Tuesday, July 19, 2011

அவியல் 19.07.2011

திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகமாகி விட்டதால் காவல்துறை அங்கங்கே எச்சரிக்கை தட்டிகளை வைத்து பொதுமக்களை உஷார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தட்டியில் ‘உங்கள் வாகனங்கள் திருடு போகாமல் இருக்க பத்திரமாக பூட்டு போட்டு வைத்துக் கொள்ளுங்கள் – இப்படிக்கு உங்கள் நண்பன், காவல்துறை” என்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஹீரோ ஹோண்டா வாகனங்கள் என்று வேறு!

பல இடங்களில் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வழக்கமாக நான் செல்லும் பாதையில் ஒரு வெள்ளுடை வேந்தர் என்னைத் தடுத்து நிறுத்தினார். நிறுத்தியதும் நான் சொன்னேன்:

“நீங்க எதிர்பார்த்தது என்கிட்ட கிடைக்காது சார்”

அவர் என்னை ஒரு மார்க்கமாக – சிக்கினாண்டா சிவகிரி என்பது போல – பார்த்து “லைசென்ஸ், ஆர்சி, இன்ஷ்யூரன்ஸ் எதுவுமே இல்லையா?” என்று கேட்டார்.

“அதில்லை சார்.. எல்லாம் இருக்குன்னு சொல்ல வந்தேன்”

ஒரு நிமிடம் யோசித்தவர் டக்கென்று தோளில் தட்டி சிரித்து “போய்யா.. போ..” என்றார். ரசனைக்காரர்!

** **

சௌ
ந்தர் என்ற என் நண்பரைப் பற்றி அடிக்கடி சொல்வேனில்லையா? (இல்லையா?) நேற்று அவரைச் சந்தித்தேன். சூரியன் பண்பலையில் ஏதோ க்ளோபல் வார்மிங் சம்பந்தமான கவிதை போட்டி ஒன்று அறிவித்தார்களாம். வைரமுத்து நடுவர். அதற்கொரு கவிதை எழுதியிருக்கிறேன் என்றார். (சௌந்தர் நன்றாக கவிதை எழுதுவார் – என்னை விட – என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

“சொல்லட்டுமா?” என்றார். சொன்னார்.

‘மனிதா...’ என்று ஆரம்பித்தார்.

‘ஏ மனிதா’ இல்லையா? இந்த மாதிரி கவிதை எல்லாம் ‘ஏ மனிதா-ன்னு ஆரம்பிக்கணுமே’ என்றேன். இல்லை என்றார். சரி.. அவர் அழைக்கும் மனிதனின் அப்பா பெயர் A வில் ஆரம்பிக்காது போல என்று நினைத்துக் கொண்டு ‘சொல்லுங்கள்’ என்றேன்.

உண்மையாகவே அவர் கவிதை நன்றாகவே இருந்தது. முன்னர் சொன்ன ‘ஏ மனிதா..’ கிண்டலை சீரியஸாக எடுத்துக் கொண்டவர், ‘நிஜம்ம்ம்ம்ம்மா நல்லா இருக்குய்யா’ என்றபோது கிண்டல் பண்ணாதீங்க என்றார். போட்டி முடிவு வந்தபின், அவர் கவிதை தேர்வானாலும், ஆகாவிட்டாலும் ஒருநாள் என் பதிவில் எழுதுகிறேன். நீங்களே சொல்லுங்கள்.

** **

மே
ற்கண்ட பத்தி பற்றிய இன்னொரு விஷயம்: கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர் அலுவலகத்திலிருந்துதான் பண்பலை கேட்டிருக்கிறார் சௌந்தர். அவர் நண்பர்தான் எழுதத் தூண்டியிருக்கிறார். அடுத்தநாள் – புதன் – கடைசி நாள். ‘இன்னைக்கு எழுதி நாளைக்கு அனுப்பணும். சான்ஸ் இல்லை’ என்றிருக்கிறார் சௌந்தர். ‘நீங்க எழுதுங்க. கொண்டு போய் சேர்த்தறது என் வேலை’ என்றிருக்கிறார் நண்பர்.

செவ்வாய் இரவு எழுதி, புதன் அதிகாலை நண்பர் அலுவலகத்தில் ஜன்னலைத் திறந்து போட்டுவிட்டு வந்துவிட்டாராம். நண்பர் சூரியன் அலுவலகத்திற்கு தொலைபேசி கேட்டு, புதன் மதியத்துக்குள் கோவை சென்று நேரடியாக சமர்ப்பித்து விட்டு வந்தாராம்.

”வைரமுத்து செலக்ட் பண்றாரோ இல்லையோ.. உங்க ஃப்ரெண்டு இவ்ளோ சிரமமெடுத்தார் பாருங்க உங்க கவிதைக்கு... அதுவே உங்களுக்கு கிடைச்ச பரிசுதான்” என்றேன். சரிதானே?

