Wednesday, April 13, 2011

உங்கள் பொன்னான வாக்கை...


னக்கு அரசியல் மேல் அப்படி ஒன்றும் பெரிய தொடர்போ, ஆர்வமோ இல்லவே இல்லை. சீசனுக்காக இன்றைக்கு அரசியல் அலசல்.

இன்றைக்கு வாக்குப்பதிவு நாள். இந்த தேர்தல் பற்றிக் கொஞ்சம் அலசுவோம்.

தி.மு.க. அரசின் மீது அதிகமான எதிர்ப்பலைதான் இருந்தது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில். ஆனால் சரியான காய் நகர்த்தல்கள், ட்ராமாக்கள், செண்டிமெண்ட் ஷோக்கள், விளம்பரங்கள் என்று கொஞ்சம் எதிர்ப்பை ஆளுங்கட்சியினர் சரிகட்டிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

வடிவேலுதான் இந்த முறை தி.மு.கவின் ஸ்டார் பேச்சாளர். எப்பேர்ப்பட்ட தலைவர்களை எல்லாம் முன்னிறுத்தி பேசி ஓட்டுக் கேட்ட கட்சி, இன்றைக்கு வடிவேலுவை முன்னிறுத்தித்தான் ஓட்டுக் கேட்டாக வேண்டிய சூழலுக்கு வந்தது கொடுமைதான்.

வடிவேலு மீது எனக்கெந்த வருத்தமும் இல்லை. நான் சொல்லி நீங்கள் கேட்கவேண்டிய அவசியமெப்படி இல்லையோ அதேதான் வடிவேலுவுக்கும். விஜயகாந்தையும், பிரேமலதாவையும் குறிப்பிட்டு ‘உனக்கு அரசியலைப்பற்றி என்ன தெரியும்’ என்று ஒருமையில் கேட்குமளவு வடிவேலு ஒன்றும் அரசியல் ஆசானில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். வடிவேலுவும் வாங்கிய காசுக்கு மேலேயே கூவினார். கடைசி நாளில் கண்ணீர் ட்ராமாவெல்லாம் வேறு!


அதை சரியாக மார்க்கெட்டிங் செய்ததில் தாங்கள் கெட்டிக்காரர்கள்தான் என்று நிரூபித்தது திமுக-சன் டிவி கூட்டணி. தினகரன் எரிப்பு வழக்கின்போது, அதுவரை முதல்வர் கலைஞரெல்லாம் சொல்லி வந்த சன் டிவியினர் பிறகு கருணாநிதி என்றே குறிப்பிட்ட ஆரம்பித்தது பேசப்பட்டது. ஆக சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபவர்கள் இதிலும் அவ்வாறே நடந்து கொண்டார்கள். இன்றைய சூழலில் அழகிரி, ஸ்டாலின், கலைஞர் பேச்சுகளின் க்ளிப்பிங் நேரத்தை விட வடிவேலுவின் க்ளிப்பிங் நேரம் அதிகரிப்பதே ஜெயிக்க வழி என்று செயல்பட்டார்கள்.

அதேபோல விஜய்காந்த் பேசியதையும் பேசாததையும் மிக்ஸிங் எல்லாம் செய்து ஃபிலிம் காட்டினார்கள். தினகரனில் திமுக பற்றிய பாஸிடிவ் செய்திகள் மட்டுமே வந்தன. கலைஞர் டிவி மானாட மயிலாட உட்பட எல்லாவற்றையுமே தங்கள் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டது திமுக.


திமுக கூட்டணியின் மற்றொரு பலம் அதன் விளம்பரங்கள். கலக்கலாக அமைந்தது. ஜவுளிக்கடை விளம்பரங்களைப் போலவே பாட்டெல்லாம் போட்டு அருமையாக இயக்கியிருந்தார்கள். அதுவும் ‘நாட்டுக்கொரு நல்லசேதி நாத்தனாரே’ ஆரம்பித்தாலே வீட்டில் உள்ள எல்லாரும் உடன்பாட ஆரம்பித்தார்கள். (கவனிக்க: உடன் பாட. உடன்பட அல்ல!) இது ஜெயலலிதா அணியில் மிஸ்ஸிங். பாரதியார், கட்டபொம்மன், பெரியார், அண்ணாவெல்லாம் வந்து அதிமுகவுக்கு ஓட்டுக் கேட்பது போல ஒரு விளம்பரம் வந்தது. அதற்கப்புறம் ஜெயா சேனலே வைக்க பயமாக இருந்தது எனக்கு. அவ்வளவு திராபை. ஒரு விளம்பரத்தையே ஒழுங்காக மக்களைக் கவரும் வண்ணம் செய்யத்தெரியாதவர்களாக இருக்கிறார்களே என்று கோபம் கோபமாக வந்தது.

