எல்லாரும் மன்னிக்கணும். சபரிமலைக்கு மாலைபோடற
ஆ-சாமிகளைப் பத்தி ஒரு பதிவு எழுதிகிட்டிருந்தேன். ரொம்ப சீரியஸா இருக்கு. கொஞ்சம் அந்தக் கோவம் தணியட்டும். ஏற்கனவே மு.க - கிட்டேர்ந்து அதிகமா கோவப்படக்கூடாது ன்னு அட்வைஸ் எல்லாம் வந்துகிட்டிருக்கு. அதுனால அப்பறமா அதை வெளியிடலாம்ன்னு நிறுத்தி வெச்சுட்டேன்.
************************************
சரி... இன்னைக்கு ஒண்ணும் எழுதாம இருக்கலாம். ஆனா அதுவும் முடியல. அதெப்படி ஒரு நாளைக்கு உங்களை சும்மா விடறது? அதுனால நான் ரசிச்ச சில நகைச்சுவைகளை போட்டுத் தாக்கலாம்ன்னு ஒரு ப்ளான்.
அவசரத்துக்கு உப்புமா மாதிரி, இதுதான் நம்மகிட்ட நெறைய ஸ்டாக் இருக்கு!
**********************************
ஒரு நேர்முகத்தேர்வில்:
கேள்வி கேட்பவர்:எலக்ட்ரிக் மோட்டார் எப்படி ஓடுகிறது?
வேலைக்கு வந்த நாதாரி: டுர்ர்ர்ர்.... டுர்ர்ர்ர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
கே.கே: யோவ்... நிறுத்து..நிறுத்து
நா: டுர்ர்ர்ர்ர்ர்...டப்..டப்..டப்...!
****************************
காதலி: நாளைக்கு என் பொறந்த நாள்.. எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்: ஓ! லேண்ட்லைன்லயா.. செல்ஃபோன்லயா?
**************************
ரொம்ப குண்டான ஒருத்தர் பஸ்சுல போனாராம். ரெண்டு டிக்கெட் புக் பண்ணி, உள்ள ஏறினார். கண்டக்டர் எங்க இன்னொருத்தர்ன்னு கேட்க, எனக்குத்தான் ரெண்டு. குண்டா இருக்கறதால’ ன்னார்.
கண்டக்டர் சொன்னாராம்... “சீட்21, சீட் 37 ரெண்டும்தான் காலி. போய் ஒக்கார்ந்துக்கோங்க”
*************************
“நம்ம கலா பூகோளத்துல டரொமப் ‘வீக்’கா இருக்கா”
“அவங்கப்பா, அம்மா அவளை உலகம் தெரியாம வளர்த்துட்டாங்க”
*****************************
போலீஸ்காரர் மனைவி தன் தோழியிடம்:
“என் கணவர் வெச்சிருந்த நிஜத் துப்பாக்கியை எடுத்து என் மகன் என் நெத்திப் பொட்டைப் பார்த்து சுட்டுட்டான்”
“ஐயையோ.. அப்பறம்?”
“நல்லவேளை, நெத்திப்பொட்டை ட்ரெஸ்ஸிங் டேபிள்மேல ஒட்டிவெச்சிருந்தேன்”
**************************
மரணப்படுக்கையில் இருந்த அப்பா தன் மகனிடம்...
“மகனே, மேலத்தெரு முருகேசன் எனக்கு பத்தாயிரம் ரூபா தரணும்டா”
“கரெக்டா வாங்கிக்கறேன்ப்பா”
“கீழத்தெரு கணேசன் என்கிட்ட நாப்பதாயிரம் ரூபா வாங்கிருக்கான்”
“மறக்காம வாங்கிக்கறேன்ப்பா..”
“எதிர்வீட்டு கோவாலுக்கு நான் ஒருலட்சரூபா குடுக்கணும்டா”
“ஐயையோ.. எங்கப்பா நல்லா பேசிகிட்டிருந்தாரு. திடீர்னு நினைவு தப்ப ஆரம்பிச்சிடுச்சே..”
