Monday, December 27, 2010
சிறுகதைகள் பற்றி சங்கமம் நிகழ்வில் பெருமாள் முருகன்
சென்ற வருடம் போலவே இந்த வருடமும் சிறப்புற நடைபெற்ற ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தினர் நடத்திய சங்கமம்-2010 நிகழ்வின் சில துளிகளை பல வலைப்பூக்களில் இன்று காண்பீர்கள். என் பங்கிற்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசியதில் இருந்து சில....
‘சிறுகதைகளை உருவாக்குவோம்’ என்கிற தலைப்பில் பேசினார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.
• முன்னைப் போல வார / மாத இதழ்கள் சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. அதிக பட்சம் ஒரு சிறுகதை, சில சமயம் அதற்கும் இடமில்லை என்கிற போக்கே இருக்கிறது. ‘உயிர் எழுத்து’ இதழ் மட்டும் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு சிறுகதைக்கு இடமளிக்கிறது.
• சிறுகதை எழுதுவதில் / சிறுகதை வாசிப்பதில் / சிறுகதை வெளியிடுவதில் என்று மூன்று நிலைகளிலும் ஒரு தேக்க நிலை தற்போதைய காலகட்டத்தில் இருக்கிறது.
• கடந்த பத்தாண்டுகளில் சமகால வாழ்வியல் முறையைப் பதிவு செய்யும் சிறுகதைகள் அதிகம் வரவில்லை. இன்றைய வாழ்வைப் பதிவு செய்வது அவசியம். அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தைப் பதிவு செய்திருப்பார்கள். அந்தப் போக்கு இப்போது இல்லை.
• இந்த மாதிரியான நேரத்தில் சிறுகதைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. அதற்கு இணையமே சிறந்த வழி.
• எழுதுவதற்கு, வாசிப்பு என்பது மிகவும் அவசியம். வேலைப்பளு காரணமாக வாசிப்பு குறைந்துவிட்டது என்பதை ஏற்க முடியாது. வாசிப்பையும் ஒரு வேலையாகப் பாவித்து தினமும் செய்தால் இந்த மாதிரி சொல்ல நேராது.
• எழுதுபவர்களுக்கு சின்னச் சின்ன யோசனைகள்:
1) குறைந்தது மாதம் ஒரு சிறுகதை படியுங்கள். கட்டாயமாக இதைச் செய்யுங்கள். மாதம் ஒரு சிறுகதை வாசிப்பதென்பது என்பது நிச்சயமாக கடினமான விஷயமல்ல. கொஞ்சம் கொஞ்சமாக இதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
2) பகிர்ந்து கொள்ளக் கூடிய ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் எழுத்தாளர்களுக்கு இந்த ஆசை, பேராசையாகவே இருக்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
3) கதை எழுத தீவிர கவனிப்பு மிக முக்கியம். Observation. கவனிக்கும் தன்மை இருந்தால்தான் நடக்கும் சம்பவங்களிலிருந்து, சிலதைத் தேர்ந்தெடுத்து கொஞ்சம் கற்பனை கலந்து எழுத்தில் கொணர முடியும்.
4) எழுதுவதற்கான பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொள்ளுங்கள். எழுதாமல் கதை வராது. எழுதிய உடனும் கதை வராது. முதல் கதையே மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் எல்லாரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஜெயமோகன் - விகடன் உட்பட - சில இதழ்களில் பல கதைகள் வெளிவந்து, நெடுநாட்கள் கழித்து கணையாழியில் ‘நதி’ என்றொரு கதை எழுதினார். அந்தக் கதையைத்தான் தன் முதல் கதை என்று குறிப்பிடுவார். ‘அதற்கு முன் நிறைய கதைகள் வந்தனவே?’ என்று கேட்டால், ‘அவையெல்லாம் பயிற்சிக்காக எழுதியவை’ என்பார்!
