Saturday, June 26, 2010

'ரைட்டர் பா.ரா'-வைப் பார்க்கணும்..பார்த்தே ஆகணும்

நேற்று முன்தினம் நண்பர்கள் முரளிகுமார் பத்மநாபன், பேரரசன் செந்தில்நாதன் அடங்கிய 'குழு' செம்மொழி மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது ரைட்டர் பா.ரா-வைச் சந்தித்திருக்கிறார்கள். சும்மாயிராமல், 'நீங்கதான் பேயோன்-ன்னு பரிசல் சொல்றாரே' என்றிருக்கிறார்கள். அவர் உடனே எனக்கு அலைபேசி 'யோவ்.. உன்னை திட்டத்தான் கூப்ட்டேன்.. நான் உனக்கு என்னய்யா பாவம் பண்ணினேன்' என்று திட்ட 'சார்.. திட்டாதீங்க.. நாளைக்கு உங்கள வந்து பாக்கறேன்' என்றேன் சிரித்தபடி. நேற்று (வெள்ளிக்கிழமை) போக முடிவு செய்தேன். சங்கத் தலைவர் வெயிலான் உட்பட எல்லாருமே பிஸியாக இருந்தனர். வெயிலானிடம் பேசியபோது 'சிவகுமார்-ன்னு நம்ம நண்பர்.. அவரும் பிளாக்கர்தான். புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்காரு. அவருக்கு பா.ரா-வைப் பாக்கனும்னு ரொம்ப ஆவல். ரெண்டு பேருமா போங்களேன்.." என்றார். சிவகுமாரை அழைத்து என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு அவரை ஒரு இடத்துக்கு வரச் சொல்லிவிட்டு, அவர் வர இருவருமாய் அவர் பைக்கிலேயே கிளம்பினோம். 'ஒரு எழுத்தாளரை சந்திக்கப் போறது இதுதான் முதல் தடவைங்க' என்று அவர் படபடத்தபடி சொன்னபோது 'அதான் பத்து நிமிஷம் முன்னாடியே சந்திச்சுட்டீங்கள்ல. ரிலாக்ஸா இருங்க' என்றது அவருக்கு புரியவில்லை. என்ன கொடுமைடா.. என்று என் நிலைமையை நானே நினைத்தபடி விரைந்தேன்.

*************************

கோவை குதூகலத்துடன் இருந்தது. எங்கெங்கு காணிடும் முகங்களடா' என்பதாய் மக்கள் அலை. நடக்கும்போது தலையை வலது இடதுபுறங்கள் திருப்பக் கூட முடியாத அளவு ஜன நெருக்கடி. அலைபேசி அலறியபோது பாக்கெட்டில் கை விட்டு அதை எடுக்க முடியவில்லை.

இருவருமாய் புத்தக கண்காட்சி நடக்கும் CIT வளாகத்தை அடைந்தபோது மணி எட்டரை. பா.ரா-சாரை அழைத்தபோது 'நான் இணைய அரங்கத்துல இருக்கேன் கிருஷ்ணா.. அங்கிருந்து மூணு கிலோமீட்டர் நீங்க நடந்து வரணும்' என்றார். அதற்குள் 'வருங்கால பிரதமர்' சஞ்சய் காந்தி எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார். 'இந்தக் கூடத்துல இவ்ளோ லேட்டா என் மாம்ஸ் வந்தீங்க?' என்று கேட்டார். நான் சிவகுமாரை அறிமுகப்படுத்தி "ரைட்டர் பா.ரா-வைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டார்.. அதான் லேட் ஆனாலும் பரவால்லை-ன்னு கூட்டிட்டு வந்தேன் சஞ்சய்" என்றேன். அவருடன் பேசிக் கொண்டே நடந்தபோது யுவகிருஷ்ணாவும் எங்களோடு வந்து கலந்து கொண்டார். 'மூணு நாலா கிட்டத்தட்ட ஆறு லட்சம் மூஞ்சிகளைப் பார்த்துட்டேன். மைண்ட் பூரா ஒரே முகங்களா இருக்கு கிருஷ்ணா' என்று அவர் சொன்னது குறிப்பிடப்படவேண்டியது. நடுநடுவே நம்ம சிவகுமார் 'ஏங்க.. ரைட்டர் பா.ரா-வை எப்ப பாப்போம்?' என்று ஆவலாய்க் கேட்டுக் கொண்டே இருந்தார். 'அவரு வெளில வந்துட்டாரு. ஆனா எங்கயோ கூட்டத்துல மாட்டிகிட்டாரு' என்றார் யுவா. சிவகுமாரோ ஆர்வத்தை அடக்க மாட்டாமல் இருந்தார். நான் அவரை ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தேன்.


