Monday, July 25, 2011

அப்பாவின் சைக்கிள்

ப்போதும் எங்கும் நடந்தே செல்லும் குடும்பம்தான் எங்களுடையது. மோட்டார் வாகனங்கள் வாங்கும் எண்ணமோ, வசதியோ கிஞ்சித்தும் இருக்க வில்லை. சைக்கிள் வாங்குவோம் என்று கூட நினைத்ததில்லை ஒரு கட்டத்தில்.

அப்பாவுக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதிலிருந்து இருந்தது என்று என்னால் கணிக்க முடியவில்லை. அப்பாவுக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தது. உடுமலை தளி ரோட்டில் சரஸ்வதி ஏஜன்சீஸில் வாங்கும் டி ஏ எஸ் பட்டணம் பொடிதான் அவர் ஃபேவரைட் ப்ராண்ட். அதற்காக தளி ரோட்டில் நானும் அவரும் நடந்து செல்வதுண்டு. அப்போதெல்லாம் எதிரிலிருக்கும் சைக்கிள் கடை ஒன்றை அவர் பார்ப்பதை கவனித்திருக்கிறேன்.

ஒரு நாள் அந்தக் கடைக்கு என்னை அழைத்துச் சென்றார். வெளியிலேயே சைக்கிள்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருக்கும். கடைக்குள் அப்பா அழைத்துப் போனதே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சைக்கிள் விலைகளைக் கேட்டறிந்து வந்தார். அதன்பிறகு சில மாதங்கள், அந்தப் பேச்சே இருக்கவில்லை. ஆனால் அவர் மனது முழுதும் அந்த சைக்கிளை வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கக் கூடும்.

திடுமென்று ஒரு நாள் சைக்கிளோடு வீட்டுக்கு வந்தார். அப்பா சந்தோஷமாக சிரித்தபடி இருந்த தருணங்களை நினைவுகூர்ந்தால் இந்த சைக்கிள் வீட்டுக்கு வந்த தினமும் ஒன்று. முகமெல்லாம் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு இருந்தது. ஒரு நாள் விடாமல் தினமும் துடைத்து வைப்பார். சைக்கிளுக்கு பெல் மாட்டிவந்தது, டைனமோவை இயக்கி லைட் எரிவதை எங்களுக்குக் காண்பிப்பது என்று சந்தோஷமான தினங்கள் அவை.

ஆரம்பநாட்களில் அவர் சைக்கிளை கொஞ்சம் தயக்கமாகவேதான் ஓட்டினார். யாராவது எதிரில் வந்தால் முடிந்த அளவு ஒதுங்கிவிடுவார். நாளாக நாளாக எங்களையும் அழைத்து டபிள்ஸ் போக ஆரம்பித்தார்.

சைக்கிள் வாங்கி சிலபல மாதங்கள் கழித்து சைக்கிளின் செய்ன் கவரில் K.R.Balasubramanian என்று தன் பெயரை உடுமலை ராயல் ஆர்ட்ஸில் சொல்லி எழுதிக் கொண்டார். தினமும் துடைக்கும்போது அதையும் கர்மசிரத்தையாக துடைப்பார். சைக்கிள் ரிம், செய்ன் கவரின் பின்பக்கம், மர்காட் என்று அவர் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து துடைத்துக் கொண்டிருப்பார். (பின்னாளில் என் தம்பி அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்ததும் அவன் பெயரைச் சுருக்கி எழுதிக் கொடுத்தேன்.)







நான் கொஞ்சம் பெரியவனானதும் என்னை சைக்கிளை எடுத்துச் செல்ல அனுமதித்தார். ஒரு டிசம்பர் 31 அன்று அதை எடுத்துக் கொண்டு போய் நண்பர்களோடு இருந்துவிட்டு இரவு 1 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். இருட்டில் முள்ளில் விட்டதில் டயர் பஞ்சர். அடுத்த நாள் அப்பா சைக்கிளை எடுக்கப் போனபோது பார்த்து, பஞ்சர் ஒட்ட காசில்லாமல் நடந்தே அவர் வேலைக்குப் போனார். திட்டியிருந்தாலும் தேவலாம். ஒன்றுமே சொல்லவில்லை. இரண்டு தினங்கள் கழித்துதான் பஞ்சர் ஒட்டப்பட்டது.