5) சம்பவங்களிலிருந்து விதிவிலக்குகளைத் தேர்வு செய்து எழுதுங்கள். அன்றாட நடப்புகளை, விதிக்குட்பட்டு நடக்கும் நிகழ்வுகளை / மனிதர்களை கதை வடிவில் கொண்டு வந்து எழுதுவது – அதை வாசகர்களுக்குச் சுவைபடச் சொல்வது கொஞ்சம் சிரமம். அசோகமித்திரன், வண்ணதாசன் போன்றோர் அப்படித்தான் எழுதுகிறார்கள்.
உதாரணமாக கந்தர்வன் ஒரு சிறுகதை எழுதினார். பனைமரத்தைப் பிடுங்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. பனைமரத்தைப் பிடுங்கும் மனிதன் என்றாலே அவன் சமூகத்தில் இருக்கக்கூடிய மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து வேறானவன். இதுதான் சிறுகதைக்குத் தேவை.
6) வாசகர்களுக்குக் கருத்தெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் எழுதுகிற கதையில், அதன் போக்கில் சொல்லப்பட்டவற்றை வாசகன் படித்துக் கொள்ளட்டும். வலிந்து திணிக்கப்பட்ட நீதிபோதனைகளை எவரும் விரும்புவதில்லை.
இவையாவும் மேம்போக்காகச் சொல்லப்பட்டவையே. சிறுகதையுலகு ஒரு கடல். அவற்றின் துளியின் துளி பற்றியே பேசியிருக்கிறேன் என்றார்.
முடிக்கும் முன் தி.ஜானகிராமனின் ‘காண்டாமணி’ என்றொரு கதையைச் சொன்னார்.
உணவுச் சாலை நடத்தும் ஒருவர், ஒரு நாள் - தன் முதல் வாடிக்கையாளருக்கு சாம்பார் ஊற்றிவிட்டு சிறிது நேரம் கழித்து அந்த சாம்பாரில் பல்லி விழுந்திருப்பதைக் கவனிக்கிறார். சாம்பாரைக் கொட்டி விட்டு, பிற வாடிக்கையாளர்களுக்கு புதிய சாம்பார் சமைக்கிறார். முதலில் உண்ட வாடிக்கையாளருக்கு என்ன ஆகியிருக்குமோ என்று குற்றவுணர்ச்சி. அவரோ சென்று விட்டார். ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று கடவுளைப் பிரார்த்திக்கிறார்.
துரதிருஷ்டவசமாக அந்த வாடிக்கையாளர் மறுநாள் இறந்துவிடுகிறார். நெஞ்சு வலி என்று சொல்லப்படுகிறது. தன் கடைச் சாம்பாரின் பல்லி விஷம்தான் காரணம் என்று இவர் நினைத்துக் கொள்கிறார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தன் கடை வியாபாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார். வெளியில் தெரியாமல் தன் கடைக்கு எந்த பாதிப்பும் வராமல் இருந்தால் அருகிலேயே இருக்கும் கோயிலொன்றுக்கு காண்டாமணியை உபயம் செய்வதாக வேண்டிக் கொள்கிறார். அதுபோலவே காண்டாமணியை கோயிலுக்கு உபயம் செய்கிறார்.
ஒவ்வொரு முறை அந்த காண்டாமணி அடிக்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் வாடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த மணியை திரும்ப வாங்கிக் கொள்கிறார்.
இதுதான் கதை. இதில் எந்த வித நேரடியான நீதிபோதனைகளும் இல்லை. நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்த, நீங்கள் மறக்க நினைக்கும் குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும் ஏதேனும் நிகழ்வைப் பொருத்திப் பார்க்கச் செய்கிற கதை. இப்படி வாசகனை, கதையோட்டத்துடன் இணைத்துச் செல்லும் கதைகளே வெற்றிபெறும் என்று சொல்லி முடித்தார் பெருமாள் முருகன்.
