Tuesday, July 8, 2008
அவியல் – ஜூலை 08 - 2008
-------------------------
பெரியவள் மீராவிற்கு இன்று பிறந்தநாள். பத்துவயது முடிந்துவிட்டது. நல்ல குணங்களும், அறிவும், ஆரோக்கியமுமாய் அவள் வாழ வலையுலகப் பெரியோர்களே... வாழ்த்துங்கள்!
--------------------------------------
குசேலன் பாடல்கள் முதலில் கேட்பதற்கு `ஒண்ணும் பெரிசா சொல்றதுக்கில்லையே’ என்றிருந்தது. கேட்க, கேட்க பரவாயில்லை ரகம். `அட.. பரவாயில்லையே’ என்று தோன்ற இன்னும் கொஞ்சம் சிரமப் பட்டிருக்கலாம். எனக்கு மிகப் பிடித்தது `வெயிலோடு விளையாடி’ மியூசிக்கில், வேறு மெட்டில் ஜி.வி.பிரகாஷ் போட்டிருக்கும் `பேரின்பப் பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா’ என்ற பாடல். ரஜினி புகழ் பாடும் பாடல் என்றுதான் முதலில் நினைத்தேன். நன்றாக கேட்டபோது `அவர் தோழனே.. உனைப்பாடவே.. சுகம் கூடுதே’ என்ற வரிகள், இது, படத்தில் சிகை அலங்காரனாக நடிக்கும் பசுபதிக்காக எழுதப்பட்ட பாடல் என்பதைப் புர்ய வைக்கிறது. யுகபாரதி பின்னியெடுத்திருக்கிறார். ஏற்கனவே விகடனில் அவரெழுதிய தெருவாசகத்தில் இது போன்ற சாமான்யர்களை தன் கவிதையில் பெருமைப்படுத்தினார். (ஆனால் இதை எழுதும்போதுதான் எடுத்துப் பார்த்தேன். அதில் எழுதிய வார்த்தைகளை இந்தப் பாடலுக்கு அதிகமாக பயன்படுத்தவில்லை! சபாஷ் யுகபாரதி!!) நான் பாடல் வரிகளுக்காகவே பாடல்களை ரசிக்கும் ஜாதி. இதோ அந்தப் பாடலில் சில வரிகள்:
“இறைவன் காலில் முடியை வைத்து
வேண்டிக்கொள்ள எல்லோரும்
இவனின் கையை முதலில் தேடி போகின்றோமே எந்நாளும்”
“பிறர் தலையின் கனமெல்லாம்.. இவனாலே குறையாதோ”
“அடுத்த மனிதன் வளர்ச்சி கண்டு
மகிழும் மனிதன் உன்போலே
எவருமில்லை உலகில் இங்கு
தலையும் தருவார் தன்னாலே”
”இவன் கத்திரிக்கோலை செங்கோலாக்க வேலை செய்பவன்
நீ சோப்புப் போட்டு செய்யும் தொழிலால் வாழ்பை வெல்பவன்”
அதேபோல `சொல்லம்மா சொல்லம்மா’ பாடலில் பா.விஜய்-ய்யின் வரிகளும் சூப்பர்.
“Insurance இல்லாம வாழும் நமக்கு
Installment வாங்காம இன்பம் இருக்கு”
--------------------------------
என் நெடுநாள் நண்பன் ரகுவை நேற்று சந்தித்தேன். நண்பனென்று யாரைச் சந்தித்தாலும் “ஐயா.. சாமி.. நான் பிளாக்-ல எழுத ஆரம்பிச்சிருக்கேன்.. படீங்க சாமீ” என்று கெஞ்சுவதுதானே முதல் வேலை? அதே போல அவனிடமும் சொன்னேன்.
“எப்படா எனக்கு கம்ப்யூட்டரும், நெட் கனெக்ஷனும் வாங்கித்தர்ற?” என்று கேட்டான்.