****************************
பத்திரிகை ஆஃபீஸுக்கு வந்த ஒரு பெண்..
“என் கணவர் காலமாய்ட்டார். காலமானர் விளம்பரம் போட எவ்வளவு?”
“வார்த்தைக்கு நூறு ரூபாய்”
“ப்ச்.. என்கிட்ட இருநூறு ரூபாய்தான் இருக்கு. சரி.. ஹென்றி காலமானார்’ அப்படின்னு ரெண்டே வார்த்தை போட்டுடுங்க”
பத்திரிகைகாரருக்குப் பாவமாய்த் தோன்றவே..
“சரி..உங்களுக்கு சலுகை தர்றோம். நாலு வார்த்தை எழுதிக் கொடுங்க. இருநூறு ரூபாய் போதும்”
அந்தப் பெண்மணி எழுதிக் கொடுத்தார்...
“ஹென்றி காலமானார். கார் விற்பனைக்கு..”
***************************
ரெண்டு மருமகள்கள்..
“போனவாரம் எங்க வீட்டுக் கிணத்துல என் மாமியார் விழுந்து செத்துப் போய்ட்டாங்க”
“ம்ஹ்ம்... என் வீட்லயும்தான் கிணறு இருக்கு.. மாமியாரும் இருக்காங்க.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்”
“அதுசரி.. எல்லாம் தன்னால நடக்கும்னு கையைக்கட்டி உக்கார்ந்துட்டிருந்தா ஆச்சா?”
*******************************
ராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன். அவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. வேற நாட்டுத் திருடன். அவன் பேசற மொழி தெரியல. ஒரு மந்திரியை கூப்ட்டு பேசச் சொன்னாரு ராஜா. மந்திரி ‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம் எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ன்னாரு. அவனும் பயத்துல கட கடன்னு எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..
‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்லமாட்டேங்கறான். இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’
******************************
டிஸ்கி: முதல் பாரால சொல்லிருக்கற மு.க., நம்ம முத்துலெட்சுமி கயல்விழி!
Wednesday, December 3, 2008
Monday, December 1, 2008
தனிமை-கொலை-தற்கொலை

நீங்கள் அலுவலத்தில் பிஸியாக பலபேருக்கு பதில் சொல்வதற்கு இடையிலோ, வீட்டில் மனைவி, குழந்தைகள் சூழ இருக்கும்போதோ, பிரயாணத்தின் கூட்டத்திலோ இந்தக் கதையைப் படிக்கிறீர்களா?
ப்ளீஸ்.. வேண்டாம். மூடிவிடுங்கள். உங்களுக்கென்று நமீதாவோ, நயன்தாராவோ வேறெந்தப் பக்கத்திலாவது காத்திருக்கக்கூடும். அங்கே செல்லுங்கள். இது வேறு மாதிரி கதை. இதைப் படிக்க நீங்கள் தனிமையாய் இருக்க வேண்டும். மெல்லிய இசை ஒலிக்கும் இரவு உசிதம். வீட்டில் மனைவி, குழந்தைகள் இன்றி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இந்தக் கதையைப் படிக்கலாம். வெறும், டிரைவர், கண்டக்டர் மட்டுமே இருக்கும் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்தும் படிக்கலாம். யாருமற்ற இரயில் பயணத்தில் படிக்கலாம். காரணம், தனிமையை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். நான் உணர்ந்திருக்கிறேன்.
நான் என்றால் இந்தக் கதையை எழுதுபவனல்ல. அவன் நண்பர்களால் சூழப்பட்டவன். அவனுக்குக் குடும்பம் இருக்கிறது. இந்தக் கதையை எழுதவே லாயக்கில்லாதவன் அவன். அவனுக்கு எங்கே தெரியப் போகிறது என் வலி. தனிமையின் வலி. அவனை மறந்துவிடுங்கள். நான் என்றால் நான். விக்னேஷ்.
