Friday, August 22, 2008

உமாவுக்கு....



எந்தக் கோவிலுக்குப் போனாலும் என் நட்சத்திரம் உனக்குத் தெரிகிறது. எத்தனை முறை சொல்லியிருப்பினும் உன் நட்சத்திரம் என் ஞாபகத்தில் நிற்பதில்லை.

என் ஒவ்வொரு பிறந்தநாளின் அதிகாலையும் உன் முத்தத்தோடு விடிகிறது எனக்கு. உன் பிறந்தநாளன்று இரவு உணவின் போது ‘இன்னைக்கு என்ன நாள்ன்னு சொல்லுங்க’ என்பதை உன் வழக்கமாய் நான் ஆக்கி வைத்திருக்கிறேன்.


பதினோரு வருடங்களாக எத்தனையோ நாட்கள் என் உடல் நலனுக்காக விழித்திருக்கிறாய். அன்றொரு நாள் உனக்காக ஓரிரு மணிநேரம் விழித்ததையே இன்னும் சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கிறேன் நான்.

எனக்குப் பிடித்த நிறம் நீலமென்று உனக்குத் தெரியும். உனக்குப் பிடித்த நிறமும் நீலம்தானென்பது அது எனக்குப் பிடித்ததால்தான் என்பது எனக்குத் தெரியாது.


என் நண்பர்களை நீ வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். உன் நண்பிகளின் பெயர் கூடத் தெரியாதெனக்கு!


அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி முடிக்குமுன் எனக்காக கணினியைத் திறப்பாய் நீ. உனக்காய் ஒருபோதும் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்ததில்லை நான்.


இருவருமே பணிபுரிந்தாலும் அடுக்களையை உனக்கானதாய் உவமானம் காட்டும் கீழாந்தரமானவனாய்த்தான் நானிருக்கிறேன்!


என்னைவிடக் களைத்து வரும்போதும் உனக்காய் ஒரு புன்னகையைக் கூட கொடுக்கத் தெரியாத எனக்கு, நான் ஊர் சுற்றி விட்டு வரும் போது கூட தேநீர் தயாராய் இருக்கும்.


ஏதேனும் கஷ்டங்கள் வரும்போது உன் கழுத்துச் சங்கிலி வங்கிக்குப் போகும். எந்தச் சூழ்நிலையிலும் என் மணிக்கட்டுத் தங்கத்தை அவிழ்க்க அனுமதித்ததில்லை நீ.


நான் தனியாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் செய்தியோ, கிரிக்கெட்டோ ஓடும். நீயும் நானும் இருக்கும்போதும் செய்தியோ, கிரிக்கெட்டோதான் ஒடும். உன் ரசனை குறித்த கவலைகள் எனக்கிருந்ததில்லை.


என் ச்சின்னச் சின்ன துண்டுக் காகிதம் கூட இருக்குமிடம் உனக்குத் தெரியும். ஒருமுறை உனக்கான கால்வலி மாத்திரையைப் பார்த்தீர்களாவென்று என்னை நீ கேட்டதற்கு என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாய்.


பலருக்கு நடுவே உன் குழந்தை பாராட்டுப் பெறும் போது ‘அவங்கப்பாவோட மூளை அப்படியே’ என்று சொல்வதில் உனக்கு அவ்வளவு சந்தோஷம். ஆனால் உன்னை எங்கும் நான் முன்னிலைப்படுத்திப் பேசியதில்லை.

எப்போதுமே காய்கறி லிஸ்டில் பாவக்காய் இருந்ததில்லை. அன்றொரு நாள் உன் அன்னை வீட்டில் உனக்காகத் தனியே பாவக்காய் குழம்பு வைக்கப்பட்டபோதுதான் உனக்கது எவ்வளவு பிடிக்குமென்று உணர்ந்தேன் நான். அதற்குப் பிறகும் கூட பாவக்காய் நம் வீட்டு லிஸ்டில் வர நான் விடவில்லை.


நம் குழந்தைகளின் நல்ல பழக்க வழக்கங்களில் உனக்குத்தான் அதிகப் பங்கு. அதற்குப் பாராட்டாத நான்... ஏதேனும் அவர்கள் குறும்பாய் செய்துவிட்டால் திட்டுவதற்கு மட்டுமே உன்னை அழைக்கிறேன்.


எங்கேயாவது புறப்படும்போதும் என்னால் ஒரு மணிநேரம் தாமதமானால்கூட நீ கோவப்படக்கூடாது. உன்னால் ஒரு பத்து நிமிடம் பயணம் தள்ளிப் போனால் அந்தப் பயணத்தையே ரத்து செய்துவிடும் மூர்க்கனாய் மாறுகிறேன் நான்.


பீரோவில் என் ஆடைகள் அழகாய் அடுக்கிவைக்கப்பட்ட இடம் போகத்தான் உன் ஆடைகளுக்கு அனுமதி அளிக்கிறாய்.


அவரைக்காய் பொரியல் வைக்கும்போது மட்டும் சிவப்பு மிளகாயைப் போடுவதில் உன் அன்பை நான் உணர்ந்திருக்கிறேன்.


என்னோடு அமர்ந்து கவிதைகளை நீ ரசித்த அளவுக்கு, உன்னோடு அமர்ந்து உன் விருப்பத்தைச் சொல் எனக் கேட்டதில்லை நான்.


ஒவ்வொரு முறை இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுகிறது. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.


உமா....

ஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...


அப்போதுதான் உன் வலிகள் எனக்கும் தெரியும்!

என் மனைவியாய் உன்னைப் பார்க்காமல்
உன் கணவனாய் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்
-கிருஷ்ணா

110 comments:

விஜய் ஆனந்த் said...

திருமண நாளுக்கு உங்கள் மனைவிக்கு மிகச்சிறந்த பரிசளித்திருக்கிறீர்கள்!!!

வாழ்த்துக்கள்!!!இருவருக்கும்!!!

விஜய் ஆனந்த் said...

குறிப்பிட்டு பின்னூட்டமிட எந்த வரியை தேர்ந்தெடுப்பது??? எல்லாமே வைர வரிகள்!!!

மனைவியை விரும்பும் எல்லா கணவர்களுக்கும், கணவரை விரும்பும் எல்லா மனைவிகளுக்கும் சமர்ப்பணம்!!!

புதுகை.அப்துல்லா said...

இது பரிசல் அண்ணே உமா அண்ணிக்கு எழுதிய கடிதம் அல்ல...அப்துல்லா, ச்சின்னப்பையன், வெண்பூ மற்றும் பலர் அவர்கள் தங்கமணிக்கு எழுதிய கடிதமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Thamiz Priyan said...

///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
இது பரிசல் அண்ணே உமா அண்ணிக்கு எழுதிய கடிதம் அல்ல...அப்துல்லா, ச்சின்னப்பையன், வெண்பூ மற்றும் பலர் அவர்கள் தங்கமணிக்கு எழுதிய கடிதமாகவும் எடுத்துக் கொள்ளலாம்./*//

அப்படியே இது தமிழ் பிரியன் அவனோட தங்கமணிக்கு எழுதியதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Thamiz Priyan said...

இந்த ஆம்பிளைகள் எல்லாமே அப்படித்தான் போல் இருக்கு... :)

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்!!

வெண்பூ said...

