
படம் ஆரம்பிக்கும் காட்சியில் நிதின்சத்யாவை அவரது அம்மா துரத்துகிறார். அவரோடு சேர்ந்து ஊரார் எல்லாம் கம்பும், கடப்பாரையும் வைத்துக் கொண்டு அவரைத் துரத்துகிறார்கள்.
அப்போதே தெரிந்திருக்கவேண்டும்... அவர்கள் துரத்துவது நம்மையும்தான் என்று.. எங்கே புரிந்தது மரமண்டைக்கு!
ஊர்க்காரர்களால் துரத்தப்பட்ட நிதின்சத்யா, சென்னையில் (சென்னைதானேப்பா? ஒரு மண்ணும் ஞாபகமில்ல) டேனியல் பாலாஜியைச் சந்திக்கிறார். நிதின் சத்யாவைப் போலவே டேனியல் பாலாஜியும் ஒரு பொறம்போக்கு என்பதால் இருவரும் ஃப்ரெண்டாகி விடுகிறார்கள். டேனியல் பாலாஜி லக்ஷ்மி ராயைக் காதலிக்கிறார். அவருக்கு உதவ டேனியலின் அறைக்கு லக்ஷ்மி ராயை அழைக்க, அங்கே எதிர் அறையில் இருக்கும் சேத்தனைத் தேடி கமிஷனர் கிஷோர் வர.. தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்றெண்ணி நிதின், டேனியல் மற்றும் அவர்களது இரு காதலிகளும் ஓட.. சேத்தன் தனது லேப்டாப்பை இவர்கள் காரில் போட்டுவிட்டு ஏற முயலும்போது போலீசாரால் சுடப்பட்டு இறக்கிறார்.
அந்த லேப்டாப்பில் பொன்வண்ணன், தனது அண்ணன் சரவணனைக் கொன்றது பதிவாகி இருக்கிறது. முதலமைச்சராக ஆகப்போகும் முயற்சியில் இருக்கும் பொன்வண்ணனும்..
போங்கப்பா சொல்ற எனக்கே இவ்ளோ போரடிக்குது. படிக்கற உங்களுக்கு என்ன கொடுமையா இருக்கும்னு தெரியுது!
பாலிவுட் ஸ்டைலில் படமெடுக்க முயற்சித்திருக்கிறார்கள். குழப்பமான திரைக்கதையால் கோட்டை விட்டுவிட்டார்கள்.
அதுவும் அந்த க்ளைமாக்ஸில் ஆனந்த், பொன்வண்ணன், டேனியல் பாலாஜி, நிதின் மாறி மாறிப் பேசும்போது திரையக் கிழித்து விடலாமா என்று தோன்றுகிறது!
லக்ஷ்மிராயை பார்க்கும்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் T 20 ல் இந்தியா செமி ஃபைனலுக்குப் போகாமல் திரும்பியது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. சரியான ஸ்ட்ரக்சர் என்பதை மறுப்பதற்கில்லை.
டேனியல் பாலாஜி தனது மாடுலேஷனையும், பாடி லேங்குவேஜையும் மாற்றிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ஒரே ரிப்பீட்டடாக இருக்கிறது.
நிதின் சத்யா மட்டும் ஆறுதலளிக்கிறார். சரக்கடிக்கும்போது ஐஸ் இல்லாததால் எதிரிவிட்டில் வாங்கிவர டேனியல் பாலாஜி சொல்லும்போது ‘குச்சி ஐஸா.. கோன் ஐஸா’ என்று கேட்பதில் தொடங்கி படம் நெடுக ரிலாக்ஸாக இருக்க வைக்க உதவுகிறார். அவரையும் காதலியைப் பார்த்து செண்டிமெண்டலாகப் பேச வைப்பது எரிச்சலூட்டுகிறது.
யுவனின் மகுடத்தில் இந்தப் படம் ஒரு பெரிய சறுக்கல். இதுவரைக்கும் பாடல் காட்சிகளில் கொத்துக் கொத்தாக இப்படி ஆட்கள் எழுந்து போவதைப் பார்த்ததே இல்லை. மூன்றாவது பாடலுக்கு தியேட்டரில் ஒரு ஆள் “அய்யோ.. சிகரெட் தீர்ந்துடுச்சுய்யா.. பாட்டு போடாதீங்க” என்று கத்தியதையும் கேட்க முடிந்தது!
மொத்தத்தில் முத்திரை - ஆள வுடு சாமி!