பதினைந்து வயதில் தந்தையை இழந்தவன். பதினாறு வயதில் அன்னை, அண்ணனை விட்டு சென்னை வந்தவன். அவர்களோடு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஒரே ஒருமுறை ஊருக்குச் சென்று அன்னையைப் பார்த்தேன். அவளை சிதையில் படுக்கவைத்திருந்தபோது.
கடந்த பத்து வருடங்களில் நண்பனாய் எனக்கிருந்தவன் அமுதன் மட்டும்தான். என் சந்தோஷம், துக்கம், சிரிப்பு, கண்ணீர் எல்லாவற்றையும் நான் பகிர்ந்துகொள்வது அமுதனிடம் மட்டும்தான். எந்த சஸ்பென்சுக்கும் இடமில்லாமல் இப்போதே சொல்லிவிடுகிறேன். நான் அமுதனைக் கொல்லப் போகிறேன். அதுதான் கதை.
ஐயையோ கொலையா.. அதுவும் பத்து வருட நண்பனையா என்று அட்வைஸ் சொல்லப் போகிறீர்களா? வேண்டாம். அந்த நேரத்தில் உருப்படியாக வேறெதாவது செய்யுங்கள். காரணம் நான் தீரயோசித்துத்தான் இந்த முடிவெடுத்தேன்.
அவனுக்கு அந்த தண்டனையைக் கொடுக்கக் காரணம்-மிருதுளா.
மிருதுளா. என் இரண்டுவருட நண்பி. அடிக்கோடிடும் வசதி இல்லை. ஆனாலும் அடிக்கோடிட்டுப் படியுங்கள்.. நண்பி. ஏதோ ஒரு பழைய புத்தகக் கடையில் நானும், அவளும் கல்யாண்ஜியின் ஒரே கவிதைத் தொகுப்பைத் தேடி, கிடைக்காமல் நட்பாகி, பிறகு எனக்குக் கிடைத்தபோது, அவளைத் தொடர்பு கொண்டு..
ப்ச்.. விடுங்கள். பழைய கதையெல்லாம் சொல்லி போரடிக்கிறேன். இப்போது மிருதுளாவைப் பார்ப்போம்.
தாமரை மலர்வதை யாராவது வீடியோ எடுத்திருக்கிறார்களா? அப்படியே எடுத்திருந்தாலும் மெ து வா க அது மலர்வதில் என்ன சுவாரஸ்யமிருக்கும்? அதுவே சடாரென்று ஒரு நொடியில் மலர்வது எப்படி இருக்கும்?
மிருதுளாவின் சிரிப்பைப் பாருங்கள். அப்படித்தான் இருக்கும்.
வெல்வெட்டைத் தொடும் உணர்வு அவளை ஸ்பரிசிக்கையில் இருக்கும். இரண்டு ஆரஞ்சுச் சுளைகளைப் பக்கவாட்டில் பார்த்தால் அவள் உதடுகள். அவள் பார்வை...
ஐயையோ.. இதையெல்லாம் சொல்வதால் அவளை என் காதலியாய் கற்பனை செய்யாதீர்கள். எங்களுடையது வெறும் நட்பாகத்தான் இருக்கிறது. ஸாரி.. இருந்தது. இறந்தகாலம். காரணம் – அமுதன்.
அவளுக்கும், எனக்குமான நட்பு உங்களால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாதது. எதுபற்றியும் அவளிடம் விவாதிக்கவோ, பகிர்ந்து கொள்ளவோ நான் தயங்கியதில்லை. அவளும். முன்பு நானிருந்த ஒரு வாடகை வீட்டின், ஓனர் மகளின் வயதுக்கு மீறீய வளர்ச்சி உட்பட எதையும் அவளிடம் மறைத்ததில்லை. அவளும் தன்னை வேறு கண்ணோடு பார்க்கும் சக நண்பர்களின் மனமாறுதல் உட்பட எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வாள். அதை வேறு எவரிடமும் நான் சொல்லமாட்டேன் என்ற நம்பிக்கையில். நானும் அதைக் காப்பாற்றிவந்தேன். அதனால்தான் அவள் என்னோடு அதே நட்பாக இருக்கிறாள்.. ச்சே.. இருந்தாள்.
