Wednesday, May 11, 2011

திருப்பூரில் என்ன நடக்கிறது?

திருப்பூரில் என்னதான் நடக்கிறது என்று விரிவாக எழுத நிறைய இருக்கிறது. இப்போதைக்கு கொஞ்சம் மேலோட்டமாகப் பார்க்கலாம்.

சின்ன நிறுவனங்களெல்லாம் பூட்டுப் போடப்பட்டன. பெரிய நிறுவனங்கள் தங்கள் சில கிளைகளை நிறுத்திக் கொண்டன. சின்ன நிறுவனங்களுக்கு கொடுத்த ஆர்டர்களைக் குறைத்துக் கொண்டன. பல தொழிலாளர்கள் பணியிழந்தனர். இதுவரை லட்சத்துக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகள் முகவரி மாற்றத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். பல பள்ளிகளில் இந்த ஆண்டு முடிந்ததுமே மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறதாம்.

இதற்கெல்லாம் காரணம்?

ஒன்று: சாய ஆலைப் பிரச்சினை

சாய நீர்க்கழிவுகள் ஆற்று நீரில் கலப்பதால் பல விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்ததன் விளைவாக, நீராதாரம் பாதிக்கும் இச்செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததோடு சாயக் கழிவை முறையாக வெளியேற்றம் செய்ய திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கோரியது. அது அவ்வளவு எளிதானதாக இருக்க வில்லை. சுத்திகரிக்கப்பட்ட சாயக்கழிவு நீரை கடலில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு அரசைக் கோரியது. சுத்திகரிப்பை நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு அதற்கான இயந்திரங்களைப் பொருத்தி தங்கள் வேலையை முடித்துவிட்டன. ஆனால் கடலில் கலப்பது என்ற திட்டம் கூட ஓகே.. ஆனால் ZERO DISCHARGE எனப்படும் எந்த நாட்டிலுமே இல்லாத திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துகிறார்கள். ZERO DISCHARGE எனப்படுவது சாயக்கழிவை எங்கும் கலக்காமல் ஆவியாக்கும் திட்டம். கடலில் கலக்கும் திட்டத்திற்கு இரண்டாயிரம் கோடி செலவில் திட்டப்பணி தயாரான போதும் அரசு இதற்கான எந்த முடிவும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியவில்லை.

சாய ஆலைகள் பல மூடப்பட்ட நிலையில்- நிறுவனங்கள் பல, லூதியானா, ஃபரிதாபாத், அகமதாபாத், பாம்பே, கல்கத்தா, கூர்கான் போன்ற நகரங்களில் தங்கள் துணி சாயமிடும் பணிகளை மேற்கொண்டன. இதனால் திருப்பூரின் பல தொழிலாளர்கள் பணியிழந்தனர். துணி இல்லாததாலும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் சிலவும் பூட்டுப் போட்டன. பெரிய நிறுவனங்களும் நேரத்திற்கு துணி இல்லாததால், குறைவான பணி நேரத்தையே வழங்க முடிந்தது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பலர் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் சொந்த ஊருக்கே புறப்பட்டனர்.

இரண்டு: நூல் விலையேற்றம்

விலையேற்றத்தில் நூல் - தங்கத்தோடு போட்டி போட ஆரம்பித்தது. நூல் விலையைக் காரணம் காட்டி பல போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு கேண்டி (356 கிலோ) நூல் 18000 ரூபாயிலிருந்து மூன்றே மாதத்தில் ரூ. 67000ஐத் தொட்டது. இதனால் நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஒப்புக் கொண்ட விலைப்புள்ளியில் பனியன் ஏற்றுமதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர் வெளியேற்றங்கள் நிகழ்ந்தன.

இப்போது நூல் விலை கீழிறங்கத் தொடங்கியுள்ளது. ஒரு கேண்டி ரூ.42000/- வரை எட்டியுள்ளது. இன்னும் குறையும். எனின், நூற்பாலை அதிகமுள்ள ஆந்திரா போன்ற இடங்களில் அதெப்படி நூல் விலையைக் குறைக்கலாம்? நாங்கள் நூல் நெய்வதற்கான மூலப்பொருட்களை வாங்கியாகி விட்டது ஆகவே பழைய விலையிலேயே கொடுக்க வேண்டும் என்று வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றன. அதே நிறுவனங்கள் விலையேற்றத்துக்கு இந்த மாதிரிச் சொல்லவில்லை.