பரிசல். எனக்கு மட்டும் உண்மையை சொல்லுங்கள். இந்த பதிவு பொய்தானே. உங்களால் உங்களின் இந்த தவறையெல்லாம் எழுத முடிகிறதென்றால் நீங்கள் அவற்றை த‌வறென்று உணர்கிறீர்கள். அப்படி உணர்ந்தாலே இந்த பதிவு பொய் என்றாகிறது. அழகான முரண்....

வாழ்த்துக்கள், உங்களுக்கும் சிஸ்டருக்கும்....

Venkatramanan said...

பின்னிட்டான்யா!பின்னிட்டான்யா!
நோட் பண்ணுங்கப்பா!

பரிசல் நெசமாவே நெஞ்சைத் தொட்டுட்டீங்க! இதுல ஓரிரண்டைத் தவிர உங்களுக்கு எதுவும் ஒத்துப்போகாதென்பது என் அனுமானம் (அப்படி மனைவிகிட்ட சராசரியா இருக்கறவங்களால இப்படிக் கவிதையா எழுதறதெல்லாம் கஷ்டம்!)! உமா கொடுத்து வெச்சவங்க!

அன்புடன்
வெங்கட்ரமணன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஒவ்வொரு முறை இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுகிறது. // :(

பரிசல்காரன் said...

நன்றி விஜய் ஆனந்த்!

முதலில் வந்து என்னை கவர்ந்துவிட்டீர்கள்!

@ புதுகை அப்துல்லா

நன்றி நண்பரே! என்ன் சொல்ல?

@ தமிழ் பிரியன் & ஜெகதீசன்

நன்றி நண்பர்களே!

பரிசல்காரன் said...

@ ப்ரதர் வெண்பூ & வெங்கட்ரமணன் சார்

நீங்க சொல்றது சரிதாங்க..

-உமா

சரவணகுமரன் said...

அருமை... :-)

பரிசல்காரன் said...

முத்துதங்கச்சி...

இது கொஞ்சம் நிஜம்தான்!

அதில் எனக்கும் வருத்தம்தான்!

anujanya said...

கண்ணுக்கு மை அழகு
காலுக்கு மெட்டி அழகு
உன் கவிதையின் பொய் அழகு

ஆயினும் கே.கே. கொஞ்சம் சாகிரத்தை. பெண்ணியவாதிகள் ஆட்டோ அனுப்பக்கூடும்.

மீண்டும் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்

அனுஜன்யா

பரிசல்காரன் said...

//உங்களால் உங்களின் இந்த தவறையெல்லாம் எழுத முடிகிறதென்றால் நீங்கள் அவற்றை த‌வறென்று உணர்கிறீர்கள். அப்படி உணர்ந்தாலே இந்த பதிவு பொய் என்றாகிறது. அழகான முரண்..../

க்ரேட் பார்ட்னர்!

என் பதிவுகளை பி.ஹெச்.டி.பண்ணி டாக்டர் பட்டம் வாங்கற ஐடியா ஏதும் இருக்கா?

பரிசல்காரன் said...

அல்லாருக்கும் ஒரு அறிவிப்புப்பா..

மைக் டெஸ்டிங் ஒன்..டூ..த்ரீ...

நம்ம அங்கிள் பிஸியா இணையம் பக்கம் வராம இருக்கறதால (இந்த வாரக் குங்குமத்துல அவர் கதை, படக்கதையா வந்திருக்கு தெரியுமா?) மெய்ல் மூலம் என் இந்தப் பதிவை பாராட்டியிருக்காரு.. இதோ அவரது ரிப்ளை...

மிக நல்ல படைப்பு.

எவ்வளவு அழகா உணர்வுகளை

வெளிப்படுடுத்துறீங்க.

பிரமாதம்.

வேறு என்ன சொல்ல?


இப்படிச் சொல்லீட்டு மறுபடியும் அவர் எழுதீருக்காரு...

நீங்க மட்டுமதான் " மோல்ட்" பண்ணுவீங்களா?

நானும் ட்ரை பண்றேனே?

எந்தப் பதிவு நான் எழுதினாலும் பாராட்டாமல் இருந்ததில்லை நீ. ஆனால் உன் பதிவுகளை ரசித்தாலும் பின்னூட்டமிடச் சுணங்குவேன் நான்.

அதுமட்டுமா? உன் பின்னூட்ட ஆர்வத்தைப் பட்டம் கொடுத்துக் கிண்டலடித்த "இங்கிதக்காரன்" நான்!
அதையும் வணங்கி ஏற்றுக் கொண்ட அழகு நெஞ்சம் உன்னுடையது.

சில நாள் என் பதிவு வரவில்லையெனினும் போனில் ஏன் எழுதவில்லை எனக் கேட்பவன் நீ. அவ்வளவு ஏன்?
முன்பொருமுறை எழுத வேண்டாமென ஒதுங்கினபோது பலவாறாக முயன்று மீண்டும் என்னை எழுத வைத்தவன் நீ!

காட்டாற்று வெள்ளமாய்க் கலக்கிக் கொண்டிருந்த உன்னை அறிவுரை என்ற பேரில் குழப்பி "இனி எழுத மாட்டேன்" என உன்னை எழுத வைத்தவன் நான்.

என்னை விமரிசித்து வந்த ஓர் அன்பருக்குச் சீற்றத்துடன் பதில் சொன்னவன் நீ!

உன்னை விமரிச்ப்பவரை விலகி நின்று வேடிக்கை பார்ப்பவன் நான்!

என் பிறந்தநாளின்போது தொலைபேசியில் பேசியபடியே இருந்தவன் நீ!

ஆனால் பிறந்தநாளுக்கு உன்னையும் இன்னும் ஒரு சிலரையும் சந்திக்காமல் உல்லாசத்துக்கும் உற்சாகத்துக்குமாக வெறு இடம் ஒதுங்கியவன் நான்!

வீடியோ கேமிராவிலிருந்து கணிணி நுட்பங்கள் வரை எனக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவன் நீ!

பத்திரிக்கையில் உன்னை வெளிச்சம்போட்டுக் காட்ட ஏதும் செய்யாதவன் நான்!

அடுத்த பிறவியிலாவது என்னுடைய காதலிகளில் ஒருத்தியாகப் பிறப்பாயா நீ?

அப்போதும் உன்னை நுகர்ந்த பிறகு அடுத்த மலருக்குத் தாவாமல் இருப்பேனா நான்?

லதானந்த்

பரிசல்காரன் said...

நன்றி அனுஜன்யா!

அந்த ஆட்டோ வந்தால் அதுல ஏறி உங்க வூட்டுக்கு வர்றேன்!

பரிசல்காரன் said...

நன்றி சரவணகுமரன்! குடிலில் எல்லாரும் நலமா?

Unknown said...

மிகச் சிறந்த படைப்பு. உங்கள் மனைவி மிகவும் கொடுத்த வைத்தவர். நீங்களும்தான்.

மங்களூர் சிவா said...

திருமண நாள் வாழ்த்துக்கள் பரிசல்!. அப்படியே தங்கச்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவிச்சிருங்க!

மங்களூர் சிவா said...

வாழ்த்தியாச்சு இப்ப பதிவுக்கு போவோம்!!

மங்களூர் சிவா said...

