Monday, August 4, 2008

தங்கமணியைப் பற்றி ஒரு பதிவு

முதன்முதலில் நான் திருப்பூருக்கு வேலைக்கு வந்த சமயம். 1992. திருப்பூர் பாளையக்காட்டில், எனக்கு தெரிந்த ஒருவர் மேலாளராகப் பணிபுரியும் ஒரு ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை.

இருபதுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் இருந்த ஒரு பெரிய காம்பவுண்டில், எங்கள் கம்பெனியும் இருந்தது. அத்தனை பேர் பணி புரியும் ஒரு இடத்தில் வேலை என்பது எனக்கு புதியதாக, சுவாரஸ்யமானதாக இருந்தது.

அந்த காம்பவுண்டுக்குள்ளேயே ஒரு சிறிய ஹோட்டலும் இருந்தது. தேனீர் இடைவேளை, மதிய உணவு இடைவேளையின் போது எல்லாரும் அங்கே கூடி விடுவார்கள். அதுவும் மணி அடித்துவிட்டால் போதும், அடுத்த நொடி எல்லாருமே அங்கே பறந்து விடுவார்கள்! `ஊனுடம்பு ஆலயம்’ என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்களடா! நேரத்துக்கு சாப்பிடறதுல என்ன ஒரு அக்கறை’ என்றெல்லாம் நினைத்திருந்தேன் முதல் ஒரு வாரத்துக்கு.

ஒரு வாரம் கழித்து நானும் அந்தக் கடைக்குப் போனபோதுதான் கவனித்தேன்.. கல்லாவில் அந்தக் கடை முதலாளியின் பெண்! பதின்வயதுகளில் இருந்தாள். அந்தச் சூழலுக்கே பொருத்தமில்லாத ஒரு அழகு. அத்தனை வருடங்களில் அப்படி ஒரு அழகான பெண்ணை நான் பார்த்ததே இல்லையென்றும்கூட சொல்லலாம், அப்படி ஒரு அழகாய் இருந்தாள். அவள் பெயர் – தங்கமணி!

இப்போது போலில்லாமல், அப்போது நான் `ரொம்ப நல்லவனா’க இருந்தேன். நிஜமாகவே. யாருடனும் அதிகம் பேசுவதோ, தேவையற்ற எந்தப் பழக்கங்களுமோ எனக்கு இருந்ததில்லை. எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்புதான். (விகடன், குமுதம், சுஜாதா, பாலகுமாரன்.. Etc…)

அந்தக் கடைக்கு போன கொஞ்ச நாட்களிலேயே தங்கமணி என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாள். அதுவரை என்னுடன் அதிகம் பேசியிராத வேறு கம்பெனியைச் சார்ந்தவர்களும் `அடடே... உம் பேரென்ன? ..............லதான் வேலை செய்யறியா?’ என்று என்னோடு நட்பு கொண்டாடினார்கள். எல்லோருக்கும் என்மேல் எத்தனை அன்பு என்று நான் புளகாங்கிதமடையுமுன், `இன்னைக்கு தங்கமணி என்ன சொன்னா’ என்று ஏதாவது அவளைப் பற்றிப் பேசி, தங்கள் முகமூடியைக் கிழித்துக் கொண்டார்கள்.

எனக்கு அப்போது ஆச்சரியமாக இருக்கும். (இப்போது யோசித்தால் இல்லவே இல்லை!) `இந்த ஒரு பொண்ணுக்காக எத்தனை பேர் நூல் வுடறாண்டா’ என்று! `ஒரு பெண்ணை காதலித்தால் அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வார்கள், கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லையென்றால், தற்கொலையோ அல்லது தாடியோடு அலையவோ செய்வார்கள்’ என்று அப்பாவியாக நம்பிக் கொண்டிருந்ததால், `அடடா.. இத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வதா?’ என்று ஒரு பரிதவிப்பு இருந்தது. அதுவுமில்லாமல், இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்!

இதைப் பற்றி அவளிடமே கேட்டுவிடலாமா என்று நினைத்து ஒரு நாள் போனேன். கடையில் அவளும், அவள் அப்பாவும் இருந்தார்கள். எப்போதும் பாவாடையும், சட்டையும் அணிந்திருக்கும் அவள், அன்றைக்குப் பார்த்து பாவாடை தாவணி அணிந்திருந்ததால் எப்போதையும்விட அழகாய்த் தெரிந்தாள்.

உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே எனக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டு அப்போது வந்த ஒரு திரைப்படத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள். நானும் பேசிக்கொண்டே அன்றைக்கு அவளை கவனிக்க ஆரம்பித்தேன். இத்தனை பேர் கிறுக்குப் பிடித்துத் திரிவதில் தப்பே இல்லை என்று தோன்றியது.

பேசிக் கொண்டே இருக்கும் போது,

“கிருஷ்ணா, உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்.. ஆனா எப்படிச் சொல்றதுன்னு தெரியல” என்றாள். (உடனே கற்பனைக் குதிரையை அவுத்து விட்டுடாதீங்க. `அப்படி’யெல்லாம் எதுவும் இல்லை!)