மூன்றாவதாக தொழிலாளர்கள் மனநிலையையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். திருப்பூரின் இந்தச் சூழலிலும் தங்கள் உற்பத்தியைப் பெருக்கி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிடும் மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்களது மனப்பாங்கு அந்த வாரத்திற்கான செலவுக்கு காசு கிடைத்தால் சரி என்பதிலேயே இருக்கிறது. நிறுவனங்கள் சம்பள உயர்வை அறிவித்து, உயர்த்திக் கொடுத்தாலும் அதன்மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொண்டு முன்னேறுபவர்கள் வெகு சிலரே. பலர், தேவையற்ற விடுப்பு எடுக்கவே சம்பள உயர்வைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் உற்பத்திக் குறைவு, பணத்தட்டுப்பாடு இரண்டையும் நிறுவனங்கள் சந்திக்கின்றன. தங்கள் திறன்பாட்டை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்க ஒரு சில தொழிலாளர்கள் பாடுபட்டாலும், ஆயத்த ஆடைத் தயாரிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதால் அது எந்தப் பயனையும் தருவதில்லை.




உதாரணத்திற்கு, ஓர் உற்பத்தி வரிசையானது 24 தையல் கலைஞர்களைக் கொண்டது என வைத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வடிவிலான ஆடைத் தயாரிப்புப் பணியைத் தொடங்கி, அது முடியும் வரை அதிலுள்ள அனைவரும் விடுப்பின்றி வந்தால், ஒரே அளவிலான உற்பத்திப் பெருக்கம் நடைபெறும். ஒரு குறிப்பிட்ட அளவு விடுமுறையோ, குறிப்பிட்ட அளவு சில தொழிலாளர்களின் பணிக்குறைவோ உற்பத்தியை பாதிக்காது. ஆனால் அந்த புதிய தயாரிப்பு ஆரம்பித்து முடிவடையும் இடைப்பட்ட காலத்தில் (ஆடை வடிவமைப்பைப் பொறுத்து ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரை ஆகலாம்) தேவையற்ற விடுப்புகள், குறைந்த அளவிலான திறன்பாடு ஆகியவற்றால் தொழிலாளர்களை மாற்றி மாற்றி அந்த புதிய வரிசையில் அமர வைத்தால் ஒருவாரத்தில் முடிய வேண்டிய அத்தயாரிப்பு இரண்டு வாரங்களுக்கு நீள்கிறது. இதெல்லாம் தொழிலாளர்கள் மனநிலையால் நிர்வாகம் சந்திக்கிற பிரச்சினைகள்.

ஆனால் இதையெல்லாம் தாண்டியும் திருப்பூர் பிழைக்குமா?

நிச்சயம் எழும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். நிலைமை சீராகி, வெளிநாட்டு வர்த்தகர்கள் தாங்கள் கேட்கும் விலைபுள்ளியை ஏற்றுக் கொண்டு பணியைக் கொடுக்குமென்கிறார்கள். அப்போது திருப்பூருக்கு மீண்டும் ஒரு திருப்பம் நிகழ்வது உறுதி என்கின்றனர்.


இந்த இடத்தில் ஒரு சம்பவம்.


சென்ற வாரத்தில் ஒரு நாள். சாலையில் சென்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னே ஒருவர் பைக்கில் மிகவும் மெதுவாக இடதுபுறக் கடைகளை நோட்டமிட்டபடியே சென்று கொண்டிருந்தார். பார்த்தால் பல வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த (பழைய)நிறுவனத்தில் தையற்கலைஞராக பணியில் சேர்ந்து, பின் காண்ட்ராக்டராக இருந்தவர்.

என்னைப் பார்த்ததும் ‘சார்.. நல்லா இருக்கீங்களா’ என்றபடி பைக்கை நிறுத்தினார். நானும் நிறுத்தினேன்.

“எப்படி இருக்கீங்க.. என்ன கடையைத் தேடிட்டிருக்கீங்க?” என்றேன்.

“இல்லைங்க.. ஆறேழு கிலோமீட்டர் வந்துட்டேன். நகை அடகுக் கடை எதாவது இருக்கான்னு பார்த்துட்டு. ஒண்ணும் இல்லை” என்றார்.

