ஓர் இளம்பெண் ஜீன்ஸ், டாப்ஸுடன் மாடர்னாக அந்த ஒளிபரப்புக் கூடத்தில் நுழைகிறாள். அவளை வரவேற்கும் நிகழ்ச்சி நடத்துனரான இளைஞன் ‘நீங்கள் தயார்தானே? ரிலாக்ஸாக இருக்கிறீர்களா?’ என்றெல்லாம் கேட்கிறான். அந்தப் பெண்ணும் தலையாட்டுகிறாள். அப்படி என்ன நிகழ்ச்சி என்று நானும் ஆவலாய்ப் பார்க்க ஆரம்பித்தேன்.
இருவருமாய் ஒரு பெரிய வெண்திரை முன் அமர்கிறார்கள். இளைஞன் ரிமோட்டை செலுத்த திரை ஒளிர்கிறது. அதில்..
ஒரு இளைஞன், இளம்பெண் ஒருத்தியுடன் காஃபி டே போகும் காட்சி. மறைந்திருந்து எடுக்கப்பட்டது போல தெளிவில்லாமல் தெரிகிறது. அவன் அந்த யுவதியுடன் பேசுவதில் குழைவும், நெருக்கமும் தெரிகிறது. அடுத்த க்ளிப்பிங்கில் அந்த இளைஞன், யுவதியுடன் கார் அருகே வருகிறான். காரில் ஏறும் முன் அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிடுகிறான்.
இங்கே ஸ்டூடியோவில் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் லேசாக துணுக்குறுகிறாள். காரணம் திரையில் காண்பிக்கப்படும் இளைஞன் இவளின் பாய் ஃப்ரெண்ட். அவனுடன் இருக்கும் பெண், தொலைக்காட்சி நிறுவனத்தால் அவனது நேர்மையை சோதனை செய்ய அனுப்பப்பட்ட மாடல் பெண்.
இப்படியாக ஒவ்வொரு footage ஆக காண்பிக்கப்பட காண்பிக்கப்பட , பார்த்துக்கொண்டிருக்கும் பெண் கொஞ்சம் கொஞ்சமாக உணர்சிவசப்படுகிறாள். அழத் தொடங்குகிறாள் . நிகழ்ச்சி நடத்துனர் அவரை தேற்றுகிறார். இந்தப் பெண் கேவியபடி அழுதுகொண்டிருக்கிறாள் . சிறிது நேரத்துக்குப் பின் , இன்னும் கொஞ்சம் ஆதாரங்கள் இருக்கிறது .. காண்பிக்கவா என்று கேட்கிறார் நடத்துனர் . அவள் சரியென்று தலையாட்டுகிறாள்.
காரில், பெட்ரூமில் என்று அவர்கள் முத்தமிடுவதையும் , சல்லாபிப்பதையும் காண்பிக்கிறார்கள். (அப்படியாக நாம் கொள்ள வேண்டி இருக்கிறது . காரணம் அந்த காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது)
மீண்டும் அவள் அழுகை , இவர் தேற்றல்…
நடுநடுவே அந்தப் பெண்ணிடம் இப்போது என்ன உணர்கிறீர்கள் என்று வேறு கேட்டுக் கொள்கிறார். அவள் அவரா இப்படி என்னதான் நினைத்துக் கொண்டிருந்தார் இத்தனை நாள் மனதில் என்றெல்லாம் புலம்பியபபடி இருக்கிறாள். அதன்பிறகும் காட்டப்பட்ட ஒளிபரப்பில் அவன் அந்தப் பெண்ணுக்கு எதையோ பரிசளிக்கிறான். அவள் ‘உங்கள் கேர்ள் ப்ரெண்ட் எப்படி இருக்கிறாள்’ என்று கேட்கும்போது கூடிய சீக்கிரம் அவளை வெட்டி விட்டு விடுவேன். நீ தங்கம், வைரம். அவள் பித்தளை என்பதுபோன்ற வசனங்கள் பேசுகிறான். அத்தனையும் தெளிவாக பதிவாகியிருக்கிறது மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களில்.