/
என் நண்பர்களை நீ வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். உன் நண்பிகளின் பெயர் கூடத் தெரியாதெனக்கு!
/

இதனால் சொல்ல வரும் கருத்தென்னவோ!?!? ராமச்சந்திர மூர்த்தியே!!
:))

மங்களூர் சிவா said...

/

இருவருமே பணிபுரிந்தாலும் அடுக்களையை உனக்கானதாய் உவமானம் காட்டும் கீழாந்தரமானவனாய்த்தான் நானிருக்கிறேன்!
/

குடுக்கிற இம்சை பத்தாது என இப்பிடி ஒரு எண்ணம் வேற இருக்கா???

Athisha said...

கலக்கல் பதிவு அண்ணா

அண்ணிக்கும் உங்களுக்கும் மணநாள் வாழ்த்துக்கள் .

இந்த பதிவ ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து அண்ணிக்கு கிப்ட் பண்ணுங்க..

ரொம்ப சந்தோசப்படுவாங்க

மங்களூர் சிவா said...

வருசத்துக்கு ஒரு நாள் இப்பிடி பதிவு எழுதியே கவுத்துருங்கய்யா இது அடுத்த வருசம் வரைக்கும் தாங்கும்!!

:)))))

பாபு said...

வெண்பூ மிக அழகாக சொல்லிவிட்டார்
நான் வழிமொழிகிறேன்

திருமண நாள் வாழ்த்துக்கள்

லக்கிலுக் said...

அழகான பதிவு. கவிதை தரும் சுகத்தை உரைநடை கூட சில நேரங்களில் தரும். இப்பதிவு அந்த வகை.

ஆணாதிக்க வாதியான அண்ணன் பரிசலுக்கு கண்டனங்கள்!

உமா அண்ணிக்கு மட்டும் எனது திருமண வாழ்த்துக்கள்!!

குழந்தைகளுக்கு எனது அன்பு முத்தங்கள்!!

வேண்டுகோள் : நீங்கள் பதிவிட்டிருக்கும் படம் அழகு. ஏதாவது திருமண அழைப்பிதழ் டிசைன் செய்யும்போது இந்தப் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா?

சந்தனமுல்லை said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்!!

ஒரு யுனிவர்சல் டெம்ட்ளேட்-ஆவே ஆக்கிடலாம்...இது எல்லா ரங்கமணிகளுக்கும் பொருந்தும்..:-)))

லக்கிலுக் said...

அங்கிளின் மெயில் அருமை. குங்குமத்தில் வந்த அவர் படக்கதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அங்கிள் இன்னொரு வாண்டுமாமா. நிச்சயமாக குழந்தைகளுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் இலக்கியம் நிறைய அவர் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

//அப்போதும் உன்னை நுகர்ந்த பிறகு அடுத்த மலருக்குத் தாவாமல் இருப்பேனா நான்?//

அங்கிளுக்கு வயசு 16க்கு அப்புறம் ஏறவேயில்லை :-))))))

பரிசல்காரன் said...

@ மங்களூர் சிவா

//இதனால் சொல்ல வரும் கருத்தென்னவோ!?!? ராமச்சந்திர மூர்த்தியே!!//

கண்டுபுடிச்சிட்டீயளே.. (பாம்பின் கால்..)

//வருசத்துக்கு ஒரு நாள் இப்பிடி பதிவு எழுதியே கவுத்துருங்கய்யா இது அடுத்த வருசம் வரைக்கும் தாங்கும்!!//

குபீர்ன்னு சிரிச்சுட்டேன் நண்பரே!

@ அதிஷா

//இந்த பதிவ ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து அண்ணிக்கு கிப்ட் பண்ணுங்க..//

அவங்க படிச்சு அனுமதிக்கப்புறம் தான்
பதிவே போட்டேனே!

VIKNESHWARAN ADAKKALAM said...

மீண்டும் வாழ்த்துக்கள் பரிசல்..

பரிசல்காரன் said...

நன்றி பாபு!

@ லக்கிலுக்

நன்றி தோழர்!

//வேண்டுகோள் : நீங்கள் பதிவிட்டிருக்கும் படம் அழகு. ஏதாவது திருமண அழைப்பிதழ் டிசைன் செய்யும்போது இந்தப் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா?//

தாராளமாக. (பத்திரிகையில் கால்கள். மிஞ்சி அணிந்த விரல்கள். பரவால்லியா?)

பரிசல்காரன் said...

நன்றி விக்னேஸ்வரன்.

உங்க அம்மாவுக்கும் பிறந்தநாள் நமஸ்காரங்கள்!

கோவி.கண்ணன் said...

உமாவுக்கு உம்மா பதிவா ?

சும்மா பதிவாக இல்லாமல் குறையாக நீங்களாக உணர்ந்து வருந்தும் செயல்களை மாற்ற முயற்சி செய்யுங்க !

நல்லா இருக்கு !

புதுகை.அப்துல்லா said...

வெண்பூ said...
பரிசல். எனக்கு மட்டும் உண்மையை சொல்லுங்கள். இந்த பதிவு பொய்தானே.//


அதுதான் நான் முன்னாட்டியே சொல்லிட்டேனே....இது பரிசல் அண்ணே உமா அண்ணிக்கு எழுதிய கடிதம் அல்ல. நம்ம மாதிரி ஆளுங்க நம்ம தங்கமணிக்கு எழுதிய கடிதம்னு

உண்மைத்தமிழன் said...

அருமை பரிசல்காரரே..

உங்களுடைய புரிதல் படிப்பவர்கள் அனைவருக்கும் வருமேயானால் 'பால் பேதங்கள்' போகப் போகக் குறுகிவிடும்.

தங்களுடைய காதல் என்றென்றும் ஜீவித்திருக்க வாழ்த்துகிறேன்..

வாழ்க வளமுடன்

ஆயில்யன் said...

//எனக்குப் பிடித்த நிறம் நீலமென்று உனக்குத் தெரியும். உனக்குப் பிடித்த நிறமும் நீலம்தானென்பது அது எனக்குப் பிடித்ததால்தான் என்பது எனக்குத் தெரியாது.//


நல்லா இருக்கு இது மட்டுமல்ல இது போல பல இடங்களில் பல வரிகள்

வாழ்த்துக்கள் அண்ணா!

கூடுதுறை said...

ரொம்பவே நல்லாயிருக்கு பரிசல்...

எனக்கும் மட்டும் ரகசியமாகச்சொல்லுங்க...

எங்கே இருந்து சுட்டு பெயர் மாத்தி போட்டிங்க...

சொல்லுங்க நானும் என் வீட்டுத்தங்கமணிக்கு ஐஸ் வைக்கவேண்டும்...

சிநேகிதன்.. said...

திருமண நாள் வாழ்த்துக்கள் பரிசல்அண்ணா!. அப்படியே அண்ணிக்கும் வாழ்த்துக்களை தெரிவிச்சிருங்க

Voice on Wings said...

வாழ்த்துக்கள். மற்றும் கோவி.கண்ணனின் கீழ்க்கண்ட வரிகளை வழிமொழிகிறேன்:

"சும்மா பதிவாக இல்லாமல் குறையாக நீங்களாக உணர்ந்து வருந்தும் செயல்களை மாற்ற முயற்சி செய்யுங்க !"