அன்றைக்கு சனிக்கிழமை. சம்பள நாள். காண்ட்ராக்டர்கள் தங்களிடம் பணி புரியும் 25-30 பேருக்கான சம்பளத்திற்காக அல்லாடும் நாள். அதுவும் சமீபத்திய நிலையில் நிறுவனங்கள் வாரச் சம்பளத்தை தாமதமாகவே தருகின்றன. ஆக அதைச் சமாளிக்க அடகுக் கடை தேடி அலைகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

‘ஒண்ணும் நிலைமை சரியில்லை இல்லியா? எப்படியாச்சும் இன்னைக்கு நீங்க சம்பளம் குடுத்துதானே ஆகணும்?’ என்று கேட்டேன்.

அவர் சொன்னார்: “இல்ல சார்.. நான் இப்ப காண்ட்ராக்டை விட்டுட்டேன். ஒரு வருஷமாச்சு.”

“ஓ…” – அப்ப வேலை இல்லாததால குடும்பத்தை சமாளிக்க அடகுக் கடை தேடறாரோ..?

என் எண்ணத்தில் இடைமறித்த அவர் சொன்னார்: ‘உங்களுக்குத் தெரிஞ்சு இந்த ஏரியாவுல எங்க அடகுக்கடை இருக்கு சார்?’ என்று கேட்டார்.

நான் சொன்னேன். “பானு மெடிக்கல் பக்கத்துல ஒண்ணு பார்த்தேன். அத விட்டா KVB தாண்டி ஒரு கடை பார்த்தமாதிரி ஞாபகம்”

“சரிங்க சார்.. அதே மாதிரி பார்த்தீங்கன்னா – உழவர் சந்தைக்கு எதிர்ல டாஸ்மாக் இருக்கு. பக்கத்துல எந்த புரோட்டா கடையும் இல்லை இல்லீங்களா?:” என்றார்.
இது சம்பந்தமில்லாத கேள்வியாகப் பட்டது எனக்கு. அடகுக் அடை தேடிக் கொண்டிருந்தவர் திடீரென்று புரோட்டாக் கடை பற்றி விசாரிக்கிறாரே என்று.

“தெரியலைங்க.. ஆமா.. எதுக்கு அடகுக்கடையும், புரோட்டா கடையையும் தேடறிங்க?”

“இல்ல.. திருப்பூர் டௌனாய்ட்டு வருது சார்.. இந்த காண்ட்ராக்ட் வேலையெல்லாம் ஆகாது இனி நமக்கு. இந்த ஏரியாவுல ஒரு அடகுக்கடையும், டிஃபன் ஸ்டாலும்நானும் அண்ணனும் சேர்ந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் சார்.. அதுதான் தேடறேன்”

ஆறேழு வருஷத்துக்கு முன் இரு சக்கர வாகனம் கூட இல்லாமல் திருப்பூர் வந்தவர். ‘சான்ஸ் கிடைச்சா போதும் சார்.. வேலையைக் கத்துகிட்டு நான் என் வாழ்க்கைல நல்ல இடத்துக்கு போவேன்’ என்றவர். இன்றைக்கு சொந்தத் தொழில் ஆரம்பிக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருந்தது.

இவரைப் போல உழைப்பாளர்களை கொண்டாடும் நகரம் திருப்பூர். இவரைப் போன்றவர்களால் முன்னேறியதுதான் திருப்பூர். ஆகவே இதற்கு அழிவில்லை.


.

16 comments:

அமுதா கிருஷ்ணா said...

நிச்சயம் நிலைமை மாற வேண்டும்.

ஷர்புதீன் said...

திருப்பூரில் ஆறுமாதம் பணிபுரிந்தவன் என்ற வகையில் திருப்பூர் பற்றிய அக்கறையை எனக்கும் உண்டு., மீண்டு வரும், தொழிலும், திருப்பூர் மனிதர்களும்!

நாகராஜ் said...

நிச்சயம் எழும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். நிலைமை சீராகி, வெளிநாட்டு வர்த்தகர்கள் தாங்கள் கேட்கும் விலைபுள்ளியை ஏற்றுக் கொண்டு பணியைக் கொடுக்குமென்கிறார்கள். அப்போது திருப்பூருக்கு மீண்டும் ஒரு திருப்பம் நிகழ்வது உறுதி என்கின்றனர்.

யுவர் ஆனர் பரிசல் மாற்றம் வரும் என்பதை திருப்பம் வருமென குறிப்பிட்டுள்ளார்

அவருக்கு ஒரு பச்சை சட்டை பார்சல் !

நிகழ்காலத்தில்... said...