“நான் எதுக்குடா உனக்கு வாங்கித் தரணும்?”
“முதல்லயெல்லாம் உன்கதை குமுதத்துல வர்றப்ப, குமுதம் வாங்கித்தந்து படிக்கச் சொல்லுவியில்ல? அதேமாதிரி....”
அதுசரி!
-----------------------------------------
அப்பாவின் காரியங்கள் நடந்து கொண்டிருந்தபோது நான், கிரேசி கிரி, செந்தில், தம்பி ராம் எல்லாருமாக உட்கார்ந்து என் வலையெழுத்துக்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். (உனக்கு வேற வேலையே இல்லியாடா?) உள்ளே ஒரு அறையிலிருந்து “எல்லாத்தையும் விட அவியல்தான் நல்லாயிருக்கு” என்றும், “ஆனா அவியல்ல ஏன் முருங்கக்காய் இல்ல?” என்றெல்லாமும் குரல்கள் கேட்டது. `ஆஹா.. நம்ம அவியல்ல முருங்கக்காய் சமாச்சாரத்தை எதிர்பார்க்கிறார்கள் போல ‘ என்று அப்போது போட்ட ஒரு அவியலில் நமீதா படமெல்லாம் போட்டேன். அடுத்த நாள் சாப்பிடும்போது என் கஸின் சுதாக்கா ”எல்லாருக்கும் நான் பண்ணின அவியல்தாண்டா பிடிச்சிருக்கு”
என்றபோதுதான் எந்த அவியலைப்பற்றி பேசியிருக்கிறார்கள் என்று புரிந்தது.
-----------------------------------
"எங்கே இந்தக் கவிஞர்கள்?” வரிசையில் இன்று மேகவண்ணன்
மென்மையாகத்தான் கைகுலுக்கினான்
ஆனாலும் வலிக்கிறது
காதலியின் கணவன்.
Monday, July 7, 2008
ஒரு டைரிக்குறிப்பும், ஒரு காதல் மறுப்பும்
‘அந்த ஸ்கூட்டர் உன்னை நோக்கித்தான் வருகிறது’ என்று என் மூளை கண்டுகொண்டு, மூளை கைக்கும், காலுக்கும் ‘பிரேக்கைப் பிடி’ என்று செய்தி அனுப்பி, அது செயல்படுத்துமுன் அந்த விபத்து நடந்துவிட்டது.
எண்பது கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த என் பைக், எதிரே வந்த ஸ்கூட்டரில் மோதி, அந்த ஸ்கூட்டரில் இருந்தவர் தடுமாறி, பின் சீட்டில் குழந்தையுடன் அமர்ந்த அவர் மனைவி தூக்கியெறியப்பட்டு, அவர் ஒரு புறமும், மனைவி ஒருபுறமும் விழுந்தனர். என் கண் முன்னே அவரது மனைவியுடன் அமர்ந்திருந்த மூன்று அல்லது நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தை பத்தடி உயரத்தில் பறந்து அருகிலிருந்த கல் குவியலில் விழுந்தது.