அவளுக்கு என்மீதோ, எனக்கு அவள்மீதோ காதல் என்ற உணர்வோ, காமமோ எழவில்லை. அப்படி உணர்ந்தால் தயக்கமின்றி சொல்லலாம் என்பதே எங்கள் உடன்பாடு. ஆனால்.. ம்ஹூம்.
பழைய பேச்சிலர் அறையிலிருந்து, இப்போதிருக்கும் தனி அறைக்கு நான் குடிவந்தபோது, ஒரு மழையிரவில் அவள் வந்து என் வீட்டில் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஈர உடையுடன் இருந்தபோதும், காமம் வரவில்லை. ‘உனக்கு ஒண்ணுமே தோணலியாடா’ என்று தலைகோதிவிட்டு அவள் வெளியேறியது நேற்று போல நினைவிலிருக்கிறது.
என் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்கென்றே படைத்து அனுப்பப்பட்டவள் அவள். அப்படி இருந்த எங்களைப் பிரித்தது அவன்தான்.. அமுதன்.
மிருதுளா என்ற பெண், அதுவும் பேரழகி எனக்கு தோழியாய் வாய்த்தது என் பாக்கியம். யாருமற்ற எனக்குத்தான் தெரியும் தோழமையின் சுகம். அது பெண்ணாய் அமைந்துவிட்டால் எவ்வளவு சுகம்? அதை அவள் தந்தாள். சிலசமயங்களில் நான் யாருமற்றவன் என உணர்கையில் அவள் தோளில் சாய்ந்து அழுதிருக்கிறேன். ‘அழுடா.. அடுத்தவங்க பார்க்கறாங்கன்னு அடக்காதே. அழு’ என்று தலைகோதிவிடுவாள்.
அப்படிப்பட்டவளின் அழகை, ஒரு பீரடித்திருந்த இரவில் சிலாகித்துவிட்டேன் அமுதனிடம். அவள் ரோஸ் உதடுகளின் அழகு, அவள் வழ வழ இடை, அவள் நடை.. இன்னும் என்னென்னவோ.. எனக்குள்ளிருந்த ஆண்மிருகம் விழித்து என்னென்னவோ உளறியதை அடுத்த ஓரிரு நாளில் போட்டுக் கொடுத்துவிட்டான் அமுதன். என் தோழியிடம்.
அவள் அழகைப் பற்றி, ஏற்கனவே அவளிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். ‘போதும்டா ராஸ்கல். எனக்கு நீ புருஷனா வரப் போறதேயில்ல. அதுனால அளவுக்கு மீறி வர்ணிக்காத’ என்பாள். இப்போது அதே வரிகளை, அமுதனிடமிருந்து கேட்டதும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மற்றொருவனிடம் தன்னைப் பற்றி இப்படிப் பேசுவதை எந்தப் பெண்தான் தாங்கிக் கொள்வாள்? கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து விலகி.. இப்போது சந்திப்பதே இல்லை.
அமுதன் போட்டுக் கொடுத்ததால்தான் அவள் விலகினாள் என்பதே எனக்குப் போனவாரம்தான் தெரியும். அமுதனே ஒரு பீரிரவில் உளறிவிட்டான். ‘டேய்.. நாந்தாண்டா உன்னைப் பத்தி அவகிட்ட சொல்லி பிரிச்சேன்.. இப்ப என்னாங்கற’ என்று அவன் சொன்னது அடுத்தநாள்தான் உறைத்தது. அந்த ஒரு சம்பவத்தால் மட்டும் அவள் பிரிந்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஏதேதோ சொல்லி அவளை என்னிடமிருந்து பிரித்திருக்கிறான். ஒரு மாதமாக அவள் சிநேகமான புன்னகையோ, கையசைப்போகூட இல்லாமல் போகிறாள். ம்ஹூம்... பெண்கள்.. பெண்கள்..!
