Saturday, August 2, 2014

வரம்!

அலுவலகத்தில் சிலபல டென்ஷன்ஸ். சிரிக்க மறந்து நாளாகிவிட்டது. மெய்ல், வாட்ஸப் நட்பு வட்டங்களிலிருந்து நான் ஒதுங்கி - அவர்களும் என்னை ஒதுக்கி - மாதங்களாயிற்று. சம்பிரதாய ஹலோ ஹாய்களுடன் கழிகிறது காலம். புன்னகைக்கு பதில் டார்கெட்களும், கைகுலுக்கல்களுக்குப் பதில் கமிட்மெண்ட்களுமாய் இடமாறிவிட்டிருக்கிறது காலச்சுவடில். ‘படிக்க நேரமில்லையா.. சிரிக்க நேரமில்லையா..’ என்றொரு காலத்தில் எதிர்ப்படுவோரிடமெல்லாம் கேட்டவனுக்கு ‘இதற்கெல்லாம் நேரம் மட்டுமில்லை, மனதும் சூழலும் வாய்க்க வேண்டும்’ என்று எதுவோ உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் அதேபோன்றதொரு மனதுடன் வீடடைந்து, வழக்கமாய் ரெகார்ட் ஆகியிருந்த மகாபாரதம், சூப்பர் சிங்கரைப் பார்க்க ஆரம்பித்தேன். வாழ்வே குழம்பியிருக்க, பாரதம் சீரியலில் - அர்ஜுனனை - குழப்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணர். முடிந்ததும் சூப்பர் சிங்கர்.

அசுவாரசியமாய்ப் பார்த்துக் / கேட்டுக் கொண்டிருந்த என்னை நிமிரச் செய்தது செந்தில்நாதன் வருகை.

வந்தவர், ‘பத்ரி, ஏஞ்சலின்னா யாரு?; என்கிறார். அவருக்கு எல்லாருமே பத்ரிதான்.

ஓடிவருகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். சூப்பர் சிங்கரின் டாப் 20 போட்டியாளர். அவர் கையைப் பற்றி, வருடியபடி கேட்கிறார் செந்தில்நாதன்:-

“ஏஞ்சலினுக்கு டெல்லிக்கு ராஜான்னாலும் தெரியுமா?”

“தெரியும்” - ஏஞ்சலின்.

“பாடு?”

பாடுகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். அவ்வளவுதான். செந்தில்நாதன் ‘க்ளுக்’ என்றொரு சந்தோஷ ஒலியை வெளிப்படுத்துகிறார். அடுத்த நிமிஷம் தொட்டு நாலு வரிகளை அவர் பாடும் வரை, துள்ளிக் குதிக்கிறார் செந்தில்நாதன். தாங்கமுடியாத மகிழ்ச்சி என்பார்களே.. அதைப் பார்க்க முடிகிறது அவர் முகத்தில், உடல் மொழியில். கால்கள் தரையில் நிற்க மறுத்துக் குதிக்கிற சந்தோஷம்.

செந்தில்நாதனைத் தெரியாதவர்களுக்கு:-

கண்கள் தெரியாது. மனவளர்ச்சியில் குன்றியவர். பெற்றவர்கள் விட்டுவிட்டுப் போய்விட எடுத்து வளர்த்தவர்கள் யாரோ. அவர்களில் தான் தாயாய் பாவித்து வந்தவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அவர் இறந்துவிட்டாரென்பதையும் இவரால் புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும் நடுவில் ஒரு பாடல் அவருக்களிக்கும் மகிழ்ச்சி அளப்பரியது.

நமக்கு?

தோசைக்கு வைத்த சட்னியில் கொஞ்சம் கடுகில்லை என்பதெல்லாம் பெரிய பிரச்சினையாகிவிடுகிறது.

செந்தில்நாதனாய் இருப்பதும் வரம்தான். என்ன, அது செந்தில்நாதனுக்குத் தெரிவதில்லை.
.

Friday, February 7, 2014

நேர்மைடா!

வன் அந்தக் கடையை விட்டு வந்தபோது வெளியே நின்றிருந்தார் ஒருவர். பழுப்பேறிய மேற்சட்டை. கிழிந்த பேண்ட்.

இவனைப் பார்த்ததும் அருகே வந்தார்.

“ப்ரதர்..”