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
உங்க கடிதத்துல அண்ணி பெயர் இருக்க இடத்துல எல்லாம் அவங்க அவங்க தங்கமணி பெயர போட்டு அப்டியே குடுத்துரலாம். இது எல்லா இடத்துலயும் நடக்குது. என்ன சிங்கையில ரெண்டு பேரும் வேலைக்கு போற இடங்கள்ல கொஞ்சம் வீட்டு வேலைகளில ரங்கமணிங்க உதவுறாங்க.

நீங்களே தப்புன்னு உணர்ந்துதான் இந்த கடிதத்த எழுதியிருக்கீங்க அப்டின்னா, இத வெறும் கடிதமா மட்டும் பார்க்க கூடாது. இன்னையில இருந்து உங்க நடவடிக்கை மாறனும். மாறும் என்று நம்புகிறேன். இந்தியா வர்றப்ப நேர்ல நானே பார்த்து தெரிஞ்சுகிட்டு, கட்டாயம் அதை ஒரு பதிவா எழுதுவேன்.
இன்னைக்கு பதிவு, பின்னூட்டத்துக்கு எல்லாம் விடுப்பு கொடுத்துட்டு மாலை கோயிலுக்கு போங்க, அப்டியே வெளில நல்ல ஹோட்டல்ல சாப்புடுங்க. சீக்கிரம் காரு வாங்குங்க. மீண்டும் எனது அன்பு வாழ்த்துக்கள்.

Vijay said...

என் மனசுக்குள் இருப்பதையெல்லாம் நீங்கள் வார்த்தையால் சொல்லிட்டீங்க. இது எனக்கும் பொருந்தும்

By the way, மண நாள் வாழ்த்துக்கள்.
Photo super.

Saminathan said...

எப்டிங்க இப்படி எல்லாம்...??

எங்கேயோ போய்ட்டீங்க...!!

மனைவி அமைவதெல்லாம்....இறைவன் கொடுத்த வரம்...!!!

வாழ்த்துக்கள் என்றென்றும்..

Anonymous said...

ரொம்ப அருமையா இருக்குங்க, உமா படிப்பாங்களா இந்தப்பதிவ, திருமண நாள் வாழ்த்துக்கள்

Mahesh said...

மீண்டும் மீண்டும் மண நாள் வாழ்த்துக்கள் !!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உருக்கமான பதிவு!
நெருக்கமாக்கும் பதிவு!
சுருக்கமான பதிவு!
சுருக் எனும் பதிவு!
தெரிந்த பதிவு!
தெரியாத பதிவு!
தெரிந்தும் தெரியாத பதிவு!
தெளிந்த பதிவாகக் கருதுகிறேன்!
பரிசல் கிருஷ்ணா-உமா
தம்பதியர் நீடூழி வாழ
எனது இதயங்கனிந்த
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

கயல்விழி said...

இப்படி ஒரு பதிவை படித்ததே இல்லை, ரொம்ப உருக்கமாக அன்பைக்கொட்டி எழுதி இருக்கிறீர்கள். உங்கள் மனைவி உண்மையிலேயே ரொம்ப லக்கி!

☼ வெயிலான் said...

மணநாள் வாழ்த்துக்கள்!!!!!!

தலைப்பு!!!!!!

உள்ளே உருகி உருகி எழுதுன மேட்டர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு! (நானும் கூட கொஞ்சம் டிப்ஸ் எடுத்து வச்சிருக்கேன் ;) )

இப்படியெல்லாம் ஐஸ் வச்சாப்புல ஏமாந்திருவாங்களா என்ன?

கயல்விழி said...

மீண்டும் ஒருமுறை திருமண நாள் வாழ்த்துக்கள் :)

கயல்விழி said...

முகப்பில் பதிந்திருக்கும் படம் ரொம்ப வித்யாசமாக இருக்கிறது. போட்டோகிராஃபி டேலண்ட், எழுத்து டேலண்ட் இரண்டுமே உங்களிடம் இருக்கிறது, விரைவில் பெரிய எழுத்தாளராக வருவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.

வால்பையன் said...

என்ன சொல்றதுன்னே தெரியல நண்பா!
உங்களுக்காவது தவறு செய்திருக்கிறோம் என்ற புரிதல் இருந்திருக்கிறது.
இந்தனை நாள் அந்த சொரணை கூட இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன்.
ஏற்கனவே என்னை வேறொரு பழக்கத்திலிருந்து திருத்தியது போல் இந்த விசயத்திலும் என் கண்ணை திறந்து விட்டீர்கள்.

ஒரே ஒரு லாஜிக் தான் ஒதைக்குது, தங்கச்சிக்கு கால் கட்டைவிரல் அருகில் இருக்கும் விரல் பெரிதாக இருக்கிறது, அப்படி இருந்தால் வீட்டில் மதுரை ஆட்சி தானாமே, நீங்க அதுக்கு நேர் மாறா சொல்றிங்க. நீங்க சொல்றது பொய்யா இல்ல அந்த லாஜிக் பொய்யா

வால்பையன்

. said...

கிருஷ்ணா,

சிறப்பான பதிவு.

எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீ அறிந்து நடப்பதை வியப்பேன்.

உனை ஏதும் கேட்காமல் உனதாசை முழுதும் நிறைவேற்றவேண்டும் என்று தவிப்பேன்.

என்ற பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது.

வாழ்த்துக்கள்.

Syam said...

நல்லா எழுத வருது பின்னி பெடல் எடுக்கறீங்க....அப்துல்லா அண்ணன் சொன்னது தான் நானும் சொல்லிக்கறேன்... :-)

உங்களுக்கும் உமா தங்கச்சிக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் !!!

யட்சன்... said...

பரிசல்...

அருமையான சோப்பு !

உங்களை விட கூடுதலாக இரண்டு ஆண்டுகள் இதே வகையான சோப்புகளை வெற்றிகரமாய் தயாரித்து வண்டி ஓட்டிக்கொண்டிருப்பவன் என்கிற வகையில்....வாழ்த்துகள் நண்பரே!

உங்கள் இல்லத்தில் நலமும், வளமும் பல்கிப்பெருகி மேலும் பல்லாண்டுகள் இனிதாய் வாழ்ந்திட எனது குருவருளை வேண்டி பிரார்த்திக்கிறேன்.

இராம்/Raam said...

பரிசல்,,


இதுவரைக்கும் உங்களோட எல்லா பதிவுகளையும் ரீடர்'லே படிச்சிட்டு மூடிருவேன். இந்த பதிவுக்கு வலுகட்டாயமாக பின்னூட்டம் போட்டுத்தான் ஆகனுமின்னு ஏதோ சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டாச்சு,

கவிதையா இருக்குங்க பதிவு.... கலக்கல்

சின்னப் பையன் said...

பரிசல் -> மிகவும் அற்புதமாக இருக்கிறது.. ஒரு அருமையான ஃப்ளோ வந்துவிட்டது... மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.

சின்னப் பையன் said...

