Showing posts with label LTTE. Show all posts
Showing posts with label LTTE. Show all posts

Saturday, May 23, 2009

பிரபாகரன் மரணம் பற்றிய அதிர்ச்சி அறிக்கை வெளியாகும் - இலங்கை எம்.பி.

“பிரபாகரன் இறப்பு குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து விரைவில் ஓர் அறிக்கை வெளியாகும். அந்த அறிக்கை அதிர்ச்சி தரக்கூடியதாகவும், உலகை உலுக்கக் கூடியதாகவும் இருக்கும்” என்று இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

அமெரிக்கா, நார்வே நாடுகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, வெள்ளைக் கொடியோடு செஞ்சிலுவைச் சங்கத்திடம் சரணடைய வந்தபோது சர்வதேச விதிமுறைகளை மீறி நடேசன் உள்ளிட்டவர்களை நயவஞ்சமாகக் கொன்றுள்ளனர். சர்வதேச சதியால் விடுதலைப் புலிகள் மோசமான பின்னடவை சந்தித்துள்ளனர்.

புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதை விடுதலைப்புலிகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

பிரபாகரனது மூத்த மகன் சார்லஸ் அந்தோணி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி, மகள், இளையமகன் ஆகியோர் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

இலங்கை அரசு காட்டியது பிரபாகரன் உடல்தானா என்ற சந்தேகம் உள்ளது. உண்மையில் பிரபாகரன் இறந்திருந்தால் ஊர் முழுக்க ஊர்வலம் எடுத்துச் சென்றிருப்பர்.

பிரபாகரனின் மூத்த சகோதரி சென்னையில் உள்ளார். அவரிடம் இருந்து மரபணுச் சோதனைக்கு மாதிரி எடுத்து, அவர்கள் காட்டிய உடலோடு ஒப்பிட்டு சோதனை செய்திருக்கலாமே!

சர்வதேச பத்திரிகையாளர்களையோ, இலங்கைப் பத்திரிகையாளர்களையோ அந்த உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. புலிகள் இயக்கத்தை யார் நடத்துவது என்பதை அந்த இயக்கத்தினர்தான் அறிவிக்க வேண்டும். பிரபாகரன் இறப்பு குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து விரைவில் ஓர் அறிக்கை வெளியாகும். அந்த அறிக்கை அதிர்ச்சி தரக்கூடியதாகவும், உலகை உலுக்கக் கூடியதாகவும் இருக்கும்.

‘இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் காயம்பட்டவர்களுக்கு உதவ மனிதாபிமான பணியாளர்களை அனுப்புகிறோம்; ஒரு கப்பலை அனுப்பி அப்பாவி பொதுமக்களை மீட்கிறோம்’ என்ற இரு கோரிக்கைகளை அமெரிக்க கப்பற்படைத் தளபதி, கடந்த வாரம் இந்தியாவிடம் வைத்தார். இந்த இரண்டையும் இந்தியா ஏற்கவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய, தமிழக அரசுகளின் செயல்பாடுகள் எங்களுக்கு வேதனையையும், ஏமாற்றத்தையும் தருகிறது. இலங்கையில் பெருமளவிலான படுகொலைகள் நடந்துமுடிந்த பின் ஐ.நா. செயலர் இலங்கை வந்துள்ளார். இந்த நாளை கறுப்பு நாளாகக் கடைபிடிக்கிறோம்.’

இவ்வாறு சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

- தினமலர்

குறிப்பு: மேலே உள்ளது இன்றைய தினமலரில் 11ம் பக்கம் வெளியான செய்தி. பிரபாகரனின் இறப்பைப் பற்றி இரண்டாம் ஹிட்லர் ராஜபக்‌ஷே சொன்ன செய்தியை முதல் பக்கம் போட்டிருக்கும் தினமலர், இந்தச் செய்தியை 11ம் பக்கம் வெளியிட்டிருக்கிறது. ஆகவேதான் அந்தப் பேட்டியை இப்படிப் பதிவாக வெளியிடுகிறேன்.

.

Thursday, May 21, 2009

எங்கே இருக்கிறாயோ அங்கேயே இரு!


அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. என் நண்பனிடமிருந்து அலைபேசி. திருப்பூரில் இலங்கையிலிருந்து வந்து பணிபுரியும் சிலர் ஞாயிறும் வேலை என்று தங்கள் நிறுவனத்தில் இருக்கும்போது நாலைந்துபேர் திரும்ப தங்கள் வீட்டுக்குப் போய்விட்டார்கள் என்றும் அவர்களுக்கு பிரபாகரன் பற்றிய ஏதோ தகவல் வந்திருப்பதால்தான் அப்படி கிளம்பிவிட்டார்கள் என்றும் சொன்னான்.

