Monday, November 15, 2010

சவால் சிறுகதைப் போட்டி - விமர்சனங்கள்

நாங்களோ, நடுவர்களோ எதிர்பார்த்தது போல அத்தனை சுலபமானதாக இல்லை முடிவுகளை அறிவிப்பது! குறிப்பிட்டிருந்த நாள் கடந்து கொண்டிக்கிறதே என்று அவசர அவசரமாக அறிவிக்கவும் அவர்கள் தயாராக இல்லை.

கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுக்கும் சுருக் - விமர்சனங்களை நடுவர்கள் அனுப்பிவிட்டனர். கடைசி கட்ட தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

விமர்சனங்களைப் பதிவிட்டபின் முடிவு அறிவிக்கப்படும்.

நிச்சயமாக இந்தவாரத்தில்!

தாமதத்திற்கு தலை குனிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

*****************************

இனி விமர்சனங்கள்

*** **** ***


1. உனக்காக எல்லாம் உனக்காக - துவாரகன்

ஆரம்பிக்கும்பொழுது நன்றாக இருப்பதாக தோன்றினாலும் நடைபுரண்டு சிறுகதைக்கான அழுத்தத்தை தரவில்லை. சிவா என்று மூன்றாம் மனிதராக ஆரம்பிப்பது நடுவில் நான் என்று மாறி மீண்டும் சிவா என்று மாறுகிறது. சுத்த தமிழிலும் இல்லாமல் வழக்குத் தமிழிலும் இல்லாமல் முற்றிலும் வேறு விதமான வார்த்தைகள் அந்நியப்பட்டு நிற்கின்றன. அதேபோல் முடிவில் எதற்காக பரந்தாமன் & காமினிகளின் தற்கொலைகள் சரியாக ஜஸ்டிஃபை செய்யப்படவில்லை.

*** *** ***

2. காமினி என்னைக் காப்பாத்து - விஜி

நல்ல முயற்சி. இந்த மூன்று வரிகளையும் ஒரு சீரியல் கதாசிரியர் எழுதி குழப்படைவதைப் போல முடித்திருப்பது நல்ல எதிர்பாராத திருப்பம். என்னதான் போட்டியின் விதிமுறையில் எத்தனை வரிகள் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் டெவலப் செய்திருந்தால் அருமையாக வந்திருக்கும். நல்ல முயற்சி.

*** *** *** ***

3) மணிகண்டன் விஸ்வநாதன் எழுதிய கதைக்கான விமர்சனம் (என் இந்த போஸ்டில் ஒன்பதாவது கதை)

பரிசல் கொடுத்திருந்த மூன்று வரிகளை மட்டுமே எழுதி முற்றும் போட்டிருக்கிறார் நண்பர். பள்ளிக்கூடம் / காலேஜில் படிக்காமல் எக்ஸாமிற்கு போய் கேள்வியை மட்டும் நாலு தடவை எழுதி பக்கத்தை நிரப்புவது நினைவுக்கு வருகிறது.. :)

ஒருவேளை கதையை படிப்பவர்களே இந்த வரிகளைச் சுற்றி கதையை கட்டமைத்துக்கொள்ளும் சுதந்திரத்துடன் எழுதப்பட்ட பின்நவீனத்துவ கதையா என்றும் சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை :)

*** *** *** ***


4) காமினி இருக்க பயமேன் - கலாநேசன்

காமினியை ஒரு துப்பறியும் புலியாக காட்டி அதற்கு நமக்கு தெரிந்த கதாபாத்திரங்களை உதாரணத்துடன் முதல் பத்தி : ஒரு நல்ல ஆரம்பம். நடை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். எழுத்துப்பிழைகளை மறுவாசிப்பில் திருத்தி இருந்தால் (உலவு, விரம்) இன்னும் நன்றாக இருந்திருக்கும். வைரம் என்பதை அந்த பெயரில் உள்ள சிறுவனைக் கடத்த முயல்வதாகக் காட்டி இருப்பது நல்ல முயற்சி

5. 1,2,3,4 - நந்தகுமார் குருஸ்வாமி

கொடுக்கப்பட்ட மூன்று வரிகளையும் அப்படியே எழுதி நான்காவதாக இன்னொரு வரியை சேர்த்து கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். சுமார் 50 வரிகளிலாவது சொல்ல வேண்டியதை இரண்டே வரிகளில் சொல்ல முயற்சிப்பதால் ஒருமுறை படித்து புரிந்து கொள்ள இயலவில்லை. கதை புரிந்து கொள்ளவே மறுவாசிப்பு தேவைப்படுகிறது. விரிவான சிறுகதையாக எழுதியிருந்தால் நல்ல முயற்சியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

6.
விபூதி வாசனை - விதூஷ்

பதிலளிக்கப்படாத பல கேள்விகள். மலையடிவாரத்தில் வந்தவர் யார்? சிவாவை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் டாக்டர் ஏன் அவரை முதலிலேயே பிடிக்கவில்லை. கதையோ அல்லது அதன் நடையோ புரியவில்லை. கழுத்து நெறிபட்டு சாவின் விளிம்பில் மர்மக்குரல்கள் கேட்பதும் அது நிஜத்தில் நடப்பதும்
என்று நல்ல தீம், சரியாக டெவலப் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

7. காமினி - கோபி ராமமூர்த்தி


பதிவுலகின் கதைப்போட்டிக்கு பதிவர்களையே கதாபாத்திரங்கள் ஆக்கியிருப்பது அழகு. அதிலும் ஒவ்வொருவரையும் சகட்டுமேனிக்கு கலாய்த்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களையும் பொருத்திப் பார்க்க முடிகிறது.. ஆனால் ஆதியை கமிஷ்னராக... ஹி..ஹி..