__________________________________
சங்கமம் குறித்த முழுத் தகவல்களுக்கு ஈரோடு கதிரின் இந்த இடுகையைச் சுட்டவும்.
.
Wednesday, November 17, 2010
சவால் சிறுகதைப் போட்டி - முடிவுகள்
கொஞ்சம் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் - கதையில் வரவேண்டும் என்று போட்டி விதிகளில் குறிப்பிடப்பட்ட மூன்று வரிகளையும் கதையும் மெயின் ஃப்ளோவில் இல்லாமல் "பார்த்துக் கொண்டிருக்கும் டிவி சீரியலில் வருவது", "சினிமாவில் வருவது", "துண்டு சீட்டில் வருவது" என்று பல கதைகள் வந்திருக்கின்றன. கதையில் வரவேண்டும் என்பதுதானே விதி, கதையின் மெயின் ஃப்ளோவில் வரவேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்படவில்லையே என்று கேட்கலாம்.
அப்படி பார்த்தால் இதுவரை அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட + எழுதப்படப்போகும் பில்லியன் கணக்கான அனைத்து கதைகளிலும் இந்த மூன்று வரிகளை சேர்க்க முடியும்.
உதாரணமாக "என் இனிய இயந்திரா" நாவலில்
"ஜீவாவைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு சென்ற மக்கள் கூட்டம் அருகே இருந்த லேசர் விளம்பர போர்டில் இருந்த கதைப்போட்டியை கண்டு கொள்ளவே இல்லை. அதில்
கீழ்கண்ட வரிகளுடன் கதை எழுதுங்கள், ஒரு கோடி பரிசை வெல்லுங்கள்.
1......................
2...............................
3.......................................
என்றிருந்தது.” என்று எழுத முடியும். எந்த ஆங்கில நாவலிலும் "Something was written on the piece of paper in some indian language.....
1...........................
2...............................
3......................................."
என்றும் எழுத முடியும். அப்படி விதிமுறைகள் புரிந்து கொள்ளப்பட்டால் இந்த மூன்று வரிகளும் இருக்க வேண்டும் என்ற விதியே தேவை இல்லை. அந்த வரிகளை அகற்றினாலும் கதைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் எதற்காக இந்த போட்டிக்கு அந்த கதைகள்?
ஆனால் அந்த அளவுக்கு கடுமையெல்லாம் காட்டக்கூடாது என்று எங்கள் நடுவர் குழுவின் ஆலோசனையில் முடிவானது.வரிகளுக்குப் பொருத்தமாக இருந்த கதைகள் புதுமையாக இல்லாமலிருந்தன. அப்படியும் இருந்தால் நடை மிகவும் சோர்வடையச் செய்வதாய் இருந்தன. ஆனால் - ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாக இருந்தன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆகவே மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் இந்தக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்
(அகர வரிசைப்படி... )
1. அதே நாள் அதே இடம் - சத்யா
2. எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? - பார்வையாளன்
3. எங்கெங்கு காணினும் காமினி - வெண்புரவி அருணா
4. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்
5. கம் ஆன், காமினி - அனு (இவருக்கு வலைப்பூ இல்லாததால், கதை பரிசல்காரனின் வலையில் வெளியிடப்பட்டது. கதாசிரியரின் ப்ரொஃபைலைக் காண அவரது பெயரைக் க்ளிக்கவும்)
6. கமான்.. கமான்.. காமினி - வித்யா
7. காமினி இருக்க பயமேன் - கலாநேசன்
8. காட்சிப்பிழை - செல்வகுமார்
9. சவால் - புதுவை பிரபா
10. சிரிக்கும் பெண்ணை நம்பாதே - பார்வையாளன்
11. டைமண்ட் - முகிலன்
12. தங்கையே தனக்குதவி - கே. ஜி. கௌதமன்
13. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி
14. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்
15. வைர விழா - R V S
முதல் இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தாமல் மூன்று சிறப்பான கதைகளைத் தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சமமான மதிப்பெண்களைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி தேர்வாகி தலா ரூ.400/- மதிப்புள்ள புத்தகப் பரிசைப் பெறும் மூன்று சிறப்புக் கதைகள் - (தலைப்பின் அகர வரிசைப்படி....)

