Thursday, December 31, 2009

2009 - சொல்லாததும் உண்மை!

நாளைக்கு நியூ இயர். போன நியூ இயர்ல என்னென்ன நடந்ததுன்னு திரும்பிப் பார்க்கிறேன்.

முக்கியமா சொல்லணும்னா – பெரிசா எதுவும் நடந்துடல. ஆனா பெரிசா சொல்லணும்னா முக்கியமா பலவிஷயம் நடந்தது.

அதுல ஒரு நாலு மேட்டரை வரிசைப்படுத்தறேன். படிக்கற நெருங்கிய நண்பர்கள் இதை ஏன் இவ்ளோ நாளா என்கிட்ட சொல்லலன்னு திட்டாதீங்க.. ப்ளீஸ்...

*************************************

யுவன் ஷங்கர் ராஜாவைச் சந்திச்சது:

அரவிந்தன் பட இசை வெளியிட்டப்போ என் நண்பன்கிட்ட சொன்னேன்: “டேய்.. கார்த்திக் ராஜாவை விட யுவன் பெரிய ஆளா வருவாரு பாருடா”ன்னேன். (சந்தேகமிருக்கறவங்க எனக்கு மெயில் அனுப்பினா அந்த நண்பனோட நம்பர் தர்றேன். ஆமாம்பான் அவன்.) அதே மாதிரி எங்கெங்கயோ போயி இதோ பையா வரைக்கும் கலக்கீட்டு இருக்காரு.

எப்படியாவது அவரைச் சந்திக்கணும்னு பலமுறை முயற்சி பண்ணி போன மே மாசம் சென்னை போயிருந்தப்ப அது நடந்துச்சு. ஆனா சரியா பேசமுடியல. அவர் ஸ்டுடியோவுக்கு ராத்திரி நேரம்தான் வருவாருன்னு நம்ம நண்பர் சொல்ல, காத்திருந்து சரியா 11.45க்கு சிரிச்சுட்டே வர்றாரு. ‘ஹாய் கிருஷ்ணா.. ஸாரி கொஞ்சம் லேட்’ங்கறாரு. என்கிட்ட இல்ல. வேறொரு கிருஷ்ணாகிட்ட. எங்களைக் கூட்டீட்டு போனவரைப் பார்த்து சிரிக்கறாரு. அவரும் என்னைக் காமிச்சு ‘உங்களோட ஃபேன்’ன்னு சொல்றாரு. ‘ஓ’ன்னு சிரிச்சுட்டு கை குடுத்தாரு. அப்புறம் உள்ள போய்ட்டாரு. நான் ரெண்டு வார்த்தை பேசலாம்னு நெனைச்சேன். ஆனா முடியல. விடிய விடிய ரெகார்டிங் நடக்கும்னாங்க. நான் தூரத்திலேர்ந்து அரைமணி நேரம் பார்த்துட்டு வந்துட்டேன்.

*****

ச்ச்சின் டெண்டுல்கர் - ஒரு பயணமும், ஆட்டோக்ராஃபும்


என்னதான் சொல்லுங்க. சச்சின் சச்சின்தான். அந்தாளுமேல என்ன விமர்சனக் கணையை செலுத்தினாலும் சிக்ஸருக்கும், ஃபோருக்கும் அனுப்பீட்டே இருக்காரு. அந்த வகைல நான் சச்சினோட மிகப்பெரிய ஃபேன். அவரு கொச்சின் வந்திருந்தார் ஏதோ ஒரு விளம்பர ஷூட்டிங்குக்கு. எனக்கு அந்த விளம்பர கம்பெனியோட ப்ரொடக்‌ஷன் மேனேஜர் பயங்கர ஃப்ரெண்டு. சின்ன வயசுல 25 ரூபா கடன் வாங்கிட்டு இன்னமும் தர்ல. ‘அந்த நன்றிக்கடனை எப்படியாவது அடைக்கறேண்டா’ன்னு சொல்லீட்டே இருப்பான். அத இந்த காரியம் மூலமா செஞ்சும் காமிச்சுட்டான்!




