Friday, January 6, 2012

நல்ல விஷயத்தை நாலு பேர்கிட்ட சொன்னா தப்பில்ல...

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்



புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம்தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட அடிப்படை புற்றுநோய் பரிசோதனையை செய்வது நல்லது. இந்த விழிப்புணர்வுதான் கரு.



கதை:சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி.
முதல் பரிசு ரூபாய் 5.000
இரண்டாம் பரிசு ரூபாய் 3,000
மூன்றாம் பரிசு ரூபாய் 2,000

பரிசுத்தொகை தவிர சிறந்த முதல் பரிசு பெறும் கதை நேசம் சார்பில் குறும்படமாக எடுக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு கதையை அமைக்கவும்.

1.கதை எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும், மிக இயல்பாக இருக்க வேண்டும்.


2. மிகச்சிறந்த கதை குறும்படமாக எடுக்கப்படும், அந்த கதைக்கு உரியவருடைய திறமையை பொறுத்து அந்த படத்தில் அவர் விரும்பினால் பங்கு பெறலாம்.

3. தேர்ந்தெடுக்கப்படும் முதல் கதையின் குறும்பட உரிமை நேசம் அமைப்பை சேரும்.

4.நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.


கட்டுரை : சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி

முதல் பரிசு ரூபாய் 5000
இரண்டாம் பரிசு ரூபாய் 3000
மூன்றாம் பரிசு ரூபாய் 2000

பரிசுத்தொகை தவிர மிகச்சிறந்த கட்டுரை நேசம் சார்பில் ஆவணப்படமாக தயாரிக்கப்படும்.

விதிமுறைகள்:

கட்டுரை, மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில், அதனுடன் தொடர்புடைய சுட்டிகள் அல்லது புத்தங்களின் விவரங்களுடன் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முதல் கட்டுரையின் ஆவணப்பட உரிமை நேசம் அமைப்பை சார்ந்தது.

நேசம் அமைப்பின் முடிவே இறுதியானது.

சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் போட்டி

முதல் பரிசு ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு ரூபாய் 7,500
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000

விதிமுறைகள்

குறும்படம் 7 முதல் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும்.

பரிசு பெறும் குறும்படம் தேவைப்படும் பொழுது எங்கும் எப்பொழுது வேண்டுமானாலும் திரையிடும் முழு உரிமை நேசம் அமைப்பை சாரும்.

நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.



பொதுவானவை

1.கதைகள், கட்டுரைகள், குறும்படம் குறித்த உங்கள் படைப்புகளை சரியான தலைப்புகளின் கீழ் அனுப்பவும். யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மாணவர்கள் எனின் அவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.


2. இந்த போட்டிகள் அனைத்தும் நேசம்அமைப்பு யுடான்ஸ் (http://udanz.com/ ) இணையதளத்துடன் சேர்ந்து நடத்துகிறது.

3.உங்கள் படைப்புகளை ஜனவரி 31க்குள் அனுப்பி வைக்கவும்.


4.போட்டி முடிவுகள் பிஃப்ரவரி15 அல்லது 20 அன்று வெளியிடப்படும்.


5.அனைத்து படைப்புகளையும் nesamgroup@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.


6.அத்துடன் யுடான்ஸ் இணையதளத்தில் நேசம் போட்டிகள் என்னும் வகையின் கீழ் உங்கள் படைப்புகளை இணைக்க வேண்டும்.


7.பதிவர்களின் வலைத்தளங்களின் யுடான்ஸ் ஓட்டு பட்டனை இணைக்க வேண்டும்.


8. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் அனுப்பவேண்டும்

9. உங்கள் படைப்புகளை உங்கள் தளங்களில் வெளியிடும் போது அதில் நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை என்று குறிப்பிட வேண்டும்.

10. குறும்படங்களை தளங்களில் வெளியிடக்கூடாது.