//இது பரிசல் அண்ணே உமா அண்ணிக்கு எழுதிய கடிதம் அல்ல...அப்துல்லா, ச்சின்னப்பையன், வெண்பூ மற்றும் பலர் அவர்கள் தங்கமணிக்கு எழுதிய கடிதமாகவும் எடுத்துக் கொள்ளலாம்//

அப்துல்லா அண்ணாச்சி -> மிக்க நன்றி.. நான் எழுந்து பரிசல் பதிவு பாக்கும்போது எப்பவுமே 60+ இடத்திலேதான் பின்னூட்டமிடறா மாதிரி இருக்கும். நீங்க 'மிகச்சரி'யா போட்டதாலே என் பேரும் முன்னாடியே வந்துடுச்சு!!! நன்றி....

சங்கணேசன் said...

நட்பு வட்டத்தில் கூடவே இருந்திருந்தாலும்
இந்த நண்பர்கள் வட்டத்திலிருந்து.... நான்...
உங்களுக்கும் உமா அவர்களுக்கும்
திருமண வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில்
பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்

குழந்தைகளுக்கும் நல்ல கல்வி வளமான வாழ்வு அமைய வாழ்த்துக்கள்

கைப்புள்ள said...

மிக அருமையான உருக்கமான பதிவுங்க கிருஷ்ணா. நீங்க போட்டிருக்கற புகைப்படமும் ரொம்ப நல்லாருக்கு.

மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க ப்ரெஸ்டீஜை வேணாம்னு சொல்லமாட்டாங்கன்னு முன்னெல்லாம் ஒரு விளம்பரம் வரும். அதே மாதிரி மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க அத்தனை பேருக்கும் உங்க பதிவு ரொம்ப பிடிக்கும். திருமண நாள் வாழ்த்துகள்.

//பரிசல் நெசமாவே நெஞ்சைத் தொட்டுட்டீங்க! இதுல ஓரிரண்டைத் தவிர உங்களுக்கு எதுவும் ஒத்துப்போகாதென்பது என் அனுமானம் (அப்படி மனைவிகிட்ட சராசரியா இருக்கறவங்களால இப்படிக் கவிதையா எழுதறதெல்லாம் கஷ்டம்!)! உமா கொடுத்து வெச்சவங்க!

அன்புடன்
வெங்கட்ரமணன்!///

ர்ர்ரிப்ப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

Unknown said...

Very Very nice Parisal., "Happy Wedding Anniversary".,

Unknown said...

Happy Wedding Anniversary to Mrs.Krishna and Mr.Uma.

Unknown said...

All your blogs n photos are really superb...., keep writing Krishna...,

கிரி said...

ஆஹா! கே கே ஐஸ் தொழிற்சாலையே இருக்கே....பலமான அடித்தளம் போட்டுட்டீங்க :-) ஒரு பதிவிலே :-)))

என் அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள் ..நீங்களும் உங்கள் மனைவியும் உங்கள் குழந்தைகளும் உங்கள் குடும்பத்தில் அனைவரும் நீண்ட ஆயுள் உடன் அனைத்து சந்தோசங்களையும் பெற்று வாழ்வில் வளம்பெற கடவுள் துணை இருப்பாராக.

சந்தோசத்தில் பெரிய சந்தோசமே அடுத்தவரை மகிழ்விப்பதில் தான் என்பதை உணர்ந்து நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து அடுத்தவர்களையும் மகிழ்ச்சி படுத்த வேண்டுகிறேன்

அன்புடன்
கிரி

Krishnan said...

அருமையான வரிகள். I am also sailing in the same boat - 10 years not out. வாழ்த்துக்கள்

Sen22 said...

அருமையான, அழகான, அழுத்தமான வரிகள்..
நல்லா இருக்கு...
திருமண நாள் வாழ்த்துகள் Boss...

manikandan said...

பரிசல் சார்,

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. லக்கி சொன்னா மாதிரி இது ஒரு உரை கவிதை.

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

ஒரு 12 வருஷம் முன்னாடி பொறந்து இருந்தா நமக்கும் இந்த மாதிரி ஒரு தங்கமணி கிடைச்சி இருப்பாங்களோன்னு நினைக்க வச்ச பதிவு !!!!! ( தாமிரா தான் பதில் சொல்லணும் )

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அண்ணன்...

தமிழன்-கறுப்பி... said...

\
ஒவ்வொரு முறை இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுகிறது. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.
\

உண்மை...

தமிழன்-கறுப்பி... said...

\
ஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...
\

அடுத்த வரி தேவையில்லை பரிசல் இவ்வளவும் போதும்...

தமிழன்-கறுப்பி... said...

நீ என்னை நிரப்புகிறாய் என் உலகம் உன்னால் நிறைகிறது...
(இது பதிவுக்காக)


மறுபடியும் வாழ்த்துக்கள்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்கதான் அன்னைக்குமட்டும் நினைச்சுட்டு அப்பறம் மறந்துட்டு வழக்கம்போல வளையவரேன்னு சொல்லிட்டீங்களே! அப்பறமும் எல்லாரும் உங்க கேரக்டரையே புரிஞ்சுக்காம கேக்கறாங்களே.. ? இதில முரண் வேறயாமே..?
யட்சன் சொன்னது தான் சரி..
இப்படி எதயாவது சொல்லி ஓட்டிட்டிருக்கறவங்க தான் எல்லாமே..
மாறினாலும் மாறாவிட்டாலும் அதை உமா லைட்டா எடுத்துட்டுப்போறாங்களா இருக்கும்.
இல்லன்னா கட்டைவிரலுக்கு பக்கத்துவிரல் ஜாதகப்படி.. நீங்க செய்த தவறுகளுக்கெல்லாம் அப்பப்ப கிடைக்கும் மண்டகப்படி நினைவு வச்சு இந்த பதிவிட வசதியா இருந்திருக்கோம்ன்னு தோணுது.
போன பின்னூட்டத்தில் படத்தை பத்தி சொல்ல விட்டுப்போச்சு .. சூப்பர் படம்..

பாலராஜன்கீதா said...

கிருஷ்ணகுமார் உமா இருவருக்கும் இனிய மண நாள் நல் வாழ்த்துகள்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

மேற்கண்ட பதிவின் முன் மாதிரி பதிவிற்கு கீழ்க்கண்ட சுட்டியினை தொடரவும் .
http://abiappa.blogspot.com/2008/06/blog-post.html
அபி அப்பா அவர்களுக்கு ஒரு நன்றியாவது போடவும் .
லிங்க் வேலை செய்யவில்லை என்றால் அபி அப்பா வின் ஜூன் மாதத்தின் உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி என்ற பதிவினை பார்க்கவும்.
ஆனாலும் ரீமேக் பரவாயில்லை ரகமாக உள்ளது .
அன்புடன்,
அருவை பாஸ்கர் .

Thamira said...

எனது தனிப்பட்ட கருத்து பரிசல், இது, இதுவரை வந்த பதிவுகளில் உங்களின் மாஸ்டர் பீஸ் என்று சொல்வேன். மனமார்ந்த வாழ்த்துகள். கிட்டத்தட்ட இதே போல ஒன்று யோசித்து வைத்திருந்தேன், ஒப்புக்கொள்கிறேன் நான் ஒருவேளை எழுதியிருந்தால் இந்த அளவுக்கு அது கண்டிப்பாக வந்திருக்காது.
மீண்டும் மீண்டும் வாழ்த்துகள்.

