Tuesday, June 9, 2009

தற்கொலை செய்ய க்யூ!

இரண்டு நாட்களுக்கு முன் வாசகர் (அவர் அப்படித்தாங்க எழுதியிருந்தார்.. நீ கிழிக்கற கிழிப்புக்கு வாசகரான்னெல்லாம் கேட்கப்படாது!) ஒருவரிடமிருந்து மின்னஞ்சல். அன்றைய நாளிதழில் வந்த செய்தியை ஸ்கேனில் அனுப்பியிருந்தார்.




அதாவது சுவிட்சர்லாந்து நாட்டில் தற்கொலை செய்து கொள்ள 800 பேர் காத்திருக்கிறார்களாம்! அதை குறிப்பிட்டிருந்த வாசகர் “நீங்கள் இதை கற்பனை செய்து ஏற்கனவே உங்கள் வலையில் எழுதியிருந்தீர்கள் என்று ஞாபகம். அதை தேடினேன் கிடைக்கவில்லை..” என்று வருந்தியிருந்தார்! (?!?)

வேலைப்பளுவில் எழுத நேரமில்லாமல் இருக்கும் எனக்கு இந்த மெயில் தெய்வம் போல கண்ணில் பட்டது. ஆகவே அவருக்காக இதோ போன வருடம் எழுதிய ’க்யூவுல நின்னு சாவுங்க’ என்ற பதிவின் மீள்பிரசுரம்!


*************************

சமீபத்தில், (1999-ல்) பழனிக்குச் சென்றிருந்த போது விஞ்ச்சில் செல்ல ஒரு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட க்யூவில் நிற்க வேண்டிவந்தது. அப்போது க்யூவில் ஒருத்தர் “க்யூவுல நிக்கவெச்சு சாகடிக்கறாங்க” என்று புலம்பினார். உடனே வீறுகொண்டு எழுந்த எனது கற்பனைக் குதிரை சிந்தித்தது.

ஒரு வேளை சாவதற்கு க்யூவில் நிற்க வேண்டுமென்றால் எப்படியிருக்கும் என்று. உடனே (அங்க க்யூவுல நின்னு அல்ல.. வீட்டுக்கு வந்து..) அதை எழுதி எல்லா பிரபல பத்திரிகைகளுக்கும் மாறி மாறி அனுப்பினேன். ”போடா... நீயுமாச்சு.. உன் கற்பனையுமாச்சு” என்று எல்லோராலும் நிகாரிகரிக்கப்பட்டு வெற்றிகரமாக என்னிடமே அது பாசத்தோடு வந்து சேர்ந்தது.



இந்த வலையெழுத ஆரம்பித்த பிறகு (நான்: இதையே இன்னும் எத்தினி நாள்தான் சொல்லுவ? இப்போ நீயும் ஓரளவு சீனியர்டா. மனசாட்சி: ஏய்ய்ய்ய்..அடங்கு!) அந்தப் பிரதியை வீடு முழுவதும் தேடிவிட்டேன். கிடைக்கவே இல்லை! (நல்லவேளை!) விட்டுவிடுவோமா? ஏதோ கொஞ்சம் மனதிலிருப்பதை மறுபடி எழுத்தில் வடிக்கிறேன். (ஏண்டா.. ஒரு பதிவுக்கே இவ்ளோ பெரிய முன்னுரை! உன் எழுத்தையெல்லாம் புத்தகமா வெளியிட்டா, அதோட முன்னுரைக்கே இன்னொரு புத்தகம் இணைப்பா குடுக்கணும் போலிருக்கே!)

-------------------------------

ஊட்டி.



தற்கொலை முனைக்கு கொஞ்சம் முன்னால் இருக்கும் கல்லா (COUNTER) ஒன்றின் முன் மிக நீண்ட க்யூ. எல்லாரும் தற்கொலை செய்து கொள்ள, டிக்கெட்டுக்காக க்யூவில் காத்திருக்கிறார்கள். இன்னும் டிக்கெட் கல்லா திறக்கப்படவில்லை. க்யூவில் நிற்பவர்களிடமிருந்து பல சலசலப்புகள்...



“இவனுங்ககூட இதே எழவாப் போச்சு. சரியான நேரத்துக்கு வந்து தொறந்து தொலைய மாட்டீங்கறானுங்க”


“அவனுங்க தொறந்தா போதும், நாமதான் தொலையணும்!”

