Monday, February 13, 2012

விகடனுக்கு நன்றி!


ந்த வார ஆனந்த விகடன் இணைப்பான என் விகடனில் உலகத்திலேயே மிகச் சிறந்த எழுத்தாளுமை மிக்க, அறிவான, அழகான, நல்ல வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ‘வலையோசை’ என்கிற பகுதி ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதில் கொங்கு மண்டல இணைப்பில், நான் மேற்கூறிய தகுதிகளோடிருக்கும் வலைப்பதிவாளர்கள் யாரும் இல்லாததால், என் வலைப்பூ பற்றிய செய்தி வந்திருக்கிறது.

இதைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி கூறுகையில், ‘வலைப்பூ பற்றிய அறிமுகம் என்கிற வகையில் இது மிகச் சிறந்த அங்கீகாரம். வாழ்த்துகள்’ என்றார்.

கமலஹாசனுடன் பேசும் போது ‘உன் மூஞ்சிய எல்லாம் அட்டைப்படத்துல போட்டுட்டாங்களா! அட! நல்லாரு’ என்றார். பவர் ஸ்டார் சீனிவாசன் (அவர் வீட்டு மாடிப்படியில்) ஒரு படி மேலே போய் 'அடங்கொண்ணியா.. நடுப்பக்கத்துல ரெண்டு பக்கமா! இதே ப்ளேபாய்ல நடுப்பக்கம் வந்திருந்தாகூட அஞ்சோ பத்தோ (கோடியாம்) பார்த்திருக்கலாம்.. ஹும்.. ஒனக்கெல்லாம் நேரம்டா’ என்று வாழ்த்தி வசை பாடினார்.













எழுத்தாளரும், சிந்தனாவாதியுமான சாருநிவேதிதா ‘நோ கமெண்ட்ஸ். நீங்க வலைல எழுதறதெல்லாம் குப்பை. நான் அதையெல்லாம் படிக்கறதே இல்ல. அவியல்னு ஒரு குப்பை எழுதறீங்க. நகைச்சுவைங்கற பேர்ல பல குப்பைகளை எழுதித் தள்றீங்க. அதெல்லாம் படிக்கறதே இல்ல நான். என்னோட எக்ஸைல் புக் ஓசியில கெடச்சதா எங்கயோ எழுதிருந்தீங்க. அதப் படிச்சு விமர்சனம் போடாத உங்க வலைப்பூ பத்தியெல்லாம் அவங்க எழுதறாங்கன்னா.. அதுக்கு என்ன கமெண்ட் சொல்றதுன்னு தெரியாததாலயே நோ கமெண்ட்ஸ்’ என்றார். மேலும் இது குறித்து நேயதேவப்பாணாவர் அரங்கில் நடக்கும் கூட்டத்தில் தான் பேசப்போவதில்லை என்றும் குறிப்பிடச் சொன்னார்.

மேலும் பலர் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள்:

ஜெயலலிதா: வாழ்த்துகள். ஆறு டூ ஒன்பது கரண்ட் இல்லாததால் இன்னும் அந்த விகடனைப் படிக்க முடியவில்லை. 9 மணிக்கு கரண்ட் வந்தால், சாப்பிட்டு விட்டு பத்து மணிக்கு நான் உறங்கச் செல்வது வழக்கம். அதனால் பகலில் படித்துவிட்டு கருத்துச் சொல்கிறேன். பகலில், கரண்ட் இல்லாமல் ஏசி வேலை செய்யாவிட்டால் புழுக்கத்தில் படிக்க மாட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி: பரிசல் வாழ்க. சென்ற ஆட்சியிலேயே இதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு விட்டன. சில கருங்காலிகள் செய்த சதியால் அது தாமதமாகிவிட்டது. என் ஆட்சியாக இருந்தால் இந்தச் செய்தி மெய்ன் விகடனில் வந்திருக்கும். எனினும் மகிழ்ச்சியே.

கேப்டன் விஜய்காந்த்: ஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

விஜய்: ‘ ’

அஜீத்: நான் பேஸ்மாட்டேன்.



மேலும் கார்க்கி, ஆதிமூலகிருஷ்ணன், லக்கி, அதிஷா, கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் ஆகியோர் முறையே ‘வாவ்’ ‘அட’ ‘ஆஹா’ ‘ச்சே’ ‘ம்ம்!’ ‘ஓஹோ’ என்று வாழ்த்தினார்கள்.