புத்தக கண்காட்சியில் மனுஷ்யபுத்திரனைக் கண்டோம். அவரோடு ஆசையாய்ப பேசினார் சிவகுமார். இரண்டொரு புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். மணி ஒன்பதை நெருங்கியது. கண்காட்சி அடைக்கப்பட்டது. நாங்கள் பேசிக் கொண்டே வெளியில் வந்தோம்.


"லேட்டாகுதுங்க.. பா.ரா-வைப் பாக்க முடியாதா" - மறுபடி கேட்டார் சிவகுமார். 'எனக்கொண்ணும் பிரச்சினை இல்லைங்க.. 3, 4 கிலோ மீட்டர்னாலும் பரவல்ல.. கொடீசியா-வுக்குள்ள போலாம்க' என்றார்.


"அதுக்கில்லை சிவா. அவரு வெளில வந்துட்டு இருக்காரு. நாம உள்ள போய் யூஸ் இல்ல. அவரு எங்கயோ கூட்டத்துல மாட்டிக்கிட்டிருக்காரு. வரட்டும்" என்று நாங்கள் அவரை சமாதானப்படுத்தினோம்.


நேரம் ஆக ஆக இனி அவரைச் சந்திப்பது கடினம் என்று புரிந்தது. காரணம் எல்லா மக்களும் வீடு போகும் அவசரத்தில் கலையத் துவங்கியிருந்தனர். ஜனத்திரள். நிஜமாகவே கடல் போன்ற கூட்டம் என்பதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. புறப்படுவது என்று முடிவானதும் சிவகுமார் மனது ஒடிந்து போனார். "ரைட்டர் ப.ரா-வைப் பார்க்க முடியாதா அப்ப?" என்று அவர் கேட்டதைப் பார்க்க பாவமாக இருந்தது. 'கவலைப் படாதீங்க சிவா. ரெண்டு மூணு மாசத்துல திருப்பூர் கூப்ட்டுவோம். ஏற்பாடு பண்ணலாம். அப்படி இல்லேன்னா நான் உங்கள சென்னை கூட்டிட்டு போய் அவரை சந்திக்க வைக்கறேன்' என்றேன். சமாதானமாகாமல் அரைகுறை மனதோடு கிளம்பினார்.


வழியில் ஒரு ஹோட்டலில் உணவருந்த நிறுத்தினோம். உணவருந்திவிட்டு கிளம்பும்போது மறுபடி கேட்டேன்.


'அது ஏங்க ரைட்டர் பா.ரா.மேல அவ்ளோ ஆர்வம் உங்களுக்கு?' "எனக்கு எழுத்தாளர்கள்-னாலே பிடிக்கும்க. அதுவும் பா.ரா மாதிரி ஒருத்தர் எனக்கு வந்து பின்னூட்டம் எல்லாம் போட்டு ஊக்கப்படுத்தும்போது அவரை சந்திக்கணும்ன்னு தோணாதா?'


'என்னது.. பா.ரா. பின்னூட்டம் போட்டாரா? எந்த பா.ரா-வைச் சொல்றீங்க?'


"என்னங்க எந்த பா.ரா-ன்னு கேட்கறீங்க? பா.ரா. தெரியாதா உங்களுக்கு? கருவேல நிழல்-ன்னு புக் எல்லாம் போட்டிருக்காருங்க. பா.ராஜாராம்"

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........