“யாரு.. சண்முகனா.. யோவ் நீ எங்கய்யா இங்க? நேத்துவரைக்கும் நல்லாத்தானே இருந்த? ஏன், உங்க கல்யாணத்துக்கு நீ காதலிக்கற அந்தப் பொண்ணு வீட்ல சம்மதிக்கலியா?”

“அவங்க வீட்ல சம்மதிச்சுட்டாங்க.. அவதான் கல்யாணத்துக்கு சம்மதிக்கல. ஆமா உனக்கென்னாச்சு?”

“அத ஏன் கேக்கற! என் லவ்வருக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு!”

“உன் லவ்வர்.. அந்த கிழக்கு வீதி புவனாதானே?”

இந்தப் பெயரைக் கேட்டதும் பின்னாலிருந்து ஒரு குரல்..

“அவளை நிச்சயம் பண்ணினத நெனச்சிதான் நானும் இந்தக் க்யூவில நின்னுட்டிருக்கேன்!”

“அடப்பாவி.. அப்போ அவ ஃப்ரீதானா.. நான் உடனே கிளம்பறேன்” என்றபடி முதலாமவன் கிளம்புகிறான்.

இப்போது கல்லாவில் டிக்கெட் கொடுக்கும் பையன் வருகிறான்.

”ஏம்ப்பா, இவ்ளோ லேட்டு?”

”எமகண்டம் ஆரம்பிக்காம குடுக்கக்கூடாதுன்னு எங்க ஓனர் சொல்லிருக்காரு” என்று சொன்னபடி அங்கிருக்கும் புகைப்படமொன்றுக்கு மாலையணிவித்து மரியாதை செய்கிறான்.

“யாருப்பா அந்த ஃபோட்டோல இருக்கறது?”

“அதுதான் எங்க ஓனர்!”

“ஓனர் உயிரோட இல்லையா?”

“மொத டிக்கெட்டே அவருக்குத்தானே கொடுத்தேன்”

“அடப்பாவி” என்று வருத்தப்பட, கல்லா ஆசாமி டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கிறான்.


“டிக்கெட் எவ்வளவுப்பா?”

“ஒண்ணு ஏழரை ரூவா”

“ஏழரையா? சரிதான்.. கம்மி பண்ண மாட்டீங்களா?”

“குடும்பத்தோட வாங்கினா 50% தள்ளுபடி உண்டு”

“50% தள்ளுபடியா?”

“ஆமா.. 50% மட்டும் வாங்கீட்டு, நாங்களே தள்ளிவிட்டுடுவோம்”

“ஓ! அதுதான் `தள்ளு’படியா?.. சரி ஒரு டிக்கெட் குடு” என்றபடி 50 ரூபாய் நோட்டை நீட்டுகிறான்.

“யோவ்.. சாவுகிராக்கி. மொதல்லயே ஏன்யா இப்படி எழவெடுக்கற? சில்லறை குடுக்கறதுக்கென்ன?”

இந்தமாதிரி நாட்டுல நடக்கற சில்லறைப் பிரச்சினைக்காகத்தான் நான் தற்கொலை முடிவே எடுத்தேன். மரியாதையா பாக்கி குடு”

“சரி.. இந்தா”

“என்ன 50 காசு குறையுது?”

“வரும்போது வாங்கிக்கயேன்”

“எங்க வரும்போது? நீ மேல வரும்போதா?”

“அட.. இவன் வேற.. இந்தா 50 காசுக்கு பதிலா சாக்லேட்”

“எந்த நேரத்துல சாக்லேட் குடுக்கறான் பாரு” சலித்துக் கொண்டபடி அவன் டிக்கெட் வாங்கிக் கொண்டு போக, தற்கொலை முனைக்கருகே சில பிச்சைக்காரர்கள்..

“ஐயா.. சாமீ.. இருக்கறதெல்லாம் போட்டுட்டு போயிடுங்கய்யா”

அவன் யோசித்துவிட்டு, இருக்கும் காசையெல்லாம் போடுகிறான்.

ஐயா.. சட்டை பேண்டையும் கழட்டிக் குடுத்துட்டுப் போங்கய்யா”

போங்கடா.. திடீன்னு புன்னைகை மன்னன் கமலஹாசன் மாதிரி பொழச்சுட்டேன்னா? ***யோடயேவா வர முடியும்?”