அனைவருக்கும்

‘ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்..
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்..
அனா நான்தான்.. ஆவன்னா நீங்கள்..
நீங்களில்லாமல் நானிங்கு இல்லை இல்லை’ என்ற பாடலைப் பாடி / ஆடி சிடி அனுப்புகிறேன்.

---------------

பி.கு: விகடன் வாங்கி, அதில் என் பேரை பேனாவில் எழுதி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு காலம்.. இப்ப அந்த விகடன்லயே... (போதும்டா நிறுத்து..!) ஆகவே - விகடனுக்கு நன்றி!



.

Wednesday, January 11, 2012

பரிசல் டிக்‌ஷ்னரி


இணையம் – மனைவியிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள கணவர்கள் தஞ்சமடையும் இடம்

ஃபேஸ்புக்:பெண்கள் அக்கவுண்டில் ‘ஃபோட்டோஸ்’ பகுதியை ஆண்கள்
ஆர்வமாகப் பார்க்கும் இடம்

ட்விட்டர் – பஸ் மூடியதால் பலர் தஞ்சமடையும் இடம்

கூகுள் ப்ளஸ் – இன்னமும் இன்னதென்று தெரியாத ஒரு வஸ்து

பதிவர் – தனது அனுபவங்களை இணையத்தில் கன்னா பின்னாவென எழுதுபவர்

எழுத்தாளர் – அதையே அச்சில் புத்தகமாகப் போடுபவர்

ச்சாட் – ஆஃப் த ரெகார்ட் போட்டு ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளும் இடம்

மெய்ல்: பெர்சனல் அக்கவுண்டிலேயே அஃபீஷியலாக ஒன்றும் ரொம்பவே பெர்சனலாக ஒன்றும் வைத்துக் கொள்வது

காலை வணக்கம்: அருகிலிருப்பவருக்கு சொல்லாமல் அண்டார்டிக்காவில் இருப்பவர்களுக்கு சொல்வது

குட் நைட்: அதிகாலை 3 மணிக்கு சொல்லிக் கொள்வது.

சினிமா விமர்சனம்: ஏதாவது பஞ்ச் லைனில் முடிவது

பின்னூட்டப் பெட்டி: அருமை , அட்டகாசம், ---------- டச் என்றுநண்பர்கள் எழுதும் இடம்

எதிரிகள்: மேற்கண்டவாறு எழுதாதவர்கள்

பொறாமை: அடுத்தவர் நம்மீது நல்ல விமர்சனம் வைக்கும்போது,
அவர்களைப் பற்றி நாம் சொல்ல பயன்படுத்துவது

காலை 9 மணி: அலுவலர்கள் வருவார்கள் என்று முதலாளிகள் எதிர்பார்க்கும் நேரம்

10 மணி: முதலாளி வந்துவிடுவாரோ என்று அலுவலர்கள் வேலை செய்வதாய் பாவ்லா காட்ட ஆரம்பிக்கும் நேரம்

11 மணி: கேண்டீன் டைம்.

கேண்டீன் - ஸ்டாஃப்ஸ் மீட்டிங் நடக்குமிடம்

கான்ப்ரன்ஸ் ஹால் - ஸ்டாஃப்ஸ் டீ/காஃபி சாப்பிடுமிடம்

பொங்கல்: கணவர்களுக்கு தினமும் கிடைப்பது

பூரிக்கட்டை: பூரி செய்யவும் இதை உபயோகப்படுத்தலாம் என்று மனைவியர் அறிந்து கொண்ட வஸ்து

ஜனாதிபதி - இந்தியாவின் முதல் குடிமகன்

கேப்டன் - தமிழகத்தின் முதல் குடிமகன்

வெற்றிகரம் - ஒரு படம் இரண்டாவது நாள் ஓடினால் தயாரிப்பாளர்கள் சொல்வது

சூப்பர் ஹிட் - வெளியான இரண்டாம் மாதம் டிவியில் வரும் படம்

சீரியல் - பெண்களைத் திட்டிக் கொண்டே ஆண்கள் பார்ப்பது

க்ரிக்கெட் - ஆண்கள் பார்ப்பதாலேயே பெண்கள் வெறுப்பது

வேஷ்டி - சத்தியமூர்த்தி பவனைச் சுற்றியுள்ள கடைகளில் அதிகம் விற்பனையாவது

பஞ்சாயத்து – தவறு செய்தவன் பணம் கொடுக்கும் இடம்

போலிஸ் ஸ்டேஷன்: புகார் கொடுத்தவன் / தவறு செய்தவன் இருவரும்
பணம் கொடுக்கும் இடம்

ஹார்ன்: வாகன ஓட்டிகள் தேவையில்லாத போதெல்லாம் உபயோகிப்பது

ப்ரேக்: வாகன ஓட்டிகள் தேவையான போதெல்லாம் உபயோகிக்க மறப்பது.