“சொல்லு” என்றேன்.

“என்னை இன்னைக்கு பொண்ணு பாக்க வர்றாங்க”

எனக்கு நிஜமாகவே சந்தோஷமாக இருந்தது. அவளது அப்பா அருகில் வந்து “சொல்லீட்டாளா தம்பி? இன்னைக்கு அவளை பொண்ணு பாக்க வர்றாங்க” என்றார்.

“சொல்லீச்சுங்க. ஆனா வயசு...”

“அடுத்த மாசம் 18 முடியுது தம்பி. நான் அடுத்த வருஷம் வெச்சுக்கலாம்ன்னுதான் நெனைச்சேன். ஆனா...” என்றவர் தங்கமணியிடம் திரும்பி, “பாப்பா.. அம்மா கூப்பிடுது பாரு”என்று உள்ளே அனுப்பி விட்டு “இங்க எவன் பார்வையும் சரியில்லை தம்பி. உன்கிட்ட மட்டும்தான் அவ இவ்ளோ ஃப்ரீயா பழகுறா. வேற எவனையுமெ அவளுக்கு கண்டாலே ஆகறதில்ல. நானும் அவ அம்மாவும் மட்டும்தான் கடையை நடத்தறோம். அவ அம்மா ரெடி பண்ண, நான் பரிமாற வேண்டியிருக்கு. வேற வழியில்லாம கூட்டமா இருக்கறப்ப இவளை கல்லாவுல உட்காரவைக்கும் போது எனக்கும், என் சம்சாரத்துக்கும் அவ்ளோ கஷ்டமாயிருக்கும் தம்பி. என்ன பண்ண.. பொழப்பு அப்பிடி. ஏதோ கடவுள் புண்ணியத்துல கொஞ்சம் சேர்த்து வெச்சிருக்கேன். இவளைக் கட்டிக் குடுத்துட்டு பரிமாற ஒரு பையனைச் சேர்த்துட்டு, கல்லாவை நான் பாத்துக்க வேண்டியதுதான்’ என்றார்.

அன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு எல்லாரிடமும் இதேதான் பேச்சாக இருந்தது! அவள் கடைக்கு வருபவர்கள் முகமே வாடிப்போயிருந்தது. அவள் என்னிடம் “ஏன் பெரும்பாலான ஆம்பிளைங்க இப்படி இருக்காங்க?” என்று ஒரு கேள்வி வேறு கேட்டு வைத்தாள்.

அதன்பிறகு, அவள் ஒரு சிறிய கம்பெனி வைத்திருந்தவரை திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள். அவளைப் பற்றிய பேச்சுகளும் குறைந்துவிட்டிருந்தது.

ஆறு மாதம் கழித்து ஒருநாள்.. அன்றைக்கு எனக்கு கொஞ்சம் வேலை அதிகமாக இருந்ததால், காலை, மதியம் இருவேளையும் நான் ஹோட்டல் பக்கம் போகவேயில்லை. மாலையில் என்னோடு பணிபுரியும் ஒருத்தர் ”கிருஷ்ணா, தங்கமணி வந்திருக்குடா. உன்னைக் கேட்டுச்சு” என்றபோதுதான் அவள் வந்திருக்கிறாள் என தெரிந்தது. போனேன். கடையில் கல்லாவில் உட்கார்ந்திருந்தாள்.

“ஐ! கிருஷ்ணா.. நீ இல்லைன்னு நெனைச்சேன்பா” என்றாள்.

புடவையில் தள்ளிய வயிறுடன் பெரிய பெண் போல தோற்றமளித்தாள். ஒருமையில் பேச முடியவில்லை.

“நல்லாயிருக்கீங்களா?” என்றேன்.

“என்ன.. வாங்க போங்கன்னுட்டு” என்று கடிந்து கொண்டாள். அவள் அம்மா, அப்பா முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. ”போன இடத்துல எல்லாரும் நல்லா வெச்சிருக்காங்க தம்பி” என்றார்கள். கொஞ்ச நேரம் அவளோடு பேசிக்கொண்டிருந்தபோது சொன்னாள்...

”கிருஷ்ணா, அன்னைக்கு உங்கிட்ட பேசும்போது ஆம்பிளைங்க மோசம்ங்கறா மாதிரி சொன்னேன் இல்லையா? அது தப்பு, நான் யார் யாரையெல்லாம் தப்பா நெனைச்சேனோ, எல்லாரும் இன்னைக்கு வந்து எப்படி என்கிட்ட நல்லா பேசினாங்க தெரியுமா. நான் நல்லாயிருக்கேன்னு கேட்டுட்டு அவங்களுக்கெல்லாம் எவ்ளோ சந்தோஷம்! எல்லாருமே ரொம்ப நல்லவங்கப்பா” என்றாள்.

நான் மையமாக தலையசைத்துச் சிரித்தேன்.

“ஏன்.. நான் நெனைக்கறது தப்பா” என்று கேட்டாள்.

“தப்பே இல்லை”

“எது?”

“அன்னைக்கு சொன்னதும், இன்னைக்கு சொல்றதும்!”