ச்ச்சின் கொச்சின் (என்னா ரைமிங்கு) வர்றதுக்கு ரெண்டு வாரம் முன்னாடியே எனக்கு தகவல் சொல்லீட்டான். “டேய் நண்பா... ரொம்ப ரகசியமான மேட்டர். நீ மட்டும் வந்துடு. யார்கிட்டயும் சொல்லிடாத”ன்னு. அதே மாதிரி ‘ரொம்ப எதிர்பார்த்துட்டும் இருக்காத. ஒருவேளை டூப் வெச்சு எடுக்கறா மாதிரி இருந்தா அவர் வர்றது கேன்சலாகறதுக்கும் சான்ஸ் இருக்கு’ன்னான்.

நமக்கென்ன, போலாம் முடிஞ்சா பார்க்கலாம்.. இல்லையா கேரளால பார்க்கறதுக்கு ஃபிகரா இல்ல? ரசிச்சுட்டு ரிட்டர்ன் அடிக்கலாம்னு முடிவு பண்ணி போனேன். ஹோட்டல்ல தங்கியிருந்தேன். அந்த நாளும் வந்தது. என் நண்பன் சொன்னான்: ‘சச்சின் வர்றது ஆல்மோஸ்ட் கன்ஃபர்ம் ஆயிடுச்சு. ஏழரைக்கு ஃப்ளைட்”ன்னு. டைமே ஏழரையா? அதுசரின்னு நெனைச்சுட்டேன். ஏழரை, எட்டு, எட்டரை, ஒம்பது.. ம்ஹூம். என் ஃபெரெண்டுகிட்டேர்ந்து ஒரு ஃபோனும் வர்ல. ரெண்டு மூணு வாட்டி ஃபோன் பண்ணினேன். ரிங் போகுது எடுக்கல. திடீர்னு சுவிட்ச் ஆஃப். ஆஹா’ன்னு கமுந்தடிச்சு படுக்கப் போனா, ஹோட்டல் ரூமுக்கு ஃபோன். எடுத்தா அவன்தான். ‘சீக்கிரம் கீழ வாடா. ரிசப்ஷன்லதான் இருக்கேன்’ன்னு.

அவசர அவசரமா ஓடினா அவன் என்னை இழுத்துட்டு வெளில நின்னுட்டிருந்த காரைப் பார்த்து ஓடி, கார்க்கதவைத் திறந்து என்னை தள்ளி, அவன் முன்னாடி ஏறிட்டான். “எங்கடா இப்படி அவசரமா கூட்டீட்டு போற? சச்சின் வந்தாச்சா வர்லியா”ன்னு கேட்டேன். “உஷ்ஷ்ஷ்ஷ்”ன்னு கத்தினவன் பின்சீட்ல என் பக்கத்துல இருந்தவர்கிட்ட “ஸாரி ஸார்”ன்னு சொல்லும்போதுதான் அவரைப் பார்த்தேன்.

சச்சின்!


ஏர்போர்ட்டுக்கு அவருக்கு அனுப்பின கார் ப்ரேக் டவுன் ஆகவும், இவனை கார்ல் அனுப்பிருக்காங்க. போற வழிலதான் என் ஃப்ரெண்ட் தங்கீருக்கற ஹோட்டல் இருக்கு’ன்னுருக்கான். அதுக்கு சச்சின் ‘வரட்டும் நோ ப்ராப்ளம்”னுருக்காரு, அதுமட்டுமில்லாம “டோண்ட் டெல் நவ். வி வில் பிக் அப் ஹிம் அண்ட் லெட்டஸ் கிவ் ஹிம் எ சர்ப்ரைஸ்”ன்னிருக்காரு.



என்ன ஒரு மனுஷன். அந்த இருவது நிமிட கார் பயணமும் விடிய விடிய ஷூட்டிங்கில் அவரோடு இருந்த அனுபவமும். அவர்கிட்ட வாங்கின ஆட்டோக்ராஃபும்.... மறக்கமுடிகிற விஷயமா என்ன!