மைனஸ் பாயிண்ட்: கதாபாத்திரங்களில் பதிவர் பெயர்களுக்கு பதில் வேறு பெயர்களைப் போட்டால் கதை படு மொக்கையாக காட்சியளிக்கிறது. இதை ஒரு ’சிரி’யஸ் முயற்சியாக இருந்தாலும் சீரியஸ் முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

8. காமினி என் காதலி - ஆசியா உமர்

ரயிலில் ஆரம்பிக்கும் கதை லேசாக வேகமெடுப்பதுபோல் தோன்றும்போது போட்டிக்கான முதல் வரி வந்ததுமே டீரெயில் ஆகிவிடுவது போன்ற தோற்றம். மூன்று வரிகளையும் அப்படியே வரிசைக்கிரமமாக எழுதி மேலும் கீழும் கதையை ஒட்டி சாண்ட்விச் செய்யும் முயற்சி அவ்வளவு விறுவிறுப்பை தரவில்லை. சொல்ல வந்திருக்கும் கதை (ரயிலில் டைமண்ட், சேர்க்க முடியாமல் தடைகள்) என்று அழகாக தெரிந்தாலும் அதை சொன்ன விதம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக / விரிவாக இருந்திருக்கலாம். ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங்... என்று வடிவேலு பாணியில் சொல்லலாம்.

9. டைமண்ட் - முகிலன்


ஒரு வெற்றிகரமான முயற்சி என்றே சொல்லலாம். ஒரு நல்ல துப்பறியும் கதைக்கான களன். ஆஸ்பத்திரியில் டைமன்ட் கடத்துறாங்களா? அதுக்கு காமினி உதவியா? போட்டி விதிகளின் படி காமினியைத்தான் கெட்டவளா காட்டகூடாதே என்று நமக்கு தோன்றுவதை எல்லாம் அழகாக க்ளைமாக்ஸில் புறந்தள்ளுகிறார். மருத்துவமனையில் நோயாளிகளின் பார்ட்டை திருடி விற்கும் கும்பல், டைமண்ட் என்பது கிட்னிக்கான கோட்வேர்ட் என்று நன்றாக சிந்தித்திருக்கிறார்.

மைனஸ்: ட்ரான்ஸ்ப்ளாண்ட் பண்ணப்படவேண்டிய கிட்னியை இப்படி பார்சல் செய்யப்பட்ட குலோப் ஜாமூன் கணக்காக இடுப்பில் கட்டிக்கொண்டு ஜன்னலில் குதிப்பது, ஆட்டோவில் போவது, சண்டை போடுவது எல்லாம் சினிமாத்தனம்.

10. தெய்வம் - பலா பட்டறை ஷங்கர்

காமினியை நடிகையாகவும் அவளுக்கு கோவில் கட்ட அவள் ரசிகர்கள் முயற்சி எடுக்க, அவளது புதிய படத்தில் வருவதாக போட்டிக்கான மூன்று வரிகளும் காட்டப்படுகின்றது. பொருந்தவில்லை. முக்கியமாக காமினி சோகமாக இருப்பதால் அந்த காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். மூன்றாவது வசனத்திற்கு எதற்காக காமினி சோகப்படவேண்டும் என்று புரியவில்லை. உண்மையில் அந்த சினிமாவின் கதையை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதை எதிர்பாராத முடிவு என்று சொல்லலாம், ஆனால் போட்டிக்கு பொருத்தமாக இல்லை.

11. டைமண்ட் வாசனை - பலா பட்டறை ஷங்கர்


நல்ல முயற்சி... எதிர்பாராத முடிவாக காமினியை காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது. எதிர்பாராத முடிவுடனான ஒருபக்க கதைக்கு நல்ல ஆப்ஷன் இது.

12. ஆபரேஷன் ப்ளூ டைமண்ட் - கார்த்திகைப் பாண்டியன்

ஒரு துப்பறியும் கதைக்கான திருப்பங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்தும் சாதாரணமாக அவ்வளவு வலுவில்லாமல் இருப்பது போன்ற தோற்றம். காமினி போலீஸின் ஆள் என்றால் போலீஸ் ஏன் சிவாவை வைத்து வைரத்தை திருட வேண்டும் என்ற முக்கியமான கேள்விக்கு பதில் இல்லை, அதேபோல் முதலில் வரும் விமானக்கடத்தலும் கதையோடு ஒட்டவில்லை (கதையில் போட்டிக்கான முதல்வரியை கொண்டுவர முனைந்து சேர்க்கப்பட்டதால் தனியாக தெரிகிறது). சிவாவை ஒரே ஒரு முறை பார்த்தவருக்கு எதற்கு கிளைமாக்ஸில் அவரைப் பார்த்து வெட்கப்படவேண்டும்.

எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம். (பதினைத்து, பிளாட்டில்)

13. காமினியின் கண்கள் - கவிதா கெஜானனன்

போட்டியின் விதியான ”காமினியை கெட்டவராக சித்தரிக்கக் கூடாது” என்பது இதில் அடிபட்டு போய்விட்டது. கதை நன்றாக இருந்தாலும் விதிமுறைக்குள் வராத காரணத்தால் இந்த கதை போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறது

14.எஸ்கேப் - ரோமியோ

கதை ஆரம்பிக்கும்போது பாலகிருஷ்ணன் பார்வையில் அவர் சொல்வது போல் ஆரம்பித்து சடாரென வாசகர் பார்வைக்கு மாறுவது சறுக்கல். கதையுடன் ஒன்ற முடியவில்லை. அதை சரி செய்வதற்காக கிளைமாக்ஸில் பாலகிருஷ்ணன் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற ரீதியில் கொண்டு செல்கிறார். கதை எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்று எதுவும் தெளிவாக இல்லை. இன்னும் சிறப்பாக முயற்சிக்கலாம்.

15. காமினி - பலா பட்டறை ஷங்கர்

சயின்ஸ் ஃபிகஷன் முயற்சி.. காமினி மனித இனமே இல்லை, ரோபோ போல என்ற ரீதியில் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் எல்லாரும் எல்லார் பார்ப்பதையும் பார்க்க முடிவது, யாரும் யார் போலவும் மாறுவது என்று சராசரி வாசகனுக்கு குழப்பம் அதிகமாக வர வைக்கிறது. காமினி நல்லவளா / கெட்டவளா என்பதே புரியவில்லை. நல்லவளாக காட்ட வேண்டும் என்ற விதி அடிபட்டு போகிறதா என்பதும் புரியவில்லை. இன்னும் தெளிவாக எழுதி இருக்கலாம்.

16. வைரம்.. காமினி.. பரந்தாமன் - பிரபாகர்

இரண்டு காமினிகள் : ஒருவர் நடிகை மற்றவர் மாடல் அழகி... நடிகை ஏர்போர்ட்டில் நடித்துக் கொண்டிருக்க, அதில் குழப்பம் விளைவித்து மற்றொரு காமினியின் மூலம் வைரம் கடத்த முயற்சி என்று ஒன்லைனர் அழகாக இருக்கிறது. ஆனால் இன்னும் சிறப்பாக டெவலம் செய்திருக்கப்பட வேண்டிய கதை. முதலில் வரும் மருத்துவமனைப் பகுதி கதையுடன் ஒட்டவில்லை, போட்டிக்கான வரியை கொண்டு வர முனைந்து சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. நல்ல கரு.. இன்னும் சிறப்பாக முயற்சித்திருக்கலாம்

17. சினிமாக்களம் - ’பரிவை’ சே. குமார்

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்துக் காட்ட முயற்சி செய்திருக்கிறார். கதை எந்த ஒரு இம்பேக்ட்டையும் ஏற்படுத்தாமல் மிகவும் ப்ளெயினாக இருக்கிறது. போட்டிக்கான மூன்று வரிகளை அடுத்தடுத்து எழுதி மேலும் கீழும் கதையை சேண்ட்விச் செய்து வந்திருக்கும் மற்றொரு கதை இது. இந்த போட்டிக்கு இந்த கதை பொருத்தமாக இல்லை என்பதே உண்மை.


18. நவம்பர் 15: வாழ்விலோர் திருநாள் - கோபி ராமமூர்த்தி


போட்டிக்கான மூன்று வரிகளை அடுத்தடுத்து எழுதி மேலும் கீழும் கதையை சேண்ட்விச் செய்து வந்திருக்கும் மற்றொரு கதை இது. கதைக்கான வரிகள் மட்டுமில்லாமல் கதைப்போட்டிக்கான விதிமுறைகளையும் உரைநடையில் கொடுத்து முடிவில் நவம்பர் 15க்குள் தங்களுக்குத் தேவையான கதை கிடைத்துவிடும் என்று முடித்திருக்கிறார். இது சீரியஸ் முயற்சியும் இல்லை, சிரிக்க வைக்கவும் இல்லை.


19. கோல்டன் ஈகிள் - டக்ளஸ் ராஜூ

இந்த கதை எழுதியவரை எழுத்தாளர் சுபா மிகவும் இம்ப்ரெஸ் பண்ணியிருப்பது தெரிகிறது. காமினி - வைஜ், சிவா - நரேன், பரந்தாமன் - ராமதாஸ் என்று பொருத்திப் பார்க்க முடிகிறது. ஆனால் கதையிலும் நடையிலும் அந்த துள்ளலும், திருப்பங்களும் மிஸ்ஸிங். கடைசியில் அவர்கள் வைரம் என்று எதைச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை, சத்தியசீலனை சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். தெளிவாக பொருந்தவில்லை.


20. வைரவாசல் - ராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி

டைமண்ட் என்பதை வைரமணி என்ற பெண் என்ற ரீதியில் எழுதப்பட்டிருக்கிறது. வழக்கமான துப்பறியும் கதைக்களன். ஆனால் திடுக்கிட வைக்கும் திருப்பங்களோ புத்திசாலித்தனமான மூவ்களோ இல்லாமல் ப்ளையினாக இருக்கிறது. அடுத்து என்ன வரும் என்று யூகிக்க முடிகிற நடை. இன்னும் சிறப்பாக முயற்சித்திருக்கலாம்.