அப்போது அவளுக்குப் புரியவில்லை. இப்போது புரிந்துகொண்டிருப்பளென நினைக்கிறேன்!

----------------------------------


டிஸ்கி: நான் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் தங்கமணி என்ற பெயரை `ச்சின்னப்பையனி’டம் தான் முதலில் பார்த்தேன். பிறகு வேறொருவரது வலையிலும் அதைப் படித்தபோது, `இவரு மனைவி பேரும் தங்கமணிதான் போல’ என்று நினைத்துக் கொண்டேன். பிறகு அங்கங்கே படிக்கும் போது, `அடடா.. என் மனைவி பெயர் உமாகௌரியாச்சே, பொண்டாட்டி பேரு தங்கமணின்னு இருக்கறவங்க மட்டும்தான் ப்ளாக் ஆரம்பிக்கணும் போலிருக்கே’ என்று நினைத்தேன்! ஒருநாள் யாரோ எனக்கு ‘உங்க தங்கமணி ஒண்ணும் சொல்றதில்லையா?’ என்று பின்னூட்டம் போட்ட போதுதான் இது மனைவிகளுக்காக COMMON NAME என்பது தெரிந்தது. இருந்தாலுமே, எப்போதும் என் மனைவியைக் குறிப்பிடும்போது `உமா’ என்றே பல இடத்திலும் குறிப்பிடுகிறேன்! காரணம்தான் இந்தப் பதிவு. தங்கமணி என்றால் யாரையோ சொல்வது போல இருக்கிறது எனக்கு!

நான் தங்கமணி என்பதை பயன்படுத்தாததை பலரும் புரிந்து கொண்டு, உமாவைப்பற்றி குறிப்பிடும்போது `தங்கச்சி என்னாங்கறாங்க’ என்றோ `அண்ணிகிட்ட சொல்றேன் இருங்க’ என்றோ ‘உமாகிட்ட சொன்னாதான் சரிவரும்’ என்றோ உரிமையோடு சொல்லும் போது எனக்குள் நான் உணரும் மகிழ்ச்சி, எனக்கு மட்டுமே தெரியும்!

62 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரு விசயம் சொல்றதுக்கு எத்தனாம்பெரிய கதை சொல்லிட்டீங்க..அதுல வேற நீங்க ரொம்ப நல்லவருன்னு நீங்களே சர்டிபிகேட் வேறா... :))நடக்கட்டும் நடக்கட்டும்..

விஜய் ஆனந்த் said...

// அப்போது அவளுக்குப் புரியவில்லை. இப்போது புரிந்துகொண்டிருப்பளென நினைக்கிறேன்! //

// காரணம்தான் இந்தப் பதிவு. தங்கமணி என்றால் யாரையோ சொல்வது போல இருக்கிறது எனக்கு!
//

// உரிமையோடு சொல்லும் போது எனக்குள் நான் உணரும் மகிழ்ச்சி, எனக்கு மட்டுமே தெரியும்! //

இது மூணுல, moral of the story எதுங்க??? இல்ல மூணுமேவா???

வெட்டிப்பயல் said...

//அந்தக் கடைக்கு போன கொஞ்ச நாட்களிலேயே தங்கமணி என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாள். //

அண்ணிக்கிட்ட சொல்றேன் இருங்கோ :-)

(கதையை சரியா புரிஞ்சிக்கிட்டேனா? ;) )

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே நானும் முதல்ல ஒரு பதிவர் தங்கமணினு எழுதியிருந்தத படிச்சுட்டு, அதுதான் அவரோட மனைவி பெயர்னு உங்களை மாதிரியே அப்பாவியா நினைச்சுட்டேன். நானும் உங்கள மாதிரியே நல்லவன் பாருங்க, அதான் உங்கள மாதிரியே நினைச்சுருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சுத்தான் தங்கமணி, ரெங்கமணி எல்லாம் புரிஞ்சுச்சு.

நீங்க ஒருத்தர்தான் அண்ணியோட பெயரை எழுதிகிட்டு இருக்கீங்க. (எனக்கு தெரிஞ்ச அளவுல). ஆனாலும் தலைப்பை பார்த்தப்ப அது நினைவில இல்லாம அண்ணியப் பத்தி என்னமோ எழுதியிருக்கீங்கன்னு நினைச்சேன்.
சொல்லியிருந்த விதம் ரொம்ப நல்ல இருந்துச்சு.

துளசி கோபால் said...

//அடடா.. இத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வதா?’ என்று ஒரு பரிதவிப்பு இருந்தது. அதுவுமில்லாமல், இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்!//

ஹாஹாஹாஹா:-))) தங்கு & ரங்கு தெரியுமுன்னாலும் நம்ம ரங்குவை எப்பவும் 'கோபால்' என்ற பெயரோடு எழுதறேன்.

ஆனா ரங்கமணி ன்னு ஆம்புளைகளுக்குப் பெயர் இருக்கா?


பதிவு அருமை.

பரிசல்காரன் said...

@ முத்துலெட்சுமி-கயல்விழி

முதல் வருகைக்கு நன்றிங்க்கா!