“அவ ரொம்ப உறுதியா இருக்காங்க. நீங்க சொன்னாலும் கேப்பா-ன்னு எனக்குத் தெரியல”
“ஏய்.. என்னடி சொல்ற நீ? அடிக்கற அடில கேப்பாளா இல்லயான்னு தெரிஞ்சுடும். நம்ம காதல் கல்யாணத்துனால சொத்தெல்லாம் விட்டுட்டு வந்து, இந்த இருபது வருஷமா கஷ்டப்பட்டு கார், பங்களான்னு வாங்கி ஊர்ல பெரிய மனுஷன்னு பேர் எடுத்திருக்கேன். நம்ம பொண்ணுக்கு எம்.எல்.ஏ பையனை முடிச்சு வைக்கணும்-ன்னு படாதபாடு பட்டு பேச்சுவார்த்தை நடத்தி எல்லாம் கைகூடி வர்ற நேரத்துல-அவ எவனோ ஊர் பேர் தெரியாதவன லவ் பண்ணுவாளாம், நான் அட்சதை போடணுமாம். வரட்டும். பேசிக்கறேன்”
முழுக்க முழுக்க என் தவறினால்தான் அந்த விபத்து நேர்ந்தது. ஆனால் எனக்கு ஒன்றும் பெரிய அடியில்லை. எதிரே வண்டி ஓட்டியவருக்கும், அவரது மனைவிக்கும் கை, கால்களில் சிராய்ப்பு. ஆனால் தூக்கியெறியப்பட்ட குழந்தைக்கு கண்ணருகே பலத்த அடிபட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. என்னால்தான் அந்தக் குழந்தைக்கு இந்த நிலைமை என்றறிந்ததும் சேர்ந்த கூட்டம் என்னை அடிக்குமளவு வந்துவிட்டது. என் மனைவி அவசரமாய் பிரசவ வலியினால் பக்கத்து வீட்டுக்காரர்களால் மருத்துவமனை சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததால், அந்தப் பதட்டத்தில் பைக் ஓட்டியதால்தான் இது நேர்ந்ததாகச் சொன்னேன். அந்தக் குழந்தையின் தந்தை கூட்டத்தினரை சமாதானப் படுத்தி, ஒரு காரை அழைத்து குழந்தையை அவசரமாய் மருத்துவமனை அழைத்துச் செல்ல ஏறினார். அருகில் என் மனைவி சேர்க்கப்பட்டிருந்த பிரபல மருத்துவமனைக்கே காரை விடச் சொன்னேன் நான். அந்தக் குழந்தையின் வலது கண்ணருகே ரத்தம் வழிந்துகொண்டிருப்பதை பார்க்க, தாங்கவில்லை என்னால்.
“என்னப்பா.. இதென்ன பிஸினஸா? காதல் கல்யாணத்துனால உங்க வாழ்க்கைல எதை இழந்துட்டீங்க? இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு தேவையான பணத்தை சேர்த்தியாச்சு.. சொந்தக்காரங்களைப் பத்தி ஏன் கவலைப் படறீங்க? அவங்க என்ன செஞ்சாங்க உங்களுக்கு?”
“ஏய்.. என்ன எதிர்த்து எதிர்த்துப் பேசற?”
“ஐயோ.. என்னங்க இது.. வளர்ந்த புள்ளையை அடிக்கறீங்க?”.
“நீ சும்மா இருடி...”
“அப்பா.. என்னை அடிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி நான் தேர்ந்த்தெடுத்த ஆள் சரியானவரா, இல்லியா-ன்னு பாருங்க. அவரை கூட்டீட்டு வந்திருக்கேன். வெளிலதான் வெயிட் பண்றாரு. பேசுங்க”
மருத்துவமனையில் டாக்டர் சொன்னதைக் கேட்டதும் இடி இறங்கியது போல, மயங்கிச் சரிந்தார் அவரது மனைவி. வலது கண்ணருகே பலத்த அடி பட்டுவிட்டதால், கண்ணின் நரம்பு நேரடியாக பாதிக்கப் பட்டுவிட்டதாகவும் பார்வை திரும்பக் கிடைப்பது மிகவும் கஷ்டம்தானென்றும் கூறினார் டாக்டர். பிரசவ வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த என் மனைவியை சென்று பார்க்கக் கூட மனமில்லாமல் அமர்ந்திருந்தேன் நான். அந்தப் பையனின் அப்பாவோ.. சிறிது நேரம் அழுதவராய்.. என் அருகே வந்து “என் மேலயும் தப்பு இருக்குங்க.. என் விதி அப்படி. நீங்க உங்க மனைவியை பாருங்க. நாம அப்புறமா சந்திக்கலாம்” என்றார். அவரது நண்பர்களும், சொந்தங்களும் என்னை சபித்தபடி இருக்க நான் குனிந்த தலையுடன் என் மனைவியைப் பார்க்கச் சென்றேன்..