உடனே நான் அருகிலிருக்கும், இலங்கையிலிருந்து வந்து பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒருவரிடம் சென்று கேட்டபோது, “ஆமாங்க. பிரபாகரன் இறந்துட்டாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல அறிவிக்கப்போறாங்க. என் நண்பர்கள் இலங்லையிலிருந்து அழைத்துச் சொன்னார்கள்” என்றார்.

ஒன்றும் பேசமுடியாமல் வீட்டில் வந்து விழுந்தேன். சென்னை நண்பர்களிடமும் தொடர்பு கொண்டபோது ‘அதெல்லாம் இல்லவே இல்லை’ என்றார்கள்.

ஆனால் ஞாயிறு மதியத்திலிருந்து செய்தி சேனல்கள் பிரபாகரன் மகன் மரணமடைந்ததாகவும், உடனிருந்த தலைவர்கள் சிலரும் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்க ஆரம்பித்துவிட்டன.

அடுத்த நாளிலிருந்து பிரபாகரன் மரணத்தையும் - எந்த ஆதாரமோ, புலிகளின் வரலாறு குறித்த செய்திகளோ இன்றி கேள்விக்குறியோடு ஆரம்பித்து ஊர்ஜிதப்படுத்துதல் வரை - காட்டி குழப்படி வேலையை ஆரம்பித்தது அதே செய்தி சேனல்கள்.

ஐயா... நாங்கள் கையறு நிலையிலிருக்கிறோம். எங்களுக்கும், இலங்கைத்தமிழருக்குமான உறவு என்ன உறவென்றே சொல்ல இயலாத ஒன்று. அங்கே அவர்கள் உணவுக்கும், உறைவிடத்துக்கும் அல்லல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஒரு குவளைத் தண்ணீருக்காக ஏங்கும் குழந்தையின் புகைப்படத்தை, கையில் கோக் அல்லது பெப்ஸியோடு ‘உச்’ கொட்டிப் படிப்பவர்கள்தான் நாங்கள். ஒத்துக் கொள்கிறோம்.

ஆனால் எங்கள் உணர்வுகள் வெளிப்படையானவை அல்ல. இன்றைக்கு துரோகி கருணாவை பெரிய **** மாதிரி பேட்டி எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சேனல்காரர்களுக்கு எதிராக குறைந்த பட்சம் தொலைக்காட்சியை அணைக்க மட்டுமே எங்களால் முடிகிறது.

முகவாட்டம் பார்த்து ‘என்ன ஆச்சு?’ என்று மனைவி கேட்டால் அலுவலகப் பிரச்சினை என்றும், அலுவலக நண்பர்கள் கேட்டால் ‘ஃபேமிலி ப்ராப்ளம்’ என்றும் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு இறுகிய மனநிலையில் இருக்கிறோம் என்னைப் போன்ற பலர். எங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை.

புலிகளிடமிருந்து பிரிந்து அமைச்சராக மாறியிருக்கும் துரோகி கருணா என்ன தேசத் தலைவனா? அவன் வந்து சோனியா, ராகுல், கலைஞரை சந்தித்து ராஜீவ் கொலை பற்றி விளக்குவானாம். பிரபாகரனின் மகள், மகன் இவனுக்கும் மகன், மகளைப் போலத்தானாம். அதனால் அவர்கள் உடலை அடையாளம் காட்டும் மனநிலையில் அவன் இல்லையாம். அவனிடம் பேட்டி எடுக்க நேரமிருக்கும் உங்களுக்கு ஒரு அரை மணிநேரம் புலிகள் இயக்கம் எந்தச் சூழலில் ஆரம்பிக்கப்பட்டது என்பதைக் காண்பிக்கவியலாதா?

பிரபாகரன் மரணம் என்பது தனிமனிதன் மரணமல்ல. அவர் உயிரோடு இருப்பது பல தமிழர்களுக்கு உயிர்மூச்சாய் நம்பிக்கை தரும் ஒன்று. ஆங்கில செய்தி சேனல்களுக்குத்தான் இந்த வரலாறு பற்றி காண்பிக்க மனமில்லை என்றால் தமிழ் நாளிதழ்கள் சிலவும் எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல் அஞ்சலி ரேஞ்சுக்கு எழுதித் தள்ளுகிறார்கள்.

மகன், பேரன், மகளுக்கு கேபினெட் பதவி உறுதி ஆனபின் இதுபற்றி கவிதை எழுதப் போகும் தமிழினத் தலைவரும், மகனுக்கு பதவி கிடைக்காத மருத்துவர்களும், திடீர் பாசத்தோடு பிரச்சாரம் செய்த தலைவியும், இந்த விஷயத்திலாவது ஒற்றுமை காத்து இனி இலங்கைத் தமிழருக்காக என்ன செய்யலாம் என்று யோசித்து - எங்களைத் தந்தி அனுப்பச் சொல்லாமல் - ஒரு முடிவுக்கு வாருங்கள்.

அதுவரை மாவீரா...

நீ எங்கே இருக்கிறாயோ அங்கேயே இரு!