ஊருக்குப் போகும்போதெல்லாம் அந்த சைக்கிளை ஒரு பாசப்பார்வை பார்ப்பதுண்டு. எடுத்து ஓட்டுவதும் உண்டு. தம்பிதான் அதை உபயோகித்துக் கொண்டிருக்கிறான். சமீபத்தில் போனபோது சைக்கிள் அருகே ஒரு யமஹா RX நின்று கொண்டிருந்தது. தம்பியின் நண்பனுடையது என்றான்.

நானும் எப்போது போனாலும் என் பைக்கை அந்த சைக்கிளை விட்டு கொஞ்சம் இந்தப் பக்கமாகத்தான் நிறுத்துவேன். என்ன ஆனாலும் அதற்கு ஈடாகாது என்பது என் மனது சொல்கிற பாடம்.

ஆனால் - எப்போது அந்த சைக்கிளைப் பார்த்தாலும் எனக்கு இடறும் விஷயம் ஒன்று உண்டு.

என்னையும் என் தம்பியையும் தவிர, என் பெரியம்மா மகன் கிருஷ்ணமூர்த்திதான் அப்பாவுடன் அதிகமாக சைக்கிளில் டபிள்ஸ் போனது. அதே போல சொந்தக்காரர்கள் வீட்டிலிருக்கும் எல்லா குழந்தைகளும் அப்பாவின் சைக்கிள் பின்னால் அமர்ந்து சவாரி சென்றிருக்கிறார்கள். ஆனால், எத்தனை முறை யோசித்தாலும் அப்பா, அம்மாவை வைத்து சைக்கிளில் போனதாய் என் நினைவிலேயே இல்லை. அம்மாவை அவர் சைக்கிளில் உட்காரவைத்துச் சென்றதே இல்லை.


.

Friday, July 22, 2011

ஐந்து நிமிடம் ப்ளீஸ்....

‘வாழ்க்கையில என்ன இருந்து என்னா ஆவப்போவுது.. ஒரு தம்பி - தங்கச்சி இல்லாம போயிடுச்சே’

‘எனக்கு இருக்குற திறமைக்கு என் கிட்ட ஒரு பிள்ளையை குடுத்து பாரு நான் வழிகாட்டியா இருந்து எப்படி பெரிய ஆள் ஆக்குறேன்னு” என்றெல்லாம் நினைப்பவரா? அப்ப நீங்க போக வேண்டிய இடம் - “வாழை”.

நாம வாழ்க்கையில இந்த அளவு உயர்ந்து இருக்க என்ன காரணமுன்னு யோசிச்சி பாத்தா யாராச்சும் ஒருத்தர் நம்மளை நம்ம வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துலயும் ‘இது பண்ணு தம்பி.. இதை படி தம்பி’ன்னு வழி நடத்தி இருப்பாரு. இந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை.

வாழையின் நோக்கமே இந்த மாதிரி வழிகாட்டி இல்லாத மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழிகாட்டியா ஒருவரை நியமனம் செய்வதே.. அட இந்த டீலிங் நல்லா இருக்கே, வாழையில நான் என்ன பண்ணலாமுன்னு கேக்கறீங்களா? அப்ப கீழ இருக்குற மேட்டரை படிங்க.

வாழையில் இருக்கும் நண்பர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்:-

வழிகாட்டிகள்
தொண்டர்கள் மற்றும்
நன்கொடையாளர்கள்.


வாழையில் வழிகாட்டியாக விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஒரு தம்பி/ward அளிக்கப்படுவார். என்னாடா இது.. வழிகாட்டி, Mentor, கிண்டாருன்னெல்லாம் சொல்றாங்களே இதுக்கு பெரிய அப்பாடக்கரா இருக்கணும் போலயேன்னு நெனைச்சி பயந்துடாதீங்க. உங்களுக்கு ஒரு தம்பி இருந்தா நீங்க என்ன பண்ணுவிங்க?அடிக்கடி போன் போட்டு பேசுவீங்க, போயி பாப்பிங்க, இதை பண்ணுடா அதை பண்ணுடான்னு சொல்லுவிங்க இல்லயா.. அந்த வேலயத்தான் நீங்க இங்க செய்யப்போறீங்க. வாழைக்கு பெண் வழிகாட்டிகள்/Mentorகள் நிறைய தேவைப்படுகிறார்கள்.