//ஒரு விசயம் சொல்றதுக்கு எத்தனாம்பெரிய கதை சொல்லிட்டீங்க//

அவனவன் மேட்டருக்கு எவ்ளோ கஷ்டப்படறான் தெரியுமாக்கா?

//அதுல வேற நீங்க ரொம்ப நல்லவருன்னு நீங்களே சர்டிபிகேட் வேறா//

அது அப்போ!

@ விஜய் ஆனந்த்

////இது மூணுல, moral of the story எதுங்க??? இல்ல மூணுமேவா////

என் பதிவுல மெசேஜெல்லாம் எதிர்பார்த்துப் படிக்கறீங்களா? சரியாப் போச்சு!

@ வெட்டிப்பயல்

//கதையை சரியா புரிஞ்சிக்கிட்டேனா?//

கதையல்ல.. நிஜம்!

கரெக்டாத்தான் புரிஞ்சுகிட்டீங்க!

@ ஜோசப் பால்ராஜ்

என்ன பதிவர் சந்திப்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு போலிருக்கு!

//நானும் உங்கள மாதிரியே நல்லவன் பாருங்க//

அது பாஸ்ட் டென்ஸ் பால்ராஜ்! இப்பவும் நான் நல்லவன்னு நெனச்சீங்கன்னா, நீங்கதான் நல்லவரு!

@ துளசி கோபால்

நன்றிம்மா!

//நம்ம ரங்குவை எப்பவும் 'கோபால்' என்ற பெயரோடு எழுதறேன்.//

கவனிச்சிருக்கேன்!

//ரங்கமணி ன்னு ஆம்புளைகளுக்குப் பெயர் இருக்கா?//

இருக்கு!

//பதிவு அருமை.//

நன்றியோ நன்றி!

கோவி.கண்ணன் said...

:)

சரி சரி இந்தக் கதையை தங்கச்சியிடம் படிச்சு காண்பிச்சிங்களா ?

இயல்பாக பேசும் பெண்கள் தன்னை காதலிப்பதாக நினைப்பது எல்லா ஆண்களுக்கும் உள்ள மனநிலைதான்.
:) சில ஆண்கள் அப்படி நினைக்காவிட்டாலும் சுற்றி உள்ள மற்ற நண்பர்கள் அதைத் தான் சொல்லி உசுப்பேற்றிவிடுவார்கள்.

இதனாலேயே பெண்கள் இயல்பாக பேச பெண்கள் தயங்குகிறார்கள்.

anujanya said...

கே.கே.

எனக்குப் பிடித்த பதிவு. உங்கள் அனுபவங்களை நீங்கள் சொல்லும்போது அதற்குத் தனிச்சுவை வந்து விடுகிறது. தொடரட்டும்.

அனுஜன்யா

Thamira said...

முத்துலட்சுமி ://ஒரு விசயம் சொல்றதுக்கு எத்தனாம்பெரிய கதை சொல்லிட்டீங்க..அதுல வேற நீங்க ரொம்ப நல்லவருன்னு நீங்களே சர்டிபிகேட் வேறா... :))நடக்கட்டும் நடக்கட்டும்..//
ஒரு பெரிய ரிப்பீட்டேய்ய்..

Anonymous said...

இன்னாமே, தங்கமணி ஆரு, ரங்கமணி ஆருன்னு தெரியாத இம்மா நாளு எழுதிக்னுகீர.

லக்கிலுக் said...

அக்னி நட்சத்திரம் படத்தில் மனைவியை மிகவும் நேசிக்கும் கேரக்டரில் ஜனகராஜ் நடித்திருந்தார்.

“பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா!” டயலாக்கை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தப் படத்தில் அவரது மனைவியின் பெயர் தங்கமணி.

தங்கமணிக்கு விளக்கம் புரிஞ்சுதா? :-)

Anonymous said...

I think blogger dubukku started referring his wife as 'Thangamani' and it has become a phenomenon in Thamizh blogdom.

ஜோசப் பால்ராஜ் said...

//
கோவி.கண்ணன் said...
:)

இயல்பாக பேசும் பெண்கள் தன்னை காதலிப்பதாக நினைப்பது எல்லா ஆண்களுக்கும் உள்ள மனநிலைதான்.
:) சில ஆண்கள் அப்படி நினைக்காவிட்டாலும் சுற்றி உள்ள மற்ற நண்பர்கள் அதைத் தான் சொல்லி உசுப்பேற்றிவிடுவார்கள்.

இதனாலேயே பெண்கள் இயல்பாக பேச பெண்கள் தயங்குகிறார்கள்.//

அண்ணே இது ஆம்பளைங்களுக்கு மட்டும் இல்ல, பெண்களுக்கும் பொருந்தும் அதுனாலத்தான் நான் எந்த பொண்ணுகிட்டயும் இயல்பா பேசுறதே இல்ல. நம்புங்கண்ணே, நிஜமாத்தான் சொல்றேன்.

Anonymous said...