***********************************

ப்ரகாஷ்ராஜ் எனும் அற்புதக் கலைஞன் சந்திப்பு


ஈஷா யோக மையம் சார்பாக திருப்பூரில் 25000 மரக்கன்றுகள் நடும்விழா. சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் எங்கள் முதலாளியின் கெஸ்ட் ஹவுசில் தங்குவதாக ஏற்பாடு. சத்குரு அவர்கள் இங்கே தங்கியிருக்கும் விஷயமறிந்த பிரகாஷ்ராஜ் அதிகாலை அந்த கெஸ்ட் ஹவுசுக்கு வருகிறார். உடன் வந்தவரிடம் நான்தான் முகவரி சொல்கிறேன். வாசலுக்கு வந்து வரவேற்கிறேன். ‘ஹாய் செல்லம்’ என்றபடி இறங்குகிறான் அந்த மகா கலைஞன். உடன் ஸ்ரேயா. அந்த வாரம்தான் கந்தசாமி வந்த வாரம்.




’யார் வீடு இது.. இவ்வளவு அழகாய்.. நேர்த்தியாய் என்று கேட்கிறார். நான் ஆங்கிலத்தில் பேச் ஆரம்பிக்கிறேன். “உங்களுக்கு தமிழ் தெரியும்னா அதுலயே பேசலாம். எனக்கு அதுதான் பிடிக்கும்” என்கிறார். சந்தோஷமாய் பேசுகிறேன்.



இரண்டு மணிநேரம் அந்த விழாவுக்குப் போய் வந்ததுபோக, மற்ற நேரம் முழுவதும் எங்களோடு கழித்தார்கள். பழகுவதற்கு இனியவராய் இருந்த அந்தக் கலைஞன் தேசியவிருதுகளுக்கு அப்பாற்பட்ட கலைஞன் என்பதை மட்டும் அறிந்தேன்.

*******************

இளையராஜாவுடன் ஒரு அலைபேசிப் பாடல்


இது நெஜமா நடந்ததான்னு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல. மூணு நாலு மாசத்துக்கு முந்தி ஒரு நாள். என் சென்னை நண்பர் கூப்டாரு. “கிருஷ்ணா.. அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ இந்தப் பாட்டை பாடமுடியுமா?” ன்னு கேட்டாரு. உடனே நாலைஞ்சு வரி பாடினேன்.

உடனே அவரு ‘இப்ப இல்லை. கரெக்டா காலைல ஏழரைக்கு. (இங்கயுமா ஏழரை?) சார் ஏழு மணிக்கு ஸ்டுடியோ வருவாரு. அரைமணி நேரம் கழிச்சு பாடிக்காமி. ஃபோன்ல”ன்னார். “யாருக்கு பாடிக்காட்டணும்? அவரென்ன இளையராஜாவா பாடிக்காட்ட?’ன்னு கிண்டலா கேட்டேன். அவர் “ஆமா ராஜா சாருக்குத்தான்”ன்னாரு பாருங்க. தூக்கி வாரிப்போட்டுது எனக்கு! ரெண்டு மாசம் கழிச்சு துபாய்ல ஏதோ ஷோ இருக்காம். அதுக்கு இந்தப் பாட்டை மட்டும் பாட ஒரு புது வாய்ஸ் கேட்கணும்னாரு”ன்னார். சும்மா சொல்றாரு போலன்னு நெனைச்சேன்.

ஆனா கரெக்டா அடுத்த நாள் கூப்டுட்டார் அந்த நண்பர். ரொம்ப மரியாதையா – மெல்லிசா - பேசினாரு. “இரு சார்கிட்ட தர்றேன்னான்” எனக்கு ஒரு மண்ணும் புரியல. பேசாம இருந்தேன். திடீர்னு அவரோட கரகர மேஜிக் வாய்ஸ்..“பாடு தம்பி”ன்னுது. அவ்ளோதான்.. தொண்டைலேர்ந்து வெறும் காத்துதான் எனக்கு வந்தது. சமாளிச்சுட்டு ‘அமுதே தமிழே’ன்னு ஆரம்பிச்சேன். ரெண்டே வரிதான். ‘சரணம் பாடு’ன்னாரு. ‘தேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்...’ன்னு ஆரம்பிச்சேன். ‘போதும் போதும்ப்பா’ன்னுட்டு இந்தான்னு என் ஃப்ரெண்டுகிட்ட ஃபோனைக் குடுத்துட்டாரு.