சிறந்த முதல் பத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் பள்ளி, கல்வி கூடங்களில், மருத்துவமனைமனைகள் போன்றவற்றிலும் மற்ற பொது நிகழ்வுகளிலும் முடிந்தவரை திரையிடப்படும்

இது ஒரு நூறு சதவித விழிப்புணர்வு நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட அமைப்பு, இதில் தன்னார்வ செயல்உறுப்பினர்கள் சேரலாம். வெறும் உறுப்பினராக இல்லாமல் நிஜமாகவே ஏதேனும் செய்ய விரும்புவர்கள் வரவேற்கபப்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகளில் பங்கேற்க விரும்புவர்கள் nesamgroup@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு சிறிய முயற்சியின் பின் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நேசம் கலந்த நன்றிகள்.

--

குறிப்பு: எழுத்து என்னுடையதல்ல. நண்பர் மெயிலில் பகிர்ந்ததை கட் பேஸ்ட் செய்திருக்கிறேன். நன்றி :)


Friday, December 30, 2011

காலையில் வாங்கிய ப்ரகாசமான பல்ப்

காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மகள் வந்தாள்.

“டாடா ஸ்கை ஷோ கேஸ்ல ரா-ஒன் போட்டிருக்காங்க. ஆர்டர் பண்ணீட்டு போங்க. நாங்க பார்க்கணும்”

தெரியாதவர்களுக்கு: டாடா ஸ்கை டிஷ் இணைப்பில், ஷோ கேஸ் என்று புதிய படங்கள் காண்பிப்பார்கள். ஒரு படம் 50ரூ, 75 ரூ என்று நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். நாம் பதிவு செய்திருக்கும் அலைபேசியிலிருந்து, அந்த ஷோ கேஸ் திரையில் காண்பிக்கப்படும் குறியீட்டு எண்ணை, அவர்களுக்கு எஸ்ஸெம்மெஸ் அனுப்பினால், அது சேர்ந்த அடுத்த நொடி, நம் தொலைக்காட்சித் திரையில் அந்தப் படம் ஒளிபரப்பாகும். ஒரு நாளைக்கும் மட்டும் தொடர்ந்து ஒளிபரப்பாகும். நமக்கு வசதிப்பட்ட நேரம் பார்த்துக் கொள்ளலாம். என் இணைப்பிற்கு வருடத்திற்கு 12 படங்கள் இலவசம். பெரும்பாலும் இந்திப் படங்கள்தான்.

நான் டாடா ஸ்கையில் அந்த சேனலை ஆன் செய்து, அதில் குறிப்பிட்டிருந்த குறியீட்டு எண்ணை, டாடா ஸ்கைக்கு எஸ்ஸெம்மெஸினேன். அப்படி அனுப்பும்போதே, கொஞ்சம் பெருமையாக “பாரு.. இந்த மெசேஜ் டெலிவரி ஆச்சுங்கறதுக்கு அடையாளமா என் மொபைல்ல டொய்ங் சவுண்ட் வர்றதுக்கு முந்தி, சேனல்ல படம் வரும்பாரு” என்றேன்.

ம்ஹும். என்னமோ வரவில்லை.

வழக்கமாக அடுத்த நொடியே வரும்.. இதென்ன இப்படின்னு ஐந்து, பத்து நிமிடங்களுக்கு காத்திருந்தேன். அலுவலகத்திற்கு வேறு நேரமாகிக் கொண்டிருந்தது.

என் மகள் என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள். ‘என்னமோ சொன்னீங்க?’ என்றது அவள் கண்.

அவ்வளவுதான். நாமதான் ஏற்கனவே இந்த கஸ்டமர் கேர் ஆளுகன்னாலே ஆய் ஊய்னு திட்டுவோமே… இதென்ன இப்படிப் பண்றாங்க’ன்னு எனக்கு கோவம் வேற வந்துச்சு.

அடிச்சேன் டாடா ஸ்கை கஸ்டமர் கேர்-க்கு.

“ஹலோ.. குட் மார்னிங்” – அந்தப்புற அழகி குரல்.

“வாட் குட்மார்னிங்? ஐ’ம் டோட்டலி டிஸ் அப்பாய்ண்ட் வித் யுவர் சர்வீஸ்” – நான். கோவமா இருக்கேனாம்.

“ஸாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ் சார்” அப்படி ஒரு குழைவு குரல்ல. பாவமாத்தான் இருந்துச்சு. என்னன்னே சொல்லாம இப்படி எகிறுனா என்னதான் பண்ணுவாங்க பாவம்.. அதுக்காக சும்மா விடமுடியுமா? கஸ்டமர்!!!

சொன்னேன்: “ஷோ கேஸ்ல ஒரு படம் ஆர்டர் பண்ணினேன். வழக்கமா எஸ்ஸெம்மெஸ் அனுப்ச்ச அடுத்த நொடி சேனல்ல படம் வந்துடும். இப்ப ஆர்டர் பண்ணி கால் மணி நேரமாச்சு. இதுவரைக்கும் வர்ல”

மறுபடியும் அந்தப் பொண்ணு மன்னிக்கச் சொன்னாங்க. சில விபரங்கள் வேணும்னாங்க. “யெஸ் டெல் மீ”ன்னேன் கடுமையான குரல்ல. கோவமா இருக்கோம்ல!

“ஆம் ஐ ஸ்பீக்கிங் டு கிருஷ்ணகுமார்?”

“ஆமா”

“யுவர் டாடா ஸ்கை ஐடி ஈஸ் 104142……….?”

“ஆமா”

“யு ஆர் காலிங் ஃப்ரம் யுவர் ரெஜிஸ்டர்ட் மொபைல் நம்பர். ஆம் ஐ ரைட்?”
‘ஆமாம்மா ஆமாம்’னு கத்தினேன். கீழ வந்து பார்த்த ஹவுஸ் ஓவர் “எப்ப வீட்டைக் காலி பண்ணப் போறீங்க’ன்னு கண்லயே கேட்டுட்டுப் போனார்.

அந்தப் பொண்ணு, இந்த விபரமெல்லாம் சொன்னதுக்கு நன்றி சொன்னாங்க. ‘ம்ம்.. சரி சரி.. எனக்கு என்ன நீதி வழங்கப் போறீங்க?’ங்கற பாணில ‘இட்ஸ் ஓகே..”ன்னு முறுக்கீட்டு “மொதல்ல சாதாரண டாடா ஸ்கை வெச்சிருந்தப்ப உடனே படம் வந்துடும். இப்ப டாடா ஸ்கை ப்ளஸ். ஹும்! ஆக்சுவலி இது டாடா ஸ்கை மைனஸ்’ன்னுதான் சொல்லணும்’ன்னேன்.

கலாய்ச்சுட்டேனாம். சொன்னது அந்தப் பொண்ணுக்கு சுருக்னிருக்கும். மறுபடியும் இடைஞ்சலுக்கு வருத்தப்பட்டாங்க. .

சிஸ்டம்ல டீடெய்ல்ஸ் பார்த்திட்டிருந்தாங்கபோல. பார்த்துட்டு கேட்டுச்சு.

“நீங்க ரா-ஒன் படம் ஆர்டர் பண்ணீருக்கீங்க. கரெக்ட்?”

“ஆமாம்”

“உங்க ரெஜிஸ்டர்ட் மொபைல்லேர்ந்து எஸ்ஸெம்மெஸ் அனுப்ச்சிருக்கீங்க.. கரெக்ட்?”

‘உஸ்ஸ்…. முடியலடா’ன்னு நினைச்சுட்டே ஆமாம்னேன்.

“டிவி ஆன்ல இருக்கா சார்?”

“ஆமாம். ஆன்லதான் இருக்கு..”

“ஷோ டைம் என்ன போட்டிருக்கு சார் அந்த ஷோ கேஸ் சேனல்ல”

“எத்தனை கேள்விதான் கேட்பீங்க? இண்டர்வ்யூ பண்றீங்களா? இட்ஸ் டூ மச்’ன்னு கடுமையா சொன்னேன். நாம யாரு! கஸ்டமர். இப்படித்தான் நம்ம உரிமைக்காக போராடணும்.

“சாரி சார். கேன் யூ டெல் மி த ஷோ டைம் விச் ஈஸ் ஷோயிங் இன் யுவர் சேனல்?”ன்னாங்க.

மறுபடி கோவமா சொன்னேன்” “9 மணின்னு போட்டிருக்கு”

“நாவ் வாட் ஈஸ் த டைம்சார்?”