** **

ட்சி மாற்றம் நடந்தபின் நீதிமன்றம், வழக்குகள் என்று நிறைய காட்சிகள் நடப்பது வழக்கம். நித்தியானந்தா, ரஞ்சிதா கோஷ்டி ப்ரஸ் மீட், கமிஷனர் ஆஃபீஸ் என்று பிஸியாக இருக்கிறார்கள். நான் அவர்கள் சம்பந்தப்பட்ட பேட்டிகள், காட்சிகள் எதுவும் பார்க்கவில்லை. (அதாவது, இப்போது.) நேற்று ஒரு வார இதழில் ரஞ்சிதாவின் படத்தைப் பார்க்க நேர்ந்தது. நித்தி மேல் கோபத்தோடு கொஞ்சம் பொறாமையும் வந்தது. நல்லாத்தான் இருக்காங்க அம்மணி.

இந்த கோர்ட் சீன்களில் அயர்ச்சியைத் தருவது சமச்சீர் கல்வி தொடர்பான இவர்களின் பந்தாடல். நீதிமன்றம் சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஹைகோர்ட் தீர்ப்பு சொல்லிவிட்ட நிலையில், ‘இல்ல்ல்ல.. நாங்க சுப்ரீம் கோர்ட் போவோம்’ என்று அட்வகேட் ஜெனரல் டெல்லி கிளம்பி சென்று விட்டார் அப்பீல் செய்ய. குழந்தைகளை பள்ளியில் சேர்த்து ஃபீஸும் கட்டிவிட்டு ஒன்றும் அவர்கள் சொல்லிக் கொடுக்காமல் இப்படி இழுத்தடிப்பது எரிச்சலையே தருகிறது. அடுத்த வாரம் MID TERM எக்ஸாமாம். என்ன கேள்வி கேட்க என்று ஆசிரியர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாரோ சொன்னார்கள்.

எல்லா பெற்றோர்களும் ஒன்றாக இணைந்து புரட்சியில் இறங்காதவரை இதற்கு விடிவில்லை. சென்ற முறை ஏதோ கமிஷன் வாங்கிக் கொண்டு.. ச்சே... கமிஷன் அமைத்து இவ்வளவுதான் கட்டணம் என்றார்கள். ஒன்றும் பெரிய மாற்றமிருக்கவில்லை. இப்போது இது. விடிவே இல்லையா நமக்கு?

** **

தெய்வத்திருமகள் படம் பார்க்கும்போது இரண்டு மூன்று இடங்களில் தொண்டை அடைத்தது உண்மை. பெண்களும், குழந்தைகளுக்கும் கண்ணீர் வருகிறது. அந்த மாதிரி ஒரு காட்சியின் போது, முன் சீட் அம்மணி கைக்குட்டையை வாயில் அடைத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. ஒரு பெண்மணி கேவிக் கொண்டிருந்தார். (வீட்டில் என்ன ப்ரச்சினையோ...)

க்ளைமாக்ஸில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை. அவ்ளோ பெரிய மனிதருக்கு விக்ரமை வீட்டில் வைத்துக் கொள்வதில் என்ன ப்ரச்சினை? அனுஷ்கா தனியாக இருப்பாரே என்று அவரது ரசிகர்கள் கவலைப்படுவார்கள் என்று நினைத்தாரா.. அல்லது இந்த மாதிரியான உணர்ச்சிமயமான படத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியா?

** **

வழக்கம்போல சட் சட்டென சொல்ல வந்ததைச் சொல்ல முடிவதால் ட்விட்டரிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன்.

சில ட்விட்டர் அப்டேட்ஸ்:


‘நீ நடுத்தெருவுலதான் நிப்ப’ என்று திட்டுவாங்கியவர்கள்தான் இன்றைக்கு மினி பஸ் ஓட்டுனர்களாக இருக்கிறார்கள்.


பதிவுல கமெண்ட் மாடரேஷன் போல, மனைவி நம்மகிட்ட பேசறப்ப மாடரேட் பண்ண முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்? வேணுங்கறத மட்டும் ரிலீஸ் பண்ணிக்கலாம்!

தூங்கப்போகிறேன். நான்கு நாட்களாக ஒரு தொடர் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். இன்றைக்கு பகுதி 5. க்ளைமாக்ஸாக இருக்கலாம்.

இப்பல்லாம் துணையில்லாம யாருமே டூ வீலர் ஓட்றதில்ல. எல்லா வண்டிலயும் யாரோ ஒருத்தர் 'துணை'.

விஜய் TVயில் விளம்பரங்கள் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ச்சே! நடுநடுவே விஜய் அவார்ட்ஸ் என்று எதையோ போடுகிறார்கள்.

கலைஞர் TVயில் வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் என்று தெரியவில்லை.

கோபம் வந்தால் ஐந்து நிமிடம் அமைதியாக இருங்கள். #அடிங்... அது முடிஞ்சா நான் ஏண்டா கோபப்படப்போறேன்?