அதிமுகவின் பலம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. இந்தத் தேர்தலில் இரண்டே அலைதான். திமுக ஆதரவு அலை. திமுக எதிர்ப்பு அலை.

அதிமுக ஆதரவு அலை என்ற ஒன்று இல்லவே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் ஒரு மண்ணாங்கட்டியையும் செய்யாததே அதற்குக் காரணம். அதே போல ஒரு வடிவேலுவுக்கு கவுண்டர் கொடுக்குமளவுக்குக்கூட பேச்சாளர் யாருமில்லாதது அதைவிடக் கொடுமை.

ஜெ-வின் சர்வாதிகாரப் போக்கு அல்லது அப்படித் தோற்றமளிப்பதுபோல அவர் நடந்துகொண்டதும் சரியில்லை. திமுகவினர் வடிவேலுவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட, ஜெ அணி, நடிகர் சங்கத் தலைவர், ஒரு கட்சியின் தலைவரான சரத்குமாருக்குக் கொடுக்காதது துரதிருஷ்டமே. அரசியலில் அவர் சுண்டைக்காயாக இருந்தாலும் ரெண்டு சீட் கொடுத்த பாவத்துக்கு அவரையும் கொஞ்சம் கண்டுகொண்டிருக்கலாம்.

மதிமுகவை கழட்டிவிட்டது ஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு. வைகோஆதரவு அலை என்ற ஒன்று இருக்கிறது. ஈழப்பிரச்னை உட்பட சில ப்ரச்சினைகளில் இறங்கிப் போராடியது அவர்கள்தான். அதிமுகவை விட. தவிரவும் வைகோ, நாஞ்சில் சம்பத் என்ற பிரச்சார பீரங்கிகளை இழந்தது இந்தக் கூட்டணி. போதாக்குறைக்கு எதிரணியின் பேச்சை மெய்ப்பிக்கும் வகையில் விஜயகாந்த் கோவைப் பிரச்சாரத்துக்குப் போகாதது கொஞ்சம் எரிச்சலையே உண்டு பண்ணியது.


மற்றொரு விஷயம் தினமலர், விகடன் போன்ற பத்திரிகைகள் (திமுக பாணியில் சொல்வதானால் – பார்ப்பண ஏடுகள்) வெளிப்படையாகவே திமுகவுக்கு எதிரான நிலை எடுத்தன. திமுக குடும்ப ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறையினர் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலையில்தான் இருக்கிறார்கள்.

போலவே காங்கிரஸ் அரசும் திமுகவினரும் இலங்கைப் பிரச்னையில் நடந்துகொண்ட விதம் எவருக்கும் பிடிக்கவில்லை. ஐநூத்திச் சொச்சம் மீனவர்களுக்காக காங்கிரஸ் அரசை மிரட்டாதவர்கள், அறுபது சொச்சம் சீட் பிரச்னைக்காக ராஜினாமா செய்யட்டுமா என்று மிரட்டியது படுமோசம். போதாக்குறைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வேறு!

----------------

முழுதாகப் படித்து விட்டீர்களா? நான் யாரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்று ஏதாவது புரிந்ததா? இல்லைதானே? எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. குழப்பமாகவே இருக்கிறேன். ஆனால் ஆளுங்கட்சிக்குப் போடக்கூடாது என்ற மனநிலை இப்போது வரை இருக்கிறது. இலவசங்கள் கொடுத்து மக்களைக் குட்டிச் சுவராக்கி, ஓட்டுக்குப் பணம் என்ற புதிய சிஸ்டத்தைக் கொண்டு வந்து நாசமாக்கி, அவர்கள் கைகாட்டும் படம்தான் வெளியாகும், அவர்கள் சொன்னதே சட்டம் என்று வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக செய்யும் சர்வாதிகாரம் என்று பலதும் என் போன்ற பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறதென்பது பலரிடம் பேசும்போது தெரிந்தது.

சும்மா வாய்வழி சர்வே நடத்தியதில் எனக்குக் கிடைத்த ரிசல்ட் அதிமுகவுக்கு சாதகமாகவே இருக்கிறது!