தொண்டர்கள் வாழைக்கு தேவையான அலுவலக ரீதியான பணிகள், இன்ன பிற வேலைங்க இருக்கும் இல்லையா.... அதுல உதவலாம்.

நன்கொடையாளர்களை பத்தி பெருசா விளக்கம் தேவையில்லைன்னு நெனைக்கிறேன்.

இது பற்றி மேலும் விவரம் அறியவும், வாழையோடு இணைந்துகொள்ளவும் 24 ஜுலை 2011 அன்று சென்னையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நிகழவிருக்கும் வாழையின் ஓர் அறிமுக நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ளுங்கள்.


IEEE Madras Section, (Opp. to Anna Centenary Library)
25, Gandhi Mandapam Road, Kotturpuram
Chennai, Tamil Nadu

இது பற்றிய மேலும் விவரம் அறிய Kalyanஐ அணுகவும் (9952992454)


வாழையின் இணையதள முகவரி http:http: //www.vazhai.org/

**


நன்றி: சந்தோஷ் - http://santhoshpakkangal.blogspot.com/


.

Wednesday, July 20, 2011

க்ளோபல் வார்மிங் கவிதை.

நேற்றைய அவியலில் சொல்லியிருந்தேனல்லவா? நண்பர் சௌந்தர் எழுதிய கவிதை பற்றி..

வைரமுத்து தேர்வு செய்வதால் அவர் பாணியிலேயே எழுதியிருக்கிறார்.

படியுங்கள்..

****** ********** **********

மனிதா!

கிஷ்கிந்தா வாசிகளிடமிருந்து
கிளைபிரிந்து வந்தவனே!

வரம் கொடுத்த பூமிக்கு
ஜூரம் பிடிக்கச் செய்தவனே!

நீர்தேடி நெடும் பயணம் செல்கிறாய் – நிலவுக்கு
பிராணவாயு தேடி பிரயாணம் செய்கிறாய் - செவ்வாய்க்கு

நீ இருக்க இடம் கொடுத்த பூமிக்கோ
இன்னலைத் தவிர என்ன கொடுத்தாய்?

நிலமகளைத்துளையிட்டு நீரை உறிஞ்சினாய்

உனக்கு அது நீர்
பூமிக்கு அது செந்நீர்

பாவம்!

நீ உறிஞ்சிய உதிரத்தால்
உடல் நடுங்குகிறாள் நிலமாதா நீயோ
நிலநடுக்கம் வந்துவிட்டதாய்
நீலிக் கண்ணீர் வடிக்கிறாய்

அடப்பாவி!
நீ வீடு கட்டிக் குடியேற
நிலத்தடி நீருக்கே சமாதி கட்டப் பார்க்கிறாயே

மனிதா
அகழ்வாரைக்கூட தாங்கும் அன்னை - புகை
தருவோரால் புழுங்கிக் கொண்டிருக்கிறாள் ..
அறிவாயா நீ?

ஆகாயத்தில்
ஓசோன் படலத்து ஓட்டையாம்
உனக்குத் தெரியுமா?

விருட்சங்கள் வெட்டி வெட்டி
இலட்சங்கள் சேர்க்கிறாயே
ஓசோனின் ஓட்டையை
காசு தந்து அடைத்திடுவாயா?

மனிதா
பண்ணிய பாவத்துக்கு
பரிகாரம் சொல்கிறேன் கேள்!

நீ ஒன்றும் பூமியை பூக்களால் அர்ச்சிக்க வேண்டாம்
புகையால் அச்சுறுத்தாமல் இரு
நீ ஒன்றும் மரங்களுக்கு நீர் கூட ஊற்றவேண்டாம்
பாலூற்றாமல் இரு
பூமிக்கு பொன்னை அள்ளி இறைக்க வேண்டாம்
மண்ணை அள்ளி அள்ளி இறைக்கவிடாமல் இரு

போதும் மனிதா போதும்
பூமியைச் சுரண்டி நீ வாழ்ந்தது போதும்
இனியேனும் இந்த பூமியை வாழவிடு!!

** ** ** ** ** ** ** ** ** **


பிடித்திருந்தால் 9865 005 345 இந்த எண்ணுக்கு அழைத்து அவரை வாழ்த்துங்கள்.


.