அவன் சொன்னபோது, ஒன்றும் செய்யும் மனநிலையில் இல்லை. போனவாரம் தோன்றி, அந்த வேகத்தில் ஒரு கத்தியெல்லாம் வாங்கி வைத்து... அப்புறம் விட்டுவிட்டேன். ஆனால் அந்த வன்மம் ஒரு வாரமாக வளர்ந்து, இதோ கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேலாக மழையில் வெளியே போகாமல், யாருடனும் பேசாமல் பித்துப் பிடித்து இருக்கும்போது – அமுதனைக் கொலைசெய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
இதைவிட்டால், வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. அவன் அறையில் தனியாகத்தான் இருப்பான். மழைபெய்து ஊரே வெள்ளக்காடாக இருக்கிறது. முடிந்தால் அவன் மூக்கைப் பொத்தி, தலையணையால் அழுத்தி மூச்சை நிறுத்திவிட்டு வெளியே தண்ணீரில் குட்டையில் போட்டுவிடலாம். இல்லையா.. கத்தியால் ஒரே குத்து. இந்த தண்ணிர் வடிந்து, அவனை எடுப்பதற்கு ஒரு வாரமாகிவிடும். அப்படியே என்னைக் கண்டுபிடித்தாலும் கவலையில்லை. ஜெயிலுக்குப் போகத் தயார். இல்லை... அவனைக் கொன்றுவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேனா.. தெரியவில்லை. இப்போதைக்கு அவனைக் கொல்லவேண்டும்.. அவ்வளவுதான்.
கத்தி.. கத்தி.. ஓ! இங்கே இருக்கிறது. எவ்வளவு சுலபமாகக் கிடைக்கிறது..
‘சும்மா.. ஒரு டிராமாக்கு அண்ணே..’
‘நீ ட்ராமாக்கு வாங்கு. நெசமாவே போட்டுத் தள்ள வாங்கு. எனக்கின்னாபா? துட்டக் குடு’
நல்ல நீளம். முனைக்கருகில் சுருள்.. சுருளாய்...
‘நெசமாவே போட்டுத் தள்றீன்னா.. இப்படிப் புடிச்சு, ஒரே சொருவு.. வெளில எடுக்கறப்ப அவன் கொடலை நீ பார்க்கலாம்’

வெளியே மழை வெறும் சாரலாக மாறிவிட்டிருந்தது. எந்த நேரத்திலும் மறுபடி பிடித்துக் கொள்ளும். இடுப்பளவு தண்ணீரில் சிலர் தெரிந்தனர். ஏதோ கட்சிக்காரர்களின் உதவியோடு, படகில் ஏறி அமுதன் இருக்கும் அறை நோக்கி சென்றேன்.
கத்தி இடுப்பில் உறுத்திக் கொண்டே இருந்தது.
அமுதனின் அறையை நெருங்கியபோது சூரியன் மறையத் தொடங்கியிருந்தான். அறைக் கதவை பலமுறை பலமாகத் தட்டியபிறகுதான் வந்து திறந்தான் அமுதன்.
குடித்திருக்கிறானா? அழுதிருக்கிறானா... கண்கள் சிவந்து, முகமெல்லாம் வீங்கிப் போய்..
“வா.. வாடா விக்கி.. என்ன திடீர்னு?”
“ஒண்ணுமில்ல..” – பழகியவனைக் கொலை செய்வதில் உள்ள சிக்கல் இதுதான். வந்தோமா, போட்டுத் தள்ளினோமா என்று போக முடியாது. பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.
ஐயையோ.. என்ன இது.. ஏதோ ப்ரொஃபஷனல் கில்லர் பாணியில் யோசிக்க ஆரம்பித்துவிட்டேனே..
கட்டிலுக்கருகில் இருந்த ஸ்டூலில், பிராந்தி பாட்டிலும், டம்ளரும் இருந்தது. ஊற்றிவைக்கப்பட்ட அதை குடித்தால் அவனை ஒரே குத்தில் முடித்துவிடும் தெம்பு வந்துவிடும்.
நேராக கட்டிலில் அமர்ந்து அதை எடுக்கப் போனபோது, தடுத்தான்.