என்ன ஸேம் சைட் கோல் போடப்போறோமே, நம்ப ஆளுங்க அடிக்க வருவாங்களேன்னு பயந்துகிட்டே பார்த்தா, எனக்கு முன்னமே விருந்துக்கு வந்து ஈன்னு இளிச்சுக்கிட்டு 'குலோப்ஜாமுனை' விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். புதுகை அப்துல், வெண்பூ, அவனும் அவளும் ஆகியோரைத்தான் சொல்கிறேன். இதையும் கவுண்டர் செய்த மங்களூர் சிவாவின் அழகு பிரமாதம். அவருக்கு 'கவுண்டர் அட்டாக் திலகம்'னு பெயரே வழங்கலாம் என்று நினைக்கிறேன். ஒப்புக்கொள்கிறவர்கள் வழிமொழியலாம்.

manikandan said...

பலபேரோட தங்கமணி இத படிச்சா இப்படி தான் நினைப்பாங்க.


******எந்தக் கோவிலுக்குப் போனாலும் என் நட்சத்திரம் உனக்குத் தெரிகிறது. எத்தனை முறை சொல்லியிருப்பினும் உன் நட்சத்திரம் என் ஞாபகத்தில் நிற்பதில்லை.*****

நீ என்னைய ஞாபகம் வச்சி இருக்கியே. அதுவே பெரிய விஷயம்.

****பதினோரு வருடங்களாக எத்தனையோ நாட்கள் என் உடல் நலனுக்காக விழித்திருக்கிறாய். அன்றொரு நாள் உனக்காக ஓரிரு மணிநேரம் விழித்ததையே இன்னும் சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கிறேன் நான்****

மவனே. நீ அந்த ரெண்டு மணிநேரத்துல பண்ணின கூத்தே தாங்கல.

*****எனக்குப் பிடித்த நிறம் நீலமென்று உனக்குத் தெரியும். உனக்குப் பிடித்த நிறமும் நீலம்தானென்பது அது எனக்குப் பிடித்ததால்தான் என்பது எனக்குத் தெரியாது.****

இப்படி வேற ஒரு நினைப்பா.

******என் நண்பர்களை நீ வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். உன் நண்பிகளின் பெயர் கூடத் தெரியாதெனக்கு!****

மரியாதைக்குரிய நண்பனை எப்ப அழைச்சிகிட்டு வர போறீங்க ?

*******அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி முடிக்குமுன் எனக்காக கணினியைத் திறப்பாய் நீ. உனக்காய் ஒருபோதும் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்ததில்லை நான்*******

வந்து பேச அரம்பிச்சுடேன்னா ?

******இருவருமே பணிபுரிந்தாலும் அடுக்களையை உனக்கானதாய் உவமானம் காட்டும் கீழாந்தரமானவனாய்த்தான் நானிருக்கிறேன்!****

நீ சமைக்கிற சாப்பாட வேற நாம் சாப்பிடனுமா ?

*****என்னைவிடக் களைத்து வரும்போதும் உனக்காய் ஒரு புன்னகையைக் கூட கொடுக்கத் தெரியாத எனக்கு, நான் ஊர் சுற்றி விட்டு வரும் போது கூட தேநீர் தயாராய் இருக்கும்*****

நீ சிரிச்சா யாரு பாக்றது ?

*******என் ச்சின்னச் சின்ன துண்டுக் காகிதம் கூட இருக்குமிடம் உனக்குத் தெரியும். ஒருமுறை உனக்கான கால்வலி மாத்திரையைப் பார்த்தீர்களாவென்று என்னை நீ கேட்டதற்கு என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாய்.*****

சாமி நல்லவேளை.

******எப்போதுமே காய்கறி லிஸ்டில் பாவக்காய் இருந்ததில்லை. அன்றொரு நாள் உன் அன்னை வீட்டில் உனக்காகத் தனியே பாவக்காய் குழம்பு வைக்கப்பட்டபோதுதான் உனக்கது எவ்வளவு பிடிக்குமென்று உணர்ந்தேன் நான். அதற்குப் பிறகும் கூட பாவக்காய் நம் வீட்டு லிஸ்டில் வர நான் விடவில்லை.*****

நீங்களே இருக்கீங்களே. அப்புறம் பாவக்காய் எதுக்கு ?

****என்னோடு அமர்ந்து கவிதைகளை நீ ரசித்த அளவுக்கு, உன்னோடு அமர்ந்து உன் விருப்பத்தைச் சொல் எனக் கேட்டதில்லை நான். ****

ஓஹோ. அது எல்லாம் கவிதையா ? ஆனாலும் இப்படி இருக்கவேணாம் ரசனை.

ஒவ்வொரு முறை இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுகிறது. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.

ஒரு நாளைக்கு இந்த அலும்பு. சாமி..இந்த உலகம் தாங்காது நீங்க டெய்லி இப்படி இருந்தா ?

Unknown said...

///ஏதேனும் கஷ்டங்கள் வரும்போது உன் கழுத்துச் சங்கிலி வங்கிக்குப் போகும். எந்தச் சூழ்நிலையிலும் என் மணிக்கட்டு தங்கத்தை அவிழ்க்க அனுமதித்ததில்லை நீ.///

என் மனசுக்குள் இருப்பதையெல்லாம் நீங்கள் வார்த்தையால் சொல்லிட்டீங்க. இது எனக்கும் பொருந்தும்

நல்லதந்தி said...

பரிசல்காரனுடைய எந்த இடுகையையும் நான் இதுவரைப் படித்ததில்லை.
ஆனால் இணையத்தில் சமீபத்தில் நடக்கும் மொக்கைக் கூத்தின் போதுதான் உங்களின் பெயரையே கேள்விப்பட்டேன்.என் நண்பர் வால் பையனின் நண்பர் என்று தெரிந்தும் உங்கள் இடுகையைப் பார்க்க நான் நினத்ததே இல்லை.
இன்றுதான் முதன் முதலில் வந்ததேன்.
மனைவியை விரும்பும்,ஆனால் அவளிடம் அன்பு இருப்பதை வெளிக் காட்டிக் கொள்ளத் தெரியாத எங்களைப் போன்ற ஆண்களுக்கு உங்கள் கவிதை (கவிதைன்னு சொல்றது ஒரு குத்து மதிப்பாதான் :) ) நெஞ்சில் முள் போலத் தைக்கிறது!.
இன்ன மேலயாவது வூட்டுக்கார அம்மணிங்க கிட்ட கொஞ்சமாவது மனசில இருக்கிற பாசத்த காட்டனும்ன்னு நினைக்கிற ........

மடையன்களில் ஒருவன்!

நல்லதந்தி said...

பரிசல்காரனுடைய எந்த இடுகையையும் நான் இதுவரைப் படித்ததில்லை.
ஆனால் இணையத்தில் சமீபத்தில் நடக்கும் மொக்கைக் கூத்தின் போதுதான் உங்களின் பெயரையே கேள்விப்பட்டேன்.என் நண்பர் வால் பையனின் நண்பர் என்று தெரிந்தும் உங்கள் இடுகையைப் பார்க்க நான் நினத்ததே இல்லை.
இன்றுதான் முதன் முதலில் வந்ததேன்.
மனைவியை விரும்பும்,ஆனால் அவளிடம் அன்பு இருப்பதை வெளிக் காட்டிக் கொள்ளத் தெரியாத எங்களைப் போன்ற ஆண்களுக்கு உங்கள் கவிதை (கவிதைன்னு சொல்றது ஒரு குத்து மதிப்பாதான் :) ) நெஞ்சில் முள் போலத் தைக்கிறது!.
இன்ன மேலயாவது வூட்டுக்கார அம்மணிங்க கிட்ட கொஞ்சமாவது மனசில இருக்கிற பாசத்த காட்டனும்ன்னு நினைக்கிற ........