-இப்போதைக்கு இவ்வளவுதான். தொடரலாம். சான்ஸ் இருக்கிறது..


.

Tuesday, January 10, 2012

நம்பிக்கை - சிறுகதை


பண்புடன் ஜனவரி இதழில் வெளியாகியிருக்கிற எனது சிறுகதை:

----------


ந்த அறையின் கால்வாசி அளவுக்கு ஆக்ரமித்திருந்த பெரிய டேபிளின் அந்தப்புறம் டாக்டர் சடகோபன் அமர்ந்திருந்தார். வெளிர் நீல நிற டி ஷர்ட் அணிந்திருந்தார். 40+ வயது இருக்கக்கூடும். வலது கையில் ஒரு வாட்ச். கழுத்திலோ, கையிலோ ஆபரணங்கள் ஏதும் இருக்கவில்லை. நிமிடத்திற்கொரு முறை மூக்கைச் சுருக்கி சுவாசித்துக் கொண்டிருந்தார். அது அவரது மேனரிசமாக இருக்க வேண்டும்.

அவரது டேபிளின் இடதுபுறமிருந்த வித்தியாசமான கடிகாரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அஷோக். குளிரூட்டப்பட்ட அந்த அறையின் அமைதியில் அதன் டிக்-டிக் துல்லியமாகக் கேட்டது.

“ஸோ.. நீங்க சொல்ல வர்றது யாரும் உங்களை நம்ப மாட்டீங்கறாங்க. இல்லையா?”

“எஸ் டாக்டர்” என்ற அஷோக் ஜீன்ஸிற்குள் தனது ஆலன் சோலியை செலுத்தியிருந்தான். 25 வயது. பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பராக பணிபுரியும் திறமையான இளைஞன். ஒரே அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. அம்மா ஹவுஸ் வைஃப். அப்பா வங்கி அதிகாரி.

”எப்போலேர்ந்து உங்களுக்கு இப்படி தோண ஆரம்பிச்சது?”

“ஒரு பத்து பதினஞ்சு நாளாவே இப்படித்தான் டாக்டர்”

“சரி.. இப்ப நான் சில கேள்விகள் கேட்கறேன். பதில் சொல்லுங்க”

அஷோக் டாக்டரை நேருக்கு நேராய்ப் பார்த்து ‘கேன் ஐ ஹாவ் சம் வாட்டர்?” எனக் கேட்டான். டாக்டர் அவர் டேபிள் பக்கவாட்டில் இருந்த காலி டம்ளரை நிமிர்த்தி, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து நீரை நிரப்பி அவனிடம் நீட்டினார்.

வாங்கிக் குடித்ததும் ‘கேளுங்க டாக்டர்’ என்றான்.

“எங்க வேலை செய்யறீங்க?”

சொன்னான்.

“உங்க பிறந்த தேதி என்ன?”

சொன்னான்.

“பிறந்த கிழமை?”

தாமதிக்காமல் உடனே சொன்னான்.

“உங்க அப்பா அம்மா திருமண நாள் ஞாபகமிருக்கா”

சொன்னான்.

“உங்க அக்கா திருமண நாள்?”

சொன்னான்.

“வெரிகுட். ஞாபக சக்தியெல்லாம் நல்லாவே இருக்கு. நீங்க நார்மலா இருக்கீங்க.. என்ற டாக்டர் தொடர்ந்தார்: “எந்த விஷயத்துல – யார் - உங்கள நம்பமாட்டீங்கறாங்கன்னு நீங்க ஃபீல் பண்றீங்க அஷோக்?”

“எந்த விஷயத்துலயும் யாரும் என்னை நம்பமாட்டீங்கறாங்க டாக்டர்”

“ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?”

அஷோக் ஏதோ ஒரு மூலையை சில நிமிடங்களுக்கு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். டாக்டர் அமைதியாக அவனையே பார்த்தவாறு இருந்தார். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான்.


-------------------

மேலும் படிக்க இங்கே க்ளிக்குங்கள்: பண்புடன்


.