“வேணாம். குடிக்காத”
“ஏன்?”
“ப்ச்.. வேணாம்னா விடேன்”
“ஏண்டா? நீ குடிச்ச டம்ளர்ல நான் குடிச்சதில்லையா?”
“அதுல விஷம் கலந்திருக்குடா” என்றவன் அடுத்தநிமிடம் ‘ஓ’வெனக் அழ ஆரம்பித்துவிட்டான்.
“நான் குடிச்ச டம்ளர்ல நீ குடிச்சதெல்லாம் மூணு வருஷத்துக்கு முந்திடா. இப்போ எங்க என்கூட வர்ற? எப்பப் பாரு மிருதுளா.. மிருதுளா.. டேய்.. ஒனக்காவது எங்கயோ அண்ணன்னு ஒருத்தன் உயிரோட இருக்கான். எனக்கு பத்துவருஷமா எல்லாமே நீதாண்டா. ஆனா ரெண்டு, மூணுவருஷமா என்கூட நீ மனசு விட்டுப் பேசிருக்கியா? நீ கூட இருக்கேன்னு, மேன்ஷனைக் காலி பண்ணி இங்கே வந்தோம். இங்க இருந்தா அவ வர சங்கடப்படறான்னு ரூமையும் மாத்தீட்ட. தனியா இருக்கறதோட கஷ்டம் தெரியுமாடா ஒனக்கு? எவ்ளோ ராத்திரி நான் தூங்காம இருந்திருக்கேன் தெரியுமா? அப்படியே ஒன்கூட இருந்தாலும் பாதி நேரம் அவளைப் பத்திதான் பேச்சு. அதுனாலதான் அவளை வெட்டிவிட்டேன். அப்படியும் என்கிட்ட முந்திமாதிரி பேச மாட்டீங்கற. இந்த ரெண்டு, மூணு நாளா மழையில வெளியில எங்கயும் போகமுடியாம பேசறதுக்கும் ஆளில்லாம இந்த ரூம்ல அடைஞ்சிருக்கேன். அதான் முடிவு பண்ணி மழை விட்ட கேப்புல போய் வாங்கிட்டு வந்து, குடிச்சு சாகலாம்ன்னு முடிவு பண்ணினேன். என்னால முடியலடா. நான் சாகறேன். விட்டுடு”
அமுதனை அறைய கையை ஓங்கிய நான், ஏதோ வேகத்தில் என்னையே பலமாக மாறி மாறி அறைந்து கொள்ள.. ஏனென்று புரியாமல் தடுக்கப் பாய்ந்தான் அவன்.
(புகைப்படங்கள்-நன்றி:
http://stillintheworld.blogspot.com/2008/02/blog-post_20.html)
www.terminally-incoherent.com)
அவியல் 01.12.08 – ஸாரி லக்கிலுக்!

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தலைப்பு சூடான இடுகையில் இடம்பெற கொடுக்கப்பட்டதேயன்றி வேறொரு மண்ணாங்கட்டியும் இல்லை.
**********************
வாரணம் ஆயிரம் பார்த்தேன் நேற்று. எனக்குப் படம் பிடித்திருந்தது. பாடல்களின் பிக்சரைசேஷனில் தற்போதைய இயக்குனர்களில் கௌதம் மேனன் ‘த பெஸ்ட்’ என்று அடித்துச் சொல்லலாம்.
லக்கிலுக்கின் விமர்சனத்தில் ஷமீரா ரெட்டி சரியில்லை என்று எழுதியிருந்ததற்கு ‘ஆமாம்’ போட்டிருந்தேன். அது ஸ்டில்களைப் பார்த்து. ஆனால், Sorry Lucky... படத்தில் பார்த்தபோது பிடித்திருந்தது. மாநிறம், கோதுமை மாதிரி வழு வழு உடல்.. நல்ல உயரம். ஒரு மார்க்கமான பார்வை. செழித்த உதடுகள். என் ஃபேவரைட் ஃபிகர் திவ்யா ஸ்பந்தனா-வுடன் போட்டி போடும் அளவுக்கு இருந்தார் என்றால் மிகையில்லை!