21. டைமண்ட் 2 - முகிலன்


டைமண்ட் என்பது நாய், அது போலீஸ் என்ற பைத்தியக்காரனிடம் சிக்கி விட்டது, காப்பாற்றி டாக்டரிடம் அழைத்து வருகிறார்கள் என்ற ரீதியில் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இருக்குறது. நல்ல முயற்சி என்ற அளவில் பாராட்டலாம். நடையிலும் கருவிலும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்
ஆனால் போட்டி விதிமுறைகளின் படி கதையில் கனவு வரக்கூடாது. போட்டிக்கான முதல் வரி கனவில் வருவது போல் இருப்பதால் இந்த கதை போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறது


22. ஒரு வைரம் நான்கு உயிர்கள் - சுப. தமிழினியன்


ஒரு வைரக்கடத்தல் அதன் ஊடான குழப்பங்கள் என்று கதையும் குழப்பமாகவே நகர்கிறது. கதையில் இரண்டு சிவா வருவது வேறு குழப்பத்தை அதிகப்படுத்துகிறது (அல்லது ஒரே சிவாதானா?). காமினியை நல்லவளாக காட்டவேண்டும் என்ற நிபந்தனைக்காக அவளை பரந்தாமன் ப்ளாக்மெய்ல் செய்வதாக சொல்லியிருப்பது ஒட்டவில்லை. இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.


23. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்


முற்றிலும் வித்தியாசமான கதைக் களன். பூமியில் எக்ஸ்டிங்க்‌ஷன் ஆரம்பிக்கும் தருணத்திற்கு முன்னால் உயிரினம் தழைக்க பரந்தாமன் + சிவா (இந்துக் கடவுள்கள்?) எடுக்கும் முயற்சி, உயிரினங்களை புதிய பூமிக்கு தாங்களே கொண்டு செல்லாமல் அவர்களையே தங்களுக்கான இடத்தை தேர்வு / தெரிவு செய்துக் கொள்ள வைப்பது என்று புதிய வாசிப்பனுப்பவத்தை இந்த கதை கொடுக்கிறது எனலாம்.

டாக்டர் வில்கின்ஸை பிரம்மாவாக உருவகப்படுத்தி இருக்கலாம். அல்லது ஏற்கனவே அப்படித்தானா? :)

கதையின் சிறு சறுக்கல்களும் இல்லாமல் இல்லை. கதையில் இந்து மித்தாலஜி, டெக்னாலஜி என்று கலந்து கட்டி அடித்திருப்பது ஒரு மாதிரி புரியாத மனநிலையில் வாசகனை இருக்க வைக்கிறது. ஒரு செல்லில் இருந்து உயிரினம் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்தது என்ற அறிவியல் கூற்றை மறுப்பது போல் நேரடியா உயிரினங்கள் பூமியில் உருவானதாக சொல்லும் அதே நேரம் காமினி என்ற புதிய இனம் உருவாவதே டெக்நாலஜியால் என்றும் சொல்லியிருப்பது கதாசிரியர் அறிவியலை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதை தெளிவாக சொல்லாமல் குழப்புகிறார் என்றே தோன்றுகிறது.
ஒரு சிறந்த முயற்சி இந்த கதை. பாராட்டுகள்.

24. காமினி - மயில் ராவணன்


நல்ல முயற்சி... போட்டிக்கான மூன்று வரிகளுக்கும் வித்தியாசமான அர்த்தம் கொடுத்ததற்கு பாராட்டுகள். முக்கியமாக “காமினி.. வெல்டன்” என்பதற்கான அர்த்தம் வாசிக்கும்போது நன்றாக இருக்கிறது. அதைத் தவிர்த்து கதை பெரிய அளவில் கவரவில்லை. வைரம் கடத்தும் தந்தையை காதலன் உதவியுடன் காட்டிக் கொடுக்கும் பெண் என்ற ஒன்லைனர் மிகவும் ப்ளைனாக இருக்கிறது.


25. அய்யோ! தீ!! தீ!!! - சி. எஸ். வீரராகவன்

ஒரு நாடகத்திற்கான ஸ்கிரிப்ட் போல இருப்பதே இதன் குறை. சொல்ல வந்த கதை இந்த ஃபார்மேட்டினால சரியாக வாசகனை அடையவில்லை போன்ற தோற்றம். அயோத்தி பிரச்சினையைத் / அதைப் போன்ற ஒன்றை தொட்டிருப்பது கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. கடைசியில் காமினி வருத்தப்படவேண்டிய அவசியமும் இல்லை, மீண்டும் சிவாவை சந்தித்து விளக்கி இருக்க முடியாதா?


26. காமினி மாலினி ஷாலினி - பெயர் சொல்ல விருப்பமில்லை


சீரியலை மட்டுமே பார்த்துக்கொண்டு குடும்பத்தைக் கவனிக்காத அம்மா, அதனாலயே அன்புக்கு ஏங்கி வீட்டை விட்டு போகும் மகள் என்று ஒரு வாரமலர் டைப் கதை. போட்டிக்கான மூன்று வரிகளும் கதையின் முக்கிய ஓட்டத்தில் இல்லாமல் சீரியலுக்குள் இருப்பது மைனஸ். முக்கியமாக மூன்றாவது வரி அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. இன்னும் நன்றாக முயற்சித்து இருக்கலாம்.


27. இனிமேல் வசந்தம் - வானதி

போட்டிக்கான வரிகளை கதையின் முக்கிய ஃப்ளோவில் உபயோகித்து எழுதப்பட்டுள்ள கதை. அதுவே இந்த கதையின் பலமும் கூட. அடுத்ததாக போட்டிக்கான வரிகளைப் படிக்கும் எவருக்கும் கதை நடப்பது ஒரு மேல்தட்டு குடும்பத்தில் / ஆட்களிடம் என்ற தோற்றம் தோன்றும். ஆனால் அதே வரிகளை வைத்து ஒரு மீனவ குடும்பத்து கதையை எழுதியிருப்பது நல்ல முயற்சி..