------------------

எது எப்படியாயினும் உங்கள் பொன்னான வாக்குகளை யாருக்காகவேனும் அளிக்க மறக்காதீர்கள். அது உங்கள் உரிமை.. கடமை.. எக்ஸெட்ரா எக்ஸெட்ரா..

கடைசியா உங்களுக்காக ஒரு வீடியோ... தவறாமப் பாருங்க..





அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.

ஆல் த பெஸ்ட்!

.


Sunday, April 10, 2011

மாப்பிள்ளை - கொலைவெறி..

கீழ இருக்கற ஸ்டில்லைப் பாருங்க...

அங்க கெடக்கறது நான். சுத்தியும் இருக்கறது படத்தோட டைரக்டர், நடிகர்கள், முக்கியமா விவேக்ன்னு கற்பனை பண்ணிக்கோங்க.


ரெண்டு மணிநேரம்.. தெளியத் தெளிய அடிச்சுட்டாங்க... வீட்ல கூட்டீட்டுப் போனதுக்கு, பொண்டாட்டி மகளிர் போலீஸ்ல போய் வன்கொடுமை சட்டத்துல புகார் குடுக்கவான்னு கேட்கறாங்க. குழந்தைங்க ரெண்டு மணிநேரமா என்கிட்ட பேசல.


ஆடுகளம் நல்லாருந்துச்சுன்னா அவருக்கு திருஷ்டி கழியணும்தான். அதுக்காக இப்படியா?


விவேக்கெல்லாம் %^$%#%^#ட்டு வேற ஏதாவது வேலைக்குப் போகலாம். சேர்த்து வெச்ச பேரையெல்லாம் கெடுத்துக்க வேணாம். அவரு மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கு. அநியாயம்.


இந்தப் படத்தை எடுத்தவங்களையும், நடிச்சவங்களையும்கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா இந்தப் படத்துக்கு ப்ரிவ்யூன்னு ஒண்ணு போட்டிருப்பாங்கதானே.. அப்ப இந்தப் படத்தை ‘சூப்பர்ங்க.. நிச்சயம் ஹிட்டுதான்’ன்னு எவனாவது ஒருத்தன் சொல்லிருப்பான்ல? அத நம்பித்தானே இவங்க படத்தை வெளியிடறாங்க? அவனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன்.


கொலைமுயற்சில இவங்க மேல கேஸ்போடலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.


படுபாவிங்க...



.



Thursday, April 7, 2011

‘டீ வேணுமா’ன்னு கேட்டதால் தான் சச்சின் அவுட்!



ன்னும் எத்தனை நாளைக்குடா பேசுவீங்க என்று கேட்பவர்களுக்கு - அடுத்ததாக 2015ல் மீண்டும் வென்று புதுப்பிக்கும் வரை - என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.





டி 20 உலகக் கோப்பை, சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டனாக ஐபிஎல்-கோப்பை, தொடர்ந்து சாம்பியன்ஸ் ட்ராஃபி, டெஸ்டில் நம்பர் ஒன் இடம் என்று தோனி தொட்டதெல்லாம் துலங்கிக் கொண்டிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகம் இந்த முறை. அப்படியானதொரு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் மெய்ப்பித்திருக்கும் இந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டம் சம்பந்தமான சில துளிகள்.

------------------

செண்டிமெண்ட் பார்க்காத க்ரிக்கெட் ரசிகர்கள் வெகு குறைவு. இந்த உலகக் கோப்பையின் போது வந்த சில செண்டிமெண்ட் மெசேஜஸ்:

# உலகக் கோப்பையில் SPIN முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்படி என்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்: Srilanka, Pakistan, India and Newzeland. நான்கின் முதலெழுத்தைக் கூட்டுங்கள். SPIN! இதில் இருக்கும் ஒரே ஒரு Vowel - I. ஆகவே மற்ற மூன்றைக் காட்டிலும் தனித்திருப்பதால் இந்தியாவின் வெற்றி உறுதி! (ரூம் போட்டு யோசிப்பாங்களோ??)

# இந்தத் தொடரில் ‘எம்’ என்ற எழுத்தில் துவங்கும் இடங்கள்/மைதாங்களில் இந்தியா வென்று வருகிறது. மிர்புர் (வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம் (அயர்லாந்து), மொடிரா (ஆஸி), மொகாலி (பாக்). இவற்றைத் தொடர்ந்து மும்பை-யில் இறுதிப் போட்டி நடப்பதால் வெற்றி நமதே. தவிரவும் கேப்டன் யார்? மகேந்திர சிங் தோனி. M! - Magic!!

