நான் உட்பட) இருக்கும்வரை இந்த கண் துடைப்புக் கல்விமுறை தொடரும். அதன் விளைவுகளின் பயங்கரம் இனிவரும் காலங்களில் எதிரொலிக்கும்.
//

TRUE LINES!!

பரிசல்காரன் said...

// narsim said...

வேறு வழியுமில்லாமல் சமரசம் செய்து கொள்ளும் பெற்றோர்களும் (நான் உட்பட) இருக்கும்வரை இந்த கண் துடைப்புக் கல்விமுறை தொடரும். அதன் விளைவுகளின் பயங்கரம் இனிவரும் காலங்களில் எதிரொலிக்கும்.
//

TRUE LINES!!//

நன்றி பாஸ். நல்ல வேளை N-ஐ விடாம அடிச்சீங்க!!!! :-)

ரமேஷ் வைத்யா said...

உண்மையைப் பட்டவர்த்தனமாக எழுதத் துணிவு வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. (பல வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு முப்பது வயது என்று போகிற போக்கில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.:-)

நந்து f/o நிலா said...

Mr பரிசல்காரன், இருங்க அருணா மேடம் வந்து உங்களுக்கு மொத்தமா பதில் சொல்வாங்க.

அதுக்குள்ள நான் பாட்டுக்கு சூடா எதையாச்சும் சொல்லி வெச்சு மாட்டிக்க தயாரில்லை. :P

பரிசல்காரன் said...

@ கிழஞ்செழியன்

ம்க்கும்! ரொம்ப முக்கியம்!

@ நந்து

புரியல...

பரிசல்காரன் said...

@ நந்து

இந்தமாதிரி மேட்டர்ல புகுந்து விளையாடுவீங்கன்னுதான் எப்பவும் இல்லாம எஸ் எம் எஸ் அனுப்பினேன்!

Ŝ₤Ω..™ said...

நான் எப்போதுமே சொல்லற விஷயந்தான்.. என்று நாம கல்விய வியாபரமா மாத்திட்டோமோ அன்றைக்கு புடிச்சது சனி..

நீங்க சொல்வது போல, இன்றைய நிலையில் 80% எல்லாம் ஆசிரியப்பணியைத் தேர்ந்தெடுத்து வருவது இல்லை.. ”வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை”ன்னு சரியாத் தான் சொல்லி இருக்காங்களோன்னு நினைக்க வைக்குறானுங்க..

இன்னைக்கு எந்த படிப்பு படித்தாலும் கடைசியில இவனுங்க போய் விளறது ITல தான?? அங்க ஒன்னும் புடுங்க முடியாத வெத்துவேட்டுங்க தான, சோத்து வேறு வழி இல்லாம ஆசிரியராக வருதுகள்??
எனக்கு தெரிஞ்சி MPhil, MSc, படிச்சவனெல்லாம் ITல இருக்கானுங்க.. அப்புறம் என்ன ____க்கு அத படிச்சீங்க??

கும்ககோணத்துல பள்ளிகூடத்தில தீ விபத்துக்கு அப்புறம், பெரிசா கமிஷனெல்லாம் வச்சாங்க.. அது என்னா ஆச்சி??

இன்னைக்கும் கல்வியை வியாபாரமா நினைக்காம, புனிதமா நினைக்கிற கல்லூரிகள் 2 எனக்கு தெரியும்.. பள்ளிக்கூடம் ஒன்னு கூட தெரியாது..

டிஸ்கி:: நீங்க சொன்னமாறியே ”சில” சேர்த்துக்கனும்.. ஆனா அந்த “சில” என்பது சில கெட்ட அல்ல.. சில நல்ல

பாச மலர் / Paasa Malar said...