எனக்கும் பதிவுலகுக்கு வந்த புதிதில் "தங்கமணி,ரங்கமணி" யில் குழப்பம் இருந்தது.பல பதிவுகளைப் படித்த பின்தான் தெளிவு பிறந்தது!
அருமையாக எழுதுகிறீர்கள்.எனக்கு மிகவும் மகிழ்ச்சி.ஏனென்றால் உங்கள் ஊரில் நான் மூன்றாண்டுகள் பணி புரிந்திருக்கிறேன்-வங்கி மேலாளராக!

பரிசல்காரன் said...

@ கோவி.கண்ணன்

//சரி சரி இந்தக் கதையை தங்கச்சியிடம் படிச்சு காண்பிச்சிங்களா ?//

இன்னும் இல்லை! அவங்களாவே படிப்பாங்க-ன்னு நெனைக்கறேன்! (அப்பறம் இருக்குடி உனக்கு!)

நன்றி அனுஜன்யா!

@ தாமிரா

மொதல்ல வேற பின்னூட்டத்துலேர்ந்து காப்பி பண்ணி ரிப்பீட்டே போடறவங்களை நாட்டு கடத்தணும்!

@ வேலன்

கொஞ்ச நாளுலேயே தெரிஞ்சிகிட்டேன்!

@ லக்கிலுக்

வருகைக்கு நன்றி தல!

புரிஞ்சுது.. புரிஞ்சுது!

@ Reader without access to சுரதா

தகவலுக்கு நன்றி!

@ ஜோசப் பால்ராஜ்

//அண்ணே இது ஆம்பளைங்களுக்கு மட்டும் இல்ல, பெண்களுக்கும் பொருந்தும் அதுனாலத்தான் நான் எந்த பொண்ணுகிட்டயும் இயல்பா பேசுறதே இல்ல. நம்புங்கண்ணே, நிஜமாத்தான் சொல்றேன்.//

ஏய்.. எல்லாரும் நம்புங்கப்பா!

@ மதுரை சொக்கன்

முதல் வருகைக்கு நன்றி சார்!

எந்த வங்கி? (வங்கி அதிகாரிகளைப் பற்றி ஒரு பதிவு அரைகுறையாக எழுதி வைத்திருக்கிறேன்.. கூடிய சீக்கிரம் போடறேன்.. படிச்சுட்டு, திட்டக் கூடாது! )

முரளிகண்ணன் said...

naan kuuda ungkalukku ivvaloo thairiyamaannu padikka vantheen.

மங்களூர் சிவா said...

/
அடடா.. என் மனைவி பெயர் உமாகௌரியாச்சே, பொண்டாட்டி பேரு தங்கமணின்னு இருக்கறவங்க மட்டும்தான் ப்ளாக் ஆரம்பிக்கணும் போலிருக்கே’ என்று நினைத்தேன்!
/

அப்புறம் ஏன் நைனா ஆரம்பிச்ச!?!?
தப்பு பண்ணீட்டியே!!

:)))))

மங்களூர் சிவா said...

/
முத்துலெட்சுமி-கயல்விழி said...

அதுல வேற நீங்க ரொம்ப நல்லவருன்னு நீங்களே சர்டிபிகேட் வேறா... :))நடக்கட்டும் நடக்கட்டும்..
/

ரிப்ப்ப்ப்ப்பீட்டு

மங்களூர் சிவா said...

//அந்தக் கடைக்கு போன கொஞ்ச நாட்களிலேயே தங்கமணி என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாள். //

உமா அண்ணிக்கிட்ட சொல்றேன் இருங்கோ :-)

(கதையை சரியா புரிஞ்சிக்கிட்டேனா? ;) )

மங்களூர் சிவா said...

/
//அடடா.. இத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வதா?’ என்று ஒரு பரிதவிப்பு இருந்தது. அதுவுமில்லாமல், இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்!//
/

ROTFL

:))))))))))))

மங்களூர் சிவா said...

நல்லா சிரிக்க வெச்சிட்டப்பா!!
:))

enRenRum-anbudan.BALA said...

சுவாரசியமான பதிவுக்கு பாராட்டுக்கள், நன்றி :)

சந்தனமுல்லை said...

சுவாரசியமான பதிவு!! நானும் தங்கமணின்ன உடனே, உங்க மனைவின்னு நினைச்சேன்..:-))

பரிசல்காரன் said...

@ முரளி கண்ணன்

அதெப்படிங்க இருக்கும்?

@ மங்களூர் சிவா..

சிவா. ஒரு மேட்டர் தெரியுமா? ஒருத்தரோட பின்னூட்டத்தை எடுத்து ரிப்பீட்டே போட்டா, எடுத்தவங்க பதிவுக்கும் போய், நாலு பின்னூட்டம் போடணும்ன்னு ஆர்டிகிள் 143, செக்ஷன் 14ல சொல்லப்பட்டிருக்கு!

@ என்றென்றும் அன்புடன் பாலா..

நன்றி!

@ சந்தன முல்லை

இது என்னோட தங்கமணிதான். ஆனா, என்னோட மனைவி இல்ல!

மங்களூர் சிவா said...

/
பரிசல்காரன் said...