ரெண்டு மணிநேரம் கழிச்சு என் ஃப்ரெண்டு ஃபோன் பண்ணி “ஸாரிப்பா. ராஜா சாருக்கு திருப்திப்படல”னாரு. போய்த் தொலையுது. எப்பேர்ப்பட்ட கலைஞன்கிட்ட பேசினேன் நான்-ங்கற சந்தோஷம் போதாதா எனக்கு!


2010ல?

ஒரே ஒரு ஆசைதான்.

இப்படி நாலுல மூணு புருடாங்கற நிலை மாறி, எல்லாமே சொல்லிக்கறா மாதிரி நடக்கணும். அவ்ளோதாங்க!


.

Wednesday, December 30, 2009

3 IDIOTS – A Genius Movie!


ருட இறுதியில் பார்க்கும் ஒரு படம் மனதுக்கு நிறைவாய் அமைவது எவ்வளவு சந்தோஷமான விஷயம்! இந்த சந்தோஷத்தைத் தருகிறது 3 இடியட்ஸ்.

***********************

விமானம் எடுக்கப்பட்டு விட்டது. சீட் பெல்ட் போட்டுக் கொண்டிருக்கும் மாதவனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. பணிப்பெண் செல்ஃபோனை ஆஃப் பண்ணச் சொல்லித் திட்டத்திட்ட எக்ஸ்யூஸ் கேட்டபடி பேசுகிறார். பேசி முடித்ததும் வியர்க்க விறுக்க எழுந்து, நிற்க முடியாமல் தடுமாறி விழுந்து மயக்கமாகிவிட, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்படுகிறது.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் வைத்து, மாதவனை படு ஸ்பீடில் விமானநிலைய வாசல் நோக்கி மருத்துவக்குழு கொண்டு செல்ல நைஸாக கண்விழிக்கும் மாதவன் - எழுந்து - இரண்டு மூன்று சிம்பிள் எக்ஸர்சைஸ் செய்து காட்டி “ஐம் ஓகே.. நீங்க போகலாம்” என்றுவிட்டு ஓடிவிடுகிறார்.

இந்த ஆரம்பக்காட்சியிலேயே கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. அங்கிருந்து கிளம்பும் மாதவன், தன் இன்னொரு நண்பன் ஷர்மானையும் அழைத்துக் கொண்டு அமீர்கானைத் தேடி புறப்படுகிறார்கள்.

படம் முழுவதுமே இந்தத் தேடல்தான். க்ளைமாக்ஸில்தான் அமீர்கானைக் காண்கிறார்கள். அதுவரை இவர்களின் கல்லூரி நினைவுகளின் ஃப்ளாஷ்பேக்தான்.

ஒரு நண்பன் விமானத்திலிருந்து இறங்கியும், இன்னொரு நண்பன் மனைவியை விட்டுவிட்டும் இப்படி ஒரு நண்பனைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்களா? இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என்று ஒரு இடத்தில்கூட தோன்றவில்லை. அமீர்கானைப் போன்ற நண்பன் கிடைத்தால் இதற்கு மேலும் செய்யலாம்!

ராகிங் நடக்கும்போது வானத்திலிருந்து குதித்து ஹீரோயிஸமெல்லாம் காட்டவில்லை. ஆனால் அறிவார்த்தமாக ஹீரோவாகிறார். இப்படித்தான் படம் நெடுக. இறுதிக்காட்சியில் ‘நான் ஜெயிச்சுட்டேன்ல’ என்று அந்த படிப்பாளி நண்பன் சதூர் சொல்லும்போது அமீர்கான் தான் யார் என்பதை வெளிக்காட்டும் காட்சி வரை இந்த சஸ்பென்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் வருகிறது.