விறுவிறுப்பில்லாத நடையும் யூகிக்க முடிகிற முடிவும் இதன் மைனஸ்.

28. டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமடம் டாட் காம் - விதூஷ்

போட்டிக்கான வரிகளை எழுதி மேலும் கீழும் வேறு கதையை எழுதி வந்துள்ள இன்னொரு சாண்ட்விச் கதை. ஒரு எழுத்தாளனின் மன ஓட்டத்தை எழுத்தில் கொண்டுவரும் முயற்சி என்பதாகவே இதைப் பார்க்க முடிகிறது. ஆங்காங்கே தெறிக்கும் நக்கல் புன்னகைக்க வைக்கிறது.


29. காட்சிப்பிழை - செல்வகுமார்

துப்பறியும் + சயின்ஸ் ஃபிக்‌ஷன் சம அளவில் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் கதை.. போட்டிக்கு சிறப்பான முயற்சி. வைரக் கடத்தல் கும்பலைப் பிடிக்க கும்பலுக்குள் நுழையும் காமினி போலீஸால் சுடப்பட அறிவியல் கண்டுபிடிப்பின் மூலம் குற்றவாளிகளை மடக்கும் போலீஸின் கதை. விறுவிறுப்பான நடையும் தெளிவாக விளக்கப்படும் அறிவியல் கண்டுபிடிப்பும், சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் போட்டிக்கான வரிகளும் பாராட்டப்படவேண்டியவை.


30. சிவாவும் பரந்தாமனும் வைரத்துக்குப் போட்டி போட்ட கதை - கோபி ராமமூர்த்தி

வித்தியாசமாக ஆரம்பித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டு அதை சரியாக தக்கவைத்துக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம். முக்கியமாக போட்டிக்கான வரிகள் கொஞ்சமும் கதையில் ஒட்டவில்லை. தனித்து தெரிகிறது. அதே மாதிரி இவர் இந்து சம்பிரதாயங்களை நக்கல் அடிக்கிறாரா அல்லது விளம்பரப்படுத்துகிறா என்பதும் சரியாக புரியவில்லை. வித்தியாசமான தளம், இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.

31. செய்தி சொல்லும் கதை - கோபி ராமமூர்த்தி

தலைப்பே சொல்லி விடுகிறது, இது மெசேஜ் சொல்வதற்காகவே எழுதப்பட்ட கதை என்பது. பதிவர்களை பாத்திரங்களாக வைத்து எழுதப்பட்டுள்ள மற்றொரு கதை, பைரசி தவறு என்பதை அழுத்திச் சொல்கிறது. போட்டிக்கான வரிகளை வரிசையாக எழுதி மேலும் கீழும் கதையை எழுதியுள்ள சாண்ட்விச் கதை, ஆனாலும் அந்த வரிகள் சரியாகவே உபயோகப்பட்டிருக்கின்றன. சட்டென்று கதை முடிந்ததைப் போன்ற உணர்வு. இன்னும் கொஞ்சம் நடையை விறுவிறுப்பாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்


32. கமான்.. கமான்.. காமினி - வித்யா

முதல் பாதியில் எழுதப்பட்டுள்ள கதை அட்டகாசம். அதை அப்படியே கண்டின்யூ செய்து முடித்திருந்தால் முதல் மூன்று இடத்திற்கான போட்டியில் கட்டாயம் இருந்திருக்கும் என்ற ரீதியில் விறுவிறுப்பு, சயின்ஸ் பிக்‌ஷன், யூகிக்க முடியாத திருப்பங்கள் என்று எக்ஸ்ப்ரஸ் செல்லும் கதை, இரண்டாவது பாதியில் டீரெயில் ஆவது என்னவோ உண்மை. நமக்கு பழக்கப்பட்ட கதாபாத்திரங்களை (கணேஷ், வசந்த், கோகுல்நாத்) என்று கொடுத்திருப்பது கதையை வாகனுக்கு நெருக்கமாக உணரவைக்கிறது. வசந்த் சொல்வது போல், கதையின் முடிவையும் வாசகனே யூகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது, :-)


33. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி

உண்மையில் பெரும்பாலான கதைகளில் காட்டப்பட்டிருக்கும் வித்தியாசத்தை (அந்த மூன்று வரிகளை எப்படி எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதை) அழகாக தொகுத்திருக்கிறார். வெறுமனே விளக்கமாக இல்லாமல் ஒரு கதையினூடே இதை சொல்லியிருப்பது அழகாக இருக்கிறது. முடிவு கொஞ்சம் மொக்கையாக இருப்பது நிஜம்..


34. காமினிக்குப் புரியாத புதிர் - சுதர்ஷன்


கதையின் தலைப்பைப் போலவே கதையின் க்ளைமாக்ஸ்ம் புரியவில்லை. ராபிட் ஐ மூவ்மெண்ட்டுக்கு பதில் கதையின் கடைசி மூன்று வரிகளை விளக்கி இருக்கலாம்.


35. யாரடி நீ காமினி - தேசாந்திரி-பழமைவிரும்பி

புதையலில் கிடைத்த வைரம் திருடப்பட அதை மீட்க உதவும் ஆட்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்ற ஒன்லைன் அழகாக இருந்தாலும் கதை துண்டு துண்டாக இருப்பதாக தோன்றுகிறது. நடை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.


