Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Wednesday, August 6, 2008

இரு கவிதைகள்

அவன் இப்படித்தான்




சங்கீதத்தில் பரிச்சயமில்லை
குழந்தைகளின் சிரிப்பு
போதுமவனுக்கு.

வேறெந்த மொழியும்
கற்றுக் கொள்ளவில்லை
மழலையைத் தவிர்த்து.

ஓட்டத்தில் வீரனில்லை
குழந்தை தத்தி நடக்கையில்
தோற்பவன் அவன்

வலிமையின் பலமறியாதவன்
பிஞ்சுக் கைகளில்
புதைந்திருப்பான்

எந்தக் கன்னியர் கண்களும்
தராத போதையை -ஒரு
குழந்தையின் பார்வை
கொடுக்கும் அவனுக்கு.

பெருமழையில்
நனையும் மகிழ்ச்சி
குழந்தை அவனை
நனைக்கையிலும்
உணர்வானவன்.

கொதிக்கும் கனலை
மிதித்தும் அவன்
மெய்யறியா வலி
குழந்தையின் கண்ணீரால்
அவன் மனமுணரும்

இறந்தபின் சொர்க்கமா
என்ற கவலைகள்
அவனுக்கில்லை
இருக்கும்போதே
குழந்தைகளைக்
கொண்டாடுபவனவன்.

****************************

பேருந்து நாட்களில்...

பலமணி நேரம் காத்திருந்து
பஸ் வர, பின்னால் ஓடி
கம்பி பிடித்துத் தொற்றி
கர்ச்சீப் போட்டு
கூட்டம் நெருக்கி
சட்டை கசங்க
போட்ட சீட்தேடி
அமர்ந்து
பெருமூச்சு விடுகையில்...

கண்ணில் நுழைந்து
இதயத்தை உருக்குகிறது
கர்ப்பிணிப் பெண்ணொருத்தி
சீட்தேடி அலையும் காட்சி.