அதுவும் இடைவேளைக்கு முன் அமீர்கானைக் கிட்டத்தட்ட நெருங்கிய மாதவனும், ஷர்மானும் போய்ப் பார்க்கும்போது அங்கே ஜாவேத் ஜஃப்ரி அமர்ந்து கொண்டு ‘சொல்லுங்க நான் தான் ரஞ்சோர்தாஸ்’ என்று சொல்ல அதிர்ச்சியடையும் இவர்கள் சுவரில் பார்க்கும்போது இவர்கள் கல்லூரியில் எடுத்த புகைப்படத்தில் அமீர்கானுக்குப் பதில் ஜாவேத் ஜஃப்ரி இருக்கிறார். அப்படியென்றால் அமீர்கான்?

இடவேளைக்குப் பிறகு சூடுபிடிக்கும் படத்தில் பாருங்கள்!



இயக்குனர் ராஜ்குமார் ஹிரானிக்கு சல்யூட்! சேட்டன் பகத்தின் FIVE POINT SOMEONE நாவலைத் தழுவி எடுக்கப்பட்டாலும், முழுக்க முழுக்க தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குனர். முன்னாபாய் எம்பிபிஎஸ், லஹே ரஹோ படங்களைப் போலவே இதிலும் வசனங்கள் (ஹிரானி + அபிஜத் ஜோஷி) படுஷார்ப். நல்ல சிரிப்பையும், சிரிப்பினூடே சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள். அதுவும் இந்திய கல்வித் திட்டத்தை படம் முழுக்க கேள்விகளால் கிழித்துத் தொங்க விட்டிருக்கும் அவரை என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.

கேமரா - முரளிதரன். சிம்லாவை இவ்வளவு அழகாய் நான் பார்த்ததில்லை. (பார்த்ததேயில்லைங்கறது வேற விஷயம்!) லே லடாக் சாலையில் அந்த கார் செல்வதை இப்படியெல்லாம் காட்ட முடியுமா! வெல்டன்!

ஷர்மான், பேமன் ஈரானி, கரீனா, கரீனாவின் சகோதரி என எல்லா கேரக்டரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். சின்னச் சின்ன (அல்லது நாம் அப்படி நினைக்கும்) கேரக்டருக்கும் இயக்குனர் மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அந்த ஹாஸ்டல் சிறுவன், கரீனாவின் நிச்சயிக்கப்பட்ட மணமகன் (Price Tag!), பேமான் ஈரானிக்கு முகச்சவரம் செய்யும் நபர் என்று எல்லாருமே கச்சிதம் என்றாலும் அந்த ஹாஸ்டல் சிறுவன் கவர்கிறான்!

தன் ஈகோவை விட்டு, பேமன் ஈரானி மழைநாளில் அமீரிடம் சரணடையும் காட்சியில் அவர் நடிப்பு அபாரம். அதேபோல, அந்த ALL IS WELL எல்லா இடங்களிலும் சொல்லப்பட்டாலும், பிறந்த குழந்தை அழாமலிருக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்ச்சி... க்ளாஸ்!


மொத்தத்தில் -

3 IDIOTS - A GENIUS MOVIE!

(முன்னாபாய் வசூல்ராஜா ஆனதுபோல, இது தமிழில் வருமா என ஏங்க வைக்கிறது. வந்தால் சூர்யா மிகவும் ஆப்டாக இருப்பார்.)


.

Tuesday, December 29, 2009

ச்சும்மா....

அங்கங்கே பலர் உதிர்த்த சில முத்துக்கள்........


மீபத்தில் ஈரோட்டு சங்கமத்தின் போது பிரபலங்கள் சிலர் வலைப்பூ எழுதாமல் அடிக்கடி ட்விட்டரில் தென்படுகிறார்களே என்பது பற்றிய பேச்சு வந்தது.

“ட்விட்டர்ல 146 கேரக்டர் இருக்கு” என்று அப்துல்லா ஆரம்பித்தார்... நான் கேட்டேன்.. “அதுனால போய்ட்டீங்களா.. இல்ல ப்ளாக்கர்ல வால்பையன் மாதிரி கேரக்டரெல்லாம் இருக்கேன்னு பயந்து போய்ட்டீங்களா?”