சிவா. ஒரு மேட்டர் தெரியுமா? ஒருத்தரோட பின்னூட்டத்தை எடுத்து ரிப்பீட்டே போட்டா, எடுத்தவங்க பதிவுக்கும் போய், நாலு பின்னூட்டம் போடணும்ன்னு ஆர்டிகிள் 143, செக்ஷன் 14ல சொல்லப்பட்டிருக்கு!
/

நாங்க ஃபாலோ பண்ற ஒரே ஆர்டிகிள் 420 தான்
:)))))))

பரிசல்காரன் said...

@ மங்களூர் சிவா..

அதுசரி! (உங்க மெய்ல் ஐ.டி என் மெயிலுக்கு அனுப்ப முடியுமா? ஒரு உதவி தேவைப் படுது. நண்பர் நீங்க அந்த விஷயத்தில் கெட்டிக்காரர்ன்னார்!)

Athisha said...

உமா அண்ணி கிட்ட பதிவ காட்டினீங்களா
பரிசல் அண்ணா..

பதிவு அருமை

Kanchana Radhakrishnan said...

அப்போது அவளுக்குப் புரியவில்லை. இப்போது புரிந்துகொண்டிருப்பளென நினைக்கிறேன்!

----------------------------------

purinhdhadhu

சின்னப் பையன் said...

//ஒரு விசயம் சொல்றதுக்கு எத்தனாம்பெரிய கதை சொல்லிட்டீங்க..அதுல வேற நீங்க ரொம்ப நல்லவருன்னு நீங்களே சர்டிபிகேட் வேறா... :))நடக்கட்டும் நடக்கட்டும்//

வேறே யாரும் நல்லவன்னு சொல்ல மாட்றாங்களே!!!!!!!!:-)))

Anonymous said...

ரொம்ப இன்ட்ரஸ்டிங்காதான் இருக்கு.....ஏன்னா கிட்ட தட்ட இதே போல ஒரு அனுபவம் எனக்கும் உண்டு....என்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணை சுமார் 3 வருடங்களுக்கு பிறகு துபாயில் சந்தித்தபோது.....ஆனால் அவர் சொன்ன செய்தி வேறு மாதிரி....பின்னொரு நாள் ஒரு பதிவிடுகிறேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

அசத்தலான நடை. இயல்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

@ அதிஷா

இன்னும் இல்லை! படிச்சா கிழிஞ்சுடும்ன்னு நினைக்கறேன்..

@ காஞ்சனா ராதாகிருஷ்ணன்

வேற யார்கிட்டயும் சொல்லீடாதீங்க!

@ ச்சின்னப்பையன்

//வேறே யாரும் நல்லவன்னு சொல்ல மாட்றாங்களே!!!//

அதானே!

@ மகேஷ்

ஆஹா. எனக்கு தனியா மெயில்ல சொல்லுங்களேன்!

@ விக்கி

//அசத்தலான நடை//

ஆமாமா... சொல்ல மறந்துட்டேன்!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஒரு விசயத்தை நல்லா சுத்திவளைச்சு சுவாரசியமா சொல்லிட்டீங்க...எனக்கும் தங்கமணின்னா என்ன அர்த்தமுன்னு புரிந்திருக்கவில்லை. இப்போ புரிச்சிடிச்சி.

மதுவதனன் மௌ.

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே நல்ல பதிவு...

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...
/
பரிசல்காரன் said...

சிவா. ஒரு மேட்டர் தெரியுமா? ஒருத்தரோட பின்னூட்டத்தை எடுத்து ரிப்பீட்டே போட்டா, எடுத்தவங்க பதிவுக்கும் போய், நாலு பின்னூட்டம் போடணும்ன்னு ஆர்டிகிள் 143, செக்ஷன் 14ல சொல்லப்பட்டிருக்கு!
/

நாங்க ஃபாலோ பண்ற ஒரே ஆர்டிகிள் 420 தான்
:)))))))
\\\

ரிப்பீட்டு...

தமிழன்-கறுப்பி... said...

மொத்தத்தில இந்த பதிவு மூலம் சொல்ல வந்தது என்னவென்று புரிகிறது...

பரிசல்காரன் said...

@ மது

நன்றி!

@ தமிழன்

நாமெல்லாம் ஒரே ரத்தம் தானே?
சேம் பிளட்!

பரிசல்காரன் said...

//தமிழன்... said...

மொத்தத்தில இந்த பதிவு மூலம் சொல்ல வந்தது என்னவென்று புரிகிறது.//

இன்னா?

கயல்விழி said...

ரொம்ப நாளுக்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல பதிவு. நன்றி பரிசல். :)

//அடடா.. இத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வதா?’ என்று ஒரு பரிதவிப்பு இருந்தது. அதுவுமில்லாமல், இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்//

அவ்வளவு அப்பாவியா நீங்க?

சரி, அப்படியே நம்பறோம் :) :)

பரிசல்காரன் said...

//அவ்வளவு அப்பாவியா நீங்க?//

கயல்... அப்படி நினைத்ததெல்லாம் கூட பரவாயில்லை. அவர்கள் எல்லாருமே அந்தப் பெண்ணை `காதலித்தார்கள்' என்று நினைத்தேன் அல்லவா.. அதுதான் கொடுமை!