ஆசிரியப் பணி அறப்பணி..என்பதெல்லாம் அந்தக் காலம் என்றாகிவிட்டது..கல்விமுறையும் சரி..பள்ளிக்கூட நிர்வாகமும் சரி..ஒன்று அளவுக்கதிகமாக ஆசிரியர்களை நெருக்கிப் பிழிகின்றனர்..அல்லது அலட்சியப் போக்கு காரணமாக அளவுக்கதிகமான சுதந்திரம் கொடுத்து விடுகின்றன..

மொத்தத்தில் 100 சதம் எல்லாவகையான மனதிருப்தியுடன், வேலை செய்யும் ஆசிரியர்கள் மிகவும் குறைவுதான்..

நந்து f/o நிலா said...

//இந்தமாதிரி மேட்டர்ல புகுந்து விளையாடுவீங்கன்னுதான் எப்பவும் இல்லாம எஸ் எம் எஸ் அனுப்பினேன்!//

உண்மைதான் பரிசல் என்னை அதிகமாக உணர்ச்சிவசப்பட வைக்கும் வெகுசில விஷயங்களில் இது முக்கியமானது.

அந்த நிலையில் கமெண்ட் எழுதும் போது வார்த்தைகளிலும் சூடு வந்து யாரையாச்சும் காயப்படுத்திடுது :(

கடைசியில் நாம் சொல்ல வந்த நியாயம் கண்டு கொள்ளப்படாமல் போய்விடுகிறது.

அதுவுமில்லாமல் இந்த விஷயத்தில் நீங்கள் குற்றம் சுமத்தும் அனைவருக்குமே ஒவ்வொரு நியாயம் இருக்கிறது. என்ன செய்வது?


என்னது குழந்தைங்களுக்கு நியாயம் வேணுமா? அடப்போங்க க்ருஷ்ணா. உங்களோட எப்பவுமே காமெடிதான்...

ambi said...

அட ஸ்கூலில் சேக்கவே காபிடேஷன் பீஸ் குடுக்க வேண்டி இருக்கே!

முது நிலை பட்டம் பெற ஆகும் செலவை விட இந்த காபிடேஷன் பீஸ் அதிகம் என நம்ப மறுக்கிறது, ஆனா நிதர்சனம் கன்னத்தில் அறைகிறது பரிசல்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்காரன் அவர்களுக்கு,

ஓர் சராசரி சமூக பார்வையில் உங்கள் கருத்து சரியே. ஆனால் ஓர் பெற்றோராக இருந்து பார்க்கும் பொழுது சரியல்ல.

அவர்கள் சரியான கொள்கை நிலையில் இல்லாத பொழுதும், ஆசிரியர்களின் நிலை இவ்வாறு இருக்கும் பொழுதும் அங்கு குழந்தைகள் எவ்வாறு சிறப்பாக வளர்க்கப்படுவார்கள்.

பெற்றோர்களில் பாதி ஆசிரியர் என்ற வழக்கு இருந்தது அந்தகாலம். ஆசிரியர்களின் தவறுக்கு பாதி துணைபோவது பெற்றோர்கள் தான்.

அரசு இதற்கு கண்காணிப்பு குழு அமைத்தாலும் அது முட்டாள் தனமே. கண்காணிப்பு குழு சேர்ந்தவர்கள் காசை வாங்கி விட்டு எத்தனையொ தவறுகளுக்கு துணை போவார்கள்.

தமிழ் தமிழ், தமிழ் தேசம், தமிழ் வழி கல்வி என குதிக்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நாம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் பாட முறை ஆங்கிலேயர் முடிவுசெய்தது என பலருக்கு புரிவதில்லை.

அதை நமக்கு ஏற்ற பாடதிட்டமாக மற்றினால் பன்மடங்கு முன்னேற்றம் இருக்கும். இது போன்ற மோசமான கல்வி முறை படித்த குழந்தைகளே
வெளிநாடுகளில் இருப்பவர்கள் வியக்கும் வண்ணம் செயல்படும் பொழுது சரியான கல்வி திட்டம் அமைத்து கொடுத்தால் மாபெரும் வளர்ச்சியை காணலாம்.