"என்ன சொல்றீகன்னு தெரியலயே சாமி?”

“திடீர்ன்னு உயிர் பிழைச்சுட்டேன்னா ஜட்டியோடயேவா வரமுடியும்ன்னு கேட்டேன்” (எல்லாம் தமிழ்மண பயம்தான்!)

கொஞ்சம் தள்ளி கையில் பேக்குடன் நிற்கும் ஒருவர்....

“நம்ம கிட்ட ஒரு இன்ஷ்யூரன்ஸ் போடுங்க. ஒருவேளை நீங்க பொழச்சுட்டாலும், உங்க உயிரை எடுக்க ஆகற செலவை எங்க கம்பெனி ஏத்துக்கும்”

“உயிர வாங்காமப் போறியா?”

அப்போது தூரத்தில் ஒரு பெண்....

“சண்முகம்.. ஐ லவ் யூ! உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கறேன்” என்று கத்தியபடி ஓடிவருகிறாள்.

உடனே சந்தோஷமடைந்த சண்முகம் அவளை நோக்கிப் போக, க்யூவில் நின்றிருந்த சிலர்..

“டிக்கெட்டை என்கிட்ட குடுத்துட்டுப் போங்க சார்” என்றபடி அவனைச் சூழ்கின்றனர்.

“யோவ்.. தள்ளுங்கய்யா.. இந்த டிக்கெட்டை தூக்கி எறியறேன்.. யாருக்குக் கிடைக்குதோ அவங்க எடுத்துக்கங்க” என்றபடி வீசுகிறான். அந்த டிக்கெட் தற்கொலைப் பள்ளத்தாக்கை நோக்கிப் பறக்க அங்கிருந்த செக்யூரிட்டிகள் கூட்டத்தை ”டிக்கெட் இருந்தா மட்டும் இந்தப் பக்கம் வாங்க” என்று விரட்டுகின்றனர். கூட்டம் மறுபடி வந்து க்யூவில் நிற்கிறது. அதிலிருந்த ஒருத்தர் கேட்கிறார்..

“அதெப்படி அவன் மட்டும் டிக்கெட் வாங்கீட்டு சாகாமப் போறான்? உங்க ரூல்ஸ்படி டிக்கெட் வாங்கினா திரும்பப் போகக்கூடதில்ல?”

கல்லா ஆசாமி சொல்கிறான்...“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”



*

Monday, June 8, 2009

அரசியல்!

ந்த நபரை நண்பருக்கு ஏற்கனவே தெரியும். தனது பனியன் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஓரிரு முறை துணி ரோல்கள் காணாமல் போவதை துப்பறிந்தபோது இவரிடம் பணிபுரிந்து கொண்டிருந்த இந்த நபர்தான் திருடிச் சென்று விற்றிருக்கிறான் என அறிந்ததும் மிரட்டி, கண்டித்து அவனை வேலையைவிட்டு அனுப்பிவிட்டார் நண்பர். அவன் இப்போது - பத்து வருடங்களுக்குப் பிறகு - கட்சிக்கரையிடப்பட்ட வேட்டியோடு வந்து அமர்த்தலாக நண்பர் முன்னே அமர்ந்து ‘எலக்‌ஷனுக்கு எவ்ளோ டொனோஷன் தர்றீங்க?” என்று மிரட்டலாகவே கேட்கிறான்.

“அதெல்லாம் ****கிட்ட குடுத்தாச்சுப்பா.. நீ.. நீங்க தனியா வேற வாங்க வந்துருக்கீங்களா?”


“அவங்ககிட்ட குடுக்கறது நேரா தலைமைக்குப் போகும். நீங்க இருக்கற ஏரியாவுல இருக்கப்போறது நாங்கதான். இங்க செலவு பண்ண நீங்கதானே குடுக்கணும்? இந்த பத்து வருஷத்துல கம்பெனி எப்படி மாறிப்போச்சு! ரோட்ல நின்னு பார்த்தா ஆஃபீஸ் கண்ணாடி பளபளக்குதே...”

மறைமுகமாக ஆரம்பித்து நேரடியாகவே மிரட்ட ஆரம்பிக்கிறான்.