“எட்டேகாலாச்சு. அதுக்கென்ன?”ன்னேன்.

“தட்ஸிட் சார். அவர் ஷோ ஸ்டார்ட்ஸ் அட் 9 ஏ.எம் சார். இன்னும் முக்கால் மணி நேரத்துல படம் வரும் சார்”னு சொல்லீட்டே ‘எனிதிங் கேன் ஐ ஹெல்ப் யூ சார்”ன்னுச்சு.




எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. வழிஞ்சு ஸாரி சொல்லீட்டு ஃபோனை கட் பண்ணீட்டேன்.

அங்க, அந்த கஸ்டமர் கேர் பொண்ணு பக்கத்து சீட்ல இருக்கற ஃப்ரெண்டுகிட்ட சொல்லீட்டிருப்பாங்க:

‘அவ்ளோ தெளிவா சேனல்ல ஷோ ஸ்டார்ட் டைம் 9 மணின்னு போட்டிருக்கோம். அப்றமும் கூப்ட்டு கேட்கறான் கேனைப்பய. இந்த லட்சணத்துல ப்ளஸ், மைனஸுன்னு கலாய்க்க வேற செஞ்சான். இவனுகளையெல்லாம்….”

புறப்படறப்ப பைக் ரிவர்வ்யூ மிர்ரர்ல என்னைப் பார்த்து நானே கேட்டுகிட்டேன்:

‘இந்த அவமானம் உனக்குத் தேவையா?’


.


Wednesday, December 28, 2011

அவியல் 28.12.2011

லகம் அழியாமல் எப்படி சுழல்கிறது? நாட்டில் - பெரும்பாலும் -குறித்த நேரத்தில் மழை பொழிந்து நாடும் நாட்டு மக்களும் எப்படி சுபிட்சமாக இருக்கிறார்கள்? என்னதான் ஒருபுறம் இயற்கை சீற்றங்களைக் காட்டிக் கொண்டிருந்தாலும், பேராபத்துகளேதுமின்றி அதது அதனதன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டுதானே இருக்கிறது.. இதெல்லாம் எப்படி என்பதற்கு நேற்றெனக்கு விடை கிடைத்தது.

அது என்ன என்பதைக் கடைசி பத்தி படித்து அறிந்து, கொல்லவும். (எ.பி.அல்ல)

-----------------

மூணு, நண்பன், ராஜபாட்டை, கழுகுன்னு போனவாரம் பூரா இசை வேட்டைதான். ஆங்.. வேட்டை வேற.. அத விட்டுட்டேன் பாருங்க..இந்த அஞ்சுல மூணு யுவன்.

என்னது…. மூணு அனிருத்-தா? ஹலோ.. அஞ்சு படங்கள்ல மூணு படம் யுவன் இசைன்னு சொல்றேன்.

அதுல ராஜபாட்டை ‘பொடிப்பையன் போலவே’, ‘பனியே பனிப்பூவே’-வை விடவும் ‘வில்லாதி வில்லன்கள்’ செம ரெட்ரோ சாங். அதோட ட்ரம்ஸுக்காக அத கேட்டுட்டே இருந்தேன்.

வேட்டைல ‘வெச்சுக்கவா உன்னை மட்டும்’ ம்யூசிக்ல தொடங்கி, ’ஆறு’ படத்துல வர்ற ‘சோடா பாட்டில் கைல’ பாட்டோட மெட்டுல வர்ற ‘பப்பபப்பா பப்பபா” நல்லாருக்கு. இன்னொரு சுவாரஸ்யம்: இந்தப் படத்துல வர்ற பாட்டோட ஆரம்பமெல்லாமே கவனிச்சீங்களா? தம் தம் தம் / டம்ம டம்ம டம்மா / பப்ப பப்ப பப்ப்பா / தையத் தக்கா தக்கா - ன்னு ஒரே மாதிரி இல்ல?