\\திருப்பூரின் இந்தச் சூழலிலும் தங்கள் உற்பத்தியைப் பெருக்கி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிடும் மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்களது மனப்பாங்கு அந்த வாரத்திற்கான செலவுக்கு காசு கிடைத்தால் சரி என்பதிலேயே இருக்கிறது.\\

அன்றாடம் சந்திக்ககூடிய முக்கிய பிரச்சினை இது. அவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் இன்னும் சாதிக்கலாம். ஆனால்...?

தராசு said...

பரிசல் அண்ணே,

தொழிலாளர்களின் மனநிலை மாறி வருகிறது.
நான் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கடை நிலை தொழிலாளியாக என் வேலையை தொடங்கிய பொழுது, எங்களுக்கு இருந்ததெல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் வேலை செய், நல்ல சாப்பாட்டுக்காக தேடு, உழைத்த களைப்பை போக்க தூங்கு, வார ஓய்வு நாட்களில் ஒரு சினிமா என மிகக் குறைந்த ஒரு வட்டம் மட்டுமே.

ஆனால் இன்று ஒவ்வொரு தொழிலாளியின் கணிசமான நேரத்தை, செல் போன்கள் சாப்பிட்டு விடுகின்றன, அது போக தொலைக்காட்சி/சினிமா, டாஸ்மாக் .,,,இன்னும் பல பொழுது போக்கு அம்சங்கள்....
இவையெல்லாவற்றிற்கும் மனிதன் நிரந்தர அடிமையாகி கிடக்கிறான். ஆக இதை அனுபவிப்பதற்கு மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்கிறான்.
நீங்கள் சொல்கிறீர்களே...
//திருப்பூரின் இந்தச் சூழலிலும் தங்கள் உற்பத்தியைப் பெருக்கி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிடும் மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்களது மனப்பாங்கு அந்த வாரத்திற்கான செலவுக்கு காசு கிடைத்தால் சரி என்பதிலேயே இருக்கிறது.//

இது திருப்பூரில் மட்டும் என்று இல்லை, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், தினக் கூலி தொழிலாளர்களின் நிலை இப்படித்தான் கேவலமாக மாறியுள்ளது.

செல்வம் said...

பரிசல்....

திருப்பூரின் நிலையை சுருக்கமாகவும், சரியாகவும் சொல்லியிருகிறீர்கள். சென்ற மாதம் வரை நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆர்டராவது வரும். இப்போது சுத்தமாக ஒன்றும் இல்லை. ஆனால் நான் பேசிக்கொண்டிருக்கும் பலரும் நம்பிக்கையோடு சொல்வது....”மறுபடியும் எழுந்துருவோம் சார்”

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது இந்தியாவில், மிகப் பெரிய நிறுவனங்கள் பலவும் சரிவை நோக்கி,
"பணக்காரர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் கூடிக் கொண்டிருக்க
ஏழைகளின் எண்ணிக்கை லட்சங்களில் கூடுவதாக " படித்த நினைவு. பலரது பணம் ஒரு இடத்தில் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது.
நம்பிக்கை தானே வாழ்க்கை, நிமிர்ந்து விடுவோம் என்று நம்புவோம்

☼ வெயிலான் said...

விக்ரமன் படம் பார்த்த மாதிரி இருந்தது பதிவு படிச்சு முடிக்கும் போது.

முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளைக் குறைத்து எழுதியிருக்கிறீர்கள். நன்றாயிருக்கிறது.

Unknown said...

//திருப்பூருக்கு மீண்டும் ஒரு திருப்பம் நிகழ்வது உறுதி //

நம்பிக்கை தான் வாழ்க்கை.

Haseen said...

h

நிழற்குடை said...
This comment has been removed by the author.
தமிழன் said...

Naanum tirupur vaasi than.. nilamai kandipaga maarum.. Maatram ondru matume maatramea illathathu.. Tirupurai nambinar kai vida padaar..

சுரேகா.. said...

சூப்பர்யா! உண்மையிலேயே...நண்பன் சத்யாவிடம் இதுபற்றி பேசிவிட்டு, அந்த நினைப்பிலேயே ஒருவாரம் இருந்தேன். நான் எப்படி எழுதலாம் என்று நினைத்தேனோ,அதைவிட விளக்கமா, அழகா எழுதியிருக்க!

ஆழமான, புரிதல் தரும் கட்டுரை!!

Unknown said...