வேண்டா வெறுப்போடு ஒரு தொகை கொடுத்து அனுப்புகிறார் நண்பர்.


து தேர்தலன்று நண்பரின் நிறுவனத்தில் நடந்த சம்பவம். ஒவ்வொரு நிறுவனமும் கட்சிக்காரர்களிடமிருந்து பல்வேறு வகையிலான மிரட்டல்களோடு வசூலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. வேறொரு நண்பரின் நிறுவனம் இருப்பது கோவை பாராளுமன்றத் தொகுதியில். ஆனால் இருப்பது திருப்பூர்தான். எல்லை அருகே. அவரிடமிருந்து திருப்பூர் தொகுதியைச் சேர்ந்தவர்களும், கோவை தொகுதியைச் சேர்ந்தவர்களும் மாற்றி மாற்றி அழைத்து வசூலில் இறங்கியதில் நொந்துபோயிருக்கிறார் அவர்.

ங்களிடம் இரண்டு மூன்று முறை அலைந்து வசூல் கேட்டவர்களிடம் மாறி மாறி வெவ்வேறு காரணங்கள் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தேன். ‘குடுக்கறதும் குடுக்காததும் உங்க இஷ்டம். ஆனா உங்க மொதலாளிகிட்ட சொல்லுங்க. எங்க ஏரியாவுலேர்ந்து முப்பது நாப்பது பேர் உங்ககிட்ட வேலைக்கு வர்றாங்க. அத ஞாபகம் வெச்சுக்கோங்க’ என்கிறார் அவர். முப்பது பேரில் நாலைந்து பேரை மூளைச் சலவை செய்து நிறுவனத்தில் பாலிடிக்ஸ் ஏற்படுத்துவது சுலபம். ஆகவே வேறு வழியில்லாமல் அவரையும் கவனித்து அனுப்பினோம்.

தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு நான் கண்ட காட்சி... திருப்பூரின் முக்கியப் பகுதியில் அமைந்த ஒரு கட்சி அலுவலகம். மனைவி காய்கறி வாங்கிக் கொண்டிருக்க பதிவுக்கு ஏதாவது தேறுமா என்று பாராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். அந்தக் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கரைவேட்டியுடன் ஒருவர் (ன்?) “சொன்னதக் குடுக்கறியா இல்ல வேட்டியக் கழட்டட்டுமா?” என்று உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தான். ‘கழட்டீட்டுப் போ’ என்று அவனுக்கெதிரிலிருந்த மீசை வைத்த ஆசாமி சொல்லிக் கொண்டிருந்தான். இவன் கொஞ்ச நேரக் கத்தலுக்குப் பிறகு நட்ட நடுரோட்டில் அந்த வேட்டியைக் கழட்ட எவனோ ஒருவன் “இந்தாண்ணே” என்று பேண்ட் ஒன்றை நீட்ட அதை ரோட்டிலேயே அணிந்தான். “இனிமே உன்கட்சி வேட்டியக் கட்ட மாட்டேன்... நாளைக்கு எப்படி ஆளைக் கூட்டுவன்னு பார்க்கறேன்” என்று கத்தியபடியே பேண்ட் கொடுத்த ஆசாமியுடன் மொபட்டில் பறந்தான்.

மீசைக்காரரை ஒன்றிரண்டு பேர் “குடுத்துத்தொலைக்க வேண்டியதுதாண்ணே..” என்று கடிந்துகொள்ள “கேட்டதவிட எச்சா குடுத்தாச்சுய்யா.. சும்மா சும்மா கேட்டா.. ஒரு அர்த்தம் வேண்டாம்? இன்னும் ஒரு வாரத்துக்கு வெச்சு செலவு பண்ணணுமில்ல?” என்று நியாயம் பேசினார்.

இதையெல்லாம் சொல்லி புலம்பினால்.. ஒரே பதில்தான்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....

அப்படியா?

சரி.... இதெல்லாம் சாதாரணம்தான்.. ஜெயித்தபிறகு இவர்கள் செய்வதென்ன? பிறரிடம் இப்படி வாங்கி வசூலித்ததை ஏதோ உழைத்து சம்பாதித்து செலவு செய்தது போல “சும்மாவா? எவ்ளோ செலவு பண்ணினோம் தெரியுமா? அதையெல்லாம் வட்டியும் முதலுமா வசூலிக்க வேண்டாமா?” என்றபடி மீண்டும் வசூல்வேட்டையில் இறங்குவது.. அதைவிடக் கொடுமை!

