மண்டபத்தில் இருந்தபோது செந்தழல் ரவியிடமிருந்து அலைபேசி அழைப்பு. ஃபோனை எடுக்கவா, இல்லை ‘எதுவும் செய்ய வேண்டாம் பாஸ்’ என்று பேசாமல் இருப்பதா என்று குழம்பி பிறகு எடுத்து அவரை வடவள்ளியில் நிற்கச் சொல்லிவிட்டு, போய் அவரைச் சந்தித்து அழைத்துக் கொண்டு இருவருமாய் மருதமலை சென்றோம்.
போகிற வழியிலேயே “நான் எதுக்கு காதுகுத்துக்கெல்லாம் வரேன்?” என்று அவரே அவரைக் கேட்டுக் கொண்டிருந்தார். “எனக்கெப்படித் தெரியும்? இப்ப வர்றீங்களா இல்லையா?” என்று மிரட்ட வேண்டியதாயிற்று.
நாங்கள் மருதமலையை அடைந்தபோது ‘பதிவர்கள் கூட்டத்தால் மருதமலை அதிர்ந்தது’ என்று எழுத ஆசைதான். ஆனால் எங்கள் இருவரைத்தவிர அங்கு பதிவர்கள் என்று யாருமே இல்லை. அதிஷா கூட இல்லை! கூப்பிட்டால் ‘வந்துட்டே இருக்கேன் கிருஷ்ணா’ என்றார்!
நானும் செந்தழல் ரவியும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ரவி அவரது வேலையைப் பற்றி மிக சுவாரஸ்யமாய் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மணிநேரம் கழித்து அதிஷா அவரது குடும்பத்தாரோடு வந்து சேர்ந்தார். கோயிலை நோக்கிப் போகும் போது, வழியிலேயே ஒரு கரம் என் தோளைத் தொட்டது. (தமிழ்வாணன் நாவல் படிக்கற மாதிரி இருக்கா?) திரும்பினால், வடகரை வேலன். நால்வருமாய் இன்னும் கொஞ்ச நேரம் நடந்தபோது ‘ஈரவெங்காயம்’ சாமிநாதன் அவரது மனைவியோடு நின்றுகொண்டிருந்தார்.
வடகரைவேலன், அதிஷா, செந்தழல்ரவி, சாமிநாதன், பரிசல்காரன் (இதை அரபிக் ஸ்டைலில் படிக்கவும்!)
சீக்கிரம் காதுகுத்துவாங்கன்னு பார்த்தா, அதிஷாவோட அம்மா ‘மொதல்ல எல்லாரும் உக்காருங்க’ன்னு சாப்பாடு போட்டாங்க. வயிறு முட்ட சாப்பிட்டப்புறம் எங்க பதிவர் சந்திப்பு நடத்துறது? ஆளாளுக்கு கொஞ்ச நேரம் மொக்கையாப் பேசீட்டு இருந்தோம். சாமிநாதன் அவரோட மனைவிகூட சென்னை சில்க்ஸ் புதிய கிளைக்கு போகணும்ன்னு சொல்லி கிளம்ப, செந்தழல் ரவியும், அவரோட மனைவி சீக்கிரம் வரச் சொல்லியிருக்காங்கன்னு சாமிநாதன் கூடவே கார்ல போய்ட்டாரு.
அதுக்கப்புறம் அதிஷாவோட தங்கை குழந்தைகள் ஹரிணி, சிவாஷினிக்கு மொட்டை போட்டு, காது குத்தற வைபவம் நடந்தது. நானும் வடகரை வேலனும் இருந்து குழந்தைகளை வாழ்த்தினோம்.
(ஹரிணிக் குட்டியும், அதிஷாவும்)
(சிவாஷினியும் அதிஷாவும்)
அதற்குள் வடகரை வேலனுக்கு அவரது மகளிடமிருந்து மிரட்டல் வரவே, அவரும் கிளம்பிவிட்டார்.
‘காலையிலிருந்தே தம் அடிக்கல’ என்று புலம்பிக் கொண்டேயிருந்த அதிஷா அவரது வீட்டாரிடம் அனுமதிபெற்றுக் கொண்டு என்னோடு வந்தார். மருதமலையை விட்டு பைக்கில் இறங்கும்போதுதான் கவனித்தேன். வழியெங்கும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்திருந்தார்கள். அதிஷாவிடம் புலம்பியபோது அவர் சொன்னார்.....
வேண்டாம். அவருகிட்டயே கேட்டுக்கங்க.
இருவருமாக அன்னபூர்ணா சென்று சில்லி புரோட்டா சாப்பிட்டுவிட்டு (இதெல்லாம் யாருய்யா கேட்டா... பதிவெழுத மேட்டர் இல்லீன்னா இந்தக் கொடுமையெல்லாம் பண்ணக் கூடாது..) நேராக சஞ்சய் வீட்டுக்குப் போனோம்.
ஞாயிறன்று கூட பொறுப்பாய் வேலை செய்துகொண்டிருந்த சஞ்சய் எங்களை வரவேற்று உபசரித்தார். அவரும், அதிஷாவும் பழைய தோஸ்த் ஆகையால் நான் சும்மா அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
(சஞ்சயும் அதிஷாவும் பின்னே ஞானும்)
அதற்குப் பிறகு என் ப்ரதர்-இன்-லா வீட்டுக்குப் போய், அங்கிருந்து அதிஷா வீட்டுப் போய் அவரை பத்திரமாக ஒப்படைத்தேன்.
(அதிஷா வீட்டில் ஹரிணி)
பி.கு: அதிஷாவோட தங்கை மகள் ஹரிணி செமயா போஸ் குடுக்குதுங்க!