கயல்விழி said...

'தங்கமணி' என்று காமனாக ஒரு பெயர் உபயோகிப்பதில் எனக்கும் சம்மதமில்லை.ஏதோ பத்தோடு பதினொன்றாக ஒருவரைப்பற்றி எழுதுவது போல இருக்கிறது.

நான் படித்தவரை மனைவியை சொந்த பெயரில் குறிப்பிடுவது நீங்களும், லதானந்த் சித்தரும் மட்டும் தான்(நிறைய பேர் கல்யாணம் ஆனவர்கள் என்றே ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்பது வேற இஷ்யூ). நீங்கள் கொடுக்கும் எக்ஸ்ட்ரா அடென்ஷன் உண்மையான அன்பின் வெளிப்பாடாகவே கருதுகிறேன். That was so sweet of you. அப்போதே பாராட்டவேண்டும் என்று நினைத்தேன், வாய்ப்பு கிடைப்பதற்குள் நீங்களே குறிப்பிட்டுவிட்டீர்கள்.

கயல்விழி said...

//அவர்கள் எல்லாருமே அந்தப் பெண்ணை `காதலித்தார்கள்' என்று நினைத்தேன் அல்லவா.. அதுதான் கொடுமை!//

ஆமாம், அது தான் கொடுமையின் ஹைலைட்.

நம்ம நாட்டில் நட்பு, அட்மிரேஷன், இனக்கவர்ச்சி, காமம் இப்படி எல்லாவற்றையும் குறிப்பது 'காதல்' என்ற ஒரே பொது சொல்!

கயல்விழி said...
This comment has been removed by the author.
Mahesh said...

அடடா..கடைசீல இது "Blog-ல் தங்கமணி - விளக்குக" -ங்கற பதிவு மாதிரி ஆகிப் போச்சே.....ஒரு நல்ல செய்தி அமுங்கி போச்சு :(

கிரி said...

நீண்ட பதிவா போட்டு இருக்கீங்க..உண்மை தமிழனுக்கு போட்டியா ..இருங்க அப்புறம் வந்து படிச்சுட்டு பின்னூட்டம் போடுறேன் :-)

குசும்பன் said...

அண்ணி நல்லா இருக்காங்களா? அண்ணி க்கிட்ட அடிவாங்கினீங்களா இன்றய கோட்டா? அண்ணியை கேட்டதாக சொல்லுங்க, அண்ணியை ஒழுங்கா பார்த்துக்குங்க!!!

(அப்பாடா ஒருவரை அண்ணன் ஆக்கியாச்சு என்ற மகிழ்ச்சியில் நானும்,)
///உரிமையோடு சொல்லும் போது எனக்குள் நான் உணரும் மகிழ்ச்சி, எனக்கு மட்டுமே தெரியும்!//

அப்படி கூப்பிட்ட மகிழ்ச்சியில் நீங்களும் இருங்கண்ணா!!!!

குசும்பன் said...

//`இந்த ஒரு பொண்ணுக்காக எத்தனை பேர் நூல் வுடறாண்டா’ என்று!//

நூல் என்றால் என்ன? நூலை ஊசிக்குள்தான் விட முடியும் அப்படி என்றால் அந்த ஊசியைதானே பெண்மே விடனும்!!!

டவுட் டக்ளஸ்

குசும்பன் said...

//, இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ //

இதுக்கு பதில் குசேலன் வடிவேலு வந்துசொல்லுவார்!!!

குசும்பன் said...

//உடனே கற்பனைக் குதிரையை அவுத்து விட்டுடாதீங்க.//

சாரி குதிரை இங்கு இல்லை ஒட்டகத்தை வேண்டும் என்றால் அவுத்துவிடுகிறேன்.

குசும்பன் said...

//..............லதான் வேலை செய்யறியா?’//

கம்பெனி பேரு ரொம்ப மோசம் போல இருக்கு!!!

பரிசல்காரன் said...

@ குசும்பன்

50 அடிச்சாச்சு..! GOOD!!

அப்படீன்னு இல்ல.. அதைச் சொன்னா, அங்க என்கூட வேலை செஞ்ச பழைய நண்பர்களுக்கு மலரும் நினைவுகள் வந்துடுமே.. பாவம் தங்கமணி.. அதான்!

Syam said...

இருங்க இருங்க உமா தங்கச்சிகிட்ட சொல்றேன் :-)

Syam said...

ஆம்பிளைங்க எல்லாம் நல்லவங்கன்னு எப்பவும் லேட்டாவே தான் தெரியுது :-)

கிரி said...