# 1983ன் காலண்டரும், 2011ன் காலண்டரும் ஒன்று. ஆக அப்போது கோப்பை வென்றது போல, இப்போதும் வெல்வோம்!

------------------

இது தவிர என் சுற்று வட்டத்தில் நடந்த சில சுவாரஸ்யங்கள்:

ங்கள் நிறுவனத்தில் மைக் அனௌன்ஸ்மெண்ட் அசெம்ப்ளி சிஸ்டம் உள்ளது. வருகைக் குறைவைத் தடுக்க வேண்டி, தென்னாப்பிரிக்காவுடனான மேட்ச் முதல் குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்கோர் அறிவிக்கிறேன் என்று சொல்லி, அதே போல அறிவித்து வந்தேன். சச்சினும், சேவக்கும் புகுந்து விளையாடி ஸ்கோர் 300ஐத் தாண்டுமென நினைத்து தொடர்ந்து பார்க்க வீட்டுக்கு ஓடிவிட்டேன். மேட்ச் தோற்றோம்.

அந்த செண்டிமெண்டால், ஆஸியுடனான மேட்ச் ஸ்கோரை அறிவிக்கவே இல்லை நான். பலரும் கேட்க அவ்வப்போது நோட்டீஸ் போர்டில் ஒட்டிவிட்டேன்!

---------------

ருகாமையிலுள்ள நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் ஆஸி மேட்ச்சின் போது பொய் காரணம் சொல்லி மட்டம் போட்டுவிட்டு பக்கத்து தாபா ஒன்றில் பீரோடு மேட்ச் பார்த்து, செகண்ட் இன்னிங்க்ஸூக்கு தன் வீட்டுக்குப் போனாராம். மேட்ச் வெற்றி. அந்த செண்டிமெண்டின் காரணமாக பாக் மேட்ச்சுக்கும் அதேமாதிரி, ஃபைனல்ஸுக்கும் அதே மாதிரி செய்தாராம். நான் ‘மேட்ச் பாக்கப் போறேன்னே சொல்ல வேண்டியதுதானே? PM, ப்ரசிடெண்ட் எல்ல்லாம் மேட்ச் அன்னைக்கு ஆஃபீஸுக்கு மட்டம் போட்டுட்டு க்ரவுண்ட்ல உட்கார்ந்திருக்காங்க… உங்களுக்கு என்ன? என்றதற்கு ‘நான் கேட்டா லீவ் தருவாங்க சார். ஆனா பொய் சொல்லி லீவெடுத்துப் போனாத்தான் ஜெயிக்குது. அதான்’ என்றார்.

------------------

ன்னொரு நண்பர் - ஃபைனல்ஸ், இந்தியா பேட்டிங்கின் போது, சச்சின் அவுட் ஆன பிறகு தன்வீட்டு பிரம்பு சோஃபாவில் ஒரு காலை HAND RESTல் (கை வைக்கும் பகுதி) தூக்கிப் போட்டபடி பார்த்துக் கொண்டிருந்தாராம். விராட் கோஹ்லி, காம்பீர் சிறப்பாக விளையாட கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேலாக பொசிஷன் மாறாமல் மேட்ச் பார்த்தாராம். கோஹ்லி அவுட் ஆனதும் காலை இறக்கி சாப்பிட்ட தட்டை சிங்கில் போட்டு, கை கழுவிவிட்டு வருவதற்குள் தோனி / காம்பீர் சிறப்பாக ஆட ஆரம்பிக்க கையை சேரில் வைத்து நின்றபடியே பார்த்தாராம். காம்பீர் அவுட் ஆனதும் டக்கென்று உட்கார்ந்தவர் அதே பொசிஷனில் மேட்ச் முழுவதும் பார்த்தாராம். ‘மொத்தம் மூணே போஸ்தான் மாறினேன்.. பயம்ம்ம்மா இருந்துச்சு’ என்றவரைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.