“வணக்கம் அங்கிள்”
“ம்..ம்..”
“என் பேர் விக்னேஸ்வர். சின்னதா ஒரு கார்மெண்ட் ஃபேக்டரி வெச்சிருக்கேன். எந்தவிதமான் கெட்ட பழக்கமும் இதுவரைக்கும் இல்ல. அம்மா அஞ்சு வருஷம் முன்னாடி தவறீட்டாங்க. அப்பா மட்டும்தான். என் காதல் அவருக்கு தெரியும். ரொம்ப நல்ல மனுஷன். அம்மா பேர்ல ஒரு டிரஸ்ட் வெச்சு நடத்தீட்டு வர்றார். எனக்கு மாசம் ஐம்பதாயிரத்துக்கு குறையாம வருமானம் வரும். சொந்த வீடு, கார் –ன்னு செட்டில் ஆகிட்டேன். ஆனா எனக்கொரு குறை இருக்கு..”
“விக்னேஷ்..”
“நீ பேசாம இரு ரம்யா. சார்.. உங்க பொண்ணுக்கு இதுபத்தி தெரியும்.. உங்ககிட்ட இப்போதைக்கு சொல்ல வேண்டாம்ன்னா.. ஆனா எனக்கு மறைக்க விருப்பமில்ல”
என் மனைவிக்கு பெண்குழந்தை பிறக்க, அதற்குப்பிறகு அன்றிரவு அவரை சந்தித்தேன். அவரது பையனுக்கு கண்பார்வை வர வாய்ப்பிலை என்றும், அப்போதைக்கு ஆர்ட்டிஃபீஷியலாக கண் பொருத்த முடிவு செய்துவிட்டதாகவும் கூறினார். மருத்துவசெலவுக்கு பணம் தருவதாக நான் சொன்ன போதும், கேஸ் போடச் சொல்லி அவர் தரப்பிலிருந்து பலபேர் சொன்ன போதும் எல்லாவற்றையும் மறுத்தார். என் வாழ்க்கையில் நான் செய்த இந்தப் பாவத்திற்கு என்ன பரிகாரம் செய்யப் போகிறேன்?
“எனக்கு வலது கண் இல்ல. சார். நீங்க பார்க்கறது ஆர்ட்டிஃபீஷியல் கண்” என்றான் விக்னேஸ்வர்.
"நீ.. நீ.. அந்த விக்னேஸ்வரா? சோபாவை விட்டு எழுந்தார் ரம்யாவின் அப்பா.
Sunday, July 6, 2008
பார்வைக்கு கொஞ்சம் பொன்மொழிகள்
- காந்திஜி
Both optimists and pessimists contribute to society. The optimist invents the aeroplane, the pessimist, the parachute.
-George Bernardshaw
அசுத்தம் செய்யாதீர்கள். நாளை நீங்கள் குடிவர உள்ள இடம்.
-ஒரு இடுகாட்டு வாக்கியம்
நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்துபோன பின், எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.
-ஜார்ஜ் ஸவைல்
ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.
-??
எந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்... விடிகாலையில் எழுவதைத் தவிர...
-ஈஸ்ட்மென்
விழிப்புடனிருங்கள். உங்கள் விரலிடுக்கில் கூட வாய்ப்புகள் நழுவிப் போகும்.
-??
உண்மையை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்.
-??
It is so simple to be happy. But it is so difficult to be simple.
-??
எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
-ஹிட்ச்சாக்
He who knows and knows not that he knows is asleep. Wake him.
He who knows and knows that he knows is wise. Follow him.
-??
உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.
-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தில் தற்போது இருந்துவரும் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.
-John. A. Skinler
இன்னைக்கு ஒரு மேட்டரும் கிடைக்கல!!
-கிருஷ்ணகுமார்.