36. காமினி - ராஜகுரு பழனிசாமி

சவால் சிறுகதைப் போட்டியினால் மறை கழண்டு போகும் ஒருவன் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.


37. டைமண்ட் - குகன்

போட்டியின் மூன்று வரிகளை அப்படியே ப்ளையினாக டெவலப் செய்திருக்கும் கதை. காமினி ஆஸ்பத்திரியில் இருந்து டைமண்டை திருடி வர சிவா அதை திருட முயல அவனைக் கொன்று பரந்தாமனிடம் சேர்க்கும்போது போலீஸ் வந்து அனைவரையும் கைது செய்து காமினியைப் பாராட்டுகிறார்கள். தொய்வில்லாத நடை. ஆனால் எதிர்பார்த்த திருப்பங்களும் யூகிக்க முடிக்கிற முடிவும் விறுவிறுப்பு குறைந்த நடையும் மைனஸ்


38. ளவாளி - குகன்

இதற்கு முந்தைய கதையும் (டைமண்ட்) இந்த கதையும் ஒரே வரிகளுடன் உள்ளது... ஆனால் இந்த கதையில் வரிகள் போட்டிக்கான அதே வரிசையில் வரவில்லை, அதனால் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறது

39. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பார்வையாளன்

கதையின் ஃப்ளோ கொஞ்சமும் சரியாக கருத்தை சொல்லவில்லை.துண்டு துண்டாக விறுவிறுப்பு குறைவாக இருக்கிறது. எழுத்துப்பிழைகளையும் தவிர்த்திருக்கலாம்.


40. வெல்டன் காமினி! - டி வி ராதாகிருஷ்ணன்

துப்பறியும் கதைக்கான கரு என்ற அளவில் ஓகே.. நடை மிகவும் தொய்வாக இருக்கிறது, இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். முதலில் நடிகரைப் பற்றி சொல்லிவிட்டு பிறகு கடைசியில் கிளைமாக்ஸில் காமினி கதையுடன் இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது. நல்ல முயற்சி.


*********** *********** ************ **********

மற்ற விமர்சனங்கள் அடுத்த பதிவில்.


.

27 comments:

Sridhar Narayanan said...

நல்ல அலசல்கள். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்.

//நேரடியா உயிரினங்கள் பூமியில் உருவானதாக சொல்லும்//

அப்படி நேரடியாக எதுவும் சொல்லவில்லையே. பரினாம வளர்ச்சி என்பது ஆதி மனிதன் தோன்றிய பிறகும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ’பிரளயம்’ போன்ற தொன்மக் கதைகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம் என்று எழுதினது. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

pichaikaaran said...

ஒவ்வொரு கதையையும் ஆழ்ந்து படித்து இருப்பது தெரிகிறது...

இது லேசான காரியம் அல்ல...

பிரமிக்க வைக்கும் பணியை செய்யும் உங்களை எப்படி பாராட்டுவது என தெரியவில்லை...

R. Gopi said...

பரிசல், ஆதி

நவம்பர் 15 ஆம் தேதி முடிவு அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

அதையும் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாவது சொல்ல வேண்டும். நவம்பர் 15 வரை காத்திருந்துவிட்டு சொல்வது தவறு என்பது என் கருத்து.

கதைகள் அனுப்புவதற்கான கெடு, கதைக்கான விதிமுறைகள், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவனின் கத்தி போன்ற கூரிய விமர்சனங்கள் (ஒன்றிரண்டு விமர்சனம் கதையைத் தவறாகப் புரிந்து கொண்டு எழுதியது போல எனக்குப் படுகிறது. அதைப் பற்றிப் பேச விருப்பமில்லை) என்று எல்லாவற்றையும் சரிவர செய்யும் நீங்கள் முடிவையும் இன்றே சொல்லி இருக்க வேண்டும்.

ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். ஒருவேளை யாராவது ஒருவர் கதையைத் தாமதமாக அனுப்பி இருந்தால் போட்டிக்குப் பரிசீலித்து இருந்திருப்பீர்களா?

என்னுடைய கடைசிக் கதையை, 11 மணி நேரப் பயணக் களைப்பு, நேர வித்தியாசத்தால் ஏற்படும் jetlog எனப்படும் தொந்தரவுகளுடன் இரவு 12 அளவில் பதிவிட்டேன். லண்டன் போன முதல்நாளே இன்டர்நெட் தொடர்பில் ஏற்பட்ட சிக்கல்களைச் சரி செய்து பதிவு போடுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.

அது போன்ற பொறுப்புணர்வைப் போட்டி நடத்துபவர்களிடமும் நான் எதிர்பார்க்கிறேன்.

இனி யாரேனும் எதாவது போட்டி வைத்தால் கலந்துகொள்ள நிறைய யோசிப்பேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//காட்சிப்பிழை - செல்வகுமார்

துப்பறியும் + சயின்ஸ் ஃபிக்‌ஷன் சம அளவில் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் கதை.. போட்டிக்கு சிறப்பான முயற்சி. வைரக் கடத்தல் கும்பலைப் பிடிக்க கும்பலுக்குள் நுழையும் காமினி போலீஸால் சுடப்பட அறிவியல் கண்டுபிடிப்பின் மூலம் குற்றவாளிகளை மடக்கும் போலீஸின் கதை. விறுவிறுப்பான நடையும் தெளிவாக விளக்கப்படும் அறிவியல் கண்டுபிடிப்பும், சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் போட்டிக்கான வரிகளும் பாராட்டப்படவேண்டியவை./

செல்வா வாழ்த்துக்கள். இனி உன்னை பிடிக்க முடியாதே. பரிசு பெற வாழ்த்துக்கள். PSV உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

மற்றக் எல்லோ பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

Unknown said...

nice reviews! :)

Unknown said...