----------------------

வேறொரு நண்பரின் மனைவி புலம்பியது அதைவிட சுவாரஸ்யம்: ‘இனிமே மேட்ச் பாக்க வேணாம்னு சொல்லுங்ணா.. அன்னைக்கு பூரா என்ன டென்ஷன். எதாவது சொல்லப் போனாக்கூட முகத்தைப் பார்த்தாலே பயமா இருந்துச்சு. இவருக்காகவாது இந்தியா ஜெயிக்கணும்ன்னு வேண்டிகிட்டேன். ஃபைனல்ஸ்ல சச்சின் ஆடிகிட்டிருக்கும்போது, தேவையில்லாம அவர்ட்ட போய் ‘டீ வேணுமா’ன்னு கேட்டேன். அப்ப சச்சின் அவுட். ‘நீ நடுவுல வந்து கேட்டதுனாலதான் சச்சின் அவுட்டு’ன்னு எனக்குத்தான் திட்டு விழுந்துச்சு’ என்று புலம்பினார். அவனை முறைக்க அவன் ‘மேட்ச் ஜெயிச்சதுக்கு சண்டே கூட்டீட்டு போய் பார்ட்டி வெச்சு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து சரிகட்டீட்டேண்டா’ என்றான்.

------------------------

நான் ஃபைனல்ஸை நண்பனின் ரூமில் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். வீட்டில் மகள்கள் இருவருமே இந்த உலகக் கோப்பை முதல் க்ரிக்கெட் ரசிகைகள் ஆகிவிட்டார்கள். அவர்களோடு பார்த்தேன். முழுக்க முழுக்க பார்க்காமல் சேனல் மாற்றி மாற்றி அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசி கட்டத்தில் முழுவதும் பார்த்தேன். ஆனால் தோனியின் சிக்ஸை லைவாகப் பார்க்கவில்லை. இன்னும் 20 ரன்னுக்கும் குறைவாக இருந்த போது வந்து கம்ப்யூட்டரில் அமர்ந்துவிட்டேன். உள்ளிருந்து மகள் அப்டேட் செய்து கொண்டிருந்தாள். ‘அப்பா சிக்ஸர்’ என்று அவள் கத்த, நான் ஓடுவதற்குள் யுவராஜ் தோனியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்! ஜெயித்து முடிந்ததும் பட்டாசு வெடித்துக் கொண்டாடி, அந்த நள்ளிரவில் மகள்களோடு ஒரு ரவுண்டு வந்தேன். ஊரே திருவிழாக் கோலமாக இருந்தது.

வேறு சிலர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேட்டபோது:

சௌந்தர்: (தனியார் நிறுவன ஊழியர்):

என் நண்பனின் அறையில், வேறு சில நண்பர்களோடு முதல் இன்னிங்ஸ் பார்த்தேன். சேஸிங்கின் போது சச்சின் அவுட் ஆனதும் இந்த டிவி ராசியில்லை என்று அவரவர் வீட்டுக்கு போக முடிவெடுத்து கிளம்பிப் போய்விட்டோம். தோனியின் அந்த சிக்ஸின் போது குதித்து விட்டேன். மேட்ச் ஜெயித்ததும் எங்கள் காம்பவுண்டில் எல்லாருமாய் கூல்டிரிங்க்ஸ், ஸ்நாக்ஸ் என்று சாப்பிட்டபடி டான்ஸ் ஆடிக் கொண்டாடினோம்.

முக்கியமான இன்னொரு விஷயம்: நாங்கள் முதல் இன்னிங்ஸ் பார்த்த அறையில் இருந்த அந்த நண்பர், நாங்கள் வெளியேறினதும் டிவியை ஆஃப் செய்துவிட்டு பக்கத்து அறையில் போய் மீதி மேட்சைப் பார்த்தாராம்!

சில பிரபல வலையுலகினரைக் கேட்டபோது..

சுசி:

சத்தியமா இந்தியா ஜெயிக்கும் ஆரம்பம் முதலே நம்பிக்கை இருந்தது. தோனி சிக்ஸ் அடிச்சப்ப அப்டியே அழுதுட்டேன். ஜெயிச்சதும் போஸ்ட் எழுதி, BUZZ போட்டு கொண்டாடினேன். அடுத்தநாள் வீட்ல சமையல் கட்.

ஜோசப் பால்ராஜ்:

நான் அப்போது கொரியாவில் இருந்தேன். மேட்சைப் பார்க்க முடியவில்லை. நெட்டில்தான் பார்த்துக் கொண்டும், நண்பர்களோடு சாட்/BUZZல் பேசிக் கொண்டும் இருந்தேன். தவிர, கார்க்கியின் ட்விட்ஸை விடாமல் ரசித்துக் கொண்டிருந்தேன். அவரது ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருந்த அந்த ட்விட் நான் நண்பர்களோடு இருக்கும் ஃபீலைத் தந்தது.