நல்ல தெளிவான உச்சரிப்பு.

“ப்ரதர்... அந்தக் கடையில சாப்பிடறதுக்கு எதாவது வாங்கித் தர முடியுமா?”

அவர் கைகாட்டிய திசையில் ஒரு கையேந்திபவன்.

இவன் சில கணம் யோசித்தான்.

“காசு வேணாம் ப்ரதர். பசிக்குது. சாப்பிட ஏதும் வாங்கித் தாங்க”

அவர் கை, தானாக அவரது வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தது.

இவன் யோசித்து ஓர் இருவது ரூவாய்த் தாளை எடுத்தான்.

“இந்தாங்க... ஆனா.. இங்க பாருங்க.. சிகரெட், ட்ரிங்க்ஸுன்னு வாங்கக் கூடாது ஆமா..” - சொன்னான்.

“நோ ப்ரதர்... நீங்களே வாங்கிக் குடுங்க”

இவன் தலையாட்டினான்.

“இல்லல்ல... வாங்கிக்கோங்க. ஆனா இந்தக் காசுல..”

”சிகரெட்.. ட்ரிங்ஸ் வாங்க மாட்டேன் ப்ரதர். ப்ராமிஸ்” என்றார்.

இவன் அவர் கையில் காசைக் கொடுத்து விட்டு சற்றே தூரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனம் நோக்கிப் போனான். போகும்போது திரும்பித் திரும்பி அவரைப் பார்த்தபடியே இருந்தான்.

அந்தக் கையேந்தி பவன் கைவண்டியில் எதுவோ அவர் ஆர்டர் செய்வதும், அவர்கள் பார்சல் பேப்பர் எடுப்பதும் தெரிந்தது.

இவனது வாகனத்தில் அருகில் சென்று, சாவியைக் கொடுத்து வாகனத்தை திருப்பிக் கொண்டிருக்கும்போது அவர் கையில் சிறு பார்சலோடு திரும்புவதைப் பார்த்தான்.

இவன் வாகனத்தில் ஏறி, ஸ்டார்ட் செய்ய எத்தனிக்கும்போது, அவர், பூட்டப்பட்டிருந்த - சற்றே இருட்டிய கடை ஒன்றின் முன் அமர்வதைக் கண்டான்.

இவன் வாகனத்தை ஸ்டார்ட் செய்து நான்கைந்து அடி தாண்டி, ஒரு முறை திரும்பிய போது - கவனித்தான்.

அவர், தன் சட்டையை உயர்த்தி, இடுப்பிலிருந்து ஒரு மது பாட்டிலை எடுத்து மூடியைக் கழட்டிக் கொண்டிருந்தார்.

சற்றே ரௌத்ரம் தலைக்கேற, வண்டியை அவர் அமர்ந்திருந்த கடை முன் செலுத்தி, அவர் அருகே நின்றான்.

அவர் -பாட்டிலை உயர்த்திக் காண்பித்து,  கொஞ்சம் உரத்த குரலில்  சொன்னார்:

“ப்ரதர்... டோண்ட் வர்ரி.. இது உங்க காசுல வாங்கினதில்லை...”

.

Monday, August 12, 2013

தொலைந்த பழக்கங்கள்

என் புத்தகவாசிப்புப் பழக்கம் சமீபமாக கன்னாபின்னாவென்றுதான் இருக்கிறது. சமீபமாக என்றால் சமீப வருடங்களாக. முன்பெல்லாம் ஒரு புத்தகத்தை முடிக்காமல் இன்னொரு புத்தகத்தைத் தொட மாட்டேன். இப்போது ஒரே சமயத்தில் இரண்டு (அ) மூன்று புத்தகங்கள். மூடுக்குத் தக்க, மாற்றி மாற்றிப் படிக்கிறேன்.

காட்சி. 1: நண்பருடன் ஹோட்டல் ஒன்றுக்குப் போனபோது, மேற்கு நோக்கி வைக்கப்பட்டிருந்த கிழக்கு புத்தக ஸ்டாண்டை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அவர் பில் கொடுக்க பணம் நீட்டியபடி, ‘புக் ஏதாவது எடுக்கறியா?’ என்றார். கவனித்தால், அவர் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டு. ஆஹா என்று, ரொம்ப நாட்களாக வாங்க நினைத்த ‘ராஜிவ் கொலை வழக்கு’ புத்தகத்தை எடுத்துக் கொண்டேன்.