படத்தில் சரோஜாதேவி ஸ்டைலில் வரும் சிம்ரனும் என்னைக் கவர்ந்தார். (படிக்கற சரோஜதேவி அல்ல.. பார்க்கிற சரோஜாதேவி)
அப்புறம் பாடல்களில், சி.டி.வந்தபோது கேட்கையில் என்னைக் கவராத ‘அஞ்சலை’ பாடல் (இது கௌதம் மேனன் படப் பாடலாவே இல்லை என்றிருந்தேன்) அரங்கில் பலத்த கைதட்டலைப் பெற்று முன்னிலையில் இருந்தது. சூர்யாவின் ஆட்டமும் அபாரமாக இருந்தது.
ஈஷா யோகா சார்பாக ஆண்டு தோறும் நடக்கும் மகாசிவராத்திரி விழாவிற்குச் செல்வதுண்டு. அப்போது சத்குரு ஜக்கி வாசுதேவின் உரையின் போது பலர் TRANCE-க்கு செல்வதைக் கண்டிருக்கிறேன். அப்போது அவர்கள் தங்களை மறந்து இடும் கூக்குரல், ஆட்டம் ஆகியவற்றை இந்தப் பாடலின் போது தியேட்டரில் கண்டேன். விசாரித்தபோது, பலர் அதில் குடித்திருந்தனர். ஆனால் ஒருவர் குடிக்காமலே தன்னை மறந்து கத்திக் கொண்டும், அழுதுகொண்டும் இருந்தார். ‘காதல் தோல்விபோல’ என்று பேசிக்கொண்டனர்.
படம் முடிந்து வரும்போது ஒரு விஷயத்திற்காக மிகவும் வருந்தினேன்.. கௌதமும், ஹாரிசும் பிரிந்ததற்கு.
************************
மும்பையில் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை மீடியாக்கள் ஒளிபரப்பியது குறித்து எதிர்க்குரல்கள் நிறைய வருகிறது. ‘அப்படி ஒளிபரப்பியது தவறு, உள்ளே உள்ள தீவிரவாதிகளுக்கு செய்தி போய்க்கொண்டே இருக்காதா’ என்று பலர் வாதிடுகிறார்கள்.
அது உண்மையானால், மீடியாவைக் கேள்வி கேட்க எவருமே இல்லையா? அப்படி அவர்கள் ஒளிபரப்பியதை, அரசு தடுக்காதது ஏன்?
இதுகுறித்து தெரிந்தவர்கள் யாராவது விளக்கம் கேட்டு எழுதினால் பரவாயில்லை.
*********************
மும்பை பயங்கரத்தின்போது ஆங்கில சேனல்களில் வந்த எஸ்.எம்.எஸ்-களில் என்னைக் கவர்ந்த இரண்டு..
# எங்கே அந்தப் பால்தாக்கரே? வந்து மும்பை மக்களைக் காப்பாற்றட்டுமே.. மும்பைக்கர் அல்லாத கமாண்டோக்களை அனுப்பிவிடலாமா? (இந்த SMS-தான் இப்போது பல விவாதங்களை ஆரம்பித்திருக்கிறது!)
# வி.ஐ.பி-க்களுக்குக் கொடுத்துள்ள Z பிரிவு பாதுகாப்பை நீக்கி, இனி சாமானிய மக்களுக்குக் கொடுங்கள். நாட்டில் அவன் நிலைமைதான் படுமோசமாய் இருக்கிறது!
*****************************
NDTV-யின் பர்காதத் – என்னைக் கவர்ந்த ஒரு ரிப்போர்ட்டர். இந்த சம்பவங்களின்போது, வீட்டுக்கே போகாமல் குரல் கம்ம பேசிக்கொண்டே இருந்தார்.