சென்னை / சிங்கப்பூரில் இருந்திருந்தால் நண்பர்களோடு நேரில் கொண்டாடியிருக்கலாம் என்ற வருத்தம் இருக்கிறது.

அனுஜன்யா:

கோப்பை நிச்சயம் இந்தியாவுக்குதான் என எதிர்பார்த்தேன். மும்பையில் வான்கடே மைதானத்தில் ஒரு புறம் கேத்ரினா கைஃப், மறுபுறம் Beboவுடன் பார்த்தேன். தோனி சிக்ஸ் அடித்ததும் மேட்ச் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். (அடா அடா அடா!!!) காத்ரினாவுக்கு பை பை சொல்லிவிட்டு கிளம்பினேன். அருகிலிருந்த கோவில், மசூதி, புத்த விஹார் எல்லாவற்றுக்கும் சென்று கடவுளுக்கு ந்ன்றி சொன்னேன்.

(மேலே சொன்னதில் ஒன்று மட்டும் நடக்கவில்லை - அனுஜன்யா)

அதிஷா: (முன்னாள் வலைப்பதிவர் - இந்நாள் பத்திரிகையாளர்)

உலக கோப்பை தொடங்கும் முன் அதுகுறித்து கவர்ஸ்டோரி செய்ய சொல்லி எடிட்டர் சொன்ன போதே , நான் பரிந்துரைத்த தலைப்பு ''இந்த முறை இந்தியாதான்!'' கவர்ஸ்டோரியும் அதையொட்டியே இந்தியா ஏன் வெல்லத்தகுதியான அணி என்கிற அடிப்படையிலேயே எழுதியிருந்தேன். மனசு முழுக்க இந்தியா வெல்லும் என்கிற எண்ணம் மட்டுமே போட்டி தொடங்குவதற்கு முன் நிறைந்திருந்தது. அதற்கு என்னிடம் வலுவான காரணங்கள் ஏராளமாய் இருந்தன.

இறுதிப்போட்டியை அலுவலகத்தில் சக தோழர்களோடு இன்டர்நெட்டில்தான் பார்க்க முடிந்தது. தோனி சிக்ஸ் அடித்த தருணத்தில் உணர்ந்ததை வார்த்தைகளாலும் விவரிக்க முடியுமா என்ன! கண்ணீர் பெருக்கெடுத்து ஓட.. மனசுக்குள் மத்தாப்பு இல்லை இல்லை தீபாவளியே கொண்டாடி தீர்த்திருப்பேன்.. மேட்ச் முடிந்ததும் நண்பருகளுக்கெல்லாம் போன் போட்டு ஒவ்வொருவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன். அதில் பலரும் இந்தியாவின் மீது நம்பிக்கையில்லாமல் தோற்றுவிடும் என கூறியவர்கள். அதில் சிலரை எழுதவியலாத கெட்டவார்த்தைகளால் அர்ச்சனை செய்யவும் தவறவில்லை. இவை தவிர மேட்ச்சின் ஒவ்வொரு விநாடியிலும் டுவிட்டரில் அடித்த கூத்துகள் மறக்க முடியாதவை.

யுவகிருஷ்ணா :

1. இந்தியன் என்கிற அடிப்படையில் இந்தப் போட்டித் தொடரின் ஆரம்பத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு உலகக்கோப்பையின் போதும் இந்தியாதான் வெல்லும் என்று எதிர்ப்பார்ப்பது என்னுடைய வழக்கம்.

2. இறுதிப்போட்டியை அலுவலகத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். சச்சின் அவுட் ஆனவுடனேயே ‘ஆப்பு’தான் என்று அஞ்சிப்போய், வீட்டுக்குச் சென்று மீதியை கண்டேன். வீட்டில் நான் மட்டுமே மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தேன்.

3. தோனி அடித்த வின்னிங் ஷாட் சிக்ஸரை விட, முக்கியமான கட்டத்தில் ஆஃப் சைடில் கங்கூலி பாணியில் அவர் அடித்த கச்சிதமான சிக்ஸரே அதிக மகிழ்ச்சியை தந்தது. இறுக்கத்தைத் தளர்த்திய சிக்ஸர் அது. வின்னிங் ஷாட் அடித்தபோது, வாழ்நாளில் இன்னொருமுறை காணக்கிடைக்காத அரியத் தருணம் இதுவென்பதாக உணர்ந்தேன்.