நண்பரே நீங்கள் திருப்பூரின் தொழிலாளர்களைப் பற்றி எழுதியுள்ளீர்கள், இதற்கு இன்னொரு மறுபக்கமும் இருக்கிறது. நொய்யலாற்று விவசாயிகள் 14 வருடமாக நீரின்றி அவதிபடுகின்றார்கள். 2003இல் சாய கழிவு நீர் பிரச்சனை தொடர்பாக இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது 80 MLD கழிவு நீர் நொய்யலாற்றில் ஓடியது. கடந்த 30.06.2011 அன்று நான் மங்களத்தில் நொய்யலாற்றை எடுத்த புகைப்படம் இதோ http://twitpic.com/show/thumb/5s0ozj.jpg. அதில் ஆறு வறண்டு போய் இருப்பதை நீங்கள் காணலாம்.அதே நாளில் 140 MLD கழிவு நீர் 2700 TDS உடன் ஓடியதாக ஒரத்துபாளையம் அணையில் எடுக்கபட்ட PWDஇன் கணக்கு கூறுகிறது, இன்னும் ஓடுகிறது.சாயபட்டரைகள் மூடியபோதும் எப்படி ஓடுகிறது என்பதற்கு இன்னும் பதில் இல்லை. இன்னும் விவசாயிகள் பாடு விடியவில்லை

maithriim said...

நீங்க பாசிடிவ் ஆக எழுதியிருந்தும் உங்கள் பதிவை படிக்கும் போது மனம் கனக்கிறது. மின்சாரப் பற்றாக் குறையினாலும் பல சிறு தொழில்கள் தமிழ்நாடு எங்கும் பாதிக்கப் பட்டிருக்கின்றன.
amas32

சு.சிவக்குமார். said...

\\திருப்பூரின் இந்தச் சூழலிலும் தங்கள் உற்பத்தியைப் பெருக்கி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிடும் மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்களது மனப்பாங்கு அந்த வாரத்திற்கான செலவுக்கு காசு கிடைத்தால் சரி என்பதிலேயே இருக்கிறது.\\

இந்த கருத்து மற்றும் சற்று நெருடலாகயிருக்கிறது.நிறுவனம் தனக்கு ஒரு பிரச்சனை என்றவுடனேதான் அதிக கூலி கொடுக்க வருகிறதே ஒழிய மற்ற காலங்களில் அது எப்படி நடந்துகொள்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.ஒவ்வொரு தீபாவளிக்கும் தன்னுடைய ஊக்கத்தொகையை (போனஸ்) போராடித்தான் பெறவேண்டியிருக்கிறது அவர்களுக்கு.சமீபத்தில் நடைபெற்ற சம்பள உயர்வுக்கும் கூட அவர்கள் போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. இன்றைய திருப்பூரின் வளர்ச்சி முற்றிலும் தொழிலாளர்களின் உழைப்பினால் மட்டுமே சாத்தியமானதாகும்.ஆனால் அவர்களுக்கான நியமான சம்பள உயர்வைக்கூட அவர்கள் போராடித்தான் பெறவேண்டியிருக்கிறது.10 வருடங்களுக்கு முன்பு வரை இரவு / பகல் பாராமல்,தீபாவளி,பொங்கல் நாட்களிலும் கூட தங்கள் உழைப்பை கொடுக்கத்தவறியதில்லை...அப்படியிருக்கையில் அவர்கள் விசயத்தில் திருப்பூரின் எத்தனை நிறுவங்கள் நியாயமாக நடந்துகொண்டன.ஒரு பொது வேலை நிறுத்தத்தில் இன்று கூட எல்லா நிறுவங்களும் ஒட்மொத்தமாக கைகோர்ப்பதில்லை.தொழிலாளிகளும் நாம் வாழும் இதே காலகட்டத்தில் பள்ளிக் கட்டண உயர்வு,மிண் கட்டண உயர்வு, பேருந்துக்கட்டண உயர்வு,பால் விலை உயர்வு என எல்லா கட்டண உயர்வுகளோடும் தன் பிள்ளை குட்டிகளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கையில் அவன் எப்படி அந்த வாரத்திற்கு மட்டும் போதுமென்று உழைக்க முடியும்.இத்தனைக்கும் அவனுக்கு மாதவருமானம் போன்று நிரந்தர வருமானம் கிடையாது. அப்படியிருக்கையில் எப்படி அவன் தன் குடும்பத்தை நடத்த இயலும்.