.
(Thanks For the Image to: http://www.designniac.com)
Tuesday, November 16, 2010
சவால் போட்டியின் பின்னிருந்த சவால்
மேலும் சில கதைகளுக்கான விமர்சனங்களை ஆதிமூலகிருஷ்ணனின் இன்றைய பதிவில் - இங்கே காணலாம்.
**** ***** **** **** ****
சவால் சிறுகதைப் போட்டி குறித்து ஆதி எனக்கெழுதிய அனுப்பிய பதிவு இன்றைக்கு இங்கே...
--------------------------- --------------------------------
கடந்த ஆகஸ்டில் 'என்ன செய்யப்போகிறாய் மினி?' என்றதொரு மினி கிரைம் தொடரை எனது வலைப்பூவில் எழுதினேன். தொடர்ந்தது நண்பர் பரிசல்காரனின் 'மிஸ்.யாமினி' என்ற மினி கிரைம் தொடர் அவரது வலைப்பூவில். இரண்டுக்கும் நீங்கள் தந்த 'பரபர' ஆதரவைத் தொடர்ந்து ஒரு நாள் நானும், பரிசலும் கதையெழுதிய அழகினைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நண்பருக்குத் தோன்றிய ஆசையே இப்படியான குறிப்புகளைத் தந்து கதைப்போட்டி அறிவிக்கும் யோசனை. 'காமினி' உருவானாள். என்னென்ன மாதிரியான எதிர்வினைகளெல்லாம் வரும் என்று நான் கருத்துச்சொன்னபோது, 'அப்படியெல்லாம் பார்த்தால் நீங்களெல்லாம்தான் இதற்குள் எழுதுவதை மூட்டைகட்டியிருக்க வேண்டும்..' என்று வாயை அடைத்தார். இருவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு போட்டியை அறிவித்தோம். வாசகங்கள் கொஞ்சம் கடுமையாகவே இருந்ததாகத் எனக்குத் தோன்றியது. ஹிஹி.. அவை பரிசல்காரனுடையவை.
'சவால் சிறுகதைப்போட்டி' என்று தலைப்பிட்டு அறிவித்துவிட்டோமே தவிர அதற்குப்பின்னால் எங்களுக்காகக் காத்திருந்த பெரிய சவால் அப்போது தெரியவில்லை. அழுத்தமான பணிச்சூழல், இருவருக்குமே இருக்கும் (தங்க)மணிச்சூழல் (இருவரும் அவ்வப்போது 'Same same.. puppy same' என்று தொலைபேசியில் பாடிக்கொள்வதுண்டு) தெரிந்தும் நாங்கள் இதில் இறங்கியிருக்கக்கூடாதோ என்று ஒரு கட்டத்தில் மலைப்பாகிவிட்டது. ஏனெனில் எனது கணிப்பாக 25 கதைகள், அதிகபட்சமாக கடைசி நேர விறுவிறுப்பில் 35 கதைகள் வரலாம் என எதிர்பார்த்தேன். நண்பரின் கணிப்பும் ஓரளவு அவ்வாறே இருந்தது. ஆனால் எங்கள் கணிப்பு தகர்ந்தது. சில விளையாட்டுகளையும் சேர்த்து 83 கதைகள் போட்டிக்கு வரும் என்று நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வந்துகொண்டிருக்கும் கதைகளைப் படிப்பது, ஒரே கோப்பாக தகுந்த எண்களிட்டுக் கோர்த்துவைப்பது, நடுவர்களுக்கு மின்னஞ்சல், மற்றும் பிரிண்ட் அவுட்களை அனுப்பி வைப்பது என்பதே மிகுந்த நேரம் எடுக்கும் செயலானது. நண்பர்களின் மாற்றுக்கருத்துகளை எதிர்கொள்வதே ஒரு தனி வேலையாக இருந்தது.