இதற்கு அரசை எதிர் பார்க்காமல், குறைந்த பட்சம் 10 முதல் 20 பெற்றோர்கள் பங்கு கொண்டு ஓர் பள்ளியை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். அவர்கள் குழந்தைக்கு மட்டுமல்ல சமூகமே வளர்ச்சி அடையும்.


எனது நீண்ட பின்னூட்டத்தை சகித்து கொண்டதற்கு நன்றி.

Vidhya Chandrasekaran said...

ஒன்றரை வயதே ஆன என் மகனைக்காட்டி ஸ்கூல் அப்ளிகேஷன் வாங்கியாச்சான்னு கேட்டாள் தோழி. இப்பவே வாங்கினாதான் இடம் கிடைக்கும்னு சொன்னா. நான் ஒரு ---ம் (ஹி ஹி குடும்ப இஸ்திரி கெட்ட வார்த்தை பேசக்கூடாதுன்னு) வேணாம் எங்க கிடைக்குதோ அங்க படிக்கட்டும்னு சொல்லிட்டு வந்தேன்.

Vidhya Chandrasekaran said...

இண்டெர்வீயு வச்சு தான் பசங்கள சேத்துப்பாங்கன்னா அப்புறம் இவங்க ஸ்கூல் என்ன சொல்லித்தருவாங்க??

மணிகண்டன் said...

நான் மொத்தமா 6 வதுலேந்து 12 வது படிக்கறதுக்கு பீஸ் ஒரு 1000 ரூபாய் செலவு ஆகி இருக்கும். சும்மா பையனையும் பொண்ணையும் இந்த ஸ்கூல்ல தான் சேப்பேன்னு முடிவு பண்ணிட்டு பீஸ் அநியாயம்ன்னு குதிக்கறது நமக்கு பழக்கமா போச்சு. அதே மாதிரி கோவி சொன்ன கருத்துக்கும் முழுசா உடன்படறேன். தேவையில்லாத புனிதத்தன்மை சேக்கறது இக்காலக்கட்டத்துக்கு அவசியமற்றது.

பரிசல்காரன் said...

@ ஸ்வாமி ஓம்கார்

//எனது நீண்ட பின்னூட்டத்தை சகித்து கொண்டதற்கு நன்றி.//.

இப்ப்டியெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது ஸ்வாமி! 108 வயதான உங்களைப் போன்ற ஒரு அனுபவஸ்தர் என் வலைப்பூவை தொடர்வதை (ஃபாலோயர்!) பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். உங்கள் கருத்துக்களை அளித்ததற்கு நான் தான் உங்களுக்கு கடமைப்பட்டவனாகிறேன்.

ந்ன்றி!

பரிசல்காரன் said...

நன்றி சென்

பாசமலர்

அம்பி

பரிசல்காரன் said...

@ வித்யா

என்னாஆஆஆஆஆஆஅ கோவம்!

@ மணிகண்டன்

சரிதான்!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

எனது..பாரதரத்னா..என்ற நாடகநூல்..ஒரு தமிழாசிரியர் பற்றிய கதை...இதில்..இன்றைய நல்லாசிரியர்களும்...ஒரு சிலரால்..வீணாக பழி சுமத்தப்படுவதாகவும்...ஒரு ஆசிரியரின் கடமை..மாணவனின் பொறுப்பு..இன்றைய பெற்றோர்.நிலை..ஆகியவற்றை சொல்லி இருக்கிறேன்..
பதிவு அருமையாக இருக்கிறது..பரிசல்..

வீணாபோனவன் said...

பரிசல்காரரே,
//ஸ்ரீலங்காவில் எல்லாமே அரசுப் பள்ளிகள்தானாம். தனியார் பள்ளிக்கே அங்கே இடமில்லையாம்.//

முற்றிலும் தவறு... இலங்கையில் பல தனியார் பாடசாலைகள்/கல்லூரிகள் உண்டு. பண்டாரநாயக்க படித்ததே St. Thomas எனப்படும் ஒரு தனியார் கல்லூரியில் தான்.