யாரைச் சொல்லியும் குற்றமில்லை!

Tuesday, June 2, 2009

யப்பா.. சாமீ.. முடியல...


01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எந்தப் பெயரைக் கேட்கிறீர்கள்? பரிசல்காரனா.. கிருஷ்ணகுமாரா? பரிசல்காரன் வந்த காரணம்... இதோ இங்கே இருக்கிறது. கிருஷ்ணகுமார்.. ம்ம்ம்.. குருவாயூர் கோவிலில் சோறு கொடுத்துவிட்டு, பழனி வந்து எனக்கு மொட்டையடித்தார்களாம்... அப்போது கிருஷ்ணன்+குமார் என்று முடிவு செய்து கிருஷ்ணகுமார் என்று பெயர் வைத்தார்களாம். (வரலாறு முக்கியம் அமைச்சரே!) இரண்டுபெயர்களும் மிகப்பிடிக்கும்!

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இரண்டாவது கேள்வியே பவுன்ஸராக இருக்கிறது... சமீபத்தில் அழுதது என்று வேண்டுமானால் சொல்லலாம்.. அது சர்வம் படத்திற்குப் போகலாம் என்று நண்பன் அழைத்தபோது!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

Signatureஆ? Handwritngஆ?

Handwritng முதலில் அழகாக இருந்தது. இப்போது இல்லை. Signature முதலில் என்னமோ மாதிரி இருப்பதாகப் பட்டது. இப்போது இல்லை. இரண்டாவது பிடிக்கும். ஏனென்றால் முதலில் அது Signatureஆக இருந்து, இப்போது அதைப் போட்டால் பலர் Autograph என்பதால். (ச்ச்ச்ச்சே!)

4).பிடித்த மதிய உணவு என்ன?

ஹையோ! உணவு குறித்த கேள்வின்னாலே அலர்ஜிங்க எனக்கு.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அலைவரிசையைப் பொறுத்து.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டிலுமே நனையப் பிடிக்கும்.

(இந்தக் கேள்விக்கு குளிக்க’ என்கிற பதம் தவறென்று நினைக்கிறேன். இவற்றில் குளிப்பதைவிட நனைதலைத்தான்தான் மிக விரும்புவார்கள்... இல்லையா? அருவி ஒருபடி மேல். (அருவி என்றது விக்ரமாதித்யன் கவிதை நினைவுக்கு வருகிறது... எங்கே யாராவது சொல்லுங்கள் பார்ப்போம்!)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
வாட்ச். என்னுடைய வாட்ச்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

டித்த – எதுவுமே இல்லையோ என்று இந்தக் கேள்விக்கு அரைமணிநேரமாக யோசித்துக்கொண்டிருப்பது.

டிக்கா – கோபப்பட வேண்டிய விஷயங்களுக்குகூட கோபப்டாமல் அட்ஜஸ்ட் செய்து கொண்டு GOODDY GOODY இமேஜுக்காக ரோஷமற்றிருப்பது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

டித்த: – எனக்கு அவரை எத்தனை சதவிகிதம் பிடிக்கிறதோ அதைவிட ஒருசதவிகிதமாவது அதிகமாக அவருக்கு என்னைப் பிடிக்கிறது என்பது.

டிக்கா: என் பி - டித்த, டிக்காதவை பற்றி எழுத எனக்கிருக்கும் உரிமையைவிட, என் சரிபாரிதியின் பி-டித்த, டிக்காதவை பற்றி எழுத அவர் எனக்குக் கொடுத்திருக்கும் உரிமையை மிக மதிப்பதால்... இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதைத் தவிர்க்கிறேன்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