********************

சென்னையில் இரண்டாம் தளத்தில் உள்ள அப்துல்லா அறைக்குச் செல்ல கீழே லிஃப்டிற்காகக் காத்திருக்கிறோம். ‘என்னா.. யூத் மாதிரி இருந்துகிட்டு, லிஃப்டுக்கு வெய்ட் பண்றீங்க? படியேற முடியாதா’ என்று கேட்கிறார் ஒரு நண்பர். உடனே சட்டென்று சொல்கிறான் சகா கார்க்கி..

“லேட்டஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தறவன்தான் யூத். படியேறிப் போய் எனர்ஜியை வேஸ்ட் பண்றதெல்லாம் ஓல்டு!”

************************

ஈரோடு நிகழ்ச்சில அனானி கமெண்ட்ஸ் பத்தி பேச்சு வந்தது. அனுமதிக்கலாமா, அனுமதிக்கக் கூடாதா.. சரியா தவறான்னு போட்டு கிழிச்சுட்டிருந்தாங்க.

திடீர்னு ஒரு பாவமான குரல் ஒலிச்சது..

“அனானி கமெண்ட் சரியா தப்பா, வேணுமா வேணாமான்னெல்லாம் பேசிகிட்டே இருக்கீங்களே... ஒரு கமெண்டும் வராம அனானியாவது கமெண்ட் போடமாட்டானான்னு காத்திட்டிருக்கற எங்களை மாதிரி ஆளுகளைப் பத்தி யோசிச்சீங்களா?”

திரும்பிப் பார்த்தா - தண்டோரா!

அவருக்கு ஒரு முப்பது கமெண்ட் பார்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏல்ல்ல்ல்..

**********************

விவேக், வடிவேலு பற்றிப் பேச்சு வந்தது.

“என்ன இருந்தாலும் விவேக் இண்டலெக்ச்சுவல்தானே?”

“மக்களோட மனசைப் படிக்கணும்டா. இல்லாம சும்மா அறிவுரையே சொல்லிகிட்டிருந்தா அது மெண்டலெக்ச்சுவல்!”

***************************

நாங்கள் போன ஆட்டோக்காரன், பஸ்ஸுக்கும், காருக்கும் இடையில் புகமுடியாத ஒரு இடைவெளியில் தன் ஆட்டோவைச் செலுத்தியபோது..

“அமிதாப்பச்சன் சென்னைல இருந்தா அவன் காலுக்கடில கூட ஓட்டீட்டுப் போவானுக”

***************************

ரமேஷ் வைத்யா ஒரு ஹோட்டலுக்குப் போய் பில் போடும் இடத்தில் ஒரு செட் இட்லி ஆர்டர் செய்திருக்கிறார்.

பில் போடுபவர்:- ‘சாப்பிடவா.. பார்சலா?’

ரமேஷ்:- “சாப்பிடத்தான். பார்சல்!”


முக்கியக்குறிப்பு: இந்த மொக்கையை நானும் பலதடவை சொல்லியிருக்கிறேன். ‘ஏங்க.. பார்சல்னாலும் சாப்பிடத்தானே’ என்றோ ‘பார்சல்ன்னா சாப்பிடக்கூடாதா?’ என்றோ கேட்பேன். இவர் அவன் கேட்டதையே திருப்பிச் சொல்வதுபோல் இரண்டே வார்த்தையில் நச்சென்று சொல்லியதில்தான் சூட்சுமம் இருக்கிறது. சிறுகதை எழுத இந்தச் சொற்பிரயோகம் மிகமுக்கியம்!

***************************

அறையில் அப்துல்லா தனது கணீர்க்குரலில் ஒரு பாடல் பாடுகிறார். தண்ணிலையிலும் எல்லோரும் தன்னிலை மறந்து கைதட்ட, சிலர் அவரைப் பாராட்டிப் பேச.. ஒருத்தர் ‘உன் காலைக் கொண்டா.. விழணும் அதுல’ என்று இடையிடையே சொல்கிறார். அவரது குரல் எங்கள் பாராட்டுக்கிடையே சரியாகக் கேட்கப்படவில்லை. இப்போது அவர் உரத்தகுரலில்.. ‘உன் காலைக் கேட்கறேன்.. காமிக்க மாட்டீங்கற?’ என்கிறார்.