காட்சி. 2: சில தினங்களுக்கு முன் பாராக்குப் பார்த்தபடி பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து கொண்டிருக்க, NCBHன் மாபெரும் புத்தகக் கண்காட்சி (அப்படித்தான் போட்டிருந்தது) என்றொரு போர்டைப் பார்த்தேன். 20X20 ஸ்டாலில் கொஞ்சம் புத்தகங்கள். டாஸ்மாக்கைக் கண்ட குடிகாரன் போல உள்ளே நுழைந்து, ழுத்தாளர் பாராவின் கொசு, மற்றும் சொக்கனின் திருப்பு முனைகள் இரண்டையும் எடுத்து வந்தேன். பாராவின் அரசியல் நாவல் எப்படி இருக்குமென்ற ஆர்வம். சொக்கனின், இந்தப் புத்தகம் ஆஃபீஸில் சில மீட்டிங்கில், சில காக்காக் கூட்டத்தில் பேச உதவும். (ஸாரி ஜெமோ!) ‘பாருய்யா.. எப்படி இருந்தவங்க இப்டி ஆய்ட்டாங்க’ என்று உதாரணங்கள் சொல்லி கைதட்டல் வாங்க. ஆகவே வாங்கினேன். (கொசுறு: நேரில் குடும்பத்தோடு சந்தித்திருந்தாலும், சொக்கனின் வெற்றி ரகசியம், இந்தப் புத்தகத்தின் பின்னட்டையைப் படிக்கும்போதுதான் தெரிந்தது. அவர் மனைவி பெயரும் உமாவாமே?)

ஆக, மேற்கண்ட மூன்று புத்தகங்களோடு எங்கள் திருப்பூர் நூலகமான, சேர்தளத்திற்கு கொடுத்து திரும்ப எடுத்து வந்த - நான் படிக்காமல் இருந்த - ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ புத்தகமும் சேர்ந்து நான்கு புத்தகத்தையும்தான் சமீப வாசிப்பிற்கு எடுத்திருக்கிறேன்.

இதில் திருப்புமுனைகள் அவ்வப்போது தொட்டுக் கொள்கிறேன். கொசு இன்னும் ஆரம்பிக்கவில்லை. திடீரென்று இரண்டு நாள் முன்பு ‘ராஜிவ் கொலை வழக்கை’ எடுத்தேன். அப்ப்ப்ப்ப்பா! இதோ – சற்று முன்தான் படித்து முடித்து வைத்தேன். அவ்வளவு ஸ்பீடாக படிக்க முடிந்தது. ஒரு க்ரைம் நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் – நிஜத்தில் நடந்ததைப் படிக்க ஆவலாகவே இருக்கிறது.

புத்தகத்தில், என்னை பாதித்த / கவர்ந்த விஷயம், நாட்டில் அங்கங்கே நடக்கும் - நாம் சின்னச் சின்னதென்று நினைக்கும் - சிலபல அத்துமீறல்களுக்கு எத்தனை விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதே. அதுவும் இந்திராகாந்தி கொலைக்கு முன்பே, எச்சரிக்கையாக உளவுத்துறை எடுத்த ஒரு நடவடிக்கையையும் – அது மீறப்பட்டதால், அவர் உயிரிழக்க நேரிட்டதையும் படித்தபோது சிலிர்த்தது.

ஆனால் – நான் இங்கே எழுத ஆரம்பித்தபோது - சொல்ல வந்த விஷயம் அதைப் பற்றியல்ல. இன்னொன்று.

ராஜிவ் கொலை வழக்கு புத்தகத்தை கடகடவென்று இரண்டு தினங்களில் முடித்தேன். புத்தகம் தந்த சுவாரஸ்யத்தால், செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்றேன். அப்போது நடந்த ஒரு சம்பவத்தையே பகிர நினைத்தேன்.