//தற்கொலையோ அல்லது தாடியோடு அலையவோ செய்வார்கள்’ என்று அப்பாவியாக நம்பிக் கொண்டிருந்ததால்,//

அய்யயோ இப்படி எல்லாம் நினைத்து இருந்தீர்களா அவ்வ்வ்வ்வ்

//அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்//

ரொம்ப தான் கவலை பட்டு இருக்கீங்க :-)

//அன்றைக்கு அவளை கவனிக்க ஆரம்பித்தேன். இத்தனை பேர் கிறுக்குப் பிடித்துத் திரிவதில் தப்பே இல்லை என்று தோன்றியது//

சொல்வதை பார்த்ததாம் ம்ஹீம் ஒண்ணும் சரி இல்லையே :-))

//அவள் கடைக்கு வருபவர்கள் முகமே வாடிப்போயிருந்தது. //

இருக்காதா பின்னே!

// தங்கமணி என்றால் யாரையோ சொல்வது போல இருக்கிறது எனக்கு//

வழிமொழிகிறேன்

//நான் உணரும் மகிழ்ச்சி, எனக்கு மட்டுமே தெரியும்! //

ரிப்பீட்டேய்ய்ய்ய்

தமிழன்-கறுப்பி... said...

தங்கமணியென்று ஒரு பதிவர் இருந்தார் அது தெரியுமா உங்களுக்கு...

பரிசல்காரன் said...

@ syam

மாட்டிவிட்டுதாதீங்க. இந்தப் பதிவு அவங்க கண்ணுல படக்கூடாதுன்னு எவ்ளோ சமாளிச்சுட்டிருக்கேன் தெரியுமா? (எல்லாமே என்கிட்ட சொல்லீருக்கீங்க... இதப் பத்தி சொல்லலியே-ம்பாங்க!)

@ கிரி

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா பின்னறீங்க!

@ தமிழன்

அப்படியா?

Anonymous said...

அருமையான பதிவு. நல்ல நடை, உள்ளார்ந்த கண்ணோட்டம்.... சுந்தர்.

ராமலக்ஷ்மி said...

அருமையான கதை. மனிதர்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அப்போதுதான் தங்கமணிக்கு வந்திருக்கிறது. என்னைக் கேட்டால் ஒவ்வொருவருக்கும் வாழ்நாளின் ஒவ்வொரு நாளிலும் முதிர்ச்சி(வயதைச் சொல்லல..மெச்சூரிட்டி) அன்பவங்களால் கூடிக் கொண்டே செல்லும்...கூடவே புரிதல்களும். சரிதானே பரிசல்காரரே..

உங்க டிஸ்கியோடு நானும் உடன் படுகிறேன். நம்மை நாம் தங்க ரங்க சொல்லிக்க எனக்கும் உடன் பாடில்லை:)!

உங்களைப் போலவே இந்த தங்க ரங்க புரியாம விழிச்சப்போ பலரும் வந்து விளக்கினார்கள். இது அக்னிநட்சத்திரம் படத்தின் காமெடி ட்ராக்கில் இருந்து சுட்டதாம்:))! உங்காளுக்குத் தெரியுமோ தெரியாதோன்னு நான் விளக்கியிருக்கிறேன்:)!

ராமலக்ஷ்மி said...

அருமையான கதை. மனிதர்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அப்போதுதான் தங்கமணிக்கு வந்திருக்கிறது. என்னைக் கேட்டால் ஒவ்வொருவருக்கும் வாழ்நாளின் ஒவ்வொரு நாளிலும் மனமுதிர்ச்சி அனுபவங்களால் கூடிக் கொண்டே செல்லும்...கூடவே புரிதல்களும். சரிதானே பரிசல்காரரே..

உங்க டிஸ்கியோடு நானும் உடன் படுகிறேன். நம்மை நாம் தங்க ரங்க சொல்லிக்க எனக்கும் உடன் பாடில்லை:)!உங்களைப் போலவே இந்த தங்க ரங்க புரியாம விழிச்சப்போ பலரும் வந்து 'விளக்கி'னார்கள். இது அக்னிநட்சத்திரம் படத்தின் காமெடி ட்ராக்கில் இருந்து சுட்டதாம்:))! உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோன்னு நானும் 'விளக்கி'யிருக்கிறேன்:)!

ராமலக்ஷ்மி said...

//
@ ராமலட்சுமி

க்கா.. ரொம்ப நாளாச்சு?//

இது அவியல் பதிவில் நீங்கள் கேட்டது. ஆமா ஒருவாரம் வலை பக்கம் வரலை.

ஆனா நான் இங்க கமென்ட் போட்டு ஒரு நாளாச்சு:)!

Anonymous said...

Anni intha kathaiya padichangala?

ராஜ நடராஜன் said...

நீங்க இன்னும் தமிழ்மணத்தை விட்டுப் போகவில்லையா "பரிசல்காரன்" ? நீங்களெல்லாம் போயிட்டா எங்களுக்கும் நகைச்சுவைக்கு ஆள் இல்லாமல்தான் போய்விடும்.எப்படியோ சித்தருக்கு பதவி உயர்வு கொடுத்து அவரைப் பதிவு போடவிடாம செஞ்சிட்டீங்க:)

தமிழ்மணத்துக்கு வந்த கொஞ்ச நாளிலேயே பின்னுட்டங்களில் தங்ஸ் வார்த்தை கொஞ்சி விளையாடுனதால ஸ்விட்சப் போட்டவுடன் லைட் எரிஞ்சது:)