நாம் கேட்ட சரக்கைத் தராத டாஸ்மாக் உள்ளவரை தமிழகம் தன்னிறைவை அடைந்ததென்பதை ஏற்கமுடியாது.

‘ட்விட்டர்னால வீட்ல திட்டு வாங்கறவங்க கைதூக்குங்க’ன்னு யாரோ கேட்டிருந்தாங்க.. அப்ப ரெண்டு கையையும் தூக்கீட்டு இருந்ததால ட்விட்ட முடியல.


ட்விட்டரில் தொடர: http://twitter.com/#!/iParisal


** **



.

15 comments:

விக்னேஷ்வரி said...

போலீஸ்காரரையெல்லாம் ரசிக்கும் நீங்கள் ரசனைக்காரரா அவரா..
ஆமா, பொம்பளைப் போலிஸா... ;)

சீக்கிரம் கவிதையைப் போஸ்ட் பண்ணுங்க சார். நாங்களும் விசிலடிச்சுக் கை தட்டுவோம்ல.

ரஞ்சிதாவை சைட்டடிக்கற வயசா உங்களுக்கு.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. உமா...

படத்துக்குன்னு விமர்சனம் எழுதினப்பறம் இப்படித் தனியா அவியல்லேயும் சேர்த்து எழுதற அளவுக்கு உங்களைப் படம் பாதிச்சிருக்குன்னா படம் வெற்றி தானே..

ட்விட்டர் அப்டேட்ஸ் - சுவாரஸ்யம்.
TVயில் வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் என்று தெரியவில்லை. - இது டாப்!

கார்க்கிபவா said...

// க்ளோபல் வார்மிங் //

க்ளோபல் வார்மிங்க்கான‌
கார‌ண‌ங்க‌ளை
க‌ண்ட‌றிந்து
க‌ளைய‌ப் போகிறார்க‌ளாம்
க‌போதிக‌ள்.
க‌ண்ணே..எப்ப‌டி
காப்பாற்றுவ‌து உன்னை?

புன்னகை said...

//விஜய் TVயில் விளம்பரங்கள் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ச்சே! நடுநடுவே விஜய் அவார்ட்ஸ் என்று எதையோ போடுகிறார்கள்.// - Good one! :-)

//ரஞ்சிதாவை சைட்டடிக்கற வயசா உங்களுக்கு.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. உமா...// - இதை கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன் ;-)

அமுதா கிருஷ்ணா said...

திருப்பூரு போலீஸு ரொம்ப நல்லவுங்க.

ரஞ்சிதா பற்றி நானும் இப்படி நினைப்பது உண்டு.நித்தி மேட்சாகவே இல்லை.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நிறைய விபரங்கள்.
நான்கு ஐந்து பதிவுகளாக போட்டிருக்கலாம்.
வாழ்த்துக்கள்.

M.G.ரவிக்குமார்™..., said...

நாங்க தான் உங்களை Follow பண்றோம் நீங்க எங்களைப் பண்றதில்ல......அது சரி பிரபலம்னாலே அப்படித் தனே!

ILA (a) இளா said...

//வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் /
அட்டகாசம் :)

dharma said...

Arumai , I like your writing style.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நல்லாத்தான் இருக்காங்க அம்மணி.//
U too parisal ?
தெய்வத் திருமகள் நானும் விமர்சனம் பண்ணி இருக்கேன். டைம் இருந்தா பாருங்களேன்
http://venthayirmanasu.blogspot.com/2011/07/blog-post_17.html

R. Gopi said...

சௌந்தரை விசாரித்ததாக சொல்லவும்.

தெய்வத் திருமகள் முடிவு பற்றி,

விக்ரம் மகளுடன் அதே வீட்டில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அடுத்தடுத்த மாதங்களில் / வருடங்களில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தாத்தாவிடமும், சித்தியிடமும் அவளுக்குப் பகிர்ந்துகொள்ள நிறைய இருக்கும். விக்ரமுடன் இல்லை.

இரசிகை said...

twitter remba pidichathu......parisal....:)

Mahi_Granny said...

பரிசலுக்கு ரசனையாய் ஒரு போலீஸ்காரர் கிடைத்ததில் எனக்கு ஆச்சரியமில்லை. நித்தி ரஞ்சிதா பொறாமை ! மொத்தமுமே ருசியான அவியல் தான் .

சுசி said...

பஸ்ல படிச்சிட்டு இங்க கமண்ட மறந்துட்டேன்.

தமிழன் said...

'‘ட்விட்டர்னால வீட்ல திட்டு வாங்கறவங்க கைதூக்குங்க’ன்னு யாரோ கேட்டிருந்தாங்க.. அப்ப ரெண்டு கையையும் தூக்கீட்டு இருந்ததால ட்விட்ட முடியல.'

rendu kaiyum thookitirunthingala? Appadinaa ungalukku rendu veedaa?
sollavella!

சுரேகா.. said...

பழையபடி FULL FORM க்கு வந்திருக்க நண்பா!!

கலக்கு!

உன் ட்வீட்டுதான் சூப்பரு!!