யுவன் ம்யூசிக்ல வந்த இந்த மூணு படத்துலயும் கழுகுதான் பெஸ்ட். எல்லாமே நல்லா இருக்கு. (அல்லது நல்லா இருக்கற மாதிரி இருக்கு) யுவன் குரல்ல ‘பாதகத்தி கண்ணுபட்டு’ டிபிகல் யுவன் சாங்! ‘ஆத்தாடி மனசுதான்’, இளையராஜா பாடல் மாதிரியான மெலடி. (கார்த்திக் ராஜா குரல்)

3. அனிருத் கொலவெறியோட காணாமப் போற ஆளில்லைன்னு நினைக்கறேன். எல்லா பாட்டுமே நல்லாத்தான் இருக்கு. கம் ஆன் கேர்ள்ஸ், இதழின் ஓரம் எல்லாமே. கொலவெறி நான் கேட்கவே இல்லை. சலிச்சுட்டுது. மோஹித் சௌகான் & அனிருத் சேர்ந்து (யுவன் ஸ்டைல்ல) பாடின போ நீ போ – வாவ் ரகம். நிச்சயமா கேளுங்க.

நண்பன்: ஹாரிஸ் –சங்கர் கூட்டணி எப்பவும் போலவே ஏமாத்தல. அதுவும் அஸ்க லஸ்கா – அஸ்கா! விஜய் ப்ரகாஷ் - சின்மயி!

சின்மயியை விட, விஜய் ப்ரகாஷ் பாடறப்ப அந்த ‘சிந்தா சிந்தா / ப்யாரோ ப்யாரோ-வுல ஒரு துள்ளல் தெறிக்குது பாருங்க.. சூப்பர்!

இந்தப் பாட்டோட வரிகள்... இந்த மாதிரி எழுதறப்பதான் ஒரு கவிஞர் தன்னோட இடத்தை கெட்டியா பிடிச்சுக்கறார். வரிகளை கவனிச்சு, ரசிக்கற என்னை மாதிரி ஆனவங்களுக்கு மதன் கார்க்கியோட வரவு – வரம். சும்மா இல்லாம, பல மொழிகள்ல காதல்ங்கற வார்த்தையை கோர்த்து எழுதிருக்கற இந்தப் பாட்டுல

“முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே..
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்” - அபார கற்பனை! (இப்படிச் சொல்லிக் குடுத்திருந்தா ஜ்யாமெண்ட்ரில ஆஹா ஓஹோன்னு மார்க் வாங்கீருப்பேனே..)

அதே பாட்ல ரெண்டாவது சரணத்துல வர்ற

‘புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி - உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே’ -

வாவ்!

பதினாறு பதினாறா பல அடிகள் தாண்டப்போகுது இந்தக் குட்டி!

----

போன வாரம் ஒரு பிரபலத்தை அழைத்தேன்.

“பிஸிங்களா.. பேசலாமா? ஜி.நாகராஜன் படிச்சிட்டிருக்கேன். உங்ககிட்ட பேசணும்னு தோணிச்சு”

“இல்ல.. சொல்லு பரிசல். விகடனுக்காக நட்சத்திர எழுத்தாளர் சிறுகதை கேட்டிருக்காங்க. எழுதிட்டிருந்தேன்’ என்றார்.

“ஓ! சூப்பர்ங்க” என்றுவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது இப்படிக் கேட்டார்: “சரி பரிசல்.. நீ எப்ப நட்சத்திர எழுத்தாளரா மாறப்போற”

அன்னா ஹசாரே, ஆஸ்திரேலியா டெஸ்ட், இளையராஜா இசைவிழா என்று அவர் கவனத்தை திசை திருப்பிப் பேசிவிட்டு வைத்துவிட்டேன்.