இவற்றிற்கெல்லாம் முதலாக நடுவர் தேர்வு ஒரு சிக்கலான தலையாய விஷயமாக இருந்தது எங்களுக்கு. நிச்சயமாகக் கொஞ்சமேனும் பிரபலமாகியிருக்கும் எழுத்தாள நண்பர்களை அணுகியிருக்க முடியும். எங்களுக்கும், எங்கள் நண்பர்களுக்கும் நண்பர்களாக சிலர் இருப்பது வசதியாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்த 'ஸ்டார் வேல்யூ' வழியை மறுத்து 'பதிவர்களுக்குப் பதிவர்களால்..' கொள்கைப் படி பதிவர்களையே நடுவர்களாக்க முடிவுசெய்து சில பிரபல பதிவர்களை அணுகினோம். நாங்கள் தேர்வு செய்தவர்கள் ஸ்டார் வேல்யூ இருப்பவர்கள் என்பதைவிட நல்ல வாசிப்பனுபவம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்ற எங்கள் எண்ணப்படி இருந்தார்கள். அவர்களில் கணிசமான நேரம் செலவிடத் தயாராக இருந்த மூவர் குழு போட்டியின் நடுவர்களாக இருக்கச் சம்மதம் சொன்னார்கள்.
முதலாமவர் வெண்பூ.
வெண்பூ அவரது வீட்டுச்சூழல், அலுவலகச் சூழலால் தொடர்ந்து பதிவெழுதுபவராய் இல்லாவிடினும் பதிவுலகை தொடர்ந்து ஆர்வத்துடன் கவனித்து வருபவராய் உள்ளார். மேலும் எழுதுவதைவிடவும் தற்போது வாசிப்பதிலேயே மிகவும் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். நாளடைவில் நிறைய எழுதுவார் என நம்பலாம். சிறுகதைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். துவக்கத்தில் நிறைய கதைகள் எழுதியவர். விகடனில் இவரது சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.
இரண்டாமவர் எம்.எம்.அப்துல்லா.
பதிவுலகில் துவக்ககாலத்திலிருந்தே எங்கள் நண்பர். மேற்சொன்னவை அப்படியே இவருக்கும் பொருந்தும். நண்பர்களில் நிச்சயம் அதிகம் பிஸியாக இருக்கும் நபர் என இவரைச்சொல்லலாம், ஏனெனில் பணி அப்படி. ஆயினும் மிக விருப்பத்தோடு இதில் கலந்துகொண்டார். எனக்குத் தெரிந்து பதிவுலகில் இவரது படுக்கையறையில்தான் அதிகபட்ச புத்தகங்களைக் கண்டிருக்கிறேன்.
மூன்றாமவர் ஜீவ்ஸ்.
இப்போதும் நான் ஏதும் கதைகள் என்ற பெயரில் எழுதினால் அதைப்பற்றி மெனக்கெட்டு போன் செய்து அபிப்பிராயம் கேட்கும் முதல் நபராக இருப்பவர் நண்பர் ஜீவ்ஸ். மிகச்சிறந்த ஒரு புகைப்படக்காரராக இருக்கும் அதே நேரம் கதைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மாதாமாதம் புகைப்படப் போட்டிகளை நடத்தும் 'பிட்' குழுவிலிருக்கும் அனுபவம் வாய்ந்தவர்.