சனிக்கிழமை குடும்பத்தோடு திருப்பூர் பிக்பஜாருக்குச் சென்றிருந்தோம். கையிலிருந்த புத்தகத்தை, ட்ராலியில் – குழந்தைகளை அமர வைப்பார்களே – அந்த இடத்தில் வைத்திருந்தேன். பில் போடும் இடம் வந்ததும் – பொருட்களை கவுண்டரில் வைத்துவிட்டு, ட்ராலியை விட்டுவிட்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, மகளுக்காக வெளியே பானிபூரிக்காரரிடம் கைநீட்டிக் கொண்டிருக்கும்போது இடதுமூளையில் சடாரென்று, ‘ராஜிவைக் கொல்ல வந்த மனிதவெடிகுண்டு தனு, சென்னை பூம்புகாரில் சந்தனமாலை வாங்கியபோது - அதற்கான ரசீதை எழுதியவர் பிற்பாடு எவ்வளவு வருந்தியிருப்பார்’ என்றொரு சம்பந்தமில்லா சிந்தனை வந்தோடியது. அந்த சிந்தனை வந்ததுமே, ‘ஐய்யோ.. அந்த புக் எங்கே வைத்தோம்’ என்று பதறியது மனது.

பானிபூரியை வாங்கிக் கொண்டு, மீராவிடம் கொடுத்துவிட்டு, ‘அந்த புக் எங்கே’ என்று கேட்டேன். அம்மா, மகள்கள், உமா உட்பட எல்லாருமே என்னை எரித்துவிடுவது போல பார்த்தனர். ’நீதாண்டா வெச்சிருந்த? தொலைச்சுட்டியா?’ என்று சொன்னது பார்வை. ‘எதுக்கும் அந்த பேக்ல பாருங்க’ என்றேன். மளிகைப் பொருட்களைக் கலைத்துப் பார்த்தும் கிட்டவில்லை.

சடாரென்று ட்ராலிகள் அடுக்கப்பட்டிருந்த இடத்திற்கு ஓடினேன். குனிந்து எங்கேனும் இருக்கிறதா என்று தேடினேன். ம்ஹும். பதட்டமாக திரும்பி வந்தபோது, ‘இருக்கு’ என்று உமா சொல்வது கேட்டது.

‘இருக்கா? கெடச்சுட்டுதா?’ என்றேன்.

‘இல்லல்ல. ஐஸ்க்ரீம் இருக்குமான்னு மேகா கேட்டா. அதான் உள்ள இருக்குன்னு சொல்லீட்டிருந்தேன்’ என்றார் கூலாக.

நான் மறுபடி அங்கே இருந்த இரண்டொரு செக்யூரிட்டிகளிடம் விசாரித்தேன். ‘நஹி மாலும் சார்’ என்ற பதில் வந்தது.

பில்லிங் கவுண்டர் அருகே ட்ராலியை விட்ட இடம், வெற்றாகக் காட்சியளித்தது. (‘ட்ராலியெல்லாம் அங்க தள்ளீட்டுப் போய்டுவாங்க சார்’)

திரும்பி வந்து மீராவிடம் வெளியே சிலர் தள்ளிக் கொண்டுபோய் வைத்திருந்த நான்கைந்து ட்ராலிகளைக் காட்டி, ‘அதுல இருக்கான்னு பாரு’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினேன்.

உள்ளே போய் எல்லாரும் தள்ளிக் கொண்டிருந்த ட்ராலிகளையெல்லாம் சந்தேகக்கண்ணோடு பார்த்தபடியே போய்க் கொண்டிருந்தேன். பதினைந்து நிமிடங்கள் கழித்து நம்பிக்கை இழந்து வெளியே வந்தபோது, எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

“என்னாச்சு? கிடைச்சுதா?”

“இருந்துச்சுப்பா” என்றாள் மீரா. ‘நீங்க சொன்ன வெளி ட்ராலில வெச்ச மாதிரியே இருந்துச்சு’

அப்போதுதான் எனக்கு மூச்சு வந்தது. இருந்தாலும் ஒரு மாதிரி அமைதியாகவே இருந்தேன். ’அதெல்லாம் தொலையாதுன்னு எனக்குத் தெரியும்க. புக்கெல்லாம் யார் எடுக்கப்போறா?’ என்றார் உமா.

‘ராஜிவ் கொலை வழக்கு’ன்னு தலைப்பு பார்த்து பயந்து எடுக்காம இருந்திருக்கலாம்’ என்றேன் நான்.

இருந்தாலும், -

இப்படி ஒரு புத்தகம் கிடந்தும் தொலையவில்லையே, யாரும் எடுக்கவில்லையே என்ற வருத்தம் இருந்ததென்னவோ உண்மைதான். 

.