என் கதையின் விமர்சனம் படித்ததே பரவசமாய் இருக்கிறது. எழுத்துப் பிழைகளை பின்னூட்டம் மூலமே அறிந்து சரிசெய்தேன். கதை எழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

vanathy said...

விமர்சனங்கள் அருமை. இவ்வளவு கதைகளையும் பொறுமையாக படித்து, விமர்சனம் எழுதுவது அவ்வளவு எளிதான வேலை அல்ல. கொஞ்சம் கால தாமதம் ஏற்பட்டால் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

pichaikaaran said...

இவ்வளவு கறாராகவும் , புர ஃபஷனலாகவும் நடத்துவீர்கள் என்றோ , கலந்து கொண்டவர்கள் இவ்வளவு தூரம் உழைப்பார்கள் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை . மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . முழுமை இல்லாமலும் எழுத்து பிழைகளுடனும் அனுப்பியதற்கு வருந்துகிறேன் . வெட்க படுகிறேன் .
போட்டியை நடத்தியவர்களுக்கும் , கலந்து கொண்டவர்களுக்கும் நான் செய்தது அநீதி.
சாரி நண்பர்களே .
முடிவு தள்ளி போவது தவறல்ல . ஆனால் முன் கூட்டியே சொல்லி இருந்தால் , நன்றாக இருந்திருக்கும் . இதற்காக வருத்தபடும் நண்பரின் ஃபீலிங் அவர் கோணத்தில் நியாயமானதுதான்

Ramesh said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அச்சச்சோ என்னோட கதைக்கான விமர்சனத்தைப் படிக்க அடுத்த பதிவு வரைக்கும் காத்திருக்கனுமே..

Madhavan Srinivasagopalan said...

ரொம்ப நேர்மையா, விமர்சனம் எழுதியதுபோலத் தெரிகிறது.
உங்களுடை(போட்டி நடத்தும், தேர்வு செய்யும் நடுவர்கள்) உழைப்பும் ஆர்வமும் பிரமிக்க வைக்கிறது.
எனது கதைக்கான விமர்சனத்தை (எப்படி இருந்தாலும்) படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது.. காத்திருக்கிறேன்.

உங்கள் உழைப்பு ஓர் சல்யூட்.. வாழ்த்துக்கள்.

செல்வா said...

என்னோட கதைக்கு விமர்சனம் எழுதியதற்கு நன்றி அண்ணா .!!

செல்வா said...

//செல்வா வாழ்த்துக்கள். இனி உன்னை பிடிக்க முடியாதே. பரிசு பெற வாழ்த்துக்கள். PSV உங்களுக்கும் வாழ்த்துக்கள்..//

ஹி ஹி ஹி ., நான் ஈரோடு ல இருக்கிறேன் , நீங்க சென்னைல இருக்கீங்க ..? எப்டி பிடிக்கறது ..??

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

விமர்சனத்தை படித்தவுடன்..நாமும் போட்டியில் பங்கு பெறாமல் விட்டுவிட்டோமே? என்று என்ன தோன்றுகிறது...(சிறுகத எழுத வராதில்ல ..!!ஹி..ஹி)

பரிசல்காரன் said...

கோபி ராமமூர்த்தியின் கேள்விகளும் வருத்தமும் நூற்றுக்கு நூறு சரி.

அனைவரிடம் தாமதத்திற்கு மறுபடி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை..

Madhavan Srinivasagopalan said...

//கோபி ராமமூர்த்தியின் கேள்விகளும் வருத்தமும் நூற்றுக்கு நூறு சரி.

அனைவரிடம் தாமதத்திற்கு மறுபடி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை..//


எண்பதிற்கும் மேற்பட்ட கதைகள் வந்ததாலும்,
கதைகளை பொறுப்புடனும் கவனமாகவும் படித்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க நீங்கள் முனைவதாலும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. லும், இது வரை கதையே எழுதாத என்னைபோன்ற சிறுவர்களையும்(வயதில் அல்ல, கதையுலகில்), எழுதத் தூண்டியமைக்கு என்னைப் போன்றோர் எங்கனம் நன்றி சொல்வோம்.

உங்கள் பணி தொடரட்டும்.

விஜி said...

ஆறுதல் பரிசாவது கொடுக்கலை ரணகளமாயிடும்.. கபர்தார் :)))

எனிவே,, நிஜமாவே இது போட்டிதானா?? நான் எதோ சும்மாங்காச்சிக்கும்னு நினைச்சென்... குட் குட் :)

சுசி said...

:))

மோனி said...

:-0) நேரமின்மை
எப்படிய்யா உங்களால மட்டும் முடியுது?

பெசொவி said...

// போட்டிக்கான மூன்று வரிகளும் கதையின் முக்கிய ஓட்டத்தில் இல்லாமல் சீரியலுக்குள் இருப்பது மைனஸ்//

என் கதையைப் பற்றிய இந்த விமரிசனம் மிகவும் புண்படுத்துகிறது.
போட்டியின் விதி, இந்த மூன்று வாசகங்களும் வர வேண்டும் என்பதுதானே தவிர, அது கதைக் களனில் வர வேண்டும் என்பதல்ல.