பர்காதத் நேற்றிரவு முமப் பயங்கரம் குறித்து ஒரு கருத்துரையாடல் (TALK SHOW) நடத்தினார். டைம்ஸ் ஆஃப் இண்டியாவின் எடிட்டர், நெஸ் வாடியா (பாம்பே டையிங்), எம்.என். சிங் (முன்னாள் போலிஸ் கமிஷன்ர்) ஆகியோருடன் சிமி கேர்வால் (டி.வி. நடிகை), மற்றும் VTV-யின் வீடியோ ஜாக்கி/காம்பியரர் ஆகியோர் கலந்து கொண்டு ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தினர்.
நான், நம் டி.வி. நடிக, நடிகையர், காம்பியரர் குறித்து நினைத்துப் பார்த்தேன்..
ஜோடி நெ.1, காமெடி டைம்களில் பிஸியாக இருக்கிறார்கள்.
வாழ்க.. வாழ்க!!
*************************
கலைஞர் டி.வி-யின் எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சியில் காதல் படத்தில் நடித்த சுகுமார் சிறப்பு விருந்தினராக கால்மேல் கால் போட்டு உட்கார, ஜட்ஜாக இருக்கும் டெல்லி கணேஷ் அவரிடம் ‘இவரைப் பத்தி என்ன நெனைக்கறீங்க..’ என்று கருத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்..
கடுப்பாக இருந்தது.
என்னைப் பொறுத்தவரை நாகேஷூக்கு இணையான நடிகர் டெல்லிகணேஷ்.
அதேபோல, ஒரு பாடல் பாடியவர்கள் சூப்பர் சிங்கர் ப்ரோக்ராம்களுக்கு நடுவர்களாகவும், ஒரு ஆட்டத்தில் ஃபேமஸானவர்கள் டான்ஸ் போட்டிகளுக்கு நடுவர்களாகவும் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போதும் எரிச்சலாகத்தான் இருக்கும். இதுபற்றி ஒரு தனிப்பதிவு எழுதி, வெளியிடவைத்திருந்தேன். அன்றைக்குப் பார்த்து ஒரு ஃபோன்கால் வந்தது.. ஒரு வலைப்பதிவு நண்பரிடமிருந்து..
“கிருஷ்ணா.. ******* அவரோட ப்ளாக்ல சிறுகதைப் போட்டி வைக்கிறாராம். நடுவரா *********ஐயும், உங்களையும் இருக்கச் சொல்றாங்க. சம்மதமா?”
அதற்குப் பிறகும் அந்தப் பதிவை வெளியிட நான் என்ன கேனையனா?.
*****************************
ஒரு பிரபலத்திடமிருந்து எனக்கு தினமும் வரும் SMS மிகுந்த எதிர்பார்ப்பைத் தரும். இன்னைக்கு என்ன அனுப்புவார் என்று. சமீபத்தில் அவர் அனுப்பியதில் எனக்கு மிகப் பிடித்த இரண்டு..
“CLEVERNESS IS WHEN YOU BELIEVE ONLY HALF OF WHAT YOU HEAR. BUT BRILLIANCE IS WHEN YOU KNOW WHICH HALF TO BELIEVE” – WARNER
சட்டக்கல்லூரி, மும்பை தீவிரவாதம் எல்லாவற்றிலும் மேலே கண்ட Brilliance மிகமுக்கியம்.
இன்னொன்று..
‘தீவிரவாதியை மன்னிப்பது எங்கள் கையில் இல்லை. அதை கடவுள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், அவனைக் கடவுளைச் சந்திக்க ஏற்பாடு செய்வது எங்கள் கடமை’ – இந்திய இராணுவம்
********************
இந்தவாரக் கவிதை..
நாகரிகம்
கடன் வைத்துக் கொள்வதில்லை – இந்தக்
கன்னிப் பெண்கள்
தினந்தோறும்
காதல்பையன்கள் அனுப்பும் பூக்களை
சேர்த்துவைத்திருந்து
மொத்தமாகத் திருப்பித் தந்துவிடுகிறார்கள்
மாலையாகவோ மலர்வளையமாகவோ
-ரமேஷ் வைத்யா
Subscribe to:
Posts (Atom)