கிறிஸ்துமஸ் டைம். ஒரு நல்ல நட்சத்திரமாக வாங்கி வீட்டு முன் மாட்டி நட்சத்திர எழுத்தாளராகியே தீருவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

--

விஜய் டிவி- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- நிகழ்ச்சிக்காக சூர்யா கேட்கும் கேள்விகள் அடடா.. அபாரம். இதுபற்றி ட்விட்டரில் போட்டுக் கிழிக்கப்பட்டது. இப்படிக் கூட கேட்பார்கள் என்று. அவற்றில் நானெழுதிய சில கேள்விகள்:

சமீபத்தில் ஒன்-டேவில் இரட்டை சதம் அடித்த வீரர்
1) விஸ்வநாதன் ஆன்ந்த் 2) மைக் டைசன் 3) சேவக் 4) பிடிஉஷா

ஜனகனமண என்பது நம்
1) தேசியப் பறவை 2) தேசியக்கொடி 3) தேசிய விலங்கு 4) தேசிய கீதம்

சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட உலக அழகி
1) கொல்லங்குடி கருப்பாயி 2) ஐஸ்வர்யா ராய் 3) சௌகார் ஜானகி 4) பரவை முனியம்மா


சூப்பர் ஸ்டார் ரஜினியின் இயற்பெயர்
1) சாந்தி 2) பூந்தி 3) காந்தி 4) சிவாஜிராவ் கெய்க்வாட்

இரட்டை ஆஸ்கார் வாங்கிய தமிழன் / இசையமைப்பாளர் யார்?
1) கே.ஆர்.விஜயா 2) ஏ.ஆர்.ரஹ்மான் 3)எம்.ஆர்.ராதா 4) ஜி.ஆர்.தங்கமாளிகை

தமிழக ஆட்சி மாற்றத்தில் தன்னை அணில் என்று விளித்துக் கொண்ட நடிகர்
1) என்னத்தே கண்ணையா 2) டாம்க்ரூஸ் 3) ஜாக்கிஜான் 4) விஜய்

ஜெயலலிதாவால் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தோழி பெயர்
1) சசி 2) பசி 3) குஷி 4) மஷி

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த படம்
1) பாட்ஷா 2) முத்து 3) படையப்பா 4) தசாவதாரம்

--------------------


நேற்று மதியம் ஒருவர் அழைத்தார்.

“பரிசல்.. ஏன் இப்பல்லாம் எழுதறதே இல்லை?”

வழக்கம் போல நான் அசடு வழிந்ததை, அந்த அழைப்பு வீடியோ காலிங் அல்லாததால் அவரால் பார்க்க முடியவில்லை.

“இது ரொம்ப தப்பு பரிசல். நீங்கள்லாம் எழுதாம இருக்கறது ரொம்பவே தப்பு. ஒரு கட்டத்துக்கு மேல நிறுத்திடறீங்க. நானும் உங்க பழைய போஸ்ட் ஒவ்வொண்ணா எத்தனை நாள்தான் படிக்கறது?” என்று கேட்டார். பாவமாகத்தான் இருந்தது. என்னாலேயே அதில் பலவற்றைப் படிக்க முடிவதில்லை.

“இல்லைங்க.. வேலை..” என்று ஆரம்பிக்கப் போனவனை ஒரு அதட்டலாக இடைமறித்தார். “அதெல்லாம் சோம்பேறிக சொல்றது பரிசல்” (அப்பறம் நான் யாரு? ரொம்பச் சுறுசுறுப்பானவனா? அதுசரி!) “எஸ்.ரா, ஜெ.மோ இவங்களையெல்லாம் எடுத்துக்கோங்க. அவங்களுக்கு இல்லாத வேலைப்பளுவா உங்களுக்கு இருந்துடப் போகுது? அவங்கள்லாம் எவ்ளோ படிக்கறாங்க.. எவ்ளோ உலகப்படங்கள் பார்க்கறாங்க.. அவங்க எழுதறதில்லையா?”

“அவங்க கூட என்னை ஒப்பிடறதா..” என்று கேட்கவும் மறுபடி பொங்கினார்.

“அப்படி ஒரு நெனைப்பு வேறயா? அவ்ளோ பிஸி ஷெட்யூல்ஸ் இருக்கறவங்களே எழுதறப்ப உங்களுக்கென்ன கேடுன்னு சொல்ல வந்தேன்” என்றவர் “கண்டிப்பா வாரம் ரெண்டு மூணாவது எழுதுங்க பரிசல்.. ஆமா சொல்லீட்டேன்” என்று என் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தார்.

நான் எழுதணும்னு ஒரு ஜீவன் இப்படிக் கிடந்து துடிக்கும்போது, உலகம் சுழலாம என்ன பண்ணும்!


---