சில SMS களும் , உங்கள் பாய் Friend அவளுடன் பேசிய ரெகார்டிங்கும் இருக்கிறது. என்றுவிட்டு அதையும் கொடுக்கிறார். காதலும், காமமும் கலந்த SMSகள் பேச்சுகள் …
சிறிது நேரம் கழித்து இப்போது அவர் எங்கே என்று பார்க்கிறீர்களா என்று கேட்கிறார் நடத்துனர். ஆம் என இவள் சொல்ல திரை ஒளிர்கிறது...
அதில் இவளது காதலனும், அந்தப் பெண்ணும் காருக்குள் பின் சீட்டில் முத்தம் இட்டபடி இருக்கிறார்கள். நடத்துனர் சொல்கிறார் 'இது லைவ்' என்று. கூடவே 'நாம் இருக்கும் இந்தக் கட்டிடத்தின் பேஸ்மெண்டில் தான் இந்தக் கார் நிற்கிறது போய்ப் பார்க்க நீங்கள் தயாரா என்று கேட்கிறார். அவள் சரி என சொல்ல, கேமரா குழு தொடர அவர்கள் லிஃப்டில் இறங்குகிறார்கள்.
சடாரென இவள் கார் கதவு திறந்து காதலனை அட்டாக் செய்கிறாள். அவன் முதலில் தவித்து பிறகு தன் தரப்பை நியாயப் படுத்துகிறான். ஒரு கட்டத்தில் இவள் கோவமாய் மோதிரம், இடுப்பில் இருந்து ஒரு அரைஞாண் கயிறு இரண்டையும் கழற்றி அவனிடம் வீசுகிறாள். அவன் அதை கண்டே கொள்ளாமல் 'போ உன் வேலையைப் பார்த்துக்கிட்டு' என்ற முக பாவத்துடன் போகிறான். இந்தப் பெண்ணை இப்போது உங்கள் முடிவு என்ன என்று நிகழ்ச்சி நடத்துபவர் கேட்க ‘இனி அவனுக்கு என் வாழ்வில் இடமில்லை’ என்கிறாள் இவள்.
இறுதியில் நிகழ்ச்சியை நடத்துபவர் 'இது மாதிரியான ஏமாற்றுப் பேர்வழிகளை கண்டு பிடித்து தோலுரிப்பதே எங்கள் நிகழ்ச்சியின் நோக்கம்’ என்று உரை நிகழ்த்துகிறார்..
என்னாங்கடா இது!

UTN Bindass ன் “Emotional Atyachaar” என்னும் ரியாலிட்டி ஷோவாம் அது. எனக்கென்னமோ எல்லாமே ட்ராமாவாகத்தான் தோன்றியது. நேற்றைக்கு கூகுளாண்டவரிடம் இது பற்றி ஆராய, UTVயின் வெப்சைட்டில் இதற்கு REGISTRATION FORM எல்லாம் இருக்கிறது.. யாராவது அவர்களின் பார்ட்னரை சந்தேகப்பட்டால், அவர்களுக்கு எழுதிப் போடலாம். அவர்கள் வந்து பார்ட்னர் போகுமிடமெல்லாம் ஒரு மாடல் குட்டியையும் அனுப்பி, குட்டி குட்டி கேமராவையும் வைத்து அவரை தோலுரிப்பார்களாம். ‘ஆஹா பெண்ணினக்காவலர்களடா’ என்று சரியாக அஞ்சு நிமிஷம் புளகாங்கிதமடைந்தபோது இப்படி பிற ஆண்கள் பின்னால் அலைந்த பெண்கள் சிலரும் அந்த நிகழ்ச்சி மூலம் மாட்டியிருக்கிறார்களாம். அதுவும் ட்ராமாவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. (காரணம் நிஜத்தில் இப்படிச் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதே இல்லை!)
இந்த நிகழ்ச்சி பற்றி வந்த செய்தி ஒன்றின்கீழ் பல வாசகர்கள் ‘இதில் எப்படி எங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்?’ என்று முட்டி மோதிக் கொண்டு கேட்டிருப்பதைப் பார்த்தபோது சமூகமாவது கலாச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது என்று தோன்றியது!
ஒன்றிரண்டாவது இதில் உண்மையாகவே ஸ்பை கேமராக்கள் வைத்து பதிவு செய்து ஒளிபரப்பினார்களா? சட்டம் அனுமதிக்குமா? யாருக்காவது இதுகுறித்த மேல் விபரங்கள் தெரியுமா?
.