இளையராஜாவின் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்தறேன்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
இப்போது இரவு 2.33. வீட்டில் மேலாடை ஏதுமில்லை. கீழாடை பெர்முடாஸ். பிஸ்கெட் கலர். (ஐயா.. இந்த தொடரை ஆரம்பிச்ச கேள்வித் திலகமே.. இந்தக் கேள்வியின் மூலம் தாங்கள் எம்மை வாசிக்கும் வாசகர்களுக்கு சொல்ல விரும்பும் சேதி என்னவோ?)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இப்போது ஏதுமில்லை. அடிக்கடி கந்தசாமி படப்பாடல்கள்.. அனைத்தும்.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிப்புற வர்ணமா.. எழுதும் வண்ணமா? எப்படியிருந்தாலும் நல்ல பேனாவாக எழுதும் வண்ணம் இருத்தல் பிடிக்கும். (11வது கேள்வியின் ப்ராக்கெட் வாசகங்கள் இதற்கும் பொருந்தும்)

14.பிடித்த மணம்?
பவிழமல்லிப் பூவாசம்.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

வடகரை வேலன்: ஒருவர் குறித்த குறைகளை சம்பந்தப்பட்டவர்களிடமும், நிறைகளை பிறரிடம் சொல்லும் இவரது குணம்.

எம்.எம்.அப்துல்லா: தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும், பிறரது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் வித்தியாசம் இருப்பினும், பிறருடன் பழகுகையில் அவர்களுக்கு விருப்பு வெறுப்புகளை உணர்ந்து அவர்களுக்குத் தக்கவாறு நடந்து கொள்ளும் பாங்கு. (இதுக்கு ஸ்டேட் பாங்கு-க்கும் எந்த சம்பந்தமில்லை)

பைத்தியக்காரன்: இவரது வாசிப்பனுபவம்.

மூவரையும் அழைக்கக் காரணம் அடுத்து அவர்கள் எழுதட்டுமென்றுதான். சரியா?

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

இந்தத் தொடருக்கு அழைத்த இனியவனின், இந்தத் தொடர் குறித்த கேள்வி பதிலின் 15வது கேள்வியின் முதல் பதிலின் இரண்டாவது வரி மிகப்பிடித்திருப்பதால்....

அவரது எல்லா பதிவும் பிடிக்கும்! (நல்லவேளை சுஜாதா இல்லை....)

(அந்த பதிலிலிருந்தே அவர் எவ்வளவு நகைச்சுவை உணர்வு மிக்கவர் என அறியலாம்!)

17. பிடித்த விளையாட்டு?

மூன்று குழி வெட்டி, அதில் கோலிக் குண்டை கடத்திக் கடத்தி ஒரு விளையாட்டு விளையாடுவோம்.. சிறுவயதில். அதற்கிணையான சுவாரஸ்யம் இதுவரை வேறெந்த விளையாட்டிலும் நான் அடையவில்லை.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை! (ஐயா சாமீ... கேள்வியின் நாயகா... முடியல.)

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நகைச்சுவை கலந்த செண்டிமெண்டான சண்டையிருக்கும் காதல் த்ரில்லர் படங்கள். (காதலே த்ரில்தானே?!?)

20.கடைசியாகப் பார்த்த படம்?

ராஜாதிராஜா எனும் லோ க்ளாஸ் கிங் காவியம்.

21.பிடித்த பருவ காலம் எது?

பருவகாலம் என்றாலே படமும் பிடிக்கும். படிக்கவும் பிடிக்கும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

திசை அறியும் பறவைகள்.


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தெரியவில்லை. (யப்பா சாமீ!)


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

டித்த: உங்களுக்கு மணியார்டர் வந்திருக்கு எனும் போஸ்ட்மேனின் குரல்.

டிக்கா: சாலையில் தேவையில்லாமல் கேட்கும் ஹாரன் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

யோசிச்சுச் சொல்றேன்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இல்லை. எனக்கிருக்கும் எந்தத் திறமையுமே, உலகில் ஏதோவொரு மூலையில் வேறு யாருக்காவது இருக்கும்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

மனைவி, குழந்தைகள் சுமையுடன் நடக்க கணவன் சிகரெட் பிடித்தபடி முன்னே நடக்கும் காட்சி.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பேசிக்கலி ஐயாம் எ சோம்பேறி.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கோவா. (இதுவரை போனதில்லை. கேள்விப்பட்டவரை..)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எப்படியும் என்றில்லாமல் இப்படித்தான் என்று இருக்கவேண்டுமென்று ஆசை.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
வலைமேய்தல். அலைபேசல். (மனைவி இல்லதப்போ இவற்றை நான் செய்தால் அவர்களுக்குப் பிடிக்கும்!)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

LIFE IS BEAUTIFUL

.