உடனே அங்கிருந்த நண்பர்-குறும்பட இயக்குனர்- சாரதாகுமார் சொல்கிறார்..

“அவரே நாங்க பாராட்டற பாராட்டுல ‘தலைகால்’ புரியாம இருக்காரு..”

**************************

ராசி பட இயக்குனர் முரளிஅப்பாஸ் வந்தார். பெயர்க்காரணம் கேட்டோம். அதன் அப்பா பெயரான அப்பாசாமி-யின் சுருக்கம்தான் அப்பாஸ் என்றார். ‘நான் ரம்பாவின் ரசிகன். நீங்க ரம்பாவை வெச்சுப் படம் எடுத்திருக்கீங்க’ என்று கைகொடுத்தேன். கொஞ்ச நேரப் பேச்சின்போது ஒரு கவிதைக்கு தொடைதட்டி ரசிக்க நண்பர் சந்தோஷ் சொன்னார்..

“ரம்பா ரசிகருல்ல, அதான் தொடைல தட்டறீங்க”

(ஆனா நான் என் தொடைலதானே தட்டினேன்....)

***************************

ஒரு நண்பரிடம் கேட்கப்படுகிறது..

“நீங்க பொறந்து வளர்ந்தது எங்க?”

அவர்: “வேலூர்”

உடனே கார்க்கி: “எந்த செல்லுல?”

******************

கார்க்கியை ‘டா’ போட்டு ஒரு நண்பர் அழைத்தபோது, இன்னொருவர் சொன்னார்.

“எனக்கும் கார்க்கியை அப்படிக் கூப்பிடணும்ன்னு தோணுது. ஆனா அவர் தப்பா நெனைப்பாரோன்னு யோசனையா இருக்கு”

“ஒரு ரவுண்டு முடியட்டும். நீங்க எப்படிக் கூப்பிடப் போறீங்கன்னு பாருங்க”

இந்த நேரத்தில் குறும்பட இயக்குனர் (அடடா.. இத எத்தனை தடவைடா சொல்லுவ..) சாரதாகுமார் ஒரு விஷயம் சொன்னார்..

“மதுரைல ஒரு தியேட்டர் இருந்துச்சு. அந்தக்காலத்துல படம் பார்க்க வர்றவங்களை டிக்கெட்டோட மதிப்பை வெச்சுத்தான் கூப்பிடுவாங்க.

‘ஒண்ணாரூவாயெல்லாம் வாங்கடா.. ரெண்டாரூவாயெல்லாம் வாங்கய்யா.. அஞ்சு ரூவாயெல்லாம் வாங்கசார்’ இப்படித்தான் கூப்பிடுவாங்க..”

**************************

ஒரு நண்பர் தவறாக ‘இளநி, பீர்ன்னெல்லாம் சொன்னா உதடு ஒட்டாது. ப்ராண்டி, ரம்-னு சொல்லிப்பாருங்க. உதடு ஒட்டும்’ என்று சொன்னார்.

“அதெப்படி பீர்-ன்னு சொன்னா உதடு ஒட்டாதுன்னு சொல்றீங்க?”

நர்சிம்: “குடிச்சுட்டுப் பேசினா வாய் குழறி ஒட்டாமச் சொல்வாங்களே.. அதைச் சொல்றாரு போல..”

இந்த இடத்தில் ஒருத்தர் மேடைப் பேச்சின்போது அ.தி.மு.க-வுக்காக பேசும்போது பேசியதைக் குறிப்பிட்டார்...

“கலைஞர், கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், தயாளு, ராஜாத்தி என்ன சொன்னாலும் உதடு ஒட்டாது. ஆனா எம்.ஜி.ஆர், ராமச்சந்திரன், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் இப்படி என்ன சொன்னாலும் உதடு ஒட்டும்”

உடனே யாரோ கேட்டார்கள்..

“இதச் சொன்னதுக்கு கைதட்டினாங்களா.. கையால தட்டினாங்களா...”


.