*

Friday, June 25, 2010

அந்தரங்கம்

புதன் இரவு. டெலிவிஷனில் சானல்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது அந்த நிகழ்ச்சி.

ஓர் இளம்பெண் ஜீன்ஸ், டாப்ஸுடன் மாடர்னாக அந்த ஒளிபரப்புக் கூடத்தில் நுழைகிறாள். அவளை வரவேற்கும் நிகழ்ச்சி நடத்துனரான இளைஞன் ‘நீங்கள் தயார்தானே? ரிலாக்ஸாக இருக்கிறீர்களா?’ என்றெல்லாம் கேட்கிறான். அந்தப் பெண்ணும் தலையாட்டுகிறாள். அப்படி என்ன நிகழ்ச்சி என்று நானும் ஆவலாய்ப் பார்க்க ஆரம்பித்தேன்.

இருவருமாய் ஒரு பெரிய வெண்திரை முன் அமர்கிறார்கள். இளைஞன் ரிமோட்டை செலுத்த திரை ஒளிர்கிறது. அதில்..

ஒரு இளைஞன், இளம்பெண் ஒருத்தியுடன் காஃபி டே போகும் காட்சி. மறைந்திருந்து எடுக்கப்பட்டது போல தெளிவில்லாமல் தெரிகிறது. அவன் அந்த யுவதியுடன் பேசுவதில் குழைவும், நெருக்கமும் தெரிகிறது. அடுத்த க்ளிப்பிங்கில் அந்த இளைஞன், யுவதியுடன் கார் அருகே வருகிறான். காரில் ஏறும் முன் அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிடுகிறான்.

இங்கே ஸ்டூடியோவில் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் லேசாக துணுக்குறுகிறாள். காரணம் திரையில் காண்பிக்கப்படும் இளைஞன் இவளின் பாய் ஃப்ரெண்ட். அவனுடன் இருக்கும் பெண், தொலைக்காட்சி நிறுவனத்தால் அவனது நேர்மையை சோதனை செய்ய அனுப்பப்பட்ட மாடல் பெண்.

இப்படியாக ஒவ்வொரு footage ஆக காண்பிக்கப்பட காண்பிக்கப்பட , பார்த்துக்கொண்டிருக்கும் பெண் கொஞ்சம் கொஞ்சமாக உணர்சிவசப்படுகிறாள். அழத் தொடங்குகிறாள் . நிகழ்ச்சி நடத்துனர் அவரை தேற்றுகிறார். இந்தப் பெண் கேவியபடி அழுதுகொண்டிருக்கிறாள் . சிறிது நேரத்துக்குப் பின் , இன்னும் கொஞ்சம் ஆதாரங்கள் இருக்கிறது .. காண்பிக்கவா என்று கேட்கிறார் நடத்துனர் . அவள் சரியென்று தலையாட்டுகிறாள்.

காரில், பெட்ரூமில் என்று அவர்கள் முத்தமிடுவதையும் , சல்லாபிப்பதையும் காண்பிக்கிறார்கள். (அப்படியாக நாம் கொள்ள வேண்டி இருக்கிறது . காரணம் அந்த காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது)

மீண்டும் அவள் அழுகை , இவர் தேற்றல்…

நடுநடுவே அந்தப் பெண்ணிடம் இப்போது என்ன உணர்கிறீர்கள் என்று வேறு கேட்டுக் கொள்கிறார். அவள் அவரா இப்படி என்னதான் நினைத்துக் கொண்டிருந்தார் இத்தனை நாள் மனதில் என்றெல்லாம் புலம்பியபபடி இருக்கிறாள். அதன்பிறகும் காட்டப்பட்ட ஒளிபரப்பில் அவன் அந்தப் பெண்ணுக்கு எதையோ பரிசளிக்கிறான். அவள் ‘உங்கள் கேர்ள் ப்ரெண்ட் எப்படி இருக்கிறாள்’ என்று கேட்கும்போது கூடிய சீக்கிரம் அவளை வெட்டி விட்டு விடுவேன். நீ தங்கம், வைரம். அவள் பித்தளை என்பதுபோன்ற வசனங்கள் பேசுகிறான். அத்தனையும் தெளிவாக பதிவாகியிருக்கிறது மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களில்.