மடையன்களில் ஒருவன்!

Sridhar V said...

கொஞ்சம் லேட்டா திருமண நாள் வாழ்த்துகள் :-)

இப்பதான் படிச்சேன். அதுக்குள்ள லதானந்த் அங்கிள் ஒரு எதிர்வினைகூட போட்டுட்டார்ப் போல. சூப்பர்.

இதை நீங்க கவிதையாகவே வெளியிட்டிருக்கலாம். நல்ல அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

படத்துக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு :-)

Sridhar V said...

கொஞ்சம் லேட்டா திருமண நாள் வாழ்த்துகள் :-)

இப்பதான் படிச்சேன். அதுக்குள்ள லதானந்த் அங்கிள் ஒரு எதிர்வினைகூட போட்டுட்டார்ப் போல. சூப்பர்.

இதை நீங்க கவிதையாகவே வெளியிட்டிருக்கலாம். நல்ல அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

படத்துக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு :-)

இனியா said...

Good gift on wedding anniversary to your wife.

Kanchana Radhakrishnan said...

முதல்ல லதானந்த்க்கு நன்றி சொல்லுங்க பரிசல்..
அவர் எழுதின கடிதம்தான் உங்களுக்கு உமாவைப் பத்தி எண்ண வைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.
ரொம்ப அருமையா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க..உமாவோட நெஞ்சை தொட்டுட்டீங்க.
இனிமே இன்னும் அதிகமா உங்களை கவனிக்கப் போறாங்க.
அப்பப்ப அவங்களையும் கவனிச்சுக்கங்க.
என்னோட மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்க இருவருக்கும்.

கப்பி | Kappi said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

கயல்விழி said...

//எந்தப் பதிவு நான் எழுதினாலும் பாராட்டாமல் இருந்ததில்லை நீ. ஆனால் உன் பதிவுகளை ரசித்தாலும் பின்னூட்டமிடச் சுணங்குவேன் நான்.

அதுமட்டுமா? உன் பின்னூட்ட ஆர்வத்தைப் பட்டம் கொடுத்துக் கிண்டலடித்த "இங்கிதக்காரன்" நான்!
அதையும் வணங்கி ஏற்றுக் கொண்ட அழகு நெஞ்சம் உன்னுடையது.

சில நாள் என் பதிவு வரவில்லையெனினும் போனில் ஏன் எழுதவில்லை எனக் கேட்பவன் நீ. அவ்வளவு ஏன்?
முன்பொருமுறை எழுத வேண்டாமென ஒதுங்கினபோது பலவாறாக முயன்று மீண்டும் என்னை எழுத வைத்தவன் நீ!

காட்டாற்று வெள்ளமாய்க் கலக்கிக் கொண்டிருந்த உன்னை அறிவுரை என்ற பேரில் குழப்பி "இனி எழுத மாட்டேன்" என உன்னை எழுத வைத்தவன் நான்.

என்னை விமரிசித்து வந்த ஓர் அன்பருக்குச் சீற்றத்துடன் பதில் சொன்னவன் நீ!

உன்னை விமரிச்ப்பவரை விலகி நின்று வேடிக்கை பார்ப்பவன் நான்!

என் பிறந்தநாளின்போது தொலைபேசியில் பேசியபடியே இருந்தவன் நீ!

ஆனால் பிறந்தநாளுக்கு உன்னையும் இன்னும் ஒரு சிலரையும் சந்திக்காமல் உல்லாசத்துக்கும் உற்சாகத்துக்குமாக வெறு இடம் ஒதுங்கியவன் நான்!

வீடியோ கேமிராவிலிருந்து கணிணி நுட்பங்கள் வரை எனக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவன் நீ!

பத்திரிக்கையில் உன்னை வெளிச்சம்போட்டுக் காட்ட ஏதும் செய்யாதவன் நான்!

அடுத்த பிறவியிலாவது என்னுடைய காதலிகளில் ஒருத்தியாகப் பிறப்பாயா நீ?

அப்போதும் உன்னை நுகர்ந்த பிறகு அடுத்த மலருக்குத் தாவாமல் இருப்பேனா நான்?

லதானந்த்
//

ஆணிடம் இன்னொரு ஆண், அதுவும் தனது சமூக, பொருளாதார, அறிவு, அனுபவ, வயது பின்னணியில் இவ்விதம் தன்னை தாழ்த்தி எழுதியது உண்மையிலே பாராட்டுக்குரியது!

லதானந்த் சித்தரை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் :(

கவிதா | Kavitha said...

உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். திருமதி உமா கொடுத்து வைத்தவர்கள், வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன் !!

Natty said...

ராசுக்குட்டின்னு ஒரு படம் தல... அதுல குண்டா ஒரு நடிகர்.....

மனசுக்குள்ள ஆயிரம் இருக்கு... எதையும் சொல்ல முடிலன்னு ஒரு பஞ்ச் டயலாக் அடிப்பாரு.... அதேதான்... ரிப்பீட்டு....

ஜியா said...

கலக்கிட்டீங்க... உங்களுக்கும் அக்காவிற்கும் வாழ்த்துக்கள் :)))

வேளராசி said...

பரிசலை பத்திரமாக கரை சேர்க்கும் துடுப்பிற்கும் அதில் பயணம் செய்யும் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

SurveySan said...

கலக்கிப்புட்டீரைய்யா கலக்கிப்புட்டீரு.

senthil said...

வணக்கம்........! வணக்கம்........! வணக்கம்........!
மன்னிக்கவும் இதுவரை விமர்சனம் saiyaathatharkku........!

இனி வந்துட்டம்ல கருத்து சொல்ல.......

Sanjai Gandhi said...

//என் ஒவ்வொரு பிறந்தநாளின் அதிகாலையும் உன் முத்தத்தோடு விடிகிறது எனக்கு. உன் பிறந்தநாளன்று இரவு உணவின் போது ‘இன்னைக்கு என்ன நாள்ன்னு சொல்லுங்க’ என்பதை உன் வழக்கமாய் நான் ஆக்கி வைத்திருக்கிறேன்.//

உம்மை தூக்கி போட்டு குட்டீஸை விட்டு மிதித்தால் என்ன தவறு இருக்க முடியும்?

.. எல்லா வரிகளும் உணர்வு பூர்வமாய்.. அழகாய் இருந்தது... வெறும் வரிகளாய் மட்டும் இல்லாமல் இனியாவது பதிவில் எழுதுவதற்கு உங்கள் மீது குறை இல்லாதவாறு ஒழுங்கா உமா அக்கா விருப்பமும் அறிந்து நடந்து கொள்ளுங்கள்..

நாட்ல இந்த மாதிரி ஆளுங்களுக்குதான் நல்ல மனைவி கிடைக்கிறாங்க.

உமா அக்காவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.. போனா போது.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்... :)

தியாகராஜன் said...