//
பண்டாரநாயகேவோ, யாரோ பிரதமராக இருந்தபோது அவ்ர் மகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் (ஒன்றிரண்டு மதிப்பெண் குறைவு என்று கல்லூரி இடமளிக்க மறுத்ததாம்) வேறெந்த நாட்டிற்கோ அனுப்பி மருத்துவம் பயில வைத்தாராம்.//

மீண்டும் தவறு. பண்டாரநாயக்கவின் மகள் சந்திரிக்கா குமாரதுங்க படித்து பட்டம் பெற்றது அரசியல் முதுகலையில் (பாரிஸ்/பிரான்ஸ்).

-வீணாபோனவன்.

புருனோ Bruno said...

//கும்ககோணத்துல பள்ளிகூடத்தில தீ விபத்துக்கு அப்புறம், பெரிசா கமிஷனெல்லாம் வச்சாங்க.. அது என்னா ஆச்சி?? //

அதன் பிறகு பல மாறுதல்கள் வந்துள்ளன.

இங்கு பாருங்கள், புரியும்

புருனோ Bruno said...

//அட ஸ்கூலில் சேக்கவே காபிடேஷன் பீஸ் குடுக்க வேண்டி இருக்கே!

முது நிலை பட்டம் பெற ஆகும் செலவை விட இந்த காபிடேஷன் பீஸ் அதிகம் என நம்ப மறுக்கிறது, ஆனா நிதர்சனம் கன்னத்தில் அறைகிறது பரிசல்.//

சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு கல்வி கட்டணம் (ரசீதில் எழுதியிருப்பது) 76,000 (வருடத்திற்கு)

ரசீதை பார்த்து அரண்டு விட்டேன்

புருனோ Bruno said...

//இன்னைக்கு எந்த படிப்பு படித்தாலும் கடைசியில இவனுங்க போய் விளறது ITல தான?? அங்க ஒன்னும் புடுங்க முடியாத வெத்துவேட்டுங்க தான, சோத்து வேறு வழி இல்லாம ஆசிரியராக வருதுகள்??
எனக்கு தெரிஞ்சி MPhil, MSc, படிச்சவனெல்லாம் ITல இருக்கானுங்க.. அப்புறம் என்ன ____க்கு அத படிச்சீங்க??//

இந்த மறுமொழியின் சில கருத்துக்களுடன் வார்த்தைகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை

ஆனாலும்

பிரச்சனை என்னவென்பதை இந்த மறுமொழி மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது :(

நன்றி சார் ;)

ஆட்காட்டி said...

நான் இலங்கையில் ஓசியிலயே படிச்சு வந்தனான்.
எங்கப்பாவும் ஒரு ஆசிரியர்.அவரிடம் படித்ததுக்காகவே எனக்கு முன் தம் அடைக்கதவர் பலர். இப்பவும் அப்பாவிடம் படித்தவர்கள் எவ்வளவு மரியாதையாக் நடக்கிறார்கள் என்று பார்த்தே என்னால் அப்பாவை எதிர்த்துப் பேச முடியுறதுல.அவர் தனது கைச் செலவில் நிறையப் பேரைப் படிப்பித்து இருக்கிறார். ஒருவர் சொன்னார் , தான் பரீட்சைக்கு கள்ளம் அடிச்சு திரியேக்க அப்பா இழுத்துக் கொண்டு போய் எழுத வைத்தாராம். இப்ப அவர் ஒரு வங்கிக் கணக்காளர்.
அவரிடம் படிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. பெண்களை அம்மா என்று தான் அழைப்பார். நானும் பார்த்துப் பழகினேன். அப்புறம் வீட்டில் ஏதாவது குளறுபடி செய்தால் பள்ளியில் தான் அடி விழும். அவர் செய்த புண்ணியம் நாங்க நல்லா இருக்கிறம்.

விலெகா said...

ரொம்ப நல்லா இருக்கு.