ஏற்கனவே இருந்த எங்களின் எதிர்பார்ப்புகளோடு இன்னும் இறுக்கமாக, நேர்மையாக விதிகளைப் புனைந்துகொண்டனர் நம் நடுவர்கள். நாங்கள் இருவர் உட்பட யாரும் பெரும்பாலும் கதைகள் எழுதியவர்களின் வலைப்பூக்களில் சென்று பின்னூட்டமிடவில்லை. கதைகளுக்கு எண்கள் தரப்பட்டன. எழுதியவர் யாரென்ற தகவல் நடுவர்களுக்குத் தரப்படாமல் அந்த எண்கள் தரப்பட்டன. கதைகளை நிதானமாகப் படித்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதில் மூவரும் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆகவே எனது தேர்வான 'முடிவுகள் தேதி : நவம்பர் 1' என்பதை முதலிலேயே அனைவரும் நிராகரித்துவிட்டனர். கணினியில் வாசிப்பதை விட ஃபீல் கிடைக்கவேண்டும் என்பதற்காக பெரும்பாலும் கதைகளைப் பிரிண்ட்அவுட் எடுத்தே வாசித்தார்கள். அதுவும் சென்னையிருக்கும் அப்துல்லாவுக்காக பிரிண்ட்அவுட்டுகளை எடுத்துக்கொண்டு மெனக்கெட்டு தாம்பரத்திலிருந்து சிட்டிக்குள் போன கதையெல்லாம் வேறு நடந்தது. அந்தக் கதையை தனிப் பதிவாகவே எழுதலாம். பதிவுலகுக்காக செலவு செய்யும் சில மணி நேரங்களையும் பல நாட்கள் இந்தப் பணிக்காகவே நாங்களும், நடுவர்களும் செலவு செய்ய நேர்ந்தது எனில் அது மிகையாகாது. தகுந்த இணைப்புகளுடன் கதைகளின் விமர்சனங்களைக் கோர்த்தது பரிசலின் சாதனை என்று கூட சொல்லலாம், ஏனெனில் அவரது வீட்டு இணைய இணைப்பின் வேகம் அத்தகையது. கடந்த நாட்களில் அவர் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கையும், பிறர் பதிவுகளில் அவர் நடமாட்டமும் இதன் சாட்சி.
அதுவும் நடுவர்கள் ஒரு நாளில் சுமார் 5 கதைகளை மட்டுமே வாசித்துக் குறிப்பெடுத்துக்கொண்டனர். இதனால் தொடர்ந்து வாசிப்பதால் ஏற்படும் சோர்வைப் போக்கவும், ஆர்வத்தைத் தக்கவைத்து முழு ஈடுபாட்டுடன் பணியை மேற்கொள்ளவும் ஏதுவாயிற்று. மேலும் முழுமையான, திருப்தியான முடிவையும், அத்தனைக் கதைகளின் சுருக்கமான விமர்சனங்களையும் அவர்களால் தரமுடிந்தது.
முதலாவது முக்கிய விதியாக கொடுக்கப்பட்ட விதிகளுக்குள் கதை அமைந்திருக்கிறதா எனப் பார்த்தார்கள். பின் கதைக்களம், நடை, சுவாரசியம் போன்ற அடிப்படையில் தனித்தனியாக மதிப்பெண்கள் தந்து முதலிடம் பெற்ற கதைகளைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
முதலிடம் பெற்ற பதினைந்து கதைகள் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அவற்றுள் பரிசுக்குரியவற்றை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் ஒரு முறை பங்குபெற்ற அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நடுவர்கள் வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ் ஆகியோருக்கு எங்கள் அன்பு.
பதிவர்கள் என்றில்லாமல் பின்னூட்டம் போடும் வாசகர்களையும், வலைப்பூவே இல்லாதவர்களையும் எழுத வைத்ததுதான் இந்தப் போட்டியின் வெற்றி என்று எங்களிடம் தெரிவித்த - எங்களின் இந்த முயற்சிக்கு ஊக்குவிப்பை அளித்த - பிரபலங்கள் பலருக்கும் இந்த நேரத்தில் எங்கள் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்கள்தான். முதல் கதை முயற்சி என்று சொல்லி எழுதிய பலரும் மேலும் முயன்று, இன்னும் பல சிறப்பான படைப்புகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
-ஆதிமூலகிருஷ்ணன்
.