வாழ்த்துகள் திரு.கிருஷ்ணா.
கவிதை (அல்ல)
உணர்வினை வெளிப்படுத்திய வார்த்தைகள் அற்புதம்.
(திருமணமான) ஆண்கள் அனைவரும் உணரவேண்டியது.

Unknown said...

ஆமா, எப்பவுமே இப்படி லெட்டர் எழுதினா மட்டும் பத்தாது. அது மாதிரி நடக்க கத்துக்கோ. Any how belated happy wedding day. Sorry. நேத்து நான் சொல்ல மறந்துட்டேன்.

KARTHIK said...

அற்ப்புதம் தல.
வாழ்த்துக்கள்.

தருமி said...

படித்த முதல் பதிவே அழகு.

நடையா, சொன்ன விஷயங்களா எது அருமை? ஒன்றையொன்று விஞ்சுகிறது.

திருமண நாள் வாழ்த்துக்கள்.

எழுதியிருப்பதிலேயே தெரிகிறது ஒவ்வொரு நாளுமே உங்கள் இருவருக்குமே மணநாளின் மகிழ்வுதான்.

வாழ்க.

சென்னை பித்தன் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.ஒரே வார்த்தையில்-"சூப்பர்".உங்கள் பொன்விழா மணநாளன்று இதை விட சிறப்பான இடுகை வர வேண்டும்.அதைப் படித்துப் பாராட்ட நானும் இருக்க வேண்டும்.
வாழ்த்துகள்

முகவை மைந்தன் said...

உள்ள(த்)தை வெகு அருமையாக வடித்திருக்கிறீர்கள். மண நாள் வாழ்த்துகள்.

Jaisakthivel said...

அசத்தீட்டீங்க தள!

சக்தி

Kumky said...

வாழ்த்துக்கள்.தமிழ் மிகவும் தடுமாட்ரமாகத்தான் வருகிரது..

Kumky said...

அய்யா நானும் ஆட்டத்தில் கலந்துகிரேனுங்கோ.. யராச்சும் தமிழ்ல டப்ப்ப்பரதுக்கு உதவி பன்னுங்கோ...karuna4321@gmail.com

Kumky said...

ஹையா பாரஸ்ட் அங்கிள் பதிலுக்கு பதில் பழி வாங்கிட்டாருங்கோ.......புரிஞ்சுதா பரிசல்காரர்.

Karthik said...

Really Superb!

You know, my uncle is more or less like this. My aunty is very sweet.

You did a great job...!
:)

thamizhparavai said...

//எப்போதுமே காய்கறி லிஸ்டில் பாவக்காய் இருந்ததில்லை. அன்றொரு நாள் உன் அன்னை வீட்டில் உனக்காகத் தனியே பாவக்காய் குழம்பு வைக்கப்பட்டபோதுதான் உனக்கது எவ்வளவு பிடிக்குமென்று உணர்ந்தேன் நான். அதற்குப் பிறகும் கூட பாவக்காய் நம் வீட்டு லிஸ்டில் வர நான் விடவில்லை.//
உண்மையான வரிகள்... கசந்தாலும் உண்மை, உண்மைதான்....
மணநாள் வாழ்த்துக்கள்(தாமதத்திற்கு மன்னிக்கவும்)....
ஜூவியில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்....உன் பரிசல், பரிசில் நிறைய வாழ்த்துக்கள்....

SK said...

எல்லாரும் சொல்லிடாங்க நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

ஒரு யோசனை தோணிச்சு, சொல்லலாமான்னு தெரியலை. இதே படத்துலே நீங்க சூ போட்டதுக்கு பதிலா செருப்பு போடு எடுத்து இருந்த இன்னும் அருமையா இருக்குமோனு தோணுது.

ச.முத்துவேல் said...

வடகரைவேலன் அண்ணாச்சிதான் இந்தப் பதிவுக்கான சுட்டியை அனுப்பியிருந்தார்.அவருக்குத் தெரியாதா. இப்பதிவு என்னை மிகவும் ஈர்க்கும் என்று.எனக்கு மட்டுமா.எல்லோருக்குமே பிடிக்கும்.
உங்களை நான் இத்தனை நாள் படிக்காமல்விட்டதற்காக வருந்துகிறேன்.
இந்த வடிவமே புதிய ஒன்றாக எனக்குப் படுகிறது.மிக அருமை.இதில் உள்ளது எனக்கும் மிகவும் பொருந்தும்.சிலாகித்துச் சொல்கிறேன்.ரொம்ப நல்லயிருக்கு.
( நம்ம வீட்ல சிதம்பரம் ஆட்சின்னுப் பெருமையடிச்சுக்காம,உறுத்தற பதிவு.இந்த உறுத்தல் கொஞ்சம் வேலை செய்யும்.அதான், இதுல இருக்கிற பயன், நோக்கம் எல்லாம்)

ப்ரியமுடன் வசந்த் said...

அந்த படம் உணர்த்துது தலைவா பெண்கள் வெளிப்படையானவர்கள் எளிமையானவர்கள்(மெட்டி)

ஆண்கள் கரடுமுரடானவர்கள் என்று (ஷூ)

மெயில் வந்துச்சா தலைவா

மீண்டும் சொல்லிக்கிறேன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

சுரேகா.. said...

நண்பா..
மிகத்தாமதமாக நான் 108!

ஆனால்...

உண்மை உணர்வுடன் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்.

எல்லாம் போனிலேயே சொல்லிட்டேன்..!

Cheran said...

Migavum arumai!!!

ப்ரியமுடன் வசந்த் said...

திருமணநாள் வாழ்த்துகள் கிருஷ்ணா அண்ணா:))

Unknown said...

உமாவுக்கு ..!! . கூகிள் பண்ணி படிச்சேன். வீட்டுக்கு வீடு வாசப்படி... ஒவ்வொரு மனைவிக்குள்ளும் இந்த,சின்ன ஏக்கம் இருக்கத்தான் செய்யும், ஆண்களுக்கான உலகம் கொஞ்சம் வித்தியாசமானது பெண்களின் உலகத்தை விடங்கறது பின்னூட்டங்களைப் படிச்சாலே புரியுது. எல்லா ஆண்களும் இது தங்கள் தங்கமணிகளுக்குச் சொல்றது போல இருக்குன்னு சொன்ன மாதிரியே எல்லா தங்கமணிகளும் இதப்படிச்சா சரி நம்ம வீட்டுலயும் இப்படி யோசிப்பாங்க போலங்கற சமாதானம் கிடைக்கும்.. எழுத முடியாத, தெரியாத எல்லார் சார்பாகவும் எழுதினது போல ஒரு அட்டகாசமான பதிவு. 2008 ல பின்னூட்டம் இட்டவங்களே தாமதமா படிச்சதுக்கு வருந்தியிருக்காங்க...நான் 2015 ல படிக்கிறேன், 2015, 25 ல முதல் தடவை படிக்கறவங்களுக்கும் இது ஒரு அருமையான உணர்வைத்தரும்... சில உணர்வுகள் காலம் நேரம் தாண்டி எல்லாரையும் எப்படியோ போய் சேர்ந்துடும்.. அந்த வகையில் எனக்கு ரொம்ப சந்தோஷம்... உமாவுக்கு என் அன்பும், வாழ்த்துகளும்... God Bless YOu guys !!!!