சில SMS களும் , உங்கள் பாய் Friend அவளுடன் பேசிய ரெகார்டிங்கும் இருக்கிறது. என்றுவிட்டு அதையும் கொடுக்கிறார். காதலும், காமமும் கலந்த SMSகள் பேச்சுகள் …

சிறிது நேரம் கழித்து இப்போது அவர் எங்கே என்று பார்க்கிறீர்களா என்று கேட்கிறார் நடத்துனர். ஆம் என இவள் சொல்ல திரை ஒளிர்கிறது...

அதில் இவளது காதலனும், அந்தப் பெண்ணும் காருக்குள் பின் சீட்டில் முத்தம் இட்டபடி இருக்கிறார்கள். நடத்துனர் சொல்கிறார் 'இது லைவ்' என்று. கூடவே 'நாம் இருக்கும் இந்தக் கட்டிடத்தின் பேஸ்மெண்டில் தான் இந்தக் கார் நிற்கிறது போய்ப் பார்க்க நீங்கள் தயாரா என்று கேட்கிறார். அவள் சரி என சொல்ல, கேமரா குழு தொடர அவர்கள் லிஃப்டில் இறங்குகிறார்கள்.

சடாரென இவள் கார் கதவு திறந்து காதலனை அட்டாக் செய்கிறாள். அவன் முதலில் தவித்து பிறகு தன் தரப்பை நியாயப் படுத்துகிறான். ஒரு கட்டத்தில் இவள் கோவமாய் மோதிரம், இடுப்பில் இருந்து ஒரு அரைஞாண் கயிறு இரண்டையும் கழற்றி அவனிடம் வீசுகிறாள். அவன் அதை கண்டே கொள்ளாமல் 'போ உன் வேலையைப் பார்த்துக்கிட்டு' என்ற முக பாவத்துடன் போகிறான். இந்தப் பெண்ணை இப்போது உங்கள் முடிவு என்ன என்று நிகழ்ச்சி நடத்துபவர் கேட்க ‘இனி அவனுக்கு என் வாழ்வில் இடமில்லை’ என்கிறாள் இவள்.

இறுதியில் நிகழ்ச்சியை நடத்துபவர் 'இது மாதிரியான ஏமாற்றுப் பேர்வழிகளை கண்டு பிடித்து தோலுரிப்பதே எங்கள் நிகழ்ச்சியின் நோக்கம்’ என்று உரை நிகழ்த்துகிறார்..

என்னாங்கடா இது!




UTN Bindass ன் “Emotional Atyachaar” என்னும் ரியாலிட்டி ஷோவாம் அது. எனக்கென்னமோ எல்லாமே ட்ராமாவாகத்தான் தோன்றியது. நேற்றைக்கு கூகுளாண்டவரிடம் இது பற்றி ஆராய, UTVயின் வெப்சைட்டில் இதற்கு REGISTRATION FORM எல்லாம் இருக்கிறது.. யாராவது அவர்களின் பார்ட்னரை சந்தேகப்பட்டால், அவர்களுக்கு எழுதிப் போடலாம். அவர்கள் வந்து பார்ட்னர் போகுமிடமெல்லாம் ஒரு மாடல் குட்டியையும் அனுப்பி, குட்டி குட்டி கேமராவையும் வைத்து அவரை தோலுரிப்பார்களாம். ‘ஆஹா பெண்ணினக்காவலர்களடா’ என்று சரியாக அஞ்சு நிமிஷம் புளகாங்கிதமடைந்தபோது இப்படி பிற ஆண்கள் பின்னால் அலைந்த பெண்கள் சிலரும் அந்த நிகழ்ச்சி மூலம் மாட்டியிருக்கிறார்களாம். அதுவும் ட்ராமாவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. (காரணம் நிஜத்தில் இப்படிச் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதே இல்லை!)