4. மேட்ச் முடிந்ததும் கிட்டத்தட்ட யோகநிலைக்குப் போய்விட்டேன். ஹர்பஜன் அழுததைக் கண்டதும் உணர்ச்சிவயப்பட்டு என்னுடைய கண்களும் கலங்கியது. சச்சினை தோளில் சுமந்து வீரர்கள் மைதானத்தை வலம் வந்தார்கள். நாடே அவ்வீரனை தோளில் சுமந்த உணர்வு ஏற்பட்டது. அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்’ நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன்.

ச்சின்னப்பையன் சத்யா:

உலகக்கோப்பை பாகிஸ்தான் வெல்லும் என எதிர்பார்த்தேன். இறுதிப் போட்டியை மகளுடன் வீட்டில் அவளுக்கு க்ரிகெட்டைப் பற்றிச் சொல்லிக் கொண்டே பார்த்தேன். தோனி சிக்ஸ் அடித்த போது CHAK DE INDIA என்று உரக்கக் கத்திவிட்டேன். நானே விளையாடியபோது களைப்பு. அரைமணி நேரம் தூங்கிவிட்டு குடும்பத்தோடு ஐஸ்க்ரீம் சாப்பிடப் போனேன்!


கார்க்கி:

தொட‌ர் ஆர‌ம்பிக்கும் முன்பு நான் க‌ணித்த‌து இந்த‌ ப‌திவில் இருக்கிறது. தொட‌ர் ஆர‌ம்பித்த‌ நாள் முத‌லே ட்விட்ட‌ரில் இந்தியாதான் ஜெயிக்கும் என‌ சொல்லியிருந்தேன். அலுவ‌ல‌க‌த்தில் இதுவ‌ரை 600 ரூபாய் இந்தியா ஜெயிக்கும் என‌ சொல்லி வென்றிருக்கிறேன் :)

இந்த‌ உல‌க‌ கோப்பையில் எல்லா போட்டிக‌ளையும் நான் குறைந்த‌து 100 பேருட‌ன் பார்த்தேன்.ஆம் ட்விட்ட‌ரில் ந‌ண்ப‌ர்க‌ளோடு உரையாடிக் கொண்டு தான் போட்டிக‌ளை ர‌சித்தேன். இறுதிப் போட்டியையும் வீட்டிலே இருந்து, ட்விட்ட‌ரில் பேசிக்கொண்டே பார்த்தேன்.

உண்மையை சொல்ல‌ வேண்டுமெனில் தோனி சிக்ஸ் அடிக்கும் முன்பாக‌வே இந்தியா வெற்றிபெற்று விட்ட‌து. அத்த‌ருண‌த்தில் ட்விட்ட‌ரில் இந்தியா தோற்கும் என‌ சொல்லிக் கொண்டிருந்தவ‌ர்க‌ளை தேடித்தேடி வ‌ம்பிழுத்துக் கொண்டிருந்தேன். என் உற்சாக‌த்தை அப்ப‌டியே ப‌திவு செய்துக் கொண்டிருந்தேன். அத‌னால் தோனியின் செக்ஸி சிக்ஸை ரீப்ளேயில்தான் பார்க்க‌ முடிந்த‌து.

போட்டி முடிந்த‌வுட‌ன் ப‌ட்டாசு வெடித்தோம். சில‌ ந‌ண்ப‌ர்க‌ளின் தொலைபேசி அழைப்பு இன்னும் உற்சாக‌ம் த‌ந்த‌து. பின் மீண்டும் வ‌ந்து ட்விட்ட‌ரில் மூழ்கிவிட்டேன். ட்விட்ட‌ரில் பேசுவ‌து என‌க்கு ஏனோ ஒரு பெரிய‌ குழுவுட‌ன் நேரில் அர‌ட்டைய‌டிப்ப‌து போலிருப்ப‌தால் அதையே செய்து கொண்டிருந்தேன்.

பாலராஜன்கீதா:

கிருஷ்ணா, வீட்டில் அனைவரும் நலமா? ஏதோ கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அதில் அடிக்கடி க்ரிக்கெட் என்ற வார்த்தை வருகிறது. அப்படி என்றால் என்ன?



.