If the judges can't understand the Lateral thinking I used in my story, it is not my fault.

'பரிவை' சே.குமார் said...

போட்டிக்கான கதைகளை படித்து விமர்சனம் எழுதியதற்கு மிக்க நன்றி....

உங்கள் போட்டிக்கான விதிமுறைகளில் கொடுத்த குறிப்புகள் கதையில் வரவேண்டும் என்று இருந்தனவே தவிர இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இருக்கவில்லை. மேலும் துப்பறியும் கதை போல் எல்லாரும் எழுதுவதால்தான் மாற்றி எழுதினோம்... சாண்ட்விச் செய்திருப்பதாக சொல்லியிருப்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது. கதை சரியில்லை என்றால் ஓகே... இனி பதிவர்கள் சார்பாக நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது என்ற முடிவை எடுக்க வைத்த உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.

aru(su)vai-raj said...
This comment has been removed by the author.
aru(su)vai-raj said...

விமர்சனங்களுக்கு நன்றி. 36 வது (எனது) கதையின் ஒருவரி விமர்சனத்தைக் கண்டால், நடுவர்களுக்கு அக்கதை ஓட்டம் புரியவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறதே தவிர .... ம்ஹூம்... மேலும் சில கதைகளின் விமர்சனத்தை வாசித்தாலும் இதே எ:.பக்ட் தான்...

Madhavan Srinivasagopalan said...

copy of my comments for the post
Madhavan said...

//74. அம்மா அருள் காமி-நீ! - மாதவன்

// ஆங்காங்கே புன்ன‌கைக்க‌ வைக்கும் வ‌ரிக‌ள் ப‌ல‌ம்.
ஆனாலும் நடைக்கு ஒரு ஷொட்டு!//

நன்றி..

// நீண்ட‌ விள‌க்க‌ங்க‌ள், எழுத்துப்பிழைக‌ள் எல்லாம் மைன‌ஸ்.//

வள வளாவை குறைத்திருக்கலாம்....
எழுத்துப் பிழை -- கவனமின்மை மற்றும் உங்களுக்கு அனும்பும் அவசரம்..

எனக்கு பரிசு கிடைக்க வில்லைஎன்றாலும்(!).. ஒரு திருப்தி / தன்னிறைவு கிடைத்துவிட்டது.
வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்.

கவிதா | Kavitha said...

அது தெரிஞ்சி தானே இரண்டாவது அனுப்பி இருக்கேன்.. :))

Radhakrishnan said...

எனது கதைக்கு மிகவும் நியாயமான விமர்சனம். :) மிக்க நன்றி.

அருமையான பணி. இதைத்தான் எதிர்பார்த்தேன். இவர்கள் தான் வெற்றி பெற்றார்கள் என சொல்வதோடு விட்டுவிடாமல் இப்படித்தான் கதை இருக்கிறது என சொல்வது மிகவும் பயனளிக்கும்.

வெட்டிப்பயல் said...
This comment has been removed by the author.
வெட்டிப்பயல் said...

//கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

இந்த மூன்று வாக்கியங்களும் நான் கொடுத்திருக்கும் வரிசைப்படியே வருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதுங்கள். விதிகள் இரண்டு:

கதையில் கனவோ, பிளாஷ்பேக்கோ வரக்கூடாது.

காமினியைக் கெட்டவராக சித்தரிக்கக் கூடாது.//

இது தான் போட்டிக்கான விதிமுறை. சில கதைகளில் இந்த வரிகள் புத்தகத்திலோ, டீவி சிரியலிலோ வருவதாக இருக்கிறது என்பதை ஒரு குறை போல சொல்லியிருப்பது எனக்கு சரியாகப் படவில்லை. Out of Box thinking. அதனால் பாராட்டப்பட வேண்டும் என்பது என் எண்ணம். பள்ளி ஆசிரியர்களைப் போல வித்தியாசமாக சிந்திப்பவர்களைக் குறை சொல்வது தவறு. ஆனால் அது கதையிலோ, நாடகத்திலோ வருவதை வாசகனுக்கு காட்ட வேண்டிய தேவை ஏன் என்ற கேள்வி வரலாம்.

மேலும் ஸ்ரீதர் நாராயணனின் கதை ஒரு மித்தாலஜி கதை. அதை சயின்ஸ் ஃபிக்‌ஷனாக நினைத்து இந்து கடவுள்?, பரிணாம வளர்ச்சியை மறுப்பதற்கான சான்றை எதிர்பார்ப்பது எதுவும் சரியாகப் படவில்லை. பரிணாம வளர்ச்சியை மறுக்கும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். மேலும் இது பரிணாம வளர்ச்சியை மறுக்கும் கதையும் அல்ல. இது பரிணாம வளர்ச்சியையே வேறு விதத்தில் காட்டுகிறது. Different kind of thought. அவ்வளவே.

டேய் உன்னை என்ன சொன்னேன். இங்க வந்து ரவுண்டு கட்டறியேனு நினைக்க வேண்டாம். உங்களுடைய உழைப்புக்கு என் நன்றி. இருப்பினும் இது பெரிய தவறாக தெரிந்ததால் சொல்ல வேண்டியதாகிறது.

சிறுகதை முயற்சி செய்பவர்களுக்கு :

http://kaalapayani.blogspot.com/2009/05/blog-post_22.html

புக் மார்க் செய்து வைத்துக் கொள்ளவும்.