இந்த நிகழ்ச்சி பற்றி வந்த செய்தி ஒன்றின்கீழ் பல வாசகர்கள் ‘இதில் எப்படி எங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்?’ என்று முட்டி மோதிக் கொண்டு கேட்டிருப்பதைப் பார்த்தபோது சமூகமாவது கலாச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது என்று தோன்றியது!

ஒன்றிரண்டாவது இதில் உண்மையாகவே ஸ்பை கேமராக்கள் வைத்து பதிவு செய்து ஒளிபரப்பினார்களா? சட்டம் அனுமதிக்குமா? யாருக்காவது இதுகுறித்த மேல் விபரங்கள் தெரியுமா?


.

Thursday, June 24, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

'நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது’ என்ற இந்த வரியை இந்த ஐந்து நாட்களில் ஐந்தாயிரம் பேராவது சொல்லக் கேட்பீர்கள் (அ) எழுத படிப்பீர்கள். அப்படித்தான் இருக்கிறது.

நேற்று முன்தினம் (22.06.10) அவினாசி சாலை வழியாக செல்ல வேண்டியிருந்தது. பத்தடிக்கு ஒரு போலீஸ் குழு. அங்கங்கே வாகன பரிசோதனைகள். விழா நடக்கும் கொடிசியா அரங்கம் நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதைக் காணமுடிகிறது.

நல்லதொரு விஷயம்: எங்குமே கட்சிக்காரர்களின் ஜால்ரா பேனர்களைப் பார்க்க முடியவில்லை. விசாரித்த வரையில் கலைஞரே அதெல்லாம் வைக்காதீங்கப்பா என்று வாய்மொழி உத்தரவிட்டதாகத் தகவல்.

சாலையில் இரு மருங்கிலும் உள்ள கட்டிடங்கள் எல்லாம் புதிதாய் வண்ணம் அடிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. எல்லாரும் தத்தமது கட்டிடங்களில் வண்ண வண்ண சீரியல் பல்புகளை தொங்கவிட்டிருந்தனர். இரவில் ஜெகஜ்ஜோதியாய் இருந்திருக்கும்.

*************************************





நேற்று (23.06.2010) மாநாடு தொடங்கியபின் மாலை நடக்கும் இனியவை நாற்பது அணிவகுப்புக்குச் செல்லலாம் என்று புறப்பட்டேன். பல்லடத்தில் கழக உடன்பிறப்புகளால் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர்களை எல்லாம் கழட்டிக் கொண்டிருந்தார்கள். ஆளில்லாத இடங்களில், பேனர் ஒருபுறம் கிழிக்கப்பட்டு, மடக்கி வைக்கப்பட்டிருந்தது. நிறுத்திக் கேட்டதுக்கு ‘பேனர் வெச்சதுக்கு திட்டு விழுந்ததுதாங்க மிச்சம். கட்சி பேர்ல வைக்க இது கட்சி மாநாடான்னு கேட்கறாங்க. பொதுவாத்தான் வைக்கணுமாம்’ என்றார் ஒருவர். மகிழ்ச்சியாக இருந்தது. (ஒன்றிரண்டு இடங்களில் மாநாட்டுக்கு வருகை தரும் ஜி கே வாசனை வரவேற்று பேனர்கள்!)

சூலூரில் ஆரம்பித்தது போலீஸ் படை. நகரெங்கும் காக்கிகள்தான். எந்த ஊரிலிருந்தோ வந்து இங்கு தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் பாவம் என்று தோன்றியது. அதுவும் ஒண்டிப்புதூர் பாலத்தில் ஒரு போலீஸ்காரர் தனியாளாய் பாலத்தின் நடுவில் இருந்த வானுயர்ந்த ஸ்ட்ரீட் லைட்டை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்றிருந்த கோலம்.... பரிதாபத்தின் உச்சம்.

ராமநாதபுரத்திற்கு சற்று முன் வலதுபுறம் திருப்பிவிடப்பட்டு, மசக்காளிபாளையம் வழி அவிநாசி சாலையை அடைந்து கிடைத்த இடத்தில் பைக்கைப் போட்டு அவிநாசி சாலைக்குப் போனால்............

தலைகள்... தலைகள்.. தலைகள்.... அத்தனை கூட்டம்.

ஒருவழியாக ஒரு இடம் தேர்ந்தெடுத்து எல்லாருமாய் உட்கார்ந்து பார்க்கலாம் என்று உட்கார்ந்தோம். முக்கால் மணி நேரம் கழித்து, பேரணி நாங்கள் இருக்கும் இடம் நெருங்கியதும் எங்கிருந்தோ வந்த ஒரு காமன்சென்ஸ் இல்லாத ட்ரெய்னி போலீஸ் ஒருவர் ‘பக்கத்துல வந்துடுச்சு.. எல்லாரும் எழுந்திருங்க’ என்றதுதான் தாமதம்... உட்கார்ந்தவர்கள் உட்கார்ந்தே அழகாய் பார்த்திருக்கலாம்.. அவர் சொன்னதும் முட்டாள்தனமாய் சடாரென்று எழுந்திருக்க, பின்னால் நின்றவர்கள் முட்டித்தள்ள உட்கார்ந்திருந்திருந்தவர்களில் இருந்த குழந்தைகள் நிலைமை பரிதாபம்.

போங்கடா நீங்களும் உங்க காவலும் என்ற கோவத்துடன் திரும்ப, எங்களுக்குப் பின்னால் விஐபி கார்கள். பார்த்தபோது, கனிமொழி எம் பி போய்க் கொண்டிருந்தார். என் அருகில் குழந்தைகளோடு அமர்ந்திருந்தவர் ‘போலீஸ் சரியில்லை மேடம்... சரியா கட்டுப்படுத்தவே தெரியல.. அழகா உட்கார்ந்திருந்தோம்.. எந்திருக்கச் சொல்லி சொதப்பீட்டாங்க’ என்று கண்ணாடி வழியே தெரியும் அவர் முகம் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டதோ, கேட்கவில்லையோ.. ‘என்ன என்ன?’ என்று புருவமுயர்த்தி கேட்டபடியே அவர் சென்றது அழகாய் இருந்தது. பேரணி அந்த இடத்தை தாண்டுவதற்குள் அவர் சென்றமரும் மேடை நோக்கிப் போகும் அவசரம் அவருக்கு!

திரும்பி வந்து மிகச் சிரமட்டு பைக்கை எடுத்துக் கொண்டு விட்டால் போதும் என்று வீடு வந்து சேர்ந்தேன்.

எப்படி இருக்கிறது கோவை?

சரியாகப் பார்த்தால் தமிழகம் கோவை இருக்கும் பக்கம் கொஞ்சம் சாய்ந்திருக்கும். அந்த அளவுக்கு மக்கள் கூட்டம். கார்கள். எல்லாவற்றிலும் கட்சிக் கொடி. வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களில் நூற்றுக்கு 99 சதவிகிதம் பேர் உற்சாக பானத்தின் பிடியில் இருந்தார்கள். பீளமேடில் ஒரு டாஸ்மாக்கில் திங்கள் - செவ்வாய் - புதன் மாலை வரை இரண்டரை தினங்களின் விற்பனை, அதற்கு முன் மூன்று மாத ஒட்டுமொத்த விற்பனைக்கு சமமாய் இருக்கிறதாம்.

சாலை உள்ளிட்ட எல்லா பணிகளும் அவசர கதியில் நடந்தேறியிருக்கிறது. ஹோப் காலேஜின் ஒரு பக்க பாலம் இரண்டாண்டுகளாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதன் மற்றொரு பக்க பாலம், க்யூரிங் கூட சரியாக ஆனதா என்று தெரியவில்லை.. இரண்டே மாதங்களில் முடுக்கிவிடப்பட்டதாம்.

மாநாடு முடிந்தும், விட்ட பணிகளை தொடர்ந்து முழுமையாய் முடித்து, கோவையில் நடத்தியதற்கு கோவைக்காரர்களை பெருமைப்பட வைப்பார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

(இதே போன்றதொரு கட்டுரையை வித்தியாசமான நடையில் படிக்க இங்கே க்ளிக்குங்கள்...)

.